கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
கடந்த பல வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விதான். புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறதே. நல்ல வாசகர்கள் கூட நேரமின்மையாலும் பிற ஊடகங்களினாலும் வாசிக்கும் அளவு மிகவும் குறைந்து விட்டது. இங்கிருந்து எழுத்து எங்கு செல்லும்?
எப்போதாவது தெரிந்தவர் வீட்டிற்கு வந்தால் அவர் கேட்கும் கேள்வி, ‘ஓ இதற்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கிறதா?’ அது ஒரு எரிச்சலூட்டும் கேள்வி. சென்ற புத்தக கண்காட்சியின் போது (சென்னை) கையில் 1000 ரூபாய் வைத்திருந்தேன். உள்ளே நிழைந்தவுடன் ‘விஷ்ணுபுரம்’ எடுத்தேன் அப்புறம் ஒரு இரண்டு புத்தகங்கள்… ஒரு வரிசைகூட முடிக்கவில்லை வேகமாய் வெளியேறி விட்டேன். எனது நெடுநாள் ஆசை அது. ஜெயமோகன் படித்தால் பின்தொடரும் நிழல் போல பெரிய நாவல் தான் படிக்க வேண்டும் என்று. அதுதான் நமக்கு நேரம் தருகிறது; ஒவ்வொரு பாத்திரமும் நம்மோடு ஒட்டிக்கொள்ள. எனது புத்தகங்களே எனது பெருமை. மற்ற பொருள் எது வாங்கினாலும் அதை நான் எனது சொத்தாக மதிப்பிடவே முடியவில்லை. இவை மட்டுமே நான், என்னுடையவை என்ற சந்தோசம் தருகிறது.

பாலா
சிங்கப்பூர்

அன்புள்ள பாலா

நான் நேர்மாறாக நினைக்கிறேன். இப்போது புத்தகவ வாசிப்பு ஒப்புநோக்க அதிகரித்துள்ளது. சென்னையில் இதே புத்தகச்சந்தை வெறும் எட்டு கடைகளுடன் பலவருடங்கள் கவனிப்பாரில்லாமல் உட்லான்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்குள் நிகழ்ந்துவந்தது

ஒரு கேளிக்கையாக வாசிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதே உண்மை

உலக அளவில் இன்று அதிகம் விற்பவை பெரிய நாவல்களே. காரணம் ஒரு நாவல் நம்மை உள்ளே இழுக்க 50 பக்கம் ஆகும். அதன்பின் அது நம்மை பலநாட்கள் உள்ளே வைத்திருக்கும் அல்லவா?

ஜெ

ஜெயமோகன்,

ஊர்புகுதல் முதல் அத்யாயம் படிக்க துவங்கினேன். முதல் முன்று நான்கு பாராக்களே மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது. மகேந்திர கிரியை வருணிக்கும் போது ‘முஷ்டி மீது எழுந்த சுட்டு விரல் போல’ அருமையாக இருந்ததது.இரவுகாற்றினை விவரித்தமை ‘முதலில் தலைமயிர் சிலுசிலுக்க காது குளிர வீசி மெல்லமெல்ல வலுத்து கருவேலமரங்கள் பெண்பேய்கள் போல கூந்தல் சுழல ஊளையிடும் படி வீச ஆரம்பிக்கும். புழுதி கிளம்பி படுத்திருப்பவர்கள் மீது கொட்டுவதனால் உடுதுணியை அப்படியே உரிந்து மேலேற்றி தலைவழியாக மூடிக் கொள்ளவேண்டும். விடியற்காலையில் நன்றாகக் குளிரும். முதல்கோழி கேட்டு எழுந்து வேட்டியை உதறும்போது மண்ணாகக் கொட்டும்.’ காட்சியாக விரிந்தது. எப்பொழுதுமே தங்களுடைய எழுத்துக்கள் காட்சி போல விரிகின்றன மனதுக்குள்.

முழுவதும் வாசிக்க வில்லை. முழுவதும் வாசித்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகுகிறது.

வாசிப்பின் மாணவன்,
சுந்தரவடிவேலன்.

அன்புள்ள சுந்தரவடிவேலன்

ஒரு நாவல் முதலில் ஓர் உலகை காட்ட ஆரம்பிக்கவேண்டும். ஊர்புகுதல் அசோகவனத்தின் முதல் அத்தியாயம்

ஜெ

88

O.N.V குறுப்பின் ஞானபீட விருது செய்தி வெளியானதும் உங்கள் கருத்தை வாசித்தேன். எதிர்பார்த்தது போலத்தானிருந்தது. ஆனால், இன்னொன்றும் எதிர்பார்த்திருந்தேன். இது போன்ற உடன்பாடின்மையின் போது, மொழியில் இயங்கிவரும் தகுதி ஓங்கிய பிற கலைஞர்ளை சுட்டிக்காட்டுவீர்கள். இந்த முறை அப்படி நடக்கவில்லை.

பொதுவான பிரச்சனைக்கு வருவோம். எனது புரிதல் தவறாக இருக்கலாம். பரவலாக எழுத்தறிவு ஓங்கி நிற்கும் கேரளம் நவீன இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல்கள் சாத்தியமாகாதது குறுகியிருப்பது எதனால் ? ஒரு அவதானிப்பாளனாக, O.V. விஜயன் போன்ற பெரும் நிகழ்வுகள் அடுத்த வருங்காலங்களில் அங்கு நிகழ வாய்பு அருகியிருப்பதாகவே எண்ணுகிறேன். தமிழில் நாம் பெருமைப்படும் முன்னோடிகள் நிறைந்திருப்பது போல அங்கு தோன்றாமல் போனது சமூகக் காரணங்களாலா ?

O.N.V. வைத்து ஆறுதல் அடையும் இடத்தில் தான் மலையாள இலக்கியம் இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு மாற்று ஆளுமைக்கு அங்கு கடுமையான பஞ்சம் என்பது வருத்திற்குரியது.

அன்புடன்,

வினோத்

அன்புள்ள வினோத்,

ஞானபீடம் என்பது நல்ல இலக்கியவாதிக்குரிய விருது அல்ல. ஒட்டுமொத்தமாக பாதிப்புகளை உருவாக்கிய பெரும்படைப்பாளிக்கு, ஒரு மொழியின் பதாகையாக விளங்கத்தக்க ஒருவருக்கு, அளிக்கப்படும் வாழ்நாள் சாதனை விருது. அதன் கொள்கை அறிவிப்பு அப்படிச் சொல்லவில்லை, ஆனால் அது அப்படி ஆகிவிட்டிருக்கிறது. ஆகவேதான் அப்பரிசு ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டபோது நாம் மகிழ்ந்தோம். எம்.டி.வாசுதேவன் நாயருக்கு அளிக்கப்பட்டபோது மகிழ்ந்தோம். ஓ.என்.வி அப்படி அல்ல என்பதுதான் புகார்.

என் நோக்கில் இப்போது வாழும் கேரளப் படைப்பாளிகளில் எவரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன். பெரும் படைப்பாளிகளின் ஒரு தலைமுறையே அய்யப்ப பணிக்கருடன் முடிவுக்கு வந்து விட்டது.

ஓ.என்.வியை விட சகரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா, கெ.ஜி.சங்கரப்பிள்ளை, ஆற்றூ ரவிவர்மா போன்றவர்கள் பல படிகள் மேலான படைப்பாளிகள்.

தமிழில் அசோகமித்திரன் இருக்கிறார். நான் வாசித்தவரை இன்றைய இந்திய இலக்கியப் படைப்பாளிகளில் அவருக்கு அல்லாமல் எவருக்கு அளிக்கப்படும் பரிசும் அவரைத் தாண்டியே செல்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைகவிதையும் ஞானியும்
அடுத்த கட்டுரைபரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..