ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு

1

ஸ்ரீபதி பத்மநாபாவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இருவருமே தமிழில் எழுதும் மலையாளிகள். பண்பாட்டுக்குழப்பங்களில் முக்கியமானது தமிழனாக மலையாளப் பண்பாடும் மலையாளியாகத் தமிழ்ப்பண்பாடும் அளிக்கும் மனக்கிளர்ச்சிதான். ஸ்ரீபதி தமிழில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆரண்யம் என்னும் நடுப்போக்குச் சிற்றிதழை நண்பருடன் சேர்ந்து நடத்தியிருக்கிறார்

அவரது வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய சிறிய நூல் மலையாளக்கரையோரம். பெரும்பாலானவை இணையக்குறிப்புகளாக வெளிவந்திருக்கக் கூடும். சுயகிண்டலும் இளஞ்சிரிப்புள்ள சமூக விமர்சன நோக்கும் ஓடிக்கொண்டிருப்பவை. ஆனால் இவற்றை முக்கியமானவையாக ஆக்குவது இன்னும் வளராத சிறுவனின் ஒரு பார்வை இவற்றில் இருப்பதுதான்.

பெரும்பாலான அனுபவங்கள் எளிமையான இளமைக்கால நினைவுகள். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டில் பாடுங்களேவில் பாவுக்கு மிகையழுத்தம் அளித்து டுங்களேவை ஒரு வார்த்தையாக ஆக்கிவிடுபவர், சொறிச்சு மல்லல் [மறிச்சு சொல்லல்] என்னும் மொழி இயக்கம் , இவை போல

இருமொழிச்சூழலில் இப்படி ஒரு மொழி அளிக்கும் பதற்றம் மற்ற மொழியை நிலைகுலைய வைக்கிறது. என் இளமையில் ஒரு மலையாள மாமன் என்னிடம் ‘தமிழர்கள் பெண் கறுப்பழிப்பு என்று சொல்கிறார்களே, அந்தக் கறுப்பு எங்கே இருக்கும்?’ என்று கேட்டதை நினைவுறுகிறேன்.

பல அனுபவங்கள் மிக எளிய நினைவுகள். காளிதாசனின் த்ரிமுஷ்டி சதுரங்குலியை நானும் இளமையில் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரும்பாலான குறிப்புகளில் அனுபவத்திலிருந்து மேலதிகமாக நிகழவேண்டிய ஒன்று உருவாகவில்லை

ஆனால் இந்தச் சிறிய தொகுதி அதற்கு மேல் எனக்கு முக்கியமாக ஆவது இந்தச்சிரிப்பு ஒரு சமாளிப்பு என்பதனால்தான். மொத்தமாகவே தோல்வியை கைவிடப்படுதலை அவமதிப்பைத்தான் இவை சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதைத்தான் சிரிப்பாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.

அதற்கு ஒரு மாற்றாக பழைய காலத்திற்குச் சென்று மீள்கின்றன. எல்லாரையும்போல பள்ளிநாட்களும் சினிமாப்பாடல்களும்தான் அதற்குரிய வழிகளாகின்றன

புனைவுகள் பொய்மையை போர்ர்த்திக்கொண்டு சலிப்பூட்டும் இக்காலகட்டத்தில் இத்தகைய அனுபவக்குறிப்புகள்தான் புத்துணர்ச்சியூட்டும் வாசிப்பை அளிக்கின்றன.

மலையாளக்கரையோரம். ஸ்ரீபதி பத்மநாபா. புது எழுத்து பிரசுரம்

***

முந்தைய கட்டுரைஇலக்கியமும் சிலிக்கானும்
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4