‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54

[ 20 ]

வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது.

நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்றிக்குவைகள் இரும்புக்கம்பிச்சுருள்கள் போன்ற முடிகளுடன் புடைத்தன. அமரமுடியாதபடி முதுகெலும்பு குவிந்தெழுந்தது. தொடையெலும்புகளும் மேலெழுந்து வந்தபோது அதன் கால்கள் வலுவிழந்தன. அது படுக்க விழைந்தது. “படுத்தால் அதன் எடை அப்பகுதியின் தோலை கிழிக்கும். புண் வந்து புழுசேரும். துயரமான இறப்பு அது” என்றார் யானைமருத்துவரான குந்தமர்.

அதன் கால்களுக்குக் கீழே மரத்தாலான பெரிய தூண் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்மேல் பரப்பப்பட்ட மரவுரிவளைவின் மேல் தன் வயிற்றை அழுத்தி எடையை கால்களிலும் அத்தூணிலுமாக பகிர்ந்து சபரி நின்றது. ஒவ்வொருநாளும் சூடான மூலிகைநீரை ஊற்றி அதன் சுருங்கிக்கொண்டிருந்த தசைகளை வெம்மையூட்டி மரவுரியால் நீவி உயிர்கொள்ளவைத்தனர் யானைப்பாகர். செக்கிலிட்டு ஆட்டிய பசுந்தழையுடன் கம்புசோறும் வெல்லமும் கலந்த கூழை சிறிய அளவில் இருமுறையாக அதற்கு ஊட்டினர்.

சபரி எப்போதும் தன்னருகே பாகர்கள் எவரேனும் இருக்கவேண்டுமென விரும்பியது. அதன் விழிகள் பார்வையை இழந்து வெண்சோழிகள் போல ஆகிவிட்டிருந்தன. மெல்ல அசைந்தும் நிலைத்துக்குவிந்து சிற்றொலிகளையும் தேரும் செவிகளாலும் நிலையற்று அலைந்து காற்றை துழாவித்தவிக்கும் சுருங்கிய துதிக்கையின் முனையாலும் அது தன் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. எதன்பொருட்டேனும் அணுக்கப்பாகன் விலகிச்சென்று, அவன் ஓசையும் கேட்காமலானால் பெருமுரசில் துணிமுண்டுகொண்ட கோல் விழுந்ததுபோல மெல்ல அதிர்ந்து அழைத்தது. அவ்வழைப்புக்கு மறுமொழி உடனே எழாவிட்டால் அஞ்சி பிளிறத்தொடங்கியது.

“எதை அஞ்சுகிறது அது?” என்று ஒருமுறை சுருதகீர்த்தி குந்தமரிடம் கேட்டாள். “பிடியானை பெருங்குலத்தின் பேரரசி அல்லவா? காட்டில் அவளுக்கு தனிமையென ஒன்றில்லை, பேரரசி” என்றார் குந்தமர். “ஆனால் அவள் தனிமையில்தானே இறந்தாகவேண்டும்?” என்றாள் சுருதகீர்த்தி. குந்தமர் புன்னகைத்து “எவராயினும் தனிமையில்தான் இறக்கவேண்டும்” என்றார். சுருதகீர்த்தி புன்னகைத்து “ஆனால் பெருங்குடிபுரந்த அன்னைக்கு பேருருக்கொண்ட தனிமையாக வருகிறது சாவு” என்றாள்.

சூக்திமதியின் யானைக்கொட்டிலில் நின்றிருந்தவற்றில் இருபத்துமூன்று களிறுகளும் முப்பத்தாறு பிடிகளும் அவள் குருதிநிரையிலெழுந்தவர்கள் என்று அரண்மனைக் கணக்குகள் சொல்லின. அவையனைத்தும் அவளை வாசனையால் அறிந்திருந்தன. காலையில் தளையவிழ்க்கப்படுகையில் அவை அவளருகே வந்து துதிக்கை தூக்கி மூக்குவிரல் அசைய மூச்சு சீறி அவளை வாழ்த்திச் சென்றன. எப்போதாவது அன்னைப்பிடி மெல்ல உறுமி அவளிடம் ஒரு சொல் பேசியது.

மூதன்னை அவர்கள் வந்துசெல்வதை அறியாதவள்போல தன் இருண்ட தவிப்புக்குள் உழன்றுகொண்டிருப்பாள். அவள் அவர்களை அறியவேயில்லை என்று தோன்றும். ஆனால் எப்போதாவது இளங்கன்று ஒன்று உடல்நலமிழந்தால் முதலில் அதை அறிபவளும் மூதன்னையே. நிலையற்ற துதிக்கையுடன் உடலை அசைத்தபடி அவள் மெல்ல பிளிறிக்கொண்டே இருப்பாள். தன் கொடிவழிவந்த யானை இறந்ததென்றால் இருநாட்கள் உணவும் நீருமின்றி நிலத்தில் ஊன்றிய துதிக்கையுடன் செவியசைய இளங்காற்றில் ஆடும் மரம்போல நின்றுகொண்டிருப்பாள்.

அவள் குலத்தின் பெருங்களிறான அம்புஜன் துவாரகையுடனான ஓர் எல்லைப்போரில் நச்சுவாளி ஏற்று நோய்கொண்டு இறந்தான். அவள் அவ்விறப்பை அறியவேண்டாம் என்று நோயுற்ற அம்புஜனை அப்பால் கொண்டுசென்று சத்ரபாகம் என்னும் குறுங்காட்டில் கட்டியிருந்தனர். ஆனால் அம்புஜன் நோயுற்றிருப்பதை மூதன்னை அறிந்திருந்தாள். அவன் இறந்த செய்தியை அவன் அருகே இருந்த பாகன் அறிந்த கணமே நெடுந்தொலைவிலிருந்த மூதன்னையும் அறிந்தாள். துதிக்கையை தூக்கி தொங்கிய வாய்க்குள் எஞ்சிய கரிய ஒற்றைப்பல் தெரிய பிளிறிக்கொண்டே இருந்தாள்.

“களிறுகள் அவற்றுக்குரிய காணாத்தேவர்களால் ஆளப்படுபவை, அரசி… அத்தெய்வங்கள் சொல்லியிருக்கும்” என்றான் பாகன். “அவை தங்கள் நுண்மணங்களால் இணைக்கப்பட்டவை” என்றார் குந்தமர். அவள் பழுத்து அழுகிய கனிபோல தெரிந்த முதியவளின் கண்களை நோக்கிக்கொண்டு நின்றாள். அதிலூறிய விழிநீர் வெண்பீளையுடன் உருகிவழிவதுபோல வெடித்த சேற்று நிலமெனத் தெரிந்த கன்னங்களில் தயங்கிப்பிரிந்து வழிந்தது. ஒருகணம் அந்த இருட்குவைக்குள் நுழைந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்ட உணர்வு எழ அவள் அஞ்சி திரும்பி ஓடினாள். அதன் பின் அவள் சபரியை நேரில் காணவே இல்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் அவள் குரலைக் கேட்டே விழித்தாள். எங்கோ அந்நகரின் ஒலிப்பெருக்கின் அடியில் அக்குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதை எப்போதும் அவள் சித்தம் உணர்ந்திருந்தது. மெல்ல அதை அவள் தவிர்க்கத் தொடங்கினாள். தவிர்க்கத்தவிர்க்க அது பெருகியதென்றாலும் ஒரு கட்டத்தில் பொருளிழந்தது. பொருளற்றவற்றை சித்தம் அறிவதேயில்லை.

அன்று ஏன் அதை கேட்டோம் என எண்ணியபடி அவள் நீராட்டறைக்குச் சென்றாள். “சபரி மேலும் நோயுற்றிருக்கிறதா?” என்று அணுக்கச்சேடி ரம்யையிடம் கேட்டாள். “ஆம் பேரரசி, சென்ற ஒருவாரமாகவே அதன் நோய் முதிர்ந்துள்ளது. பின்காலில் பெரிய நெறிகட்டியிருக்கிறது. நகவளையங்களுக்குமேலாக பெரிய புண் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கிறது. அது மேலும் ஒரு வாரம் உயிர்வாழலாமென்று சொல்கிறார்கள்” என்றாள் ரம்யை. அதன் பின் மேற்கொண்டு கேட்க ஆர்வமில்லாதவளாக அவள் விழிகளை மூடிக்கொண்டாள்.

ஆனால் அவள் எண்ணங்கள் அந்தப்புள்ளியிலேயே முளைகட்டப்பட்டிருந்தன. அதை தவிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அதையே எண்ணத்தொடங்கினாள். அவள் மணமுடித்து சூக்திமதியில் நகர்நுழைந்தபோது கோட்டைமுகப்பில் பொன்முகபடாமணிந்து சிறுகொம்புகளில் பொற்பூண் மின்ன பட்டுத்திரை நலுங்க வந்து மாலைசூட்டி வரவேற்றவள் சபரிதான். அத்தனை பெரிய பிடியானையை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை என்பதனால் அது அணுகும்தோறும் அச்சம் எழ தேரின் பீடத்திலிருந்து அறியாது எழுந்துவிட்டாள்.

கல்மண்டபம் போல அவள் பார்வையை முழுமையாக மறைத்து அது அருகணைந்தது. அஞ்சி அமர்ந்த அவள் விழிகளுக்கு நேராக யானையின் தலை வந்தபோது தேர்வாயிலை அதன் கன்னம் மட்டுமே முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. கற்பாறை வைத்து குகைவாயிலை மூடியதுபோல. தோலின் விரிசல்களின் சந்திப்பில் மின்னும் ஒற்றைவிழி ஏதோ கனவில் ஆழ்ந்தது என தெரிந்தது.

“எழுந்திருங்கள், அரசி” என்று அணுக்கச்சேடி ரம்யை சொன்னாள். அவள் எழுந்து தேர்த்தூணை பிடித்துக்கொண்டாள். “வலக்காலெடுத்து வைத்து இறங்குங்கள்… இனி இது உங்கள் மண்” என்று சொன்ன ரம்யை அருகிலிருந்த பொற்குடத்து நீர்மேல் ஒரு செந்தாமரையை வைத்து அவளிடம் அளித்தாள். அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அவள் வலக்கால் எடுத்து வைத்து தேரிலிருந்து இறங்கினாள். சபரியின் துதிக்கை அவள் தலைக்குமேல் ஆலமரக்கிளை என எழுந்தது. அது தாழ்ந்து வந்து அவள் கழுத்தில் ஓர் வெண்மலர் மாலையை சூட்டியது. அதன் தண்மையும் ஈரமும் எடையும் அதை ஒரு நாகம் என அவள் உடல் எண்ணி சிலிர்க்கவைத்தது.

“ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்றாள் ரம்யை. அவள் தயங்க சபரி அவள் இடையை வளைத்துத் தூக்கி தன் மத்தகத்தின்மேல் அமர்த்திக்கொண்டது. அவள் பதறி அதன் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த பட்டுவடத்தை கால்களால் பற்றிக்கொண்டாள். கையில் பொற்குடத்துடன் அவளைக்கண்டதும் சூக்திமதியின் படைவீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலி பொங்கி வந்து அவளைச் சூழ்ந்தது. அப்போதுதான் அவள் முதல்முறையாக தன்னை அரசியென உணர்ந்தாள்.

 

[ 21 ]

மதுவனத்தின் ஹ்ருதீகரின் கொடிவழிவந்த இளவரசி அவள் என இளமையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் சுருதகீர்த்தி வாழ்ந்த ருதுவனம் என்னும் ஆயர்பாடியில் காடுகளில் கன்றோட்டியும் பால்கறந்தும் வெண்ணைதிரட்டி நெய்யுருக்கியும்தான் அவள் வளர்ந்தாள். இளவரசி என்னும் அழைப்பை ஒரு பெயர் என்றே அவள் உணர்ந்திருந்தாள். ஆயர்குல முறைமைகளுக்கு அப்பால் அரசச்சடங்குகளையோ அரண்மனைநடத்தைகளையோ அவள் அறிந்திருக்கவில்லை.

அவள் பெரிய தந்தையரான தேவவாகரும் கதாதன்வரும் ருதுவனத்தின் இளவேனில் விழவுக்கு வந்து உணவுக்குப் பின்னர் குடிமன்றின் சாணிமெழுகிய பெரிய திண்ணையில் படுத்து பனையோலை விசிறிகள் ஒலிக்க தளர்ந்த அரைத்துயில் குரலில் சொல்லாடிக்கொண்டிருக்கையில் அவள் முதல்முறையாக தான் ஓர் எளியபெண் அல்ல என்றும் தன்னைச்சூழ்ந்து அரசியல் அலையடிப்பதையும் அறிந்தாள்.

அவள் அருகிருந்த சிறிய வைப்பறைக்குள் ஒளிந்திருந்தாள். கண்டுபிடியாட்டத்தில் அவள் தோழிகள் அவளை அங்குள்ள புதர்களிலும் மரக்கிளைகளிலும் இல்லங்களிலும் தேடிக்கொண்டிருந்தனர். ஒலிகேட்டு அவள் எட்டிப்பார்த்து தந்தையர் படுத்திருப்பதை உணர்ந்து பின்னடைந்தாள். புரண்டு படுத்த தேவவாகர் “எளிதில் முடிவெடுக்கக் கூடியதல்ல அது, இளையோனே. நீ பெற்றிருப்பது ஒற்றை மகளை. உனக்கு மைந்தருமில்லை. யாதவமுறைப்படி மகளூடாகச் செல்வது கொடிவழி என்பதனால் அவளை கொள்பவன் உன் குடியை அடைகிறான்” என்றார்.

கிருதபர்வர் “ஆம், அதைத்தான் அத்தனைபேரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அரசியலோ நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. நான் எம்முடிவையும் எடுப்பதாக இல்லை. நீங்களிருவரும் சொல்லுங்கள், செய்வோம்” என்றார். “பத்மாவதியின் மைந்தன் கம்சனைப்பற்றி கேள்விப்படுவன எவையும் நன்றாக இல்லை” என்று தொடர்பில்லாமல் கதாதன்வர் சொன்னார். “அவன் ஒரு விழியற்ற காட்டெருமை என்று ஒரு சூதன் சொன்னான். மிகச்சரியான சொல்லாட்சி அது. அவனுக்கு இருப்பது விழியின்மை மட்டுமே அளிக்கும் பேராற்றல்.”

கிருதபர்வர் “ஆம்” என்றார். கதாதன்வர் தொடர்ந்து “விழியற்ற காட்டெருமை பாறையை எதிரியென எண்ணி தன் தலையுடைத்துச் சாகும் என்றான் சூதன்” என்றார். “ஆனால் நாம் என்னதான் சொன்னாலும் இன்று யாதவர்களிடமிருக்கும் வலுவான அரசென்பது மதுரா மட்டுமே. மகதத்தின் படைக்கூட்டு இருக்கும் வரை ஷத்ரியர் எவராலும் வெல்லப்பட முடியாததாகவே அது நீடிக்கும்” என்றார் தேவவாகர். “ஆனால்…” என்று சொன்னபின் “ஒன்றுமில்லை” என்று கதாதன்வர் கையை வீசினார்.

“அதையெல்லாம் நாம் பார்க்கவேண்டியதில்லை. நாம் எளிய யாதவக்குடி அல்ல இன்று. அரசு என்று வந்துவிட்டால் பிறகெல்லாமே அரசுசூழ்தல்தான். நம் பெண்டிரின் மணம் என்பது இனி அவர்களின் நலனுக்குரியது அல்ல, நம் குடியின் நலம் சார்ந்தது மட்டுமே. அதை அவர்களும் உணர்ந்தாக வேண்டும்.” ஏதோ சொல்லவந்த தந்தையை தடுத்து “உண்மை, அவன் கொடியவன். ஆனால் வல்லமை மிக்கவன்” என்றார் தேவவாகர். கிருதபர்வர் “நான் சொல்லவருவது அதுவல்ல, மூத்தவரே, குந்திபோஜனின் எடுப்புமகள் பிருதையை கம்சன் மணக்கக்கூடும் என சொல்கிறார்களே?” என்றார்.

“அவன் அவ்வாறு விழைகிறான் என்கிறார்கள். அவன் கணக்குகள் அப்படிப்பட்டவை. அவனுடன் அமைச்சனாகவும் தோழனாகவும் இருப்பவன் பிருதையின் தமையன் வசுதேவன். யாதவர்களுக்கு இன்றிருக்கும் பிற மூன்று அரசுகள் உத்தரமதுராவின் தேவகனின் அரசு. குந்திபோஜனின் மார்த்திகாவதி. சூரசேனரின் மதுவனம். குந்திபோஜன் மகளை மணந்து வசுதேவனுக்கு தேவகன் மகளை மணம்புரிந்து உடன் வைத்துக்கொண்டால் நான்கு யாதவ அரசுகளும் இணையும் என்பது அவன் கணக்கு.”

“அவனுக்கு மகதமன்னன் பிருஹத்ரதரின் தங்கைமகளின் புதல்விகளை மணம்புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளது” என்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.” கிருதபர்வர் “மகளை கம்சனுக்கு அளிக்க குந்திபோஜனுக்கு எண்ணமிருக்குமா?” என்றார்.

“கம்சனைப்பற்றி அவனும் அறிவான். அவன் மகள் அவனைவிட நன்கறிந்தவள்” என்றார் தேவவாகர். “அவள் ஒருநாள் பாரதவர்ஷத்தை முழுதாளும் பேரரசி ஆவாள் என நிமித்திகர் குறியுரைத்துள்ளனர். இந்த யாதவச்சிற்றரசனை மணந்து அவள் எப்படி பேரரசி ஆகமுடியும்?” கிருதபர்வர் “அவள் வயிற்றில் இன்னொரு கார்த்தவீரியன் பிறக்கலாகுமே? அவன் பாரதவர்ஷத்தை வென்று மணிமுடியை அவள் தலையில் கொண்டுவந்து வைக்கக்கூடும் அல்லவா?” என்றார்.

அச்சொற்கள் தலையைச்சுற்றி ரீங்கரிக்க அதன்பின் அவள் நிழலென உலவினாள். தோழியரிடமிருந்து விலகி தனிமையிலமர்ந்து கனவுகண்டாள். அக்கனவில் மதுராவின் கம்சன் முகமும் விழிகளும் நகைப்பும் குரலும் கனிவும் காதலும் கொண்டு எழுந்துவந்தான். அவனுடைய கொடுமைகுறித்த செய்திகளெல்லாம் ஆற்றல்குறித்தவை என அவளுக்குத் தெரிந்தன. அவனுடைய அறிவின்மை குறித்தவை வேடிக்கைகளென்றாயின. சின்னாட்களிலேயே அவள் அவனுக்கு மணமகளென்றாகி அகத்தே வாழ்ந்துகொண்டிருந்தாள்.

மார்த்திகாவதியில் பிருதையின் தன்மண நிகழ்வுக்கான செய்தி அறிந்ததும் அவள் கைகள் குளிர்ந்து நடுங்க கால்கள் தளர சுவருடன் சாய்ந்து நின்றாள். பேசிக்கொண்டிருந்த ஆய்ச்சியர் மேலும் மேலும் அக எழுச்சி கொண்டனர். பத்மை அத்தை “வேறெவர் வருவார்? சிறுகுடி ஷத்ரியர் வரக்கூடும். அவர்களில் கம்சரின் ஒரு கைக்கு இணையானவர் எவருமில்லை” என்றாள். “பிருதையை அவர் மணந்தால் மகதத்துடன் போர் வரும்… ஐயமில்லை” என்றாள் சுருதை மாமி. “போரில் கம்சர் வெல்வார்… அவர் கார்த்தவீரியனின் பிறப்பு” என்று முதுமகளாகிய தாரிணி சொன்னாள்.

கண்ணீருடன் சென்று தனித்தமர்ந்து தானறிந்த தெய்வங்களை எல்லாம் எண்ணி எண்ணி வேண்டிக்கொண்டாள். “அன்னையரே! அன்னையரே!” என அரற்றிக்கொண்டே இருந்தது உள்ளம். இரவெல்லாம் துயிலழிந்து மறுநாள் உலர்ந்த உதடுகளும் நிழல்பரவிய விழிகளுமாக எழுந்தாள். அவளுக்கு வெம்மைநோய் என்று அன்னை எண்ணி சுக்குநீர் செய்து அளித்தாள். இருளுக்குள் உடல்சுருட்டி படுத்துக்கொண்டு ஓசையின்றி கண்ணீர் விட்டாள். உள்நிறைந்த எடைமிக்க ஒன்று உருகி கண்ணீராக சேக்கையை நனைத்தது. மறுநாள் அவளால் எழவே முடியவில்லை. தன்னினைவில்லாது அவள் “காட்டெருமை! கொம்புகள்!” என்று பிதற்றிக்கொண்டிருந்தாள்.

அவளைச்சூழ்ந்து பெண்கள் நிறைந்திருந்தபோதிலும் தமையன் சக்ரகீர்த்திதான் அவள் உள்ளத்தை புரிந்துகொண்டான். அவளருகே அமர்ந்து அவள் கால்களின் சிலம்பை கையால் அசைத்து ஓசையெழுப்பியபடி மெல்லியகுரலில் “எதன்பொருட்டு துயருறுகிறாய் இளையோளே?” என்றான். யாதவரில் என்றுமே பெண்ணுக்கு அணுக்கமானவன் தமையனே. அவள் உளமுருகி அழத்தொடங்கினாள். “நீ கம்சரை எண்ணுகிறாயா?” என்றான். அவள் தன் ஆழம் வரை வந்த அவன் உள்ளத்தை உணர்ந்து திடுக்கிட்டாள். மறுகணமே ஆறுதல் கொண்டாள். ஆம் என தலையசைத்து சுருண்டு படுத்தாள்.

“அஞ்சாதே… நான் அனைத்தையும் ஒழுங்குசெய்கிறேன். அவளை கம்சர் மணந்தால்கூட நீ அவரை மணக்கலாம். பிருதை உன் தமக்கைதான்” என்றான். சீறி எழுந்து “சீ” என்றாள். அவள் உதடுகள் துடித்தன. “வேண்டாம்” என்று சொல்லி படுத்துக்கொண்டாள். அவன் அந்த எல்லைக்கும் அவளுடன் வந்து “ஆம், அதை உன்னால் ஏற்கமுடியாது. வேண்டியதில்லை. கம்சர் பிருதையை மணக்காமல் போனால் நீ மதுராவின் அரசியாவாய்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவள் கால்சிலம்பை அசைத்துவிட்டு அவன் எழுந்து அகன்றான்.

நான்காம்நாள் செய்திவந்தது, பிருதை அஸ்தினபுரிக்கு அரசியென சென்றுவிட்டாள் என்று. முதலில் அதை ஆய்ச்சியர் நம்பவில்லை. “யார்? அஸ்தினபுரியின் இளவரசனா?” என்று மாறிமாறி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் அவனைப்பற்றிய செய்திகள் வரத்தொடங்கின. வெண்சுண்ணநிறமானவன் என்றனர். “அவ்வண்ணமென்றால் அவனால் தந்தையென்றாக முடியாது” என்றாள் மருத்துவச்சியான காரகை. “ஏன்?” என்று கேட்ட இளம்பெண்ணிடம் “எழுந்து போடி” என்று அவள் அத்தை சீறி அடிக்க கையோங்கினாள்.

“ஏன் அவனை தெரிவுசெய்தாள் பிருதை? மூடச்சிறுமகள்!” என்றாள் அவள் அன்னை. “சாத்வி, உனக்கு அவளை தெரியாது. அவள் எட்டுகைகளும் நூறுவிழிகளும் கொண்டவள், பிறவியிலேயே பேரரசி என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவள் பிறவிநூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியென முடிசூடுவாள் என்று எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.” யாரோ சிலர் சிரித்தனர். “அதை நம்பி இம்முடிவை எடுத்துவிட்டாள் போலும்… சூதர்கள் எழுதியபடி மானுடர் வாழ்கிறார்கள். மானுடர் வாழ்வதை சூதர் பாடுகிறார்கள்” என்றாள் பத்மை அத்தை. மீண்டும் சிரிப்பு எழுந்தது.

ஒரு முதுமகள் “உண்மைதானோ?” என்றாள். அனைவரும் அவளை திரும்பி நோக்கினர். “மூத்த இளவரசர் திருதராஷ்டிரர் விழியற்றவர். அப்படியென்றால் இப்பாண்டுவே அரசன். எண்ணிநோக்குக, யயாதியின் குலத்திற்கு யாதவப்பெண் அரசியாக செல்கிறாள். தேவயானியும் சத்யவதியும் அமர்ந்த அரியணையில் அமரவிருக்கிறாள். அவள் மைந்தர்கள் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் அமைந்த அரசநிரையில் எழுவார்கள். யாரறிவார், பரதனைப்போன்ற சக்ரவர்த்தி அவள் கருவில் விதையென உறங்கிக்கொண்டிருக்கக் கூடும்.” ஆய்ச்சியர் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர்.

அவள் அரையிருளில் மூலையில் அமர்ந்து அவ்விழிகளின் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்லிய தசைநூல் ஒன்று அவளுக்குள் அறுபடுவது போல உணர்ந்தாள். வலியும் ஆறுதலும் கலந்த ஒன்று. அதன்பின் அவள் கம்சனைப்பற்றி எண்ணவில்லை. கம்சனைக் கடந்து மாலையுடன் செல்லும் பிருதையின் காட்சியை தன்னுள் எழுப்பிக்கொண்டாள். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் தெளிவடைந்து நுணுக்கமாகியது அது. முதலில் படபடப்பை அளிப்பதாக இருந்தது மெல்ல மெல்ல உருமாறி உள்ளாழத்தில் இனிய சிலிர்ப்பை நிறைப்பதாக மாறியது.

சக்ரகீர்த்தி தந்தையிடம் பேசி கம்சருக்கு மணத்தூதனுப்ப அவரை ஒப்பவைத்ததையும் அச்செய்தியை அவர் யாதவர்களின் குடியவையில் முன்வைத்ததையும் மதுவனத்தின் சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்து கொந்தளித்ததையும் அவள் பின்னர்தான் அறிந்தாள். “தந்தையைச் சிறையிட்டு முடிசூடிய இழிமகனுக்கு மகள்கொடையளித்துத்தான் முடிப்பெருமை கொள்ளவேண்டுமா கிருதபர்வரே? நாணில்லையா  உமக்கு?” என்று அவர் கூவியபோது குங்குரர்களும் அந்தகர்களும் போஜர்களும் விருஷ்ணிகளும் “ஆம்! கீழ்மை!” என்று கூவியபடி எழுந்தனர்.

தேவவாகர் “பொறுங்கள்… இளையோனே பொறு. இது பெண்ணின் விழைவு. நம் யாதவக்குடிகளின் நெறிப்படி பெண்ணின் விழைவை எவரும் விலக்க இயலாது” என்றார். “மூத்தவரே, பெண் தன் குடிக்கு உரிமையானவள் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சூரசேனர்.  “எதற்கு வீண் சொல்லாடல்? அவள் வந்து இந்த அவைநின்று சொல்லட்டும், மதுராவின் அரசனுக்கு மணமகளாக விழைகிறாள் என்று…” என்றான் சக்ரகீர்த்தி. “ஆம், அதுவே முறை” என்றார் தேவவாகர்.

சக்ரகீர்த்தி அவள் இருந்த அறைக்குள் வந்து “இளையோளே, அவைபுகுந்து உன் விழைவை சொல். நீ யாதவப்பெண். உன் விழைவை மறுக்க பன்னிரு  யாதவரும் ஒருங்கே எண்ணினாலும் இயலாது” என்றான். அவள் பெருமூச்சுடன் ஆடைதிருத்தி எழுந்தாள். அவன் அவள் அருகே வந்தபடி “முன்பு பிருதை இதேபோன்ற தருணத்தில் எடுத்த முடிவால்தான் அவள் குந்திபோஜருக்கு மகளானாள்” என்றான்.

யாதவமன்று நடுவே சென்றுநின்ற கணம் வரை அவள் எம்முடிவும் எடுக்கவில்லை. கம்சனைப்பற்றிய எண்ணமேகூட அப்போதுதான் எழுந்தது. உடனே உடல் அருவருப்புடன் உலுக்கிக்கொண்டது. குனிந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆழியைத் தொட்டு “நான் யாதவப்பெண். யாதவக்குலமன்றுக்கு முழுமையாக கட்டுப்பட்டவள். கம்சரை விலக்குகிறது இந்த அவையென்றால் அது என் கடமை” என்றாள். திரும்பி தந்தையரையும்  சூரசேனரையும்  அக்ரூரரையும் வணங்கிவிட்டு தமையனின் கண்களை நோக்கினாள். அதில் தெரிந்த திகைப்பைக் கடந்து அப்பால் சென்றாள். அவன் அவளை தொடர்ந்து வரவில்லை. அவள் மெல்ல தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.

சிலநாட்களிலேயே கம்சன் மகதத்தின் ஜராசந்தனின் இரு குலமுறை மகள்களை மணந்துகொண்ட செய்தி வந்தது. மகதத்தின் முடிசூடி அமர்ந்த பிருஹத்ரதரின் மைந்தன் ஜராசந்தன் போரில் கணவனை இழந்த தன் முறைப்பெண்ணின் புதல்வியரை குலமுறைப்படி புதல்வியராக ஏற்றான். அவர்கள் சூத்திரக்குருதிகொண்டவர்கள் என்றாலும் ஜராசந்தன் பிராப்தியையும் ஆஸ்தியையும் மகதத்தின் முதன்மை இளவரசிகளாக அறிவித்தான். அரசமுறைமைப்படி நிகழ்ந்த மணம் கம்சனை மகதத்தின் மணவுறவுநாட்டின் அரசனென நிலைநிறுத்தியது.

அதன்பின் அவள் அவ்வெண்ணங்களை முழுமையாகவே தன் உள்ளத்திலிருந்து விலக்கிக்கொண்டாள். மீண்டும் இடைச்சியென்றாக முயன்றாள். பால்கறக்கவும் சாணியள்ளவும் கன்றுமேய்க்கவும் புல்லரியவும் சென்றாள். செயல்கள் மெல்ல உள்ளத்தை மாற்றும் விந்தையை உணர்ந்தாள். சிலநாட்களிலேயே அவையெல்லாம் பொய்க்கதையாய் பழையநினைவாய் மாறின. அவள் உலகில் அன்றைய ஆபுரத்தல் மட்டுமே எஞ்சியது. உடல் மீண்டும் உரம் கொண்டது. உள்ளம் அதில் செழித்து அமைந்தது.

தமகோஷரின் மண ஓலை அவள் தந்தையை வந்தடைந்த செய்தி அவளுக்கு எந்த எழுச்சியையும் உருவாக்கவில்லை. தேவவாகர் “அவன் அரசனே அல்ல. அவனிடமிருப்பவர்கள் நாநூறு படைவீரர்கள். அவன் வாழ்வது நூற்றியெட்டு வீடுகள் கொண்ட மண்கோட்டைக்குள். முடிகொண்டு ஆண்ட அரசனின் மைந்தன் என்பதற்கு அப்பால் அவனிடம் நாம் கருதுவதொன்றுமில்லை” என்றார். கதாதன்வர் “நாம் படையளிப்போம். நம் மூவரின் படைகள் சென்றால் சூக்திமதியை வெல்லமுடியும்… ஆனால் அவன் வாக்களிக்கவேண்டும், நம் குலமகள் அரசியாகவேண்டும்” என்றார்.

அரசி என்னும் சொல் அப்போது அவளுக்குள் முற்றிலும் பொருளிழந்திருந்தது. மணமாகிப்போனால் தன் கன்றுகளை பிரியவேண்டுமே என்னும் எண்ணமே எழுந்தது. அவளுடைய பசு ஆதிரை தன் முதல் கன்றை ஈனும் நிலையிலிருந்தது. அதைப்பற்றியன்றி அவள் எதையும் எண்ணவில்லை. ஓரிருநாட்களிலேயே அனைத்தும் முடிவாயின. சிறியதொரு குழுவுடன் வந்த தமகோஷர் அவளுக்கு மலராடை அளித்து கருகுமணி சூட்டி மாலையிட்டு மணமகளாக்கிக்கொண்டார். அவர் தன்னைவிட இருமடங்கு வயதானவர் என்பதை அவள் அந்த மலராடையை பெறும்போதுதான் பார்த்தாள். அப்போதிருந்த பதற்றத்தில் அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரே வாரத்தில் யாதவப்படை கிளர்ந்துசென்று சூக்திமதியை கைப்பற்றியது. தமகோஷர் அதன் அரசராக முடிகொண்டார். அவளை அழைத்துச்செல்ல சூக்திமதியிலிருந்து அகம்படிப்படையும் பல்லக்குகளும் வந்தன. ருதுவனத்தை நீங்கும்போது ஆதிரையின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். “அன்னையே, அவள் எப்படி இருக்கிறாள் என எனக்கு செய்தியறிவியுங்கள்” என்று சொன்னபோது “போடி, கன்றுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை போதும். இனி நீ அரசி” என்றாள் அன்னை. அவள் “அன்னையே, அவளைப்பற்றி சொல்லியனுப்புங்கள்… மறந்துவிடாதீர்கள்” என்று பல்லக்கிலேறி திரைமூடும் கணம் வரை சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூக்திமதியின் தெருக்களினூடாக பிடியானை மேல் அமர்ந்து கையில் மலர்நீர்க் குடத்துடன் சென்றுகொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அவள் வளர்ந்துகொண்டிருந்தாள். மிகத்தொலைவில் ஒரு சிறுபுள்ளியெனத் தெரிந்த பறவை சிறகும் அலகும் உகிரும் கொண்டு பெருகியணுகுவதுபோல. பிறகு பலநூறுமுறை அந்தப் பயணத்தை அவள் கணம் கணமாக நினைத்ததுண்டு. அன்று யானை எடுத்துவைத்த ஒவ்வொரு காலடியையும் அவளால் தன் உடலதிர்வாக அப்போது உணரமுடியும். சூழ்ந்தொலித்த வாழ்த்துக்களை, மங்கல இசையை, சிரிக்கும் முகங்களை சித்தத்திலிருந்து முடிவிலாது சுருளவிழ்த்து நீட்டிக்கொண்டே இருக்கமுடியும்.

அப்போது அவள் உள்ளத்தில் தமகோஷர் ஒரு கணமும் எழவில்லை. அன்னையோ தந்தையோ அவள் விட்டுவந்த ருதுவனமோ கிளம்பும் கணம் வரை பதைப்புடன் எண்ணிக்கொண்ட பசுவோ அவளுக்குள் இருக்கவில்லை. அவள் குந்தியையும் கம்சனையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தாள். அக்கூட்டத்தில் மின்னிய ஒரு முகம் குந்தியாகியது. நெஞ்சு அதிர விழி சலித்தபோது கம்சனை கண்டாள். பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரையும் நேரில் கண்டதேயில்லை என்னும் எண்ணம் பின்னர் எழ சிரித்துக்கொண்டாள்.

அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கியபோது அவள் நோக்கும் உடலசைவும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. சபரி துதிக்கையை மேலே சுழற்றித்தூக்க அதன் மீது காலெடுத்துவைத்து இறங்கி தரையில் நின்று அதன் சிறிய கொம்பைப் பற்றியபடி நடந்து அரண்மனைமுகப்பில் நின்ற அணிச்சேடியரை நோக்கி சென்றாள்.

மங்கல இசை அவளைச்சூழ்ந்து எழுந்தது. தமகோஷரின் தமக்கையான பார்வதி அவள் நெற்றியில் செம்மஞ்சள் குறியிட்டு அரிமலர்தூவி வாழ்த்தினாள். மஞ்சள்நீரில் காலாடி அவர்கள் அளித்த நிறைநாழியும் குத்துவிளக்கும் ஏந்தி அரண்மனைவாயிலைக் கடந்தபோது தனக்குப்பின்னால் சபரி மட்டுமே காதசைய நின்றிருப்பதாக உணர்ந்தாள். அது அகன்று பரவி இருட்டாகி இரவாகி நகரை மூடியது.

முந்தைய கட்டுரைஎங்கே இருக்கிறீர்கள்?
அடுத்த கட்டுரைசாதிமல்லி பூக்கும் மலை