மாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்

Madan

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம்.

நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த மாடன் மோட்சம் சிறுகதையை நேற்று இரவு வாசித்தேன். மாடனுக்கும் அப்பிக்குமான உறவும் உரையாடலும் பல இடங்களில் வெடிச் சிரிப்பை வரவழைத்த போதும் அதன் முடிவு மனதை என்னவோ செய்தது. நான் அது பற்றிய கருத்தினை தனியே கூற விரும்புகிறேன்.

நான் படித்து சில இடங்களில் சிரிப்பதை பார்த்து என் மனைவி தனக்கும் அக்கதையை கூறும்படி கேட்டாள்.

என் மனைவி வளர்மதி நடுநிலை பள்ளி வகுப்பை மட்டுமே முடித்திருக்கிறார். புத்தகம், வாசிப்பு என்றால் என்னவென்று அறியாத உலகம் அவளுடையது. மணமான பின் நான் வாசிப்பதை பார்த்து ஆர்வம் கொண்டு சில நூல்கள் பயின்றார். விலங்குப் பண்ணையும் கிழவனும் கடலும் அவளுக்கு பிடித்தமானவை. நான் இன்னும் பயிலாத கிழவனும் கடலும் நாவலை அவள் மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறாள். தற்போது அடம் பிடித்து வாங்கித் தரச் சொன்ன உங்கள் நாவலை படித்துக் கொண்டிருக்கிறாள். அது பனிமனிதன்.

குமரி மாவட்ட பேச்சு வழக்கு அவளுக்கு புரியாதென்பதால்
நள்ளிரவு நேரத்தில் மொபைலில் அவளுக்கு மாடன் மோட்சத்தை வாசித்துக் காட்டினேன்.

வாசிக்க வாசிக்க கண்களில் ஆர்வம் காட்டி கேட்டு கொண்டு வந்தவள் மாடனுக்கும் அப்பிக்குமான உரையாடலின் போது சிரித்த சிரிப்பு அளவில்லாதது.

சும்மா நிற்காதே உட்கார் என்றபோதும் பழக்கத்தில் காலராவை என் வீட்டில் விட்டு விடாதே என்ற போதும் 50 பைசா கோழிக்கு வழியிருக்கா என்று பார் என அப்பி சொன்னபோதும் ஜலசமாதி ஆகிவிடுமோ என்று மாடன் நினைத்த போதும் அவள் சிரிப்பு நிற்பதற்காக வாசிப்பை வெகு நேரம் நிறுத்தி வைத்தேன்.

மதம், சாதி குறித்து சுருக்கமாக கூறி அது சார்ந்த பகுதிகளை விளக்கியபடியே வாசித்து வந்தேன்.

கதையின் இறுதி நோக்கி வர வர மாடனும் அப்பியும் அவள் மனதில் மேலேறி நின்று கொண்டிருந்தனர். கோயில் கட்டி பிரதிட்டை செய்யும் சமயம் மாடனை பார்க்க அப்பியும் அப்பியை பார்க்க மாடனும் தவிப்பது உணர்வெழுச்சி அளித்த தருணம்.

உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டானுவ, நீ இப்பம் தெய்வம் என்று அழுது கொண்டே சென்றான் அப்பி என்ற வரியில் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.

அடேய் என வாளை ஓங்கி எழ முயன்ற மாடன் மந்திரத்தால் கட்டுண்டு தவிப்பதும் இனி ஒரு போதும் தன்னியல்பாக இருக்க முடியாது என்று சொன்ன போதும் என் மனைவியிடமிருந்து விசும்பல் கேட்டது. கதையை முடித்து விட்டு பார்த்த போது போர்வையை முக்காடிட்டு தலையணை நனைய ஒரு குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். அழுகை நிற்க நேரம் பிடித்தது.

ஏன் என்றேன். “மாடன் கடைசியா ஒரு தடவை அப்பிய போய் பார்த்திருக்கலாங் மாமா…பாவம் மாடனை நினைச்சு பொக்குனு போயிருச்சுங்…பாவம் அப்பி, பாவம் மாடசாமி…என்று குலுங்கி குலுங்கி வெடித்தழுதாள்.

காலை எழுந்தது முதல் அமைதியாக அமர்ந்திருந்தாள். மாடசாமி பாவம்தானுங்க…அப்பி பாவம்தானுங்க மாமா? என்று கண்களில் நீருடன் கேட்டாள். ஆமாம்ப்பா என்றேன். சிறுகதை முடியும் இடத்தில் தொடங்க வேண்டும் என்று நீங்கள் கூறிய விதி எனக்கு உறைத்த தருணம்.

அக்கதையை நான் வேறொன்றாகப் பார்க்கிறேன். அதன் பொருள் அவளுக்கு முக்கியமில்லை. அது சொல்ல வரும் வரலாற்று சமய பிரச்சினை தெரியாது. சிறுதெய்வ பெருந்தெய்வ வேறுபாடு புரியாது. ஆனாலும் மாடன் என்னவோ அவளுக்கு சொல்ல வருகிறான் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

மகிழ்ச்சியல்ல, துயரத்தை படைப்பின் வழி உணர்வதன் மூலமே ஆன்மா தூய்மையடைகிறது. உன்னதம் பெறுகிறது என்று நீங்கள் சொன்ன வரி நினைவு வந்தது.

இலக்கியம் என்றால் என்ன? ஏன் வாசிக்க வேண்டும்? பயன்மதிப்பு என்ன? என்று இலக்கியம் வாசிப்பதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடுவதை விட தன் ஆன்மாவில் கசிந்துருகி என் இதயத்தில் நனையவிட்ட என் மனைவியின் கண்ணீர்த்துளி என்ற ஒரு காரணம், இலக்கியம் பயில வாழ்நாளெல்லாம் எனக்குப் போதுமானது.

கதை முடிந்து அழுகை நின்ற பின், தான் கொடுத்து வைத்தவள் என்றாள். ஏன் என்றேன். இப்படி ஒரு கதையை, எழுத்தை, எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்தி வேறொரு உலகத்தை தெரிந்து கொள்ள செய்ததற்கும் என்னை திருமணம் செய்ய நேர்ந்ததற்கும் என்றாள் அந்த நள்ளிரவில்.

ஆம் அது ஒரு நல்லிரவு.

நன்றி
க.ரகுநாதன்
ஊத்துக்குளி.

முந்தைய கட்டுரைகீதை உரை கடிதம் 2
அடுத்த கட்டுரைவேணு தயாநிதி- வேதா