விழா- கடிதங்கள் 2

1
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
விஷ்ணுபுரம் விழா அளித்த இனிய நினைவுகளை மனதில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். நன்றி.
நான் உள்ளே நுழையும் போது நீங்கள் பலராமர் குறித்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அதன் பின் தேவதச்சன் அவர்கள் உள்ளே நுழைய மெல்ல அவருடைய கவிதை நோக்கி உரையாடலும் கவனமும் குவிய துவங்கியது.
1
மாலை ஜோ டி குரூஸ் உடனான உரையாடல். இதை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை. கிட்டத்தட்ட களிறு புகுந்தது போல உள்ளே நுழைந்தார். பொதுவாக உங்களின் சந்திப்புகளில் ஒரு விஷயத்தை நான் உணர்வதுண்டு.எத்தனை பேர் உடனிருந்தாலும் உங்களின் ஆளுமை அந்த இடத்தை முழுமையாக நிறைத்திருக்கும்,
அதில் ஒரு மாற்றத்தை அன்று உணர்ந்தேன், ஜோ விடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அப்படி, பதினெட்டு ஏக்கர் நிலம் பூர்விக சொத்தை இழந்ததை அவர் இயல்பாக சொல்லி செல்கிறார் ,அதனை பேரிடமும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
1
இலக்கியத்திற்காக அவர் கொடுத்திருக்கிற விலை எத்தகையது?  உரையாடலின் இடையே அவரின் ஒரு வாசகம் .இந்த இடத்தில் நான் நூறு சதவிகிதம் முழுமையாக இருக்கிறேன். அசரீரி போல ஒலிக்கும் ஒரு வார்த்தை. இறுதியாக அரங்கசாமி அவர்களின் கேள்விக்கு பாக் ஜலசந்தியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் கொள்ளையை ஓங்கிய குரலில் அவர் விவரித்த விதம் தொடர்ச்சியாக ஒரு அட்டகாசமான சிரிப்பு, உண்மை ஒரு மனிதனுக்கு அளிக்கும் பேரழகை அவரின் ஒவ்வொரு அசைவிலும் உணர முடிந்தது.
1
சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் க நா சு அவர்களை சந்தித்து குறித்த  ஒரு கட்டுரையும்  அதை தொடர்ந்து நீங்கள் அடைந்த மன எழுச்சியையும் என்னால் அங்கு உணர முடிந்தது.
திரு முருகவேள் அவர்களை சந்திக்க முடிந்ததும் மகிழ்ச்சி அவரின் மிளிர் கல் நாவலை ஒரு வாரம் முன்பு தான் வாசித்திருந்தேன்.அவரை சந்திக்கக்கூடும் என நான் எதிர் பார்த்திருக்க வில்லை, அவரின் நாவல் கண்ணகி சென்ற தடம் குறித்தாகவிருந்தாலும்  அது வேறொரு மிக முக்கியமான தளத்தையும்  தொடுகிறது குறிப்பாக முல்லையின் கண்ணகி குறித்த ஏக்கம் காவு தீண்டல் விழாவில் அவள் அடையும் மன எழுச்சி அவளில் உறையும் ஒரு பேரன்னையை எழுப்புவதாக இருந்தது. அந்த ஏக்கம் தான் இந்த நாவலின் மிக முக்கியமான புள்ளி என எனக்கு பட்டது. இது தான் நான் புரிந்து கொண்டது, இதை ஒரு சரியான கேள்வியாக என்னால் அவரிடம் முன் வைக்க முடியவில்லை.
1
நீங்கள் வரலாற்றுவாதம் குறித்து துவக்கிய விவாதம் அதை தொடர்ந்து நடத்தி சென்ற விதம் பல திறப்புகளை உருவாக்கக் கூடியது, நடுவே யுவன் அவர்கள் வந்தார்.அவரை நான் ஒரு ரயில் சந்திப்பில் தான் முதலில் பார்த்தேன் அதை அவர் நினைவில் வைத்திருப்பாரா என ஒவ்வொரு முறையும் சந்தேகிப்பேன்? ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த தடையை உடைப்பவர் அவரே.அவரின் கானல் நதி நாவல் குறிப்பாக தனஞ்சய் முகர்ஜியின் மனநிலை குறித்த ஒரு ஐயத்தை எழுப்புவதற்குள் நீங்களும் யுவனும் வாசகன் எழுத்தாளன் ஆகிய இரு நிலைகளையும் அவர்களின் உறவைப் பற்றியும் நடத்திய ஒரு மனம் திறந்த உரையாடல் மிக சிறப்பாக இருந்தது.
தனா அவர்கள் சொல்லி இருந்தது போல இரண்டு நாள் விழா ஒரு பெரும் பண்டிகையாகவே மனம் முழுக்க நிறைந்திருக்கிறது. சுரேஷ் அண்ணன் சீர்காழி அவர்களின் குரல் உச்சஸ்தாயியில் படும் அல்லது படுத்தும் பாட்டை பாடிக் காட்டியதை  நினைத்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
மனமார்ந்த நன்றியுடன்
சந்தோஷ்
1ஜெ சார்
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு முதல்முறையாக வருகிறேன். நண்பர்கள் இதற்கு முன்பு வந்திருக்கிறார்கள். அந்தச்சூழலே அற்புதமானதாக இருந்தது. எங்குபார்த்தாலும் சிரிப்புகளும் கட்டித்தழுவல்களுமாக தென்பட்டன. எனக்கு எவரையுமே தெரியாதென்பதனால் நான் எவருடனும் அதிகமாகப்பேசிக்கொள்ளவில்லை. ஆனால் சாயங்காலம் எல்லாருடனும் நட்பாக ஆகிவிட்டேன். சிறந்த உரையாடல்கள் அமைந்தன
இத்தனைபெரிய அரங்காக இது நிகழும் என நினைக்கவில்லை. உள்ளறை உரையாடல் என்றால் கொஞ்சபேர் இருப்பார்கள் என்று நினைத்தேன். நூறுபேருக்குமேல் இருந்தார்கள். வந்திருந்த அத்தனைபேருமே கிட்டத்த 15 மணிநேரம் நடந்த விவாதங்களில் முழுக்கவே இருந்தார்கள். அது சிறப்பானதாக இருந்தது. இவ்வளவு கருத்துக்களை இத்தனை குறைந்த நேரத்திலே கேட்டது மட்டும்தான் எனக்கெல்லாம் கொஞ்சம் ஓவர் லோடு. ஆகவே நான் எல்லாவற்றையும் என் டைரியில் குறித்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். முக்கியமான விவாதங்களாக நடந்தவற்றை இப்படி நான் பட்டியல்போட்டு வைத்தேன்1
1. கவிதை என்பது வடிவங்களை உருவாக்குகிறதா இல்லை வடிவங்களை கலைத்துப்போடுகிறதா என்ற விவாதம். தேவதச்சன் நாற்காலியை கவிழ்த்துப்போட்டு கவிதை ஒரு வியூசேஞ்ச் வழியாக எல்லா ஃபார்ம்களையும் ஃபார்ம்லெஸ் ஆக்கிவிடுகிறது என்று சொன்னார்2. அன்றாட வாழ்க்கையிலிருந்து கவிதையை எடுக்கும்போது அதிலே மிகப்பெரிய உண்மைகள் எப்படி வருகின்றன என்பது பற்றிய சர்ச்சை. உண்மையிலே அப்படி வரவேண்டுமா என்றுகூட பேசப்பட்டது
13. கெ.என்.செந்தில் சிறுகதைகளில் இன்றைய பார்வை குரூரமானது, முந்தைய எழுத்துமாதிரி கதாபாத்திரங்கள் மீதான கருணை கொண்டது இல்லை என்று சொன்னது

4. அவரது எழுத்து ஷாக் அளிக்கும் எழுத்தா, அந்தவகை எழுத்து தேவையா என்பதுபற்றிய சர்ச்சை.நாஞ்சில்நாடனின் கருத்து

5. ஜோ டி குரூஸ் இலக்கியத்துக்கும் சோஷியாலஜிகல் கண்டெண்டுக்குமான உறவைப்பற்றி பேசிய சர்ச்சை.

6. ஜோ டி குரூஸ் மீனவர்கள் இன்றைக்குச் சந்திக்கும் சவால்கள் அதிலுள்ள ஊழல்களைப்பற்றிப் பேசியது

0Nd90_N3g_KJm7RACdERogT22EVMOxlyzJCq-jpeGpU
7. மறுநாள் தேவதச்சன் கவிதைகளைப்பற்றிப் பேசியபோது லட்சுமி மணிவண்ணன் அவரது கவிதைகள் கவிதைக்குரிய இன்னர் கண்டெண்டை மட்டுமே தொடுவதாகச் சொன்னது

8. கவிதையின் சந்தம் பற்றி வந்த விவாதங்கள்

9. முருகவேளின் படைப்புகளைப்பற்றி வந்த விவாதங்கள். கண்ணகி வரலாறு பற்றிய தகவல்கள். தொன்ம வரலாற்றுக்கும் நேரடி வரலாற்றுக்கும் இலக்கியத்திலுள்ள வரலாற்றுக்கும் உள்ள உறவைப்பற்றிய பேச்சுக்கள்

10. ஹேட்புக் என்ற வகையை அறிவுத்துறையில் எப்படி எதிர்கொள்வது என்ற சர்ச்சை. பொருளாதார அடியாளின் வரலாறு என்ற புத்தகம் எப்படி தகவல்களை கொண்டே மிகையான பொய்யை உருவாக்குகிறது என்ற எண்ணம். [வெளியே பேசும்போது ஒரு நண்பர் அந்தபுத்தகத்தையே அப்படி அமெரிக்கச் சதி என்று சொல்லலாம் என்று வாதாடினார்]

1
11. அப்ஜெக்டிவான வரலாறு என ஒன்று உண்மையில் உண்டா இல்லை வரலாறு என்பதே வெறும் ஃபிக்‌ஷன் தானா என்ற விவாதம். போஸ்ட் மாடர்னிசம்,நியோ ஹிஸ்டாரிசிசம் பற்றிய செய்திகள்
12. யுவன் சந்திரசேகரனின் கதைக்குள் கதை என்கிற நான்லீனியர் கதை பற்றிய விவாதம். லீனியர் கதைதான் இயல்பானது என்று எப்படி எண்ணத்தொடங்கினோம் என்ற அவரது கேள்வி. ஏனென்றால் நம்முடைய மரபிலே எல்லா கதையும் நான்லீனியர்கதைதான்
2
13. கதைக்குள் ஆசிரியரை அடையாளம் காணவேண்டுமா, ஆசிரியனை நோக்கிப்போக வாசகன் முயற்சி செய்ய வேண்டுமா என்ற விவாதம்
14. ஆசிரியன் இறந்துவிட்டான் என்று சொன்னதெல்லாம் இப்போது எப்படி இருக்கிறது என்ற விவாதம்
15. இலக்கியத்தை நுட்பமாக ஆக்குவதா பயனுள்ளதாக ஆக்குவதா எது முக்கியம் என்பது பற்றிய விவாதம்
3
எல்லாவற்றையும் பலகோணங்களிலே பேசினார்கள். புதிய கருத்துக்களைத் தெரிந்துகொண்டேன். ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இரு சாராருக்கும் இருக்கும் சரித்திர பகைப்புலத்தை மட்டும் சொன்னீர்கள். உங்கள் கருத்தை பொதுவாகச் சொல்லவில்லை.அருண்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11
அடுத்த கட்டுரைவிழா பதிவுகள் 3