மணி-3

 

 

3மணியை கதாநாயகனாக வைத்து ஒரு சினிமா எடுக்க லோகி எண்ணியிருந்தார். பெரெச்சன் என்பது அதன் பெயர். காணாமல்போன எருமையைத்தேடி ஒரு கிராமத்திற்கு வரும் பெரெச்சன் என்னும் அயலவனின் கதை. அவன் ஒருவகை ஞானி. ஒருவகை மூடன். மணி அதைநடிக்க மிகவும் விரும்பினார். கஸ்தூரிமானுக்குப்பின் லோகி பொருளியல் சிக்கலில் இருந்தபோது இலவசமாக நடிக்கவும் முன்வந்தார். அன்று அவரது இடம் உச்சத்தில் இருந்தது. ஆனால் லோகி அவர் செய்தவற்றுக்கு மறுஉதவியாக அதைப்பெற தயங்கினார். ”அவன் என் தம்பி.. அப்படி அவனை நினைக்கும் இடத்தில்தான் நான் என்றும் இருக்கவேண்டும்” என்றார்.

லோகியின் இறுதிச்சடங்கன்று மணியை பார்த்தேன். என் கைகளைப்பற்றிக்கொண்டு அழுதார். நான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன். சிலநாட்களில் ஹனீஃபாக்கா மறைந்தார். முரளி மறைந்தார். மணியிடம் அப்போதெல்லாம் ஃபோனில் பேசியிருக்கிறேன். மணி நேரடியாகவே துக்கத்தைக் காட்டி தேம்பி அழக்கூடியவர். அழுததுமே கேலியும் கிண்டலுமாக மாறிவிடுவார்

மணிக்கு உடல்நலமில்லாதிருந்த செய்தி எனக்குத்தெரியாது. அனந்தஃபத்ரம் என்னும் சினிமாவில் அவர் நடிக்கையில் கடைசியாக பார்த்தேன். பீமன் போல இருந்தார். ஓரிரு சொற்கள் பேசினோம். அதன்பின் நான் பார்த்தது பாபநாசம் படப்பிடிப்பில்

மணி மெலிந்து சோர்ந்திருந்தார். “என்னாயிற்று?” என்றேன். ‘கரள் பழுத்துபோயி சேட்டா” என்றார். ஈரல் கெட்டுவிட்டது. சிறுநீரகமும் பழுதடைந்திருந்தது. மருத்துவ ஆலோசனையின்படி குடிப்பதை விட்டுவிட்டதாகவும், கடுமையான உணவுக்கட்டுப்பாடு என்றும் சொன்னார். நான் அதன்பின் அதைப்பற்றிக் கேட்கவிரும்பவில்லை.

4

லோகி, மணி இருவருக்குமே இளமையின் வறுமை சில வகையான ஆளுமைச்சிக்கல்களை உருவாக்கியிருந்தது. அவர்களுக்கு உணவுமேல் உள்ள பற்றுதான் அது. எப்போதும் நல்ல உணவுபற்றிய நினைப்பு இருக்கும். ஓட்டல்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். மணிக்குக் கூடுதலாகக் குடி. அவரது பின்னணியில் குடியைக் கட்டுப்படுத்தும் அம்சம் கையிலிருக்கும் பணம்தான். கையில் அளவில்லாது பணமிருக்கையில் குடியும் அளவில்லாது செல்கிறது

 

ஆகவே லோகிக்கும் மணிக்கும் ஒருவரை உபசரிப்பது, அன்புகாட்டுவது என்றால் சாப்பாடு வாங்கித்தருவதுதான். என்னை அவர்கள் விதவிதமான சாப்பாட்டுநிலையங்களுக்கு அழைத்துச்சென்று ‘உண்ணீர் உண்ணீர்’ என ஊட்டியிருக்கிறார்கள். ஹனீஃபாக்கா உண்மையிலேயே மாமிசத்தின் அரியபகுதிகளை கையால் பிய்த்து எனக்கு ஊட்டிவிட்டிருக்கிறார். அவர்கள் இன்றில்லை என்னும் கணம் அந்த உணவின் உப்பை என் உடலெங்கும் உணரமுடிகிறது

1

காரில் செல்லும்போது முழுக்கச் சாப்பிட்டுவிட்டால்கூட லோகியும் மணியும் இன்னொரு நல்ல ஓட்டலைக் கண்டால் இறங்கிச்சென்று மீண்டும் சாப்பிடத் தயங்கமாட்டார்கள். எர்ணாகுளம் திருவனந்தபுரம் சாலையில் உள்ள சிறிய உணவகங்களுக்குக்கூட அவர்களைத் தெரியும். “கையை வாயில் விட்டு உள்ளே போனதை வெளியே எடுத்துவிட்டு மீண்டும் சாப்பிடலாம். செக்ஸில் மட்டும் அது நடக்காது. வெளியே போனதை திரும்ப உள்ளே எடுக்கமுடியாது” உண்மையான சோகத்துடன் மணி சொன்னார். நான் சிரிப்பதா அழுவதா என்று வானத்தைப்பார்த்தேன்.

 

இன்று யோசிக்கையில் லோகி, மணி இருவருமே அவர்களின் களங்கமின்மைக்குக் களப்பலி ஆனவர்கள் என நினைக்கிறேன். சிறுவர்களுக்குரிய திறந்த, உற்சாகமான உள்ளம் கொண்டவர்கள். சிறுவர்களைப்போலவே கட்டற்றவர்கள். சிறுவர்களுக்குரிய முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுகியவர்கள். இவ்வுலகின் வஞ்சங்கள், குழிகள், இடுக்குள் ஒன்றும் அவர்களுக்குத்தெரியாது. நினைத்ததைச் சொல்வார்கள். உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துவார்கள். அவை எப்படி விளக்கப்படும் என்று அவர்களுக்கு எவ்வகையிலும் கணக்கு இருக்காது. அதன் விளைவான பகைமைகள் கூட ஏன் என்று அவர்களுக்குப்புரியாது.

1

உதாரணமாக வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் சினிமாவுக்காக மணி மத்திய அரசின் விருதுக்கு போட்டியில் இருந்தார். மோகன்லாலுக்கு அவ்விருது கிடைத்தது. அவர் மிகச்சிறப்பாக நடித்த வானப்பிரஸ்தம் அதற்கு முற்றிலும் தகுதியானது. விருதை எதிர்பார்த்திருந்த மணி மனமுடைந்தார். அவரிடம் பலர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது என்றே சொல்லியிருந்தனர். உண்மையில் ஜூரி குறிப்பு மட்டுமே கிடைத்தது.

 

மணி மயங்கி விழுந்தார். ஊடகங்களிடம் தேசியவிருதையும் மோகன்லாலையும் கண்டபடி வசைபாடி பேட்டி அளித்தார். அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தின. ஆனால் மோகன்லால் அமைதிகாத்தார். பின்னர் “நல்லபடத்தின் நல்ல நடிப்பு, வணிகபடத்தின் நல்ல நடிப்பு இரண்டும் வேறு. தேசியவிருதுக்கு அந்தப்படம் கலைப்படமா என்பதும் கணக்கில்கொள்ளப்படும். வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் படத்தில் மணி சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அந்தப்படம் சாதாரண வணிகப்படம்” என விளக்கம் அளித்தார்

 

“மணி எளிமையான கலைஞன். அவனை நானே நேரில் சென்று சமாதானம் செய்து விளக்குகிறேன்” என்றார் மோகன்லால். அப்படியே செய்தார். பல மோகன்லால் படங்களில் மணி நடித்திருக்கிறார் அதன்பின். அவரது ஆளுமை அனைவருக்கும் தெரிந்திருந்தது.

 

மணி சமீபகாலமாகச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். போலீஸாரிடமும் கஸ்டம்ஸ்காரர்களிடமும் வனத்துறையினரிடமும் சண்டைபோட்டார் என்பது குற்றச்சாட்டு. சட்டவிரோதமாக எதையும் செய்யக்கூடியவர் அல்ல. ஆனால் எதையும் உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவரும் அல்ல. அநீதி அல்லது அவமரியாதை என்று அவருக்குத் தோன்றுவதற்கு எதிராகச் சீறி எழுந்துவிடுவார்

 

சிலமாதங்களுக்கு முன் வந்த ஒரு பேட்டியில் மணி சொல்கிறார். “என்னை சண்டைக்காரன் என்கிறார்கள். கெட்டவன் என்கிறார்கள். ஒருநாள் வரும். நான் செத்துக்கிடப்பேன். எல்லாரும் அய்யயோ மணியா? நல்ல மனுஷனாச்சே, என்ன செய்ய, எல்லாம் விதி என்பார்கள்”. அவர் சொன்ன அவ்வரிகளை இப்போது யூடியூபில் பார்க்கையில் ஒருவகையான பதற்றம் ஏற்படுகிறது.

 

மணியின் இறப்பில் மர்மங்கள் இருப்பதாக செய்தியூடகங்கள் சொல்கின்றன. அவரது உடலில் இருந்து எரிசாராயத்தின் மாதிரிகளை எடுத்திருக்கிறார்கள். விஷமரணம் என ஐயம் கொண்டு போலீஸ் விசாரணைசெய்துவருகிறது என்று ஊடகங்கள் சொல்கின்றன.

 
லோகிக்கு மட்டனும் மணிக்குக் குடியும் எதிரிகளாக எழுந்துவந்து உயிர்குடித்தன. அவர்கள் வாழ்நாள் முழுக்க ஆராதித்த தெய்வங்கள் அவை. உபாசனா தெய்வங்கள் அப்படித்தான் நடந்துகொள்ளும் என நினைத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே அன்றைய மட்டனை வாங்க காரில் செல்லும் லோகியின் பரவசத்தை நினைத்துக்கொள்கிறேன். நாலைந்து லார்ஜுக்குப்பின் சட்டையில்லாமல் அமர்ந்து ‘ஞானும் என்றளியனும் வீட்டுவரம்பே போகும்போள் வீட்டு வரம்பத்தொரு சேனத்தண்டன்” என்று கைதட்டி உச்சகட்ட விரைவில் பாடும் மணியின் முகம் நினைவுக்கு வருகிறது. தனிமையும் துயரும் என்னைச்சூழ்கின்றன

 

சிரிப்பால்தான் இதைக் கடந்துசெல்லவேண்டும். மணியின் அத்தனை ‘ஆபாச’ நகைச்சுவைகளும் நினைவில் கொப்பளிக்கின்றன. செய்தியறிந்த அன்று ஈரோடு ரயில்நிலையத்தில் நண்பர்களுடன் நின்று அந்நகைச்சுவைகளைத்தான் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

 

 

மணி நாட்டுப்புறப்பாட்டுகள்

 

 

கல்பனா அக்காவும் கலாபவன் மணியும் -சுகா பதிவு

முந்தைய கட்டுரைபெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்
அடுத்த கட்டுரைகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…