நுழைவாயில்

Devadachan-1 (1)

 

ஜெ

தேவதச்சனை என்னைப்போன்ற கவிதையறியாத பொதுவாசகனிடமும் கொண்டுவந்து சேர்க்க விஷ்ணுபுரம் விருதாலும் அதன் விளைவான நீண்ட கவிதை விவாதங்களாலும் முடிந்திருக்கிறது என்பதே பெரிய வெற்றிதான்

ஏன் கவிதையை என்னால் வாசிக்கமுடியவில்லை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தேன். கவிதைக்கான context எனக்கு  அப்பால் இருக்கிறது. நான் வாழும் வாழ்க்கையில் அந்தக்கவிதை சொல்வது பொருளாகவில்லை. ஒரு கவிதையில் எவர் எவரிடம் சொல்கிறார்கள் என்பதும் எங்கே நிகழ்கிறது அது என்பதும்தான் முக்கியமானது. அது புரியாததனால்தான் கவிதைகள் அறுபட்டவைபோல நிற்கின்றன

அபூர்வமாக சில கவிதைகளுக்கு நமக்கு சூழல் பிடிகிடைக்கிறது. உடனே கவிதை நமக்குள் வளரத்தொடங்கிவிடுகிறது. கவிதை விவாதங்கள் அந்த சூழலைத்தான் கவிதைக்கு உருவாக்கித்தருகின்றன என நினைக்கிறேன்.

தேவதச்சனின் இந்தக்கவிதை முன்வைத்த சூழல் எனக்கு நேரடியாகவே புரிந்தது. ஆகவே உடனடியாக என்னால் இதற்குள் சென்றுவிடமுடிந்தது. ஏனென்றால் நானும் ஐம்பதைக் கடந்தவன்

 

அன்பின் பதட்டம்நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஒப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்.

அன்பு சின்னவயதில் உரிமையாக இருக்கிறது. conquer செய்வதற்கானதாக இருக்கிறது. பின்னர் அது ஒரு sharing ஆகிவிடுகிறது. நாற்பதுவயது என்பது முதுமை. முதுமையில் அது ஒரு பதற்றம் மட்டும்தான்
தேவதச்சனுக்குள் நான் நுழைந்த வாசல் இது. அதைத்திறந்த நீங்கள் சபரிநாதன் நவீன் சுநீல்கிருஷ்ணன், வேணுதயாநிதி, கார்த்திக், அனைவருக்கும் நன்றி
சுரேஷ் செல்லப்பாண்டியன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 7
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா