‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2

deva2
[தொடர்ச்சி]

தேவதச்சனின் பாத்திரங்கள்:

அதேபோல.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள் சித்தரிப்புக்கவிதைகள் தான்.அவற்றில் எப்போதுமே திரைச்சீலை போல ஒரு பின்புலம் விரிக்கப்படுகிறது.காலம் இடம் சார்ந்த தகவல்கள் இல்லாத கவிதைகள் வெகுசிலவே.அதுவும் பின்னால் வந்த கவிதைகளில் தான் அவற்றைக் காணமுடிகிறது.கொஞ்சம் இசைத்தன்மை கலந்து குரல் மாற்றி, வேகம் கூட்டி, எழுதப்பட்டிருக்கும் கவிதைகள்.கடைசி டினோசாரில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஒரு நிதானமான அடங்கிய தொனியில் அமைந்த சித்தரிப்புத்தன்மை மிகுந்தவையே.இவற்றை ஒருங்கே வாசிப்பது மதியவேளை ஒன்றில் சமவெளியில் நடப்பதைப் போன்ற பிரமையை உண்டு செய்கிறது.சட்டென்று எழும்பிப் பறக்கக்கூடிய வரிகளோ,எரிந்து அணையக்கூடிய படிமங்களையோ பயன்படுத்துவது அவரது பாணியில்லை என்பதால் இந்தக் கவிதைகள் கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணவே செய்கிறது.ஒரு முனையில் வெடிமருந்தைச் சூடியிருக்கும் தீக்குச்சியைப் போல இக்கவிதைகள் ஒரு இறுதிக்கணநேர அறிதலில் தர்க்கமுறிவை உண்டுசெய்து எரிந்து அணைகின்றன.சம்பவங்களை நெட்டித் தள்ளி ஒரு தருணத்திருப்பத்தில் வாசகனை நிற்கச்செய்கின்றன.அதன் வாயிலாக எளிய அன்றாடங்களை மர்மமான அனுபவமாகத் துலங்கச் செய்கின்றன.

இது ஒருவிதத்தில் நம்மை குழந்தையைப் போல உலகைப் புத்தம் புதிதாகப் பார்த்தாக வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாக்குகிறது எனலாம்.இவை சித்தரிப்புகளைச் சார்ந்தியங்குவதால் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.அதாவது கவிதாபாத்திரங்கள்(?).இதில் ஒரு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு செல்லலாம் என நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல சரித்திரப்புத்தகத்தில் நுழையமுடியாத் அன்றாட நிகழ்வுகளே இவரது கவனமையங்கள். அவரது கவிதைகளின் நாயகன் வரலாற்றின் ஊடே வாழ நிர்பந்திக்கப்பட்டவனோ அதன் அழுத்தங்களுக்கு பதிலளிக்கவேண்டியவனோ அல்ல. ஆதலால் மிகச்சாதரணர்களே பாத்திரங்களாக வருகின்றனர்.அதிலும் குறிப்பாக எந்த சரித்திரத்தையும் தூக்கிச்சுமக்கும் பொறுப்பற்ற,சொல்லப் போனால் அதிகாரப்பூர்வ வரலாற்றின் விளிம்பில் வாழும் குழந்தைகளும் வீட்டுப்பெண்களுமே தேவதச்சனின் விருப்பத்தேர்வுகள்.

அவர்களின் எளிய துயரங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் சந்தோஷங்களுக்கும் நிறையவே முக்கியத்துவம் அளிக்கிறார்.பெரியவர்களின் உலகத்தினருகே சுழலும் சிறுவர்களின் உலகை மெல்லிய புன்னகையுடனும் சின்ன பொறாமையிடனும் பல இடங்களில் பதிவுசெய்கிறார்.பெரிய சம்பவங்களினிடையே சின்ன தருணங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் இதைப் புரிந்துக்கொள்ளலாம்.சட்டை ஓரங்களைப் பற்றி இழுக்கும் சிறுவர்கள்,மொழியால் கைவிடப்பட்டதால் கையை ஆட்டியாட்டிப் பேசும் சிறுவர்கள் எளிய கதாநாயகர் ஆகிறார்கள்.தேவதச்சன் கவிதைகளில் வரும் குழந்தைகள் மாந்தகுலத்தை காப்பற்ற வந்தவர்களாக இல்லை.அவர்களை யாராவது காப்பற்றுங்களேன் என்பதுதான் கவிதையில் ஒலிக்கும் குரல்.அதாவது ரொமாண்டிக்காக குழந்தைகளை ரெக்கைகளுடன் உலவவிடவில்லை.மாறாக அவர்களை விளிம்புநிலையாளர்களாகவே தோன்றச்செய்கிறார்.ஏற்கனவே சொன்னது போல பெரியவர்களின் கைபற்றி நடந்து வர ஏங்கும் சிறுவர்கள்,பாட்டியின் மரணம் பற்றி கேட்கையில் உனக்குப் புரியாது என்று உரையாடலைத் துண்டிக்கும் பெரியவர்கள் என அவர்கள் மீதான உதாசீனத்தை நுட்பமாக வெளிக்கொணர்கிறார்.அப்பாஸ் கியரோஸ்டமியின் ‘எங்கே என் நண்பனின் வீடு’ என்ற திரைப்படத்தில் தன் வகுப்பில் படிக்கும் சகமாணவனின் வீட்டைத் தேடிச்செல்லும் ஒரு சிறுவன்,அந்த படம் முழுக்க நாலைந்து தெருக்களின் இடையே நடந்துகொண்டே இருப்பான்.அங்கிருக்கும் யாரோ ஒரு ஆள் சிரத்தையுடன் அவன் சொல்வதைக் கேட்டு கூடக் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்திருந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் கண்டடைந்திருப்பான்.மாறாக ஒரு ஒன்றரை மணிநேரம் அந்த சிறுபையன் ஓட்டமும் நடையுமாக அலைபட்டுக்கொண்டிருப்பான் திரையில்.இந்தச் சித்திரத்தை ஒத்த ஒன்று தேவதச்சனின் கவிதையொன்றில் வருகிறது.

இன்னொரு பகல்

தன் கழுத்தை விட உயரமான சைக்கிளைப்
பிடித்தபடி லாவகமாய் நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்து
விடுவது போல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்டுக்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்,
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்-
இன்னொரு பகலில்-போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷுலேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை

இந்த கவிதையில் மிக விவரணையாகத் தீட்டப்பெறும் அச்சிறுமியின் சித்திரம் (தன்னை விட உயரமான சைக்கிளைப் பற்றியபடி,புத்தகப்பை விழுந்துகொண்டிருக்க மூன்றாவது பீரியடுக்கான சூத்திரங்கள் மறந்தபடியிருக்க,கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் சீறிக்கொண்டிருக்க)சிறார் உலகின் பரிதாபகரத்தின் துல்லியமான கோட்டோவியமாய் விரிகிறது.’உலகை முதன் முதலாக’ என்ற கவிதையில் வரும் குட்டிப் பெண் மேஜையின் மீதிருந்த அப்பாவின் கண்ணாடியை உடைத்துவிடுகிறாள்.இதுவொரு குறியீட்டர்த்தம் கொண்ட செய்கை.அப்பாவின் கண்ணாடி பழையது.அது தெரிந்த பொருட்களை மட்டுமே காட்டக்கூடிய ஒன்று.ஏற்கனவே நன்கறிந்த தொலைக்காட்சி,செய்தித்தாள்கள்,நூறுமுறை ஏறியிறங்கிய பேருந்து நிறுத்தங்கள் இவற்றை மட்டுமே பார்க்கத் தெரிந்த ஒருவிதத்தில் குருட்டு உபகரணம்.அதை ஒவ்வொரு கணத்தையும் புதிதாக எதிர்கொள்கிற சிறுமி மேஜையிலிருந்து அதைப் போட்டு உடைக்கிறது.அந்த உடைந்த சில்லுகளைக் கூட அக்குழந்தைக் கண்கள் மீண்டும் மீண்டும் முதல்தடவையாக பார்த்து லயிக்கின்றன.

கொட்டுச் சத்தம் என்று இன்னொரு அபாரமான கவிதை.வழக்கமான சித்தரிப்புப் பாணியில் அமைந்த கவிதையான இது முடிகையில் கவிதை சொல்லி தன் குரலை மாற்றி சிறுகுழந்தையைப் போல்

வா வா கொட்டுச் சத்தமே உள்ளே வா
இன்னும் நிறையவே வா.ஆனால்
ஆனால் ஏன் உள்ளே ரொம்ப நேரம்
தங்கி இருக்க மாட்டேன்
என்கிறாய்?

என்று உற்சாகமாய் முடிகிறது.அந்தச் சின்னமூளையின் வியப்பும் கேள்வியும் அதன் தொன்யினால் எளிதாகக் கடத்தப்பட்டுவிடுகிறது.இதில் கூட அந்தச் சிறுவனை அணைத்துக் கொள்ளும் அவன் தாயின் உதாசீனமும் அக்கொட்டுச் சத்ததின் நாராசத்தை அவள் வெறுப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.ஒரு மிகச்சிறந்த குழந்தைக் கவிதையாக(குழந்தைகளுக்கான கவிதை) வேண்டிய ’நிலா’ கவிதை கடைசி வரியில் நுழையும் பெரியாள் ஒருவரால் பால்ய காலம் பற்றிய கவிதையாகிவிடுகிறது.தேவதச்சன் குழந்தைமையை வியந்து சிலாகித்தாலும் அவர் பெரியவர்களுக்கான கவிஞரே.

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

என் கண்களை நழுவவிடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச் சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக்கொள்வேன்
நாசியைப் பெற்றுக்கொள்வேன்
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

தேவதச்சனின் மகத்தான கவிதைகளில் ஒன்று இது.அதற்கு மிகமுக்கிய காரணம் அவரது குரல் இக்கவிதையின் சந்தர்ப்பத்திற்கு மிக ஒத்துப்போகிறது என்பதே.தமிழில் குழந்தைமையின் மீதான காதலையும் குழந்தைப் பருவத்தின் மேலான ஏக்கத்தையும் தேவதச்சன் அளவுக்கு வெகுசிலரே பதிவு செய்துள்ளனர் எனலாம்.இந்தக் கவிதையின் தலைப்பு ஒரு உற்சாகத்தில் கத்துவது போல் ஒலிக்கிறது.ஒரு சிறுவன் யானையைக் கண்டதும் யானை..யானை என்று கத்துவதைப் போல.பெரியவர்கள் யாரும் அப்படிக் கூச்சலிடுவதில்லை.யுரேகா யுரேகா என்று கண்டுபிடிப்பின் பரவசத்தில் சிலர் ஓடியிருக்கலாம்.தேவதச்சன் அநேக இடங்களில் இது போன்று அடுக்கத்தொடராய் கூச்சலிடுகிறார்.உதாரணத்திற்கு சற்று நேரம்.. சற்றுநேரம்..,யாரோ இருக்கிறார்கள்.. யாரோ இருக்கிறார்கள்………….அவை சிலநேரம் குழந்தை மொழி குதலையாகவும் சிலநேரம் கவிக்கணத்தின் கண்டுபிடிப்பாகவும் ஒலிக்கிறது.இக்கவிதை ஒரு குழந்தைக் குதூகலத்துடன் ஜெல்லி மீனே ஜெல்லி மீனே எனத் தொடங்குகிறது.ஆனால் முதல் வரியே ஒரு கையறுநிலையை எடுத்துவைக்கிறது.ஒரு மனிதன் தன் கண்களையும் காதுகளையும் உதிர்க்க விரும்புகிறான்.நம் சொந்தக் கருவிகளான அப்புலன்களின் மீது நினைவின் புகையும் அனுபவத்தின் தூசியும் படிந்திருப்பதாலா?அதனூடாக எல்லாமே பழையதாக நிலைகொண்டு வெறிப்பதாக மாறிவிட்டதாலா?பழக்கதோஷத்தின் சுமை தாளாமலா அவன் தன் உறுப்புகளை இழக்கத் தவிக்கிறான்.இழந்து வாயும் வயிறுமாக எஞ்சுகிறான்.ஏற்கனவே சொன்னது போல் தேவதச்சன் எப்போதுமே மனிதனின் அறிவுத்தளவியக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் அளிக்காதவர்.அவனை இன்னும் புலன்களின் இயக்கத்தின் மீது விழிப்பு கொண்டவனாய் ஆக்கமுயல்பவை அவரது கவிதைகள். அதனின்று சமூகச் சட்டகங்கள் திணிக்கும் வரையறைக்குள் இருந்து அவனை தப்புவிக்கமுயல்பவை.புலன்கள் பிரபஞ்சத்தை சந்திக்கும் புள்ளியே ஒரு கவிஞனாக தேவதச்சன் நிலைகொண்டுள்ள இடம்.அந்த இடத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களே அவரது கவிதைச் சேதிகள்.அவ்வனுபவத்தினூடான புதிர்களும் அற்புதங்களுமே வாசகமனத்திடம் அவர் கடத்தவிழைபவை.வாயும் வயிறுமாய் அந்த மனிதன் கடலுக்கடியில் மெல்ல நகர்ந்து செல்கிறான்.ஏன் கடலுக்கடியில்?ஏனெனில் தரை நாம் புழங்கித் தேய்த்த ஒன்று. அதில் வாழ்வது என்பது அதில் நடப்பதைப் போலவே எந்த பிரத்யேக சுயவிழிப்பும் தேவையற்ற ஒன்று.அதனால் எந்தச் சிறுகிளர்ச்சியையும் எழுப்பாதவொன்று.மாறாக நீரடியில் வாழ விழிப்பு தேவை.நமைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கை பற்றிய பிரக்ஞை வேண்டும்.அத்தைகய சூழலில் நிகழும் உயிரியக்கமே வாழ்தல் எனச்சுட்ட தகுதியானதாகும்.இங்கு கடலை பரிணாம கதியில் நம் ஆதிவாழிடமாகவும் கருதி வாசிக்க இடமிருக்கிறது.ஆனால் அடுத்த வரியிலேயே தேவதச்சனுக்குள் இருக்கும் நடைமுறைவாதி விழித்துக்கொள்கிறான்.ஒரு மனிதன் ஜெல்லிமீனாக மாறிவிட்டாலும் அவன் கரைக்கு வரவேண்டியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார்.பிறகவன் கத்திக்கொண்டு வரும் மாலைச்சிறார்களிடம் அவர்களது விரல்களைக் கேட்கிறான்.மூளையையோ இதயத்தையோ அல்ல அவர்களது கண்களை நாசியை.இறந்தகாலம் பதியாத எதிர்காலம் தென்படாத அவர் தம் புலன்களை.அதன் மூலம் இந்நிலத்தை முடிவற்ற அற்புதங்கள் நிகழும் கணப்பெருவெளியாகக் காண்கிறான்.என்பதால் தானும் அவர்களோடு விளையாடத் தொடங்குகிறான்.எந்த காரணமும் நோக்கமும் அற்ற ஆனந்தத்தில் தன்னையே விளையாடுபவனாகவும் விளையாட்டுப் பொருளாகாவும் கொண்டு கூச்சலிடுகிறான் ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று.நிராதரவுடன் தொடங்கிய இக்கவிதை எதிர்பார்ப்பாக உருவெடுத்து எளிய சந்தோஷமாக மாறி கும்மாளமாக நிறைவடைகிறது.பொதுவாகவே குழந்தைகளுக்கான கவிதைகள் அல்லது பால்ய காலம் குறித்த கவிதைகள் வண்ணங்களாலும் வாசனைகளாலும் நிரம்பியிருப்பதைக் காணலாம்.ஏனெனில் அங்கு இன்னமும் அறிவின் இருட்கொடிகள் படரத்தொடங்கவில்லை.அங்கு புலன்கள் விரியத் திறந்திருக்கவேண்டும்.அவ்விடத்திற்குத் திரும்புவதற்கான வேட்கை தேவதச்சனின் மையச்செய்திகளில் ஒன்று.

ஒரு கவிதைசொல்லியாக பெண்களின் மீது தேவதச்சன் கொள்ளும் அக்கறை குறிப்பிடத்தக்கது..அவர்களது சின்ன சின்ன தருணங்களையும் துயரங்களையும் தன் கம்மிய குரலில் நிகழ்த்திக்காட்டும் பொழுது கண்முன்னே அழகியதொரு நீர்ச்சித்திரம் போல அவை அசைந்துகொண்டே இருக்கின்றன.உதாரணத்திற்கு யாருமற்ற நிழலில் உள்ள அழகான கவிதை ஒன்று:.

காலையில் எழுந்ததும்

காலையில் எழுந்ததும் ஓய்வு பெறுவதற்கு
இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளது என்று
நினைத்தாள்.
சிறிது வெளிச்சத்தல் குளித்தாள்.அறைகளில்
அவள் கோலம் போட்ட வாசலில் இருளும்
ஒளியும் தனித்தனியே அருகில் மௌனமாய்
அமர்ந்திருந்தன.சின்ன வெளிச்சங்களில் காலை உணவை
சமைத்தாள்,தலைவாரி ஆடை உடுத்திக்கொண்டாள்
யாரும் நேரிலோ தொலைபேசியிலோ வாழ்த்துச்
சொல்லவில்லை.
பிய்ந்து பிய்ந்து கிடக்கும் அன்றலர்ந்த தாமரை போல்
அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகிறாள்,பஸ்ஸில்
எதிர் சீட்டில் அமர்ந்திருக்கும் சிறுமி
தள்ளி,இடங்கொடுத்தாள் தன்
கலைந்த தலையில்
சிறிது தாமரையைச் சூடியபடி

இது போன்ற, விளக்கமே தேவையற்ற அம்மணக் கவிதைகளை நிறையவே எழுதியுள்ளார் தேவதச்சன்.’வாசற்பெருக்கி’’இரண்டாவது’’யாரும்’’பால்வடியும்’ ’காதல் உவகை’போன்ற பற்பல கவிதைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள்,சமைத்துக்கொண்டிருக்கும்,துணிதுவைக்கும் வண்டியோட்டிச் செல்லும்,பூக்கட்டும்,நீலப்படத்தில் சயனித்திருக்கும் என பெண்களின் பெரும்கூட்டமே உள்ளே இருக்கிறது.இதைத் தாண்டி நீ நீ என காதலிகள் வேறு.இவ்வளவு அக்கறையோடும் லயிப்போடும் பெண்களின் உலகை அணுகிய வேறொரு ஆண்கவிஞர் நவீனத் தமிழில் இல்லை என்றே படுகிறது.இத்தனைக்கு நடுவிலும் ஆச்சர்யமான விஷயம் பெண்ணுடலை அவர் கவிதைகள் தொடவேயில்லை என்பது.எப்போதும் விடிந்த்கொண்டிருக்கிறது தொகுதியில் தான் ‘உறக்கம்’ என்றொரு கவிதை இடம்பெற்றிருக்கிறது.அதிலும் ஒரு பெண் தன் ஆடையைத் தான் அவிழ்க்கிறாள்.தேவதச்சனின் தலைப்புகள் மிகப் பலவீனமானவை.பெரும்பாலும் அவை கவிதைகளின் தொடக்க வரிகள்.குறைந்தபட்சம், கவிதையை நினைவு வைத்துக்கொள்வதற்கும் அதை மீட்டு அனுபவிப்பதற்கும் ஆன ஒரு சாவியாகவாவது தலைப்பு இருக்கக்கூடும்.தேவதச்சனிடம் இது விஷயத்தில் பெரிய அலட்சியத்தைப் பார்க்கமுடிகிறது.அதனாலேயே அவரது கவிதைகளின் ’இடங்கள்’ நினைவுகூறப்படுகிறதே ஒழிய முழுக்கவிதைகளாக அல்ல.

*
தேவதச்சனின் கவியுலகம் தொடர்ந்துவரும் தனித்த படிமங்களோ பிரத்யேகக் குறியீடுகளோ கொண்டதல்ல.சில கவிஞர்களின் உலகிற்குள் மீண்டும் மீண்டும் வரப்பெறும் தொடர் படிமங்கள் அக்கவிஞரின் அகவுலகை நெருங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு நின்றுவிடாது ஒட்டுமொத்த கவிதைகளையும் ஒரு நிலப்பரப்பாக தைப்பதற்கும் ஏதுவாக அமைவன.அது தவிர மானுடப் பொதுவாக சில குறியீடுகள் உள்ளன.அவை தொன்ம ரீதியான ஆதிப்படிங்களாக இருக்கலாம்.அல்லது கலை இலக்கியத்தால் தொடர்ந்த பயன்பாட்டுக்கு ஆட்ப்பட்டு பொதுக்குறியீடுகளானாவையாக இருக்கலாம்.(உ.ம் படகு,பற்வை)இவை போன்ற எந்த படிமங்களையும் தேவதச்சனிடத்தில் பார்ப்பதரிது.அதற்குக் காரணம் பொருட்களின் பொருட்தன்மைக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது தான் என்று நம்புகிறேன்.பொருட்களின் இருப்பு குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்ட கவிஞர்களில் ஒருவரால் தானே ‘போய் வாருங்கள் உபயோகமற்ற பொருட்களே’ என உரிமையோடு விளிக்க முடியும்.ஏனெனில் அவர் ஈர்க்கப்பெறுவது கருத்துக்களுக்குப் பெரிய இடமில்லாத சாமான்யக் களத்தை நோக்கி.அங்கு பொருட்கள் அவசியமானவை.அதனால் அவற்றை பொருட்களாகவே நீடிக்கச்செய்துவிடுகிறார்.ஆயினும் சில தொடர்ந்து வரும் படிமங்களை நாம் பார்க்கவே செய்கிறோம்.அப்படியொரு குறியீடாக வருவது ’அடையாள அட்டை’.தேவதச்சன் மனிதனை ஒரு உயிரியல் வகையினமாக மிஞ்சிப் போனால் ஒரு மானுடப் பொதுமை எனும் கருத்தின் அடியில் வரும் திரல்தொகுதியாகவே காணவிரும்புகிறார்.அதைத் தாண்டி மேலதிகமாக அவன் மேல் சுமத்தப் பெறும் எந்த அடையாள வில்லைகளையும் அவர் எதிர்மறையாகவே அணுகுகிறார்.அவற்றை, மாட்டிச்சுமக்கிவியலாத அளவிற்கு பெருங்கனம் கொண்ட அட்டைகளாகக் கருதுகிறார்.அவற்றை மனித இயல்பூக்கத்திற்கு தடையாக இருப்பதாகவே எண்ணுகிறார்.உயிரோடு இருப்பது எனும் கவிதையில் எழுதுகிறார்:

உயிரோடு இருப்பது
எவ்வளவு
ஆனந்தமாய் இருக்கிறது
ஆனால் ஆனால்
என்
அடையாள அட்ட
தொலைந்துவிட்டதே
நான்
ஆண் நாயுமல்ல
பெண் நாயுமல்லவே
.
.

தட்டையான கருப்பைகளில்
விழுகிறது
ஒரு கண்ணீர்த்துளி
எனக்கு என்ன வைப்பார்கள்
ஆணுறுப்பா
பெண்ணுறுப்பா……..

யாருமற்ற நிழல் தொகுப்பிலிள்ள ’என் எறும்பு’ கவிதையில் ரயில் இருக்கையின் பின்னே கவிதைசொல்லியின் கூடவே பயணித்தபடி வரும் எறும்பைப் பார்த்து ‘அதைக் கேட்காமலேயே அதன்மேல்/விழுந்திருக்கிறது கருப்புநிறம்/என் மேல் விழுந்த அடையாள அட்டைகளைப் போல’ என்கிறார்.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுப்பில் ஓரிடத்தில் சொல்கிறார் ‘பகலுக்குத் தேவை/வெவ்வேறு பூட்டுகள்/வெவ்வேறு வகை ரூபாய்த்தாள்கள்/லேமினேசன்செய்த/அடையாள அட்டை.’ அடையாளங்களைச் சமூகம் வழங்கிய காலாவதியான கவசங்களாகவும் சமயத்தில் அவையே ஆயுதங்களாகவும் மாறும் துர்ச்சாத்தியமாகவே பார்க்கமுடிகிறது இக்கவிதைகளில்.உதாரணத்திற்கு ‘நிழல்’ கவிதையில் ஒரு உடைந்த சிலைக்கு இருபுறமும் இரண்டு சமூகத்தினரும், அரசும், காவல்துறையும் நின்றிருக்க ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி தேசங்களிலிருந்து வெளிவரமுடியாத தன் நிழலை வெறித்தபடி பறந்து கடக்கிறது.ஆயினும் அவரது ஒரு அபாரமான பழைய கவிதையில் இதற்கான மறுவினையை வாசிக்கமுடிகிறது.எப்பவாவது ஒரு/கொக்கு பறக்கும் நகரத்தின் மேலே/என்/கவசமும் வாளும்/உருகி ஓடும்/ஊருக்கு வெளியே’. இந்தத் தொடர்பில் வைத்து வாசிக்கத் தகுந்த ஒரு மகத்தான கவிதை ஹேம்ஸ் எனும் காற்று தொகுதியில் உள்ளது.

ரகசியக் கல்

சாலையில் நட்டநடுவில் கிடக்கிறது ரகசியக்கல்
ரவுண்டானாவுக்கு அருகில்,வெண்சீருடை
அணிந்த போலிஸ்காரன் ஒருவன்
அதன் மேல் காலை வைத்தபடி நிற்கிறான்
பிறகு எடுத்துக் கொள்கிறான்
சாயங்காலத்தின் மெல்லிய வலியால்
தன் இதயம் எங்கும்
நிறைந்திருக்கிறது அது.
நகரில்
பொய்யான பெயரோடு
பொய்யான சாதிசொல்லி
பொய்யான ஊர்சொல்லி
பொய்யான தொழிலைக் கூறி
குறுக்குத் தெருக்களில்
திரிந்துகொண்டிருக்கிறேன்
என் கண்கள் ஒவ்வொரு நாளும்,ஓரிரு முறையாவது
அந்தக் கல்லை பார்த்திருக்கின்றன
ஒரு பெயரும் குறிக்கப்படவில்லை அச்
சிறுகல்லில்
அதன் தாங்கமுடியாத ரகஸ்யத்தில்
எப்போது வேண்டுமானாலும் எனக்கு
மாரடைப்பு வந்துவிடக்கூடும்
எனினும்
எப்போதாவது
காற்றில்
லேசாகவும் ஜாலியாகவும்
ஆடத்தொடங்கிவிடுகிறது அது
ஒரு சின்ன பலூனைப் போல
பெருங்காற்றை
ரகஸ்யமாய் வைத்திருக்கும்
சின்னஞ்சிறு பலூனைப் போல.

இதைப் போலவே மணல் என்ற குறியீடும் இதனோடு தொடர்புடைய தொடர்ந்து காணக்கிடைக்கக் கூடிய ஒன்று.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் மணல்துகள் எனும் கவிதையில் கடற்கரை மேடைக்கு எதிரே காற்று பலமாக வீச எழுந்து பறக்கத் தொடங்குகிறது ‘மாபெரும் மணல்வெளி அல்ல/மணல் துகள்கள்/சின்னஞ்சிறு மணல் துகள்கள்/தன்னந்தனியாய்/தனித்தனியாய்’.

பொதுவாகவே தேவதச்சன் கவிதைகள் அரசியல் சார்பற்றவையாகவே நம்பப்பட்டு வருகிறது.தவிர தத்துவார்த்தக் கவிஞர் என்ற அடைமொழி ஏதோ ஒரு தொன்மம் போல பெரும்பாலும் ஏற்கப்பட்டுவிட்டது.ஆனால் தேவதச்சன் தனக்கென்று வலுவான கருத்தியல் கொண்ட கவிஞராகவே தொடக்கம் முதல் இருந்துவந்துள்ளார்.வரலாற்றின் பெருநிகழ்வுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்து அவற்றை பேசுபொருளாக மாற்றவில்லையே ஒழிய உள்ளார்ந்த அதன் அடிநீரோட்டகளுக்கு அவர் தனது நிலைப்பாட்டில் நின்றபடி பதிலளிக்கவே செய்துள்ளார்.தவிர தொடக்கம் முதலே இந்தக் குற்றச்சாட்டின் பால் அக்கறை உடையவராகவும் இருந்துவந்திருக்கிறார் என்பதை அவரது கவிதைகளை முழுமையாக படிக்கநேர்ந்த வாசகன் கண்டுகொள்ளக்கூடும்

தேவதச்சனின் கருத்தியல் நிலைப்பாடு சரியா தவறா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.ஆனால் தேவதச்சன் அரசியலை முழுமுற்றாக மறுதலித்துவிடவில்லை என்றே தோன்றுகிறது.இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் ’கவிதைக்குள் அரசியல்’ என்பது விரிவான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உரிய பிரச்சனை. இது அடிப்படையில் அறவியல் சார்ந்த கேள்வி என்றே கருதுகிறேன்.ஒரு வரலாற்றுச் சம்பவத்தையோ விவகாரத்தையோ உபபிரதியாகக் கொண்டிலங்கும் கவிதைகள் மட்டுமே ’அரசியல் கவிதைகள்’எனும் வகைமைக்குள் அடங்குபவை என வைத்துக்கொள்ளலாம்.இதுபோக, அடிப்படையில் சிறியதொரு விமர்சனச் சைகையை(அது எதன் மேலான விமர்சனமாக இருந்தாலும் சரி) மேற்கொள்கிற கவிதையைக் கூட அரசியல் பொருத்தப்பாடு கொண்ட படைப்பு எனக் கொள்ள முடியும்.ஏனெனில் தான் வாழும் உலகில் உள்ள ஏதோவொரு குறைபாட்டை/காயத்தைப் பார்த்துதான் கலை பேசத்தொடங்குகிறது.அதனால் தான், எல்லாமே சுமூகமாய்ப் போன உலகில் கலைஞனுக்குப் பெரிய இடமிருக்காது என்றெண்ணினார் தார்க்கோவ்ஸ்கி.கொஞ்சம் பழைய மேற்கோள் தான் என்ற போதும் இன்னும் செல்லுபடி ஆகக்கூடியது என நம்புவது:கலை,அடிப்படையில்,வாழ்வின் மீதான விமர்சனமே.அது சமூக நிறுவனிங்களின் மீதோ சமகாலத்தைய மனப்போக்கின் மீதோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி வேண்டுமானாலும் எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் அமையலாம்.இந்த வழியில் சென்றால் இப்படிச் சொல்லலாம்:மனித இனத்தின் மீது அக்கறையுள்ள எந்தக் கலைஞனும் அரசியல் பொருத்தப்பாடுள்ள படைப்பையே கொடுக்கமுடியும்.இன்னும் சொல்வதென்றால் தான் வாழும் உலகின் மீதான அத்தகைய அக்கறையே கலையின் அரசியல் பொருத்தப்பாடு எனவும் கூறமுடியும்.இப்படிக் கூறுவதாலேயே அரசியல் கவிதை எனும் வகைமை இருப்பதை மறுப்பதாகாது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.மற்றபடி பிரதியின் கருத்தியல் சார்பைக் கண்டறிந்து அதில் முரண்படுவது விமர்சிப்பது என்பதை எல்லாம் தவிர்க்கக்கூடாத சமூகவாசிப்பின் ஓர் அங்கமாகவே எண்ணமுடியும்.

பிந்தைய கவிதைகள்

வரிசைக் கிரமமாக வாசிக்கும்பொழுது மெதுமெதுவாக அவர் நெகிழ்வையும் அப்பட்டமான எளிமையையும் நோக்கிச்செல்வதையும் காணமுடிகிறது.ஏமாற்றும் எளிமையெல்லாம் இல்லை.உள்ளபடியே அவை எளிய கவிதைகள் தாம்.கவிதையின் கண்டடைதல் மிக எளிய உண்மையாக இருக்கமுடியாது என்று கூறமுடியுமா என்ன?எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுப்பில் 31/8/2013 மாலை 5: 10 எனத் தலைப்பிடப்பட்ட கவிதை

சாலையோரங்களில்
கிடக்கும்
சிறகுகளை,மாலைக்காற்று
மெதுவாக எடுத்து எடுத்துப்
பார்க்கிறது
ஏனோ
கையில் வைத்துக் கொள்கிறது
சற்று நேரம்….
சற்று நேரம்…

இந்த ஒன்பது சின்ன வரிகளுக்கிடையே பகிரப்படுவது அது சொல்லப்படும் தொனியும் ஒரு எளிய வியப்பும் தான்.அதற்கு மேல் எந்த மறைபொருளோ தேடிச்சென்றடைய வேண்டிய ஆழ்ரகசியங்களோ இல்லை.தவிர இவை எந்த உத்திகளையும் கவிதைக் கருவிகளையும் பயன்படுத்த எத்தனிப்பதில்லை.அந்த ஒன்பது வரிகளுக்கு கீழுள்ள வெற்றிடத்தில் மோதியும் வாசகனின் ஞாபக வரைபடத்தில் எதிரொலித்துமே இவை அனுபவம் கொள்கின்றன.
தேவதச்சனின் பிந்தய கவிதைகளை வாசிக்கையில் அவற்றை எடையற்றமையை நோக்கிய பயணமாகவே காண்கிறேன் நான்.கூடவே கொஞ்சம் குறும்புத்தனமும் ஒருவகை அலட்சிய மனோபாவமும் சேர்ந்துகொள்கிறது.அது ’நகத்தை நகத்தைக் கடிக்கும் பெண்ணே என் அகத்தையும் சேர்த்துக் கடிக்கிறாயே’ என்று எழுதச்செய்கிறது.இதற்குள்ளே பெரிய பிரபஞ்ச ரகசியங்களோ ஞானமறைத்தீற்றல்களோ இல்லை என்றே நான் நம்புகிறேன்.சின்ன இசைமையுடன் கூடிய ஒரு சீண்டல் அவ்வளவு தான்.உண்மையில் விளையாட்டுத் தனமான, வேண்டுமென்றே அர்த்தத்தை கேலிக்கூத்தாக்கும், அதன் மூலம் கவிதையைத் தரையிறக்கும் கவிதைகளை நிறைய கவிஞர்களிடத்து நாம் காணமுடியும்.வரிகளை தோரணம் போல வளைத்துக்கட்டுவது,ஒத்தொலிக்கக்கூடிய வரிகளை தாந்தோன்றித்தனமாக அடுக்கிப் பார்ப்பது செய்தித்தாள் விளம்பரங்களை வெட்டி ஒட்டுவது என எவ்வளவு சேட்டைகளை முன்னோடிக் கவிஞர்கள் பண்ணியிருக்கிறார்கள்.(சட்டென்று நினைவுக்கு வருவது நகுலனின் சூசிப்பெண்ணே ரோஸாப்பூவே,e.e.cummings,William carlos Williams)இவை தவிர்த்து மேற்கில் சிறுசிறு கவிதைக்குழுக்கள் கட்டுடைத்து மாட்டும், ’பின்நவீனக் கவிதைகள்’ என பிரசுரிக்கப்படும் விசித்திரங்களையும் காணமுடிகிறது.என்னளவில் கவிதையில் எல்லா விளையாட்டுக்கும் இடமிருப்பதாகவே நம்புகிறேன்.அவை வாசகனிடம் எதனை எதிர்பார்க்கின்றன என்பது வேறுவிஷயம்.ஆனால் ஒரு கவிஞனாக அவற்றை எழுதுவதற்கான சுதந்திரம் கவிதையே தருகிற ஒன்று தான்.

தேவதச்சனின் பிந்தய கவிதைகளில் நாம் காணக்கூடிய இன்னொரு அம்சம் அவை முதிய மனதொன்றின் ஒப்புதல்களாக உள்ளன.பொதுவாகவே தேவதச்சன் வயதேறுதல் குறித்த மிகுந்த பிரக்ஞை கொண்ட கவிஞர்.பிள்ளைப் பிராயம் பற்றிய கவிதைகள் எழுதிய அவரே நடுவயது குறித்தும் முதுமைக்குள் நுழைவதைப் பற்றியும் மிக ஆச்சர்யமூட்டும் கவிதைகளை எழுதியுள்ளார்.ஏனெனில் பொதுவாக இதுபோன்ற குறிப்பிட்ட அகத்தருணங்கள் கவிதைகளுக்குள் பெரிதாக நுழைந்ததில்லை.பிள்ளைகள் முன்பும் அரசின் புதிய விதிகளின் முன்னிலையிலும் தலைகுனிந்து நிற்கும் ஒருவன், பள்ளிவிட்டு செல்லும் சிறார்களை பார்த்து கையசைக்கும் திரும்பமுடியாத முதுமையின் பாதையில் செல்லும் லோடுமேன்,பழைய புகைப்படமென சட்டமிடப்பட்ட தலைநரைத்த அக்காவும் தம்பியும்.இவர்களை மற்ற கவிதைகளுல் காண்பதற்கு பெரிய வாய்ப்பொன்றுமில்லைஇத்தகைய கவிதைகளுல் ஒன்றான ’நாற்பது வயதில்’ கவிதையில் ஒரு மகத்தான படிமத்தை தீட்டிக்காட்டுகிறார்.என்றென்றும் அது காலவோட்டத்தினூடே வாழநேர்ந்த மனித உடலின் வரைவெல்லைகளைச் சுட்டிக்காட்டியபடி நிற்கும்:
நாற்பது வயதில் நீ நுழையும் போது

காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன
அஸ்தமனங்கள்
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்.

மனிதனைப் பொதுவாகவே தேவதச்சன் ஒரு அறிவார்த்தத்தை சாரமாகக் கொண்ட ஜீவியாக ஏற்கவிரும்பவதில்லை.வானத்தை கோள்களின் மொழியாலோ கொடிகளின் மொழியாலோ அல்ல இமைகளின் மொழியால் படிக்கும் ஒருவராகவே தன்னை இனங்காண்கிறார்.ஆதலால் தான் மனிதவுடலின் உயிரியல் வரையறைகளின் மீது கவனம் கொள்கிறார் எனப்படுகிறது.அதனால் தானோ என்னவோ காலவோட்டத்தின் ஊடாக மனிதஉடலும் மனமும் அடையும் மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனப்படுத்துகிறார் போல.மிகக் குறிப்பாக முதுமையின் அனுபவத்தையும் அதன் தவிர்க்கமுடியாத நிராதரவான நிலையையும் வெளிப்படையாக பதிவுசெய்த தமிழ்க்கவிஞர் பிறிதொருவர் இல்லை என்றே சொல்லலாம்.பிந்தய அநேக கவிதைகளில் அவை முதுமை பற்றியனவாக இல்லாதபோதும் அவற்றின் கவிதைசொல்லியின் குரல் நடைமுறை விவேகத்தை முன்வைக்கும் வாழ்ந்துதோய்ந்த ஒரு வயசாளியின் குரல் அல்லது சிறுபையனின் குரல். .எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் சிலுசிலு என்றொரு கவிதை

சிலுசிலு:
என் வீட்டு காம்பவுண்டு சுவரில்/செம்மாந்து/நிற்கும்/கொக்கின்.வெண்ரோமங்கள்/சிலுசிலு/ வென்று/காற்றில் அசைகின்றன/நினைவின் வலிகள்/சிலுசிலுவென அசையும் நான்/ஸ்தம்பித்து நிற்கிறேன்/சின்னஞ்சிறு வயதில்/பதில் சொல்ல முடியாத/கேள்விகளாய் கேட்கும்/என் மகள் துணைவனோடு/விடைபெற்றுச் சென்றுவிட்டாள்/ரொம்ப நாளாய் போன் கூட இல்லை/இதோ/மெல்ல எழுந்து பறக்கத் தொடங்குகிறது/வெண்மௌனம்/எவ்வித ஓசையுமற்ற அது/மறைகையில்/மறையாதிருக்கிறது வீடெங்கும்/சிலு சிலு நிசப்தம்

ஒரு செவ்வியல் சித்திரம் போன்ற இக்கவிதையில் யாதொரு உத்தியுமில்லை.உள்ளடங்கிய ஸ்தாயியில்,ஒருவிதத்தில் சத்தம்போட்டு பேசவியலாத ஒரு தகப்பனின் குரலில் பேசும் இக்கவிதையில் பூடகத்தளங்கள் ஏதுமில்லை.ஆனாலும் இந்தக் கவிதை தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.தர்க்கமுறிவுகள் மீதான மோகமும் அனுபவத்தின் மீபொருண்மைத் தளத்தின் மீதான ஆர்வமும் குறைந்து மனித உறவுகள்(நீ கவிதைகள் கூடியிருப்பதைச் சுட்டலாம்)மீதும் அனுபவத்தின் உடனடித்தன்மை மீதும் லயிக்கின்றன பிந்தய கவிதைகள்.நவீனக் கவிமொழியின் மீது தாக்கம் செலுத்துவதோடு மட்டுமின்றி ஒரு கவிஞனாக அவர் எந்த தத்துவ/நிலைப்பாட்டுப் பிடிவாதமுமின்றி கவிதை வடிவம் நிமித்தமாகவோ அல்லது தனது வாழ்வின் அணுகுமுறை நிமித்தமாக அவர் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிவந்திருப்பதை எவரும் கண்டுகொள்ளக்கூடும்.

’பொற்கனம்’ என்ற கவிதையில்,முதுமையை அதன் இயலாமைகளோடு ஏற்றுக்கொண்டு அது வழங்கும் தருணங்களை குழந்தமையின் குதூகலத்தோடு பேசுகிறார்.’நான் இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்/சிறு குழந்தையைப் போல./யாராவது என்னை லேசாக விராலால் தொட்டால் போதும்/எனக்குள்/சுடர்கிறது ஒரு பொற்கணம்/இப்போது நான் அணிந்திருக்கும் பழைய ஆடைகளுக்குள்/ஏமாற்றுவதற்கு யாரும் இல்லை…………………’

தேவதச்சனின் வீடு:

வீடு என்ற குறியீடு பழந்தமிழ்க்கவிதைகளில் அதன் நேரடி அர்த்தத்திலும் நவீனக் கவிதைகளில் குறியீட்டு அர்த்ததிலும் பெரிதாக காணக்கிடைக்கிற ஒன்று.நம் கலாச்சாரத்தின் மிக அடிப்படையான வாழ்வியல் நோக்கங்களில் ஒன்றாக வழிமொழியப்பட்டு வந்துள்ள ஒன்று.நவீனக் கவிதையிலும் இது ஆன்மிகப்பேற்றை சென்றடைகிற ஒரு சேரிடமாகக் சுட்டப்பட்டே வந்துள்ளது.ஆனால் தேவதச்சனின் வீடு இது அல்ல.(நிசப்தம் நிசப்தமாக)அவரது வீடு சத்தங்களால் கட்டப்பட்டிருக்கிறது.அங்கு கிழக்குமூலையில் அடுப்பில் நீலநிற ஜ்வாலை விழித்தெழுகிறது,நோயாளிகள் தொட்டுத் தூக்கப்படுகிறார்கள்.கொல்லைச்செடியிடம் பேசுபவர்களும், கண்ணாடித் தனிமையில் முணுமுணுப்புவர்களும்,திறக்கவராத சைக்கிள் பூட்டைத் திட்டுபவர்களும் அதில் குடியிருக்கிறார்கள்.வானவில் என்றொரு அழகான கவிதையில் எழுதுகிறார் ‘தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக/வளைந்திருக்கும்/வானவில்லுக்குள்ளே/இருக்கிறது என் ஊர்/என் வீடு/எப்போதும்/கதவுகள் மூடியிருக்கும்/சின்னஞ்சிறிய வீடு.’ என்று.இன்னொரு கவிதையில் அக்கதவைகளைத் திறந்து பார்க்கிறார்

என் சிறிய வீட்டின்,
பின் கதவைத் திறந்து பார்க்கிறேன்,வீட்டிற்கு
அப்பால் வேறு எதுவும் இல்லை

பூமியே வீடாக மாறிவிடுகிறது.

கலைகள் எப்போதுமே இதைத் தாண்டிய இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நம்பியே வந்துள்ளது.சிலர் அப்படியொரு மகாநியதி இருப்பதாக ,வேறு சிலர் அப்படியொரு பொன்னுலகம் இருப்பதாக நம்பிவந்துள்ளனர்.வேறுசிலரும் உள்ளனர்.அவர்களும் இந்த இன்னொரு உலகத்தை நம்பவே செய்கின்றனர்.ஆயினும் அவர்கள் சொல்கிறார்கள்:ஆனால் அந்த உலகம் வேறெங்கும் இல்லை.இங்கு தான் இருக்கிறது.இன்னும் துல்லியமாகச் சொல்வதாயின் அந்த உலகம் இதுதான்.அதனால் தான் ’தேவதச்சம்’ கவிதை அப்படியே முடியவில்லை.இறுதியில் அந்த விசித்திர ஜந்து வெற்று வெளியில் மறைந்துவிடவுமில்லை.கவிதை நீள்கிறது இப்படியாக

இந்த ஜீவராசி
பழகவேண்டும்
பால் குடிக்கவும்,குடிக்கப் பால் தரவும்
அதையும்
நான் தான்
பழக்கவேண்டும்

இந்த விநோதமான உயிரும் பால் குடிக்கவேண்டும் பால் கொடுக்கவேண்டும்.ஏனெனில் அதுவும் இந்த மண்ணைச் சேர்ந்தது தான்.என்பதால் தான் தேவதச்சனின் சின்னஞ்சிறிய வீடு செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டது.சப்தத்தாலும் நிசப்தத்தாலும் ஆனது.அது மண்ணில் காலூன்றி நிற்கிறது.கூட அதன் கூரையில் மாட்டப்பட்டு பறந்தபடி இருக்கிறது ‘நீலநிற பலூன்’ ஒன்று.அதை அசைப்பது காற்று.அதனுள்ளும் புறமும் நிரம்பியிருக்கும் பெருங்காற்று.

(எருக்கலைஉவா நடத்திய கவிதை விமர்சன நிகழ்வில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)

=========

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைஜெயகாந்தனின் நினைவில்…
அடுத்த கட்டுரைகீதை உரை கடிதம் 2