ராஜாவின் எதிரிகள்

Kollywood-news-7093

 

இளையராஜா மீதான தாக்குதலின் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருக்கிறது.ஒவ்வொரு பதிவையும் கவனியுங்கள்.சாதி எத்தனை வலிமையானது என்பது புரியும்

ஜெ,

இது ரவிக்குமாரின் டிவீட் வரி. இளையராஜா நம் சூழலில் செயல்படும் ஒரு கலைஞர். அவர்மீதான விமர்சனங்களை இப்படி சாதிமுத்திரை குத்திப் பாதுகாக்கவேண்டுமா என்ன?
சங்கர்

அன்புள்ள சங்கர்

இளையராஜாவின் இசைமீதான விமர்சனங்கள் நிறையவே வரலாம். பல பொருட்படுத்தியாகவேண்டிய கூரிய விமர்சனங்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பரவலாக எழுபவை காழ்ப்புகளும் நக்கல்களுமே. விமர்சனங்கள் அல்ல. சொல்லப்போனால் நல்ல விமர்சனத்தை நான் இதுவரை அச்சில் பார்த்ததே இல்லை.

முக்கியமான இசைவிமர்சகர்கள் அவர் இசைமேல் நேர்ப்பேச்சில் முன்வைத்த பல விமர்சனங்களை நானே தொகுத்து எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் ராஜா அநீதியாகத் தாக்கப்படுபவர் என அவர்கள் எண்ணுவதனால் அவ்விமர்சனங்களை அவர்கள் பதிவுசெய்ததில்லை.

ராஜா மீதான விமர்சனங்கள் மூன்றுவகை. ஒன்று, அவரது பின்புலம் காரணமாக அவர் தங்கள் எளிய அரசியல்கூச்சல்களுடன் இணைந்து கொடிபிடிக்க வரவேண்டும் என எண்ணும் தரப்பினருடையது. அவர் அவற்றைக் கடந்து பலதளங்களுக்கு அப்பாலிருப்பவர் என அவர்களுக்குப் புரியவில்லை.

அவர் ஓர் இந்துவாக, சைவத்தின் சாரத்தைத் தொட்டறிந்தவராக இருப்பது இந்த அரசியலாளர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை அளிக்கிறது. அவரது தோற்றமே அவர்கள் சொல்லும் பல கோட்பாடுகளுக்கு வலுவான பதில். ஆகவே அவரை அவர்கள் வெறுக்கிறார்கள். இதில் மாற்றுமதக் காழ்ப்பாளர்களும் கலந்துகொள்கிறார்கள்

இன்னொருதரப்பு இன்னும் நுட்பமானது. இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் ஆகி மேலும் பலபடிகளுக்கு உயரும்போது உருவாகும் பொருமல் இது. கண்டிப்பாக இது சாதிக்காழ்ப்புதான். விவேகானந்தரும் அரவிந்தருமே இவர்களின் கண்ணுக்கு பெரிதாகப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

இதைக் கடந்துசெல்வது எளிதல்ல. பெரும்சுயவதை மனநிலையுடன் தன்னைக் கிழித்து உதறிவிட்டு முன்செல்லவேண்டும். தன் பின்னணியை, அகங்காரத்தை, ஏன் சிலசமயம் அதுவரை திரட்டிக்கொண்டிருக்கும் தன்னிலையையே கூட கடந்துசெல்லவேண்டும். அப்படிக் கடந்த பலநூறுபேரை நான் அறிவேன். ஆனால் கடக்கமுடியாத எளியவர்களின் குரலே ஓங்கி ஒலிக்கிறது

மூன்றாவதாக இன்னொன்று உண்டு. ஒரு கலைஞராக ராஜா தன் இசைக்குறிப்புகளுடன் ஒதுங்கித் தனித்திருக்கையில் மட்டுமே மகிழ்ச்சியாக நிறைவாக இருக்கிறார். வெளியே வந்ததுமே அவரிடமிருப்பது எரிச்சல்தான். என் மேல் மிகுந்த மதிப்பு கொண்டவர். எப்போதும் முகமலர்ந்து வரவேற்பவர். எந்தத்தடையுமில்லாமல் அவரிடம் பழகுபவன் நான். ஆனால் நான்கூட மிகமிகக் கவனமாகவே அவருடன் இருப்பேன். எண்ணி எண்ணியே சொல்லெடுப்பேன்.

அபாரமான தன்னம்பிக்கையும், அதேசமயம் பிரம்மாண்டமான ஒன்றை அணுகியறிவதால் உருவாகும் ஆழமான தன்னடக்கமும், சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் அளைந்துகொண்டே இருப்பதனால் மொழியில் பலவகையான சிடுக்குகளும் கொண்டவராகவே நான் ராஜாவை அறிந்திருக்கிறேன். நாம் சென்று பழகும் ராஜா இசையினூடாக நாமறிந்தவர் அல்ல. அது உட்கார்ந்திருக்கும் பறவை. விண்ணளக்கையிலேயே அது உண்மையான பறவை

இந்த இயல்பை நான் அசோகமித்திரனிடமும் தேவதேவனிடமும்கூட கண்டிருக்கிறேன். அவர்களின் கலைச்சூழலுக்குவெளியே அவர்கள் நிலையற்றிருக்கிறார்கள். பிறழல்களும் பிசிறுகளும் மட்டுமே அவர்களுக்குத் தெரிகின்றன. தேவதேவன் என் மூத்தசகோதரர் போல. ஆனால் முள்ளை உடலெங்கும் ஏந்தியவராகவே எனக்குத்தெரிவார். எண்ணி எண்ணி அஞ்சி அஞ்சித்தான் பேசுவேன். ஏன் என்றால் அது அப்படித்தான்.

அசோகமித்திரனும் தேவதேவனும் எளிய வாழ்க்கை வாழும் கலைஞர்கள்.ராஜா ஒரு பெரும் பிம்பம். வெற்றிபெற்ற மனிதர். புகழ் பணம் உடையவர். ஆகவே அவரது இவ்வியல்பு கலைஞன் என்னும் ஆளுமையை அறியாத, மனிதர்களை எப்போதும் சந்தையிலேயே சந்திக்கவிரும்புகிற, எளியவர்களை சீண்டுகிறது

இவர்கள் உருவாக்கும் கசப்புகள் விமர்சனங்கள் அல்ல. ராஜாவை நாளை நல்ல இசைத்தொகுப்பாளர்கள் தொகுத்து பகுத்து ஒரு இசைக்கட்டுமானமாக நமக்கு அளிக்கக்கூடும். அதில் நாட்டுப்புற இசையின் களியாட்டும் மரபிசையின் தவமும் வெளிப்படும் எல்லைகளை அவர்கள் தொட்டுக்காட்டக்கூடும். அதன் குறைகளையும் எல்லைகளையும் அவர்களே நமக்குச் சுட்டிக்காட்டவும் செய்வார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான்

ஜெ

 

 

முந்தைய கட்டுரைசங்கரர் உரை -கடிதம் 8
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கே.ஏ.குணசேகரன்