‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2

d d 7

2. அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள்

1986ம் வருடம் குற்றாலத்தில் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த கவியரங்கு ஒன்றுக்காக நான் காசர்கோடிலிருந்து வந்திருந்தேன். தமிழகத்தின் அத்தனை கவிஞர்களையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான ஒரு நிகழ்வாக அது இருந்தது. பூசல்கள், வம்புகள், கேலிகள், திடீர்நட்புகள், குழுபிரிதல்கள் என அன்று அது முக்கியமான ஒரு கொண்டாட்டம். இன்று வரை தொடரும் என் நெருக்கமான நட்புகள் பல அன்று அமைந்தவை. யுவன் சந்திரசேகரையும் தேவதச்சனையும் அன்றுதான் நான் சந்தித்தேன்.

கையில் வெற்றிலைப் பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டு, அடிக்கடி குலுங்கி சிரித்தபடி ,உற்சாகமாக பேச்சுகளில் கலந்து கொண்ட தேவதச்சனை முதற்கணத்திலேயே எனக்கு மிக அணுக்கமானவனாக உணர்ந்தேன். அத்துடன் யுவன் சந்திரசேகருக்கும் அவருக்குமான நெருக்கமான நட்பும் , கூடவே ஆசிரியர்– மாணவர் பாவனையும் என்னை மிகவும் கவர்ந்தன. யுவன் சந்திரசேகர் சொன்ன ஏதோ ஒன்று பிழையாக உள்ளது என்று நிறுவப்பட்ட உடன் தேவதச்சன் கைநீட்டி ”அருவியிலே போய் விழுய்யா” என்றார். யுவன் திரும்பி ”அருவியில் நீர் விழும்” என்றார். கவிஞர்களின் உரையாடல் என்று ஒன்று உண்டு என்று அன்று நான் நேரில் கண்டேன்.

அந்த நிகழ்ச்சிக்கு பின் தண்டபாணி, யுவன் சந்திரசேகர் இருவருடனும் சேர்ந்து கோவில்பட்டியில் யுவன் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கியிருந்தேன். அன்று மாலை தேவதச்சனின் சேது ஜுவல்லரி நகைக்கடைக்கு சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கௌரிசங்கர், வித்யாசங்கர், மாரீஸ் ஆகியோர் அன்று அந்த கடைக்கு வந்தனர். சற்று கடையில் கூட்டம் ஓய்ந்தபோது தேவதச்சன் எங்களை அழைத்துக் கொண்டு கோவில்பட்டியின் சந்தடிமிக்க தெருக்கள் வழியாக ஒரு விரைவு நடை சென்றார். பழைய ஆலயம் ஒன்றின் வாயிலில் அமர்ந்து கைவெள்ளை மறையும் இருட்டு வரை பேசிக் கொண்டிருந்தோம்.

தேவதச்சனின் உரையாடல் தவழும் குழந்தைகளின் விளையாட்டு போல எனக்குத் தோன்றியது. மிக உற்சாகமாக ஒரு கருத்தை பேசத் தொடங்கி தட்டி தட்டி முன்னேறுவார் .அக்கருத்தை முழுமையாக சொல்லிவிட வேண்டுமென்பது அவருக்கு முக்கியமல்ல. அடுத்த கருத்து வரும்போது முந்தைய கருத்தை பெரும்பாலும் பாதியிலே விட்டு விட்டு அதற்குச் சென்றுவிடுவார். ஒன்றுடன் ஒன்று சரியாகக் கோர்க்கப்படாத கருத்துகளின் ஒரு பெருக்காக அவருடைய உரையாடல் இருக்கும். அவை உடைந்த சொற்களில் முன்வைக்கப்படும். அவருக்கே உரித்தான சொல்லாட்சிகள் பல உண்டு. உதாரணமாக கவிதையை பாட்டு என்பார். நவீனக் கவிதையைக்கூட. க.நா.சு [மயன்] கவிதைகளை பாட்டு என்று சொல்லி புரிந்துகொள்ள கற்பனைக்கும் அப்பால் செல்லும் கூர்மை தேவை

ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு கருத்தும் வெவ்வேறு வகையில் நமது கற்பனையையும் சிந்தனையையும் சீண்டக்கூடியதாக இருக்கும். அவை நன்கு சிந்தித்து சென்றடைந்த இடங்கள் அல்ல. பெரும்பாலும் அந்தப்பேச்சின் உற்சாகத்தில் சென்று முட்டிக்கொண்டவையாகவே இருக்கும். விசித்திரமான கோணங்களில் பார்ப்பதன் வழியாக பெறப்பட்டவை. நம் பொதுப்போக்குச் சிந்தனையை, நடைமுறைப்புத்தியை திகைக்கச்செய்பவை. ஏதோ ஒரு வகையில் அவை நம்முடன் இருந்துகொண்டிருக்கும். இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின்னரும் நான் அன்றைய உரையாடல்களை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன் என்பதே அவற்றின் கூர்மைக்கான ஆதாரம்

தேவதச்சனின் இந்த பேச்சுமுறையை மட்டும் எடுத்துக் கொண்டு யுவன் சந்திரசேகர் அவருடைய கதைகளில் இஸ்மாயில் என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு உரையாடலில் இஸ்மாயில் சொல்கிறார். ”மழை எப்படி பெய்கிறது? கடல் மீது வெயில்படுவதனால் உருவாகும் நீராவி பூமியின் வெப்ப வேறுபாடுகள் காரணமாக நிலத்தை நோக்கி இழுக்கப்பட்டு குளிர்ந்து மழை பெய்கிறது என்று சொல்லலாம். இன்னும் இதே போல பல அறிவியல் காரணங்கள் சொல்லலாம். ஆனால் முக்கியமான ஒரு காரணம் உள்ளது. மழை பெய்யாவிட்டால் தாவரங்கள் வளராது. உயிர்கள் வாழ முடியாது”

முதல் பார்வைக்கு அபத்தமென்று தோன்றும் இந்த வரி அதன் மீது நமது கற்பனையோ தர்க்கமோ செயல்படத் தொடங்கும்போது விரிந்து ஒரு தத்துவ நிலைப்பாடாக மாறுவதைக் காணலாம். இந்தப்பூமி நாமறியாத ஒரு தர்க்கத்தால் அல்ல நாம் அன்றாடம் அறியும் ஒருகருணையால் கட்டப்பட்டுள்ளது என. இதை ஒரு குழந்தை சொல்லியிருக்கக் கூடும் என்பது தத்துவத்திலிருந்து அதைக் கவிதையை நோக்கி நகர்த்துகிறது.

மகத்தான தத்துவ வரிகள் பலவும் உலகியல் தருக்க நோக்கில், உடனடிப் பார்வையில் அபத்தமான பொருந்தாத கூற்றுகளாக இருப்பதைக் காணலாம். தேவதச்சனின் உள்ளம் அபத்தங்களைக் கொண்டாடும் நுண்ணுணர்வு ஒன்று உடையது. தர்க்கத்தை காலிடறிவிடுவதில் குதூகலிக்கும் தன்மைகொண்டது

அவரது பேச்சு ஒன்றில் இருந்து ஒன்றாக இப்புடவியின் ரகசியங்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்க்க முயல்கிறது. ஆனால் அந்த விளையாட்டின் குதூகலத்தை மட்டுமே இலக்காக்குகிறது . அன்று எங்கள் முதல் சந்திப்பின் உரையாடலில் வாயில் வெற்றிலை போட்டு மென்று சிரித்தபடி அவர் சொன்னார். ”உடல் என்பது என்றோ ஒரு காலத்தில் ஒரு blob ஆக இருந்துள்ளது. மொத்தையான ஒரு புரோட்டீன் வடிவம். வடிவமில்லை, ஒருதுளி ஒரு திரட்சி. வாய் வயிறு கை கால் எல்லாமே ஒன்றுதான். இன்றைக்கு அமீபா அப்படித்தான் இருக்கிறது”

பேசும்போது தனக்குத்தானே ஆமோதித்து சிரித்து தலையாட்டுவது அவரது வழக்கம் “இன்றைய உடல்களின் வடிவ முன்னோடி. அதற்கொரு வடிவம் என்று வந்தபோது உருவான முதல் உறுப்பு வாயாகத்தான் இருக்க முடியும். விழுங்குவதற்கென. அமீபாவின் உடல் பிளந்து இன்னொன்றைச் சூழ்ந்து கொள்வதே வாய் உருவாவதல்தான். அது நிரந்தரமானபோது வாய் ஆகியது. எனவே உடலில் ஆதியான உறுப்பு வாய்தான்”

தேவதச்சன் பேசும்போது பொங்கிப்பொங்கி சிரிப்பதுண்டு “சிற்றுயிர்களின் வாய்களே துடிப்பாக இருக்கின்றன. வாயால் கவ்விக்கொண்டு ஒட்டிக்கிடக்கின்றன நீருயிர்கள். வாயே முதன்மையானது. ஆகவே அது அத்தனை நுண்ணுணர்வு கொண்டதாக இருக்கிறது. காமத்தில்கூட வாய்தான் அத்தனை முக்கியத்துவம் பெறுகிறது. பிறந்த குழந்தை வாயைத்தான் முதலில் அசைக்கிறது. வாயால் கவ்விக்கொள்ளும் பயிற்சி மட்டும் தான் அதற்கு இருக்கிறது. பிற அனைத்தையும் இங்கு வந்தபிறகு தான் அது கற்றுக் கொள்கிறது…”

நான் சிரித்து “வாய்முதல்வாதம்” என்றேன். “ஆமால்ல?” என்று அவரே வியந்தபின் அப்படியே விட்டுவிட்டு இன்னொன்றுக்குச் சென்றுவிட்டார். பிறகு அந்தவரியை அவரே நினைத்திருக்கமாட்டார். இவ்வாறு விரித்தெடுத்துக் கொண்டே செல்வதை ஒரு நிலைப்பாடாக ,ஒரு கொள்கையாக அவர் ஆக்குவதில்லை. இப்படி பார்ப்பதின் விந்தையை மட்டும் விளையாட்டு பொருளை திருப்பி திருப்பிக் காட்டும் குதூகலத்துடன் காட்டிவிட்டு அப்படியே நின்ற இடத்தில் கீழே போட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு சென்று விடுவார்.

உண்மையில் அப்போது அவருக்கு இது ஒரு முளைவிளையாட்டா என்னும் ஐயம் எழும். அதுவும் அல்ல. ஏனென்றால் எதையாவது ஒன்றைச் சொல்லிவிட்டோம் என்னும் மிதப்பை அவர் அடைவதில்லை. இந்த நோக்குக்கு ஒரு தொடர்ச்சி அவரிடமிருப்பதுமில்லை. அவரது மாணவர்களிடம் அவரது சொற்றொடர்கள் பிற்பாடு ஆணித்தரமான கொள்கைகளாக வெளிப்படக்காண்கையில் புன்னகையே எழும்ம். தேவதச்சனை அறிந்தவர்கள் அந்த வரிகள் அனைத்தின்மேலும் ’இது தேவதச்சன் வீட்டில் திருடப்பட்டது’ என்று பொறித்திருப்பதை அறிவார்கள்.

அருவமாக உழன்றுகொண்டிருப்பதற்கு கவிதையியல் ஏற்றது என்பதனால் அவருக்கு பிடித்தமானது அதுவே. ‘கவிதையிலே இருக்கிற காலம் எது? அது எழுதப்பட்டது ஆயிரம் வருஷம் முன்னாடியா இருக்கலாம். ஆனா நாம அடையற ஆச்சரியம் நிகழ்காலத்தில. அது நித்யமான நிகழ்காலத்திலே நடந்திட்டே இருக்கு. சாலமன் கிரண்டி ஒவ்வொரு வாசிப்பிலயும் பிறந்து அப்பவே செத்திடறான். வைரஸ் மாதிரி லட்சக்கணக்கான தலைமுறைகளை அவன் தாண்டியாச்சு. பிச்சமூர்த்தியோட கொக்குக்கு இன்னும் மீன் கெடைக்கலை. நிழலப்பாத்து அது முடிக்கலை…”

தேவதச்சன் தத்துவத்தில் பட்டப் படிப்பு பெற்றவர். தமிழ்க் கவிஞர்களில் இந்தத் தனித்தகுதி கொண்டவர் அவர் ஒருவரே என்று நினைக்கிறேன். தத்துவத்திற்கும் கவிதைக்குமான உறவு மிக நெருக்கமானது. நவீன இலக்கியக் காலகட்டத்திற்கு முன்பு வரை கவிதை தத்துவம் என்னும் இரு பிரிவுகள் இருந்ததா என்பதே ஐயமாக இருக்கிறது. ஏனென்றால் பெரும் தத்துவவாதிகள் என்று நாம் அறியும் பலர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்கள். உதாரணமாக நம்மாழ்வாரை வைணவத் தத்துவத்தின் தோற்றுவாய்களில் ஒன்று என்று சொல்வார்கள். அவர் பெருங்கவிஞரும் கூட. கதே கவிஞராக இருந்த தத்துவஞானி.

நவீன காலகட்டம் பல அறிவுத் துறைகள் தங்கள் எல்லைகளை வகுத்துக் கொண்டு தனி வழி கண்ட காலகட்டம் .கவிதையும் தத்துவமும் பாகப்பிரிவினை செய்து தனிவீடுகள் கட்டிக்கொண்டன. அந்த பிரிவினை நிகழ்ந்தபின்னரும் அவை இரண்டும் கொள்ளும் உறவும் பிரிவும் விவாகரத்தான தம்பதியினரின் உறவாடல் போல நீடித்தது. டி.எஸ்.எலியட்டின் போன்ற ஆரம்பகால இலக்கியவிமர்சகர்கள் அந்த உறவை ஆராய்ந்து இரண்டுக்குமான இடங்களை பிரித்து அளிக்கிறது. ஒரு பின் மணமுறிவு உளவியல் ஆலோசனை போல!

எலியட் கவிதை தத்துவத்தை அளிப்பதில்லை என்கிறார், ஆனால் தத்துவத்திற்குச் செல்லும் வழியை உருவாக்குகிறது. தத்துவம் கவிதைக்குப் பங்களிப்பதில்லை, ஆனால் கிரியாஊக்கியான அதன் முன்னிலையில் கவிதை நிகழ்கிறது என்கிறார். ஆனாலும் கவிதை மொழிவெளிப்பாடு என்றும் தத்துவம் மொழியை கருவியாக மட்டுமே கொண்ட தர்க்கம் என்றும் வரையறுக்கப்பட்டது.

ஆனால் விரைவிலேயே விட்கென்ஸ்டீன் போன்ற தத்துவவாதிகள் தத்துவத்தின் சவாலே மிகச்சரியான மொழி வெளிப்பாடுதான் என்று வரையறுக்க முற்பட்டபோது தத்துவம் மீண்டும் கவிதைக்கு அருகே வந்ததுது. கவிதையைப்போலவே அதுவும் முதன்மையாக ஒரு மொழிநிகழ்வாக மாறிவிடுகிறது. நீட்சேயோ விட்கெட்ன்ஸ்டீனோ கவிஞர்கள் அல்ல என்று எவராவது கூறமுடியுமா? தத்துவம் கவிதைக்கு மிகப்பெரிய பீடம் ஒன்றை அமைக்கிறது என்று சொல்ல்லாம் தத்துவமற்ற கவிதை நடைமுறைவாழ்க்கையின் வெறும்தரையில் நின்று கொண்டிருக்கையில் தத்துவக்கவிதை ஒருபடி மேலாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.

தத்துவம் கவிதையாகாது என்பது உண்மை ஆனால் கவிஞன் தத்துஆவாதியாக இருக்கும்போது கவிதை மேலதிக அழுத்தமும் தீவிரமும் கொள்கிறது என்பது இன்னொரு உண்மை. இப்படிச் சொல்லலாம். கவிஞன் தத்துவவாதியாக இருக்கையில் தத்துவம் எடுத்துக் கொள்ளும் அடிப்படை கேள்விகளை தானும் சென்றடைகிறான் அதற்கு தத்துவம் தன் தர்க்க ஒழுங்கு முறையின் ஊடாக அடையும் விடைகள் அனைத்தையும் தொட்டு அவற்றை தவிர்த்து கவிதை மட்டுமே சென்றடையக்கூடிய இடம் ஒன்றைக் கண்டுகொள்கிறான்.

ஜெர்மானிய தத்துவ ஞானி கதே பற்றிய விவாதம் ஒன்றில் தாமஸ் மன் இதை சுட்டிக் காட்டுகிறார். கவிஞராக இருக்கையில் கதே தத்துவ ஞானியாக தான் அடைந்த அனைத்து ஞானத்தையும் பயன்படுத்திய பின் அவற்றை துறந்து மேலே செல்கிறார் என்கிறார்.

தமிழ் நவீன கவிதையை திரும்பி பார்க்கையில் அதன் கவிஞர்களில் பெரும்பாலும் அனைவருக்குமே தத்துவ அறிமுகம் இல்லையென்பது ஒரு குறையாகவே தென்படுகிறது. நகுலன்,பிரமிள், சி .மணி, சுந்தர ராமசாமி ,க.நா.சு போன்றவர்களின் தத்துவ வாசிப்பு மிக எல்லைக்குட்பட்டது. பொதுவாக ஒரு அறிவு சூழலில் புழங்கும் தத்துவத்தை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தார்கள். இக்காரணத்தால் ஏற்கனவே தத்துவத்தில் மிக விரிவாக கையாளப்பட்டுள்ள விஷயங்களை அவற்றை அறியாமல் புத்தம் புதிதென கவிதையில் இவர்கள் தூக்கி முன்வைப்பதைக் காணலாம்

உதாரணமாக சுந்தர ராமசாமியின்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா

என்னும் கவிதை தத்துவம் கையாளும் ஒரு தொடக்க வினா மட்டுமே. அந்த உவமையின் நூற்றுக்கணக்கான வடிவபேதங்களை நாம் தத்துவத்தில் காணமுடியும். இவ்வாறு தத்துவவாதியின் நோக்கில் மிக அற்பமானவை என்று தோன்றக்கூடிய வினாக்களையும் மிக எளிமையான விடைகளையும் வைத்து எழுதப்பட்ட பல நூறு தமிழ் நவீனக் கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.

இன்றைய நிலையில் நவீன தத்துவம் நவீனக் கவிஞனுக்கு எதை எழுத வேண்டும் என்று சொல்ல முடியாது, எதை எல்லாம் கவிதையில் எழுதவேண்டியதில்லை என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. தர்க்கப்படிக்கட்டுகளினூடாக தத்துவம் சென்றடைந்த உச்சம் என்பது கவிதை தொடங்குவதற்கான முதல்படியே .

பல்லாயிரம் விவாத, அக்கப்போர், விளக்கப் பக்கங்களின் ஊடாக நீட்சே சென்றடைந்த ஒரு பெருநிலை உண்டு. அது தர்க்க ஒழுங்கின் முழுமை என்று சொல்ல்லாம். அங்கு நேர் தலைகீழாக திரும்பி முற்றிலும் தன்னை கலைத்துக் கொண்டு பைத்தியத்தை நோக்கி அவர் சென்றார். தன் உடலை திறந்து கொண்டு வெளி வருவது போல ஜராதுஷ்டிரர் தன்னிலிருந்து வெளிக்கிளம்புவதை ஜராதுஷ்டர் கண்டார். இவ்வாறு பேசினார் ஜராதுஷ்டிரர் என்பது தத்துவ ஞானியின் கவிதை அல்லது கவிஞனின் தத்துவ ஞானம். திருக்குறள் போல

தேவதச்சனின் தத்துவக்கல்வி அவருக்கு அளித்தது என்ன? இரு வினாக்களை நான் அவரிடம் கேட்டிருக்கிறேன்.,ஒன்று, தத்துவக்கல்விக்கு அவர் போவதற்கான காரணம் என்ன ?இரண்டு அதுஅவருக்கு எவ்வகையில் உதவியது?. அவர் குடும்பத்திற்கு ஏற்கனவே பொன் சார்ந்த வணிகம் இருந்தது. ஒரு பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக கடையில் வந்து அமர்வதே அவருடைய எதிர்காலமாக முன்னரே வகுக்கப்பட்டிருந்தது. ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படிக்கவேண்டும் என்று சொன்ன போது அவர் தேர்ந்தெடுத்தது தத்துவத்தை. அந்த தத்துவப் பட்டப்படிப்பு சென்னையில் மட்டும் இருந்ததால் சென்னை அவருக்கு உகந்த இடமாக இருந்தது. சென்னை மேல் உள்ள ஈடுபாடும் அவர் தத்துவத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்

ஆனால் முதன்மையான காரணம் மிக இளவயதிலேயே அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொண்டு தான் சிந்திப்பதாகவும் அச்சிந்தனைகள் ஒருமுகபடுத்தப்படாமல் வெறும் எண்ண ஓட்டங்களாக அலைவதாகவும் அவருக்கு தோன்றியிருந்தது. தத்துவக்கல்வி மூலம் அவ்வினாக்களை சரியான முறையில் தொகுத்து அமைத்துக் கொள்ள முடியும் என்று அவர் நினைத்தார். தத்துவத்தின் முறைமையும் தத்துவ வரலாறும் அதற்கு உதவுமென எண்ணினார்.

ஆனால் நான்காண்டுக்கால தத்துவக்கல்வி அவருக்கு அந்த முறைமையை அளிக்கவில்லை. தத்துவம் சிந்தனைக்கு அளீக்கும் மிகப்பெரிய கொடை என்பது தனித்தனி சிந்தனைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு கட்டுமானமாக ஆக்குவதற்கான பயிற்சியைத்தான். தத்துவக்கல்வி பெற்ற அனைவரிடமும் இவ்வியல்பு உருவாகியிருப்பதை பார்க்கலாம். அவர்கள் சிந்திப்பவை அனைத்தையும் ஒரு துளிகூடச் சிந்தாமல் தொகுத்து ஒற்றைக்கட்டிடமாக கட்டி எழுப்பிவிடவே எப்போதும் முயல்வார்கள்.

இரு காரணங்கள், ஒன்று அவர்கள் பயிலும் அத்தனை தத்துவ மேதைகளும் பிரம்மாண்டமான தத்துவக் கட்டிடங்களை கட்டிவிட்டு சென்றவர்கள். ஒரு ஹெகலோ சங்கரரோ ஆகிவிட வேண்டுமென்ற கனவு இல்லாத தத்துவ மாணவர்கள் குறைவு .இரண்டாவதாக, தத்துவம் என்பது பல்வேறுவகையில் தனிச் சிந்தனைகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்து அமைப்பாக ஆக்குவதற்கான கருவிகளை ஒருவனுக்கு அளிக்கிறது. அக்கருவிகளில் அடையும் பயிற்சியே அதில் வெற்றி என்று கொள்ளப்படுகிறது.

பகுத்தல், தொகுத்தல், குறைத்தல் போன்ற தர்க்க வழிமுறைகள். நம்பிக்கைவாதம். சாராம்ச வாதம். புறவய நிரூபணவாதம். ஆழ்நிலை வாதம். அவநம்பிக்கை வாதம் போன்று பல்வேறு தத்துவநோக்குகள் அவனுக்குக் கிடைக்கின்றன. சிந்தனையைத்தூண்டும் பல்லாயிரம் மேற்கோள்கள் மூளையை நிறைக்கின்றன. அவற்றை அவன் பயன்படுத்தியாகவேண்டியிருக்கிறது.

ஒருவகையில் தத்துவக்கல்வி ஒருவருடைய சிந்தனையை கரை கட்டிவிடுகிறது என்று சொல்லலாம். தத்துவக்கல்வி என்பது தத்துவ பேராசிரியரை உருவாக்குவதற்கான கல்வி, தத்துவ ஞானியை உருவாக்குவதற்கான கல்வி அல்ல என்று கூட சொல்லத் துணிவேன். தத்துவம் ஒருவனின் வாழ்வனுபவமாக பிறந்து வாழ்க்கையினூடாகவே பரிசீலிக்கபடும்போதே அது செயல்படுகிறது. மற்றபடி அது பேணப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது, அவ்வளவுதான்

தேவதச்சனை நான் முதலில் சந்தித்தபோது எனக்கேற்பட்ட எண்ணம், அவர் தத்துவத்தில் மித மிஞ்சிய ஆர்வமும் அதில் முறையான கல்வியும் இல்லாதவர் என்பதே .யுவன் சந்திரசேகரிடம் ஒரு முறை அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் தத்துவத்தில் முறையான கல்வி கற்றவர் என்று அறிந்தேன். இது ஒரு வியப்பையே என்னுள் ஏற்படுத்தியது. அந்தக் கல்வியின் தடயம் எதுவும் அவர் பேச்சில் இல்லையே என்று நான் கேட்டேன். தத்துவத்தில் தான் எதில் எல்லாம் ஈடுபடவேண்டியதில்லை என்று அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் தத்துவக்கல்வியை அடைந்திருக்கிறார் என்று யுவன் சந்திரசேகர் சொன்னார். தத்துவத்தை அவர் ஒரு எம்புப்பலகையாக மட்டுமே மதிக்கிறார் என்றார்.

ஒரு தத்துவ மாணவனை பெரிதும் கவரக்கூடிய கிரேக்க தர்க்க இயலில் முழுமையாகவே தேவதச்சன் ஆர்வமிழந்திருக்கிறார். ஓரளவு கிரேக்க தத்துவப்புதிர்களிலேயே அவருடைய ஆர்வம் சென்றது. தொன்மங்களைத்தான் அவர் அதிகமும் கவனித்திருக்கிறார். அவர் சிந்தனைத் துறைக்குள் புகுந்த காலமென்பது உலக தத்துவசிந்தனை இரு பெரும் பரப்புகளாக பிரிந்து பூசலிட்டுக்கொண்டிருந்த காலம். மார்க்சிய சிந்தனைகள் அன்று மைய ஓட்டமாக இருந்தன. மரபார்ந்த செவ்வியல் மார்க்சியம் ஒரு தரப்பாகவும் அதை உள்வாங்கியும் மறுத்தும் எழுந்த ஐரோப்பிய நவமார்க்சியம் இன்னொரு தரப்பாகவும் எழுந்து ஒன்றுடனொன்றும் பிறவற்றுடனும் போராடிக் கொண்டிருந்தன.

தமிழில் அப்போராட்டம் நிகழும் களங்களில் ஒன்றாக அவருடைய சொந்த ஊரான கோவில்பட்டி இருந்தது. மில்களின் ஊர் என்பதனால் தொழிற்சங்க அரசியல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த்து கோவில்பட்டியில். அதில் ஒரு தொடர்ச்சியாக மார்க்சிய வகுப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. நா வானமாமலை, எஸ்.தோத்தாத்ரி , சி கனகசபாபதி போன்ற செவ்வியல் மார்க்சிய அறிஞர்கள் சமூகத்தையும் பண்பாட்டையும் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றின் விதிகளைக் கொண்டு விளக்க முயன்றனர். பொருளியல் அடித்தளத்தின் மேற்கட்டுமானமே பண்பாடும் கலையும் என்னும் பார்வை அழுத்தமாக வேர் ஊன்றியிருந்த்து.

அதன் மறு தரப்பாக எஸ்.என்.நாகராஜன், ஞானி போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட மேலைமார்க்சிய கோட்பாடுகள் பலவகையிலும் உருமாற்றம் அடைந்து ஒரு விவாதத் தரப்பாக ஒலித்து கொண்டிருந்தன. அவற்றுக்கிடையேயான விவாதம் சிற்றிதழ்களின் கணிசமான பக்கங்களை அன்று நிறைத்திருந்தது. அதில் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் சொல்வதற்கு ஏதாவது இருந்தது.

இந்த மார்க்சியத் தரப்புக்கு எதிர்த்தரப்பாக தமிழ்ச்சூழலில் சிறுவட்டத்திற்குள் இருத்தலியல் தீவிரமாக பேசப்பட்டது. தத்துவத்தை ஒருவகையிலும் தன் பேச்சிலும் எழுத்திலும் நேரடியாக தொட்டுக் கொள்ளாதவர் என்றாலும், தமிழில் இருத்தலியல் சார்ந்த சிந்தனைகளின் தொடக்கம் என்று க நா சுவையே சொல்ல வேண்டும். இருத்தலியத்தை இன்றைய அத்வைதம் கொண்டு புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே க நா சு – விடம் இருந்தது. இருத்தலியத்தை அத்வைதத்தால் எதிர்கொண்ட கேரள தத்துவஞானியாகிய ஆத்மாநந்தரிடம் க.நா.சுவுக்கு இருந்த ஈடுபாடு இதனால்தான்

க. நா .சுவிடமிருந்து தொடங்கும் ஒரு இருத்தலியல் ஈடுபாட்டாளர்களின் மரபை தமிழில் நாம் காண முடியும். சுந்தர ராமசாமி, சி.மணி, நகுலன் ஆகியோரை அதற்கான வலுவான உதாரணங்களாக சுட்டிக் காட்டலாம். தமிழ் நவீனக் கவிதை இயக்கம் இவ்விரு தரப்பையும் ஒட்டி இருவகை நகர்வுகளை தனக்கென உருவாக்கிக் கொண்டது.

மார்க்சியத் தரப்பிலிருந்து எளிய மரபுக்கவிதைகள் உருவாகி பின்னர் தயக்கத்துடன் உரைநடைக்கு வந்து வானம்பாடிக் கவிதைகளாக உருவம் கொண்டன. சமூக மாற்றத்திற்கு அறைகூவுபவை, மக்களை நோக்கி நேரடியாக பேசுபவை, உணர்ச்சிகரமானவை ,வாதிடுபவை .ஆகவே ஒற்றை படையானவை.

அந்த அழகியலை முற்றாக மறுத்து உருவான நவீனக் கவிதை இயக்கம் ஒன்று எழுத்து சிற்றிதழ் வழியாக உருவாகி கசடதபற இதழில் முழுமையடைந்தது. தனிநபர் சார்ந்தது, அகவயமானது, உணர்ச்சிகளையோ கருத்தியல் சார்புகளையோ நம்பாதது. அது தன்னை தன்னந்தனியனாக உணர்ந்து காலப் பெரு வெளி முன்னும் பிரபஞ்ச விதி முன்னும் வைத்து ஆய்வது, உறவுகளையும் உணர்வுகளையும் லட்சியங்களையும் ஐயுறுவது.

இன்று பார்க்கையில் ஆரம்ப கால நவீனக் கவிதைகள் அனைத்துமே இருத்தலியல் கவிதைகளாக தோற்றமளிக்கின்றன. உதாரணமாக, சி.மணியின், ”அறைவெளி” [தப்பிவிட்டேன் என்று விழித்தேன். சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே வானம்; நான்கு பக்கமும் பூவிருள் கூரை, சுவர்கள் எதுவும் இல்லை ] பசுவய்யாவின் சவால் [நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை துடைகள் பிணைத்துக் கட்ட கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில் ] நகுலனின், ”ராமசந்திரன்”. [ராமச்சந்திரனா. என்று கேட்டேன். ராமச்சந்திரன். என்றார். எந்த ராமச்சந்திரன். என்று நான் கேட்கவில்லை. அவர் சொல்லவுமில்லை] போன்ற கவிதைகள்.

இம்மூன்று கவிதைகளையும் வரிசையாக அடுக்கி வைக்கும் ஒருவர் இருத்தலியத்தையே ஒரு சிறியவிதை வடிவில் கண்ட பரவசத்தை அடையக்கூடும். இங்கு அடைபட்டிருக்கிறோம் என்னும் உணர்வு சி.மணியின் கவிதையில் உள்ளது. இருந்தாலும் காலத்தின் முன்னால் என்னைத் திரட்டி எழுந்து நிற்பேன் என்னும் தன்முனைப்பு பசுவய்யாவின் கவிதையில் தெரிகிறது. ஆனால் தான் யார் எதன் பொருட்டு இங்குளேன் என்ற வியப்பு நகுலனின் கவிதையில் வெளிப்படுகிறது. தேவதச்சன் இந்த இரு மரபுகளிடமுமே நேரடியாக தொடர்பு கொள்ளும் நிலையில் இருந்தார். சி.கனகசபாபதி வழியாக இலக்கியமும் மார்க்சிய சிந்தனையும் அவருக்கு அறிமுகமாயிருந்தன. ஆனால் அவர் இயல்பாக தமிழின் நவீனத்துவக் கவிதையைநோக்கித்தான் சென்றார்.

ஏனென்றால் அவரது ஆளுமையில் சமூகப்பிரச்சினைகளைப்பற்றி கவலைகொள்ளக்கூடிய, அதைப்பற்றி விவாதிக்கக்கூடிய ஓர் அம்சம் எப்போதுமே இருந்ததில்லை. நேர்ப்பேச்சில்கூட . இளமையிலேயே அகவயநோக்கும் அடிப்படைவினாக்களும் உருவாகிவிட்ட உள்ளம் அவருடையது. ஆகவெ அவரிடம் சமூகத்தை நோக்கி சொல்ல ஏதுமிருக்கவில்லை. தன்னை நோக்கி கண்டடையவே நிறைய வினாக்கள் இருந்தன

தத்துவமாணவராக சென்னையில் மாணவராக இருந்த காலத்தில் கசடதபற இதழின் படைப்பாளிகளோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக ஞானக்கூத்தனுடன்.ஆனால் அவரை தன்னைப்போல அவர் தோற்றமளிப்பதாக ஞானக்கூத்தன் ஒரு முறை சொன்னபோது அவர் சினமடைந்தார் மீண்டும் ஒரு முறை வேறொருவர் அதைக் குறிப்பிடும்போது துணுக்குற்றார். தன்னை ஞானக்கூத்தனிடம் இருந்து மட்டுமல்லாது கசடதபற கவிஞர்களிடமிருந்தே வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.

அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் கவிதைசார்ந்த காரணம் என்று எனக்குத் தோன்றுவது கசடதபற கவிஞர்களிடமிருந்த விமர்சன நோக்கையும் நேரடியான மொழியையும் அவரால் ஏற்க முடியவில்லை என்பதுதான். இன்னும் கூர்மையாக சொல்லப்போனால் கசடதபற படைப்பாளிகளிடம் இருந்த எதிர்மறைப் பண்பு தேவதச்சனின் இயல்பு அல்ல. ஆகவே தான் அன்றைய முதன்மையான தத்துவ நிலைப்பாடுகளில் ஒன்றான இருத்தலியத்தை சார்ந்த கவிஞர்களுடன் தன்னை அணுக்கமாக்கி அவர் வைத்துக்கொண்டாலும் கூட அவருடைய படைப்புகளில் இருத்தலிய வெளிப்பாடுகள் அனேகமாக நிகழவில்லை.

அவரவர் கை மணல் என்ற பெயரில் வந்த தேவதச்சனின் முதற் கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை முதல் பார்வையில் இருத்தலிய நோக்கு கொண்டவை என்று சொல்லலாம். தலைப்பே சுட்டுவது போல அது தனி மனிதனின் அகஅலைவை பெரிதும் பேசும் கவிதைகளால் ஆனது ஆனால் அத்தொகுப்பின் கவிதைகள் எவையும் அன்றைய நவீனத்துவத்தை- இருத்தலியத்தை நோக்கி செல்லவில்லை இன்று பார்க்கையில் அத்தொகுப்பின் சிறப்பம்சம் என்பதே இருத்தலியத்தில் இருந்து அக்கவிதைகள் கொண்ட தூரம் தான் என்று தோன்றுகிறது.

தனிமனித அகபயணம் அவற்றில் இருந்தாலும், காலத்தின் வெளியின் முன் தன்னை தனித்து நிறுத்திக் கொள்ளும் போக்கு இருந்தாலும், இருத்தலியத்தின் ஆதார நிலையாக இருந்த எதிர்நிலைப் பண்பும், சுருங்கிக் கொள்ளும் போக்கும் அவற்றில் இல்லை. அவற்றின் தனிமனிதவாதம் காஃப்கோவையும் காம்யூவையும் சில்வியா பிளாத்தையும் நிராகரித்து ஜென் கவிதைகளை நோக்கி செல்கிறது.

ஆனந்த் தேவதச்சன் இருவரும் இணைந்து எழுதிய அவரவர் கைமணல் தொகுப்பில் பல கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜென்கவிதைகளின் இந்தியநீட்சிகள். அவற்றில் ஓரிரு கவிதைகள் மட்டுமே இன்று முக்கியமானவை என்று தோன்றுகிறது. மற்ற பல கவிதைகளை ஏற்கனவே நாம் படித்த தீவிரமான ஜென் கவிதைகளின் எதிரொலிகள் என்று சொல்லிவிடமுடியும் ஜென் தேவதச்சனுக்கு விடைகள் எவற்றையும் அளிக்கவில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் பின்னர் புது வீச்சுடன் அவர் எழுந்த போது அக்கவிதைகளில் சென் பாதிப்பு ஏதுமில்லை.

ஆரம்பத்தில் இருந்த ஜென் பாதிப்பு இருத்தலியத்தின் எதிர்மறை பண்புகள் எதுவும் அவரில் படியாமல் பார்த்துக் கொண்டது. இருத்தலியத்தை அல்லது ஒட்டுமொத்தமாக நவீனத்துவத்தை தேவதச்சன் ஏற்க முடியாமல் போனதற்கு காரணங்களில் முக்கியமான ஒன்று அவரது இயல்பில் உள்ளது என்று தோன்றுகிறது. முன்னால் குறிப்பிட்டது போல பெரிய கட்டமைப்புகளில் சிந்தனையை உருவாக்குவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. உதிரிக் கண்டடைதல்களின் குவியலாகவே அவரது சிந்தனைகள் எப்போதுமே அமைந்திருந்தன. பெருங்கட்டமைப்புக்கான முறையான தத்துவபயிற்சியை அவர் பெற்றிருந்தாலும் கூட அதை நோக்கி செல்ல முடியாதபடி அவருடைய இந்த தன்னியல்பு அவரை தடுத்தது.

ஒருவகையில் தத்துவத்தில் விட்கென்ஸ்டீன் அல்லது நீட்சே எதை தன் இருப்பியல்பாக கொண்டிருந்தார்களோ அதுதான் இது. சிந்தனைகளை பெருங்கட்டமைப்பாக ஆக்காமல் உதிரிக் கண்டடைதல்களாகவே முன்வைக்கும் நீட்சேயின் ஜராதுஷ்டிரர்ம் இவ்வாறு பேசினார், விட்ஜிஸ்டின் குறிப்புகள் போன்றவை தேவதச்சனின் உரையாடலகளை கேட்டுக் கொண்டிருக்கும்போது நம்முள் எழுந்து கொண்டே இருக்கும். அவை சிறிய குழ்ந்தையின் விளையாட்டு பொருட்கள் போன்றவை. பெரிய அளவில் எந்த நடைமுறைப்பயனையும் உருவாக்காதவை ஆனால் சிறு குழந்தையின் விளையாட்டுப் பொருட்கள் அக்குழந்தை அடைந்த பேருண்மைகளின் பிரதிவடிவங்கள்.

கைக்குழந்தையாக தவழும் சைதன்யான் ஒரு சோப்பு டப்பாவை எடுத்து நிறுத்தி ”அம்மா!” என்று சொல்லும் போது அங்கு நிகழ்வது ஒரு தெய்வச்சிலை நிறுவல்தான். அகப்பைகளையும் தட்டுகளையும் கிண்ணங்களையும் கொண்டு மலைத்தொடர்களையும் நதிகளையும் நகரங்களையும் அவள் படைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவை மறுகணமே கலைந்து கடல்மேல் பாய்விரிக்கின்றன. உடனே சிதறி அகப்பைகளும் கிண்ணங்களுமாக ஆகின்றன.

கட்டுமானம் என்பதை விட விளையாட்டு என்பது கவிதைக்கு மேலும் நெருக்கமானது என்று தேவதச்சன் கண்டு கொண்டது அவர் தன்னை அறிந்த தருணம். ஒரு தத்துவவியலாளராக கவிதைக்குள் ஒரு போதும் அவர் செயல்பட்டதில்லை. தத்துவத்தை வைத்து விளையாடுபவராகவே கவிதை உலகில் அவர் இருந்து கொண்டிருக்கிறார். இன்று நான்கு தொகுப்புகள் வழியாக அவரது கவிதைகளைப் பார்க்கும்போது ஒரு கவிதை பிறிதொரு கவிதையின் விளிம்பில் தன்னை பொருத்திக் கொண்டு ஒற்றைப்படையாக எழுந்து எதையுமே உருவாக்காமல் தன்னளவில் முழுமையாகி நிற்பதையே காண்கிறோம்.

அவரது ஆளுமையின் இந்தத் தனித்தன்மையே அவரது கவிதைகளின் தனிதன்மையும் ஆகும். தத்துவத்திலிருந்து தேவதச்சன் பெற்றுக் கொண்டது வினாக்களை மொழிவழிப்படுத்தும் பயிற்சியை மட்டும் தான். விடைகளை அல்ல. கண்டறிந்தவற்றை கட்டியெழுப்பும் வித்தையையும் அல்ல.

 

முந்தைய கட்டுரைகீதை உரை: கடிதங்கள் 7
அடுத்த கட்டுரைகடிதங்கள்