இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12

எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள்.

முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு.
IMG_3214 [ராஜமாணிக்கானந்தா]

இன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் ஒரு விடுதலை. நாம் வாழுமிடமும் சூழலும் நம் உள்ளத்தின் படிமவெளியை உருவாக்கி நம்மை வடிவமைக்கின்றன. பயணம் அதைக்குலைக்கிறது. அந்த ஆதிக்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்கிறது

இதுவரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய உலகங்கள்’. அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, கனடா, நமீபியா, ஏன் மலேசியாவும் கூட. மக்கள்தொகை குறைவான திறந்த நிலவெளிகள். இந்தோனேசியா பழைய உலகம். நாம் வாழ்வது போல அடங்கிய நிலம் அல்ல. எரிநிலம்

கடைசியாக சாம்பிசரி ஆலயம். 1966ல் கார்யோவினாகன் என்னும் விவசாயி தன் நிலத்தை உழுதபோது ஒரு கற்கூம்பில் ஏர் முட்டக்கண்டார். தோண்டியபோது அங்கே கற்குவியல்கள் தெரிந்தன. அரசுக்குத்தெரிவித்தார்

அரசு அப்பகுதியை அகழ்வுமையமாக அறிவித்தது. கவனமாக தோண்டியபோது இடிந்து பாதிசரிந்து மண்ணில் முழுமையாகப்புதைந்து நின்ற கற்கோயில் ஒன்று வெளிப்பட்டது. அதுதான் சாம்பிசரி ஆலயம்.

இன்று அது ஒரு முக்கியமான சுற்றுலாப்பகுதி.மண்மட்டத்திலிருந்து இருபதடி ஆழமுள்ள குழிக்குள் இருக்கிறது இவ்வாலயம். இந்த ஆலயம் இருக்கும் சிற்றூரின் பெயர் சாம்பிசரி

இந்த ஆலயம் கண்டெடுக்கப்பட்டது ஜாவாவின் அகழ்வாய்வில் ஒரு ஆர்வமான திருப்பம். மேலும் பல ஆலயங்கள் மெராப்பியின் எரிமலைச்சாம்பலுக்குள் கிடக்கலாம் என சொல்கிறார்கள். போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை

பரம்பனான் ஆலயத்தின் அதே பாணியிலான சற்று காலத்தால் முந்தைய ஆலயம் இது. சாளுக்கியர் கால திராவிடபாணி கோயில் என்று தோன்றும். இதில் நான்கு பக்கங்களிலும் சிவலிங்கங்கள் நிற்கின்றன. கருவறையிலும் லிங்கம் உள்ளது.

இதனருகே கிடைத்த ஒரு பொற்தகட்டில் ஜாவா லிபிகளில் எழுதப்பட்டிருந்த செய்தியின்படி இந்த ஆலயம் எட்டாம்நூற்றாண்டின் இறுதியில் மதாரம் வம்சத்தினரால் கட்டப்பட்டிருக்கலாம். ராக்காய் கருங் என்னும் மன்னர் இதைக்கட்டியிருக்கலாம் என ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.

ஓங்கிய சிவலிங்கம் நின்றிருக்கும் மையக்கருவறை கொண்ட பெரிய ஆலயத்தைச் சூழ்ந்து பரிவாரதெய்வங்களின் சிறிய கோயில்கள் இருந்திருக்கின்றன. அனைத்தும் எரிமலைப்பாறைகளால் வெட்டப்பட்டவை.

ஒன்பதடி உயரமான ஆலயம் ஆறடி உயரமான அடித்தளம் மேல் நின்றிருக்கிறது. மண்ணுக்கடியில் எட்டடிக்கு அஸ்திவாரம் உள்ளது, பரிவாரதெய்வங்களின் ஆலயங்களில் கருவறைகள் காலியாக உள்ளன.

மேற்குநோக்கிய கருவறை. மேலே காலனின் முகம். காலகாலர் என்று சிவனை சொல்லலாம். இருபக்கமும் இரு கோட்டங்களில் காலபைரவனும் நந்தியும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஜாவாவின் இந்துமரபின் படி இவ்வாலயத்தின் தெற்கே துர்க்கையும் பின்னால் பிள்ளையாரும் வடக்கே அகத்தியரும் கோயில்கொண்ட சுவர்புடைப்புக் கோட்டங்கள் உள்ளன. சிலைகள் அழகாக செதுக்கப்பட்டவை. பிள்ளையார் ஒரு பெரிய குழந்தை

அந்தவேளையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். குழந்தைகள். பெரும்பாலும் அனைவருமே இஸ்லாமியர். அவர்களுக்கு அவ்வாலயம் பற்றி எதுவும் தெரியவில்லை. உற்சாகமான ஒரு சுற்றுலா இடம், அவ்வளவுதான்.

ஆனால் கஷ்மீரில் பார்க்கக் கிடைத்ததுபோல இந்து ஆலயங்கள் மேல் கசப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் தமிழகத்திலேயேகூட இஸ்லாமியர் இடிந்த இந்து ஆலயங்களுக்குள் கூட வருவதைத் தவிர்ப்பார்கள்.

சிரித்துக்கூச்சலிட்ட பெண்கள் குழு ஒன்று எங்களிடம் வந்து “எந்த நாட்டவர்?’ என வினவியது. ”இந்தியர்கள்” என்றோம். இந்தியர்களையே அவர்கள் அதிகமும் பார்த்ததில்லை போல. உற்சாகமாகச் சிரித்தபடி கூடினர். அருண்மொழியின் சுடிதாரைப்பார்த்து வியந்து ‘நைஸ் நைஸ்’ என்றனர்


எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். பெண்கள் காதலர்களுடன் வந்திருந்தனர். மேலைநாட்டுப் பெண்களைப்போல கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். களங்கமற்ற இளமை முகங்களின் சிரிப்பு மனம் மலரச்செய்தது

புகைப்படம் எடுத்து எடுத்துத் தீரவில்லை. அரசரின் அரண்மனையில் கண்ட இளம்பெண்களும் சிரித்துத் துள்ளிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். இங்கே இஸ்லாமிய சமூகம் பெண்களுக்கு அளிக்கும் கட்டுப்பாட்டின் சுமைகள் ஏதுமில்லை என்பதை அது காட்டியது. உடைகளில் மட்டுமே இஸ்லாமுக்குரிய பாணி இருந்தது. குறிப்பாக கூந்தலை மறைப்பதில்.

விவசாயம் தொழில் அனைத்திலும் பெண்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. பணியாளார்களாக வெளிநாடுகளுக்குப்போய் இந்தோனேசியாவின் பொருளியலை மீட்டவர்களும் பெண்களே.

இந்தோனேசிய பணிப்பெண் சிங்கப்பூரில் மிக விரும்பப்படுபவள். ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்பதே காரணம். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துரு ஆங்கிலம் என்பதுதான்.

அரண்மனையில் ஒரு டச்சு குடும்பம் சிறுகுழந்தையுடன் வந்திருந்தது. 2 வயதுப்பையன். இளம்பெண்கள் அவனை அள்ளித்தூக்கி வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஒரே சிரிப்பு. ஆனந்தக் கூச்சல். பையன் என்ன செய்வது பெண்களாயிற்றே என்னும் கெத்துடன் போஸ் கொடுத்தான்

அருண்மொழியும் பத்மாவும் மாறிமாறி போஸ் கொடுத்து சலித்துவிட்டனர். இவர்களுக்கு செல்பேசிப் புகைப்படம் என்பது மாபெரும் கேளிக்கை. கைகளை விரித்து விரல்களைக் காட்டி படுத்து அமர்ந்து மேலே மேலே விழுந்து படம் எடுத்துக்கொண்டே இருந்தனர்.

இருட்டியபின் திரும்பினோம். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் திரும்பவேண்டும். பயணம் சீக்கிரமே முடிந்துவிட்டது என்னும் ஏக்கம் எழுந்தது. ஆனால் இருந்த நாட்களில் நிறையப்பார்த்துவிட்டோம் என்றும் தோன்றியது. பிம்பங்கள் கண்களுக்குள் நிறைந்திருந்தன

மறுநாள் காலையில் சிங்கப்பூர் வந்தேன். ராஜமாணிக்கமும் பத்மாவும் யோக்யகர்த்தாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்தே கொலாலம்பூர் வழியாக இந்தியா சென்றனர்.நாங்கள் சரவணன் வீட்டுக்குச் சென்றோம்

சரவணன் மனைவி ரதி வந்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாநாட்டுக்காகச் சென்றிருந்தார். நான் சென்றமுறை அவர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் எங்களுக்கு விமானம். கொழும்பு வந்து இன்னொரு விமானம் மாறி ஏறவேண்டும். கொழும்பு நகரை விமானத்திலிருந்து நோக்கியபோது திருவனந்தபுரம் போலிருந்தது. பசுமையான அழகிய சிறுநகர்.

இத்தனை பயணம்செய்தும் இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கைக்கு ஒருமுறை பயணம்செய்யவேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்தைப் பார்க்கவேண்டும். பௌத்த இந்து ஆலயங்களையும்

கொழும்புக்கு வந்த சில அரபுநாட்டு விமானங்களிலிருந்து வந்து இறங்கி சென்னை விமானத்தில் ஏறிக்கொண்டார்கள் தமிழ்நாட்டுப் பயணிகள். ஸ்ரீலங்கா ஏர்வேய்ஸ் விமானம் பெரிய மாநாட்டுக்கூடம் போல இருந்தது. 350 பேர் ஏறமுடியும்.

பாதுகாப்புச் சோதனைக்காக நின்றிருக்கையில் என் பின்னால் நின்றிருந்த ஒருவர் “போங்க…உம் போங்க…சீக்கிரம்” என்று கத்தினார். அவரை காவலர் அடக்கவேண்டியிருந்தது. பின்னால் நின்றவர்கள் “போங்க போங்க’ என்று கூவிக்கொண்டே இருந்தனர்

காத்த்திருப்புக்கூடத்தில் உரத்தகுரலில் கூச்சலிட்டனர். அறிவிக்கப்பட்டதும் மொத்தமாக எழுந்து வாயிலைச் சூழ்ந்துகொண்டார்கள். ”அறிவிக்கப்பட்ட இருக்கை எண்கள் மட்டும் வாருங்கள். மற்றவர்கள் விலகி வழிவிடுங்கள்” என்று கூவிக்கொண்டே இருந்தாள் பணிப்பெண்

எங்கள் அழைப்பு வந்தது. ஆனால் கூட்டத்தை கடந்து உள்ளே செல்லவே முட்டிமோதவேண்டியிருந்தது. “தயவுசெய்து வழிவிடுங்கள்” என கூவி மன்றாடியும் கூட்டம் முண்டியடித்தது. ஒருவழியாக உள்ளே ஏறிக்கொண்டேன்

விமானம் கிளம்ப அறிவிப்பு வந்தபின்னரும் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தனர். கைக்கணினிகளில் படம்பார்த்தனர். பலமுறை பணிப்பெண்கள் அறிவுறுத்தினர். கிட்டத்தட்ட வசைபாடி அவற்றை மூடவைத்தனர்

என்னருகே இருந்தவர் பேசிக்கொண்டே இருந்தார். “செல் பேசக்கூடாது சார். விமானத்தை எடுத்துவிட்டார்கள்” என்றேன். ‘உனக்கென்ன அதிலே?’ என்று சண்டைக்கு வந்துவிட்டார். பணிப்பெண் வந்து “அதை மூடு” என்று திட்டியதும் மூடினார்.சார் இல்லை, ப்ளீஸ் இல்லை. ‘ஷட் இட், ஓக்கே?’ இத்தனை அவமரியாதையாக விமானப் பயணிகளை நடத்துவதை இப்போதுதான் காண்கிறேன்.

விமானம் மேலெழுந்ததும் ஏராளமானவர்கள் எழுந்து கைநீட்டி குடிக்காக கேட்க ஆரம்பித்தனர். ‘உட்காருங்கள்…உட்காருங்கள்’ என்று அவர்களை பணிப்பெண்கள் அதட்டினர். என்னருகே இருந்தவர் பீர் வாங்கி குடித்தார். மீண்டும் குடித்தார். செல்பேசியில் காஞ்சனா பார்த்தார். வெடித்துச்சிரித்தார். அப்படியே தூங்க காஞ்சனா ஓடிக்கொண்டே இருந்தது

அதைவிட வேடிக்கை விமானம் சென்னையை அணுகியபோது பணிப்பெண்கள் ரெட்லேபில் , பிளாக்லேபில், ஸ்காச் மதுபானங்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்றனர். ‘போனா வராது பொழுதுபோனா கெடைக்காது ஓடியா ஓடியா’ பாணி.இப்படி நான் பார்த்ததே இல்லை.

‘பதினைந்து அமெரிக்க டாலர் மட்டுமே. வரிகள் இல்லை’ என்று கூவினர். கிட்டத்தட்ட அனைவருமே ஆளுக்கு நாலைந்து வாங்கிக்கொண்டார்கள். இதை அறிந்தே இந்தவிமானத்தில் வருகிறார்கள் போலும். ஒப்புநோக்க மலிவான விமானம் இது.

சென்னையில் மதியம் வந்திறங்கினோம். கையில் மதுபானம் இல்லாமல் வெளியேவந்தவர்கள் நாங்கள் மட்டுமே. அதனால் சந்தேகப்பட்டு பிடித்து விசாரிப்பார்களோ என்று பயமாக இருந்தது.

சென்னை மழையில் நனைந்து ஊறிக்கிடந்தது. ஃபாஸ்ட் டிராக் டாக்ஸியில் ஓட்டலுக்குச் சென்றோம். எங்கும் இடிபாடுகள். உடைந்த சாலை. இடிந்த பாலங்கள். குப்பைக்குவியல் . சாக்கடை பெருகிய சாலையை சபித்தபடியே டிரைவர் வண்டியை ஓட்டினார்.

ஓட்டல் அறையை அடைந்ததும் அஜிதனையும் அரங்கசாமியையும் கிருஷ்ணனையும் ஃபோனில் அழைத்தேன். ‘திரும்பிவிட்டேன்’ என்றேன். அவர்களின் குரல் அனைத்தையும் இனியதாக்கியது.

ParambananTemple
“>Borobudur Temple, Monastery & Mendut temple

Dieng Plateau, Sikidang & Arjuna Temple

Sultan Palace, Merapi Volcano & Sambisari Temple

முந்தைய கட்டுரைஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா?
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 2