விஷ்ணுபுரம்விழா -சுனில் கிருஷ்ணன்

1

 

ஆசிரியர்களையும் நண்பர்களையும் ஒரு சேர சந்திக்க போகிறோம் எனும் உற்சாகம் விழா துவங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே பரவி விட்டது. பயண திட்டங்கள் பற்றி திரும்ப திரும்ப நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கிளம்பும் வெள்ளியன்று இரு துயர செய்திகள் என்னை நிலைகுலைய செய்தன. தேவதச்சனின் ஆவணப்படத்தை இயக்கிய சரவணனின் தந்தை மரணமடைந்தார்.

 

சரவணனை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கடினமாக உழைத்து கொண்டிருந்தார் என்பதை அறிவேன். மரண தருவாயில் உடனிருக்க முடியாத மகனின் துயரத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவருடைய தொழில் நேர்த்தி உண்மையில் அவர் வருங்காலங்களில் நிச்சயம் நல்ல நிலையை அடைவார் என நம்புகிறேன்.

 

1

மற்றொன்று எனது கல்லூரியில் நான் சகோதரனாக எண்ணும் நண்பர் விபத்தில் மரணித்தார் எனும் செய்தி பேருந்தில் ஏறுவதற்கு முன் கிடைத்தது. விழா பயணத்தை ரத்து செய்து விடலாமா என்று கூட தோன்றியது. அவனுடலை சென்று காணும் திராணி எனக்கில்லை என்றாலும், அந்தமனநிலையில் நண்பர்களுடன் இருப்பதையே மனம் விழைந்தது. நினைவுகள் சராமாரியாக ஒன்றின் மேல் மற்றொன்றாக சரிந்து திணறி கொண்டிருந்தேன். அந்த இரவு பயணம் முழுவதும் அவனுக்காக, அவன் நினைவுகளுக்காக கண்ணீர் உகுத்தபடி வந்தேன்.

 

நான் இறங்கி எங்கே செல்வது என முடிவெடுக்கும் முன்னரே விஜய் சூரியன் தொடர்புகொண்டார். காந்திபுரம் பேருந்து நிலையத்து தேநீர் கடையில் இனிதே விழா துவங்கியது. ஜெ மற்றும் அஜிதனுக்காக காத்திருந்தோம். சுரேஷும் குவிஸ் செந்திலும் இனைந்து கொண்டார்கள்.

 

2

ஜெ வழக்கம் போல் உற்சாகமாக இருந்தார். அஜியை சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் உரையாசிரியர்கள் பற்றி பேசிக்கொண்டே ராஜஸ்தானி நிவாஸ் சென்று கொண்டிருந்தோம்.

. மாசில் வீணையும் மாலை மதியமும
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும
மூசு வண்டறை பொய்கையும் போன்றத
ஈச னெந்தை யிணையடி நீழலே.

மேற்சொன்ன திருமுறை பாடல் பலமுறை கேட்டது தான். மாசில் வீணை என்பது மாசற்ற வீணை என்றே பொதுவாக பொருள் கொள்ளபடுகிறது. ஜெ மாசில் வீணை என்பது ஒற்றை தந்தி கொண்ட வண்டு முரலும் ஒலியெழுப்பும் வீணை என்றார். ஒரு இறையனுபவத்தின் துவக்கம் எத்தனை மென்மையாக இருக்கும்? முற்றிலும் வேறொரு தளத்தில் இப்பாடல் உயிர்கொண்டது. மாலை நேரத்து நிலவு புலப்பட்டும் புலபடாமலும் இருக்கும். ஜெயமோகன் எழுதிய ஒரு விவரணை நினைவுக்கு வருகிறது. மெல்லிய விபூதி தீற்றலை மாலை நிலவுக்கு ஒப்பாக சொல்லியிருப்பார். அன்றைய தினம் இனிதே துவங்கியது.

1
ராஜஸ்தானி நிவாசில் நாங்கள் சென்று சேரும்போதே சில நண்பர்கள் வந்திருந்தார்கள். லயோலா, எம்.சிசி, பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள். நிகழ்வு முழுவதும் உற்சாகத்துடன் உதவினார்கள். நண்பர்கள் ஒவ்வொருவராக வர துவங்கினார்கள். தேவதச்சன் அமர்வு காலை பதினோரு மணியளவில் துவங்கியது. உரைக்கான தயாரிப்பு ஏதுமின்றி வந்திருந்தேன். எனினும் எழுதிய கட்டுரையின் பகுதிகளை கொண்டு சிறிய அறிமுக உரையை நிகழ்த்தினேன். தேவதச்சனுடன் உரையாடுவது ஒரு அழகான அனுபவம். தலையை ஆட்டி ஆட்டி அவர் நாம் சொல்வதை கேட்பதும், பேசும்போது வேகவேகமாக காலாட்டுவதும் கூட அவருடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. துபாய் ரமேஷ், டோக்யோ செந்தில் மற்றும் நண்பர்கள் தங்கள் பார்வைகளை வைத்தார்கள்.

 

2

தேவதச்சன் தன் முன்னோடி கவிஞராக காளமேகத்தை குறிப்பிட்டது பலருக்கும் ஆச்சரியமாய் இருந்தது. எளிய மனிதனாக அவன் தன அவதானங்களை வைத்தவன் என்பதே முக்கிய காரணம் என்றார். அவருடைய சில கவிதைகளில் எதிர்மறை குரலும் கோபமும் ஒலிப்பதை பற்றி பேசியபோது, ஒப்புகொண்டார். இடது சாரிகள் அவரை கேலி செய்த காலமும் உண்டு என்றார். இடது சாரி அரசியலை பற்றிய தனது கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்பதால் இடதுசாரி பார்வை கொண்டவனாக நின்று கொண்டதாக சொன்னார்.

 

1

தேவதச்சனின் கால பிரக்ஞை பற்றிய உரையாடல்கள் மிக முக்கியமானவை. ஆரஞ்சு மிட்டாய் கரைந்து போவதை விரும்பாத குழந்தை போல் காலம் கரைவதை தன்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்றார். மேலும் காலம் அகவயமானது, புற கால அளவைகளுக்கு அப்பால் இயங்கும் ஒரு காலம் இருக்கிறது என்றார். கோவில்பட்டி நெடுஞ்சாலையில் பயணித்தபோது தான் இதை கண்டுபிடித்ததாக சொன்னார்.

 

நெடுஞ்சாலையிலிருந்து வளைந்து ஒரு தார் சாலை செல்கிறது அங்கிருந்து ஒரு மண் சாலை பிரிகிறது. ஐந்து கிலோமீட்டருக்குள் ஐம்பது வருடங்கள் பின்னால் சென்றுவிட்டேன் என்றார். மிக சுவாரசியமான அவதானம். “அன்பு தான் எல்லாம்னு நெனைக்கிறோம்..பத்து பதினஞ்சு வருஷமா இந்த வாழ்க்கமுறை அதை சோதிக்கிறது..அப்படின்னா அன்ப விட பெருசா ஏதோ ஒன்னு இருக்குன்னு கண்டுபிடிச்சேன்..அது சுதந்திரம்” என்றார். ‘தேவதச்சன் கவிதையை பாட்டு என்றே சொல்கிறார். ‘கண்டுபிடிப்பு’ எனும் பிரயோகம் கூட சுவாரசியமானது. அண்ணா இறந்த பொது அவரை பற்றி பெரிதும் அறியாமலேயே அவருக்காக இறங்கற்பா எழுதியதை சொன்னார். எதுகை மோனைகளுக்கு அப்பால் கவிதையில் ஒரு இசைத்தன்மை இருக்க வேண்டும் என கருதியதாக சொன்னார். தேவதச்சனின் கவிதைகள் உரக்க வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

 

1

பொதுவாகவே தேவதச்சன் உரையாடல்களில் உற்சாகமாக பங்குகொண்டார். வரலாற்றுவாதம் பற்றிய மறுநாள் உரையாடலின் போதும் தொடர்ந்து கூர்மையாக பேசினார். யுவன் அவருடைய உரையில் தேவதச்சனை பற்றி குறிபிட்ட ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் நிறைந்த ஒரு மாலை பொழுதில் தேவதச்சனை அவரது கடையில் சந்திக்க செல்கிறார் யுவன், ஒரு நொடி வெளியே வந்து “wait பண்ணாம நில்லுங்க” என்று சொல்லிவிட்டு சட்டென மீண்டும் சென்றுவிட்டார். யுவன் அந்த சொற்களை புரிந்துகொள்ள சிரமபடுகிறார். முதன்முறையாக அந்த சாலையை, எதிரில் உள்ள கடைகளை, மனிதர்களை முகங்களை காண்கிறார். சற்றுநேரம் கழித்து வந்தவுடன் என்ன பார்த்தீர்கள் என கேட்டதற்கு அவர் பதிலை கேட்டுவிட்டு “பரவால்லையே வெயிட் பண்ணாம நின்னுருகீங்க” என்றார்.

 

லக்ஷ்மி மணிவண்ணனும் கூட அவருடைய உரையில் தேவதச்சன் எப்படி ஒருவரை மென்மையாக முழுவதுமாக உருக்குலைய செய்வார் என குறிப்பிட்டார். அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை பிரயோகம் சுவாரசியம் (dislocation).

1

கே.என். செந்திலுடன் சிறுகதைகள் குறித்து அடுத்த அமர்வு நிகழ்ந்தது. பாலியல் பிரயோகங்களை பற்றிய கேள்விக்கு அவரளித்த விளக்கமும் ஜெயமோகன் முன்வைத்த கோணமும் நல்ல விவாதமாக இருந்தது. எதற்காக விவரணை என்பதே கேள்வி? வெறும் அதிர்ச்சி மதிப்பீடை தாண்டி செல்ல முடியுமா? போன்ற விவாதங்களும், தமிழ் இணைய சூழலில் வாசிப்பிலும் எதிர்வினைகளை பெறுவதிலும் உள்ள சிக்கல்கள் பற்றி பேசப்பட்டன. சிவா கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வி ஆகியவர்களின் அண்மைய கதைகளை பற்றி கூட பேசப்பட்டன.

 

நண்பர்கள் நாற்காலியிலிருந்து மெத்தைகளை சாய்த்து அதில் அமர்ந்தபடி கேட்டுகொண்டிருந்தோம். ஆறு வேளையும் உஅனவு அற்புதம், தரம். நண்பர்கள் உற்சாகமாக பரிமாறினார்கள். இளைய நண்பர்களுடன் காந்தி குறித்து பேச முடிந்தது. நிறைய புதிய முகங்கள். பிரியத்துற்குரிய நாஞ்சில் வந்திருந்தார். மரபின் மைந்தன், சுசீலாம்மா, எம்,கோபால் ஆகியவர்களும் முதல்நாள் பங்குகொண்டார்கள்.

 

1

மாலை அமர்வு ஜோ டி க்ரூசினுடையது. ஜோ தனது ஆளுமை வீச்சால் மொத்த அரங்கையும் கட்டிபோட்டார். தேவதச்சனுடன் உரையாடுவது ஒருவகையான இனிய அனுபவம் என்றால் ஜோ உரையாடுவதை கேட்பது பாறைகளை அரையும் அலையோசையை போல் இருந்தது. அவருடைய நாவல்களை பற்றிய விவாதமாக துவங்கிய பேச்சு தமிழக மீனவர்களின் வாழ்க்கையை பற்றியும் அவர்களது பிரச்சனைகளை பற்றிய ஆழமான விவாதமாக மாறியது. அவர் கூறியவற்றை வெளிப்படையாக இங்கு எழுதலாமா என்று கூட தெரியவில்லை. ஆயிரம் ஜோ வர வேண்டும் என பிரார்த்தித்து கொள்கிறேன்.

 

1

இரவு உணவுக்கு பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இசை – பலகுரல் நிகழ்ச்சி துவங்கியது. மெத்தைகளில் சாய்ந்தபடி ஆனந்த் மற்றும் சுரேஷ் பாடுவதை உற்சாகமாக கேட்டு கொண்டிருந்தோம். சுரேஷ் வழக்கம் போல் சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, நம்பியார், ஹனீபா என அனைவரையும் காதின் முன் நிறுத்தினார். அதே உற்சாகத்துடன் உறங்க சென்றோம். ஓரிரவு மனதை எத்தனை இலகுவாக்கி இருக்கிறது. நண்பர்களுக்கு நன்றிகள்.

1

கோவை குளிரில் ஏசி அறையில் கம்பளியை துளைத்து கொண்டு குளிர் ஊடுருவியது. தூங்க சற்று கடினமாகத்தான் இருந்தது. தாலாட்டாக ஒலித்த குறட்டைகள் தூங்க வைத்துவிட்டது. காலை விழா மரபிர்கிணங்க ஆடிட்டர் கோபி ராமமூர்த்தி தலைமையில் பெரும்படையாக சென்று தேநீரும் இன்னபிறவும் அருந்தியும் உண்டும் வந்தோம். கோவையின் ஒரு தெருவை ஞாயிறு காலைகளில் குழந்தைகள் விளையாடுவதர்கென்று விட்டுவைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

 

1

காலை மீண்டும் தேவதச்சனின் அமர்வு நடந்தது. இம்முறை லக்ஷ்மி மணிவண்ணன் பங்களிப்புடன் நிகழ்ந்தது. அதையொட்டிய அமர்வு மிளிர் கல் ஆசிரியர் இரா.முருகவேல் அவர்களுடன் நிகழ்ந்தது. நாவலை பற்றிய பேச்சாக துவங்கி விவாதம் வரலாறின் முக்கியத்துவத்தை பற்றியும் புனைவில் அதன் பங்களிப்பை பற்றியதுமாக விரிந்தது. மிக செறிவான விவாதம். வரலாறு என்பதே மாபெரும் புனைவு என்பது ஒரு தரப்பாகவும் புனைவாகவே இருக்கட்டும் ஆனால் சுரண்டலுக்கு வழிவகுக்கும் போது மற்றொரு புனைவை வரலாறாக உருவாக்கித்தான் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பது நவ வரலாற்றுவாதம். லக்ஷ்மி மணிவண்ணனுடன் பேசிக்கொண்டிருந்த போது “உலக சிந்தனைகள் தமிழில் எப்போதும் உடனடியாக வந்தடைந்திருக்கிறது” என பெருமிதம் கொண்டார். ஆம் உண்மை தான்.

 

1

உணவு இடைவேளைக்கு பின் யுவனுடன் உரையாடல் அமர்வு நிகழந்தது. யுவன் தேவதச்சன் பற்றிய ஜெயுடைய கருத்துக்களில் தான் மாறுபடும் புள்ளிகளை கூறினார். தேவதச்சனின் கவிதைகளை இரண்டு காலமாக பிரிப்பதும், வெவ்வேறானவை என காட்ட முயல்வதும் தனக்கு ஏற்புடையதல்ல என்றார். சில மாற்றங்கள் மொழி அளவில் நிகழ்ந்திருக்கலாம். மேடையில் யுவன் பேசும்போது தேவதச்சனின் பிற்கால கவிதைகள் குறித்து தனக்கு விமர்சனங்கள் உண்டு என்றார்.

 

தேவதச்சனும் கூட யுவனின் கவிதைகள் ஏற்புடையதாகவும் சிறுகதைகள் மீது விமர்சனங்கள் உள்ளதாகவும் கூறினார். கதைக்குள் கதை எனும் வடிவத்தை பற்றி கேட்டபோது, இத்தனை ஆண்டுகளாக நேர்கோட்டில் எழுதி கொண்டிருக்கும் போது யாரும் எவரிடமும் ஏன் நேர்கோட்டில் எழுதுகிறீர்கள் என கேட்டதில்லை ஆனால் நான் இந்த வடிவத்தில் எழுதும்போது மட்டும் ஏன் இந்த கேள்வி எழுகிறது என கேட்டார்.

 

1

மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு அனைவரும் கிக்காணி அரங்கம் சென்றோம். ஆவணப்பட திரையிடல் தொழில்நுட்ப காரணமாக தள்ளிப்போனது. வானதி ஸ்ரீ இனிமையான குரலில் அன்பென்றும் மழையிலே பாடலை பாடி நிகழ்வை துவக்கி வைத்தார். ஜோ சுருக்கமாக உரையாற்றி குழும நண்பர் க்றிஸ் எழுதிய துறைவன் நாவலை வெளியிட்டார். ப்ரியத்துற்குரிய ஷண்முகவேல் மேடையில் கவுரவிக்கபட்டது பெருமையான தருணம். ஜாஜாவின் சுருக்கமான அறிமுகம் ஷண்முகவேலின் பங்களிப்பை சரியாக சூட்டியது..

 

1

அதன் பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆவணப்படம் கவிஞரின் பரந்துபட்ட உலகை சரியாக காட்சி படுத்தியது. புலிக்குகை, அவருடைய இல்லம், கோவில்பட்டி நகரம் என அனைத்துமே ஒளிபதிவாளரின் கைவண்ணத்தில் மிக அழகாக தென்பட்டன. மிக முக்கியமாக படத்தொகுப்பு வெகு சிறப்பு. ஆவணப்படம் தேவதச்சன் மட்டுமின்றி கோவில்பட்டி எனும் இலக்கிய மையத்தை அதன் முரண்பாடுகளுடன் காட்டி சென்றது. யுவனின் பேச்சு வெகு சிறப்பாக இருந்தது. முரண்பாடுகளை மீறிய நட்பு சூழல் நிலவுவதை உணரந்துகொள்ள முடிந்தது. சில கருத்துக்கள் திரும்ப திரும்ப சொல்லபடுவதாக ஒரு தோற்றம் வந்தது. அதை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கக்கூடும்.

 

கருத்துகளின் மாறுபடும் புள்ளிகளை மட்டும் காட்டிவிட்டு நகர்ந்திருக்கலாம். இலக்கிய மையமாக திகழ்ந்த தேவதச்சனின் அந்த புகழ் பெற்ற நகைக்கடையையும் கொஞ்சம் விரிவாக காட்டியிருக்கலாம் என தோன்றியது. சரவணன், செந்தில், ராஜகோபால் பாலு மகேந்திரா என முன்னின்று செய்த நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தன்னார்வத்தில் செய்யப்பட்ட முயற்சி இது.

 

1

ஒருவகையில் இவ்விழாவே முற்றிலும் தன்னார்வலர்களால் நடத்தபடுகிறது. சிறு சிறு குறைகளுக்கு அப்பால் அர்பணிப்பும் நட்புமே மேலெழுந்து வருகிறது. பின்னணி இசைகோர்ப்பும், குரல் கோர்ப்பும் துருத்தாமல் நன்றாக இருந்தது. தேவதச்சனின் உடல்மொழியும் கூட நன்றாக பதிவாகி இருந்தது. நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருக்கும் கௌரிஷங்கர் டிசம்பர் முதல்வாரத்தில் மறைந்துவிட்டார் என்பதை எண்ணும்போது மனம் கனக்கிறது.
வெற்றிமாறன் சுருக்கமாக ஆவணபடத்தின் நேர்த்தியை பாராட்டிவிட்டு அமர்ந்தார். நாஞ்சிலின் உரையில் விஷ்ணுபுரம் அமைப்பு தொடர்ந்து கவிஞர்களை கவனபடுத்துவதை குறித்து மகிழ்ந்தார். அவருக்கே உரிய வகையில் தமிழ் இலக்கிய சூழலை பற்றிய எள்ளல் கலந்த அவதானிப்புகளை வைத்தார்.

 

1
யுவனின் பேச்சு தேவதச்சன் எனும் கவிஞரை அல்ல தேவதச்சன் எனும் மனிதரை பற்றிய உணர்சிகரமான உரையாக அமைந்தது. வெகுவாக நெகிழ்ந்திருந்தார். தேவதச்சன் தனக்கு கிடைத்த ஜென் குரு என்றார். தனிப்பட்டமுறையில் என்னை வெகுவாக கவர்ந்த உரையும் யுவனுடையதே. தேவதச்சன் தனக்கு பினனர் இன்னொரு தேவதச்சனை உருவாக்கவில்லை என்பதே அவருடைய மாபெரும் சாதனை. என்றார்.

 

லக்ஷ்மி மணிவண்ணன் தனக்கும் ஜெயமோகனுக்குமான ஊடலும் கூடலும் உறவை பற்றி பேச துவங்கி தேவதச்சனின் கவிதை பங்களிப்பை பற்றி பேசினார். துண்டு துண்டாக இருந்ததால் உரையை பின்தொடர்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. தேவதச்சனை நாம் ஒட்டுமொத்த தமிழ் கவிதைகளின் அளவுகோளாக கொள்ள முடியும் என்றார். மொழிபெயர்க்கபட்டால் உலகதரமாக விளங்ககூடிய சாத்தியம் உள்ளவை என்றார். இரண்டாம் நாள் உரையாடலின்போது சிங்கப்பூர் கவிஞர் நெப்போலியன் இசையின் கவிதைகளை முன்வைத்து பேசியதை நினைவுகூர்கிறேன். இசையின் கவிதைகளில் உள்ள ஒருவித spontaneity தேவதச்சனிடம் இல்லை, அக்கவிதைகள் செய்ய படுவதாக தோன்றுவதாக சொன்னார்.லக்ஷ்மி மணிவண்ணன், ஜெ இருவரும் அதற்கு நல்ல விளக்கம் அளித்தார்கள். contemplative poetry என்பது வேறுவகை. அதுவும் முக்கியமானதே என்றார்.

 

1
ஜெயமோகனின் உரை கவிஞர்கள் எப்போதும் விலக்கப்பட்டவர்களாக இருந்துவருகிறார்கள் என துவங்கி கவிஞர்கள் மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றும் பங்களிப்பை பற்றி விரிவாக பேசினார். தேவதேவனின் விருதுவிழாவில் போது (அல்லது தெளிவத்தையா ?) ஜெ கூறிய கொலை சோறு கதையை அவருடைய உரையின் முந்தைய பகுதி எனக்கு நினைவுபடுத்தியது. மொழி மழுங்கடிக்க படுகிறது எங்கோ திரைக்கு பின்னால் அமர்ந்து மொழியை கூர்தீட்டும் பணியை கவிஞர்கள் செய்கிறார்கள் என்றார். மொழிவெளிக்குள் புழங்கும் களங்கமற்ற பழங்குடி மொழியை தக்கவைப்பது முக்கியம் என்றார்

1

 

. கவிதை இலக்கியம் போன்ற செயல்பாடுகளின் லௌகீக மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்தாக வேண்டும் என்பதை மற்றுமொருமுறை வலுவாக சொன்னார். ஜெயமோகனின் உரை அவருடைய தேவதச்சன் பற்றிய கட்டுரையின் நீட்சியாகவும் இரண்டு நாள் அமர்வுகளில் உரையாடிய புள்ளிகளை மீள அறிவுருத்துவதாகவும் இருந்தது. ஜெ உரையின் இறுதி பகுதி அபாரம். சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் குழந்தை எனும் படிமத்தை கவிஞனுக்கு பொருத்தி, தேவதச்சன் சிறையிலிருந்தாலும் அழாது சிரித்திருக்கும் குழந்தை என முடித்தார்.

 

1
அனைவருக்கும் தனது நன்றிகளை பதிவு செய்து உரையை துவக்கிய தேவதச்சன் எழுதி வைத்திருந்த உரையை வாசித்தார். அது ஒரு முக்கியமான உரை. கவிதை போக்குகளை பற்றிய தனது அவதானங்கள் அடங்கிய உரை. கால நெருக்கடி காரணமாக வேகவேகமாக வாசித்து சென்றதாக உணர்வு ஏற்பட்டது. அவருடைய உரையில் தனி மனிதனின் யுகம் முடிந்துவிட்டது என்றும் ‘தருண மனிதன்’ உதித்துவிட்டான் என்றும் சொன்னது நன்றாக நினைவிலிருக்கிறது. தருண மனிதன் எனும் பிரயோகம் மொத்த கவனத்தையும் இழுத்தது. தேவதச்சனின் கவிதைகள் ‘தருண மனிதனின்’ கவிதைகளே. கவிதைகள் வழியாக அந்த ஒரு தருணத்தை முடிவிலிக்கு நீட்டி சென்றுவிடுகிறார்.

1
விழா முடிந்ததும் அனைவரும் வழக்கம் போல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். விஜய், சுரேஷ், குவிஸ் செந்தில், மீனாம்பிகை, ராதா என கோவை நண்பர்கள் வெகு சிறப்பாக அனைத்தையும் ஒருங்கமைத்தார்கள். எப்போதும் நெருக்கமாக உணரும் நண்பர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஜெயிடம் பேசுவதற்கு எப்போதும் எனக்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் நான் அதிகமும் பெற்றுகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். இம்முறையும் அதுவே தொடர்ந்தது. நான் தேவதச்சன் குறித்து எழுதிய கட்டுரை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. புதிதாக பல நண்பர்கள் அறிமுகமானார்கள். நண்பர்கள் ஒவ்வொருவராக பிரிந்து செல்ல துவங்கினார்கள்.

1

ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப மனமின்றி செல்வது ஒரு இனிய சுமை. உணவுண்ட பின்னர் ராதா பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டான். கணத்த மனதுடன் அமர்ந்தேன். இம்முறை இனிமையின் கணம். நானும் என்னை ‘தருண மனிதனாக’ உணர்ந்தேன். அவனின் அபார சுதந்திரத்தை உணர்ந்தேன். இனிமையான தருணங்களை மீண்டும் மீண்டும் சுவைத்து மனதினுள் பதுக்கியபடி ஊர் வந்து சேர்ந்தேன்.

சுநீல் கிருஷ்ணன்

 

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் 2015

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள்

 

முந்தைய கட்டுரைகீதையும் வெண்முரசும்
அடுத்த கட்டுரைவிழா – மணிமாறன்