அழிமுகம்

1

காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் அம்மாவும் அப்பாவும் தற்கொலைசெய்துகொண்டபின்னர் நான் நோயுற்றவனாகவும் கொந்தளிப்பு கொண்டவனாகவும் இருந்தேன்.தபால்தந்தித்துறை ஊழியர்களுக்கான கம்யூனில் தங்கியிருந்த நான் அங்கே உள்ள நண்பர்களை தினமும் பார்ப்பதும் பேசுவதும் சகிக்க முடியாமல் ஆனபோது அங்கிருந்து வெளியேறி மொகரால்புத்தூர் என்ற இஸ்லாமியக் குடியிருப்புக்குள் ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே குடியேரினேன். அது நான்செய்த முதல் பிழை. அந்த பழங்காலத்து வீட்டில், தன்னந்தனிமையில் எனக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட்டது. அங்கிருந்து ஆன்மீகம்.

காஸர்கோட்டின் ஆரம்பநாட்களிலேயே எனக்கு மங்களூர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பொதுவாக எனக்கு நகரங்களைப் பிடிப்பதில்லை. ஓரளவுக்குப் பிடித்த நகரங்கள் என்றால் மைசூரும் மங்களூரும்தான். மழைவளம் இருப்பதனால் அவை மரங்கள் அடர்ந்து பசுமையாக இருக்கும். தெருக்களும் நேர்த்தியும் சுத்தமும் கொண்டவை. அத்துடன் எனக்கு அப்போது ஆங்கிலப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக ஹாலிவுட் சண்டைப்படங்களுக்கு நான் ஒரு ரசிகன். காஸர்கோட்டில் ஆங்கிலப்படங்கள் அரிதாகவே வரும். மங்களூரில் நான்கு திரையரங்குகளில் அனேகமாக வாரம் ஒரு படம் போடுவார்கள். உயர்தரமான அழகிய திரையரங்குகள் அவை.

அங்கேதான் நான் மறக்கமுடியத பல படங்களைப் பார்த்தேன். கிங் சாலமோன்ஸ் மைன்ஸ், தி மிஷன், குட் பேட் ஆண்ட் அக்லி, தி ·பைவ் மேன் ஆர்மி, லாரன்ஸ் ஆ·ப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ — இந்தப்படங்களுக்கெல்லாம் ஒரு பொதுத்தன்மை உண்டு. இவை மிக விரிந்த காட்சியமைப்பு கொண்ட படங்கள். சினிமாஸ்கோப்பில் கண் நிறைத்து விரிந்த காட்சிகளுக்குள் நான் உள்ளேயே சென்றுவிடுவேன். மன அழுத்தமும் சிக்கல்கலும் கொண்ட அக்காலகட்டத்தில் வழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்பில் இருந்து வெளியேறிச்செல்லும் அனுபவங்களாக அவை இருந்தன.

வார விடுமுறை நாட்களில் காலையில் ரயிலில் மங்களூருக்குக் கிளம்பிச்செல்வேன். காலைக்காட்சியாக ஒரு படம். மதியக்காட்சி ஒருபடம். மாலைக்காட்சி இரவுக்காட்சி என நான்கு படங்கள். ஓட்டலில் மீன்குழம்புடன் சாப்பாடு. இரவுக்காட்சி முடிந்ததும் தெருவோரக்கடையில் பரோட்டா சிக்கன். அதன்பின் நகரத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு மெல்ல ரயில்நிலையம் வருவேன். அதிகாலை நான்குமணிக்கு ஒரு ரயில் உண்டு. அது ஐந்தரை மணிக்கெல்லாம் காஸர்கோடு சென்றுவிடும்.ஓட்டமும் நடையுமாக வந்து ரயிலில் ஏறிக்கொண்டால் நள்ளிரவில் ஒருமணிக்கே ஒரு ரயிலைப்பிடிக்க முடியும், ஆனால் பின்னிரவில் காஸர்கோட்டுக்கு வந்து சேர வேண்டியிருக்கும். காலையில் வந்திறங்குவதே வசதி.

ரயில் தண்டவாளத்தில் இயந்திரம் இல்லாமல் இருளுக்குள் நின்றுகொண்டிருக்கும். பழக்கம் காரணமாக அதைக் கண்டுபிடித்து ஏறி பெட்டியில் பெஞ்சில் படுத்து தூங்கிவிட முடியும். காலையில் காஸர்கோட்டுக்கு வரும்போதுதான் முதல் மலையாளச் செய்தித்தாள்கள் வரும். சீசன் டிக்கெட் ஆட்கள் கண்ணூர் செல்வதற்காக ஏறி பெட்டிகளை நிறைப்பார்கள். அந்த ரகளையில் கண்விழிக்காமல் இருக்க முடியாது. அப்படியே விழிக்காவிட்டால் கூட கண்ணூர் சென்று அடுத்த ரயிலில் வருமளவுக்கு தெம்பு கொண்டவன் நான்.

தூங்கிக் கொண்டிருந்தவன் சலசலவென்ற பேச்சொலி கேட்டுக் கண்விழித்தேன். எழுந்து அமர்ந்து இருட்டுக்குள் சூழ என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். நிறையப் பெண்கள். முப்பது நாற்பது பேர் இருக்கலாம். பெட்டி நிறைய அமர்ந்து சண்டைபோடுவதுபோல பேசிக்கொண்டிருந்தார்கள். நடுவே சிரிப்பின் ஒலி கேட்டதனால் அது சண்டை அல்ல என்று தெளிந்தேன். என் அசைவை கண்டு ஒருத்தி ‘உய்யோ’ என்றாள். அது காஸர்கோட்டுக்கே உரிய ஒர் ஒலி. ”உய்யோ என்றோளீ’ என்றால் ‘அய்யோ இவளே’ என்று பொருள். ”இங்கே ஒரு ஆள் இருக்காண்டீ”

நாலைந்துபெண்கள் என்னைப்பார்த்தார்கள். இருட்டில் அடையாளம் தெரியவில்லை. ஒருத்தி ஒரு டார்ச் லைட்டை என் முகத்தில் அடித்தாள். நாலைந்துபேர் டார்ச் அடித்தார்கள். எல்லாரிடமும் சிறிய டார்ச் லைட் இருந்தது. நான் வெளிச்சத்துக்கு கண் கூசி கையால் மறைத்துக்கொண்டேன். ”சின்னப்பையண்டீ”என்று ஒருகுரல். ”டேய் எங்கடா போறே?” என்று இன்னொருகுரல்.”காஸர்கோட்டுக்கு”என்றேன் பலவீனமாக. ”அங்கே என்ன செய்கிறாய்?” நான் மெல்ல ”அங்கே டெலிபோனில் வேலை”என்றேன். அவர்கள் குழப்பமாக தயங்கியபின் ”என்ன வேலை?”என்றார்கள். நான் மீண்டும் சொன்னேன். ஒளிகள் அணைந்தன.

ரயிலில் விளக்கு போட்டபோது அவர்களைப் பார்த்தேன். பதினாறு வயதுமுதல் நாற்பத்தைந்து வயதுவரையிலான பெண்கள். கணிசமான பேர் சேலையால் தலையை முக்காடிட்ட ஏழை முஸ்லீம்கள். தூக்கக் கலக்கம் கொண்ட வெளிறிய முகங்கள். பல பெண்கள் சரிந்தும் ஒருவரோடொருவர் சாய்ந்தும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சத்தில் என்னைப்பார்த்த ஒருத்தி ”உனக்கென்ன சீக்கா?”என்றாள். ”இல்லை”என்றேன். ”வீட்டிலே யார் இருக்கிறார்கள்?” ”யாருமில்லை”என்றேன் ”உம்மா?” ”அம்மா அப்பா செத்துப்போய்விட்டார்கள்” அவர்கள்  அனுதாபத்துடன் என்னை பார்த்தார்கள்.” அதாக்கும் இப்படி கிறுக்கனைப்போல் இருக்கிறான்”என்று ஒரு வயதான பெண் சொன்னாள்.

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே இருந்தார்கள். கொஞ்சநேரத்தில் நன்றாகவே தூங்கிவிட்டார்கள். நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாருக்கும் உடல் பற்றிய நினைப்பே கிடையாது. வாய் ஒழுகதூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் மார்புகள் கிட்டத்தட்ட திறந்தே கிடந்தன. பார்வையை திருப்பிக்கொண்டு வெளியே இருளைப் பார்த்தேன்.

அவர்களை மெல்ல மெல்ல நான் புரிந்துகொண்டேன். மங்களூர் துறைமுகப்பகுதிகளுக்கு விபச்சாரத்துக்குச் சென்று வரும் கேரளப்பெண்கள். காஸர்கோட்டை ஒட்டிய கும்பளா உப்பளா போன்ற பின்தங்கிய முஸ்லீம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்கே பிழைப்புக்கு பெரும்பாலும் எந்த வழியும் இல்லை. மங்களூர் துறைமுகம் உருவான நாள்முதலாக நடந்துவரும் இந்தப்பழக்கம் காலப்போக்கில் குறைந்து வருவதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனாலும் தினமும் முந்நூறுபேர் வரை மங்களூருக்குச் சென்று மீண்டார்கள்.

மீண்டும் மீண்டும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியானால் விபச்சாரிகள் என்றால் இவர்கள்தான். இப்படித்தான் இருபபர்களா? மிகச்சாதாரணமாக இருந்தார்கள். எல்லா ஏழைப்பெண்களையும் போலத்தான். மங்களூரில் வாங்கிய காய்கறிகளையும் பிற சாமான்களையும் துணிப்பைகளில் வைத்திருந்தார்கள். களைத்த தோற்றம். பலர் நெடுங்காலமாக நோயுற்றிருப்பதன் வெளிறல்களுடன் இருந்தார்கள்.

அவர்களுடன் பழக ஆரம்பித்தபோது மெல்லமெல்ல அவர்கள் வேறு என்று புரிந்துகொண்டேன். அடிக்கடி அவர்கள் இருக்கும் பெட்டியில் ஏறவேண்டியிருந்தது. அவர்கள் கூட்டம் கூட்டமாகவே ஏறுவார்கள், அது ஒரு பாதுகாப்புமுறை. ஏறியதுமே சண்டைகள், பூசல்கள்.  ரயிலிலேயே சீட்டு போட்டு ஏலம் விடுவதுண்டு. ரயிலில் பயணம்செய்யும் நேரம் முழுக்க மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருப்பாள் ஒரு பெண். பலர் சிகரெட் குடிப்பார்கள்.  பெரும்பாலானவர்கள் குடிபோதையிம் இருப்பார்கள். பையில் நாட்டுச்சாராயம் வாங்கிக்கொண்டுசெல்பவர்களும் உண்டு

அவர்கள் அனைவரிலுமே அவமானப்படுத்தப்பட்டவர்களின் முகபாவனை இருந்தது. அடித்து துரத்தப்பட்ட ஒரு இடத்துக்கு மீண்டும் செல்லும்போது வரும் முகம். அத்துடன் ஒருவகையான வன்மம். எப்போதும் எவரையும் புண்படுத்த தயாராக இருக்கும் மனநிலை அது. சட்டென்று பூசலுக்கு இறங்கி விடுவார்கள். எந்தக்கணமும் ஒருவரை ஒருவர் கீழ்த்தரமான மொழியில் திட்டிக்கொள்ளவோ முடியைப்பிடித்து சண்டைக்கு இறங்கவோ செய்வார்கள்

அத்தனைபேரிலும் ஒரு ஆண்பிள்ளைத்தனம் இருப்பதாகவும் தோன்றியது. முலைகள் இடுப்பு பற்றிய பிரக்ஞை இல்லாமலானாலேயே ஆண்பிள்ளைத்தனம் வந்துவிடும் போல. பெரும்பாலானவர்களின் குரலும் கட்டைக்குரலாக ஆகிவிட்டிருந்தது. பேச்சு முகச்சுளிப்பு உடல் மொழி அனைத்திலும் நளினமற்ற ஒரு கட்டைத்தனம். அதீதமான காமம் கொண்டு கீழிறங்கிய ஒரு மனிதன் மட்டுமே அவர்களில் கவற்சி உறமுடியும். அவர்கள் எனக்கு கடுமையான அச்சத்தைத்தான் ஏற்படுத்தினார்கள். கூடவே ஒருவகை அருவருப்பு. அவர்களில் பலருக்கு தேமல் போன்ற சரும நோய்களும் இருந்தன. பதிலுக்கு என்னை அவர்கள் ஒரு உயிராகவே எண்ணவில்லை.

அவர்களைக் கண்டாலே அந்தபெட்டியைத்தவிர்த்து போன நான் அவர்கள் இருக்கும் பெட்டியிலேயே ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை ரயிலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒருவன் வந்து என்னருகே படுத்துக்கொண்டான். நான் திடுக்கிட்டு எழுந்தபோது அவன் என்னைத்தழுவியபடி ”ஒந்நுமில்ல மோனே ஒந்நுமில்ல” என்றான். நான் எழமுயன்றபோது என்னைப்பிடித்துக்கொண்டான். அவனுடைய முழங்கையை அழுத்திக்கடித்து பலம்கொண்டமட்டும் இறுக்கினேன். அவன் அலறியபடி விலக எழுந்து வெளியே பாய்ந்தேன். இன்னொருவனும் அருகே இருந்தான். இருவரும் என்னைத்துரத்தினார்கள். நான் இருளில் தட்டித்தடுமாறி ஓடி அந்தப் பெண்கள் இருந்த பெட்டியில் ஏறிக்கொண்டேன். அவர்கள் நின்றுவிட்டார்கள்.

அதன்பின் நான் ரயில்நிலையம் வந்தால் அந்தப்பெண்களுடனேயே இருப்பேன். அவர்களுடனேயே ஏறிக்கொள்வேன். ஒருசிலர் என்னைப்பார்த்து புன்னகை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருத்தி என்னிடம் ”தம்பி டோப்பு கேஸா?”என்றாள். நான் புன்னகைசெய்தேன். ”அதுதானே பார்த்தேன்”என்றாள். சிலசமயம் ஏதாவது தின்னும் பொருள் இருந்தால் எனக்கும் தருவார்கள். வேர்க்கடலை, சுண்டல்.

ஒருநாள் ரயிலில் மூர்ச்சையாகி விழுந்துவிட்டேன். அப்போது அடிக்கடி அத்தகைய மயக்கங்கள் வரும். தூக்கமில்லாமல் பலநாட்கள் தொடர்வதுதான் காரணம். ஒன்றுக்குப்போக எழுந்தவன் அப்படியே விழுந்துவிட்டேன். கண்களை திறந்தபோது என் முகத்தில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். நிறைய முகங்கள் மேலே தெரிந்தன. ரயில் குழாயில் பிடித்த நீரை குடிக்கத்தந்தார்கள். குடித்தபோது சற்று தெம்பு ஏற்பட்டது ஒரு நாற்பது வயதான பெண் என்னை ஆறுதல்படுத்தி ”தூங்கு…அப்படியே தூங்கு”என்றாள். காஸர்கோட்டில் அவளே இறக்கி விட்டாள். ”போய்க்கொள்வாயா மோனே?” என்றாள். ”ம்ம்” என்றேன்.

அவள்பெயர் கதீஜாம்மா. மறுமுறை ரயிலில் பார்த்தபோது பிரியமாகச் சிரித்து ”எங்கே போய்விட்டு வருகிறாய்? சத்தியமாகச் சொல்லவேண்டும்”என்றாள்,  ”இந்தப்பி¨ழைப்பு நாய்பிழைப்பு….நீ படித்தவன் போல இருக்கிறாயே” நான் சினிமா பார்க்கத்தான் செல்கிறேன் என்றேன். அவளால் நம்ப முடியவில்லை. டிக்கெட்டுகளைக் காட்டினேன். வியப்புடன் பார்த்தாள். ”மோனுக்கு கிறுக்கா?”என்றாள். மகன் என்றுதான் எப்போதும் என்னைச் சொன்னாள்.

மெல்ல மெல்ல நான் அவளிடம் என்னுடைய வேலை, குடியிருப்பு, என் குடும்பம் எல்லாவற்றையும் சொன்னேன். என் அம்மா அப்பா இறந்த விதத்தைப்பற்றி நான் காசர்கோட்டில் அவளுடன் மட்டுமே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். மிகவும் கனிந்த ஒரு பாவனை அவளிடம் இருந்ததை நினைவுகூர்கிறேன். நான் என் இலக்கிய ஆசைகள் என்னுடைய பயணங்கள் அலைச்சல்கள் எல்லாவற்றையும்  அவளிடம் சொன்னேன். ரயில் முழுக்க பேசிக்கொண்டே வருவோம். சிலசமயம் வேறு பெண்கள் அப்பேச்சில் கலந்துகொள்வார்கள். சிலர் பேச்சுக்குள் நுழைவது கதிஜாம்மாவுக்குப் பிடிக்காது, அதட்டி விரட்டுவாள்

ஒருமுறை ஒருத்தி நடுவே புகுந்து ஏதோ ஆபாசமாகச் சொல்லி சிரிக்க அவளை கதீஜாம்மா ஓங்கி ஒரு அறை விட்டாள். ”ஹராம் பொறப்பே…ஓடு..”என்று கத்தினாள். அவள் திருப்பி அடிக்க கடுமையான சண்டை. நான் வெலவெலத்துப்போய்விட்டேன். கதீஜாம்மாவின் இன்னொரு முகம் அப்போதுதான் தெரிந்தது எனக்கு. அடிபட்ட பெண் சாபமிட்டபடிப் போனாள்.

அவள் மலையாள வார இதழ்களை ஒன்றுவிடாமல் படிப்பாள். அதில் வந்த தொடர்கதைகளைப்பற்றி உணர்ச்சிகரமாக என்னிடம் பேசினாள். ‘மனுஷ்ய ஜீவிதம் துக்கமாக்கும். அதைத்தான் எல்லாரும் எழுதுகிறார்கள்.’ அந்தக்கதைகள் எல்லாமே உச்சகட்ட மெலோடிராமா கொண்டவையாக இருக்கும். சந்திரகலா எஸ் கம்மத் என்ற எழுத்தாளரை நேரில் ரயிலில் பார்த்ததாக பரவசத்துடன் சொன்னாள். ”நான் சந்திரகலா அம்மா தானே என்று கேட்டேன். ஆமாம் என்றார்கள்” என்று சொல்லி ஒரே பூரிப்பு.

அவளுக்கு மூன்றுபெண்கள். மூன்றுபேருமே கம்பெனியில் கயிறு திரிக்கிறார்கள். சிறுவயதிலேயே ஒரு கிழவருக்கு நாலாம்தாரமாக ஆகி கணவன் இறந்தபின் குழந்தைகளுடன் கைவிடப்பட்டவள். அதிகமாக தன்னுடைய தனிவாழ்க்கையைப்பற்றி சொல்லவில்லை. ‘படைச்சோன் கணக்கு மாஸ்டராக்கும். எல்லாத்துக்கும் அவனுக்கு ஒரு கணக்குண்டு”

அன்றெல்லாம் கேரளத்தில் மூப்புகல்யாணம், அரபிக்கல்யாணம் ஆகியவற்றைப்பற்றித்தான் நாளிதழ்களில் பேச்சாக இருந்தது. முஸ்லீம் பணக்கார வயோதிகர்கள் ஒரு அதிகாரபூர்வ மனைவியை வைத்துக்கொண்டு பிற மனைவியரை தொடர்ந்து நிக்காஹ¤ம் தலாக்குமாகச் செய்துகொண்டிருப்பார்கள். சில திருமணங்கள் பத்துநாள்கூட நீடிக்காது. அதற்கு அப்பெண்களுக்கு பெரும் பணம் கொடுப்பார்கள். அந்தப்பணத்தைக்கொண்டு அப்பெண்களைப்பெற்றவர்கள் அவளையும் தங்கைகளையும் திருமணம்செய்து கொடுப்பார்கள். இதற்கு மூப்புகல்யாணம் என்று செல்லப்பெயர். இதற்கு சில குறிப்பிட்ட மௌல்விகளே புரோக்கர்கள். அப்பள்ளிவாசல்கள் பெரும் வருமானம் ஈட்டின.

அதேபோல அரேபிய நாட்டைச்சேர்ந்தவர்கள் இங்கே வந்து முறைபப்டி நிக்காஹ் செய்து பெண்களுடன் சிலமாதங்கள் தங்கிவிட்டு பணம்கொடுத்து தலாக் செய்துவிட்டு செல்வார்கள். ஒருவகை சட்டபூர்வ விபச்சாரம் இது. பெரும்பாலும் இவர்கள் பதினைந்து வயதுக்கு உட்பட்ட மைனர் பெண்களாக இருப்பார்கள். அவ்வாறு எர்ணாகுளத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லபப்ட்ட ஒரு சிறுமியையும் கூடச்சென்ற ஏமன் நாட்டு அரேபியரையும் ஒரு பெண்போராட்டக்காரர் விமானத்திலேயே பிடித்து பிரச்சினைசெய்தார். ஊடகங்கள் அதை பெரிய செய்தியாக்கி அவ்வகை திருமணங்களைப்பற்றிய தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டன

இஸ்லாமியச் சீர்திருத்தவாதிகள் அந்தவகை திருமணங்களை எதிர்த்தார்கள். மதத் தலைமையில் இருந்தே அதற்கு கடும் கண்டனம் வந்ததுதாகவே அரசு அவ்வகை திருமணங்களை கண்டுபிடித்து தண்டிக்க ஆரம்பித்தது. அரபிகள் அதன் பின்னர் ஹைதராபாத்தை தங்கள் வேட்டைக்களமாகக் கொண்டார்கள். அங்கு சிலர் பிடிபட்டபோது அதுவும் செய்தி ஆகியது. இப்போதும் கேரளத்தில் இவ்வழக்கம் நீடிப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ரயிலில் பயணங்களில் உரைய்நாடிக்கொண்டிருக்கும்போது நான் அவ்வயதுக்கே உரிய முதிர்ச்சியின்மையுடன் ”ஏன், உங்கள் பெண்ணை அரபிக்கல்யாணத்துக்கு கொடுக்க வேண்டியதுதானே?” என்று கேட்டேன். கதீஜாம்மா சட்டென்று மற்றவளாக மாறினாள். யட்சிக்கதைகளில் பேரழகியான யட்சி சட்டென்று கண்கள் தீப்புள்ளிகளாக எரிய , நாக்கு பிதுங்கி வழிய, கொடூரத்தோற்றம் கொள்வதுபோல ! ”ச்சீ , ஹிமாறே…செருப்பால் அடிப்பேன்…என்னடா சொன்னே? ஹராம்பொறப்பே….புலையாடிமோனே ”என்று சீறிஎழுந்து விட்டாள்.

நான் ஒடுங்கி நடுங்கிப்போய் ”இல்ல நான் …”என்று ஏதோ சொல்ல வந்தேன். கையை ஓங்கியபடி அடிக்க வந்தவளை பலரும் பிடித்துத் தடுத்தார்கள். குலைகுலையாகக் கெட்டவார்த்தைகள். முகம் தீயில் எரிவதுபோல இருந்தது. நான் கூட்டம் நடுவே பிதுங்கி வேறுபக்கம் ஓடித்தப்பினேன். என்னுடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு மாதங்களாக அவளை பார்க்காமல் ஒதுங்கி சென்றேன். இருமுறை நேரில் வந்தபோது பதுங்கிக்கொண்டேன். பின்னர் வேறு ஒரு பெட்டியில் படுத்திருக்கும்போது சற்றே கண்ணயர்ந்து விழித்தபோது என்னருகே இருந்தாள். நான் எழப்போனேன்., எட்டி அன் காலில் கையைவைத்தபடி. ”என்னோடு பொறுக்குக…மோனே” என்றாள். நான் பேசாமல் எழுந்து அமர்ந்தேன்.

”நான் இப்படிபப்ட்டவள்தான்… என்னுடைய ஜீவிதம் இப்படி ஆகிவிட்டது. வாயும் நாக்கும் கெட்டுப்போயிருக்கின்றன…”என்றவள் ”ஆனா நீ அப்படி கேட்டதும் தப்பு…என் குழந்தைகளை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்குத்தானே நான் இந்தப்பாடு படுகிறேன். என் உடலை விற்றுக்கொண்டிருக்கிறேன்.பெற்ற பிள்ளைகளை விற்பேனா?” என்றவள் அபப்டியே பீரிட்டு அழ ஆரம்பித்தாள். நான் வாயைப்பிளந்து அழுபவளைப் பார்த்து அமர்ந்திருந்தேன். அழுது அழுது அவளே தேறி கண்களைத்துடைத்தபின் வெளிறிய உதடுகளால் புன்னகைசெய்தாள்.

நாலைந்து மாதங்களுக்குப் பின் அவளுடைய மூத்த பெண்ணுக்குத் நிக்காஹ் வைத்திருந்தாள். ”விளிச்சால் வருமோ?” என்றாள். ”கண்டிப்பாக வருவேன்” என்றேன். ”வரணும் கேட்டோ?” என்று சொன்னாள். நிக்காஹ் முடிந்தபின் சாயங்காலம் வீட்டில் நடந்த ‘சுலைமானி சல்க்காரம்’ என்ற டீ விருந்துக்கு நான் சென்றிருந்தேன்.

மொகரால்புத்தூரில் இருந்து கும்பளாவுக்குச் சென்று அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து அந்தக் குடிசைப்பகுதியை அடைந்தேன். கடலோரமாக சிறிய ஆறு ஒன்றின் அழிமுகம் அப்படியே கரிய சேற்றுப்பரப்பாக மாறிப்பரந்திருந்தது. அதன் ஓரமாகவே குடிசைகள். அப்பகுதியே குமட்டச்செய்யும் சேற்று வாடையால் சூழப்பட்டிருந்தது. சற்று மேடான பகுதியில் சிறிய மசூதி. போவதற்குள் இருட்டிவிட்டது. கடல் பெரியதோர் உலைபோல செந்நிறமாக உருகிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது

குடிசைகளில் ஒரே சத்தம். நிர்வாணமான மொட்டைத்தலைக் குழந்தைகள். தலையில் ‘தட்டம்’ என்னும் முக்காடு போட்ட பெண்கள். கல்யாணவீட்டை கண்டுபிடிப்பது எளிது. வீட்டுமுன் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் இருந்தது. ஏழெட்டுபேர் பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மீசை இன்றில் பெரிய தாடி வைத்த ஒரு மௌலவி கட்டைவிரல் தடிமனுள்ள நாட்டுச்சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார். நான் தயங்கி நின்றேன்.

மௌலவி கனத்த குரலில் ‘நாயரு குட்டியா?’ என்று கேட்டார் ‘ஆமா’ என்றேன். ‘வாங்க…கதீஜா சொல்லியிருந்தா’என்றார். எனக்கு ஒரு ஒயர் நாற்காலிபோடப்பட்டிருந்தது. கடற்காற்று அடிக்கும்போது கெட்டுப்போன கருவாடும் சேறும் கலந்த வாடை எழுந்து குடலைப்பொங்க வைத்தது. காற்று சில நிமிடங்கள் நிலைக்கும்போது சற்றே ஆசுவாசம். மீண்டும் நாற்றத்தின் அலை. சில நிமிடங்கள் கழித்து அந்த நாற்றத்தைப் புரிந்துகொண்டேன். உண்ணத்தகாத மீன்களை வாங்கி மட்கவைத்து உரமாக ஆக்கி விற்கும்பொருட்டு குவித்து வைத்த குவியல்கள் அப்பால் சிறிய மலைகள் போல எழுந்து கிடந்தன.

மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமே அல்ல. மலக்குழியில் புழுக்கள் வாழ்வதுபோல மேடான இடங்களில் இருக்கும் மக்களின் சகல கழிவுகளும் வந்து சேரும் இந்தக் குழியில் இம்மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மலத்தில் நெளியும் புழுக்களைப் பிடித்து தின்பதில்லை.ஆனால்  இங்கே வாழும் மனித உடல்களை நுகர மங்களூரின் பளபளப்பான சாலைகளில் கார்களுடன் வந்து நிற்கிறார்கள். கதீஜாம்மா சொல்லியிருக்கிறார். எவ்வளவுபெரிய கார்களெல்லாம் அவளை ஏற்றிக்கொண்டு செல்லும் என்று.

சற்று நேரத்தில் கதீஜாம்மா வந்தார். புதிய பாலியெஸ்டர் லுங்கி, மேலே நீளமான சட்டை. அதற்குமேல் ஒரு பெல்ட். புதிய சரிகைத்தட்டம். முகமெங்கும் புன்னகை. ”வரீன் வரீன்” என்று சொன்னபடி வந்து ”பகர்ப்பு கொடுக்க போயிருந்தேன்” என்றாள். முஸ்லீம் கல்யாணங்களில் பிரியாணியை தட்டுகளில் பக்கத்து வீடுகளுக்கு முழுக்க பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதை உரியவர்களே கொண்டு கொடுத்தால்தான் வாங்குவார்கள்.

அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் அலுமினிய தட்டுகளில் வாழை இலை வைத்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்தார்கள். இளங்கன்றின் கறி. பிரியாணி மிகச்சுவையாகத்தான் இருந்தது. மௌலவி அவரது தட்டில் இருந்து பெரிய கறித்துண்டை எடுத்து எனக்குப்போட்டு ”கழிக்கின் நாயரே” என்றார். இன்னொருவர் இன்னொரு பெரிய துண்டு எடுத்து எனக்கு வைத்து ”கழிச்சோளூ”என்றார்.

கேரள இஸ்லாமியரின் வழக்கம் அது. அரேபியர்களிடமிருந்து வந்தது. நெருக்கமாக வாழும் கப்பல் வாழ்க்கையால் உருவானது. ஆகவே எச்சில் என்ற கருதுகோள்கள் இல்லை. காசர்கோடு சென்ற ஆரம்பத்தில் அதைப்பற்றிய அருவருப்பு இருந்தது. ஆனால் பின்பு அது மறைந்தது. மனம் நெகிழச்செய்யும் ஆழ்ந்தநட்பின் ஈரம் அதில் உள்ளது –அரேபியப்பண்பாட்டின் சாரம் என்றால் அதுதான்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த அனைவருமே என்னை ஊட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்தக்கறி மிக அருமையான உணவாக, மீண்டும் இன்னொரு முறை உண்பதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் தன் தட்டிலிருந்து சுவையான பகுதிகளை அள்ளி எனக்கு வைத்துக்கோண்டிருந்தார்கள். ”நான் போதும்” என்றேன். ”இளமையில் நன்றாக சாப்பிட்டால்தான் நீண்ட ஆயுள் கிடைக்கும்”என்று மௌலவி சொன்னார். ”படைச்சவன் மனிதனுக்கு பல்லைக்கொடுத்தது நன்றாகத் தின்பதற்காகத்தான்”. எனக்கு மூச்சுத்திணறியது.

அதன்பின் கதீஜாம்மா என்னை உள்ளே அழைத்தாள். உள்ளே ஹரிக்கேன் விளக்கின் ஒளியில் மணப்பெண் அமர்ந்திருந்தாள். மலிவான சரிகையால் நிறைந்த தட்டம். என்னைக்கண்டதும் நிமிர்ந்து பார்த்து புன்னகைசெய்தாள். மிக அழகான பெண். பொன்னிறமான அரேபிய முகம். சுறுமா [கண்மை]] எழுதிய கண்களில் நாணமும் மகிழ்ச்சியும் மின்ன, மெல்லிய இதழ்கள் விரிய, வெண்பற்கள் தெரியச் சிரித்து ”ஸலாம் இக்கா’ [அண்ணா] ‘என்றாள்.

நான் இருபது ரூபாயை அவள் கையில் கொடுத்து ஆசீர்வாதம்செய்துவிட்டு வெளியே வந்தேன். நிமிர்ந்து நின்றால் கூரை இடிக்கும் குடிசைக்குள் நாலைந்து பெண்கள் கோரைப்பாய்களில் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குப் பின்பக்கம் பிரியாணி சமைக்கும் இடத்திலிருந்து பிரியாணியின் ஆவியும் புகையும் எழுந்து கூரை வழியாக உள்ளே வந்தன. மூச்சுத்திணறி அங்கே நிற்கமுடியவில்லை.

வெளியே வந்தபோது மாப்பிள்ளை வந்திருந்தான். ஒல்லியான குள்ளமான இளைஞன். அவன் முகமே ஒரு பக்கமாக கோணியிருந்தது. கைகள் கால்கள் எல்லாவற்றிலும் ஒரு கோணல். அவன் நடந்து பெஞ்சில் அமர்ந்தபோதுதான் அவன் ஒரு கால் பலவீனமான நொண்டி என்று தெரிந்தது. ”இதாக்கும் அப்து…புதுமணவாளன்” என்றார் மௌலவி. அப்து வணங்கினான்.

அப்து சைக்கிளில் மீன் கொண்டுசென்று விற்கிறான் என்று சொன்னார்கள். ஒல்லியான ஒற்றைக்காலுடன் எப்படி அவன் சைக்கிள் ஓட்டுவான் என்றே தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உழைத்துப்பிழைப்பவனாக இருப்பான். அதைத்தான் அடிகக்டி கதீஜா சொல்வாள் ”ஒரு பெண்ணை வைத்து சோறுபோடக்கூடிய ஆணாக இருக்க வேண்டும்… ஆணாக இருந்தால் போதும்”

விடைபெற்றபோது மௌலவி என்னை அரபியில் ஆசிர்வதித்தார். மேடேறி சாலையை அடைந்த போது அந்த வாடைக்குள் எப்படி அத்தனைநேரம் இருந்தேன் என்று தோன்றியது. மங்களூர் நெடுஞ்சாலையில் ஒளிவெள்ளம் பெய்தபடி சாரி சாரியாக வண்டிகள் எதையும் அறியாமல் சென்றுகொண்டிருந்தன. அந்தச் சேரிக்குமேல் விண்மீன்கள் எட்டாத உயரத்தில் நிறைந்திருப்பதுபோல மேடான நிலத்தில் வீடுகளின் வெளிச்சங்கள். அங்கிருந்து பஸ் பிடித்து மொகரால்புத்தூர் சென்றேன்.

அதன்பின் கதீஜாம்மாவைப் பார்க்க நேரிடவில்லை, நான் ஒரு அகில இந்தியப்பயணத்துக்குக் கிளம்பினேன். திரும்பிவந்து பாலக்கோட்டுக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டேன். பிற இரு பெண்களுக்கும் ஆண்களை கண்டுபிடித்திருப்பாள் என்றுதான் படுகிறது.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஏப்ரல்  27, 2010

 

முந்தைய கட்டுரைஇனியவை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 23, பொம்மைகளின் அரசியல்