‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33

[ 3 ]

கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதி குசர்குலத்தின் முதன்மைப் பேரரசன் என்று கவிஞர்களால் பாடப்பட்டான். கங்கை ஒழுகிச்சென்ற நிலமெங்குமிருந்த பல்லாயிரம் ஊர்களில் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் அவனுடைய பேர்சொல்லி கதைகள் சொல்லப்பட்டன என்றனர் நிமித்திகர். விஷ்ணுவிலிருந்து பிரம்மன், பிரம்மனிலிருந்து சந்திரன், சந்திரனிலிருந்து புதன்… என நீளும் குலவரியில் குசநாபனுக்கும் கிருதாசிக்கும் மைந்தனாகப் பிறந்தான். பாடிப்பரவும் சூதர்களின் சொற்களனைத்தும் போதாத பெருந்திறல்வீரனென்று வளர்ந்தான். முடிசூடியமர்ந்ததும் காசிமன்னன் மகள் மோதவதியை மணந்தான்.

காதியின் பிறப்பின்போதே அவன் ஆரியவர்த்தத்தை வெல்வான் என்றும், காங்கேயநிலத்தில் ஓர் அஸ்வமேதத்தை செய்வான் என்றும் நிமித்திகரின் சொல் இருந்தது. அத்துடன் அவன் குருதியில் பிறக்கும் இரு குழந்தைகளில் ஆண் மாமுனிவராக ஆவான் என்றும் பெண் அருமுனிவருக்கு தவத்துணைவியென்றாகி புகழ்பெறுவாள் என்றும் நிமித்திகர் சொல் இருந்தது. இளமையிலேயே அச்சொல்லைக் கேட்டுவளர்ந்த காதி மணம் முடித்து அரியணையமர்ந்த பின்னர்தான் அதன் உண்மைப்பொருளை உணர்ந்தான். தன் மைந்தன் துறவியாகிவிடக்கூடும் என்னும் அச்சம் அவனை துயிலிலும் தொடர்ந்தது. ஒவ்வொருமுறை தன் அரசியை பார்க்கையிலும் ‘இவள் எனக்கு அரசனையும் அரசியையும் பெற்றுத்தரப்போவதில்லை’ என்ற எண்ணமே எழுந்து உளக்கசப்பை வளர்த்தது. அவளுடன் அவனுக்கு உறவென்பதே இல்லாதாயிற்று.

ஒருமுறை தென்னகத்து நிமித்திகர் ஒருவர் அவன் அவைக்கு வந்தார். பிறக்கவிருக்கும் மைந்தனின் நெறியென்ன என்று காதி அவரிடம் கேட்டான். அரசியை நடந்துசெல்லும்படி சொல்லி அக்காலடி பதிந்த கோணத்தைக்கொண்டு குறிதேர்ந்து நிமித்திகர் சொன்னார் “அரசே, இம்மைந்தன் அஸ்வமேதவேள்வி செய்வான். எங்குமில்லாத நாடொன்றை தனக்கென உருவாக்குவான். மண்ணில் பிறந்த பேரரசர்களில் முதலெழுவரில் ஒருவனென்றே திகழ்வான்.” காதி திகைத்து “நன்கு தேர்ந்து உரையுங்கள் நிமித்திகரே. இதற்கு முன் வந்த நிமித்திகர்கள் பிறிதொன்று உரைத்தனர்” என்றான். நிமித்திகர் சொல்கூர்ந்து “ஆம், பிறிதொரு குறியும் தென்படுகிறது. விண்ணோரும் தொழும் மாமுனிவனென்றே ஆவான்” என்றார்.

“அவன் நெறியென்ன என்று சொல்லுங்கள் நிமித்திகரே” என்றான் காதி. “அரசே, அது பகடையின் இரு பக்கங்களை போன்றது. உங்கள் ஊழும் அவனை ஆளும் தெய்வங்களும் அதை அமைக்கலாம். அல்லது அவற்றுக்கே தெரியாமலிருக்கலாம்” என்றார். “அதை நான் முடிவெடுக்கிறேன். என் மைந்தன் பேரரசன் என்றே வளர்வான். துறவென்று ஒன்று இருப்பதையே அவன் அறியப்போவதில்லை” என்று வஞ்சினம் உரைத்தான். “சிம்மத்துக்கு குருதியை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை அரசே” என்றார் நிமித்திகர். “சிம்மம் என்பது ஒரு குருளையில் காடு உருவாக்கி எடுக்கும் விலங்குதான். அரண்மனைகளில் பாலும் அமுதும் உண்டு குழவிகளுடன் களியாடி மகிழும் சிம்மங்களை கண்டுள்ளேன்” என்றான் காதி. “பதினெட்டாண்டுகாலம் மூதாதையர் ஆலயங்கள் அனைத்திலும் நோன்பு கைக்கொள்க! மைந்தன் விண்கனிந்து மண்நிகழவேண்டும்” என்று சொல்லி நிமித்திகர் சென்றார்.

மோதவதி தன் கணவனின் விழைவுப்படி பேரரசனை மைந்தனாகப் பெறுவதற்கே விழைந்தாள். அதன்பொருட்டே நோன்புகளும் இருந்தாள். ஆனால் சித்திரை முழுநிலவுநாளில் அவள் ஒரு கனவு கண்டாள். அதில் வெள்ளிநிற ஒளிவீசும் உடல்கொண்ட தன் மைந்தனை அவள் கண்டாள். அவன் அவள் கையை பற்றியபடி துள்ளியும் சிரித்தும் நகைமொழியாடியும் உடன் வந்தான். அவள் அவனிடம் இன்மொழிகள் சொல்லி கொஞ்சிக்கொண்டிருந்தாள். பூத்தமலர்களால் ஆன அச்சோலையில் அவர்களுக்கு எதிரிலொரு சிறுசுனையை கண்டார்கள். அடியிலி என சென்ற ஆழத்தால் அழுத்தமான நீலம் கொண்டிருந்தது அது. “அன்னையே, நான் அதில் இறங்க விழைகிறேன்” என்று அவன் சொன்னான். “இல்லை… நீ செல்லலாகாது” என்றாள். “நான் அதற்காகவே வந்தேன்” என்று சொல்லி அவன் அவள் கையை உதறிவிட்டு அதை நோக்கி ஓடினான்.

“மைந்தா! மைந்தா!” என்று நெஞ்சுடைந்து கதறி அவள் அழுதாள். அவன் அந்நீர்ச்சுழலில் விழுந்து மூழ்கி மறைந்தான். அவள் அலறியபடி விழித்துக்கொண்டாள். கைகளால் சேக்கையை அறைந்தபடி அழுத அவளை சேடியர் ஆறுதல்படுத்தினர். பன்னிருநாட்கள் அவள் அப்பெருந்தவிப்பில் அழுதுகொண்டும் விம்மிக்கொண்டும் இருந்தாள். மீண்டும் அக்கனவு வந்தது. அவள் அச்சுனையருகே அமர்ந்திருக்கையில் பொன்னுடல் கொண்டவனாக அவள் மைந்தன் எழுந்து வந்தான். “அன்னையே” என்று அவன் புன்னகை செய்தான். அவள் “மைந்தா!” என்று களிப்புடன் கைநீட்டி கூவினாள். “அன்னையே, மகிழ்க! நான் ஹிரண்யன் ஆனேன்” என்றான். “ஏன் சுனையில் நின்றிருக்கிறாய்? மேலே வா!” என்றாள். “என் இடைக்குக்கீழ் நீ நோக்கலாகாது” என்று அவன் சொன்னான்.

கனவு கலைந்தபோது அவள் புன்னகையும் பெருமூச்சுமாக படுக்கையில் புரண்டாள். அக்கனவை அவள் எவரிடமும் சொல்லவில்லை. பலநாள் தனக்குள்ளே அதை வருடியும் தழுவியும் அணைத்தும் ஒளித்தும் வைத்திருந்தாள். மோதவதிக்கு முதலில் பிறந்த மகள் சத்யவதி எனும் பெயர் கொண்டு வளர்ந்தாள். அவளை பிருகுகுலத்து முனிவர் ருசிகருக்கு மணம்முடித்தளித்தனர். மோதவதி பதினெட்டாண்டுகாலம் தவம்புரிந்து மைந்தனுக்காக காத்திருந்தாள். சத்யவதி பிருகுகுலத்தின் தோன்றலுக்காக காத்திருந்தாள். ஒருநாள் ருசிகரின் தவக்குடிலில் அன்னையும் மகளும் அவர் செய்யும் பித்ருவேள்வியொன்றில் கலந்துகொண்டனர். மூதாதையருக்கு அவியளித்து நிறைவுசெய்து விழிகள் அவர்களின் அருளால் ஒளிவிடத் திரும்பிய ருசிகர் இரு அன்னையரையும் நோக்கி “நன்மக்கள் பேறுக்கென இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் உள்ளம் விழைவது உடலில் நிறைக!” என்றார்.

அவியென படைக்கப்பட்ட கனிகளில் எஞ்சிய இரண்டை எடுத்து ஒன்றை மோதவதியிடம் அளித்து “அன்னையே, நாடாளும் பெருந்திறல் வீரனை மைந்தனாகப் பெறுக!” என்றார். இன்னொரு கனியை தன் மனைவியிடம் அளித்து “நம் குலத்தின் தவநெறியை வாழச்செய்யும் மைந்தனைப் பெறுக!” என்று வாழ்த்தினார். அப்போது மோதவதி அறிந்தாள், அவள் பெறவிரும்பிய மைந்தன் யாரென்று. ஆனால் அதை சொல்லென்று ஆக்கமுடியாமல் அவள் புன்னகையுடன் அதை பெற்றுக்கொண்டாள். ஹேகயர்களுடன் பூசலில் குடியழிந்து மண்ணிழந்து கன்யாகுப்ஜத்திற்கு வந்து குடியிருந்த பிருகுலத்தின் ருசிகரின் மனையாட்டியான சத்யவதி தன் கையிலிருந்த கனியை விரும்பவில்லை. அவளும் புன்னகையுடன் அக்கனியை பெற்றுக்கொண்டாள். பிரம்மத்தை அறிந்தும் இரு பெண்டிரின் உள்ளத்தை அறியாத ருசிகர் வாழ்த்தி விடையளித்தார்.

இரு அன்னையரும் கனிகளுடன் தங்கள் அரண்மனைக்குத் திரும்பியபோது சொல்லாமலேயே உள்ளங்கள் விழைவுகளை பரிமாறிக்கொண்டன. தேரிலிருந்து இறங்கும்போது சத்யவதி தன் அன்னையின் கனியை தன் கனியுடன் கைமாற்றிக்கொண்டாள். அன்னை கருவுற்று பிறந்த மைந்தனுக்கு கௌசிகன் என்று பெயரிட்டனர். மகள் ஈன்ற மைந்தன் ஜமதக்னி என்றழைக்கப்பட்டான். அரசனின் மைந்தன் வாள்கொடுத்து வளர்க்கப்பட்ட முனிவனாக இருந்தான். முனிவரின் மைந்தன் வேதம் அளித்து வளர்க்கப்பட்ட வீரனாக இருந்தான். வாளின் மெய்ஞானத்தை கௌசிகன் கற்றான். மெய்மையின் குருதிவிடாயை ஜமதக்னி அறிந்தான். இருவரையும் இரு களங்களில் வைத்தபின் தெய்வங்கள் நாற்களத்திற்குமேல் குனிந்து முகவாயில் கைசேர்த்தமர்ந்து விழிகூர்ந்தன.

[ 4 ]

காதி தன் மைந்தன் அறிந்த மொழியிலேயே துறவென்றும் தவமென்றும் முனிவரென்றும் ஒரு சொல்கூட இல்லாது சூழலை அமைத்தான். அரண்மனையிலும் கல்விச்சாலையிலும் ஆடுகளங்களிலும் கௌசிகனைச் சூழ்ந்த எவர் நாவிலும் அவை எழலாகாதென்ற ஆணை இருந்தது. அவன் முன் தவக்கோலத்துடன் எவரும் வரவில்லை. அவனுக்காக கதைகளும் நூல்களும் திருத்தியமைக்கப்பட்டன. அவன் அன்னைக்கு கணவனின் ஆணையிருந்தமையால் அவளும் மைந்தனிடம் தவமென்ற சொல்லில்லாமலேயே உரையாடினாள். ஆனால் அவள் கனவில் அவன் பொன்னுடலுடன் வந்துகொண்டே இருந்தான். எனவே அவன் விழிநோக்கிப் பேசுவதை அவள் தவிர்த்தாள். பின்னர் அவனை அவள் சந்திப்பதே அரிதென்றாயிற்று.

தேர்ந்த நூற்றெட்டு போர்வல்லுநர்களால் கௌசிகன் படைக்கலமும் களச்சூழ்கைகளும் பயிற்றுவிக்கப்பட்டான். பன்னிரு அரசியல் அறிஞர்கள் அவனுக்கு ஆட்சித்தொழில் கற்பித்தனர். வஞ்சம்கொண்டவனின் வாள் என ஒவ்வொரு சொல்லாலும் கூர்தீட்டப்பட்டான். ஏறுதழுவுதலுக்காக வளர்க்கப்படும் களிற்றேறு போல ஒவ்வொருநாளும் சினமேற்றப்பட்டான். கருமியின் கனவு என அவனுள் மண்ணாசை வளர்க்கப்பட்டது. மண்ணில் நிகரற்றவன் என்றும், மண்ணனைத்துக்கும் இயல்பாகவே உரிமைகொண்டவன் என்றும், வெல்வதற்கென்றே பிறந்தவன் என்றும் அவன் எண்ணலானான். சொல்லறிந்த நாள்முதல் வணங்காத எவரையும் அவன் தன் முன் பார்க்கவில்லை. மறுப்பென ஒருசொல்லும் கேட்கவில்லை.

ஆணவம் ஓர் அரிய படைக்கலம். பிற அனைத்துப் படைக்கலங்களையும் அது பன்மடங்கு ஆற்றல் கொள்ளச்செய்கிறது. அதை உடைக்காமல் பிற படைக்கலங்களை முறிக்க எவராலும் இயலாது. கௌசிகனின் படைகளுக்கு முன் ஆரியவர்த்தம் பணிந்தது. ஆசுரம் சிதறியது. அரக்கர்நாடுகள் அழிந்தன. வெண்பனிப்புகைக்குள் அமைந்த கின்னரகிம்புருட நாடுகளும் அவனுக்கு ஆட்பட்டன. அவன் ஓர் அஸ்வமேத வேள்வி நிகழ்த்தினான். ஆரியவர்த்தமெங்கும் அவன் செந்நிற வேள்விக்குதிரை பிடரிகுலைத்து தலை தருக்கி நிமிர்ந்து குளம்படி ஒலிக்க சுற்றிவந்தது. அதனெதிர் கோட்டைவாயில்கள் திறந்தன. அரண்மனைமுற்றங்களில் மங்கலப்பொருட்கள் நிரந்தன. சூரிய ஒளி பளிங்கிலென அது ஆரியநிலத்தை கடந்துசென்றது.

எண்ணியவற்றை எல்லாம் வென்று அமைந்தபின் கௌசிகன் மேலும் நிறைவற்றவன் ஆனான். வெல்வதற்கேது இனி என்று அமைச்சர்களை அழைத்து கேட்டான். “அரசே, இனி வெல்வதற்கு மண்ணில் ஏதுமில்லை. இந்திரனின் அரியணையை மட்டுமே நீங்கள் நாடவேண்டும்” என்றனர் அமைச்சர். ஒவ்வொருநாளும் நிலையழிந்தவனாக அரண்மனையில் சுற்றிவந்தான். “இல்லை, என்னிடம் பொய்யுரைக்கிறீர்கள். மண்ணில் நான் வென்றுகடக்க இன்னும் பல உள்ளன. என் உள்ளம் அறிகிறது அதை” என்று அவன் அவர்களிடம் சினந்தான். “அரசே, முடிகொண்டவர் வெல்வதற்கு இனி ஏதும் இம்மண்ணிலிருப்பதாக நாங்கள் கற்ற நூல்கள் சொல்லவில்லை” என்றார்கள். “இல்லை, என் அகம் சொல்கிறது. வெல்லற்கரியது, ஆனால் நான் வெல்லவும்கூடியது ஒன்றுள்ளது.”

கோடையிரவில் அவன் ஒரு கனவு கண்டான். துயில் எழுந்து தன் அரண்மனையின் உப்பரிகையில் சென்று நின்றிருக்கையில் அவன் ஒரு வெண்ணிறப்பசு இன்சோலையின் மறுஎல்லையில் மேய்ந்துகொண்டிருந்ததை கண்டான். காலையொளியில் அதனுடல் பளிங்கில் செதுக்கியதுபோல மின்னியது. வெண்தாமரை இதழ் என செவிகள் அசைந்தன. பீதர்நாட்டு வெண்பட்டுத் திரைவளைவுகள் போல அலைநெறி அமைந்த கழுத்து. வாழைப்பூநிறமான மூக்கு. கருங்கல்லுடைவு என நீர்மை ஒளிவிடும் விழிகள். அவன் அதை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் சிறுத்தபடியே சென்றான். அதன் நான்கு கால்களுக்கு நடுவே சென்று நின்றபோது கடுகெனச் சிறுத்து அண்ணாந்து நோக்கி அதை தலைக்குமேல் பரவிய வெண்முகில் குவை என உணர்ந்து திகைத்து நின்றான்.

அதன் குறியென்ன என்று நிமித்திகரை அழைத்து கேட்டான். அவர்கள் “அரசே, நீங்கள் விழைவது ஒன்றுள்ளது. அது உங்கள் நினைப்புக்கு வந்து நெஞ்சுக்கு எட்டாத ஒன்று” என்றார்கள். “அது எது? இன்றே அறியவேண்டும்” என்றான். நூறு நிமித்திகர் நூலாய்ந்த பின்னரும் அதை அவர்களால் சொல்லக்கூடவில்லை. “நீங்கள் விழைவது அது அரசே. அதை அடைந்தாலொழிய நீங்கள் நிறைவடையப்போவதில்லை. அதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் ஆழம் அறியும். ஆழமென மாறி நின்றிருக்கும் முடிவிலி அறியும்.” சினந்து கைகளை அறைந்து கூவினான் கௌசிகன். “நான் அறியேன். நான் விழைவதென்ன என்று நான் அறியேன்… இப்புவியில் நான் விழைவதற்கென ஏதுள்ளது?” நிமித்திகர் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

அந்த வினா ஒவ்வொருநாளும் பேருருக்கொண்டது. எங்கு எதை நோக்கினாலும் இதுவா என்றே உள்ளம் ஏங்கியது. அடைந்தவையும் ஆள்பவையும் சிறுத்து பொருளற்றவையாக மாறின. ஒவ்வொன்றையும் கடும் சினத்துடனும் அருவருப்புடனும்தான் அவன் எதிர்கொண்டான். மனைவியர் அகன்றனர். மைந்தர் அஞ்சினர். செல்வம் குப்பையென்று தோன்றியது. நாடு வெறும் மண்ணென்றாகியது. முடியும் கோலும் கொடியும் அரியணையும் கேலிநாடகமாக தோன்றின. அவன் உடல்மெலிந்து கண்கள் குழிந்தன. வாய் வறண்டு தொண்டை முழை தள்ளி சிவந்து கலங்கிய விழிகளும் மெல்லிய நடுக்கமோடிய தோள்களுமாக உள்காய்ச்சல் கண்டவன் போலிருந்தான்.

அவனை ஆறுதல் கொள்ளச்செய்ய முயன்றனர் அமைச்சர். கலைகளும் களியாட்டும் அவனுக்கு உவகை அளிக்கவில்லை. அறியாத ஆழம் கொண்ட காடே ஈர்த்தது. எனவே அவன் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் அடர்காடுகளுக்கெல்லாம் வேட்டைக்கென கொண்டுசென்றனர். கைகொள்ளுமளவு தழையில் முழுக்க மறையும் புலியை, முழங்கால் நீரில் மூழ்கி காணாமலாகும் முதலையை, இன்மையிலிருந்து எழுந்து வரும் களிறை காண்கையில் அவன் அறியாத அகத்தூண்டலொன்றை அடைந்தான். “இது, இதனால் சொல்லப்படும் பிறிதொன்று. அதுவே அது” என அவன் உள்ளம் கூவியது. வேட்டையிலிருந்து வேட்டைக்கென சென்றுகொண்டிருந்தான்.

இமயமலையடிவாரத்தில் வாசிஷ்டம் என்னும் காட்டில் தங்கியிருந்த வசிஷ்டரின் குருகுலத்திற்கு ஒருமுறை அவன் சென்றான். களிறொன்றை தொடர்ந்து காட்டுக்குள் சென்று வழிதவறி அலைந்து ஓடையொன்றைப்பற்றி வந்துசேர்ந்த கோமதிநதியின் கரையில் அமைந்திருந்தது அந்த குடில்தொகை. தன் நூறு மாணவர்களுடன் அங்கே மெய்மையை சொல்லென்று சொல்லை மெய்மையென்று ஆக்கும் அலகிலா ஆடலில் ஈடுபட்டிருந்தார் வசிஷ்டர். விருந்தினனாக வந்த கௌசிகனை வரவேற்று அமரச்செய்து உணவும் இன்னீரும் அளித்தார். இளைப்பாற குளிர்பரவிய குடில்களை ஒருக்கினார். உண்டு, ஓய்வெடுத்து மறுநாள் காலை வசிஷ்டரின் சோலைக்குள் உலவிவந்த கௌசிகன் அங்கே அந்த வெண்பசுவை மீண்டும் கண்டான்.

அதை நோக்கி கைநீட்டியபடி ஓடியபோது அது திரும்பி அவனை நோக்கி அச்சக்குரல் எழுப்பியபடி ஓடி வசிஷ்டரின் தவச்சாலையின் தொழுவத்தை அடைந்து கன்றுடன் சேர்ந்து நின்றது. பின்னால் ஓடிவந்த கௌசிகன் அதன் கட்டுக்கயிற்றை பற்றி இழுக்க முயன்றதும் உள்ளிருந்து ஓடிவந்த வசிஷ்டரின் மாணவர்கள் “நில்லும்! என்ன செய்கிறீர்?” என்று கூவி அவனை தடுத்தனர். “இது விண்ணாளும் காமதேனுவின் மண்வடிவம் என ஆசிரியரால் உரைக்கப்பட்டது. இதன் நெய்கொண்டே இங்கு வேள்விக்கு முதல் அவி ஊட்டப்படுகிறது…” கௌசிகன் உரக்க “இது எனக்குரியது… ஏவலரே, இதை உடனே நம் அரண்மனைக்கு கொண்டுசெல்லுங்கள்” என ஆணையிட்டான். அங்கே வந்த வசிஷ்டர் “அரசே, வேண்டாம். இது வேள்விப்பசு. அரசர்கள் இதை ஆளமுடியாது” என்றார்.

“அரிதென்று சொல்கிறீர்கள். அரிதெல்லாம் அரசனுக்குரியதே…” என்ற கௌசிகன் “இதை இழுத்துக்கொண்டு வருக!” என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் வேல்களைத் தாழ்த்தி அசைவில்லாது நின்றனர். “ஏன் நிற்கிறீர்கள்? மூடர்களே…” என்று கூவியபடி அவன் பசுவை சுட்டிக்காட்டினான். “இது எனக்குரியது… என் உடைமை இது.” அவன் பித்தெழுந்தவன் போலிருந்தான். படைத்தலைவன் தலைவணங்கி “தவமுனிவரின் பொருள்கவர எங்களால் ஆகாது. அதை பாதுகாப்பதற்கே நாங்கள் ஷத்ரியர்களாகி வந்துள்ளோம்” என்றான். “இது என் ஆணை!” என்றான் கௌசிகன். “இந்த ஆணையை பிறப்பித்ததன் பொருட்டே உங்களைக் கொல்லக் கடமைப்பட்டவன் நான்” என்று படைத்தலைவன் வாளை உருவ கௌசிகனின் படைவீரர் அனைவரும் படைக்கலம் தூக்கினர்.

திகைத்து நின்ற கௌசிகனை நோக்கி “அரசே, உங்கள் குடிப்பிறப்பின்பொருட்டு இப்போது பொறுத்துக்கொள்கிறோம். பிறிதொரு சொல் எழுந்தால் உங்கள் தலைகொய்து கொண்டுசெல்வோம்” என்றார் அமைச்சர். உடல் நடுங்கித்துடிக்க கண்கள் இருள்கொள்ள வெறிகொண்டு அங்குமிங்கும் அலைமோதிய கௌசிகன் தன் வில்லை எடுத்தபடி “இழிசினரே, உங்கள் அச்சுறுத்தலுக்கு பணிவேன் என்றா நினைக்கிறீர்கள்? இதோ, நானே இதை கவர்கிறேன். எவர் தடுப்பார் என்று பார்க்கிறேன்” என்றான். அப்போது பின்நிரையிலிருந்து வந்த அவன் இளமைந்தன் “தந்தையே, தங்களைக் கொல்லும் பழி சூடமாட்டேன். ஆனால் என்னைக் கொல்லாது நீங்கள் அப்பசுவை கவரமுடியாது” என்றான். அவன் கண்களை நோக்கிய கௌசிகனின் கையில் இருந்து வில் நழுவியது.

தீயதெய்வம் ஒன்றால் துரத்தப்பட்டவனாக அவன் திரும்ப தன் அரண்மனைக்கு ஓடினான். தன் மஞ்சத்தறைக்குள் புகுந்து இருளுக்குள் உடல்குறுக்கி அமர்ந்துகொண்டு அதிர்ந்தான். அவனை அணுகிய மனைவியிடம் கேட்டான் “என் தலைகொய்ய வாளெடுத்தான் உன் மைந்தன். அவனை நீ எப்படி பெற்றாய்?” அவள் அவன் கண்களை நோக்கி “அங்கு நான் இருந்திருந்தால் வாள் எடுத்து அவன் கையில் அளித்திருப்பேன். என் குடி எனக்களித்த மெய்மையை அவன் என பெற்றேன்” என்றாள். திகைத்து எழுந்து அவன் விலகிச்சென்றான். நிலைகொள்ளாதவனாக இருளுக்குள் உலவிக்கொண்டிருந்தான். பின்பு ஒரு தருணத்தில் நகைக்கத் தொடங்கினான். பன்னிருநாட்கள் நினைத்து நினைத்து நகைத்துக்கொண்டிருந்தான்.

பின்பு ஓய்ந்து நீள்மூச்சுவிட்டு மெல்ல அடங்கி முழுச்சொல்லின்மையை அடைந்து அமர்ந்திருந்தான். அவன் அருகே வந்த பேரமைச்சர் “அரசே, இதில் சிறுமை ஏதுமில்லை. இப்பாரதவர்ஷம் முனிவர் தவம் செய்யும்பொருட்டு, மெய்மை விளையும்பொருட்டு விண்ணாளும் தெய்வங்களால் யாக்கப்பட்டது. இங்குள்ள அரசர் ஒவ்வொருவரும் படைக்கலம் கொள்வது தவத்தோரை பேணும்பொருட்டே. உழவர் அறுப்பதும் ஆயர் கறப்பதும் கொல்லர் உருக்குவதும் சிற்பி செதுக்குவதும் வணிகர் சேர்ப்பதும் தவம்பெருகுவதற்காக மட்டுமே. நீங்கள் அவ்வுண்மையை சற்று பிந்தி அறிந்திருக்கிறீர்கள். தெய்வநெறிக்கு முன் மானுடர் தோற்பதில்லை. பணிந்து வெல்கிறார்கள் என்று தெளிக!” என்றார்.

“நான் கொள்ளவிழைவது அந்தப் பசுவையே” என்றான் கௌசிகன். “அதைக் கொள்ளாது என்னால் அமைய முடியாது. அதை என்னுள் அறிகிறேன்.” அமைச்சர் “அரசே, அது காமதேனுவின் வடிவம். அதன் நான்கு கால்களும் வேதங்கள். வெண்ணிற உடலே மெய்மை. விழிகளே முதலொளி. அதன் பால் அமுது. அது மெய்மையை அறிந்த முனிவருக்கு மட்டுமே உரியது” என்றார் அமைச்சர். “அதை அடையாது நான் வாழ்ந்ததெல்லாம் வீணே” என்று தனக்கே என கௌசிகன் சொன்னான். “அரசே, அதை இப்பிறவியில் தாங்கள் அடைய இயலாது” என்றார் அமைச்சர். “ஏன்?” என்று கௌசிகன் கூவியபடி எழுந்தான். “நீங்கள் அரசர்” என்றார் அமைச்சர். “இல்லை, நான் கௌசிகன். கௌசிகனும் அல்ல, வெறும் மானுடன்” என்றான் கௌசிகன்.

“அது அரிது. அந்நினைப்பை ஒழியுங்கள்” என்றார் அமைச்சர். “நான் தவம்செய்கிறேன். மெய்மையை பற்றுகிறேன்” என்றான் கௌசிகன். “அரசே, காமத்தை குரோதத்தை மோகத்தை கடந்தவர்களே தவத்தின் முதல்படியில் கால்வைக்கிறார்கள். தாங்களோ அவற்றை இதுகாறும் பெருக்கிப்பெருக்கி சென்றவர். இன்றுவரை வந்தவழியெல்லாம் திரும்பிச்சென்றபின் அல்லவா தாங்கள் தொடங்கமுடியும்?” என்றார் அமைச்சர். “நான் உன்னுவது எதையும் அடையாமலிருந்ததில்லை. அடையவில்லையென்றால் அச்செலவில் அழிக என் உயிர்!” என்று கௌசிகன் எழுந்தான். “நான் இன்று அறிகிறேன், என்றும் நான் விழைந்தது இது ஒன்றையே. பொருந்தா இடத்தில் வீண்வாழ்க்கையில் இதுவரை இருந்தேன்.”

அவன் மூதன்னை அப்போது முதுமக்கள்கோட்டத்தில் கைம்மை நோற்றிருந்தாள். அவன் அவளைச்சென்று பணிந்தான். “அன்னையே, அனைத்தையும் உதறி காடேகிறேன். உன் சொல் கிடைத்தால் செல்கிறேன்” என்றான். “நீ பிறப்பதற்கு முன்னரே அன்னையின் சொல் உன்னுடன் இருந்தது மைந்தா. இத்தனைநாள் நான் காத்திருந்தது இதன்பொருட்டே. செல்க!” என்று அவள் விடைகொடுத்தாள்.

வசிஷ்டரின் தவக்குடிலை அடைந்து “சொல்லுங்கள் முனிவரே, இந்தப் பசுவை நான் அடைய என்ன செய்யவேண்டும்?” என்றான். “இது பிரம்மரிஷிகளுக்குரியது. பிரம்மம் கனிந்து உங்கள் உள்ளக்கொட்டிலில் கட்டுண்டு அமுதுசொரியும் என்றால் நானே இதை கொண்டுவந்து உங்கள் கொட்டிலில் நிறுத்துவேன்” என்றார் வசிஷ்டர். “நான் அதற்கு செய்யவேண்டியதென்ன?” என்றான் கௌசிகன். “தவம்செய்க… ஆனால் அது எளிதல்ல” என்றார் வசிஷ்டர். “ஏன்?” என்றான் கௌசிகன்.

“அரசே, நான்குவகை தவங்கள் உள்ளன இப்புவியில். தங்கள் செயல்களால் தவம் செய்வது கார்மிகம். செய்கைகளில் மூழ்கியவர்களுக்குரியது அது. தங்கள் விழைவால் தவம் செய்வது அரசர்களுக்குரியது. அதை ஷாத்ரம் என்கின்றன நூல்கள். தங்கள் வஞ்சத்தாலும் ஆணவத்தாலும் தவம் செய்வது அசுரர்களுக்குரிய வழி. அதை ஆசுரம் என்கின்றனர். மெய்மைக்கான நாட்டத்தை அன்றி பிறிதேதும் இல்லாது தவம்செய்பவனே பிரம்மஞானி. அதையே பிராம்மணம் என்கின்றனர். பிரம்மதவம் செய்து எய்தியவனே பிரம்மரிஷி எனப்படுவான்.”

வசிஷ்டர் சொன்னார் “நீங்கள் படைக்கலம் பயின்று நாடாண்டவர். ஷத்ரியர்களுக்குரிய தவத்தை அன்றி பிறிதொன்றைச்செய்ய உங்கள் உடல் ஒப்பாது. உள்ளம் அமையாது. ஆணவமும் விழைவும் சினமும் ஏற்காது. வீண்முயற்சி வேண்டியதில்லை” என்றார். “நான் பின் திரும்புபவன் அல்ல. உறுதிகொண்டபின் வெல்வதோ இறப்பதோதான் என் வழி” என்றான் கௌசிகன். “எனக்குரிய ஊழ்கம் என்ன? அதை எனக்கு உரையுங்கள்.” வசிஷ்டர் “எது ஓங்கியுள்ளதோ அதை பற்றுக! இப்பசுவே உங்கள் ஊழ்கச்சொல் ஆகுக” என்றார்.

இமயச்சாரலின் அடர்காட்டில் கௌசிகர் சென்றமர்ந்து தவம் செய்தார். அவ்வெள்ளைப்பசு அன்றி பிறிதெதுவும் தன் நெஞ்சிலுறையாமலானார். பின்பு அதை முற்றிலும் மறந்தார். அவர் உடலுருகி மறைய தோல்போர்த்த என்புக்குவை அங்கிருந்தது. மூச்சு துடிக்கும் மட்கிய உடலுக்குள் தவம் மட்டுமே எரிந்து நின்றது. அவர் உடலில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள் இறங்கிச்சென்று மறைந்தன. கொதிக்கும் நீரூற்று ஒன்று ஒழுகி ஒழிந்தது. அனல் எழுந்து அவரை விறகாக்கி நின்றெரிந்து அணைந்தது. அக்கரிக்குவைக்குள் இருந்து நீள்மூச்சென ஒரு காற்று எழுந்தது. அதன்பின் அது கல்லெனக் குளிர்ந்து காலமின்மையில் அங்கிருந்தது. அவர் புகைமுகிலென்றானார். வெள்ளைப்பசுவின் உருக்கொண்டு விண்ணிலேறினார். அங்கிருந்த வெண்பசு ஒன்றன் அகிடின்கீழ் நின்று அமுதுகுடித்தார். மீண்டெழுந்த முனிவர் விஸ்வாமித்ரர் என்றழைக்கப்பட்டார். அவரது கொட்டிலில் அமுதகலத்துடன் காமதேனு நின்றது என்றனர் கவிஞர்.

தன் படைப்புத்தவத்திலிருந்து கண்விழித்து எழுந்த பிரம்மன் தன் முன் தருக்கி நின்றிருந்த முனிவனின் மெய்யறிவுருவைக் கண்டு திகைத்தார் “நீ யார்?” என்றார். “ஒரு சிறுபுல்” என்று அவன் சொன்னான். “ஒருநாள் உன்னை ஈடுசெய்து நானே விண்ணும் மண்ணும் கொண்ட ஓர் முழுதுலகைப்படைப்பேன்.நானும் பிரம்மனே” பிரம்மன் அதை நோக்கியமைந்தபின் புன்னகை செய்து “அவ்வாறே ஆகுக” என்றார்.

முந்தைய கட்டுரைதினமலர் 37, தனித்து நடப்பவர்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்….