வளரும் வெறி

 

wahabism

சமஸ் வகாபியத்தைப்பற்றி எழுதிய இக்கட்டுரை தமிழ்ச்சூழலுக்கு மிகமிக முக்கியமான ஒன்று. சீராகவும் சமநிலையுடனும் ஒரு முக்கியமான பதிவைச் செய்திருக்கிறார்.

சமஸ் எழுதிய ஒரு கருத்துடன் பெரிதும் மாறுபடுகிறேன். தமிழக இஸ்லாமியர் பெரும்பாலும் வகாபியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சரியல்ல. சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் வஹாபிய அடிபப்டை கொண்ட தமுமுக, தௌஹீத் ஜமாத்,மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா போன்ற அமைப்புகள் வலுவாக தமிழக இஸ்லாமியரிடம் வேரூன்றி அவர்களே கிட்டத்தட்ட இஸ்லாமியரின் அரசியல்பிரதிநிதிகள் என்னும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, இதுவே இந்தியா முழுக்க உள்ளநிலை. ஒரேவகையான அமைப்புக்கள் இவை. மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகள் கொண்டவை. மையஒருங்கிணைப்பு கொண்டவை. மிகச்சிறப்பான நிதியாதாரம் கொண்டவை. விளைவாக மிதவாத இஸ்லாமிய அரசியல் என்பதே இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

கேரளத்தில் முஸ்லீம்லீக் போன்ற கட்சிகள் தீவிரமான மதவெறிநோக்குள்ளவை. ஆனால் அவை அதிகாரத்தில் உள்ளன, அந்த ஒரே காரணத்தாலேயே அவை படிப்படியாக இறங்கிவந்து சற்றுச் சமரசநோக்குடன் இருந்தன. முஸ்லீம்லீக்கின் கல்வியமைச்சர் ஒரு இந்துக்கல்விநிலையத்தில் நடக்கும் விழாவுக்கு வரமுடியாது என்று சொல்லமுடியாதல்லவா? ஆனால் சென்ற பத்தாண்டுகளில் அப்துல்நாசர் மதனி என்னும் பேரழிவுச்சக்தியால் உருவாக்கப்பட்ட வஹாபிய மதவெறி அவர்களையும் முழுமையான மதவெறியை நோக்கிச் செலுத்தியிருக்கிறது.

கல்வியறிவும் இடதுசாரி அரசியலும் மேலேங்கிய கேரளத்தில்தான் பாடத்திட்டத்திலுள்ள கேள்வியை வினாத்தாளில் கேட்டமைக்காக ஒரு பேராசிரியரின் கைவெட்டி வீசப்பட்டது. அதை மதக்கடமையாகச் செய்தோம் என்று அறிவித்தனர் கல்வியறிவற்ற மதவெறியமைப்பின் இளைஞர்கள். அதற்கு எதிராக கண்டனம் தெரிவித்தாலே அது முற்போக்காக அல்லாமல் ஆகிவிடும் என அஞ்சி அமர்ந்திருந்தனர் அறிவுஜீவிகள்.

தமிழகத்தில் இந்த வஹாபியக்கட்சிகள் உருவாகி ஆதிக்கம்பெற்று வளர்ந்து வந்ததை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் முன்வைக்கும் ஒற்றைப்படையான மதவெறியை அறியாத ஒருவரேனும் இன்று தமிழ்நாட்டில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. நாம் ஒய்யாரமாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன.

கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது.

நாம் அத்தை என்றும் மாமி என்றும் சித்தி என்றும் அழைத்த இஸ்லாமிய ஆச்சிகளின் பெண்களும் பேத்திகளும் நம் கண்ணெதிரே புர்க்கா போடத் தொடங்கிவிட்டிருக்கின்றனர். அவர்கள் நம் மகள்களுடன் சேர்ந்து ஒரு இடத்திற்குச் சென்றால் மறுநாளே வீட்டுக்கு மதவெறி அமைப்பின் உறுப்பினர்கள் வந்து எச்சரிக்கை அளிக்கிறார்கள். [என் சொந்த அனுபவம் இது]

கல்லூரிகளில் பயிலவும் அரசுவேலைக்குச் செல்லவும் முஸ்லீம்பெண்களுக்கு நுண்ணிய தடையாக இந்த புர்க்கா உள்ளதை , பெண்ணுரிமை என நாம் சொல்வதை முழுமையாகவே இந்த வெறி அழித்துவிட்டிருப்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். மிகமெல்லிதாகக்கூட இந்த ஒடுக்குமுறையை, நூறாண்டுக்கால முன்னேற்றங்கள் அனைத்தையும் கைவிட்டு திரும்பிச்செல்லும் போக்கை கண்டிக்க இங்கே எவரும் இல்லை. சொல்லப்போனால் புர்க்காபோடும் உரிமைக்காக முஸ்லீம் பெண்கள் போராடவேண்டும் என நம் முற்போக்கு, பெரியாரியச் சிந்தனையாளர்கள் மேடையில் முழங்கும்நிலை இன்றுள்ளது

தமிழகத்தில் எந்தச்சிறுமூலையிலும் அனேகமாக ஒவ்வொருநாளும் இந்த வகாபியர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் கண்ணுக்குப்படுகின்றன. தமிழகத்தில் வஹாபியப்பிரச்சாரம் செய்யும் தொலைக்காட்சிகள் மட்டும் ஐந்துக்கும் மேல் உள்ளன. இத்தனை பொருள்பலமும் அரசியல்பலமும் பிரச்சாரபலமும் மரபார்ந்த இஸ்லாமியரிடம் இல்லை. அவர்களின் குரல் முழுமையாகவே அடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எவ்வகையிலும் ஆதரவில்லை. அரசியல்கட்சிகள் இந்த வஹாபிய அமைப்புகளுடன் மாறிமாறிக் கூட்டணிவைக்கின்றன. அரசு அவர்களுடன் ஒத்துழைக்கிறது. முற்போக்கினர் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிற்றிதழ்முற்போக்கு அறிவுஜீவிகள் அவர்களை மேடையேற்றி அவர்களே இஸ்லாமியசமூகத்தின் ரட்சகர்கள் என்று கூவி மகிழ்கிறார்கள். வேறுவழியே இல்லாமல் இந்த கண்மூடித்தனமான மதவெறிக்குமுன் சாமானிய முஸ்லீம் தள்ளிவிடப்படுகிறான்.

தமிழக இஸ்லாமியப் பண்பாட்டின் பெருமைமிகுந்த காவியங்கள் அனைத்தும் சென்ற சில ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட முடியாதநிலை உருவாகியிருக்கிறது. அவற்றை வீடுவீடாகச் சென்று திரட்டிவந்து வீதியில் வைத்துக் கொளுத்துகிறார்கள். அவையனைத்துமே ஷிர்க் என்று அறிவுறுத்தப்படுகின்றன.

இவையெல்லாம் இஸ்லாமுக்குள் நிகழும் ‘மதச்சீர்திருத்தங்கள்’ மட்டுமே என்று வாதிடுவதற்கு ஒன்று நம்பமுடியாத அசட்டுத்தனமோ அல்லது துல்லியமான அயோக்கியத்தனமோதான் தேவை. இவை இஸ்லாமியரை பிற அனைவரையும் வெறுக்கக்கூடிய, ஆன்மீகத்திற்குப் பதிலாக சர்வதேசிய அரசியல்கனவு ஒன்றை மட்டுமே கொண்ட, உலகளாவ நிகழ்த்தப்படும் அனைத்துப்பேரழிவுகளையும் ஆதரிக்கிற ஒரு சமூகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.

அத்துடன் அது உறுதியாக இஸ்லாமியர்களின் உள்விவகாரம் அல்ல. என் இறைவனே ஒரே கடவுள் என நம்புவது வெறும்நம்பிக்கை அல்ல. அதுவே மதக்காழ்ப்பின் அடிப்படை. அது அன்றி அனைத்துமே பாவம் எனச் சொல்ல ஆரம்பிப்பது உச்சகட்ட மதவெறி. இத்தனைக்கும் அப்பால் இங்கே இன்னமும் தர்க்கா வழிபாடும் ஓரளவு இஸ்லாமியப் பாரம்பரியமும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் மக்களின் நம்பிக்கை, கூடவே அவை வைத்திருக்கும் சொத்துக்களும் அவற்றைப் பாதுகாப்பதற்கான குடும்ப அறக்கட்டளைகளும்தான்.

கொள்கைப்படி பார்த்தால் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்முதல் எதிரிகள் இடதுசாரிகளும் நாத்திகர்களும்தான். உலகமெங்கும் அப்படித்தான். இவர்கள் அதிகாரத்துக்கு வந்த எங்கும் முதலில் ஒழிக்கப்படுபவர்களும் அவர்களே. ஆனால் இங்கே அவர்கள்தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஆதரவுசக்திகள், பிரச்சாரர்கள். இந்த சந்தர்ப்பவாதக்கூட்டு இருபக்கங்களும் எத்தனை அயோக்கியத்தனமாக இருக்கின்றன என்பதற்கான சான்று.

இந்த மாற்றத்திற்கு இந்துமதவெறிதான் காரணம், இது எதிர்வினைதான் என்றெல்லாம் இங்கே பசப்பும் அறிவுஜீவிகள் அனைவருக்குமே வரலாறு தெரியும். உலகளாவிய உண்மைநிலை தெரியும். இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியா இந்தோனேசியா போன்ற இஸ்லாமியப் பெரும்பான்மைநாடுகளில் கூட இங்கே எழுந்த அதேகாலகட்டத்தில்தான் வஹாபியம் எழுந்திருக்கிறது. அங்குள்ள அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்திவந்தாலும் அவற்றைமீறி அது எழுந்து அங்குள்ள சமூகஒற்றுமை, பண்பாட்டுப்பாரம்பரியம் அனைத்துக்கும் எதிரான பெரும் விசையாக வளர்ந்து வந்துள்ளது.

இந்தியாவில் அதன் வளர்ச்சி கட்டற்றது. அதற்குக்காரணம் இங்கு அவர்கள் விலைக்கு வாங்கியிருக்கும் அறிவுஜீவி சமூகம்தான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. இலட்சிய இந்துமுஸ்லீம் உறவு இருந்த கேரளம் இன்று வகாபியத்தின் மடித்தொட்டில். வடகிழக்கு மாகாணங்கள் அனைத்தும் அதன்பிடியில் அமிழ்ந்துவிட்டிருக்கின்றன.

இங்கு அவர்கள் ஒருவகை அறிவுஜீவிக்கும்பலை தீனிபோட்டு வளர்த்துவந்துள்ளனர். அவர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் இடதுசாரிகள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மதவெறியை முற்போக்கானது என்று வாதிடுவார்கள். நாத்திகம் என்பது ஓரிறைவாதத்தை ஏற்பதே என்றுகூட சமீபத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.

இந்த அறிவுஜீவிகள் இந்த சர்வதேச மதவெறியின் ஆபத்தைச் சுட்டிக்காட்டுபவர்களை, இது அந்தமதத்தின் எளியமக்களை ஆக்டோபஸ் போல சுற்றிப்பிணைக்கிறது என்று விளக்குபவர்களை, மாற்றுமதவெறியர்கள் என முத்திரைகுத்தி அவர்களின் குரலை ஒழிக்க முனைவார்கள். இஸ்லாமிய சமூகத்திலிருந்தே மிதவாதக்குரல், ஜனநாயகக்குரல் எழுந்து வருமென்றால் அதை இந்துமதவெறிக்கோ ஏகாதிபத்தியத்திற்கோ விலைபோய்விட்டது என்று சித்தரிப்பார்கள்.

எவ்வகையிலும் எவரும் இந்த சர்வதேச அழிவுசக்தியை எதிர்க்காமலாக்குவதும் அதனால் விழுங்கப்படும் இஸ்லாமியச் சமூகம் அதற்குவெளியே சிந்திக்காமலாக்குவதுமே இந்த அறிவுஜீவிகளுக்கு இடப்பட்ட பணிகள். இவர்கள் இங்குள்ள அத்தனைமக்கள் மேலும் மெல்லமெல்ல விரித்துவரும் பேரழிவை நாம் இன்னமும் நன்கு உணரவில்லை. மிக எளிய சுயலாபங்களுக்காக இந்த போலிகள் ஒருதேசத்தை ,அதன் ஒட்டுமொத்த எதிர்காலத்தை பலிகொடுக்கிறார்கள்.

சமஸின் கட்டுரை மிக மிதமான மொழியில், மிகமிக நட்பார்ந்த தொனியில் சுட்டிக்காட்டும் இந்த உண்மையை உடனே இதுமதவெறி என்று முத்திரைகுத்தி கூச்சலிட கூலிப்படை களமிறங்குமென நினைக்கிறேன். தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ள சிறந்தவழி இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிப்பதே என நம்பும் ஒரு பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் ஆதரவுப்படையென களமிறங்குவார்கள்

உண்மை வெல்லும். ஆனால் பலசமயம் பேரழிவுகளுக்குப்பின்னரே அது வெல்கிறது.

 

 

முந்தைய கட்டுரை’புதியவிதி’ இதழில் இருந்து…
அடுத்த கட்டுரைஎன்றுமுள்ள இன்று