தீ அறியும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ..

ஆங்காங்கே ‘பாகவதத்தின் ‘ துணுக்குகள் உக்கிரமாக பட்டுத் தெறிக்கின்றன.

வட இந்திய பிரம்மா, வயதானவராக வெண் தடியுடன் மிளிர்வார். (திரைப் படம் மற்றும் t.v. தொடர்களில்). தென் இந்திய பிரம்மா, நடுத்தர வயதினராய், நம் வீட்டில் இருக்கும், ஒரு சித்தப்பா போன்றோ அல்லது மாமா போன்றோ இருப்பர். அந்தந்த சமூகத்தின் நினைவுகளின் பிரதிபலிப்போ என தோன்றும்..

மற்றோர் விஷயம். இராமாயணத்தின் கடைசியில், இராமரும் சீதையும் ஏற்கனவே எழுதப் பட்ட க(வி)தையை நடித்து காட்டுவது போல் ஒரு தளத்தில் தோன்றும். மற்றோர் தளத்தில், பிரபஞ்ச மாதாவான சீதை, பிரகிருதி ரூபத்தில் நிலைத்து,அணைத்து உயிரும் இறைவனடி சேர்ந்த பின்னே தான் செல்லலாம் என அவள் ஏற்கனவே முடிவு செய்து விட்டாள் போலும். ஒரு விதத்தில் யோசித்தால், இராவனனையே இராமரிடம் சேர்த்தவள் அவள். காலம் அவள் பின்னிய வலை. அதிலிருந்து வெளியே வருவோமா என்கிற அச்சம் அவளிற்கு இல்லை.
எனவே..
பெண்கள் மண்ணை பார்கிறார்கள்.
ஆண்கள் விண்ணை பார்கிறார்கள்.

மண்ணிற்கும் விண்ணிற்கும் நடக்கும் பிரயாணத்தில், பயமெதும் இல்லை – divorce (?!) செய்த தாய் மற்றும் தந்தை வீட்டிற்கு மாறி மாறி செல்லும் குழந்தைகளோ நாம்? அல்லது, தனித்வம் வாய்ந்த தாய் – தந்தையர் எனவும் கொள்ளலாம்.

அன்புடன்
முரளி

M.Murali
Consultant

அன்புள்ள ஜெ

தீ அறியும் வாசித்துக்கொண்டிருக்க்றேன். அனந்தனின் இளமைக்காலம் வழியாக செல்லும்போது என்னை நானே பார்ப்பது போல இருக்கிறது. திடீரென்று ஒரு எண்ணம். நான் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது நம்முடைய பெற்றோரை கூர்ந்து பார்க்கிறோம். அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறோம். அது ஒரு குடும்ப வாழ்க்கை. ஆணாகவும் பெண்ணாகவும் நாமே வாழ்கிரோம். பிறகு நாமே ஒரு குடும்பம் அமைத்துக்கொண்டு வாழ்கிறோம். மீண்டும் இன்னொரு வாழ்க்கை. அப்படியானால் நாம் இரண்டு குடும்ப அதாவது தாம்பத்திய வாழ்க்கையை வாழ்கிறோம். இல்லையா? மனம் கனத்துப்போகும் கதை ஜெ. பல சமயம் சின்னவயசிலே பெரியவர்களின் துக்கம் முழுக்க வந்து சேர்கிறது. ஆனால் காரணங்கள் தெரிவதில்லை இல்லையா?

ரவிச்சந்திரன்
டெல்லி

கூகிள் தட்டச்சில் எழுதுகிறேன். பிழைகளுக்கு மன்னிப்பு

முந்தைய கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 3
அடுத்த கட்டுரைவாசிப்புக்காக ஒரு தளம்