ஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…

dd

 

ஜெ

தேவதச்சனைப்பற்றிய கட்டுரைத்தொடர்கள் கவிதைபற்றி சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தொடர்விவாதம். சென்றமுறை ஞானக்கூத்தனுக்கு விருது அளிக்கப்பட்டபோது இத்தகைய ஒரு விவாதம் நிகழ்ந்திருக்கலாம் என இதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். இந்தவிவாதம் பொதுவாக தமிழில் நமக்குக் கவிதை பற்றி இருக்கும் பலவகையான சிக்கல்களைக் கடந்துசெல்ல உதவும் என நினைக்கிறேன்

அத்தனை கட்டுரைகளும் ஏறத்தாழ ஒரே முனையைக்கொண்டவை என்பதை கண்டேன். அவை அன்றாடவாழ்க்கையைக் கவிதையாக்குவது எப்படி என்பதைத்தான் பேசுகின்றன. சாதாரணமான வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளிலிருந்து சாஸ்வதத்தை தொட்டு மீட்டுக்கொள்வதைப்பற்றித்தான் எல்லா கட்டுரைகளும் சொல்கின்றன.

சபரிநாதனின் கட்டுரை செறிவாகவும் அறிவார்ந்த மொழியிலும் இருந்தது. நீங்கள் முன்பு எழுதும் கட்டுரைகளைப்போல, இப்போதைய கட்டுரை அதே விஷயங்களை சற்று உணர்வுகலந்து சித்தரிப்புகளைக்கொண்டு சொல்கிறது. இது புனைவெழுத்தாளனின் கட்டுரை. மண்குதிரை, கார்த்திக்,வேணுதயாநிதி, சுனில்கிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகளும் நன்றாக இருந்தன

சாரங்கன்

அன்புள்ள ஜெ

தேவதச்சன் கவிதைகளை அங்கிங்காக வாசித்திருக்கிறேன். மதுரையில் ஒருமுறை அவரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறேன். ஆனால் முழுமையாக அவரது கவிதைகளை தொட்டு உணர்ந்தேன் என்று சொல்லமுடியாது. அதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஒன்று தோன்றியது. அதாவது கவிஞர்கள் நிறைய எழுதுவதில்லை. ஆகவே நாம் எப்போதும் அவர்களுடன் இருப்பதில்லை. அவ்வப்போது ஒரு சிலவரிகள் மட்டும் நமக்குள் செல்கின்றன.

இப்படி ஒரு மையமாக அவரை ஆக்கி பலகோணங்களில் அவரைப்பற்றிப் பேசும்போது நாம் கவிதைகளுடன் பலநாட்கள் நெருக்கமாக இருக்கிறோம். பலவரிகளை விமர்சகர்கள் திரும்பத்திரும்பச் சொல்லி அவற்றை நம் உள்ளத்திலே நிலைநாட்டுகிறார்கள். உதாரணமாக ஜெல்லிமீனே என்ற கவிதையை சாதாரணமாக நாம் சிற்றிதழ்களில் கடந்துசென்றுவிடுவோம். அதை பலபேர் சொல்லி கேட்கையில் அது மனதிலே ஆழமாக பதிந்துவிடுகிறது. இப்போது அந்தக்கவிதையிலிருந்து வெளியே வரமுடியாமலேயே இருக்கிறது. அந்தவகையில் இந்த விவாதம் மிக அவசியமானது. எல்லா கவிஞர்களைப்பற்றியும் இதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆர்.சீனிவாசன்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

தேவதச்சன் கவிதைகளைப்பற்றிய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. அவை தேவதச்சனின் பல கவிதை வரிகளுக்குமேல் விளக்கடித்துச் சுட்டிக்காட்டுன. நாம் கோயிலிலே சிற்பங்களைப்பார்க்கும்போது குத்துமதிப்பாகவே பார்ப்போம். யாராவது கைடு வந்து டார்ச் அடித்து சுட்டிக்காட்டி விளக்கும்போதுதான் அவையெல்லாம் தெளிந்து தெரியும். அட ஆமால்ல என்பதுபோல இருக்கும். கவிதை விமர்சனங்கள் இத்தகைய ரசனையை உருவாக்கமுடியும் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன். அற்புதமான கட்டுரை திரு சபரிநாதன் அவர்கள் எழுதியது. அவர் ஒரு நல்ல பேராசிரியர் என நினைக்கிறேன்

சித்ரா

ஜெ சார்

தேவதச்சன் பற்றிய கட்டுரைகள் அவரை மிக நெருக்கமாக உணரச்செய்தன. ஜெல்லிமீனே என்ற கவிதையை சின்னப்பிள்ளைகள் பாட்டு பாடுவதுபோல பாடிக்கொண்டே இருந்தேன். அதிலுள்ள உருமாற்றம் அற்புதமானது. பார்ப்பவனாகவும் பார்ப்பதாகவும் மாறி மாறி தெரிவது. பார்ப்பதன் குதூகலமும் பார்க்கப்படுவதன் ஆனந்தமும் ஒரே சமயம். அதற்கு அதை ஜெல்லிமீன் என்று சொல்வது மிகச்சிறப்பான கற்பனை. உருவம் கிடையாது. ஆனால் உருவமென ஒன்று உண்டு. உருமாறுவதே உருவமாக இருக்கிறது இல்லையா? அற்புதமான கவிதை. அற்புதமான விளக்கங்கள் அதற்கு

 

நன்றி

செல்வா

முந்தைய கட்டுரைநினைவுகூர்தல்
அடுத்த கட்டுரைகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2