தியாகு நூல்நிலையம், ஜன்னல் இருமாத இதழ்

1

 

ஜெயமோகன் அய்யா அவர்களுக்கு,

நான் கோவை அருகே வசிப்பவன். கல்லூரிமாணவன். உங்கள் இணையப்பக்கத்தை தற்செயலாக வாசித்தேன். பாபநாசம் படம் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது வாசித்தேன். அத்தனை கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்று நிறையவிஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்தனைவிரிவான வாசிப்புக்கு இடமளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

நீங்கள் சொல்லும் புத்தகங்களை வாசிக்க ஆசை. நான் படிக்கும் கலைக்கல்லூரியிலே நூலகம் இருக்கிறது. ஆனால் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்கக் கொடுக்கமாட்டார்கள். புத்தகங்களை அடுக்கிவைத்திருப்பதில்லை. தேவையான புத்தகங்களும் இல்லை. ஒரே புத்தகங்களையே நிறைய வாங்கிவைத்திருப்பார்கள். மாணவர்களை உள்ளே விடமாட்டார்கள். அங்கே அதற்கென்று ஊழியர்களும் இல்லை. புத்தகங்களை காசுகொடுத்துவாங்குவதும் எனக்குக்கஷ்டடம். இருந்தாலும் தேடிவாசிக்கவேண்டும் என நினைக்கிறென். நான் ஐஏஎஸ் படிக்க ஆசைப்படும் மாணவன். அப்துல்கலாம் என்னுடைய ஆதர்சமாக உள்ளார்

நன்றி
ஜெயபாலன்

அன்புள்ள ஜெயபாலன்

நீங்கள் கோவையிலுள்ள தியாகு புத்தகநிலையத்திற்குச் செல்லலாம். என் நண்பர் தியாகராஜன் அதை நடத்துகிறார். கோவையிலிருப்பவர்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு. அனேகமாக எல்லா இலக்கியநூல்களும் அங்குள்ளன. அவ்வப்போது இலக்கியச்சந்திப்புகளையும் நிகழ்த்துகிறார்கள்.

[தியாகு நூலகம் வாடகைப்புத்தக நிலையம் ,

முகவரி :

32.கேப்டன் பழனிச்சாமி லேஅவுட் ,

தடாகம் ரோடு ,

ஆரெஸ் புரம் ,

கோவை -2

எண் – தியாகராஜன் – 9443395895  – 0422 2456 895

mail : [email protected]

web : http://www.thiagubookcentre.blogspot.com/ ] :

ஜெ

 

இனிய ஜெயம்,

பொதுவாக மருத்துவ மனைக்குள் அமைதி தேவைப்பட்டால் வளாகத்துக்குள் பொதுஜனம் தீண்டா எல்லையில் உறைந்திருக்கும் பிணவறை முன்பு அமைந்திருக்கும் கல் இருக்கைகளுக்கு சென்றுவிடுவேன். எப்போதும் போலீஸ் காவல். பெரும்பாலும் புதுவை கொலைகள் அங்கு பிரித்து தைக்கப்படும். பிணவறை முன்பிருக்கும் மரண ஆவணங்கள் வழங்கும் அலுவலகத்தை முதன் முறை பார்க்கும்போது சீரமைக்கப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்ட முன்னாள் பொதுக் கழிப்பிடம் போன்றே தோற்றமளித்தது.

நேற்று அங்கு ஒரு இளம் பெண்ணைக் கண்டேன். வடநாட்டு யுவதி. படிக்கும் கல்லூரி மாணவி .. உயர்சாதி.. காதலன் உடலைப் பெறுவதற்காக வந்தவள் என காவலர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. அதே கதை ஊழியில் பூமி போழ்ந்தாலும் மாறாத கதை. அந்த மொத்த வளாகத்தில் அவள் ஒருவள் மட்டுமே நின்றிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். அவள் அழைப்புக்கு சில பணியாளர்கள் வந்திருந்தினர். பொட்டலம் கட்டப்பட்ட அவளது காதலன் உடல் வெளியில் வந்தது. அவளைப் பார்த்தேன் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்.அனைத்து மேல் நடவடிக்கையும் அவள் மட்டுமே நின்று முடித்தாள். ஒரு துளி என்றால் ஒரு துளி கண்ணீர் இல்லை. அழைப்பு வர அங்கிருந்து வெளியேறினேன். மாலை மீண்டும் அங்கே வந்தேன் யாரும் இல்லை.அவளது காதலின் வெம்மை தகிக்கும் பாழின் கல்லிருக்கையில் அமர்ந்து , ஜன்னல் இதழை பிரித்தேன். [இப்போதெல்லாம் உங்கள் கதைகள் தலைப்பை வாசிப்பதை அகம் விட்டுவிட்டது ஏன் என்று புரியவில்லை] . ரவிக்குட்டிப் பிள்ளை கண்ணம்மாவின் காதல் கதை. [ஜன்னல் இதழில்]

என்ன சொல்ல? இந்த நொடி வரை உம்மினிக்குட்டி ஆற்றாது அழுத கண்ணீர் உள்ளுக்குள் சுடுகிறது. இபோது கண்ணம்மா. வாழ்வின் ஒரு கீற்று பதிவில் நாம் ஒரே ஒரு முறை இணைந்து மாலை உலா சென்ற வேளிமலை நோக்கு சாலை கண்டேன். சாலையில் எங்கோதான் ரவிக் குட்டிப் பிள்ளை நண்பர்கள் காதலி சகிதமாக உறைந்திருக்கிறான் எனும் நினைவு என்னென்னவோ செய்கிறது. நான் நடந்தலைந்த பார்வதி புரம் ஒரு காலத்தில் பஞ்சவன் காடு. அங்கு அணையாக் காதலும், தீரா வஞ்சமுமாக பேய்ச்சியாக கண்ணம்மா அலைந்திருக்கிறாள்.

எந்த உணர்சிகளும் அற்று தகவல்களை அடுக்கி ஒரு வரலாற்று தரவு போல சொல்லப்பட்ட கதை. ஆனால் வாசிக்க அத்தனை உணர்வெழுச்சி பொங்குகிறது. ரவிக்குட்டிப் பிள்ளையின் தலையை எதிரிகள் வசமிருந்து சேகரித்து வரும் நண்பன். பின்னர் ரவிக் குட்டி இல்லாத வாழ்வை சுமக்க இயலாமல் ஈட்டியை நட்டு அதில் பாய்ந்து இறக்கிறான். ரவியின் மற்றொரு நண்பன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறான். வாழ்வோ சாவோ அது உன்னோடு மட்டுமே என்றொரு நட்பு..பெரு வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறான் ரவிக் குட்டி. நண்பனின் அருகே அவனது குதிரையும் புதைக்கப் படுகிறது என்றொரு வரி வருகிறது. மேலதிக தகவல் ஏதும் இல்லை. வெறும் ஒற்றை வரி .அனைத்தையும் அடக்கிய ஒற்றை வரி. ராஜபுரத்தில் காயம்பட்ட சிவதரின் குதிரையை கர்ணன் மீட்டு செல்லும் காட்சி நினைவில் எழுந்தது.

அனைத்துக்கும் மேல் கண்ணம்மா போர்க் கலை அறிந்தவள். அவள் தற்கொலை செய்து கொள்ளும் முறை இனி என்றும் என் அகத்தில் கிடந்தது உறுத்திக் கொண்டே இருக்கும். வாளை உயரே தூக்கி வீசி,மண்ணிறங்கும் அதன் கூர் முனைக்கு மார்பு காட்டி, உடல் துளைக்கும் ஆயுதத்தால் உயிர் துறக்கிறாள் கண்ணம்மா. முன்பே கேள்விப் பட்ட தற்கொலை முறைதான் என்றாலும், காசியில் அருங்காட்சியகத்தில் நான் கண்ட வாட்கள் நினைவில் எழுந்து அந்த தற்கொலையின் தீவிரத்தை உணர்த்தியது. கண்ணம்மா போர்க் கலை அறிந்தவள். உயரத்திலிருந்து விழும் ஒரு கத்தி ஒரு உடலை துணிக்கும் என்றால்.அக் கத்தி என்ன எடை கொண்டிருக்கும்? அக்கத்தியை அந்த உயரம் தூக்கி வீச என்ன பலம் வேண்டும். அதன் கூர்மை மண்ணை நோக்கி இறங்க என்ன லாவகமாக வீச வேண்டும்? இதை செய்யும் வன்மை கொண்டவள் கண்ணம்மா. அவள்தான் பேயாக அலைந்து, வஞ்சத்தால் கொல்லப்பட்ட காதலனுக்காக அரச குடி மொத்தத்தையும் அழிக்கிறாள்.

உம்மினிக் குட்டி மார்த்தாண்ட வர்மாவையோ,, அம்பை பீஷ்மரையோ ஏன் கொல்லவில்லை? இது அவர்களால் உருவான வஞ்சம்தானே? ஆம் இத்தனை பெரிய வஞ்சமிருந்தும் அவர்களால் தனது காதலனை கொல்ல முடியாது. ஆகவேதான் அந்த மந்திரவாதி பேயாகத் திரியும் கண்ணம்மாவை ரவிக் குட்டி பெயர் ஒன்றை மட்டுமே உச்சரித்து அடக்குகிறான்.

ஒரு கணம் அந்த மந்திரவாதியாக மாறி நான் கண்ட காதலியை அவளது துணைவன் பெயரை ஓதிஓதி அந்த யுவதியை பொன்னாகப் பொலியவைக்க மனம் ஏங்கியது. இனி நான் கட்டையில் வேகும்போதும் இப்பொது என் நெஞ்சுக்குள் புதைந்துவிட்ட கண்ணம்மாவின் கதை வேகாது என நினைக்கிறேன்.

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு

நாட்டுப்புறக்கதைகளுக்கும் வரலாற்றுக்கும் நடுவே உள்ள ஓர் இடம் கண்ணம்மாவின் கதை. அத்தகைய பலகதைகளால் செறிந்தது எங்கள் ஊர்

குமரிமாவட்ட, நெல்லை தூத்துக்குடி மாவட்ட நாட்டாரியல் கதைகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆறுமுகப்பெருமாள் நாடார், நா.வானமாமலை, அ.கா.பெருமாள், திரிவிக்ரமன் தம்பி, ஆ.சிவசுப்ரமணியம் போன்றவர்களின் பங்களிப்புதான் காரணம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல், சென்னை
அடுத்த கட்டுரைஇந்துத்துவ முத்திரை