வல்லவன் கை வில்

 

1

வர்த்தமான மகாவீரர் என்னும் சொல்லும் அதனுடன் இணைந்த ஓவியமும் என் சிற்றிளமையில் எழுப்பிய திகைப்பை நினைவுகூர்கிறேன். உடையையும் துறந்து தானன்றி பிறிதின்றி அமர்ந்திருந்த மானுட வடிவம். வெல்வதற்கு இவ்வுலகில் இலக்குகள் அற்றது. அடைவதற்கு வெற்றிகளும் அறியாதது. ‘இறுதிவெற்றி என்பது தன்னைக் கடத்தலே. அதை அடைந்தவனே முழுமையான வீரன். அருகர்களன்றி பிறர் வீரர்கள் அல்ல என்பதே சமணம் தெளிந்த உண்மை’ என பின்னர் அறிந்தேன்.

யுலிஸஸும் ஹெர்குலிஸும் வெறும் வீரர்கள் மட்டும் அல்ல. அவர்கள் வென்றது அவர்களின் எல்லைகளைத்தான். அவர்களின் ஆழுலகப்பயணங்கள் அனைத்துமே தங்களுக்குள் சென்றவைதான். அந்த எண்ணத்திலிருந்தே அர்ஜுனனின் பயணங்களைப்பற்றிய இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி,சித்ராங்கதை, சுபத்திரை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னை தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.

இது உண்மையான வீரத்தின் கதை. கொலைவில் ஏந்திய மாவீரன் தன் வீரத்தினூடாக தன்னுள் அமைந்துள்ள வன்மைமறுப்பாளனை கண்டடையும் தருணம். ஒவ்வொரு படிகளிலாக ஏறியும் சரிந்தும் மீண்டும் எழுந்தும் அவன் அங்கே சென்றடைகிறான். மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்துக் கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.

 

index

 

 

இந்நாவலை எழுதும்போது ஊக்கமூட்டிய பலர் உண்டு. தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதிவரும் பலவாசகர்களை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். கூரியநோக்கில் பிழைகளைக் கண்டடைந்து சொல்லும் வெ.சுரேஷ் அவர்களில் ஒருவர். அனைவருக்கும் நன்றி. இந்நூலை மெய்ப்புநோக்கிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களுக்கும் சீர்நோக்கிய ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி

ஒவ்வொருநாளும் அத்தியாயங்களை பிழைநோக்கிச் செம்மைசெய்து வலையேற்றும் ஸ்ரீனிவாசன்,சுதா இணையினருக்கு என்றும் நான் நன்றிகொண்டவன். பலபகுதிகளைத் தட்டச்சு செய்தும் பிழைநோக்கியும் மொழிச்செம்மைசெய்தும் உதவிய மீனாம்பிகைக்கும், இத்தொடரின் ஆக்கத்தில் பலவகையிலும் பங்களிப்பாற்றிவரும் கோவை நடராஜன் அவர்களுக்கும் நான் பெரிதும் கடன்பட்டவன்.

இளமையில் நான் சென்று சந்தித்த படிவர்களில் ஒருவர் சுவாமி சித்பவானந்தர். அவரது காலடியில் சிலநாட்களைக் கழிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. எளிய நேரடியான அவரது கீதையுரை என் வாழ்க்கையை வடிவமைத்தது. இந்நூலை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

 

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் காண்டீபம் நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை]

 

முந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9
அடுத்த கட்டுரைவெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்