வால்

1

 

விஜியை நான் கைக்குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். என் நினைவில் உள்ள ஆகப்பழைய சித்திரம் அவளை ஒரு பாயில் படுக்க வைத்து யாரோ அவள்மேல் குனிந்து அவளைக் கொஞ்சுகிறார்கள். அவள் மல்லாந்துகிடந்து முஷ்டிபிடித்த சிறுகைகளையும் கால்களையும் உதைத்து காற்றில் நீந்துகிறாள். நான் பதறி அழுதபடி ”அப்பியை விடு…அப்பியை விடு” [அப்பி-கைக்குழந்தை] என்று கதறுகிறேன். கொஞ்சுபவரும் வேறு சிலரும் சிரிக்கிறார்கள். அப்போது விஜிக்கு மூன்றுமாதம் இருக்கும். அப்படியானால் அது அம்மாவின் பிறந்த ஊரான நட்டாலமாக இருக்கலாம்.

அதன்பின் பல சித்திரங்கள். அவளை நல்ல கருமையான மாநிறம் கொண்ட பொத்துபொத்தென்ற குழந்தையாக நன்றாகவே நினைவுகூர்கிறேன். அம்மா முழங்காலில் அவளைப்போட்டுக்கொண்டு வெந்நீர் விட்டு குளிப்பாட்டும்போது நான் அருகே குந்தி அமர்ந்து அவளுடைய குண்டு தொப்பை மேல் வழியும் நீரை தொட்டுப்பார்க்கிறேன். அவளுடைய கன்னத்தில் வைத்த பெரிய திருஷ்டிப்பொட்டை ஈரம் காயாமலேயே தொட்டு அவளுடைய மறு கன்னத்தில் பொட்டுவைக்க முயன்று முகமெல்லாம் தீற்றிவிடுகிறேன். அவளை கவுன் போட்டு அம்மா கொண்டுபோகும்போது நான் பின்னால் ஓடி என்னிடம் அவளை தரும்படி சொல்லி அடம்பிடிக்கிறேன்.

முஞ்சிறையின் வீட்டில் தென்னை ஓலை நிழல்கள் வீட்டுக்குள் ஆடுகின்றன. அவள் தடுக்கில் கிடந்து கொலுசு போட்ட கால்களை காற்றில் ஆட்டுகிறாள். அவளுடைய முழங்கால்களும் மூட்டும் கருமையாக இருக்கும். வெள்ளிக்கொலுசும் உள்ளங்காலின் மென்மையான சிவந்த சருமமும் எனக்கு அத்தனை துல்லியமாக  நினவிலிருக்கின்றன.

விஜி என்னைவிட ஒன்றரைவருடம் இளையவள். அப்பா அவளுக்கு லட்சுமிக்குட்டி அம்மா என்றுதான் பெயரிட்டார். என் சித்தப்பாதான் அதை விஜயலட்சுமி என்று மாற்றினார். விஜிக்கு என் அப்பா சாயல். அவளுக்கு பதினாறு வயதாக இருக்கும்போது பள்ளிநிகழ்ச்சி ஒன்றுக்காக அவள் குழித்துறை சென்றிருந்தபோது அப்பாவின் அலுவலகத்தோழர் ஒருவர் அவளைக் கண்டு அருகே வந்து அவள் பாகுலேயன்பிள்ளையின் மகள்தானா என்று கேட்டார். அப்பா அவரது அம்மாவின் சாயல் என்பதனால் தோற்றம் குணம் எல்லாமே என் அப்பா வழிப்பாட்டி லட்சுமிக்குட்டியம்மாவின் சாயல்தான்.

மாநிறம். சின்ன வயதில் அவள் குண்டாக புஷ்டியான கன்னங்களுடன் இருப்பாள். நாட்டு வழக்கில் கொழுவிய கன்னங்களுக்கு ‘புட்டு’ என்று பெயர் உண்டு. விஜியை ஐந்துவயதுவரை பலரும் புட்டு என்றுதான் அழைப்பார்கள். கனத்த கூந்தல் சிறு வயதிலேயே உண்டு. முட்டைக் கண்கள். சிறிய உதடுகள். லேசாம எம்பி எம்பி துள்ளியபடித்தான் எங்கும் செல்வாள். அவள் சிறுவயதில் நடப்பதே கிடையாது. ‘ரப்பர்பந்து மாதிரி நடக்கிறாளே’ என்று அம்மாவிடம் கேட்பார்கள். அம்மா ‘அவள் மனுஷக்குட்டி இல்லை, நாய்க்குட்டியாக்கும்’ என்பாள்.

விஜிக்கு ஒரு வயதில் சோறு கொடுக்கும் சடங்கு நடந்தது. அவள் மொட்டை போட்டு காதுகுத்தி கண்ணீர் வழிந்த தடம் உலர குமாரகோயில் முகமண்டபத்தில் அமர்ந்திருந்தாள். அவள்முன் பெரிய வாழை இலையில் சர்க்கரைப்பாயசம், வாழப்பழம் , பொன் நகை, புத்தகம், சிறிய கத்தி, நாணயம், பட்டுத்துணி என்று வாழ்க்கையின் பல்வேறு சாத்தியங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக குழந்தைகள் பாய்ந்துபோய் எதையாவது எடுக்கும். நான் வாழைப்பழத்தை எடுத்து பாயசம்மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேனாம். விஜி கடைசிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். அவளை நான்குபக்கமும் கைதட்டி அழைத்தார்கள். கெஞ்சினார்கள். லேசாக தள்ளிவிட்டுக்கூட பார்த்தார்கள். கூட்டத்தை அலட்சியமாகப் பார்த்துவிட்டு பிள்ளையார் பிடித்தது மாதிரி இருந்துவிட்டாள். கடைசியில் அம்மா கொஞ்சம் பாயசத்தை எடுத்து அவள் வாயில் தீற்றி அவளை தூக்கிக்கொண்டாள்

வழக்கமாக பெண்குழந்தைகள் சீக்கிரமே பேச ஆரம்பிக்கும். விஜி மூன்றுவயதானபோதுதான் ஓரளவு பேச ஆரம்பித்தாள்.அது வரை ஒற்றைச் சொற்கள்தான். அதுவும்கூட முடிந்தவரை பேசுவதில்லை. யாராவது பேசினால் அதை மிகக்கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் நெடுநேரம் கழித்து அவளுடைய முகம் கனத்து உதடுகள் பிதுங்கி இருப்பதை வைத்து அறிந்துகொண்டு, அந்தச் சூழலை வைத்து ஊகித்துக் கொள்ளவேண்டும். ‘என்னது? என்னதுடீ?’என்று எத்தனை கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள். தலையை கனமாக குனித்து பேசாமல் நிற்பாள். பத்துபதினைந்து தடவைக்குமேல் கேட்டால் கண்களில் கன்ணீர் திரண்டு வரும். அவள் வாய்விட்டு அழும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆகவே ‘கல்லுணி’ என்ற பெயரும் அவளுக்கு இருந்தது.

அம்மாவுக்குத்தான் அவளுடைய கல்லுணித்தன்மை கடுப்பைக் கிளப்பும். காலையில் ஒரு குழந்தை கண்ணீருடன் அமர்ந்திருக்கிறது, என்ன பிரச்சினை என்று கேட்டால் சொல்வதுமில்லை. எழுந்திருப்பதில்லை, பேசுவதில்லை, சாப்பிடுவதில்லை. என்ன செய்யமுடியும்? ‘வாயத்தெறந்து சொல்லுடீ சனியன்பிடிச்சவளே…வந்து வாய்ச்சிருக்கு பாரு’ என்று சொல்லி முடியைப்பிடித்து உலுக்குவாள். சில சமயம் அடிப்பாள். ஆனால் தண்டிக்கும்தோறும் அவளுடைய அழுத்தம் ஏறியேறித்தான் போகும். கடைசியில் அம்மாதான் இறங்கிவந்து ”செரிடீ…அம்மா தெரியாம அடிச்சிட்டேன்…என் கண்ணுல்ல…என் சக்கரை இல்ல…சொல்லு கண்ணம்மா…என்ன?’என்று கெஞ்சுவாள். அதற்கும் பதில் சொல்லமாட்டாள். ”டேய் சொல்லுடா..இவ எதுக்குடா இப்டி இருக்கா?”

விஜியின் வாயே நான்தான். அவள்சார்பில் பேசுவேன். சண்டைபோடுவேன். சிரிப்பதும் அவளுக்காக கதறி அழுவதும்கூட உண்டு.என்னுடைய ஆசைகளை அவளுடைய ஆசைகளாகச் சொல்லுவேன் ‘அம்மா அப்பிக்கு கருப்பட்டி வேணும்’ என்பேன். அவள் மிகமெல்ல சப்பி தின்னும்போது நான்குசுற்றும் பார்த்துவிட்டு பிடுங்கித் தின்றுவிடுவேன். ஒருமுறைகூட அவள் தனக்கு வேண்டும் என்று சத்தம் போட்டதில்லை என்று அம்மா சொல்வாள். இருவருக்கும் ஒரு பொருளை பகிர்ந்து தந்தால் விஜியை தூக்கிச்சென்று தன் கண்ணருகே வைத்துக்கொள்வாள் அம்மா.

விஜி அமைதியான சிறிய நாய்க்குட்டி போல என் பின்னாலேயே வருவாள். அபூர்வமாக என்னை தனியாகப்பார்ப்பவர்கள் ‘எங்கடா வாலெங்கே?’ என்று கேட்பார்கள். எனக்கே விஜி என்னுடைய வால்போன்ற ஓர் உறுப்புதானோ என்ற சந்தேகம் இருந்தது. நான் அவளிடம் பேசிக்கொண்டே இருப்பேன். என்னுடைய வாயில் இருந்து குழாய்போல எச்சில் வழிந்து மார்பில் கொட்டிக்கொண்டிருக்கும் அப்போதெல்லாம். நான் எதையாவது கூர்ந்து கவனித்தால் இன்னும் அதிகமாகக் கொட்டும். அதைப்போல பேச்சும் என்னை மீறிக் கொட்டிக்கொண்டிருக்கும்.

நான் என் கற்பனைகளால் பார்க்கும் காட்சிகள் மீது இன்னும் பிரம்மாண்டமான ஓர் உலகத்தை உருவாக்குவேன். அதற்குள்தன் விஜி எப்போதும் இருந்தாள். கேட்கும் பிறருக்கு அது புரிவதில்லை. ‘அவன் அளக்கிறான்னா நீ கேட்டிட்டு இருக்கியா? மடச்சாம்பிராணிய இருக்கியே?’என்று சொல்வார்கள். என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் விஜியின் உதடுகள் பிதுங்கி கண்ணீர் தளும்ப ஆரம்பித்துவிடும். நான் ஆகாயத்தில் பறப்பதற்காக சிறகுகள் செய்வதற்காக காக்கைஇறகுகளை சேர்த்து விறகுப்புரையின் இடுக்கில் வைத்திருந்தேன். காகங்களுடனும் பிற பறவைகளுடனும் பேசும் மொழியை கற்றுக்கொண்டு பேசிக்காட்டி விஜியை பிரமிக்கச் செய்தேன். கன்றுக்குட்டியை குதிரைபோல ஒடும்படி பழக்க அவளுடன் சேர்ந்து முயன்றேன். பலகைக்கு அருகே அமர்ந்துகொண்டு ‘இது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்’ என்று கம்பீரமான குரலில் சொன்னேன். நாயை மனிதமொழி பேசவைக்க முயன்றேன். எப்போதும் வியப்பில் விரிந்த கண்களுடன் அவள் என் அருகே இருப்பாள்.

அப்பாவுக்கு விஜி செல்லம். அப்பா என்னை ஒருமுறைகூட தொட்டு அணைத்ததில்லை. உயரமான எங்காவது ஏறவேண்டுமென்றால் இடுப்பைப் பிடித்து தூக்கிவிடுவார். அந்த சூடான முரட்டுக்கை என் உடலில் படுவதற்காக நான் ஏங்கினேன். அவ என்னைத்தொட்ட பின் நெடுநேரம் அந்த உணர்வு என் இடுப்பில் இருக்கும். பல தொடுகைகளை நாற்பத்தைந்து வருடம் கழித்து இப்போதும் நினைவுகூர்கிறேன். அண்ணாவிடம் அப்பா சிறு வயதிலேயே பெரிய மனிதரிடம்போலத்தான் பேசுவார். ஆலோசனைகள் கேட்பார்.

ஆனால் விஜியை அவள் வயதுக்கு வரும் காலம்வரை அணைத்துக் கொஞ்சுவார். காலையில் அவர் பல்தேய்த்து டீ குடித்து வந்து சாய்வுநாற்காலியில் அமர்ந்ததும் ‘பெண்ணே’ என்று கூப்பிடுவார். விஜி மிகவும் பிகு செய்து கால்களை அரக்கி அரக்கி தேய்த்து அருகே சென்று நிற்பாள். அப்பா அவள் இடுப்பை வளைத்துக்கொண்டு ‘எந்தெடீ?’ என்று கேட்பார். அவள் ஒன்றுமே பேசுவதில்லை. எல்லா கேள்விக்கும் தலையாட்டல் முனகல் மட்டும்தான். அப்பா மெல்லிய குரலில் அவளிடம் கேள்விகள் கேட்பார். அவள் கன்னங்களை தடவுவார். கைகளில் முத்தம் கொடுப்பார்.

சன்னலருகே நின்று நான் அதை வேடிக்கைபார்ப்பேன். ஆனால் அப்படிப் பார்ப்பது அப்பாவுக்குப் பிடிக்காதென்பதனால் நான் அங்கே நிற்பதே அப்பாவுக்கு தெரியாது. அப்பா அவரது தோல்பையைத்திறந்து ஏதாவது தின்பண்டம் எடுத்து அவளுக்குக் கொடுக்கும்போது மட்டும் ‘டா’ என்பார். நான் ஓடிப்போய் சற்று தள்ளி நிற்பேன். ‘எடுத்தோ…மிச்சம் ரெண்டுபேருக்கும் வேணும்…எல்லாத்தையும் நீயே தின்னக்கூடாது’ என்று சொல்லிவிட்டு விஜி கையில் கொடுப்பார். விஜி அப்படியே என்னிடம் தந்துவிடுவாள். அதேபோல மாலையிலும் அரைமணி நேரம் விஜியைக் கொஞ்சுவதுண்டு.

விஜியைக் கொஞ்சுவதைக்கூட  என்னால் பொறுத்துக்கொள்ள முடியும் அப்பா பக்கத்துவீட்டு பெண்குழந்தைகளையும் அதேபோல கொஞ்சுவார். விஜியுடன் வேறுபெண்குழந்தைகள் இருந்தால் எல்லாரையும் சேர்த்துத்தான் கொஞ்சுவார். ஆண்குழந்தைகளிடம் ”எந்தெடா?’ என்ற மெல்லிய அதட்டல் மட்டும்தான். ஆனால் என் அப்பாவிடம் ஒரு மிகச்சிறந்த பண்பு இருந்தது. அந்த அதட்டல் எல்லா அப்பாக்களும் செய்வதுதான். அதற்கு அடுத்த கேள்வி ‘நீ பாகுலேயன் மகன்தானே?’ என்று இருக்கும். அப்பா அப்படிக் கேட்கமாட்டார். பையனின் பெயரைச் சொல்வார். அதற்கு அடுத்த வழக்கமான சொற்றொடர் ‘போய் படிடா, போடா’ .அப்பா அதைச் சொல்லவே மாட்டார். எத்தனாவது கிளாஸ் படிக்கிறாய் என்றுகூட கேட்க மாட்டார்.

விஜியிடம் அப்பா என்னதான் சொன்னார் என்று நான் திருப்பித்திருப்பி கேட்பேன். அவள் சொல்ல மாட்டாள். சொல்ல அவளுக்குத்தெரியாது. நான் அவளைக் குட்டுவேன். கன்னங்களில் நகம் பட்டு ரத்தம் வரும்வரை கிள்ளுவேன். அவள் அழுது கண்ணீர் சொட்ட நிற்பாளே ஒழிய என்னைப்பற்றி புகார் சொல்ல மாட்டாள். ‘வானத்தில் பறக்கும்போது கூட்டிக்கொண்டு செல்லமாட்டேன்’ என்று சொல்லுவேன். அக்காலத்தில் எனக்கு வானத்தில் பறப்பது பெரிய கனவாக இருந்தது. ஆறாம்வகுப்பில் படிக்கும்போதுகூட வினோதபதார்த்தசிந்தாமணி என்ற பழைய நூலை கற்று அதிலிருந்து ஒரு மந்திர மை செய்ய பலகாலம் முயன்றுகொண்டிருந்தேன். கண்திறக்காத கழுகுக்குஞ்சின் தூவல் அதற்கு தேவைப்பட்டது. அது எங்களூரில் கிடைக்கவில்லை.

ஒருமுறை கடும் கோபத்தில் ஒரு பீங்கான் துண்டை எடுத்து விஜியை கழுத்துக்கு கீழே மேல்மார்பில் கிழித்துவிட்டேன். அந்த அளவுக்குக் காயம் படும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது ஓணம். அவள் நீலநிறத்தில் வெள்ளிச்சரிகைக் கட்டம்போட்டு பளபளவென இருந்த நைலக்ஸ் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். அவள் ஒன்றாம்வகுப்பு படித்த வயது. அந்தப் பாவாடை சட்டையுடன் நாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு கறுப்பு வெள்ளைப் படம் என் சித்தப்பா வீட்டில் இருக்கிறது.

அன்று என்னுடைய நிக்கர் எனக்குப் பிடிக்கவில்லை. அப்பா அன்றெல்லாம் சீட்டித்துணி எடுத்து எனக்கும் அண்ணாவுக்கும் சட்டை நிக்கர் தைக்கக் கொடுப்பார். நிக்கர் எப்போதுமே காக்கிதான். சிலசமயம் சாம்பல் நிறம். சிறைக்கைதிகள் போடுவதுபோல கட்டம்போட்ட சட்டை. ஏன் ஆண்கள் நைலக்ஸ் துணி போடக்கூடாது?  எனக்கு அந்த பாவாடைசட்டையைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ‘போடீ போடீ ‘என்றேன். என் பின்னாலேயே வந்தாள்.

நான் கிழித்ததும் ரத்தம் கொட்டியது. அப்போதும் அவள் பேசாமல்தான் நின்றாள். உடைகள் முழுக்க ரத்தம்.நைலக்ஸ் ஆனதனால் பின்னர் கழுவி விடமுடிந்தது. கைகளில் ரத்தம். நான்தான் பயந்துபோய் ஓடிச்சென்று அம்மாவிடம் ‘விஜி கீழே விழுந்து காயம்…ரத்தம் வருது..’என்று சொன்னேன். அம்மாவும் ஓடிவந்து அதைப்பார்த்து நம்பிவிட்டாள். ‘அய்யய்யோ’ என்று அலறி அவளை இழுத்து வரும்வழியில் அப்பா வந்தார். ”எந்தெடா?’என்பதற்குள் என் மூளை மேலும் கூர்மையாகி ”விஜி ஒரு பீங்கான் துண்டை வச்சு இப்டியே அறுத்துக்கிட்டா’ என்றேன்

அம்மாவுக்கு உண்மை புரிந்து எட்டி என்னை ஓங்கி அறைந்தாள். ”நாயே பொய்யா சொல்றே? எதுக்குடா அவளை வெட்டினே..” நான் பாய்ந்து ஓடி தோட்டத்துக்குள் மறைந்தேன். அப்பா விஜியை கம்பவுன்டரிடம் காட்டுவதற்குக் கொண்டுசென்றார். நான் பசியுடன் திரும்பி வந்தபோது அம்மா என்னை பிடித்து மீண்டும் அடித்தாள்.” உனக்கு சோறும் கெடையாது ஒரு மண்ணும் கெடையாது. அப்பா வரட்டும்..வந்தபிறகு நீ சாப்பிட்டால் போதும்” அப்பா வந்து அடி வாங்கியபின் சாப்பிடுவதற்காக நான் திண்ணையில் காத்திருந்தேன்.

அப்பா வந்தார். விஜியை வாங்கிய அம்மா ”என்ன சொன்னார் உபதேசியார்?”என்றாள். ”ஒந்நுமில்லை”என்று சொல்லி அப்பா போய் ஈஸிசேரில் படுத்தார். நான் அடிவாங்க தயாராக நின்றேன். அம்மா என்னைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் ”இந்தச் சின்னவன் சொன்னா சொன்னபேச்சு கேக்கிறதில்லை… எதுக்கெடுத்தாலும் முரட்டுத்தனம்” என்றாள். விஜி என்னருகே வந்தாள். அவள் உடலில் டிங்க்சர் அயோடின் நெடி. மார்பில் பெரிய பஞ்சு ஒட்டவைக்கப்பட்டிருந்தது.ஒரு மாத்திரைப்பெட்டியை கொண்டு வந்து என்னிடம் காட்டினாள். நான் அதை வாங்கி பார்த்தேன். மாத்திரை மணம்

”என்னான்னு கேளுங்க”என்று அம்மா சொன்னாள். அப்பா ”சரி….அவளுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னா அப்றம் உனக்கு என்ன?”என்று சொல்லிவிட்டார். என் வாழ்நாள் முழுக்க அப்பா என்னை பெரிய விஷயங்கள் எதற்கும் கண்டித்தது கிடையாது. சின்னவிஷயங்களுக்குத்தான் கோபம் கொண்டு பாய்ந்துவருவார்.பெரிய விஷயம் எனக்கே தெரியும் என்று எண்ணினாரோ என்னவோ.

நான் விஜியை என் சொத்தாகவே எண்ணினேன். அவளை பிறர் தொடுவது எனக்குப் பிடிக்காது. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அவளை சும்மா கூட்டிக்கொண்டு சென்று என் அருகே கிளாஸில் வைத்துக்கொள்வேன். அவள் நைலக்ஸ் கவுன் போட்டிருப்பதனால் என் வகுப்புத்தோழர்கள் தோழிகளுக்கெல்லாம் அவளைப் பிடிக்கும். அவளைப் பார்க்க சுற்றும் கூடுவார்கள். சாக்குகட்டி, சீனிமிட்டாய், ரோஜாப்பூ என்று பரிசுகள் கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் அவள் சார்பில் நானே வாங்கி அவளுக்குக் கொடுப்பேன். நாகம் ஆசாரி சிலேட்டில்  அற்புதமாக படம் வரைந்து காட்டியபோது அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். அதன்பின் நான் ஆசாரியை அவளருகே நெருங்க விடவில்லை.

விஜி மூன்றாம் வகுப்புவரும் வரை நான் தான் அவளைக் கூட்டிவந்து கிளாஸில் அமரச்செய்துவிட்டு என் கிளாசுக்குப் போவேன். இடைவேளையில் வந்து தண்ணீர் குடித்தாயா என்றெல்லாம் கேட்டுக்கொள்வேன். அவள் தலையில் வைத்திருக்கும் பூவை வேறு பெண்கள் பறித்திருப்பார்கள். அவளுடைய சிலேட்டுக்குச்சி காணாமலாகியிருக்கும். கண்ணீர் தளும்பலை வைத்து துப்பறிந்து கிளாஸிலேயே விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுப்பேன். அதற்காக ஆசிரியரிடம் தண்டனை பெறுவேன்.

நான் படிக்கும்போது அந்த பிராந்தியத்திலேயே விஜி வரக்கூடாது என்பது அம்மாவின் ஆணை. நான் மானசீகமாக விஜியுடன் பேசுவதுபோல உரக்கக் கத்துவேன். இரவு தூங்கப்படுக்கும்போது அருகருகே பாயில் கிடந்துகொண்டு முணுமுணுவென பேசிக்கொண்டிருப்பேன். ‘என்ன பேச்சு அங்க? விடிய விடிய பேசினா தீராத பேச்சு?”என்று அம்மா குரல் கேட்கும். காலையில் எழுந்ததுமே அங்கேயே அமர்ந்துகொண்டு மிச்சத்தைப் பேச ஆரம்பிப்பேன்.

என் மனதில் இப்போதும் எல்லா சிந்தனையும் யாரிடமாவது சொல்வது போலத்தான் ஓடிக்கொண்டிருக்கும். அதற்குக் காரணம் சின்னவயதிலிருந்த இந்தப் பழக்கம்தான். ஒருமுறை கொட்டாரம் பள்ளிக்கூடத்தில் ஒருபக்கம் முழுக்க சிலேட்டில் எழுதிவிட்டு என்னை மறந்து ‘விஜீ நான் ஒரு பக்கம் எழுதினேனே’ என்று கூவினேன். விஜி வீட்டில் இருந்தாள். ஆசிரியர் என்னை அடித்தார். என்னுடன் மானசீகமாக அவள் இருந்துகொண்டிருந்தாள்.

பின்னர் நான் வாசகனாக வளர்ந்தேன். விஜிக்கு வாசிக்கும்பழக்கம் ஏதுமில்லை. அவளிடம் வாசித்தவற்றை நான் என் கற்பனையைக் கலந்து விரிவாகச் சொல்வேன். நான் பேசுவதை மெல்லிய சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருப்பாள். வீட்டில் இருக்கும்போது ஏதாவது வேலைசெய்துகொண்டே இருப்பது அவள் வழக்கம். தென்னை ஓலை சீவி துடைப்பத்துக்குக் குச்சி செய்வது, புளிகுத்துவது, பனையோலையில் ஏதாவது பின்னுவது. கீழே முற்றத்தில் அவள் வேலைசெய்ய நான் திண்ணையில் அமர்ந்தபடி சாண்டில்யன் நாவல்களின் கதைகளை உணர்ச்சிப்பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருப்பேன். ‘என்ன அண்ணனும் தங்கச்சியும் கதை சொல்லுதிகளாக்கும்?’ என்று தங்கம்மை கேட்டால் அவள் கண்களில் சிரிப்பு தெரியும்.

நான் பள்ளிசெல்லும்போது நாலடி தூரத்தில் வந்தபடி விஸ்வநாதன் போன்ற நண்பர்களிடம் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பாள். என்னுடைய ஆரம்பகாலக் கதைகளை அவளிடம் படித்துக்காட்டுவேன். முதல்கதை ரத்னபாலாவில் அச்சாகி ஐந்துரூபாய் மணியார்டர் வந்தபோது மொத்தப்பணத்துக்கும் விஜிக்கு பின்னல்குஞ்சலமும் ரிப்பனும் வளையலும்தான் வாங்கினேன்.அவளிடம் நான் விவேகானந்தர் பற்றியெல்லாம்கூட பேசியிருக்கிறேரன். அவளுக்கு ஏதாவது புரிந்ததா என்பதே சந்தேகம்தான்.

ஒருகட்டத்தில் நான் என் அரசியல் ஆன்மீக அலைக்கழிப்புகளால் அவளிடமிருந்து விலகி விலகிச் சென்றேன். அப்போதும் வீட்டில் என்னருகே அவள் வந்து அமர்ந்துகொள்வதுண்டு. எனக்கு என்ன ஆகிறதென அவளுக்குப் புரியவேயில்லை.  கல்லூரி இறுதியாண்டு படிக்கையில் நான் துறவியாக வேண்டுமென்று திடீர் எண்ணம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போனேன். அலைந்து திரிந்து அனைவரையும் கதிகலங்கச் செய்துவிட்டு நாற்பதுநாள் கழித்து திரும்பி வந்தேன். அப்பா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தார். அண்ணா பைத்தியம் போல இருந்தான். என்னைப்பார்த்ததுமே பாய்ந்து அடிக்க வந்தான். அம்மா என்னை அப்படியே கட்டிப்பிடித்து கதறி அழுதாள்.

ஆனால் விஜி சற்று தள்ளி சுவரில் சாய்ந்து கண்களில் ஈரப்பளபளப்புடன் நின்றாள். ஒன்றுமே சொல்லவில்லை. உணர்ச்சிக்கொந்தளிப்புகள் அடங்கியபின் ஆழ்ந்த மனச்சோர்வுடன் கொல்லைப்பக்க சாய்ப்பறையின் கட்டிலில் தனியாகப் படுத்திருக்கும்போது வந்து என் அருகே கால்மாட்டில்  அம்ர்ந்துகொண்டு என் கால்கள் மேல் கையை வைத்தாள். நான் அவளையே பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீர் தளும்பியிருந்தது. பின்னர் மெல்லிய குரலில் ‘இனிமேல் போவதென்றால் அம்மாவிடம் சொல்லிவிட்டுப்போ அண்ணா’ என்றாள். வீட்டில் இருக்க முடியாமல் நான் பத்துநாள்கழித்து மீண்டும் கிளம்பிச் சென்றேன். மீண்டும் செல்வேன் என அப்போது எனக்கே தெரியாமலிருந்தது, அவளுக்கு எப்படித்தெரிந்தது?

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2010

முந்தைய கட்டுரைஇரவு – அனுபவங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 24, ’நாம்X அவர்’