புதுமொழியில்…. கடிதம்

DSC09228

பேரன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு!

உங்களுடைய மிகத் தீவிர வாசகன் நான். நான் படித்த எழுத்தாளர்கள் எல்லாம், ஒரு விஷயத்தை அல்லது பிரச்னையை பரந்த தளத்தில் வைத்து விமர்சித்தது இல்லை (அது என்னுடைய வாசிப்பு குறையாகக் கூட இருக்கலாம்). நீங்கள்தான் ஒரு விஷயத்தை ஆழமாக அணுகும் முறையை எனக்கு அறிமுகப்படுத்தியவர். அதற்கு என் நன்றிகள்!

ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளை படிக்காமல் என் நாள் சென்றதே இல்லை. எல்லாமே மிக ஆழமான கட்டுரைகள். அதற்கும் நன்றிகள்!

தற்போது நீங்கள் தினமலரில் எழுதி வரும் அரசியல் கட்டுரைகள் மிகவும் அருமை. ஒரு சில கட்டுரைகளில் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.

நான் தஞ்சாவூர்க்காரன். நீங்கள் கோவை செல்கிறீர்கள், மலைக்குச் சென்று வாசகர்களைச் சந்திக்கிறீர்கள். ஏன் இந்தப் பக்கம் வருவதே இல்லை? தஞ்சை, கும்பகோணம் பகுதிக்கு ஒருமுறை வாருங்களேன். நேரில் சந்திக்க வேண்டும். உங்களிடம் நான் கேட்க நினைத்திருந்த பெரும்பாலான கேள்விகளுக்கு உங்கள் தளத்திலேயே விடை சொல்லியிருக்கிறீர்கள். என்றாலும், சில கேள்விகள் உள்ளன. அதை விட முக்கியமானது உங்களை நேரில் சந்திக்க இருக்கும் அவா. நானும் நாகர்கோவில் வர முயற்சிக்கிறேன்.

நான் ‘கனவுகளும் கலைப்புகளும்’ என்ற பெயரில் வலைப்பூவில் பதிவிட்டு வருகிறேன். இதுவரை நான் தங்களுக்கு நான்கு முறை மின்னஞ்சல் செய்திருக்கிறேன். உங்களிடமிருந்து பதில் இல்லை. எல்லாவற்றையும் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்றும் உணர்கிறேன். என்றாலும், ஒரு நப்பாசை. என்னுடைய வலைப்பூவிலிருந்து 3 கட்டுரைகளின் சுட்டிகளை இங்கே இணைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு பதில் அளித்தால் மிக்க உற்சாகமும் உத்வேகமும் அடைவேன்.

 

செகாவும் ஜெ.கேவும்

யார் இவன்?

வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா?

பேரன்புடன்,

தீனதயாளன். மு

***

அன்புள்ள தீனதயாளன்

நான் சந்திப்பு நிகழ்ச்சிகளை என் நண்பர்களின் ஆர்வத்தால்தான் நடத்துகிறேன். கொங்கு வட்டாரத்திற்கு வெளியே ஆர்வமுள்ள நண்பர்கள் அமையவில்லை. வாசகர்களும் பெரிதாக அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.

கட்டுரைகள் நல்ல முயற்சிகள். ஆனால் ஆரம்ப எழுத்துக்களுக்குரிய சில சிறிய பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாக,

இந்தக் கதையில் ஜெ.கேவின் சாதனைகள் என்று எதைச் சொல்வது? அவருடைய மொழி நடையையா? அல்லது அடித்தட்டு மக்களுடைய ஆதாரப் பிரச்னையையும் மேல்தட்டு மக்களின் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒரே கதையில் ஒன்றாக இணைத்து இழைத்திருக்கும் மேதமையையா? வெள்ள காட்சிகளின் வருணனைகளையா? உப கதாபாத்திரங்களின் கதைகளையா? எதைச் சொல்வது?.

போன்ற வரிகள். “நான் இதைச் சொல்கிறேன்’ ‘இதைச்சொல்லி முடித்துக்கொள்கிறேன்’ ‘இதை வாசித்தபோது வியந்தேன்’ போன்ற சொல்லாட்சிகள் கட்டுரைகளுக்குத் தேவை இல்லை. இவை மேடையுரைகளுக்குரியவை. மேலே சொன்ன பத்தியில் உள்ளது ஒரு பாராட்டு. அதனால் வாசிப்பவனுக்கு என்ன லாபம்?

கட்டுரையில் அனைத்துவரிகளிலும் வாசகன் தெரிந்துகொண்டாகவேண்டிய கருத்துக்கள் இருந்தாகவேண்டும் என்பதை உங்களுக்கான சுயநெறியாக விதித்துக்கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39
அடுத்த கட்டுரைஇலட்சியவாதம் அழிகிறதா?