விழா கடிதங்கள்

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

26.12.2015 அன்று நடந்த விவாதங்களில் கலந்து கொண்டேன்.
காலையில் நடந்த விவாதத்தில் தேவதச்சன் அவர்களின் கவிதை பற்றிய விவாதமும் அது தொடர்பான கேள்விகளும் அவரின் பின்னலிட்ட பதில்களும் குறிப்பிட்ட படைப்பாளியை நோக்கி உந்துகிறது. இது ஒரு நல்ல முயற்சி.
மதிய விவாதம் சிறுகதைக்கான அமர்வு போன்றிருந்தது. சுரேஷ் அவர்களின் எடுத்து கொடுக்க கே.என்.செந்தில் அவர்கள் கதைக் களத்தையும் தளத்தையும் விவரிக்க தாங்கள் விவாதப் பொருள் விலகாமல் ஒருங்கிணைத்து தங்களின் கேள்விகளின் மூலம் விவாதத்தை ஆழப்படுத்திச் சென்றதும் ஒரு நல்ல இலக்கியமர்வுக்கான நிகழ்வுகளாக தோன்றியது.
ஜோ.டி.குரூஸ் அவர்களின் விவாத களத்தையும் தாங்கள் விஸ்தீரணப்படுத்தி நல்ல பல தகவல்களை வெளிக் கொண்டு வந்தீர்கள்.
இது போன்ற கூடுகைகள் இலக்கியத்தை நிச்சயம் நல்ல தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
இதுதான் நான் பார்க்கும்.. கலந்து கொள்ளும் முதல் கூட்டம். ஆனால் அது போன்ற உணர்வேயெழாத மனப்போக்குக்குள் இருக்க வைத்ததமைக்கு நன்றி.
கலைச்செல்வி
திருச்சி.
அன்புள்ள ஜெயமோகன் சார்,

2010 இல் நம்முடைய முதல் விருது விழாவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. மிகச்சிறிய குழு.. அனுபவின்மை..ஆனால் பெரும் ஆர்வம்.ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு அறை கொண்ட வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தொடங்கினோம். சிறிய கூட்டம்தான்.. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கூட தயிர்சாத பொட்டலம் தான்.. ஆனால் மிகச்சிறந்த ஒரு காரியத்தை வருடாவருடம் நிகழ்த்தப்போகிறோம் என்று உணர்ந்திருந்தோம். அனுபவமின்மையின் அத்தனை தவறுகள் இருந்தும் வெற்றிகரமாக அம்முதல் விழாவை நடத்தி முடித்தோம். இன்று 2016 ல் ஒரு முழுமையான கட்டமைப்பான பெரும் திரளுடன் கூடிய உற்சாகமான ஒரு நிகழ்வாக இவ்விருது விழா திகழ்ந்தது.

தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இதற்காகவே வந்து இரண்டு நாட்கள் இவ்விழாவை கொண்டாடிவிட்டுப்போன நம் சக வாசக நண்பர்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன். வயது ஆக ஆக பண்டிகைகள் நம்மைவிட்டு சென்றுவிடுகின்றன.. அது ஒரு கடமையாக ஆகிவிடுகின்றன.. விடுமுறை தினமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன.. ஆனால் வருடம் ஒரு முறை பெரும் உற்சாகத்துடன் பங்கேற்கும் ஒரு பண்டிகையாக மாறிவிட்டது நம் விருது விழா..

சென்னையில் இருந்து டெம்போ டிராவலர் பிடித்து கொண்டாட்ட மனநிலையில் நாங்கள் கிளம்பினோம்.விருது விழாவின் முதல் நாளே காலை ஒன்பது மணிக்கு அத்தனை பேர் கொண்ட குழுவாக ஒரு உரையாடல் நடந்துகொண்டிருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.. நிறைய புதியவர்கள்..இளைஞர்கள். மேலும் திரும்பிய பக்கமெல்லாம் நண்பர்கள். பலரை பார்த்ததில்லை.. பெயர் மட்டும்தான் தெரியும்.. குழுமத்தில் பேசியது மட்டும் தான்.. எல்லோருக்குள்ளும் நிறைந்திருந்த ஒரு சந்தோசத்தை உணர முடிந்தது.  கருத்துக்களால் மோதியவர்கள் கட்டியணைத்து நின்று பேசியதை பார்க்க முடிந்தது.. தயங்கி நின்றிருந்த புதியவர்களிடம் சென்று உரையாடி அவர்களின் ஆரம்பநிலை பதட்டத்தை போக்கி சகஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்  சீனியர்கள். வருடா வருடம் அதிகரிக்கும் பெண் வாசகர்கள் தம்முடைய இடமாகக்கருதி அங்கே வளைய வந்தார்கள். அங்கே ஒன்றை என்னிடமும் பிறரிடமும் உணர்ந்தேன்.. இங்கிருப்போரை அவர்கள் வீட்டில் உள்ளவரோ அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களோ பார்த்தால் நம்ப மாட்டார்கள். அனைத்து முகமூடிகளையும் கலைத்துவிட்டு குதூகளித்துக்கொண்டிருக்கும் இவர்களை யார்தான் நம்புவார்கள். சீண்டல்கள், கிண்டல்கள், விவாதங்கள், இலக்கிய பரிமாறல்கள் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருகுழுவாக ஏதேனும் நடந்துகொண்டே இருந்தது..

தேவதச்சனின் அத்தனை இயல்பான உற்சாகமான உரையாடல் நேரத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கவிதைக்குள் தங்களை நுழைத்துக்கொள்ள முடியாத என்னைப்போன்ற பலருக்கு அந்த நேரம் பெரும் உபயோகமாக இருந்தது., ஒரு கவிதையை எங்ஙனம் அணுக வேண்டும் என்று அறிந்து கொண்டேன். ஜோ.டி குரூசின் பரதவர்கள் பற்றிய உரையாடல் எங்களுக்கு ஒரு பெரும் திறப்பு.. அவரின் ஆளுமையை வியந்தோம். யுவன் அண்ணாவின் நேரத்தில் நான் இல்லை. நண்பர்கள் அந்நேரத்தைப்பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தனர். நீ தவறவிட்டு விட்டாய் என்று வெறுப்பேற்றினர்.

நான் இயக்குநர் வெற்றி மாறன் அவர்களை அழைத்து வரச்சென்றிருந்தேன். தமிழ் இலக்கியத்தின் மேல் அதிகம் பயிற்சி இல்லாதவர். பல அலுவல்களுக்கிடையே இங்கு வருகிறார்.. அவரை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று யோசித்தபடி சென்றோம். அவர் மிக எளிமையானவர். மனம் விட்டு எல்லாவற்றையும் பேசக்கூடியவர் என்று உணர்ந்தோம்.. விழாவில் சிறிதே பேசினாலும் நன்றாக பேசினார். சந்தோசமாக விடை பெற்றார். அவருக்கு நம் வட்டம் சார்பாக பெரும் நன்றிகளை உளமாற தெரிவித்துக்கொள்கிறேன்.

விழாவில் அத்தனை பேரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.. நிறைய பொது ஜனங்களை பார்க்க முடிந்தது.. நாஞ்சில், யுவன் பேச்சுக்களை அவர்கள் பெரிதும் ரசிப்பதை உணரமுடிந்தது. லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பேசியது ஒரு இயல்பான உரையாடல் போன்ற ஒரு நண்பருக்கிடையேயான பேச்சு போன்றது. அவருக்கு நன்றி.

அங்கங்கே சிதறிய மனத்தை வழக்கம் போல் நீங்கள் ஒன்று சேர்த்து உங்கள் பக்கம் திருப்பினீர்கள். கவனம் அங்கே குவிக்கப்பட்டது என்றார் வெற்றிமாறன்.

எப்பொழுதும் ஒரு விழா முடிந்ததும் அப்பாடா என்கிற ஒரு ஆசுவாசம் பிறக்கும்..  மெல்ல தளர்வோம்..  எப்படியோ முடிஞ்சிடுச்சுப்பா என்கிற சலிப்பு வரும்.. இது அதற்கெல்லாம் எதிரான ஒரு மனநிலையை அளித்தது.. அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தையே விதைத்தது.. உற்சாகம் வடியாமல் நண்பர்கள் பிரிந்து கிளம்பிச்செல்வதை பார்க்கமுடிந்தது..

இப்பொழுது நினைத்துக்கொள்கிறேன்… காட்டை நிறைத்து, தனிமனமின்றி ஒற்றை மனம் கொண்ட சில்வண்டுகளின் ரீங்காரம் போல் ஒரு கூடல்…

நன்றி

தனா

முந்தைய கட்டுரைகீதையும் வர்ணமும்
அடுத்த கட்டுரைவிழா படங்கள்