புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

kanasu_thumb4 [க.நா.சு]

அன்புள்ள ஜெ

திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்]

எஸ். மகாலிங்கம்

2 [புதுமைப்பித்தன்]

அன்புள்ள மகாலிங்கம்,

இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை தெளிவாகச் சொன்னாலும் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாதவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சார்புநிலைகள் மட்டுமே கொண்டவர்கள், ஆனால் எதையும் வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள், அதை நம்பி கூச்சலிட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் பல தரப்புகள் செயல்பட்டன. அவை இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு தங்களுக்கான வரையறைகள் கொண்டிருந்தன. அவற்றின் அடிப்படையில் இலக்கியமரபுகளை வகுத்துக்கொண்டிருந்தன. அவற்றை பொதுவாக நான்காகப் பிரிக்கலாம்.

ஒன்று வணிக-கேளிக்கை எழுத்தாளர்கள். வெகுஜன எழுத்துமுறை என அதை நாம் சொல்கிறோம். அவர்களுக்கு எழுத்து என்பது மக்களைக் கவர்ந்து அவர்களை வாசிக்கச்செய்யவேண்டும். ஆகவே அவர்களுக்குப் பிடித்தமானவற்றை பிடித்தமான முறையில் சொல்லவேண்டும். மக்களிடமுள்ள புகழே அளவுகோல்

இந்த தரப்பு வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை மு கோதைநாயகி அம்மாள், கல்கி, தேவன், சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, அகிலன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி என ஒரு வரிசையை உருவாக்கியது. இவர்களை மட்டுமே இலக்கியவாதிகளாக முன்னிறுத்தியது. இவர்கள் இலக்கியவிருதுகள் அனைத்தையும் பெற்றார்கள். பல்கலை கழங்களில் இவர்களின் படைப்புகள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. ஒரு காலகட்டத்தில் இவ்வெழுத்தாளர்கள் திரைநட்சத்திரங்கள் போல வலம்வந்தனர். அவர்கள் பிற தரப்பினரை பொருட்படுத்தவில்லை. ஏன் அறிந்திருக்கவே இல்லை.

7 [தி ஜானகிராமன்]

இரண்டாவது தரப்பு இங்கிருந்த திராவிடஎழுத்தாளர்கள். அன்று மிகவலுவான ஒரு அரசியல் கட்சியாக எழுந்து வந்த வெகுஜன இயக்கத்தின் படைப்பாளிகள் இவர்கள். மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், சி.என்.அண்ணாத்துரை, ஈ.வே.கி.சம்பத்,மு.கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு,புலவர் குழந்தை, வேழவேந்தன், முடியரசன், சுரதா என இவர்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தது.

இவர்களும் ஏராளமான பத்திரிகைகளை நடத்தினர். திராவிட இயக்கம் பின்னர் தமிழக ஆட்சியையே கைப்பற்றியது. இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் பட்டங்களை, பதவிகளைப் பெற்றனர். அனைத்துவகையான அரசுமுறை அங்கீகாரங்களும் கிடைத்தன.மாற்றுத்தரப்பில் முதலில் சொல்லப்பட்ட வணிக எழுத்தாளர்களை மட்டுமே இவர்கள் பொருட்படுத்தினர்.

மூன்றாவது தரப்பு முற்போக்கு எழுத்தாளர்கள். இவர்களுக்கும் வலுவான கட்சி அமைப்பும் பத்திரிகைகளும் இருந்தன. தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, செ.கணேசலிங்கன், டி .செல்வராஜ்,கு.சின்னப்பபாரதி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன் என இவர்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தது. இடதுசாரிக் கட்சியும் பத்திரிகைகளும் அறிவுஜீவிகளும் இவ்வெழுத்தாளர்களை தொடர்ச்சியாகப்பிரச்சாரம் செய்தன.இவர்கள் தீவிர இலக்கியவாதிகளை மிகமிகக் கடுமையாக நிராகரித்தனர்.

நான்காம் தரப்புதான் தீவிர இலக்கியவாதிகள். ஓர் அடையாளமாக இச்சொல்லைக் கையாள்வது தமிழ்சூழலின் வழக்கம். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன் என ஒரு மரபு இவர்களுக்கு உள்ளது. இன்றும் வலுவாக அது நீடிக்கிறது

இவர்களுக்கு எந்தவகையான கட்சிப்பின்புலமும் இருக்கவில்லை. எந்த அரசியலமைப்பின் ஆதரவும் இருக்கவில்லை.பத்திரிகைகளின் ஆதரவு பிரமுகர்களின் சிபாரிசு அறவே இல்லை. கல்வித்துறைக்கு இவர்கள் இருப்பதே தெரியாது. பெரும்பாலும் தனிநபர்க்ளாகவே செயல்பட்டனர். ஆர்வமும் அர்ப்பணிப்பும் மட்டுமே இவர்களை செயல்படவைத்தன. எழுத்தின் வழியாக இவர்கள் அடைந்தவை ஏதுமில்லை. பணம், புகழ், அங்கீகாரம் ஏதுமில்லை

piramiL [பிரமிள்]

எழுதுவதற்கு ஊடகங்கள் இல்லாமல் இவர்களே சொந்தச்செலவில் ஆரம்பித்தவைதான் சிற்றிதழ்கள். தமிழ்ச்சிற்றிதழ் இயக்கமே இவர்களை அரைநூற்றாண்டுக்காலம் செயல்படச்செய்தது.அதிகமும் 300 பிரதிகள் வரை அச்சிடப்பட்டு மாதம் ஒருமுறையோ மூன்றுமாதங்களுக்கு ஒருமுறையோ வெளிவரும் சிற்றிதழ்களில் இவர்கள் எழுதினர். இருநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலை வெளியிட ஐந்தாண்டுகள் ஆகும் இவர்களுக்கு. பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே வாசித்துக்கொண்டார்கள். கடுமையாக தங்களைத்தாங்களே விமர்சனம் செய்துகொண்டார்கள்.

இவர்கள்தான் அனைத்துவகையான புதிய இலக்கியப் போக்குகளையும் கற்று இங்கே கொண்டுவந்தனர். மொழியாக்கங்கள் செய்தனர். அரசியல்,சமூகவியல் சிந்தனைகளை விவாதித்தனர்.நவீனக் கலைகளை இலக்கியத்துடன் இணைத்து அறிந்துகொள்ள முயன்றனர். மாறாக மேலே சொன்ன மூன்று தரப்புகளில் வணிகஎழுத்துக்கும் திராவிட இயக்க எழுத்துக்கும் சமகால சிந்தனைகளுடனும், கலைப்போக்குகளுடனும் சம்பந்தமே இருக்கவில்லை.

இன்று நீங்கள் திரும்பிப்பார்க்கலாம். தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் என்னும் இந்தச் சின்னஞ்சிறிய உலகின் உள்ளேதான் அத்தனை புதியவிஷயங்களும் நிகழ்ந்தன. தமிழில் நவீன ஓவியம் , நவீனத் திரைப்படம், நவீன மேற்கத்திய இசை என அனைத்துமே சென்றகாலங்களில் இந்தச்சிற்றிதழ் வட்டத்திற்குள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன.

சத்யஜித் ராயோ, இங்மார் பர்க்மானோ, பிக்காஸோவோ, குளோட் மோனேவோ, யான்னியோ பெயர் அச்சிடப்படுவதுகூட இந்தச்சிற்றிதழ்களில் மட்டும்தான். அண்டோனியோ கிராம்ஷியோ, மிகயீல் பக்தினோ, ஹரால்ட் ப்ளூமோ பிற இதழ்களுக்கு இன்றும்கூட அறியப்படாதவர்களே. இன்று நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இங்கேதான் முளைவிட்டெழுந்தன.

சுந்தர ராமசாமி

தமிழின் உண்மையான அறிவார்ந்த மரபு என்று சொல்லத்தக்க இந்த வட்டம் அனைத்துவகையான புறக்கணிப்புகளுக்கும் உள்ளாகியது. இன்றும் அது அரசு, ஊடகம் சார்ந்த எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. சமீபத்தில் இறந்த சுரதாவுக்குக்கூட இங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது. நவீனத் தமிழிலக்கியத்தின் தலைமகனாகிய புதுமைப்பித்தன் பெயரில் ஒரு சாலைகூட இங்கே இல்லை. புறக்கணிப்பு நிகழ்வது எங்கே?

காலம் கறாரான ஒரு அளவுகோலையே கொண்டிருக்கிறது. அரைநூற்றாண்டுக்காலம் கடந்தபோது இந்தச்சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளும் இலக்கியமரபும் மட்டுமே வாழும்தரப்பாக உள்ளன. மற்றவை வெறும் வரலாற்றுக்குறிப்புகளாக எஞ்சியிருக்கின்றன.

ஓர் உதாரணம் சொல்கிறேன். சிற்றிதழ்ச்சூழலில் புதுமைப்பித்தனை சிறுகதை மன்னன் என்று சொல்வது வழக்கம். இது அவருக்கு அவர் இறந்தபோது ஓர் அஞ்சலிக்கட்டுரையில் அளிக்கப்பட்ட பெயர். இப்பெயருக்குப் போட்டியாக வணிகக்கேளிக்கை எழுத்தியக்கத்தால் முன்வைக்கப்பட்டவர் அகிலன்.

திராவிட இயக்கத்தினரால் சிறுகதை மன்னன் என்று புகழப்பட்டவர் எஸ்.எஸ்,தென்னரசு. முற்போக்கு முகாம் புதுமைப்பித்தனை நசிவிலக்கியவாதி என்று சொல்லி நிராகரித்துவிட்டு விந்தனை சிறுகதையின் சாதனையாளர் என்றார்கள். அவர்களெல்லாம் எங்கே? இன்று ஒரு நுண்ணுணர்வுள்ள வாசகன் அவர்களை வாசிக்கமுடியுமா?

வணிக எழுத்துத் தரப்பால் தமிழ் நாவலின் சாதனையாளர் என்று சொல்லப்பட்டவர் கல்கி. திராவிட இயக்கத்தவர் தமிழின் தலைசிறந்த நாவலாசிரியராக முன்வைத்தது மு.கருணாநிதியை. முற்போக்கினர் செ.கணேசலிங்கனை. அவரது செவ்வானம் தமிழின் முதன்மை நாவல் என்று எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அந்நூல்கள் இன்று எப்படிப்பார்க்கப்படுகின்றன?

1980 வாக்கில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் மனித யந்திரம் என்னும் கதையை குங்குமத்தில் மறுபிரசுரம் செய்திருந்தார். அதை வாசித்த நினைவுள்ளது. அதில் ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதைகள் எழுதியவர்’ என்று அறிமுகம் செய்திருந்தார். அந்த அளவுக்குத்தான் புதுமைப்பித்தன் அன்று பொது வாசகர்களுக்குத்தெரிந்திருந்தார். அன்றைய நட்சத்திரங்கள் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள்.

g [அசோகமித்திரன்]

தொண்ணூறுகளில் நவீன இலக்கியம் சில தனிமனிதர்களின் முயற்சி மூலம் பரவலாக கொண்டுசெல்லப்பட்டது [ ஐராவதம் மகாதேவன், மாலன், வாசந்தி, கோமல் சுவாமிநாதன்] அதன்பின்னரே புதுமைப்பித்தன் மரபு பரவலாக அறியப்பட்டது. இணையம் வந்தது. புத்தகக் கண்காட்சிகள் வந்தன.

இன்று இந்த இலக்கிய மரபு பரவலாக அறியப்படுகிறது என்றால் இதன்மீதான அர்ப்பணிப்பினால் மட்டுமே திரும்பத்திரும்ப இதைப்பற்றி பேசி முன்னெடுத்த முன்னோடிகள்தான் காரணம். க.நா.சு,சி.சு.செல்லப்பா,வெங்கட் சாமிநாதன். சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் என ஒரு தொடர்ச்சி அதற்கும் உள்ளது.

நானும் அந்த மரபைச் சேர்ந்தவனே. இந்த ஒரே ஒரு இணையதளத்தை மட்டும் பாருங்கள். நவீனத்தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி எத்தனை முறை எத்தனை விரிவாக எழுதப்பட்டுள்ளது என தெரியும். கிட்டத்தட்ட 600 கட்டுரைகள் உள்ளன. அச்சில் பல்லாயிரம் பக்கம் அளவுக்கு எழுதியிருக்கிறேன். என் உயிருள்ளளவும் எழுதிக்கொண்டும் இருப்பேன். இதனால் எனக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. இந்த மரபை நிலைநாட்ட நான் விழைகிறேன். இது என் அறிவுலகப்பணி

இந்த அளவுக்கு அர்ப்பணிப்புடனும் தீவிரத்துடனும் முன்னர் சொல்லப்பட்ட மூன்று மரபுகளைச்சேர்ந்த எவரைப்பற்றியும் எவராவது எழுதுகிறார்களா? ஏன்? ஏனென்றால் அவை அந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தவில்லை. இல்லை பாதிப்பைச்செலுத்தியிருக்கின்றன என்றால் அப்படிச் சொல்பவர்கள் இதேபோல எழுதி நிலைநாட்டலாமே?

ஓர் அரசியல் அலையை தொடங்கிவைத்த சி.என்.அண்ணாத்துரையைப்பற்றிக்கூட இன்று சொல்லும்படி ஏதும் எழுதப்படுவதில்லை. அவர்களுக்கெல்லாம் அரசு இருந்தது, அமைப்புகள் இருந்தன, இதழ்கள் இருந்தன. எங்கள் தரப்புக்கு இருப்பது தீவிரம், அர்ப்பணிப்பு மட்டுமே. அதுவே எங்கள் முன்னோடிகளை வாழச்செய்கிறது. இது அமைப்புகளுக்கு எதிரான அறிவியக்கத்தின் வேகம்.

இன்று இலக்கியத்திற்காகப் போடப்படும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, ராமாகிருதம் என நீளும் மரபுவரிசை க.நா.சு- வால் முன்வைக்கப்பட்டது. பல கோணங்களில் அது விவாதிக்கப்பட்டு திருத்தப்பட்டு இன்றும் பெரும்பாலும் வலுவாக நீடிக்கிறது. இதுவே இலக்கியமரபாக அறியப்படுகிறது. காரணம் இதன் தீவிரம். இதையொட்டிச் செயல்பட்ட அறிவியக்கம். இது இன்றும் செல்லுபடியாகக்கூடிய கலைத்தன்மை கொண்டிருப்பது.

3 [ஜி.நாகராஜன்]
அனால் சிற்றிதழ் சார்ந்த இலக்கியமரபு எப்போதும் அதன் அளவுகோல்களை துல்லியமாகவே வைத்துள்ளது. அதற்கு மனிதர்கள் முக்கியமல்ல ,படைப்புகள்தான்.முற்போக்கு முகாமைச்சேர்ந்த கு.சின்னப்பபாரதியின் படைப்பை இலக்கியமென அங்கீகரிக்க க.நா.சுவுக்கு தயக்கமில்லை. ஆனால் க.நா.சு பெயரைச் சொல்லவே அவர்கள் தயங்குவார்கள்.

மற்றமரபுகள் இவ்வியக்கத்தை முற்றிலும் புறக்கணித்தன. இது தன் உண்மைத்தன்மையால் அர்ப்பணிப்பால் செயல்பாட்டால் அறிவுலக வெற்றி அடைந்த ஓர் இயக்கம். மற்ற மரபுகள் இன்று காலாவதியாகிவிடடன. இந்த மரபு வாழ்கிறது .அந்த காலாவதியான மரபுகளைச் சேர்ந்தவர்கள் கிளம்பிவந்து இந்த இலக்கியமரபில் ஏன் தங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை, இதெல்லாம் அநீதி என்று கூச்சலிடுகிறார்கள்.

பாருங்கள் வைரமுத்துவை. அவர் தன்னை தமிழ்ச்சிறுகதை மரபின் வளமான தொடர்ச்சியில் தன்னை பொருத்திக்கொள்ள விரும்புகிறார். அவர் அதற்குப்போடும் பட்டியல் வணிக எழுத்துமரபோ, திராவிட இலக்கிய மரபோ, முற்போக்குமரபோ முன்வைத்த பட்டியல் அல்ல. க.நா.சு போட்ட இலக்கியப்பட்டியல். புதுமைப்பித்தனின் நீட்சியாகவே அவர் தன்னை எண்ணுகிறார். அகிலனின் நீட்சியாக அல்ல. எஸ்.எஸ்.தென்னரசுவின் நீட்சியாக அல்ல. விந்தனின் நீட்சியாக அல்ல.

அது இயல்பும்கூட. அவரது ரசனைக்கு அவரால் மேலே சொன்னவர்களை வாசிக்கமுடியாது. புதுமைப்பித்தனையே ரசிக்கமுடியும். ஆனால் அதன்பின் இந்தப்பட்டியலில் திராவிட இயக்கத்தவர் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஒரு பாட்டை எடுத்துவிடுகிறார். அது வெறும் அரசியல் விளையாட்டு.

அரசு அங்கீகாரங்களை, ஊடகப்புகழை, கல்வித்துறை ஆதரவைப் பெற்றவர்கள் இந்தச் சின்னவட்டத்தின் அங்கீகாரத்திற்காக துடிப்பதேகூட இதன் வெற்றிதான்.

ஜெ

முந்தைய கட்டுரைரப்பர் எனும் வாழ்க்கை
அடுத்த கட்டுரைவெங்கட் சாமிநாதன் : அஞ்சலிகள்