கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]

சிங்காரவேலர்

1950களின் இறுதியில் ஆரம்பத்தில் இது நடந்தது. ஒருநாள் காலையில் ஒருவருக்கு தெரிய வருகிறது, அவருக்கு அன்று காலை திருமணம் நிச்சயமாகப் போகிறது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டிருந்தன. மாமா வீட்டில் இருந்து முந்தையநாள் இரவுதான் வந்திருக்கிறார். ‘எல்லாம் நிச்சயமாயிட்டது. நல்ல எடம். சொந்தம்தான்’ என்றார் அப்பா.

அவர் கடும் மனக் கொந்தளிப்பை அடைந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் அறையை மூடிக்கொண்டு பதற்றமும் பரிதவிப்புமாக நடந்தார். சிறுஅழுகை வந்து நெஞ்சை முட்டியது.தன் மானசீகமான குருநாதரிடம் மீண்டும் மீண்டும் கோரினார் ‘நான் என செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்?’ கடைசியில் முடிவெடுத்தார். வெளியே வந்து அப்பாவிடம் சொன்னார் ‘அப்பா இந்தக் கல்யாணத்திலே எனக்கு இஷ்டமில்லை’’

அப்பாவுக்கும் சொந்தக்காரர்களுக்கும் அதிர்ச்சி. வீடே விரைத்துப்  போய்விட்டது. என்ன ஒரு மீறல்! எத்தனை திமிர்! அம்மா சாபம் போட்டு அழுதபடி அப்படியே உடைந்து அமர்ந்தார். கையோங்கியபடி அப்பா அடிக்கப் பாய்ந்தார். அவரை பலர் பிடித்துக் கொண்டார்கள். ‘வெட்டி கண்டம் துண்டமாக போட்டாத்தான் எனக்கு மரியாதை’ என்று அப்பா கொந்தளித்தார்

அவரைப் பிடித்து அமரச் செய்து விட்டு ஒரு வயது மூத்த மாமா அறிவுரை சொன்னார் ‘உன்னிடம் கேட்டு இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. இதெல்லாம் நம்ம குடும்ப வழக்கம். தலைமுறை தலைமுறையா இப்டித்தான். பெரியவங்க பாத்து சொல்றத நீ செய்ய வேண்டியதுதான்’

ஆனால் தலைநிமிர்ந்து அவர் சொன்னார். ’’இல்லை மாமா …நான் முடிவு செஞ்சிட்டேன். இது என் வாழ்க்கை. இதிலே என் இஷ்டம்னும் ஒண்ணு இருக்கு…’ தன்னைப் போன்ற ஒரு தலைமுறைக்காக அங்கே நின்று பேசுவதாக அவருக்கு அப்போது தோன்றியது…

ஊரும் உறவும் கொதித்தது. ’இன்னமுமா வெட்டிப் போடாம இருக்கான் அந்த அப்பன்?’ என்றார்கள். ‘இதைக் கேட்டு நாளைக்கு நம்மவீட்டு குழந்தைகளும் ஆரம்பிச்சா அப்றம் சாதியும் சமூகமும் உருப்படுமா? இத முளையிலேயே கிள்ளணும்’ என்றார்கள். சாதிக்குரிய கோயிலில் ஊர்க்கூட்டம் நடந்தது. அங்கேயும் சென்று குனிந்த தலை நிமிராமல் கண்ணீருடன் அதையே சொன்னார் அவர்.

இவ்வளவு பிரச்சினை ஆனபின் எப்படி கல்யாணம் நடக்கும்? நின்று விட்டது. அதன்பின் பலவருடங்கள் ஊரும் உறவும் பெற்ற அம்மாகூட முகம் கொடுத்தே பேசவில்லை. இருபதாண்டுகளுக்குப் பின்னரும் அப்பா அந்த மனக்கசப்பை தக்க வைத்திருந்தார். ‘அப்பா கோபம் நியாயம்தானே’ என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல தமிழ்ப் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறதல்லவா? இதில் ஒரு சின்ன வேறுபாடு. இங்கே திருமணம் நிச்சயிக்கப்பட்டது ஒரு ஆணுக்கு. அவனுக்கு வயது பத்தொன்பது. மெட்ரிக் படித்து முடித்து அப்பாவுக்கு உதவியாக கடைவணிகத்தில் இருந்தான். என் வாசகர்களில் ஒருவர் சொன்ன உண்மைக் கதை இதுஅவர் செட்டியார் சாதியைச் சேர்ந்தவர். இப்போது வயது எழுபத்தைந்துக்கும்மேல். அவரது சொந்தக்கதைதான்.

அவரது அந்தக் குருநாதர் ஈவே.ரா! ஈவேரா பற்றிய என் விமர்சனக் கட்டுரை ஒன்றுக்கு பதிலாக என்னை தொலைபேசியில் அழைத்த அவர் இந்தச் சம்பவத்தைச் சொன்னார். ‘…நீங்க சொல்றதெல்லாம் சரிதான் தம்பி. ஆனா நான் ஒரு தனிமனுஷன். ஒரு பெரிய கூட்டத்திலே ஒரு துளி கெடையாது. என் வாழ்க்கையப் பத்தி நானே முடிவெடுக்கலாம்னு எனக்கு சொன்னது பகுத்தறிவு இயக்கம்தான். நான் இன்னிக்கு ஆத்திகன். ஆனா அந்த நாத்திகம் இல்லேன்னா இந்த ஆத்திகத்துக்கே நான் வந்திருக்க மாட்டேன். ஏன்னா சுயமா சிந்திச்சிருக்கவே மாட்டேன்’

அவர் சொன்னதை அவரே விளக்கினார். ‘தம்பி என்னோடது என் ஆத்மாவோட மீட்புக்கான ஆன்மீகம். நம்ம மதத்திலே முக்தின்னாலே ஆன்மாவோட முக்திதான். அந்த விதத்திலே இங்கே தனிமனுஷன் செல்ஃப் பத்தியெல்லாம் பேசியிருக்காங்க. ஆனா அந்த எடத்துக்கு போறதுக்கான வழியே அப்ப நம்ம மதத்திலே கெடையாது. அது ஒருசிலருக்கு அதிர்ஷ்டவசமா குரு உறவாலே கிடைச்சா உண்டு. மத்தவங்களுக்கு மதம்னா ஞானம் கெடையாது. ஆசாரம் மட்டும்தான். அந்த ஆசாரத்துலே செல்ஃபுக்கே எடமில்லை….

… எனக்கு செல்ஃபுன்னு ஒண்ணு இருக்குங்கிறதச் சொன்னவரு பெரியார்தான். அவர் வழியாத்தான் நான் அதை உருவாக்கிக் கிட்டேன். அப்றம் அதோட முழுமை என்னாங்கிற கேள்விவழியா நான் ஆன்மீகத்துக்குள்ள வந்தேன். ஜெ.கிருஷ்ணமூர்த்திய கேட்டேன். இப்ப வள்ளலாரோட வழிவந்தவனா ஆன்ம சாதகம் பண்றேன். என்னோட ஆன்மீகத்துக்கு முதல் குரு பெரியார்தான். எந்த சந்தேகமும் இல்லாம சொல்றேன்’’

சுவாரசியமான ஒரு விஷயத்தை சொல்லி கதையை முடிக்கவேண்டும். சில வருடங்கள் கழித்து அதே மாமா பெண்ணை ’சுயமாக முடிவெடுத்து’ அவர் திருமணம் செய்து கொண்டார்! பாட்டிக்கும் வயது எழுபதை தாண்டிவிட்டது! குடும்பத்தில் நாலாம்தலைமுறை வந்துவிட்டது.

என்னுடைய தலைமுறையில் நான் நினைவறிந்த நாள் முதலே எல்லாவற்றையும் என் வாழ்க்கை என் சிந்தனை என்ற ‘நான்’ இல் இருந்தே ஆரம்பித்திருக்கிறேன். அதை உணராத ஒரு தலைமுறையை கற்பனை செய்யவே கடினமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியா என்ற நூலை வாசித்தபோது முதல் இந்தியத்தேர்தலைப் பற்றிய அத்தியாயத்தில் ஆச்சரியமான ஒரு தகவலைக் கண்டேன்.

1952ல் முதல் லோக்சபா தேர்தலில் இந்தியா முழுக்க தேர்தலின் பொருட்டு முதல் வாக்காளர் பட்டியல் கணக்கிடப் பட்டது. வாக்காளர்களின் பெயரும் தனியடையாளமும் பதிவு செய்யப் பட்டது. அப்போது ஒன்று தெரிந்தது, இந்தியாவில் நூற்றுக்கணக்கான சமூகங்களில் மக்களுக்கு அப்படி தனிப்பெயர் கிடையாது. குலப்பெயர், இனப்பெயர், சாதிப்பெயர்தான் அவர்களுக்கும். கூப்பிடுவதற்காக ஓர் அடையாளம் இருக்கும். பெயரைக் கேட்டால் சாதியை அல்லது குலத்தையே சொன்னார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே தாங்கள் தனிமனிதர்கள் என்று தெரியாது.

இங்கே சுவாரசியமான ஓர் அம்சம் உண்டு. 1872ல் முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு  நடந்தது. 1881ல் முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு. அப்போதெல்லாம் எப்படி மக்கள் தொகை கணக்கிட்டார்கள்? தனிநபர்களாக அல்ல, கூட்டங்களாக குலங்களாக சாதிகளாக மக்களை ஒட்டுமொத்தமாக கணக்கிட்டார்கள். இந்த ஊரில் புலையர் இவ்வளவு, குறவர் இவ்வளவு, ஈழவர் இவ்வளவு, நாயர் இவ்வளவு என்று கணக்கிட்டார்கள். ஆம், அப்போது நம் தேசத்தில் தனிமனிதர்கள் அதிகம்பேர் இல்லை.


ஐரோப்பாவில் இருந்து…

கிட்டத்தட்ட இதேநிலை பதினாறாம்வ்நூற்றாண்டுவ்வரை ஐரோப்பாவில் இருந்தது. தனிமனிதன் என்ற அடையாளமே இல்லாமல் மக்கள் திரளடையாளம் கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். அதற்கு எதிராக உருவானதே சுதந்திர இச்சை [Free will] இயக்கம். அறவியலில், ஆன்மீகத்தில், தத்துவத்தில், அரசியலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது அது. ’மனிதனின் பிரக்ஞை சுதந்திரமானது’ என்று அதை ஒரே வரியில் சுருக்கலாம். அந்த ஒருவரியில் இருந்தே மேலைச்சிந்தனையில் நவீன தத்துவம் தொடங்கியது என்பார்கள்.

உடனே பல்வேறு கேள்விகளை அது சந்திக்கிறது. அது அதைப் படைத்த சக்திகளில் இருந்து விடுபட்டு செயலாற்ற வல்லதா? பிரபஞ்ச வெளியின் பிரம்மாண்டமான ஒருங்கிணைப்புக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையா? மனிதன் எந்த அளவுக்கு பிரபஞ்சத்தை அறிய முடியும்? அவன் அறிதல் எல்லைக்குட்பட்டது என்றால் மனிதன் தான் செய்யும் செயல்களுக்கு எவ்வகையில் பொறுப்பேற்றுக் கொள்வது?

இதற்கெல்லாம் சுதந்திர இச்சை இயக்கம் பல்வேறு வகையில் பதில்களை அளித்துள்ளது. பிரபஞ்சத்தை படைத்த ஆற்றல்கள் மனிதனை சுதந்திரமாக தன் தெரிவுகளை நிகழ்த்திக்கொள்ளும்படியே படைத்துள்ளன என்பதே ஆன்மீகதளத்தில் அளிக்கப்பட்ட பதில். மனிதனின் ஆளுமை என்பதே அவனுடைய தெரிவுகள் என்ன என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

ஆம், மனிதன் பிரபஞ்சத்தை முழுமையாக அறிய முடியாது, ஆனால் தான் அறியும் எல்லைக்குள் அவன் தன் தெரிவுகளை அமைத்துக் கொள்ள முடியும். மொத்த உலகையும் அவன் அறிய முடியாது. ஆனால் இருளில் செல்பவன் தன் விளக்கு வெளிச்சத்தின் வட்டத்துக்குள் தெரிவனவற்றை மட்டுமே வைத்து முன்னால் செல்வதுபோல அவன் தன் அறிவை பயன் படுத்திக் கொள்ள முடியும். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் மனிதன் தன் செயல்களுக்கு முற்றிலும் அவனே பொறுப்பேற்க வேண்டும் என்பவை சுதந்திர இச்சை இயக்கத்தின் அறவியல் பதில்கள்.

இந்த விவாதம் மிக, மிக விரிவானது. இதற்கு முடிவான பதில்கள் இல்லை. டிடிடியை கண்டுபிடித்த முல்லர் [Paul Hermann Müller ] தன் அறிதலின் எல்லைக்குள் நின்று மனித குலத்துக்கு நல்லதுதான் செய்தார். அடுத்த அரை  நூற்றாண்டில் பூமியின் உயிர்ச்சமநிலையை அழித்தமைக்கு அவர் பொறுப்பாக முடியுமா என்ன? இன்னொருபக்கம் மொத்த உலகப் போருக்கும் பொறுப்பை பேசாமல் கடவுளின் அல்லது விதியின் லீலை என்று போட்டு விட முடியுமா? மனிதன் பொறுப்பேற்க வேண்டாமா?

நடைமுறையில் ஐரோப்பாவில் சுதந்திர இச்சை இயக்கம் மிக நேர்நிலையான விளைவுகளை உருவாக்கியது. நிறுவன மதத்தில் இருந்தும் அதன் கருத்தியல் மூளைச்சலவையில் இருந்தும் மனிதர்களை வெளியே கொண்டு வந்தது. தனிமனிதன் தன் செயல்களுக்கும் தன் சமூகத்தின் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணமே ஜனநாயகத்தின் அடிப்படை. ஜனநாயகத்தின் அனைத்து விழுமியங்களும் அங்கிருந்து உருவாயின. எங்கே தனிமனிதன் இருக்கிறானோ அங்குதான் ஜனநாயகம் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஜனநாயக விழுமியங்கள் அனைத்துக்குமே சுதந்திர இச்சை இயக்கமே தொடக்கப் புள்ளி எனலாம். மனிதர்கள் நடுவே அது சமத்துவத்தை உருவாக்கியது. பொது நீதிக்காக கோரியது. தனிமனித உரிமைகளுக்காக வாதாடியது. அந்தரங்கத் தன்மையை அடிப்படை உரிமை என்றது. ‘மனிதன் சுதந்திரமானவனாகவே பிறக்கிறான்’ என்ற சொல்லாட்சியில் உள்ள அறைகூவல் சாதாரணமானதல்ல. அது பூமியையே உலுக்கிய ஒரு கருத்து என்றால் மிகையல்ல.

ஐரோப்பாவில் உருவான நவீன நாத்திக சிந்தனை சுதந்திர இச்சை இயக்கத்தின் ஒரு விளைவு. இங்கிலாந்திலும் ஃப்ரான்ஸிலும் அதன் தொடக்கம் அமைந்தது. ’ஐரோப்பிய அறிவொளிக் காலம்’ என்று வரலாற்றாசிரியர்களால் அது அழைக்கப் படுகிறது. மத மேலாதிக்கத்துக்கு எதிராக சுதந்திர தனிமனிதனை உருவாக்கும் சிந்தனை அலை என அதை வரையறை செய்யலாம். மனித வாழ்க்கையை கடவுளின் கைகளில் அல்லது விதியின் கைகளில் விட்டு விடுவதற்கு மறுத்தது அது. மனிதன் என்பவன் அவனுடைய சிந்தனைகளாலும் அவனுடைய தெரிவுகளாலும் உருவாகும் ஆளுமை என்று வகுத்தது. டெனிஸ் திதரோ, தாமஸ் ஹோப்ஸ், வால்ட்டேர் ரூஸோ போன்றவர்கள் அதன் முகங்கள்.

அறிவொளிக் காலம் இரு மாபெரும் அரசியல் புரட்சிகளுக்கு களம் அமைத்தது. அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பிரெஞ்சுப் புரட்சி அறிவொளிக் காலத்தின் மையக் கருத்துக்களை உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. காலனியாதிக்கம் மூலம் உலகமெங்கும் ஒரேவகையான கல்வியும் செய்தித் தொடர்பும் உருவாக்கப் பட்டிருந்தமையால் அந்தக் கருத்துப் பரவல் மிக விரைவாக நிகழ்ந்தது.மதத்தில் இருந்து அறத்தை பிரித்ததே ஒட்டு மொத்தமாக அறிவொளிக் காலத்தின் சாதனை எனலாம்.

அந்த புரட்சிகள் உருவாக்கிய விவாதங்கள் மூலம் உருவானது ஐரோப்பிய பகுத்தறிவுக்காலம் [Age of Rationalism] அல்லது கரணியக் காலகட்டம். [Age Of Reason] லுட்விக் ஃபாயர்பாக் [ Ludwig Feuerbach] ஆர்தர் ஷோபனோவர் [ Arthur Schopenhauer ] நீட்ஷே [ Friedrich Nietzsche ] போன்றவர்கள் அதை உருவாக்கினார்கள். அதன் வளர்ச்சிப்

போக்கின் மார்க்ஸியம் உருவாகியது. தனிமனிதமைய நோக்கு அதன் எதிர் உச்சநிலையில் இருத்தலியத்தை உருவாக்கியது. அதன் நேர் உச்சநிலையில் அமெரிக்க நடைமுறைவாதத்தை உருவாக்கியது. [Pragmaticism]

ஐரோப்பிய அறிவொளிக்காலம், பகுத்தறிவுக்காலம் இரண்டுக்குமே அவர்களின் கிரேக்க தொல்மரபே விதைக்களமாக இருந்தது என்றால் மிகையல்ல. கிரேக்க சிந்தனையின் மாபெரும் தொடக்கப்புள்ளியான சாக்ரட்டீஸ் கடவுள்கள் மனிதனை முழுமையாக கட்டுப்படுத்துகின்றன என்ற கூற்றை எதிர்த்து கொல்லப்பட்டவர். கிரேக்க மரபில் பொருள்முதல்வாதம் அல்லது ஜடவாதம் வலுவான கருத்துநிலையாக இருந்தது. எபிகுரஸின் [Epicurus] அணுவாதம் யூகிமிரஸின் [Euhemerus] பொருள்மையவாதம் போன்றவை செல்வாக்கான சிந்தனைகளாக இருந்தன. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பதே கிரேக்கமரபை மறுகண்டுபிடிப்பு செய்வதாகத்தான் இருந்தது

 

இந்தியப்பரிணாமம்

தமிழகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர் திரு வி கல்யாணசுந்தரனார். சைவசித்தாந்தச் சொற்பொழிவாளர். சைவ இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். பின்னர் வள்ளலாரின் அருவ இறைவழிபாட்டை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐயத்திற்கிடமில்லாமல் ஆத்திகர்

1926 ல் சென்னை முத்தியால்பேட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திருவிக அன்று காங்கிரஸை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியிருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கரை பாராட்டி அவரை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அன்றைய சூழலில் அந்த உரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமான ஒரு நிகழ்வு, ஆனால் அத்தகைய நிகழ்வு இந்தியச்சூழலில் தொடர்ந்து பல இடங்களில் நடந்தது. காரணம் இங்கே நிகழ்ந்த ஒரு கருத்தியல்பரிணாமம்தான். நான் முதலில் கூறிய நிகழ்வை , தன் ஆன்மீகத் தொடக்கப்புள்ளி ஈவெராவே என ஒருவர் சொன்னதை, இங்கே இணைத்துப்பார்க்கலாம்.

சமீபத்தில் நான் சில வங்க, தமிழ், கன்னட எழுத்தாளர்களை வாசித்தபோது ஒன்றைக் கவனித்தேன். இவர்களனைவரிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரிட்டிஷ் இலக்கியங்களின் கருக்கள் கையாளப்பட்டிருந்தன. மௌனியின் பலகதைகள், புதுமைப்பித்தனின் பல கதைகள் கூல்ரிட்ஜ் போன்றவர்களின் கவிதைகளை ஒட்டியவை. ஏனென்றால் அன்றைய கவிப்பாடத்திட்டத்தில் அவை இருந்தன. இந்திய நவ இலக்கியத்தில் பிரிட்டிஷ் பாடத்திட்டத்தின் செல்வாக்கு மிக வீச்சுள்ள ஒன்றாகும்

இங்கே பிரிட்டிஷ் கல்வி அதிகமும் பாதிரியார்களால் அளிக்கபப்ட்டமையால் ஐரோப்பிய அறிவொளிக்கால, பகுத்தரிவுக்கால தத்துவங்கள் கற்பிக்கப்படவில்லை. ஆகவே பகுத்தறிவுக்காலகட்டம் இந்தியாபோன்ற கீழைநாடுகளில் மூலச்சிந்தனையாளர்கள் வழியாக வந்து சேரவில்லை. மாறாக அன்று கல்லூரிப்பாடங்களில் இருந்த ஷெல்லி,கீட்ஸ்,வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிஞர்கள் மற்றும் பெர்னாட் ஷா போன்ற இலக்கியவாதிகளின் வழியாகவே வந்து சேர்ந்தது. இங்கிருந்த படித்த நடுத்தரவர்க்கம் அதனால் கவரப்பட்டது.

ஐரோப்பியக் கல்வி அதிகம் கிடைத்த வங்காளம் இதில் முன்னணியில் இருந்தது. அதன்பின்னரே அது விசை அரசியலில் செயல்பட ஆரம்பித்தது. பின்னர் இலக்கியத்தில் கலைகளில். இந்தபாதிப்பில் இந்தியா முழுக்க ஒரு தர்க்கம் செயல்படுவதைக் காணலாம். அதாவது மேற்கத்திய அறிவொளிக்காலம் முதலில் மதச்சீர்திருத்தக் கருத்துக்களாகவே இங்கே வெளிப்பாடு கொண்டது .ராஜாராம் மோகன் ராய் ,விவேகானந்தர் என முன்னோடிகளில் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டுக்காலம் அந்த வேகம் நீடித்தது.

ஐரோப்பாவில் இக்கருத்துக்களில் ஒரு பரிணாம வளர்ச்சிப்பாதையை கண்டோம். முதலில் அறிவொளிக்காலகட்டம். பின்னர் பகுத்தறிவுக்காலகட்டம். அதன் சாராம்சமாக தனிமனிதன் என்ற கருத்து. தனிமனித அகவிடுதலைக்கான அறைகூவல். அதேதான் இங்கும் நிகழ்ந்தது. ஐரோப்பிய அறிவொளிக்கால கருத்துக்கள் இங்குள்ள மதசிந்தனைகளிலேயே முதலில் எதிரொலித்தன. பிரமம்ஞானசங்கத்தின் பாடல்களை இப்போது பார்க்கையில் அவற்றை ஷெல்லியும் கீட்ஸும் எழுதியிருக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அந்த சீர்திருத்த அலை இங்கே ஏற்கனவே இருந்த தனிமனித ஆன்மீகத்தைக் கண்டடைந்தது. மதச்சீர்திருத்தத்துக்காக எழும் மதசிந்தனையாளர்கள் தங்கள் மதத்தில் உள்ள முற்போக்கானதும் சமகாலத்தின் தேவைக்கேற்ப விரித்துக்கொள்ளக்கூடியதுமான சிந்தனைகளை முதலில் கண்டெடுப்பார்கள். அவ்வாறுதான் இந்திய ஞானமரபில் இருந்து அத்வைதமும் பௌத்தமும் கண்டெடுக்கப்பட்டது. விவேகானந்தர் முதல் நாராயணகுரு சகஜானந்தர் வரை உதாரணமாகக் காட்டலாம்.

தமிழிலும் அந்த பாதிப்பு அதே வகையில் நிகழ்ந்தது. ஐரோப்பிய அறிவொளிக்காலச் சிந்தனைகளின் பாதிப்பை நாம் காண்பது வடலூர் ராமலிங்க வள்ளலாரில். அவரது இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் மதச்சீர்திருத்த இயக்கங்களின் வரிசையில் வைக்கலாம். வள்ளலாரில் இருந்த ஐரோப்பிய அறிவொளிக்கால பாதிப்புகளைப்பற்றி இன்னமும் விரிவாக ஆராயபப்டவில்லை.

மதச்சீர்திருத்ததில் இருந்து சமூகசீர்திருத்த நோக்கம் உருவாகிறது. அங்கிருந்து அரசியல் நோக்கங்கள். தமிழகத்தில் பாரதி, அ.மாதவையா, ராஜம் அய்யர் , வ.வெ.சு.அய்யர் போன்றவர்கள். மதச்சீர்திருத்த நோக்கமும் கொண்டவர்கள். ஆனால் சமூகசீர்திருத்தம் அரசியல் இலக்கியம் போன்றவற்றை முதல்நோக்கமாகக் கொண்டார்கள்.

அதன் அடுத்தகட்டமாக திருவிக, சிங்காரவேலர் போன்ற அரசியல்நோக்குள்ள சிந்தனையாளர்கள் உருவானார்கள். நாத்திகச் சிந்தனையாளர்கள் அதைத்தொடர்ந்து உருவானார்கள். ஆனால் இவர்களில் மிகச்சிலரே அறிவொளிக்கால மூல ஆசிரியர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ப.ராமசாமி மற்றும் சாமிநாத சர்மா. தமிழைப்பொறுத்தவரை ஃபாயர்பாக் அல்லது நீட்சே பெயரைச் சொன்ன முன்னோடிகள் வேறு யாருமிருப்பதாக தெரியவில்லை.

ஐரோப்பிய பகுத்தறிவுவாதத்தின் தத்துவப்பின்புலம் தமிழ்நாட்டில் பொருட்படுத்தப்படவில்லை. அதன் மத எதிர்ப்பு அரசியல் உடனடியாக இங்கே கொண்டுவரப்பட்டது. ஆகவேதான் பிற எந்த சிந்தனையாளரை விடவும் கிறித்தவ எதிர்ப்பாளரான இங்கர்சால் [Robert G. Ingersoll] தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்பட்டார். பெர்நாட் ஷா[ George Bernard Shaw ]அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டார். இன்றுகூட தமிழ்நாட்டில் ஒர் உயர்நிலைப்பள்ளி மாணவருக்குக் கூட தெரிந்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் இவர்களே. சி.என்.அண்ணாத்துரை இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்நாட் ஷா என அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்டார்.

கிட்டத்தட்ட இதே வரைபடத்தை கேரளத்திற்கும் கொடுக்கலாமென தோன்றுகிறது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் கேரளத்தில் மதச்சீர்திருத்த எழுச்சி உருவானது. சட்டம்பி சுவாமிகள், வாக்படானந்த சுவாமிகள் நாராயணகுரு போன்ற பலருடைய கருத்தியல்செல்வாக்கு நிகழ்ந்தது. இவர்கள் அனைவருமே ஆத்திகர்கள். பெரும்பாலும் அத்வைதிகள். இவர்களின் சிந்தனைகள் சீராக நாத்திக-பொருள்முதல்வாத சிந்தனைகளுக்கு வழியமைத்தன என்பது வரலாற்றின் முரணியக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

மதச்சீர்திருத்த முன்னோடிகள் அவற்றை தத்துவக்கருவியாகக் கொண்டு மதச்சீர்திருத்தத்தை ஆரம்பிப்பார்கள். அது சமூகசீர்திருத்தத்துக்கும் அதன்வழி அரசியல்மாற்றத்துக்கும் வழியமைக்கும். அந்தப்பாதையில் இயல்பாக ஐரோப்பிய நாத்திக சிந்தனைகளும் புரட்சி சிந்தனைகளும் வந்து சேர்கின்றன. இதுவே வழக்கமாக இந்தியச்சூழலில் நிகழும் பரிணாமமாகும். இந்தச்சிந்தனையை ஒரு பாம்பாகக் கொண்டால் அதன் தலை தூய ஆன்மீகநோக்கு. அதனடிபப்டையிலான மதச்சீர்திருத்தம். வால் தூய நாத்திகம், முழுமையான மத எதிர்ப்பு. இந்த விசித்திரமான முரணியக்கத்தை நோக்கியே நான் இங்கே கவனத்தை ஈர்க்கிறேன்

ஆகவேதான் சுவாமி விவேகானந்தரை இந்தியாவின் மறுமலர்ச்சியின் முன்னோடி என இடதுசாரிகள் உட்பட அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள். இந்திய நாத்திக சிந்தனைகளையும் புரட்சி சிந்தனைகளையும்கூட அவரிடமிருந்து தொடங்கியவை என்று யோசிக்க முடியும்.

நாராயணகுருவின் இயக்கமும் ஐரோப்பிய அறிவொளி இயக்கத்தின் பாதிப்பு கொண்டதுதான். டாக்டர் பல்பு ஐரோப்பியக் கல்வி கற்றவர். அவரிடம் ஐரோப்பிய பகுத்தறிவுவாதம் பெரும்செல்வாக்கைச் செலுத்தியது என்பதை நடராஜகுருவின் சுயசரிதையில் இருந்து அறிகிறோம். டாக்டர் பல்பு நாராயணகுருவிடம் கண்டது ஆன்மீகத்தை அல்ல. நாராயணகுருவின் அத்வைதத்தில் இருந்த புரட்சிகரத்தைத்தான். மானுட சமத்துவத்துக்கான ஒரு அறைகூவல் அதிலிருப்பதை அவர் கண்டார். அதை முன்னெடுத்தார். விளைவுதான் நாராயண இயக்கம். ஆகவே கேரள நாத்திகர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் நாராயணகுரு ஏற்புடையவர்.

இக்காரணத்தால்தான் தமிழகத்தின் நாத்திகர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ராமலிங்கவள்ளலார் ஏற்புடையவராக இருக்கிறார். ஈவெராவுக்கு வள்ளலார் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. திராவிட இயக்கம் அதன் உச்சநிலையில்கூட வள்ளலாரை ஏற்கும் பலரை தன்னுள்கொண்டதாகவே இருந்தது

[ மேலும்]

முந்தைய கட்டுரைகடிதம்
அடுத்த கட்டுரைசுஜாதா நாடகங்கள்