’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 1

அணிமுகப்பு

எழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம் எழுக! எழுந்தெழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம்! அம்மா, பன்னிரு படைக்களம். பன்னிரு படைக்களம் தாயே! மாகாளி, கருங்காளி, தீக்காளி, கொடுங்காளி, பெருங்காளியே! உருநீலி, கருநீலி, விரிநீலி, எரிநீலி, திரிசூலியே! காளி, கூளி, கங்காளி, செங்காலி முடிப்பீலியே! எழுக, பன்னிரு பெருங்களத்தில் எழுக! எழுக, பன்னிரு குருதிக்குடங்களில் எழுக! எழுக பன்னிரு கொலைவிழிகள்! எழுக பன்னிரு பெருங்கைகள்! எழுக பன்னிரு தடமுலைகள்! எழுந்தெழுக பன்னிரு கழல்கால்கள்! எழுக அன்னையே! எழுக முதற்சுடரே! எழுக  முற்றிருளே! எழுக அன்னையே, எழுந்தெரிக இக்களத்தில்! நின்றாடுக இவ்வெரிகுளத்தில்! எழுக பன்னிரு படைக்களம்! படைக்களமாகி எழுக அன்னையே!

ஐந்து ஆறுமுகம் கொண்ட அன்னை நீ.  நீ துர்க்கை. நீ லட்சுமி. நீ சரஸ்வதி. நீ  சாவித்ரி. நீ ராதை. இன்மையென்றிருந்து இருப்பென்றாகி இவையனைத்துமென இங்கெழுந்து  ஆறாகப்பிளந்து எழுந்த அலகிலி நீ. கங்கையே,  துளசியே, மானசையே, தேவசேனையே, மங்களசண்டிகையே, பூமியே! நீ அணுகருமை. நீ அப்பாலப்பாலப்பாலென்று அகலும் அண்மை.  அன்னையே, உடைந்து உடைந்து பெருகும் உருப்பெருவெளி நீ.

அன்னையே, ஸ்வாகை, தட்சிணை, தீக்‌ஷை,  ஸ்வாதை, ஸ்வஸ்தி என்றெழுக!  புஷ்டி, துஷ்டி, ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி ஆகி எழுக!  வருக, கொலைக்காளி! குருதிநாக் கூளி! பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி,  மேதா என்றாகி நிற்க! இல்லிதிறந்த எரிகுளமே. இற்றிறுந்து மாயை அடங்கும் மடிப்பே. எழுந்தெழுந்து இவையனைத்தும் தோன்றும் வெடிப்பே.  திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்தியை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை என்றெழுக! ஆக்கி நிறைப்பவளே, அனைத்தும் உண்டு எழுபவளே, ஆடுக நின்றாடுக! நீ தழல். நீ நீர். நீ நாகம். நீ நெளிவு. நீ நாக்கு. நீ நஞ்சு. நீ சொல். நீ பொருள். நீயே இன்மை.  தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா,  பக்தி என எழுந்த துளிகடல் நீ.  இங்கமர்க! இப்பன்னிரு படைக்களத்தில் அமர்க!

பன்னிருபடைக்களத்தில் உருளும் பகடை நான். பன்னிருமுறை புரள்கிறேன். பன்னிரு முகம் பூண்டு அவிழ்கிறேன். பன்னிருமுறை இறந்து எழுகிறேன். பன்னிரு ஆதித்யர்களின் விடியல். தேவி, பன்னிரு ஆதித்யர்களின் அந்தி. தேவதேவி, பன்னிரு ஆதித்யர்களின் இரவு. குன்றா ஒளியே. குறையாக் கதிரே. கருநிற வருணன் மணியொளிவிடும் வானம். இது முட்டத்தலையெடுக்கும்  ஆடு என நீ. தேவி, உன் புன்னகை என சூரியன் எரியும் வானம். இதில் நீ திமிலெழுந்த காளை.  குருதிமழை என சகஸ்ராம்சு எரியும் வானம்.  அன்னை, அது நீ உன்னை புணரும் இணை.  தேவி, பொன்னிற தாதா. விழிபடைக்கும் வானம். நாற்றிசையும் கால் நீண்டு திசையழிந்த பெருநண்டு நீ.  தேவி, கலங்கி எழுந்து தபனன் மிளிரும் வானம்.  முகிலனலென சிம்மம் உறுமும் வெளி. தூயவளே,  இன்மையெனத் தெளிந்து சவிதா புன்னகைக்கும் வானம்.  அது உன் கன்னியெழில்.

இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. காளி, கன்னங்கருங்காளி, செம்பழுப்பு நிற கபஸ்தியின் கதிர்விரிக்கும் வானம். அது நீ நடுமுள்ளென நின்றாடும் துலா. ஒளிக்கதிர் சவுக்குகள் ஏந்திய ரவி அதிரும் வானம். தேவி, நீ நின்ற வானமோ ஒளிர்மஞ்சள். நீ சொடுக்கி வாலெழுந்த சீறும் கருந்தேள். பச்சைநிறப் பேரொளி கொண்டவன் யார்? பர்ஜன்யன் என்கின்றனர் அவனை. நீயோ அவன் முன் விரிந்த வில். பாலொளி பெருகிய திருஷ்டா உன் முடிமணி. நீ ஆழமறிந்த அன்னைப்பெருமீன். புகைமூடிப்பொலியும் மித்ரனின் வானில் நீ ஓர் அமுதகலம். நீலப்பெருக்கென எழுந்த விஷ்ணுவின் ஒளிவிரிவில்  நீ ஒரு மூடா விழி. அன்னையே, பன்னிரு களங்களில் நிறைந்தவளே. அமுதமாகி எழுக!

1

இங்கென்றும் இவையென்றும் இனியென்றும் இருந்தவளே. தங்காத தழல்பெருக்கே. என்றென்றும் ஏதென்றும் நன்றென்றும் அன்றென்றும் கடந்தவளே. தணியாத பெருங்கடலே. இதுவென்று தொட்டு, ஈதென்று அறிந்து, அதுவென்று சுட்டி, அவையென்று கொண்டு, ஆதலென்றமைந்து, அல்லவென்று கடந்து, ஆமென்று உணரும் அளப்பரிதே. ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம்.  பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக! ஓம் அவ்வாறே ஆகுக!

முந்தைய கட்டுரைதினமலர் – 6:ஏன் கத்துகிறார்கள்? கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5