புறப்பாடு கடிதம்

அன்பு ஜெயமோகன்,

எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள் ஆகிவிட்டன உங்களுக்கு அஞ்சல் அனுப்பி. உங்கள் படைப்புகள் அனைத்தையும் படித்து விட்டுத் தான் மறுபடி கடிதம் எழுதுவது என்று தீர்மானமாய் இருந்தேன். புறப்பாடு II படித்ததில் தீர்மானம் பொடிப் பொடி ஆகி விட்டது. தங்களின் இந்த சுய அனுபவங்கள் பற்றிய பதிவு தங்களின் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடுகிறது.

நேற்று முடித்தேன். பித்துப் பிடித்தாற் போல் இருக்கிறது. அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. குருட்டு யோசனையாகவே இருக்கிறேன். உங்களுடைய பல முன் முடிவுகளுக்கு நீங்கள் மேற்கொண்டிருந்த ஞான யாத்திரையே காரணம் என்று தோன்றுகிறது.

பல கேள்விகள் எழுகின்றன. ராதாக்ருஷ்ணன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தங்கள் தந்தைக்கும் அவரது அன்னைக்கும் என்னதான் பிணக்கு? ஈனச் செயலை செய்து பிழைக்கும் சண்டாளிகையின் கணவர் தன் மனைவியைத் தொட முயன்றவனின் கைகளை ஏன் வெட்டினார்? அருளப்பர் ஓரிரு சித்திகள் அடைந்தவர் என்பதை ஏன் உங்களின் அறிவு நம்ப மறுத்தது? வீட்டை அடைந்த பின்னர் மீண்டும் என் வீட்டை விட்டு ஓடினீர்கள்?

இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதில் புண்ணியம் இல்லை என்றும் நானே தான் விடை கண்டு பிடித்தாக வேண்டும் என்றும் தோன்றுகிறது. பாராட்டுகிற மன நிலையோ விமர்சிக்கிற மன நிலையோ இல்லை. வேண்டுமானால் பூண்டி ஆற்று ஸ்வாமிகள் சொல்வது போல் ‘நல்லது நல்லது’ என்று மட்டுமே சொல்ல முடியும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக, இந்தத் தொடர் விடுக்கும் செய்தியாக நான் கருதுவது கீழ்க்கண்ட விவரிப்புத்தான்:
‘தட்டுலே பாயாசம் வெச்சு சாப்பிடு கிருஷ்ணா… தட்டு இல்லேண்ணா பாயசம் ஓடிரும். பாயாசமில்லாத வெறும் தட்டு உதவாது….’ கிழவரைச் சுட்டிக்காட்டி ‘குரு சொல்வார்…தட்டை திங்காதே. தட்டைப்பழிக்கவும் செய்யாதே. …கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?’

எப்பேர்ப் பட்ட மகா வாக்கியம்! எவரோ ஒரு சக பயணி சர்வ சாதாரணமாக உதிர்த்துச் சென்றிருக்கிறார்!

செம்பையின் ராம மந்த்ரம் கேளுங்க:

அன்புடன்,

அஸ்வத்

அன்புள்ள அஸ்வத்

வாழ்க்கைக்கும் நாவலுக்குமான வேறுபாடு இதுதான். வாழ்க்கையில் கேள்விகள் மட்டும்தான், விடைகள் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 1
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 2