தெய்வமிருகம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் அப்பாவைப்பற்றிய பதிவைப்படித்து மனம் நெகிழ்ந்தேன்.  மனித குலத்தின் மீது கருணை கொண்டுதான் இயற்கை பாசம் என்ற ஒன்றை படைத்திருக்கிறது. அந்த சக்தியின் உதவியால்தான் மனித இனம் பஞ்சங்களையும் போர்களையும் இயற்கையின் பலநூறு சீற்றங்களையும் வென்று இன்றுவரை வந்து சேர்ந்திருக்கிறது. பாசத்தை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒரு தூக்கணாங்குருவியால் அது கட்டும் கூட்டை புரிந்துகொள்ள முடியாது. அந்தக் கூட்டில் உள்ள நுட்பமான பொறியியல் அமைப்பு தூக்கணாங்குருவியின் மூளைக்கு அப்பாற்பட்டது. தூக்கணாங்குருவி இனம் வாழவேண்டும் என்று எண்ணிய இயற்கை அதற்கு அளித்த வரம் அது. சிறுகச் சிறுக கோடானுகோடி தூக்கணாங்குருவிகள் சேர்ந்து அதை உருவாக்கின. உங்கள் எழுத்து வல்லமை மிக்கது.

நான் எழுதும் முதல் கடிதம் இது. ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்

செல்வம் ராஜாராம்

**

அன்புள்ள ஜெயமோகன்

தெய்வமிருகம் அருமையான ஆக்கம். கு அழகிரிசாமி எழுதிய நூலிலா என்று நினைவில்லை, ஒரு சம்பவம். அழகிரிசாமி சின்ன வயசிலே ஒரு வண்டிச்சக்கரத்தில் ஏறி விளையாடும்போது விழுந்துவிடுகிறார். கை ஒடிந்து போய் ஊனமாகிவிடுகிறது. அதைப்பற்றி அவர் கிராஜநாராயணனண்டம் சொல்லும்போது ‘என் கை ஒடிந்ததனால் என்னை படிக்கப் போட்டார்கள். அதனால் எழுத்தாளன் ஆகி உன்னிடம் நீ என்று பேசுகிறேன். இல்லாவிட்டால் நான் உன் வீட்டில் கூலிக்கு ஏர் உழுதுகொண்டு இருந்திருப்பேன்’ என்று சொல்கிறார். விதி ஒவ்வொருவரையும் ஒரு இடத்துக்குக் கொண்டு போகிறது. நல்ல கட்டுரை ஜெயன்

சண்முகம்

 

**

அன்புள்ள ஜெ,

ஒரு புகைப்படத்தில் கண்ட காட்சி இது. காங்கோவிலே அகதிகள் முகாமை நோக்கி ஒரு பெண் குழந்தை இன்னொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்கிறது. இரு குழந்தைகளுமே மெலிந்து நடைபிணங்கள் போல கானப்பட்டன. பெரிய குழந்தையால் நடக்க முடியவில்லை. ஆனாலும் அது சின்னக் குழந்தையை விடாமல் தூக்கிக் கொண்டு சென்றது. அந்த மனநிலையைப்பற்றி யோசித்துக்கொண்டு ரொம்ப நேரம் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தேன். அந்த மனநிலையை உங்கள் கட்டுரையைப் படித்தபோது அடைந்தேன். நெகிழ்ச்சியான கட்டுரை. நன்றி.

ராகவ் ராம்

 

***

ஜெ,
 
கண்கள் கலங்கிவிட்டது இக்கட்டுரையின் இறுதிப்பகுதிகளைப் படிப்பதற்குள். எத்தனை பேரன்பு  அந்த மனிதனுக்குள் என்று தோன்றியது. அதில் கலப்படமேயில்லை.மேல் பூச்சுகளில்லை.அஜிதன் நல்ல மதிப்பெண் பெற்ற போது நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு அஜிதன் அதிர்ஷ்டமானவன் என்று நினைத்தேன். அவனை விடவும் இப்படி ஒரு தகப்பன் கிடைக்க நீங்கள்தான் எத்தனைக் கொடுத்து வைத்தவர்.
 
கட்டுரையின் இன்னொரு அம்சமாக,எத்தனை வளமார்ந்த மருத்துவ மரபு நம்முடையது, நம் தன்னம்பிக்கையின்மையின் காரணமாக அதனைத் தொலைத்துவிட்டோமே என்றும் தோன்றியது.
 
உங்கள் எழுத்தல்ல உங்களுக்கு இறைவன் அளித்த வரம். இந்த தகப்பன்தான்.
 
அன்புடன்,
மதி


***

 

அய்யா,
 
உங்கள் பதிவுகள் பல படித்திருந்தாலும், இதுவரை மறுமொழி இட்டதில்லை. 
 
உங்கள் மகனைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவை விட, உங்கள் “தெய்வ மிருகம்” படித்து மிக மிக அழுதேன்.  அது உண்மையிலேயே உங்கள் தந்தையைப் பற்றிய பதிவு என்ற எண்ணத்திலெழுதுகிறேன்.  உங்கள் உணர்வு நிலை, சமுதாய அமைப்பு என்ற பின்புலத்தில், நீங்கள் உங்கள் தந்தைமையை உங்கள் குழந்தைகளிடம் காட்டுகிறீர்கள்.  உங்கள் தந்தையின் பின்புலம் என்ன?  அவருக்குக் கிட்ட வேண்டிய அன்பு கிடைத்ததா?  இல்லை, உங்களுடைய “வால்” பதிவில் இட்டது போல், சிறுவர்களுக்கு நம் சமுதாயம் காட்டும் “அன்பைத்” தான் அவரும் பெற்றிருப்பாரோ?  He certainly seems like a good soul.  
 
அம்மாவின் அன்பு given.  அப்பாவுக்கு இன்றைக்கும் நம் சமுதாயத்தில் பலருக்கு ஒரு சங்கடம் கலந்த அன்பு தான்:-)  விமான நிலையத்தில் தன் அம்மாவை கட்டியணைத்து கண்கலங்கி வழியனுப்பிய என் கணவர், அப்பாவுக்கு முதுகிலும், புஜத்திலும் தட்டியனுப்பினார்!  என் தந்தையோ, ஆசாரம் மிகுந்த வழிவந்தவராயினும், எம் பதின்ம வயதுகளில் “வயிற்று வலி” வந்தால், தன் மடியில் என் தலையை வைத்து தலைதடவி மென்மையாக “இல்லம்மா, சரியாப் போயிடும்” என்னும் இனம்!  நான் வளர்ந்து என் மரியாதையையோ அன்பையோ காட்டாமல், எனக்கு நல்ல புத்தி வருவதற்குள் மறைந்து விட்டார்.  என் அழுகையின் காரணம் புரிந்திருக்கும்:-)
 
எதுவாயினும், உங்கள் “சரஸ்வதி கடாட்சம்” வெளிப்படை.  சம்பவங்களை எங்கே கோர்க்க வேண்டுமோ, அங்கே கோர்க்கிறீர்கள்.  அமெரிக்காவில் வசிக்கிறேன். ஊருக்கு வந்தால், உங்கள் புத்தகங்கள் கட்டாயம் வாங்குவேன்.  வாழ்த்துகள் & நன்றி.
 
கெ.பி. (காரணப்பெயர்; http://kekkepikkuni.blogspot.com).
**
ஐயா,

இன்னும் எத்தனை எத்தனை நல்லோரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்துப் பயன் அடைந்தீர்கள்? 
தலைப்பைப் பார்த்து ஆவலாகப்படித்தேன், எழுதியவர் யார் என்று பார்க்காமல். ஒரே மூச்சில் படித்த பின்பு, கண்கள் நனைந்த பின், உங்கள் பதிவு என்று உணர்ந்த பின், பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இது போல இன்னும் எத்தனை உயர்ந்த மனிதர்கள் , ஒரு அமர்க்களமும் இல்லாமல் சாதாரணமாக வாழ்க்கையில் நற்செயல்களைச் செய்து வருகிறார்கள். ‘எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு’!
தினசரி வாழ்க்கையில் உள்ள அவலங்கள் நம்மை தாக்கி வரும் இந்த நாளில், உங்கள் பதிவு மனம் நெகிழ வைக்கிறது. மனிதர்கள் மீது நம்பிக்கை துளிர்கிறது.
நன்றி.

வெற்றிமகள்

8888

சகோதரர் ஜெயமோகன் !தங்களின் உணர்வுக் களனாக கொதிக்கும் கட்டுரைகளான, “தெய்வ மிருகம்”  &  “வால்” படித்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். எனது கண்ணீரூடேதான் மங்கலாக இந்த கட்டுரையயைப் படிக்கிறேன். அன்பையன் வைத்தியர்  சொன்ன்னதுது போல “கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன்.

சரஸ்வதி கடாட்சம் உண்டு…”

மனித மனங்களை ஊடுருவி, அவர்களின் இதயம் மற்றும் ஆன்மா வரை தீண்டிச்செல்லும் உங்கள் எழுத்தும், எழுத்தாளுமையும் பிரமிக்கச்செய்கின்றது. 

 

தங்களது பேராக்கங்களுக்கு அடித்தளமாய் இருக்கப்பது இத்தகைய கட்டுரைகள்தான். 

வாழ்த்துக்கள் சார் !

 

பேரன்புடன்இரா.அனந்த்..
****

 

 

அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு முரளி,
 
நலம்.நலமறிய ஆவல்.தங்களுடைய புதிய பதிவு குறித்த நினைவூட்டலுக்கு முதலில் நன்றி. 24 இரவே தெய்வ மிருகம் கட்டுரையை படித்துவிட்டேன். முடித்தவுடன் கண்கள் குளமாகின. உங்கள் அப்பாவுக்கு உங்கள் மீதிருந்த நேரடியாக வெளிப்படுத்தாத அன்பை நீங்கள் புரிந்து கொண்டு இப்போது எழுத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை. தங்கள் கையை சரிப்படுத்திய வைத்தியர் அன்பையனுக்கும் பயிற்சிகள் மூலம் கையை பழைய நிலைக்கு கொண்டு வந்த உங்கள் தகப்பனாருக்கும் தமிழ் இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.
 
                                                                                                             முரளி

முந்தைய கட்டுரைவிளையாடல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடவல்லூர் அன்யோன்யம்