ஜி.நாகராஜன் என்னும் கலைஞன்

ஜெ,

உங்கள் தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரை எனக்கிருந்த குழப்பங்களைத் தீர்த்துவைத்தது. நானும் தஞ்சை பிரகாஷ் எழுதிய இருநாவல்களை வாசித்து என்னது இது என்று நினைத்தவன். ஆனால் இன்னொரு கும்பல் சமீபமாக ஜி.நகாராஜனை போலி என்றும் பாவலா எழுத்தாளர் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ஜி.என் பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். ஜி.என் பாலியலைத்தான் எழுதினார். அவர் எழுத்து ஏன் நுட்பமானதாக இருக்கிறது என அறிய விரும்புகிறேன், ஏனென்றால் அப்படி முன்னரே சொல்லியிருக்கிறீர்கள்.

சண்முகம்

3

அன்புள்ள சண்முகம்,

ஜி.நாகராஜனை சிலர் எண்பதுகளில் பெரும்பரவசத்துடன் ‘கண்டுபிடித்துக் கொண்டாடினார்கள். அவரை போல ஏன் அசோகமித்திரன் எழுதவில்லை என்றெல்லாம் கேட்டார்கள். அவர் கிளர்ச்சியாளர் கலகக்காரர் என்றெல்லாம் பேசப்பட்டது. கட்டுரைகள் எழுதப்பட்டன. ஏன் கதைகள் கூட அவரைப்பற்றி எழுதப்பட்டன. [கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன்]

அப்போது ஜி.நாகராஜனை கறாராக மதிப்பிட்டு எழுதினேன். அவருடைய எழுத்து கலகமோ அடித்தள மக்கள் மீதான மனிதாபிமானமோ ஒன்றும் அல்ல என்று விளக்கினேன். அவருடையது பாலியல் விருப்புடன் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் ஒருவரின் பார்வைதான். அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. முழுக்கமுழுக்க நவீனத்துவம் உருவாக்கிய வாழ்க்கை நோக்கு அது.

அன்று ஒப்புநோக்க ஜி.நாகராஜன் எழுத்து பாலியல்தூண்டலை அளிக்கக்கூடியதாக இருந்தமையால் கொண்டாடியவர்கள் இன்று அடுத்த ‘உறைக்கிற சரக்கு’ வந்ததும் ‘அது பத்தலை மச்சி’ என இடம் மாறுகிறார்கள். அது இலக்கிய அபிப்பிராயமே அல்ல. அவர்கள் வாசிக்கவேண்டியதே வேறு.

ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது

நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்

’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.

ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.

அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.

உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!

மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.

’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது

அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.

தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.

இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவையாபுரிப்பிள்ளை குறித்து