சங்கரர் உரை கடிதங்கள் 3

IMG_20160103_181332

அன்புள்ள ஜெயமோகன்,

சார் வணக்கம், கீதை உரை பற்றி கடிதம் எழுத எண்ணினேன்.முடியவில்லை. முடியவில்லை
என்பதைவிட வார்த்தைகள் அமையவில்லை. ஆனால். சங்கரர் உரைக்குப்பின் எனது பிரமிப்பை எழுதிவிடுவது என முடிவு செய்தேன். பள்ளி வரலாற்றுப்பாடத்தில் ஆதிசங்கரர் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று கூறினார். இதுவே அத்வைதமாகும் என்று மனப்பாடம் செய்து ஆசிரியர் கூறியதை மனப்பாடம் செய்ததை தவிர வேறொன்றும் தெரியாது.  தங்கள் தளத்தில் தொடர்ந்து வாசிப்பதால் இந்த மாதிரி த்த்துவங்கள் கொஞ்சம் அறிமுகம். ஆனால் இந்த உரை கேட்டவர்களை எங்கோ கொண்டு சென்றது.

கீதை உரைக்கு முன்னால் தங்கள் கருத்துக்கள் இந்த அவையில் ஏதாவது ஏடாகூடமாகுமோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது உண்மை. ஏனென்றால் இதுவரை இருந்த பல நம்பிக்கைகள் சீண்டப்பட்டன.அத்வைத  உரைக்குப்பின் மேலும் சீண்டப்பட்டுள்ளது.ஆனால் அங்கு வந்தவர்கள் தரமான தங்கள் உரை கேட்க தகுதியானவர்கள்தான் என்பதை உணர முடிந்தது. இந்த புதிய திறப்பு பல புதிய உச்சங்களை நோக்கி தங்களை இட்டுச்செல்லும் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது. நன்றி

சி.மாணிக்கம் மந்தராசலம்,

செஞ்சேரிமலை.

 

*

Dear Jeyamohan

There is a lone inscription found on sankara bhashyam of Virarajendra period ( son of Rajenda 1)

 

*

 

அன்புள்ள சங்கர்

ஆர்வமூட்டும் செய்தி.

ஆனால் இதில்கூட சங்கரபாஷ்யம் என எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதே ஒழிய சங்கரர் பெயர் உள்ளதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இத்துறையில் அறிஞர்கள் பலர் விவாதித்து பொதுமுடிவுக்கு எட்டுவதற்காக காத்திருக்கவேண்டியதுதான். வரலாற்றியலில் பொதுவாக அதுவே முறைமை.

சங்கரவேதாந்தம் எட்டாம்நூற்றாண்டு முதல் இரு சரடுகளாக  இருந்துகொண்டே இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏகதண்டி துறவிகளின் மரபாக ஒரு சரடு. வேதாந்திகளால் ஆராயப்படும் ஒரு வலுவான தத்துவத்தரப்பாக ஒரு சரடு. அதற்கான வரலாற்றுத்தருணம் வந்தபோது அவரது ஞானமரபினரில் இருந்து அது பேருருவம் கொண்டது

 

ஜெ

 

ஜெ

சங்கரர் உரை பலவகையிலும் திறப்பாக இருந்தது. நீங்கள் சொன்ன பலவிஷயங்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. சங்கரர் பற்றிய கதைகளை பிற்காலத்தைய புராணக்கற்பனைகள் என்று சொல்லலாம். ஆனால் சங்கரரின்சௌந்தரிய லஹரி போன்றவற்றை பிற்காலத்தையவை என்று சொல்லத்தோன்றவில்லை. அவை சாதாரண மனிதர்களால் இயற்றப்படக்கூடியவை அல்ல.

மேலும் ஷண்மத சமன்வயத்தை உருவாக்கிய சங்கரபகவத்பாதர்  ஞான கர்ம சமுச்சயத்தையும் உருவாக்கினார் என்று நம்புவதில் தவறில்லை என்பதே என்னுடைய எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் ஞானநூல்களில் சங்கரர் பக்தியைக் கடுமையாகக் கண்டிப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்

ஆனால் உங்கள் உரை வரலாற்று நோக்கில் பல கோணங்களில் சிந்திக்கவைக்கிறது. நவீன இளைஞன் ஒருவன் சங்கரரை நோக்கி வருவதற்கு சம்பிரதாயமான எந்த ஒரு உரையையும் விட இதுவே பொருத்தமானது என்று தோன்றுகிறது. இன்றைக்குத்தேவை வெறுமே பக்தியை முன்வைக்கும் உரைகள் அல்ல. இந்தவகையான ஆழமான நவீன உரையாடல்கள்தான் என்று நினைக்கிறேன்

அனைத்துவாழ்த்துக்களும்

அன்புடன்

சங்கரநாராயணன்

 

 

 

ஜெமோ

சங்கரரின் ஷண்மத சமக்ரமார்க்கம் ஒரு விஸ்வரூபத்தை எடுப்பதற்கு இந்துஞான மரபின்மேல் நடந்த படையெடுப்புகள் காரணம் என்றும் ஸ்மார்த்த சம்பிரதாயம் அதைப்பாதுகாக்க எடுக்கப்பட்ட பெரும் முயற்சி என்றும் வெளிப்படையாகச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். ஆனால் கூடவே இஸ்லாமியத் தாக்குதலை நைச்சியமாக சுல்தானியத்தாக்குதல் என்று மாற்றிய நுட்பத்தையும் குறிப்பிடவேண்டும்

 

சங்கரராமன்

 

சங்கரர் உரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20
அடுத்த கட்டுரைநாட்டார்கதைகளும் வரலாறும்