‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30

[ 12 ]

உச்சிப்பொழுதுக்கு முன்னரே ஜயத்ரதன் அஸ்தினபுரியை வந்தடைந்தான். தன் படைத்துணைவர் இருவருடன் புரவியிலேயே சுதுத்ரியின் கரையிலிருந்து நிற்காமல் வந்து புழுதிபடிந்த ஆடைகளுடன் கோட்டை வாயிலில் நின்ற அவனை அடையாளம் காணாமல் வழிமறித்தான் காவலன். அவன் படைத்துணைவன் சிந்துவின் இலச்சினையை காட்டிய பின்னரே சைந்தவனை அடையாளம் கண்டு திகைத்து காவலர்தலைவனை நோக்கி ஓடினான். அவன் வருகையை அறிவிக்கும் சங்கோ முரசோ முழங்கலாகாது என்று முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது. நகர்த்தெருக்களில் புரவியில் சென்றபடியே தன் படைத்துணைவரிடம் “நான் மாதுலர் சகுனியை பார்க்க விழைகிறேன் என்பதை அவருக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டு அனுப்பினான்.

தன் அரண்மனைக்கு வந்து விரைந்து நீராடி உணவுண்டு ஆடை மாற்றி வெளியே வந்து காத்து நின்றிருந்த கனகரிடம் “மாதுலர் சகுனியை நான் சந்திக்கச் செல்கிறேன். எப்போது அஸ்வத்தாமன் நகர்நுழைந்தாலும் எனக்கு செய்தி அறிவியுங்கள். அவருடன் அமர்ந்து சொல்லாடிவிட்டு இன்னும் மூன்று நாழிகைக்குள் அரசரை அவரது மந்தண அறையில் சந்திக்க விழைகிறேன்” என்றான்.

“அரசரிடம் தங்கள் வருகை அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் கனகர். “அங்கர் அங்குதான் இருக்கிறாரா?” என்றான். “அவர் எப்பொழுதும் அரசரின் அறைக்குள் அருகமர்ந்திருக்கிறார்” என்றார் கனகர். அச்சொல்லில் ஏதேனும் நச்சுக்கோடு உள்ளதா என்று ஒருகணம் எண்ணிவிட்டு ஜயத்ரதன் சித்தத்தை விலக்கினான். அதை உணர்ந்த கனகர் “அரசரிடம் பேசுபவர் இப்போது அங்கர் மட்டுமே” என்றார்.

சகுனியின் அரண்மனை முகப்பில் அவனுக்காகக் காத்திருந்த அணுக்கன் “தங்களுக்காக காந்தார இளவரசரும் அமைச்சர் கணிகரும் காத்திருக்கிறார்கள்” என்றான். “நன்று” என்றபடி படிகளின்மேல் ஏறும்போதே தன் சொற்களை எடுத்து கோத்தான். அவன் சிந்துவிலிருந்து கொண்டுவந்த சொற்கள் அல்ல அவை. அப்போது ஒவ்வொருபடியிலுமாக ஊறி எழுந்தவை. அவை மேலும் சுருக்கமாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன. சகுனியின் மாளிகை சுண்ணப்பூச்சும் அரக்குப்பூச்சும் கொண்டு புதியதுபோல தோன்றியது.

சகுனி தன் அறையில் குறுபீடத்தில் விரிக்கப்பட்ட நாற்களத்தில் பரப்பப்பட்ட கருக்களை கூர்ந்து நோக்கி கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தார். அருகே அவரது கால் மென்பஞ்சு பீடத்தில் நீட்டப்பட்டிருந்தது. அவரது பச்சைவிழிகள் நிலைத்திருக்க தாடி மட்டும் மென்மையாக காற்றில் பறந்தது. எதிரில் தரையில் கணிகர் அமர்ந்திருந்தார். ஜயத்ரதன் தலைவணங்கி “மாதுலருக்கு வணக்கம்” என்றபின் கணிகரை நோக்கி “வணங்குகிறேன் அமைச்சரே” என்றான். கணிகர் “களைத்திருக்கிறீர்கள்” என்றார். “ஆம், தொலைதூரப்பயணம். நில்லாமல் வந்தேன்” என்றான். “அரசரை சந்திக்கவேண்டும். அஸ்வத்தாமனுக்காக காத்திருக்கிறேன்” என்றான். “அறிவேன்” என்ற சகுனி அமரும்படி கைகாட்டினார்.

ஜயத்ரதன் அமர்ந்தபடி “அனைத்தையும் தாங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள் என்று நானும் அறிவேன் மாதுலரே” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்துக்கான கொடி ஏறிவிட்டது. அது பாரதவர்ஷம் முழுமைக்கும் விடுக்கப்படும் அறைகூவலன்றி வேறல்ல. கதைகளின்படி ராஜசூயவேள்வியை யயாதி மன்னர் நிகழ்த்தினார். அதன் பின்பு பிருதுமன்னர் நிகழ்த்தினார். மாமன்னர் பரதன் நிகழ்த்தினார்…” என்றான். மறித்து “அயோத்தியின் ராமனும் அதை நிகழ்த்தியதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. கணிகர் இருமுவதுபோல சிரித்து “மன்னர்கள் இறந்தபின் ஓரிரு தலைமுறைக்குப்பின் சூதர்கள் அவர்கள் ராஜசூயம் செய்ததாக சொல்வதுண்டு” என்றார்.

எரிச்சலுடன் ஜயத்ரதன் “நான் அதை சொல்லவரவில்லை. பாரதவர்ஷத்தை ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னர்கள் ஆற்றிய வேள்வி அது என்று குறிப்பிட்டேன். இன்னமும் ஆழ வேரூன்றாத நகரம் அதை இயற்றப்போவதாக அறிவித்திருப்பது எளிய செய்தி அல்ல” என்றான். “உண்மை” என்றார் சகுனி. “மாதுலரே, நாம் இதற்கு ஒப்புதல் அளிக்கலாகாது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரின் ஒப்புதலின்றி ஒருபோதும் ராஜசூயம் நிகழ முடியாது” என்றான் ஜயத்ரதன். “நான் இங்கு வந்ததே தாங்கள் எந்த உளநிலையில் இருக்கிறீர்கள் என்று அறியாததனால்தான். தங்கள் உடல்நிலை நலிந்துள்ளது என்றும் ஊக்கமற்றிருக்கிறீர்கள் என்றும் அறிந்தேன்.”

சகுனி அதை செவிமடுக்காமல் “ராஜசூயத்திற்கு துரியோதனனின் ஒப்புதல் வேண்டுமென்பதில்லை. ஒப்புதல் அளிக்க வேண்டியவர் திருதராஷ்டிர மாமன்னர் மட்டுமே” என்றார். “இந்நகரை இன்று ஆள்வது துரியோதன அரசர் அல்லவா?” என்று சற்று சினத்துடன் ஜயத்ரதன் கேட்டான். “ஆம், முடிசூடி அரியணையில் அமர்பவன் துரியோதனனே. ஆனால் ராஜசூயம் என்பது தொன்மையான குலமூப்புவேள்வி. குடிமூத்தாரின் ஒப்புதலே அதற்கு முதன்மையானதாகும். பீஷ்மரும் திருதராஷ்டிரரும் இருக்கும் வரை அவர்களின் சொல்லே தேவையானது.”

ஜயத்ரதன் இருவரையும் மாறி மாறி நோக்கி மேலே சொல்லெழாமல் அமர்ந்திருந்தான். கணிகர் புன்னகையுடன் ஒரு கருவை எடுத்து வைத்து “காளை அறிந்திருக்கிறது” என்றார். சகுனி அதை நோக்கியபின் புன்னகையுடன் அரசியில் விரலை தொட்டபடி “ஆம்” என்றார். எரிச்சலை வென்று “திருதராஷ்டிரரை பார்க்க யார் வரக்கூடும்?” என்றான் ஜயத்ரதன். “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளைய யாதவர் கிளம்பிவிட்டதாக செய்திகள் வருகின்றன” என்று கணிகர் சொன்னார். “அது இயல்பானதே. ஏனெனில் அவரன்றி பிறர் இத்தருணத்தை கையாள முடியாது. அவர் வருவாரென்றால் பேரரசரின் ஒப்புதலைப்பெற்றே செல்வார்.”

பற்களைக் கடித்து தலையை அசைத்தபடி “அவனை நான் அறிவேன். களம் நின்று போர் புரிய கற்றிருக்கிறானோ இல்லையோ சூதும் சொல்மயக்கும் அறிந்தவன்” என்று ஜயத்ரதன் சொன்னான். கணிகர் புன்னகைத்தார். ஜயத்ரதன் “இத்தருணத்தில் தங்களையே நான் நம்பியிருக்கிறேன் கணிகரே. தாங்கள் ஒருவரே இதற்கு வழி காணமுடியும். சொற்களத்தில் இளைய யாதவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் தாங்கள் மட்டுமே என்று நானறிவேன்” என்றான். கணிகர் “அவர் வரட்டும். அதன் பின்பு பார்ப்போம்” என்றார். ஜயத்ரதன் “ஏன்? வரமாட்டான் என எண்ணுகிறீர்களா?” என்றான். “வரக்கூடும். ஆனால் வருவதுவரை நான் அவர் வருவார் என்று எண்ணமாட்டேன்” என்று அவர் சிரித்தார்.

ஜயத்ரதன் சகுனியை நோக்கி “படைத்துணைக்கென கோரி மகதத்தின் செய்தி இங்கு வந்ததை அறிந்தேன். அஸ்தினபுரியின் அரசர் நானும் இருக்கையில் மகதரின் தோள்தழுவி அளித்த வாக்குறுதி அது. ஆனால் அஸ்தினபுரியால் அது தவிர்க்கப்பட்டது. மாதுலர் விருப்பப்படி அது நடந்ததாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். “மாதுலர் அவ்வாறு ஆணையிட்டிருந்தால் அது ஏன் என்று அறிய விழைகிறேன்.” சகுனி அவனை நிமிர்ந்து நோக்காமல் அரசியை மெல்ல பின்னடையவைத்து அங்கே வில்லவனை நிறுத்தி “ஆணையிடுகையிலும் இப்போதும் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது பிழையென இப்போதும் படவில்லை” என்றார்.

ஜயத்ரதன் பேச வாயெடுப்பதற்குள் கணிகர் “சைந்தவரே, இதன் எளிய விடைகூட தங்கள் உள்ளத்தில் எழவில்லையா? இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்தின் கொடியை ஏற்றிவிட்டு அமர்ந்திருப்பவர் யார்? சூத்திர குருதி கொண்ட யாதவர்கள். அவர்களுக்கு எதிர்நிற்கும் ஜராசந்தரோ அசுர வளர்ப்பு கொண்டவர். இருதரப்பிலும் சூழ்ந்திருப்பவர் இழிகுலத்தோர். அவர்கள் மோதி மடியட்டுமே? சூத்திரரும் நிஷாதரும் மோதும் போரில் ஒரு தரப்பை ஷத்ரியர் ஏன் எடுக்கவேண்டும்?” என்றார். ஜயத்ரதனின் விழிகள் மாறுபட்டன. “ஆம், நான் அவ்வாறு எண்ணிப்பார்க்கவில்லை” என்றான். சகுனி “அவர் சொல்லும்போது அதனால்தான் என தோன்றுகிறது. ஆனால் அதனால் அல்ல” என்றார்.

ஜயத்ரதன் “ஆனால் நாம் ஜராசந்தரை நம்முடன் இணைத்துக் கொண்டால் இந்திரப்பிரஸ்தம் எண்ணியும் பார்க்கமுடியாத படை வல்லமை கொள்வோம் அல்லவா?” என்றான். “கொள்வோம். ஆனால் நம்மைவிட அப்படைக்கூட்டில் படை வல்லமையும் பொருள் வல்லமையும் மிக்கவராக ஜராசந்தரே இருப்பார். துரியோதனர் அப்படைக்கூட்டின் இரண்டாம் இடத்திலேயே அமைவார். அவர்கள் மோதட்டும். எருதும் சிம்மமும் மோதி அழியட்டும். எருது உயிர் துறக்கும். சிம்மம் புண்பட்டு உடல் நலியும். அதன் பிறகு காடு களிறுக்குரியதாகும்” என்றார் கணிகர்.

ஜயத்ரதன் இரு கைகளையும் குவித்து அதன் மேல் மோவாயை வைத்து எண்ணத்தில் ஆழ்ந்தான். பின்பு மூச்செறிந்து “ஆம், அவ்வாறே எனக்கும் தோன்றுகிறது” என்றான். “இல்லை, அதுவும் உண்மையல்ல. அம்முடிவை வலுவாக்க சொல்லாடல் தேவைப்பட்டது, கணிகர் சொன்னதை உள்ளம் ஏற்றுக்கொள்கிறது” என்றார் சகுனி. ஜயத்ரதன் “நான் எளியவன். இந்த உளம்சூழ்நெறிகள் எனக்கு அயலானவை” என்று சொல்லி பெருமூச்சுவிட்டான். “இங்கு வரும்வரை அனைத்தும் எளிதென்று எண்ணியிருந்தேன். அனைத்தையும் செவ்வனே முடிக்கப்போகிறவன் நான் என நெஞ்சினித்தேன்.”

“நாம் இப்போது செய்வதற்கொன்றுமில்லை. நோக்கியிருப்போம்” என்று சொல்லி சகுனி “காளை” என்று ஒரு கருவை தட்டி வீழ்த்தினார். கணிகர் அதை நோக்கி புன்னகைசெய்து “ஆம்” என்றபின் அடுத்த உருட்டலுக்காக பகடையை கையிலெடுத்துக்கொண்டார். “அப்படியென்றால் ராஜசூயத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்கிறீர்களா?” என்று ஜயத்ரதன் கேட்டான். “ராஜசூயத்துக்கு ஒப்புதல் அளிப்பது என்பது எளிதல்ல. அது இன்றல்ல, என்றும் நமக்கெதிராக நின்றிருக்கும் ஒரு சான்று. தருமனையே குலமூத்தோனாக நாம் ஏற்றிருப்பதாக பொருள்படுவது அது. எனவே நாம் ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை” என்றார் கணிகர்.

“ஆனால் ஒப்புதல் மறுக்கப்படவும் வேண்டாம். திருதராஷ்டிரர் ஒப்புக்கொண்டு விதுரர் ஓலையெழுத முற்பட்டாலும்கூட முறைப்படி அழைப்பு வரவில்லை என்று அதை மறுப்போம். தருமனும் நேரில் வந்து பேரரசரிடம் அருள் பெற்று செல்லவேண்டுமென்பதே குலமுறைமை என்போம். அதற்குள் பீமன் மகதத்தின் ஆநிரைகளை கவராதிருக்க மாட்டான். இந்திரப்பிரஸ்தமும் மகதமும் படை முட்டி களம் காணாமல் இருக்காது. அது நிகழட்டும்.” அவர் சிரித்து “குலமுறைப்படி என்று எதை சொன்னாலும் நகரிலுள்ள முதியோர் அதை ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.

ஜயத்ரதன் நீள்மூச்சு விட்டபடி “இதை நான் சிசுபாலரிடமும் அஸ்வத்தாமனிடமும் எப்படி சொல்வது?” என்றான். “அரசே, எத்தனை அணுக்கமானவர்கள் எனினும் அவர்கள் இருவரும் ஷத்ரியர்கள் அல்லர். சிசுபாலர் யாதவக் குருதி கொண்டவர். அஸ்வத்தாமன் அந்தணன். ஷத்ரியர்களுக்கு ஷத்ரியர்களே உறுதியான துணையும் இறுதிவரை தொடரும் உறவும் ஆவார்கள்” என்றார் கணிகர். “குலமுறையை மட்டும் அவர்களுக்கும் சொல்லுங்கள். குடிமூத்தோரின் ஏற்பு தேவை என்றால் அவர்கள் மேலே ஏதும்  சொல்லமுடியாது.”

“ஆம், அஸ்தினபுரி காத்திருக்கட்டும்” என்றார் சகுனி. கணிகர் புன்னகையுடன் “அது களிறின் இயல்பு. அதன் கரிய நிறம் காட்டின் இருளுக்குள் முற்றிலும் மறைந்து நிற்பதற்குரியது. சைந்தவரே, யானையின் இயல்பென்பது தனக்குரிய தருணம் வரும்வரை முற்றிலும் விழைவடக்கி செவியிலும் விழியிலும் மட்டுமே உயிர் எஞ்ச காத்திருப்பது. தன் எதிரிக்காக ஆறுநாட்கள் ஒரே மறைவிடத்தில் உணவும் நீரும் இன்றி காத்திருந்த யானையைப்பற்றி வேட்டையாளரின் கதை ஒன்றுள்ளது” என்றார்.

ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டு “நான் இங்கு வருகையில் ஜராசந்தனின் விழைவை ஏற்றே வந்தேன். இக்கோணத்தில் எண்ணவில்லை. தாங்கள் சொன்னபின்பு எனக்கு ஆணையிட அவன் யார் என்ற எண்ணமே எழுகிறது” என்றான். “ஆம் சைந்தவரே, வேதம் முளைத்த மண் சிந்துநிலம். அத்தொல்காலத்திலிருந்து இருந்து வரும் தொல்குடி அரசு தங்களுடையது. அவனோ அரக்கி ஜரையின் முலைப்பால் அருந்தியவன். இன்றல்லது நாளை அவன் ஷத்ரியரால் கொல்லப்பட்டாகவேண்டும். இன்றே அதை நம் குடிதோன்றிய யாதவன் ஒருவன் செய்வானென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் கணிகர்.

 

[ 13 ]

அஸ்வத்தாமன் புஷ்பகோஷ்டத்தின் முகப்புக்கு வந்தபோது முன்னரே சிசுபாலனும் ஜயத்ரதனும் அங்கு காத்து நின்றிருந்தனர். இருவரும் மூன்றடி எடுத்து முன்வைத்து அவனை முகமன் சொல்லி வரவேற்றனர். அஸ்வத்தாமன் மறுமுகமன் உரைத்து “பொறுத்தருள்க அரசர்களே, நான் எந்தையை சந்தித்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவர் உத்தரபாஞ்சாலத்துக்கு வருவதை விரும்புவதுமில்லை. எனவே இன்று காலை அவரது பயிற்சி வகுப்பு முடிந்த பின்னரே அங்கிருந்து கிளம்பினேன்” என்றான். சிசுபாலன் “நானும் திரும்பிச் செல்வதற்கு முன்பு ஆசிரியரை சந்தித்து நற்சொல் பெறவேண்டும்” என்றான். ஜயத்ரதன் “செல்வோம்” என்று சொல்லி அப்பால் நின்ற கனகரை நோக்கி கையசைக்க கனகர் அவர்களின் வருகையை அறிவிக்க விரைந்தார்.

மூவரும் இடைநாழியில் நடந்து படிகளில் ஏறுகையில் அஸ்வத்தாமனுக்கு ஜயத்ரதன் அவன் சகுனியுடன் பேசி எடுத்த முடிவை சொன்னான். “இப்போது நாம் குலத்தின் ஒப்புதல் இல்லையென்பதை சொல்ல இயலாது என்று காந்தாரர் எண்ணுகிறார். அதை பேரரசர் விரும்பமாட்டார். அவரது உள்ளம் யுதிஷ்டிரனை தன் மைந்தனாகவே எண்ணும். குருகுலத்தில் நிகழவிருக்கும் ஒரு ராஜசூயமென்பது இக்குடியின் மூதாதையருக்கு அளிக்கப்படும் நல்வணக்கமென்றே அவர் எண்ணுவார். எனவே அவர்கள் முறைமைப்படி தருமன் வந்து ஒப்புதல் கோரவேண்டுமென்று கோரலாம் என்று கணிகர் எண்ணுகிறார்” என்றான்.

“முறைமைப்படி வருவதற்கு தயங்குபவனல்ல தருமன்” என்றான் அஸ்வத்தாமன். “பணிவதில் பெருவிருப்புள்ளவனாக இருக்கிறான். பணியும்போது அவனுள் நான் அறத்தான் என ஒரு குருவி சிறகடித்துக் கூவுகிறது என ஒரு சூதர்சொல் உண்டு.” ஜயத்ரதன் “ஆம், ஆனால் அவர் மட்டும் வந்தால் போதாது. அவருடன் இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடிய அரசியும் வரவேண்டும். பேரரசர் குடி மூதாதை என்பதனால் பேரரசி குந்தியும் உடன் வரவேண்டும். பிறபாண்டவர் நால்வரும் துணை எழவேண்டும்” என்றான். அஸ்வத்தாமன் “அதுவும் நிகழக்கூடாதென்றில்லை” என்றான். “ஏனெனில் அப்படி வந்தாலொழிய ராஜசூயம் நிகழாதென்றால் அதை அவள் செய்யவும்கூடும்.”

“அதற்குள் நம் படைகளை ஜராசந்தன் படைகளுடன் இணைத்துக்கொண்டு அவர்களின் ஆநிரை கவர்தல் முயற்சிகளை முறியடிக்க முடியும். ராஜசூயம் எளிதல்ல என்று தன் படைகள் களத்தில் அழியும்போது, நதிகளில் தன் வணிகப்படகுகள் மூழ்கும்போது இந்திரப்பிரஸ்தம் புரிந்து கொள்ளும்” என்று சிசுபாலன் சொன்னான். அஸ்வத்தாமன் “காந்தாரர் சகுனி எதன் பொருட்டு வேள்வி ஒப்புதல் மறுக்கப்படலாகாது என்று எண்ணுகிறார்?” என்றான். அவன் கண்களில் தெரிந்த ஐயத்தைக் கண்ட ஜயத்ரதன் “ஒப்புதல் மறுக்கப்பட்டது என்னும் செய்தி அஸ்தினபுரியின் மக்களுக்கு தெரியுமென்றால் ஹஸ்தியின் மரபில் மீண்டும் ஒரு ராஜசூயம் நிகழ்வதை அஸ்தினபுரியின் அரசர் தடுத்துவிட்டார் என்னும் இழிபெயர் பரவலாகும். அது வேண்டியதில்லை என்று எண்ணுகிறார்” என்றான்.

அஸ்வத்தாமனின் இதழ்கள் வளைந்தன. “இழிபெயருக்கு இனியும் அஞ்சுபவரா துரியோதனன்?” என்றான். “ஏன்?” என்று ஜயத்ரதன் கேட்டான். “சைந்தவரே, சில மாதங்களாக அஸ்தினபுரியில் நிகழ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். கொடிய நோய் ஒன்று இந்நகர்மேல் பரவியது. குடிகள் செத்தொழிந்தன. அரசன் ஒருமுறைகூட ஆலயங்களுக்குச் சென்று பிழைநிகர் செய்யவில்லை. மூதாதையருக்கும் நாகங்களுக்கும் உரிய கடன்களை செலுத்தவில்லை. துயர்கொண்ட மக்களின் ஆறுதலுக்காக உப்பரிகையில் வந்து நின்று அவர்களின் குறைகளை கேட்கவும் முன்வரவில்லை.”

“அன்று அவரும் நோயுற்றிருக்கலாம்” என்றான் ஜயத்ரதன். “இல்லை. இந்நகரிலேயே அவர் ஒருவரே பழுதற்ற உடல் நலத்துடன் இருந்தார். நகரம் நோய் நீங்கியதும் அவர் மேலும் இரக்கமற்ற ஆட்சியாளராக ஆனார். அஸ்தினபுரி இன்று அவரது ஆணைகளால் ஒவ்வொரு அணுவும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆட்சிக்கலையறிந்த எவரும் உணர்ந்திருக்கும் ஒன்றுண்டு சைந்தவரே. மானுட உடலோ உள்ளமோ புறநெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவை அல்ல. ஒவ்வொரு மனித உள்ளமும் தனக்கென்று விழைவுகளும் வழிகளும் கொண்டது. அதை அறியாது உடல் தன் வழிகளை தேர்கிறது. ஆகவே பிழை நிகழாது ஓர் அரசையோ ஓர் குடியையோ கூட எவராலும் நடத்த முடியாது. நெறி நீடிக்கவேண்டுமென்று விழையும் அரசன் பிழை பொறுக்கும் உளவிரிவையும் அடைந்தாக வேண்டும்.”

“இங்கு அஸ்தினபுரியின் கொலைக்களத்தில் ஒவ்வொரு நாளும் படைவீரர்களும் வணிகர்களும் எளியகுடிகளும் ஒறுக்கப்படுகிறார்கள். உடலுறுப்புகளை வெட்டுவதும் கழுவிலே அமர்த்துவதும் நிகழாது ஒரு பொழுதேனும் இந்நகரில் கடந்து செல்வதில்லை என்கிறார்கள். இன்றே இந்நகரின் தெருக்களில் வரும்போது பார்த்திருப்பீர்கள், ஒவ்வொன்றும் முற்றிலும் ஒன்றோடொன்று பொருந்தி, தேர்ந்த சிற்பி அமைத்த பொறிபோல் இயக்கம் கொண்டுள்ளன. நான் அந்த பிழையின்மையைத்தான் பார்த்துக்கொண்டே வந்தேன். அதுவே என்னை பதற்றப்படுத்தியது. பிழையின்மை என்பது உயிரின்மைதான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“ஆம், தன்னெழுச்சியாக எவ்வொலிகளும் வெளிப்படவில்லை. வாழ்த்தொலிகளோ உவகைக் குரல்களோ” என்று சிசுபாலன் சொன்னான். கனகர் அருகணைந்து “வருக” என்றார். மூவரும் துரியோதனன் அமர்ந்திருந்த அவைக்கூடத்திற்குள் நுழைந்து தலைவணங்கினர். துரியோதனன் பீடத்தில் கால்மேல் கால் வைத்து இடத்தொடையை மெல்ல வருடியபடி கூரிய விழிகளால் அவர்களை நோக்கி அமர்ந்திருந்தான். அவனருகே இருந்த கர்ணன் எழுந்து “வருக சைந்தவரே. சேதிநாட்டரசருக்கும் உத்தரபாஞ்சாலருக்கும் நல்வரவு” என்று முகமன் சொன்னான். அவர்களை அமரும்படி கைகாட்டிவிட்டு கனகரிடம் அறைவாயிலை மூடும்படி விழியசைத்தான்.

அஸ்வத்தாமன் துரியோதனனின் தோற்றத்தை நோக்கிக் கொண்டிருந்தான். பழுதற்ற இரும்புச்சிலை என தோன்றினான் முதற்கௌரவன். மரத்தரையில் முற்றிலும் இணையான இருகால்களின் ஒளிவிட்ட கட்டைவிரல் நகங்கள். இறுகிய கெண்டைக்கால்தசைகள், கச்சை முறுக்கப்பட்ட இடை, இருபலகைகளும் முற்றிலும் ஒன்றே பிறிதென்று தோன்றிய நெஞ்சு, கூரிய மூக்குக்குமேல் கருங்குருவி இறகுபோன்ற புருவங்கள், மேடற்ற பரந்த நெற்றி. வகிட்டின் தொடக்கம் முதல் பின்கால்களின் இணைப்புப்புள்ளி வரை ஒரு பிழையற்ற நேர்கோடு. இடதுகை சுட்டுவிரல் முனை முதல் வலதுகை சுட்டுவிரல் முனை வரை சிற்பிவரைந்த காவடி வளைவு. யுகங்கள் தோறும் பல்லாயிரம் பலிகொண்டபின் குருதியால் ஒளி கொண்டு வந்தமர்ந்திருக்கும் போர்த்தேவன் என்று தோன்றினான்.

அஸ்வத்தாமன் “நாங்கள் சந்திக்க வந்திருக்கும் செய்தியை முன்னரே அறிந்திருப்பீர்கள் முதற்கௌரவரே. எதன் பொருட்டென்றும் உணர்ந்திருப்பீர்கள்” என்றான். துரியோதனன் விழியசைவால் தலையசைத்தான். “அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்துக்கான கொடி ஏறியிருக்கிறது. ஆநிரை கவர பாண்டவர்களும் அவர்களின் இளவரசர்களும் படைகொண்டு சென்றிருக்கிறார்கள். மகதத்துடன் எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தம் ஒரு போரை தொடுக்கும் என்று ஒற்றர்கள் அறிவிக்கிறார்கள்” என்று சொன்னபடியே அவன் முகத்தில் தெரிந்த உணர்வின்மையையே நோக்கிக் கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். கர்ணன் அவ்வுணர்வின்மையை தானுமுணர்ந்தவன் போல சிறிய சலிப்பைக் காட்டி “ஆம், ஆனால் இங்கு அஸ்தினபுரியை ஆளும் அரசனின் ஒப்புதல் இன்றி அவ்வேள்வி நிகழாது” என்றான்.

“அதைத்தான் சற்றுமுன்பு காந்தாரரிடம் பேசினேன். ஒப்புதல் அளிக்கவேண்டியவர் பேரரசர் என்று அவர் சொன்னார். அதை பெறுவதற்கு இளைய யாதவர் வரக்கூடும் என்றார்.” “ஆம், இளைய யாதவர் கிளம்பிவிட்டார் என்று தெரியும். அவருக்காகவே இங்கு காத்திருக்கிறோம்.” அவர்கள் பேசிக்கொண்டிருப்பது முழுக்க அவனுடைய கூர்விழிகளின் பார்வையின்மைக்கு முன் என்று தோன்றியது. விழிகளுக்கு அப்பால் ஒரு நோக்கு அவர்கள் மேல் ஊன்றியிருந்தது. அறியாச்செவி ஒன்று ஒவ்வொரு சொல்லையும் பெற்றுக்கொண்டிருந்தது.

“ஆனால் காந்தாரர் சொன்னதுதான் உண்மை. ராஜசூயத்திற்கு முறையான ஒப்புதலை பேரரசரே அளித்தால் போதுமானது” என்றான் சிசுபாலன். கர்ணன் சினத்துடன் “தொடங்கலாம். ஆனால் அஸ்தினபுரியின் அரசர் படை கொண்டெழுந்தால் அவரை வெல்லாமல் ராஜசூயம் நிறைவடையாது” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து துரியோதனனை ஒரு கணம் நோக்கிவிட்டு “இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரி படைகொண்டெழுவதை பேரரசர் விழையமாட்டார்” என்றான். “நாம் படை கொண்டு செல்வது இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அல்ல. நம் அரசருடன் படைக்கூட்டு கொண்டுள்ள மகதத்திற்கு ஆதரவாக” என்றான் கர்ணன்.

“மகதத்துடன் படைக்கூட்டு இல்லை என்ற செய்தி இங்கிருந்து அனுப்பப்பட்டது அல்லவா?” என்று ஜயத்ரதன் கேட்டான். “ஆம், அச்செய்தி பிழையாக அனுப்பப்பட்டுவிட்டது” என்று கர்ணன் சொன்னான். “சற்று முன்புதான் முடிவெடுத்தோம். அரசர் நாளை இங்கிருந்து கிளம்பவிருக்கிறார். சிலநாள் ஜராசந்தரின் விருந்தினராக ராஜகிருஹத்தில் தங்கியிருப்பார். அப்போது மகதத்திற்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் பூசல் நிகழும் என்றால் அரசரின் பாதுகாப்பின் பொருட்டு அஸ்தினபுரியின் படைகள் மகதத்திற்கு செல்லும்” என்றான் கர்ணன். அஸ்வத்தாமன் உளத்தயக்கத்துடன் ஜயத்ரதனையும் சிசுபாலனையும் நோக்கிவிட்டு “ஆனால் காந்தாரர்…” என்று சொல்லவர துரியோதனன் “இங்கு நானே அரசன். என் சொற்களே இறுதியானவை” என்றான்.

மிகச்சீரான தாழ்ந்த குரலில் சொல்லப்பட்ட அச்சொற்கள் தன் உள்ளத்தை ஏன் அத்தனை அச்சுறுத்தின என்று அஸ்வத்தாமனுக்கு உளவியப்பு எழுந்தது. அரைநோக்கால் சிசுபாலனையும் ஜயத்ரதனையும் நோக்கியபோது அவ்வச்சம் அவர்களின் விழிகளிலும் தெரிவதை கண்டான். கர்ணன் ஒரு சரடை இழுக்க வெளியே மணி ஒலித்து கனகர் வந்து நின்றார். “விதுரரை வரச்சொல்லுங்கள்” என்று கர்ணன் சொன்னான். கனகர் தலைவணங்கி வெளியேறினார்.

ஜயத்ரதன் மெல்ல இயல்பாகி புன்னகைத்து “அப்படையை நான் நடத்தவேண்டுமென விழைகிறேன்” என்றான். கர்ணன் “தேவையிருக்காது. அரசர் அங்கு சென்றதுமே துலாவின் இரு தட்டுக்களும் நிகர்நிலைகொண்டுவிடும்” என்றான். இயல்பாக அங்கே பேச்சு அவிந்தது. வெளியே ஆடும் மரக்கிளைகளின் ஓசையை கேட்டபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். துரியோதனனின் இருப்பை மட்டுமே தன் அனைத்துப் புலன்களும் உணர்ந்துகொண்டிருப்பதை அஸ்வத்தாமன் அறிந்தான். ஜயத்ரதன் உள்ளத்தின் நிலையழிவை தொடைகளின் அசைவில் காட்டினான். சிசுபாலன் துரியோதனனை முற்றிலும் தவிர்த்து கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான்.

கதவின் ஒலி வலிக்கூச்சல் போல ஒலிக்கக் கேட்டு மூவரும் திரும்பி நோக்கினர். விதுரர் உள்ளே வந்ததும் கனகர் கதவைமூடி மறைந்தார். கர்ணன் “அமைச்சரே, நாளை அரசர் மகதத்திற்கு செல்லவிருக்கிறார். அகம்படிப்படைகளும் காவல்படைநிரைகளும் உடன் செல்லவேண்டும் என்று ஆணை” என்றான். விதுரர் திகைத்து “நாளையா? படைநகர்வை உடனே செய்வதென்றால்…” என்று சொல்ல கர்ணன் “அதை நான் செய்கிறேன். அரசுஆணைகளையும் முறையறிவிப்புகளையும் மட்டும் நீங்கள் இயற்றினால் போதும்” என்றான்.

“இந்திரப்பிரஸ்தம் மகதத்துடன் போர்தொடுக்கக்கூடும் என்கிறார்கள். நாம் மகதத்தை படைத்துணை செய்யப்போவதில்லை என்பது காந்தாரர் சகுனியின் எண்ணப்படி நாமிட்ட ஆணை” என்றார் விதுரர். அவரை இடைமறித்து மிகமெல்லிய குரலில் துரியோதனன் “இது என் ஆணை!” என்றான். அவன் உன்னிய பொருளனைத்தையும் உணர்ந்துகொண்டு விதுரர் உடல்குன்றினார். “செல்க!” என்றான் துரியோதனன்.

குருதியுறவு, கல்வி என அங்கு அவருக்கிருந்த அனைத்தையும் ஒரே கணத்தில் இழந்து அவர் வெறுமொரு சூதராக ஆவதை அஸ்வத்தாமன் கண்டான். அவன் உள்ளத்தில் இரக்கமெழுந்தது. அதை கடக்க அத்தருணத்தில் என்ன செய்யலாகுமென எண்ணியபோது, எச்சொல்லும் எச்செயலும் பிழையென்றாவது ஒருவர் இழிவுபடுத்தப்படும்போது துணைநிற்கையிலேயே என்று தோன்றியது. அவன் விழிகளை திருப்பிக்கொண்டான். ஆனால் கேட்டதா உளமயக்கா என்று புரியாத அளவுக்கு மெல்லிய உடலசைவின் ஒலியிலேயே விதுரர் மீண்டு வந்து வஞ்சம் கொள்வதை அவன் உணர்ந்தான்.

“பிறிதொரு செய்தியை சொல்லிச் செல்லலாம் என்று நானே வந்துகொண்டிருந்தேன்” என்றார். “இளைய யாதவர் இங்கே வரவில்லை. அவரும் பார்த்தனும் புண்டரீக நாட்டுக்கு ஆநிரை கவர்ந்து விளையாடச் சென்றிருக்கிறார்கள்.” கர்ணன் திகைப்படைந்து துரியோதனனை நோக்குவதை அஸ்வத்தாமன் கண்டான். உடனே விழிதிருப்பி விதுரரின் கண்களை பார்த்தான். அவற்றில் மெல்லிய இடுங்கலாக வஞ்சம் ஒளிர்ந்தது. ஜயத்ரதன் “புண்டரநாட்டுக்கா?” என்றான். சிசுபாலன் “அவன் மகதனின் துணைவன். ஆனால் புண்டரம் மிகச்சிறியநாடு…” என்றான்.

விதுரர் பணிந்த புன்னகையுடன் “அத்துடன் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி கன்யாகுப்ஜ நகருக்கு அருகே கன்யாவனம் என்னும் காட்டில் தவக்குடிலில் வாழும் பீஷ்ம பிதாமகரை பார்க்கச் சென்றிருக்கிறார்” என்றபின் தலைவணங்கி திரும்பி நடந்தார். அவர் கதவைத்திறந்து வெளியே செல்வதை அனைவரும் நோக்கியிருந்தனர். கதவு முனகியபடி மூடிக்கொண்டது.

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபதினெட்டாவது அட்சக்கோடு