‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10

[ 3 ]

பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார்.

தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து மெய்மையை அடைந்தார். அம்மெய்மையை பிறருக்களித்து ஆசிரியரென கனிந்தார். கௌசிக குலத்து குமுதையை மணந்து ஏழு மைந்தருக்கு தந்தையானார். ஆயிரம் மாணவர்களுக்கு முப்பதாண்டுகாலம் சொல்லளித்துக் கனிந்து முழுமையை சென்றடைந்தார். மிருத்யூதேவி அவர் கால்களை தன் குளிர்ந்த கைகளால் மெல்ல தொட்டாள். “விடாய்! விடாய்!” என்று அவர் நாதுழாவினார். மிருத்யூவின் குளிர்கைகள் அவர் உடலைத் தழுவி மேலேறி வந்தன. தலையருகே ஒளிரும் பொற்கலத்துடன் நின்றிருந்த தேவியை காக்ஷீவான் கண்டார். “அன்னையே, நீ யார்?” என்றார்.

“என் பெயர் அமிர்தை. இம்மெய்மை நீங்கள் ஈட்டியது” என்றாள் அமிர்தை. “அதை எனக்களிக்க என்ன தயக்கம்? இதோ என்னை இறப்பரசி தழுவிக்கொண்டிருக்கிறாள்” என்றார் காக்ஷீவான். “இதன் வாய் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஒருதுளியும் சொட்டவில்லை. நான் என்ன செய்வேன்?” என்றாள் அமிர்தை. “அன்னையே! அன்னையே!” என காக்ஷீவான் தவித்தார். “அதில் ஒருதுளியேனும் எனக்களிக்கலாகாதா? கற்றும் கற்பித்தும் நான் வாழ்ந்த பெருவாழ்வை அணையா விடாய்கொண்டுதான் நீத்துச்செல்லவேண்டுமா?”

“இதை மெல்லிய படலம் ஒன்று மூடியிருக்கிறது. அதை கிழிக்க என்னால் இயலவில்லை” என்றாள் அமிர்தை. அதற்குள் அவர் நெஞ்சை அடைந்து மூச்சை குளிரச்செய்தாள் மிருத்யூ. நாவை செயலிழக்கச்செய்தாள். கண்முன் வெண்ணிறத்திரையானாள். நெற்றிப்பொட்டில் எஞ்சும் துளி ஒளியானாள். ஒளித்துளியாக மாறி உச்சிவாயில் திறந்து மேலெழுந்த காக்ஷீவான் ஒரு வெள்ளெருதாக மாறி விண்ணில் ஏறினார். கீழே தன் முதிய உடல் குளிர்ந்து கிடப்பதை காக்ஷீவான் கண்டார். அவரைச்சூழ்ந்து துணைவி குமுதையும் மைந்தர்களும் துயருற்றமர்ந்து கண்ணீர் சிந்தினர்.

துயர்நிறைந்த உள்ளத்துடன் முகில்களில் ஏறி மூச்சுலகை அடைந்த காக்ஷீவான் அங்கே ஈரப்பஞ்சு போல எடைகொண்டவராக இருந்தார். எவரிடமும் சொல்லெடுக்காது தனித்திருந்தார். ஒவ்வொரு கணமும் தான் அன்றாடம் தவம்செய்த நால்வேதங்களையே எண்ணிக்கொண்டிருந்தார். ஒருநாள் நால்வேதங்களும் தேவியர் வடிவில் அவர் முன் தோன்றினர். ரிக் தேவி வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். யஜூர் தேவி பச்சைநிறத்தில் ஆடைபுனைந்திருந்தாள். சாமதேவி இளஞ்சிவப்பு நிறம் கொண்டிருந்தாள். நீலநிறம் கொண்டிருந்தாள் அதர்வதேவி.

“அன்னையரே, உங்களில் எவருக்கு நான் பிழைசெய்தேன்?” என்றார் காக்ஷீவான். மூன்று முதல்தேவியரும் கனிந்து புன்னகைத்து “உன் முழுப்படையலால் உளம்நிறைந்தோம். மைந்தா, உனக்கு எங்கள் அமுதை அளிக்கவும் செய்தோம்” என்றார்கள். அதர்வதேவி முகம் திருப்பி நின்றாள். “அன்னையே, நான் செய்த பிழை என்ன?” என்றார் காக்ஷீவான். “முதல்மூவருக்கும் இணையானவளல்ல என என்னை உன் உள்ளத்தின் ஆழத்தில் நீ எண்ணினாய். நான் என் அருளை உனக்களிக்கவில்லை” என்றாள் அதர்வதேவி.

அது உண்மை என்றுணர்ந்து சொல்லின்றி காக்ஷீவான் கைகூப்பினார். “நான் இருளின் வேதம். தீமையின் ஒலிவடிவம். ஆழங்களின் மொழி” என்றாள் அதர்வதேவி. முதல்மூவரை ஒளியால் நன்மையால் உயர்வுகளால் ஆக்கிய தெய்வங்கள் அவர்களுக்கு நிகர் எடைகொண்டவளாக என் ஒருத்தியையே ஆக்கின. அதை உணராதவர் வேதமெய்மையை அறியாதவர்.” காக்ஷீவான் கண்ணீருடன் “ஆம், இப்போதறிகிறேன் அதை. என்னை முற்றிலும் ஓளிநோக்கி திருப்பிக்கொண்டேன். நன்மையை மட்டுமே நாடினேன். உயர்வையே உன்னினேன்” என்றார்.

“சிறியோனே, ஊசல் ஒருதிசை மட்டும் செல்லவியலாதென்று நீ அறிந்திருக்கவில்லை. நீ சென்ற பயணங்களுக்கெல்லாம் நிகர்விசையை அறியா ஆழத்தில் அடைந்தாய். அங்கே உன் விழியேதும் செல்லவியலா அடித்தளத்தில் குவிந்துள்ளன நீ தவிர்த்தவை அனைத்தும். அவையே படலமென மாறி உன் அமுதகலத்தை மூடின” என்றாள் அதர்வதேவி. “அன்னையே, நான் இனி செய்யவேண்டியவை யாவை?” என்றார் காக்ஷீவான்.

“தந்தையர் வெல்லாது கடந்தவை மைந்தரில் கூடுக என்பது ஊழ்நெறி. உன் மைந்தனுக்கு அவற்றை அளி. அவன் அவற்றை என் சொல்துணையால் வெல்லட்டும். அவனால் நீ முழுமையடைவாய். அவனோ அவன் மைந்தரால் விடுதலைபெறுவான்” என்றாள் அதர்வை. “அவ்வண்ணமே” என்று கைகூப்பி கண்மூடி தன் ஆழத்தை உதிர்த்தார் காக்ஷீவான். அது கரியமுகிலென மண்ணிலிறங்கியது. இரவின் இருளுக்குள் குளிர்ந்த புகை என ஓசையின்றி நடந்தது. தன் தவக்குடிலில் துயின்றுகொண்டிருந்த அவர் மைந்தன் கௌசிகனை தழுவியது.

குடிலின் தனிமையில் அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. அவனுள் நுழைந்து கனவுகளாக பெருகியது அவ்விருள். விழைவும் வஞ்சமும் அச்சமும் ஆணவமும் கொண்டு அங்கே நூறாயிரம் ஓவியங்களாக மாறியது. அங்கே அவன் புணர்ந்தும் கொன்றும் ஒளிந்தும் பல்லுருக்கொண்டு வாழ்ந்தான். அடைந்த மூன்றுவேதங்களையும் பயின்ற வேதமுடிபையும் மறந்து காலையில் பிறிதொருவனாக எழுந்தான்.

அவன் விழிகள் மாறியிருப்பதைக் கண்டதுமே அன்னை அறிந்தாள். “மைந்தா, இனி உனக்கு இக்குருநிலையம் இடமல்ல. உனக்கான நச்சுமுள்காட்டை தேடிச்செல்க!” என்று அவள் ஆணையிட்டாள். கௌசிகன் அன்னையை மட்டும் வணங்கி ஆசிரியரிடம் ஒரு சொல்லும் உரைக்காமல், தோழர் விழிநோக்காமல் குருநிலையம் விட்டு அகன்றான். ஏழுகாடுகளைக் கடந்து தீர்க்காரண்யம் என்னும் அடர்காட்டை அடைந்தான். அங்கே பன்னிரு ஆண்டுகாலம் தவம்செய்து அதர்வ வேதத்தின் ஒவ்வொரு சொல்லிலும் உறைந்த தேவதைகளை தொட்டெழுப்பினான்.

அவனால் அக்காடு தமஸாரண்யம் என்று பெயர் பெற்றது. அதர்வத்திலிருந்து எழுந்த ஆழுலக தெய்வங்கள் ஒளிவிடும் சிறகுகளும் நச்சுக்கொடுக்குகளும் சுழலும் சினவிழிகளும் கொண்ட பூச்சிகளாக அங்கே சுழன்று பறந்தன. பிறிதெங்கும் இல்லாத விலங்குகள் அங்கிருப்பதை மானுடர் கண்டனர். ஏழுகால்கள் கொண்ட வேங்கை இரண்டுதலைகள் கொண்ட மான்களை வேட்டையாடி உண்டது. முன்னும்பின்னும் துதிக்கைகள் கொண்ட வேழங்கள். சிறகுகள் கொண்ட எருமைகள். கால்களில் எழுந்த பாம்புகள். கொம்புகள் கொண்ட முதலைகள்.

இருண்ட பசுங்காட்டின் ஆழங்களுக்குள் அவற்றின் முழங்கும் குரல்களும் மின்னும் விழிகளும் நிறைந்திருந்தன. அக்காட்டின் ஒவ்வொரு இலைநுனியும் நச்சு சொட்டியது. ஒவ்வொரு முள்முனையும் நாகப்பல் என்றாகியது. சொல்லெல்லாம் நச்சுத்துளியான காற்று அங்கே நிறைந்தது. அதில் இரவும்பகலுமென்றிலாது அதர்வவேதம் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதர்வவேதம் பயில மாணவர்கள் கௌசிகரைத் தேடி வந்தபடியே இருந்தனர். அவர் சண்டகௌசிகர் என்று பாரதமெங்கும் புகழ்பெற்றார். அக்காட்டின் நடுவே ஒரு கையில் அமுதமும் மறு கையில் கொலைவாளும் அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கும் அதர்வையின் சிலை அமைந்த கோயில் எழுந்தது. அங்கே நாளும் பூதவேள்விகள் நிகழ்ந்தன. அவியுண்டு எழுந்தனர் கீழுலக தேவர்கள். பேருடல் கொண்ட பாதாள நாகங்கள்.

[ 4 ]

மகதத்தின் அரண்மனைச் சுவரிலிருந்தது களிமண்பலகையில் அமைந்த ஜரையின் புடைப்புக்கோட்டோவியம். நோக்க நோக்க தெளியும் அதன் வடிவம் பிருஹத்ரதனுக்கும் அவர் இருமனைவியருக்கும் அணுக்கமான எவரைவிடவும் ஆழ்ந்துசெல்வதாக ஆயிற்று. அணிகையும் அன்னதையும் பகலெல்லாம் அதன் முன்னால் அமர்ந்திருந்தனர். அணிகை அன்னை ஜரையின் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தாள். அன்னதை அவள் கைமகவின் கண்களில் கருத்தூன்றினாள்.

இருவரும் ஒருவரோடொருவர்கூட சொல்லாடுவது இல்லாதாயிற்று. ஏவலர் விழிக்குறியிலேயே என்னவென்று உணர்ந்து முகக்குறியாலேயே ஆணைகளை இட்டனர். அதன் முன் அமர்ந்து நூலாய்ந்தனர். இசை கேட்டனர். பின் அவையும் நின்றுபோய் வெறுமனே தாங்களும் ஓவியங்களே என அமர்ந்திருந்தனர். நாளும் மெலிந்து அவர்களின் உடல் நிறமிழந்தது. விழிகள் ஒளிமங்கி வரையப்பட்டவை என்றாயின. மூச்சோடுவதே உடலில் தெரியாமலாயிற்று. ஓவியப்பாவைகளாக மாறி அவ்வோவியம் அமைந்த உலகுக்குள் நுழைய அவர்கள் முயல்வதாக சேடியர் சொல்லிக்கொண்டனர்.

ஒருநாள் இரவில் அந்த ஓவியம் இருவரிடமும் உரையாடியது. அணிகையிடம் அன்னை ஜரை உதடசைத்து ஓசையில்லாது ஒரு சொல் சொன்னாள். அன்னதையிடம் அம்மகவும் இதழ்கோட்டி பிறிதொரு சொல்லை சொன்னது. இருவரும் பின்னிரவில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டனர். விடாய் தவிக்கும் நெஞ்சை அழுத்தியபடி இருளில் அமர்ந்து நடுங்கினர். பின்னர் கூவியபடி எழுந்து அரசரின் மஞ்சத்தறை நோக்கி ஓடினர். அவர் நெஞ்சின் இருபக்கமும் விழுந்து தோள்சுற்றி அணைத்துக்கொண்டு கண்களை மூடி அழுதனர்.

அச்சொற்களென்ன என்று அறிய நிமித்திகரை அழைத்து அவைகூட்டி ஆணையிட்டார் அரசர். சொற்குறிநோக்குபவர்களும் முகக்குறி தேர்பவர்களும் பிறவிநூல் ஆய்பவர்களும் இரு அரசியரையும் கண்டு நுண்ணிதின் ஆய்ந்தனர். அவர்களை ஆழ்துயிலில் படுக்கச்செய்து அச்சொற்களை அவர்களின் உதடுகளில் எழச்செய்தனர். அது ஜரர்களின் மொழியிலமைந்த சொல் அல்ல என்று அறிந்தனர்.

பதினெட்டு நிமித்திகர் ஒரு மாதம் அமர்ந்து ஏழு முறை உசாவி நோக்கியும் அச்சொற்களெவை என்று அறியக்கூடவில்லை. பாரதவர்ஷத்தின் அத்தனை மக்கள் மொழிகளிலும் அச்சொற்களுக்கு பொருள் தேடினர். ஆசுரமொழிகளிலும் ராக்ஷச பைசாசிக மொழிகளிலும் கூட தேடிநோக்கினர். இறுதியில் அது பொருளிலாச் சொல் என்று அறிவித்தனர்.

“தெய்வங்கள் வீண்சொல் உரைப்பதில்லை. அவை நாமறியா சொற்கள்” என்றார் அமைச்சர் பத்மர். சோர்ந்திருந்த பிருஹத்ரதன் “ஆம், நானும் அவ்வாறே உணர்கிறேன். ஆனால் எங்ஙனம் அதை நாம் அறியமுடியும்? அத்தெய்வமே மீண்டு வந்து உரைப்பது வரை காத்திருப்போம்” என்றார்.

“அரசே, மைந்தனுடன் சென்ற அன்னை ஜரை அக்குகையின் இருள்பாதை வழியாக பாதாள உலகங்களுக்குச் சென்றாள் என்று அறிவோம். இச்சொல் அங்கிருந்து அவளால் உரைக்கப்பட்டது. ஆழுலக தெய்வங்கள் எழும் களமொன்றை அறிந்தவரே இச்சொல்லுக்கு பொருள் காணமுடியும்” என்றார் பத்மர். “வடக்கே தமஸாரண்யம் என்னும் காட்டில் சண்டகௌசிகர் என்னும் வைதிகர் குருநிலை அமைத்துள்ளார் என்று நூல்கள் சொல்கின்றன. அந்நச்சுக்காட்டில் அதர்வவேதம் தழைக்கிறது. அங்கே அடியுலகங்களின் அத்தனை தெய்வங்களும் வந்து அவியுண்டு செல்கின்றன. அவர்களே இச்சொற்களுக்கு பொருள் சொல்ல முடியும்.”

பத்மரும் அரசரும் இருதேவியரும் தமஸாரண்யத்தை சென்றடைந்தனர். “இக்காட்டுக்குள் செல்ல நமக்கு ஒப்புகை இல்லை. இதன் எல்லையென்றோடும் சுருதவாகினி என்னும் இச்சிற்றோடையின் கரையில் நாம் தவமிருப்போம். சண்டகௌசிகர் உளம் கனிந்தால் நம்மை அழைக்கக்கூடும்” என்றார் பத்மர். காட்டின் ஓரத்தில் ஒரு குடிலமைத்து அவர்கள் தங்கினர். நோன்பிருந்து காத்திருந்தனர். பன்னிரண்டுநாட்களுக்குப்பின் காட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் உள்ளங்கைகளிலும் முகம் முழுக்கவும் கரிய மயிர் பரவியிருந்தது. கரடிக்குரலில் “உங்களை என் ஆசிரியர் அழைத்துவரச்சொன்னார்” என்றான்.

அவனுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றனர். “நான் செல்லும் வழியில் மட்டுமே வருக! இருபக்கமும் விழிசெலுத்தாதீர்” என்றான் அவன். விந்தை விலங்குகளையும் நச்சுச்செடிகளையும் சுற்றும் பூச்சிகளையும் புட்களையும் கடந்து அவர்கள் சண்டகௌசிகரின் தவக்குடிலை அடைந்தனர். ஒவ்வொன்றும் கனவெனத் தோன்றின. “இதை நான் முன்னரே கனவில் கண்டுள்ளேன்” என்றாள் அணிகை. “ஆம், நானும் கண்டுள்ளேன்” என்றாள் அன்னதை. “ஒவ்வொருவரும் அறிந்தவையே இவை” என்றான் அவன்.

தொலைவிலேயே அதர்வம் முழங்கக்கேட்டனர். எதிரொலி நிரைவகுத்த இடியொலி என, சினந்த வேழப்பிளிறல் என, பிளவுண்டு சரியும் மரம் என, உருளும் மலைப்பாறை என, குருதியுண்ட சிம்மம் என, புண்பட்டு சாகும் களிற்றெருது என, மரங்களில் அறைபடும் காட்டுக்கொடி என அது ஒலித்தது. அணுகும்தோறும் அதன் ஒலி குறைந்து வந்தது. கூகையெனக் குழறியது. பின் கருங்குருவி என குறுகியது. எரிகுளத்தை அவர்கள் நோக்கியபோது வண்டென மிழற்றியது. அருகணைந்தபோது அங்கே பதினெட்டு ஹோதாக்கள் சூழ்ந்தமர்ந்து எரிகுளத்தில் அவியிட்டு வேள்விநிகழ்த்தக் கண்டனர். அவர்களின் உதடுகள் ஓசையின்றி அசைந்து அதர்வத்தை ஓதிக்கொண்டிருந்தன.

சண்டகௌசிகரின் கால்களை நால்வரும் பணிந்தனர். “உங்கள் வரவுகுறித்து அறிவேன்” என்றார் அவர். “இன்றைய வேள்வியின் எரியெழலில் உங்களிடம் உரையாடியவளை எழுப்புகிறேன். அவள் சொல்வதென்ன என்று உசாவுகிறேன்” என்றார். அன்று அவருடன் அவர்கள் தங்கினர். இரவெழுந்ததும் தொடங்கிய விபூதயாகத்தில் தர்ப்பைப்பாய் மேல் கைகட்டி அமர்ந்தபோது நால்வரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். அணிகை “நான் அஞ்சுகிறேன்” என்றாள். அன்னதை “சென்றுவிடுவோம்” என்றாள். பிருஹத்ரதன் “இதுவரை வந்தோம். இனி மீள்வதில்லை” என்றார்.

நெருப்பில் எழுந்தவளை மூவரும் அக்கணமே கண்டுகொண்டனர். இடையில் ஒளிரும் உடலமைந்த மைந்தனுடன் எழுந்த ஜரை குருத்திளமை கொண்டிருந்தாள். அவள் இடையிலிருந்த மைந்தன் புன்னகைக்க அவள் இதழில் தாய்மையின் கனிவு நிறைந்திருந்தது. “அன்னையே, உன் ஆழுலகில் மகிழ்ந்திருக்கிறாயா?” என்றார் சண்டகௌசிகர். “ஆம், இங்கு அனைவரும் மகிழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கிருக்கையில் மட்டும் மகிழ்பவர்களே இங்கு வருகிறார்கள்” என்றாள் ஜரை.

சண்டகௌசிகர் “இவர்கள் உன்னை வணங்கும் அடியார். இவர்களிடம் நீ எழுந்து சொன்னதென்ன?” என்றார். “இவர் இருவர் துயர்கண்டு இரங்கினேன். அருள்செய்ய எண்ணினேன்” என்றாள் ஜரை. “நீ சொன்னதென்ன என்று அறிய விழைகிறேன்” என்று சண்டகௌசிகர் கேட்டார். அவளும் அவள் மைந்தனும் இணைந்த குரலில் “மாவீரன் எழுக!” என்றனர். அப்போதுதான் அவ்விருவர் குரல்களையும் இரண்டாகக் கேட்டதே பொருளின்மையை உருவாக்கியது என்பதை அரசனும் அமைச்சரும் உணர்ந்தனர்.

“அன்னையே, உன் அருள் எழுக!” என்றார் சண்டகௌசிகர். “இங்குள்ளவை அனைத்தும் அணுவடிவம் கொண்டவை. அவ்வுலகோ இந்நுண்மைகளின் நூறாம்நிழல்” என்று அவள் சொன்னாள். சண்டகௌசிகர் “அந்த மாமரத்தில் உன்னை ஒருகணம் நிறுத்துகிறேன். அன்னையே, அங்கு உன் சொல் கைதொடும் பொருளென கனிக!” என்றார். அதர்வவேதச் சொல்லெடுத்து முழங்கி, அப்பமும் மதுவும் மலருடன் சேர்த்து அவியிட்டு இருகைவிரல் கூட்டி அவர் இருள்முத்திரை காட்டினார். அருகே நின்றிருந்த மாமரம் காற்றெழுந்து குலுங்கி உலைந்தது. அதிலிருந்து ஒரு கனி உதிர்ந்து அவர் மடியில் விழுந்தது.

சண்டகௌசிகர் அதை எடுத்து அரசரிடம் அளித்தார். “இதை உண்க! இப்புவியின் எடையனைத்தையும் தாங்கும் ஆழங்களின் வல்லமை கொண்ட மைந்தன் அமைவான். நன்றுசூழ்க!” என்றார். கைகூப்பி அதை வாங்கி தன் தலைமேல் சூடி அவரை வணங்கினார் பிருஹத்ரதன். முனிவருக்கு அவர் விழைந்த காணிக்கை அளித்து ஏழுமுறை மண்டியிட்டு வணங்கி அவர் கால்புழுதியை சென்னிசூடினார். “இன்று நான் மீண்டேன். இன்று என் தந்தையருக்கு மைந்தரானேன்” என்றார்.

“செல்க!” என்றார் சண்டகௌசிகர். “இவ்விரவுக்குள் தமஸாரண்யத்தின் எல்லையென்றமைந்த சுருதவாகினியை நீங்கள் கடந்தாகவேண்டும். முதற்கதிர் எழுந்தபின் இங்கிருந்தீர்கள் என்றால் நிறைவடையா ஆத்மாக்களாக இக்காட்டில் ஆயிரமாண்டுகாலம் அலைந்து திரியநேரும்.” பிருஹத்ரதன் “இதோ கிளம்புகிறோம்” என்றார். “இங்குள்ள ஒவ்வொன்றும் அவ்வாறு சிக்கிக்கொண்ட ஆன்மாக்களே. அவை உங்களையும் இங்கு நிறுத்தவே முயலும். ஒரு குரலுக்கும் செவிகொடுக்காதீர். எவ்வுருவுக்கும் விழியளிக்காதீர்” என்றார் சண்டகௌசிகர்.

அங்கிருந்து தன் துணைவியரையும் பத்மரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கனியுடன் பிருஹத்ரதன் ராஜகிருஹம் மீண்டார். செல்லும் வழியெல்லாம் அவர் உவகைதாளாது அழுதுகொண்டிருந்தார். “எந்தையரே! எந்தையரே!” என்று விண்நோக்கி விம்மினார். “இதோ, என் கடன் கழித்தேன். இதோ, என் வாழ்க்கையை நிறைவுசெய்தேன்” என்று கூவினார். அவர் கால்களை வேர்களென எழுந்து வளைத்து தடுமாறச்செய்தன நாகங்கள். அவர் கைகளில் கொடிகள் சுற்றி இழுத்தன. அவருக்குக் குறுக்காக சிறகடித்துச் சென்றன இருண்ட பறவைகள். அவர் உளச்சொற்களுடன் ஒலியிணைந்து திரிபுசெய்தன சிறுபூச்சிகள். ஆனால் அவர் அக்கனியை அன்றி எதையும் எண்ணவில்லை. அவர் கண்ணீர் காணத்தேவையற்ற அனைத்தையும் மறைத்தது.

ஆனால் அவரைத்தொடர்ந்து வந்த இரு துணைவியரும் தனிமையில் நடந்தனர். ஒவ்வொரு ஒலிக்கும் அவர்கள் திடுக்கிட்டு நின்று செவிபொத்தினர். ஒவ்வொரு தொடுகைக்கும் கால் விதிர்த்து மூச்செறிந்தனர். அணிகையின் செவியை அணுகிய கருவண்டு ஒன்று “அன்னதை அல்லவா நீ? மைந்தனைப்பெற்று விண்ணகம் செல்லும் பேறு பெற்றாய். வாழ்க!” என்றது. அவள் திடுக்கிட்டு திரும்பி நோக்க ரீங்கரித்து பறந்தகன்றது.

அன்னதையின் செவியருகே சென்று “அணிகை, நீ வென்றாய். மைந்தரைப் பெறாது அவள் ஒரு மலைப்பாறையாக ஏழு ஊழிக்காலம் பாழ்நிற்கப்போகிறாள்” என்றது. அவள் திகைத்து நெஞ்சைப்பற்றியபடி நின்றாள். மெல்லிய தடமாகத் தெரிந்த பாதை இருவருக்கும் இருதிசைகளிலாக பிரிந்தது. இருவரும் இருபக்கமாகப் பிரிந்து காலடியெடுக்கக் கண்டு பின்னால் வந்துகொண்டிருந்த அமைச்சர் பத்மர்  உரத்தகுரலில் “அரசியரே, இருவரும் வழிதவறிவிட்டீர்கள்” என்றார். பிருஹத்ரதன் திடுக்கிட்டு விழித்து “என்ன?” என்றார். “அரசியர் பாதைபிரிந்துவிட்டனர் அரசே” என்றார் பத்மர்.

பிருஹத்ரதன் திரும்பி நோக்கி “என்ன நிகழ்ந்தது? பாதைநோக்கி பின் தொடர்க!” என்றார். இருவரும் அசைவில்லாது நிற்கக் கண்டு “என்ன?” என்று கேட்டார். “சொல்லுங்கள், இக்கனியை உண்டு மைந்தனுக்கு அன்னையாகப்போவது யார்?” என்றாள் அணிகை. “ஆம், அதை அறியாது இனி இக்காடுவிட்டு ஓர் அடிவைக்க என்னால் இயலாது” என்றாள் அன்னதை.

அதுவரை அதை எண்ணியிராத பிருஹத்ரதன் “அதை நாம் அரண்மனைக்குச் சென்று முடிவுசெய்வோம். நூலறிந்தவரும் நிமித்திகரும் குலமூத்தோரும் மூதன்னையரும் முடிவெடுக்கட்டும்” என்றார். “எனக்கு அக்கனி இல்லை என்றால் இக்காட்டைவிட்டு நான் வரப்போவதில்லை” என்று அன்னதை சொன்னாள். “ஆம், இங்கேயே நின்று இறக்கவே நானும் எண்ணுகிறேன்” என்றாள் அணிகை.

“என்ன இது? பிறந்த கணம் முதல் ஓருடலும் ஓருயிரும் என்றே வாழ்ந்தவர் நீங்கள் என்று அறிந்தவன் அல்லவா நான்? ஒருவர் குழல்சீவ பிறிதொருவர் முகத்தை ஆடியில் நோக்குவதுண்டு என்று செவிலியர் உங்களை பகடி சொல்லவும் கேட்டிருக்கிறேன். இக்கணம் வரை இருவரும் இருசொல் பேசி நான் கேட்டதுமில்லை” என்றார் பிருஹத்ரதன். “ஆம், ஆனால் இணைந்த எதுவும் பிரியும் ஒரு கணம் உண்டு” என்றாள் அன்னதை. “அரசே, விண்ணுலகு செல்பவர் இணைந்திருப்பதில்லை” என்றாள் அணிகை.

என்னசெய்வதென்றறியாமல் பிருஹத்ரதன் திகைத்து நின்றார். மீண்டும் மெல்லியகுரலில் “இவ்விடத்தில் முடிவெடுக்க என்னால் இயலவில்லை. இந்நாள் வரை இருவர் என் துணைவியர் என்றே நான் எண்ணியதில்லை. அரண்மனைக்கு வருக! எனக்கு அவைகூடி முடிவெடுக்க மூன்றுநாட்களை அருள்க!” என்றார். “இக்காட்டில் நாங்கள் இரண்டானோம். இனி எப்போதும் ஒன்றென ஆகமுடியாதென்றும் அறிந்தோம்” என்றாள் அன்னதை. “எங்களில் ஒருவரை உதறி இன்னொருவரை அழைத்துச்செல்லுங்கள்” என்றாள் அணிகை.

அரசர் கண்களை மூடி ஒருகணம் நின்றார். பத்மர் “பொழுதுவிடியப்போகிறது அரசே” என்று கூவினார். “புட்குரல்களில் விடிவெள்ளியெழுவதை கேட்கிறேன்.” பிருஹத்ரதன் தத்தளித்து “எண்ணிச்சொல்லுங்கள்… அரசியரே, இது தீயூழ் ததும்பும் இருட்காடு. இங்கு நின்றிருப்பதென்பது அடியிலியில் விழுவதற்கு நிகர்” என்றார். “ஆம், மைந்தரில்லாதவள் விண்ணுலகேக முடியாது. அவள் மகிழ்ந்திருக்கும் இடம் அடியிலிகளின் ஏழடுக்குகள் மட்டுமே” என்றாள் அன்னதை. “மைந்தரில்லையேல் அன்னை ஜரையுடன் சென்று நானும் அங்கமையவே விழைவேன்” என்றாள் அணிகை.

தொலைவில் தெரிந்த சுருதவாகினியைக் கண்டு பிருஹத்ரதன் தவித்தார். “எண்ணிச்சொல்லுங்கள்… இரட்டையரே, என் மேல் கருணைகொள்ளுங்கள்” என்றார். அவர்கள் இதழ்பூட்டி விழியிறுக்கி உறைந்து நின்றனர். “சொல்லுங்கள்… வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்றார் பிருஹத்ரதன். அவர்கள் மலைப்பாறையின் குளிர்ந்த அமைதியை கொண்டிருந்தனர்.

“அரசே, விடியலாயிற்று… இதோ” என்றார் பத்மர். “இதோ இருவருக்கும் அளிக்கிறேன் இக்கனியை. இருவரும் பகிர்ந்துண்ணுங்கள்” என்றார் பிருஹத்ரதன். இருவரும் ஒரே கணத்தில் மலர்ந்து உவகையொலி எழுப்பினர். “விடிகிறது… என்னுடன் ஓடுங்கள்…” என்று கூவியபடி பிருஹத்ரதன் சுருதவாகினியை நோக்கி பாய்ந்தார். அரசியரும் அமைச்சரும் அவரைத் தொடர்ந்து விரைந்தோடினர். மூச்சிரைக்க கண்ணில் அனல் பறக்க கால்களில் முட்களும் கற்களும் கிழித்து குருதி வழிய அவர்கள் சுருதவாகினியை அடைந்து மறுபக்கம் தாவினர்.

அவர்களைத் தொடர்ந்தோடி வந்தன பல்லாயிரம் கால்கள். பறந்து வந்து மொய்த்தன கரிய சிறகுகள். பல்லாயிரம் இருண்ட கைகள் அவர்களை அள்ளிப்பற்றத் துடித்தன. அணிகையின் ஆடைநுனியைப்பற்றியது ஒரு கை. அன்னதையின் கூந்தலிழையைப் பற்றி இழுத்தது பிறிதொரு உகிர். சுருதவாகினியைக் கடந்ததும் பிருஹத்ரதன் ஏறிட்டு நோக்கியபோது விண்ணில் விடிவெள்ளியை கண்டார். மூச்சிரைக்க கண்ணீரும் சிரிப்புமாக “தெய்வங்களே, தப்பிவிட்டோம்” என்று கூவினார்.

அவர் காலடியில் களைத்து விழுந்தனர் அரசியர். அவர்கள் இருவர் கையிலும் அக்கனியை அவர் அளித்தார். அவர்கள் நெஞ்சு விம்ம அழுதுகொண்டிருந்தனர். அவர்களை அணைத்துக்கொண்டு “மீண்டுவிட்டோம்… மீண்டு வந்துவிட்டோம்” என்று பிருஹத்ரதன் கூவினார். “இனி துயரில்லை… இனியெல்லாம் நலமே” என்று விம்மி அழுதார்.

ஆனால் விண்ணில் தோன்றி கீறிமறைந்த எரிமீன் ஒன்றை நோக்கி நின்றிருந்த அமைச்சர்  பத்மர் மட்டும் நீள்மூச்செறிந்தார். “செல்வோம்” என்றார் பிருஹத்ரதன். “ஆம், செல்வோம்” என்றபின் அமைச்சர் எரியம்பு ஒன்றை விண்ணிலெழுப்பி காவலரை தேர்கொண்டுவர ஆணையிட்டார்.

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3