விருதுமறுப்பு – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன்,

உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நான் தொழில் முறை எழுத்தாளன் இல்லை என்பதால் கோர்வையாக எழுத இயலாது. மொழியும் தட்டையாக தான் இருக்கும். பொறுத்தருள்க. நெருங்கிய நண்பர்கள் அனைவரும் தங்களின் இந்து மத அரசியல் சாய்வு காரணமாக முழுக்க நிராகரிப்பார்கள், அவர்களிடம் நான் சொல்வது, ‘இலக்கியம் மனிதனை பண்படுத்தும். ‘யானை டாக்டரை’ படித்தபின் எவ்வளவு பெரிய குடிகாரனாக இருந்தாலும் காட்டில் பாட்டிலை உடைத்து வீச மாட்டான். எனவே அரசியல் சாய்வு காரணமாக ஒரு இலக்கியவாதியை முழுவதும் நிராகரிக்க முடியாது, கூடாது’ என்று.

கல்புர்கி மற்றும் தாத்ரி சம்பவங்களுக்கு எதிராக எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பியளிப்பது தொடர்பாக தாங்கள் ஆற்றிவரும் எதிர்வினைகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இது தொடர்பாக எனக்கு சில அடிப்படை கேள்விகள் உள்ளது. ஏனெனில் இதுநாள் வரை நான் நம்பிக்கொண்டிருக்கும் அறங்களுக்கும் விழுமியங்களுக்கும் எதிராக உங்கள் கட்டுரை இருப்பது போல தோன்றுகிறது. நான் எந்தக்கட்சியையும், எந்தக் குழுவையும் சாராதவன். இடது சாரி சாய்வு உள்ளவன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.எனவே இக்கடிதத்தை படித்து என் கேள்விகளுக்கு பதிலளித்தால் மகிழ்ச்சியடைவேன்.இனி தங்களின் கட்டுரையின் பகுதியும் கேள்விகளும்

//இவ்விரு நிகழ்வுகளுமே காங்கிரஸும் சமாஜ்வாதியும் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. ஒரு குற்றநிகழ்வாக கண்டு நேரடியான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுகளுக்கு உள்ளது….காங்கிரஸ் அரசு என்பதனால் இன்றுவரை சரியாகக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும் கர்நாடக அரசு மீதோ காவல்துறைமீதோ நம் எழுத்தாளர்கள் குற்றம்சாட்டவில்லை.//

எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதும், முகமது அக்லக் கொல்லப்பட்டதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்களா அல்லது குற்றவாளிகளை கைது செய்ய கோரும் போராட்டமா, மாநில அரசை குறை சொல்வதற்கு? கல்புர்கி சொத்து தகராறு காரணமாகவோ அல்லது தனிப்பட்ட விரோதங்களுக்காகவா கொலை செய்யப்பட்டார்? மாட்டிறைச்சி வதந்தியால் கொல்லப்பட்டவருக்கும் கொலை செய்தவர்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட விரோதம் உண்டா? இந்து அடிப்படைவாதம் சார்ந்த சகிப்புத்தன்மை இல்லாத சில நபர்களால் தானே கொல்லப்பட்டார். இந்து பாசிசத்திற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மோடி தலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்ததற்கு பின்பு தானே? தங்கள் அளவுகோலின் படி காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சனம் செய்யக்கூடாது, போராட்டம் நடத்த கூடாது, பாதுகாப்பு குறைவுக்காக அப்போதிருந்த காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு என்று கொள்ளலாமா? சில மாதங்களுக்கு முன்பு பூணூல் அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு வெறுப்புக்குற்றம் என்று பத்ரி உட்பட இந்து மத ஆதரவாளர்கள் எப்போதோ இறந்த பெரியாரை இழுத்து திராவிட இயக்கங்களை குற்றம் சொன்னது எதனால்?

//இதில் பாரதிய ஜனதாக்கட்சியின் பிழைகள் என்ன? கல்பூர்கி கொலையை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். கல்பூர்கிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள உதிரி சாதிய -இந்துத்துவக் குழுக்களின் வன்முறைப்பேச்சு பாரதிய ஜனதா தரப்பின் குரலாக தேசிய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டது.அதையொட்டியே எதிர்ப்புகள் எழுகின்றன//

மதத்தின் பெயரால் நடக்கும் குற்றங்களுக்கும் வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் பா.ஜ.கவினருக்கும் சம்பந்தமே இல்லையா? தாத்ரி சம்பவத்தில் பா .ஜ.க உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? அனைத்து சம்பவங்களும் வெறும் இந்துத்துவ உதிரிகளின் செயல்கள் என்றால் இந்தியாவில் ஒற்றுமைக்கே பங்கம் விளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணம்? அத்வானி யார்? கல்யாண்சிங் யார்? முரளி மனோகர் ஜோஷி யார்? உமா பாரதி யார்? இவர்களின் பேச்சிற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும் சம்பந்தம் இல்லையா? குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தொடர்பு இல்லை என்று கருதுகிறீர்களா?

//பாரதிய ஜனதா ஒரு தெளிவான முதலாளித்துவ பொருளியலை, திட்டவட்டமான நிர்வாகத்தை உருவாக்க முயல்கிறது.//

எப்படி? கட்டாயமாக விவசாயிகளின் சம்மதமின்றி நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்றா? அல்லது அடானி போன்ற பெரு நிறுவனங்களுக்காக நாட்டின் வளங்களை சல்லிசான விலைக்கு விற்பதா போன்றா ?

//எழுத்தாளர்களைத் தாக்குவதற்கு எதிராக எழுத்தாளர்கள் குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவ்வெதிர்ப்பால் என்ன பயன்? ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஏன்? இந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பொதுக்கோரிக்கை விடுத்தார்கள். அப்போதே அவர்களின் நடுநிலைமை அழிந்துவிட்டது. தனிமனிதர்களாக அவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப்போன்றதல்ல அது. அது எழுத்தாளர்களாக தங்களை முன்வைத்து அவர்கள் செய்தது. அப்போதே அவர்கள் கட்சி –தேர்தல் அரசியலில் ஒரு தரப்பாக ஆகிவிட்டனர். மோடியோ பாரதியஜனதாவோ அவர்களை எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கமுடியும். சமன்செய்து சீர்தூக்கிச் சொல்லும் சான்றோராக பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர்//

கலவரங்களின் மூலம் ஆட்சியை பிடிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மோடி தலைமையை எதிர்ப்பதை தவிர நடுநிலையாளர்களுக்கு வேறு பணி உள்ளதா? மோடியை எதிர்த்தால் காங்கிரசுக்கு ஆதரவானவர்கள் என்பது இருபடித்தானது இல்லையா? மூன்றாவது குரலுக்காக சாட்டை சுழற்றும் நீங்கள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கும் சில எழுத்தாளர்கள் மோடி அரசை எதிர்த்தால் சான்றோராக இருக்கும் தகுதி இழந்து விடுகிறார்கள் என்பது எப்படி? விருதை திருப்பியளிக்கும் எதிர்ப்பு என்பது வெறும் அடையாள ரீதியிலான எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் செய்ததால் தற்போது சர்வதேச கவனம் கிடைத்திருப்பது பயன் இல்லையா? இது போன்ற கவனம் கிடைப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் செய்ய வேண்டியிருக்கும் இந்தியாவில்? சார்த்தர் என்ன பயனுக்காக நோபல் பரிசை நிராகரித்தார்? தாகூர் என்ன பலனுக்காக நைட் பட்டத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து திருப்பியளித்தார்?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது. சென்ற ஆட்சிக்காலத்தில் அவர்களை அண்டிவாழ்ந்து லாபங்களை அடைந்தவர்கள், இப்போது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்றே பாரதிய ஜனதா இதை நோக்குகிறது//

‘மோடியின் அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில்’ என்று குறிப்பிட்டாலும் அதையே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். தற்போது வரை 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் விருதை திருப்பியளித்திருக்கிறார்கள். அனைவருமே, ‘சென்ற ஆட்சிக்காலத்திற்கு ஆதரவராக இருந்தனர்’, ‘அரசியல் காரணங்களுக்காக’ தான் என்பதை எப்படி எவ்வித ஆதாரமும் இல்லாமல் உங்களால் கூற முடிகிறது? (இப்படி கேள்வி வரும் என்று தான் முன்னெச்சரிக்கையாக பாஜகவை துணைக்கு அழைத்திருக்கிறீர்களா?) அந்த 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்திருக்கிறீர்களா? நாளைக்கே உங்களுக்கு சாகித்ய அகாடமியோ அல்லது ஞான பீடமோ கிடைத்தால் உங்களின் எழுத்துக்களுக்காக அன்றி இந்துத்துவ ஆளும் அரசை அண்டி வாழ்ந்ததால் தான் கிடைத்தது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

//திமுகவிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் மன்றாடியதாகவும் தலைமை சொல்லவேண்டும் என எம்பிக்கள் சொன்னார்கள் என்றும் தலைமை அவ்விஷயத்தைப் பேசவே விரும்பவில்லை என்றும் அநத காங்கிரஸ் முக்கியஸ்தர் சொல்லி வருந்தினார். இங்கே ஒரு பஞ்சாயத்துத்தலைவர் கூட ராஜினாமா செய்யவில்லை. உண்மையில் ராஜினாமா மூலம் எதிர்ப்பைத்தெரிவிப்பதற்கான மிகச்சரியான இடம் அதுதான்//

மொத்த கட்டுரையில் நான் உடன்படும் ஒரே விஷயம் இது தான். ஆனால் குஜராத் இனப்படுகொலை முதல் ஈழப்படுகொலை வரை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் தான் விருதை திருப்பியளிப்பவர்களையும் ஆதரிக்கிறார்கள், திருப்பியளிப்பவர்களை இழிவுபடுத்துவதையும் எதிர்க்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது…

கூட்டம் கூடுவது, கோஷமிடுவது, சேர்ந்து செயல்படுவது, எல்லாரும் செய்வதற்கக ஒன்றைச்செய்வது, பொதுவான குரல்களை தானும் எதிரொலிப்பது போன்றவை எழுத்தாளனுக்குரிய செயல்கள் அல்ல என்பது என் எண்ணம்…//

ஒரே கட்டுரையில் உள்ள மேற்கண்ட இரு வாக்கியங்களுக்கும் உள்ள முரண்பாட்டை உணர முடியவில்லையா? எது பொதுவான குரல்? ஆட்டுமந்தைகளை போல மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஓட்டளித்து மதவெறியர்களையும் சாதிவெறியர்களையும் பதவியில் அமர்த்துவதா? அல்லது வெகு ஜன மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஒரு சில எழுத்தாளர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு விருதை திருப்பியளிப்பதா?

//எம்.டி.வாசுதேவன் நாயரோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, யு.ஏ.காதரோ, புனத்தில் குஞ்ஞப்துல்லாவோ எம்.முகுந்தனோ எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். சச்சிதானந்தனைச் சுட்டிக்காட்டி எம்.டி.வாசுதேவன் நாயரை எவரும் பிழைப்புவாதி என அங்கே வசைபாடவுமில்லை. நான் சொல்லவிழைவது அதை மட்டுமே//

எனக்கும் விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்களை வசை பாடுவதில் உடன்பாடில்லை தான். ஆனால் திருப்பியளித்த எழுத்தாளர்களை ‘வெறும் அரசியல் கும்பல்’, ‘அண்டிப்பிழைத்தவர்கள் விசுவாசம் காட்டுகிறார்கள்’ என்று இழிவு படுத்துவது ஏன் என்பதே என் பிரதான கேள்வி ?

இப்படிக்கு
ராஜகோபால்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,

நான் தங்களை வசை பாடுவதாக நீங்கள் எழுதியிருந்ததாக நண்பர் சொன்னார். எந்த context இல் அப்படி சொன்னீர்கள் என தெரியவில்லை. தினமணி பத்தியே என் வாரம் முழுவதையும் எடுத்துக் கொள்கிறது. எப்போதாவது ஃபேஸ்புக்கில் தங்களின் எழுத்தரசியலின் காந்திய சமன்வய முரணியக்கத்தை கிண்டலடிப்பதைத் தாண்டி தங்கள் மீது வசை பாடுவதெல்லாம் இல்லை. ’இழிமகன்கள், தெருப்பொறுக்கிகள், குண்டர்கள் லும்பன்கள் ’ இத்யாதி அடைமொழிகள் கொண்ட காந்திய ஞானமரபுடன் உரையாடுவதிலோ அல்லது வசைபாடுவதிலோ என்ன சுவாரசியம் இருக்கமுடியும்? எனவே அவ்வப்போது வினவு கட்டுரைகளை கிண்டலடிப்பது போலவே தங்கள் காந்திய வினவு கட்டுரைகளையும். குறிப்பாக தங்கள் ‘இந்துத்துவ லும்பன்கள்’ குறித்த கட்டுரைகள். நன்றாகவே இருக்கின்றன.

பணிவுடன்
அநீ

ஜெமோ

ஈழப்போரின்போது திமுகவினர் ராஜினாமா செய்யவில்லை என்று எழுதிய நீவிர் செய்தது என்ன என்று அறியவிரும்புகிறேன். நீர் என்ன செய்தீர் என நாடறியும். வெட்கமாக இல்லையா?

கண்ணன்

**

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்த அரசியல் விவகாரத்தில் என்ன நிகழும் என்பதற்கு மேலே குறிப்பிட்ட கடிதங்களே சான்று. பாருங்கள், முதல் கடிதம். பாரதிய ஜனதா இந்த எழுத்தாளர்களை எப்படிப் பார்க்கும் என்று நான் சொன்னதை நான் அந்த எழுத்தாளர்களை அப்படிப்பார்க்கிறேன் என்று புரிந்துகொண்டு’ எழுதப்பட்டிருக்கிறது.

மூன்றாம் கடிதம் இன்னும் சுத்தம். நான் ஈழப்போரில் என்ன சொல்கிறேன் செய்திருக்கிறேன் என்பதல்ல பிரச்சினை. உடலும் உள்ளமும் உருகிக்கொந்தளித்தவர்கள் திமுகவினர் . அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதே கேள்வி. ராஜினாமாவும் திருப்பியளிப்பதும் எல்லாம் இலக்கியவாதிகளுக்கு மட்டும்தானா என்பதே கேள்வி

இந்த வகையில்தான் இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன. மாபெரும் வெட்டிவேலை. ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இங்கே நிகழ்வது தங்கள் சொந்தக்கணக்குகளைத் தீர்க்கும் அரிப்பு மட்டுமே. பாருங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அதிகாரபூர்வ தரப்பு வெளியாகியிருக்கிறது, சாகித்ய அக்காதமி விருதுகளையோ பரிசுகளையோ திருப்பியளிக்கவேண்டியதில்லை என்று

அந்த அமைப்பின் அதிகாரபூர்வ பொறுப்பில் இருக்கும் இரு ஆசாமிகள் கருப்பு கருணா, ஆதவன் தீட்சண்யா விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்களை கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். விருது வாங்கியவர்கள், கோழைகள் என்கிறார்கள். அந்த அமைப்பு ஏன் பதில் சொல்வதில்லை

இவர்களின் இலக்கு முக்கியமாக இதே அமைப்பில் உள்ள இவர்களின் ‘தோழரான சு.வெங்கடேசன். அவருக்கு விகடன் மூலமாக சமீபத்தில் [சந்திரஹாசம் என்னும் நூல் வழியாக] கிடைத்திருக்கும் பிராபல்யம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகள்தான் செயல்திட்டம். மேலாண்மை பொன்னுச்சாமி நோயுற்றிருக்கிறார். கட்சி நிதியுதவி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார் என்று கேள்வி. செய்யும் நிலையில் கட்சி இல்லை. லட்சரூபாய் பரிசை அவர் எங்கே திருப்பியளிக்கப்போகிறார்? டி செல்வராஜ் எப்படி திருப்பிக்கொடுக்கமுடியும் அவரது பொருளாதார நிலையில். அது தெரிந்தே போடப்படும் அடி இது. நோக்கம் உட்கட்சி அரசியல்.

இதையெல்லாம் ஏதோ தார்மீக எழுச்சி என்றெல்லாம் எவரேனும் நம்பினால் நம்பலாம். விரல்சூப்பும் பழக்கம் ஒருவயதில் நின்றுவிடுவதே அழகு. அப்படியே தொடர்ந்தால் அது ஒரு மனநோய்

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவற்றின் வாசலில்
அடுத்த கட்டுரைசஹ்யமலை மலர்களைத்தேடி – 1