எம்.எஸ் – பாராட்டுவிழா. 2003

em eS

மார்ச் ஒன்பதாம் தேதி நாகர்கோவில் டி வி டி பள்ளி அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவும் பாராட்டுக்கூட்டமும் ஒரு வகையில் முக்கியமான சிறப்பு கொண்டது . காரணம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பிரதி மேம்படுத்துநருக்கு எடுக்கப்பட்ட முதல் பாராட்டு விழா இது. எம் சிவசுப்ரமணியம் [எம் எஸ்] அவர்கள் கடந்த நாற்பதாண்டுகளாக் ஆற்றிய பிரதிமேம்படுத்தும் பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டது . நாவலாசிரியர் பொன்னீலன் நாவலாசிரியர் நீல பத்மநாபன் ஆகியோர் இதை குறிப்பிட்டார்கள் .

தமிழ் ஆய்வாளார் குமரி மைந்தன் தலைமை வகித்து பேசினார். இப்போது நூல்கள் ஏராளமாக வருவதும் கவனிக்கப்படுவதும் மிகவும் முக்கியமான ஒன்று என்று சொன்னார் . நூல்களை உரிய முறையில் பிழை பார்த்து பதிப்பிப்பது அவசியம் என்ற உணர்வு இப்போதுதான் தமிழில் உருவாகியுள்ளது என்றார்.

பிறகு எம் எஸ் அவர்களுக்கு குமரிமைந்தன் மலர்மாலை அணிவித்தார். பொன்னீலன் பொன்னாடை போர்த்தினார். எம் எஸ் அவர்களின் துணைவியாருக்கு திருமதி வான்மதி கெளசல்யா அவர்கள் பொன்னாடை போர்த்தினார் . எம் எஸ்ஸை வாழ்த்தி ஈழ படைப்பாளி அ முத்துலிங்கம் அவர்கள் அனுப்பியிருந்த ரூ 5000 பணமுடிப்பு நீல பத்மநாபன் அவர்களால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து எஸ். அருண்மொழி நங்கை வாழ்த்துச்செய்திகளை படித்தார் அமுத்து லிங்கம் , காஞ்சனா தாமோதரன், பி ஏ கிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், நஞ்சுண்டன் ஆகியோரின் வாழ்த்து செய்திகள் படிக்கப்பட்டன.

எம் எஸ் அவர்கள் மொழிபெயர்த்த ‘அமைதிஆன மாலைப்பொழுதில் ‘ [உலகச்சிறுகதைகள்]என்ற நூலை பொன்னீலன் வெளியிட சொல் புதிது ஆசிரியர் மெளலானா சதக்கத்துல்லா ஹசனீ பெற்றுக் கொண்டார் . பால் சகரியாவின் சிறுகதைகளான ‘ யாருக்குத்தெரியும் ‘ நூலை நீல பத்மனாபன் வெளியிட முகம்மது ஃபாரூக் பெற்றுக் கொண்டார் . இவை தமிழினி பதிப்பக வெளியீடுகள்

பொன்னீலன் எம் எஸ் அவர்கள் மொழிபெயர்த்த கதைகள் எப்படி உத்வேகமான வாசிப்பனுபவத்தை அளிப்பவையாக இருந்தன என்று சொன்னார். எம் எஸ் அவர்கள் புனைவு மொழி குறித்து மிகுந்த கவனம் உடையவர் .அவரது கவனமும் உழைப்பும் தன்னுடைய நூல்களை மேம்படுத்த மிகவும் உதவியுள்ளன என்றார். எம் எஸ் மிகவும் அடங்கிய குணம் கொண்டவர், தன்னுடைய கருத்துக்களையோ தன்னையோ ஒருபோதும் முன்னிலை படுத்திக் கொள்ளாதவர் .ஆகையால் அவர் ஆற்றிய பணியை பிறர் கவனிக்கவும் அங்கீகரிக்கவும் இத்தனை தாமதமாகிவிட்டது என்று கூறினார்.
ms 1 எம் எஸ் மொழிபெயர்த்த அமைதியான மாலைப்பொழுதில் நூலை பொன்னீலன் வெளியிட சொல்புதிது ஆசிரியர் மெளலானா சதக்கத்துல்லா

ஹசனீ பெற்றுகொள்கிறார். அருகே முறையே எம் எஸ் , குமரிமைந்தன் நீல பத்மநாபன்

நீல பதமநாபன் எம் எஸ் அவர்கள் தனக்கு அறிமுகமான நாட்களைப்பற்றி பேசினார் . மிதமாக பேசுபவர் என்பதனால் அவரது கருத்துக்கள் பலசமயம் பிறருக்கு தெரியாமலேயே போனதுண்டு என்றார். எம் எஸ் அவர்கள் ஆரம்ப காலத்தில் நீல பத்மநாபன் உள்ளிட்ட பலருடைய ஆக்கங்கள் பற்றி கட்டுரைகள் எழுதியதுண்டு அவையும் நூலாக வரவேண்டும் என்றார் . எம் எஸ் அவர்கள் தன்னுடைய நூல்களுக்கு ஆற்றிய பங்களிப்பை எடுத்துக் கூறினார் .

எம் வேதசகாய குமார் பிரதி மேம்படுத்துதல் என்பது ஒரு படைப்புக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை எடுத்துக் கூறினார். எழுத்தாளனின் மனம் படைப்பை உருப்படுத்தும் தளத்திலேயே நின்று விடுகிறது .படைப்பை வாங்கிக் கொள்ளும் தளத்தில் நின்று அதை பார்ப்பவர் பிரதி மேம்படுத்துநர். அவர் முதல் வாசகர். அவரது பங்களிப்பு பிரதியை வாசகன் பக்கமாக நகர்த்துகிறது .எம் எஸ் சிறந்த பிரதிமேம்படுத்துநராக பலகாலமாக செயலாற்றினாலும் அவரது பணியின் முக்கியத்துவம் உணரப்படவில்லை .தன்னை எழுத்துக்கு அதிபதியாக காணும் எழுத்தாளனின் அகங்காரம் அதற்குக் காரணம். பிரசுர கர்த்தர்களும வரை ஒரு மேசை உபகரணம் போலவே பயன்படுத்தி வந்தார்கள். இப்போதுதான் அந்த உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

டாக்டர் ஸ்ரீகுமார் எம் எஸ் அவர்களின் இளமைப்பருவ எழுத்துக்களைப்பற்றி சொன்னார் . ஆர்வமூட்டும் துணுக்குகள் பலவற்றை எம் எஸ் எழுதியிருக்கிறார் என்றார் . புனைபெயரில் 15 கவிதைகளும் எழுதியுள்ளார் . அவற்றில் ஒன்று கணையாழி கவிதைகள் என்ற தொகுப்பில் உள்ளது.ஆனால் ஒரு கட்டத்தில் படைப்பிலக்கியத்தில் தன் பங்களிப்பு தனக்கே திருப்தியளிப்பதாக இல்லை எனஉணர்ந்தார். இத்தனைக்கும் அவை ஒன்றும் தரமற்ர படைப்புகளல்ல.அக்காலகட்டத்து சிறந்த படைப்புகளே. மொழி மேம்படுத்துதல் மொழிபெயர்த்தல் ஆகியவற்றை செய்ய ஆரம்பித்து அதில் முட்ன்னோடியாக தடம் பதித்தார். தமிழ் சூழலில் இம்மாதிரி அங்கீகாரமோ பணமோ இல்லாத வேலைகளை செய்பவர்களுக்கு மனைவிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைவதுண்டு . தன் கணவரை புரிந்துகொண்டு துணையாக நின்ற எம் எஸ் அவர்களின் மனைவி திருமதி நாகம்மை பாரட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர் என்றார் .
222

ms 2 எம் எஸ் மொழிபெயர்த்த யாருக்குத்தெரியும் பால் சகரியா சிறுகதைகள் நீலபத்மநாபன் வெளியிட ஃபாரூக் பெற்றுகொள்கிறார்.

இடமிருந்து முறையே பொன்னீலன், எம் எஸ் , குமரிமைந்தன் ,நீல பத்மநாபன் ,ஃபாரூக்

எம் எஸ்அவர்கள் தன் ஏற்புரையில் இலக்கியப்பணி தனக்கு மிக மிக இன்பமூட்டுவதாகவே இருந்து வந்துள்ளது என்றும் ஈடுபட அவ்வின்பம்

மட்டுமே காரணம் என்றும் சொன்னார் .எந்த எதிர் பார்ப்பும் இருந்தது இல்லை ,ஆகவே வருத்தம் ஏதும் இல்லை. பெரிய இலக்கிய படைப்பாளிகளின் நூல்களில் ஈடுபட கிடைத்த வாய்ப்பாகவே அதை தான் கருதி வந்ததாக சொன்னார் . இந்த மேடையே தான் ஏறிய முதல் மேடை, இது தன் முதல் பேச்சு .இந்த பாராட்டு விழா தன்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருப்பதாகவும் அது நிறைவேறிவிட்டது என்றும் எண்ணச்செய்வதாக சொன்னார் . பாராட்டுக்களை தன் மீதான அன்பின் வெளிப்பாடாக மட்டுமே கொள்வதாக குறிப்பிட்டார் .தன் பேத்தி தன் சிறுகையால் வெகுநேரம் தலைவாரிவிட்டு பெளடர் போட்டு விட்டு பொட்டு வைத்து ‘ ‘ தாத்தா நீ ரொம்ப அழகா இருக்கே ‘ என்று சொல்வதுண்டு .அப்போது உண்மையிலேயே முகம் கொன்சம் அழகாக ஆவதுமுண்டு .அதுபோலத்தான் இதுவும் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி சொன்னார்.

ஜெயமோகன் நன்றி சொன்னார். எம் எஸ் அவர்கள் குறிப்பிட்டதுபோல இவ்விழா அவரது பேத்தி ஒருத்தியின் அன்பின் வெளிப்பாடே என்றார் . தன் மனைவி அருண்மொழி நங்கையே இவ்விழா அமையக் காரணம் .அவருக்கு கிடைத்த ஓர் ஊதிய உபரிப்பணத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது. ஒரு வாசகியாக எம் எஸ் என்ற பிரதிமேம்படுத்துநருக்கு நாம்அளிக்கும் கெளரவம் இது .மாத்மார்த்தமான சேவை என்றானாலும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு இது சான்று என்றார்

விழாவுக்கு திரளான கூட்டம் வந்திருந்தது .நாகர்கோவிலில் சமீபத்தில் எந்த இலக்கியக் கூட்டத்துக்கும் இந்த அளவுக்கு கூட்டம் வந்தது இல்லை. தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்றம் சார்பிலும் நெய்தல் இலக்கிய அமைப்பு நெய்தல் சார்பிலும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.

வாழ்த்துச் செய்திகள்

===============

MESSEGE FROM PAUL ZAKARIA

I am extremely happy to know my short stories are translated and published in Tamil by M Sivasubramanyam. This is my seventh book in Tamil. The interest showed by the Tamil literary world on my writing is very pleasing. I wish all the best to M S

Zakaria

Trivandrum

ஈழ எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

================================================

கனடாவில் இருந்து எனது அன்பு வணக்கங்கள்,

கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்கு தன்னலம் பார்க்காது சேவையாற்றி வரும் திரு எம்.எஸ்ஸை கெளரவிக்கும் முகமாக நீங்கள் விழா எடுப்பதாக அறிகிறேன். இந்த சமயத்தில் என் மட்டில்லா மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

ஆங்கில நூல் வெளியீடுகளில் Editor க்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் தமிழில் இந்த அம்சம் கெளரவம் பெறவில்லை. முதன்முதலாக தமிழில் எடிட்டிங் என்பதன் முக்கியத்துவத்தை உணரச் செய்வதில் வெற்றி பெற்றவர் திரு எம். எஸ் அவர்கள்தான். சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன் போன்ற பெரிய எழுத்தாளர்களுடைய படைப்புகள் எல்லாம் இவர் கைவண்ணத்தால் சிறப்பு பெற்றன. ஆனால் மெளனமான செயலாளி என்பதால் இவர் பெருமை வெளியே தெரிய வாய்ப்பிருக்கவில்லை.

எம்.எஸ் மொழிபெயர்ப்பு ஆற்றல் பெற்றவர் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலத்தில் இருந்து பல படைப்புகளை இவர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். Annie Proulx எழுதிய The Half Skinned Steer ஐ தமிழில், எம். எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் பார்த்தபோது நான் உண்மையில் திடுக்கிட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் அதைப் படித்தபோது ஏற்படாத ஓர் உணர்வும், ஒருமையும் தமிழில் வாசித்தபோது கிடைத்தது. எம். எஸ்ஸின் சிறப்பு என்னவென்றால் அவர் மொழிபெயர்ப்பில் மூலத்தின் அழகு குறைவதில்லை; அதே சமயம் முன்னூல் ஆசிரியருக்கு தரவேண்டிய விசுவாசமும் கெடுவதில்லை. நூல் மேல் நடப்பது போன்ற வித்தை இது. உமர்கயாமை மொழிபெயர்த்த Edward Fitzgerald க்கு உமர்கயாமின் புகழில் பாதி சேரவேண்டும் என்று சொல்வார்கள். எம்.எஸ் மொழியாக்கங்களும் அம்மாதிரியே.

‘உலகச் சிறுகதைகள் ‘ ஒரு தொகுப்பு, Paul Zakaria வின் நூல் மொழிபெயர்ப்பு ஒன்று, ஆக இரண்டு புத்தகங்கள் இந்த விழாவில் வெளியிடப்படுவதாக அறிகிறேன். அவை மிகவும் உயர் தரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எம் எஸ் அவர்களுக்கு என் எளிய நினைவுப்பரிசொன்றை அளிக்க ரூ 5000 அனுப்பியுள்ளேன். அளிக்கவும்

இந்த விழா சிறப்பாக அமையவேண்டும் என்றும், திரு எம்.எஸ் அவர்கள் நீண்ட காலம் தொடர்ந்து மேலும் பல ஆக்கங்களை தமிழுக்கு தரவேண்டும் என்றும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

பிரியமுடன்

அ.முத்துலிங்கம்

கனடா, 5 மார்ச் 2003

காஞ்சனா தாமோதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

===========================================

வணக்கம் . பழைய தமிழ் எழுத்தாளர்கள் பலரின் புத்தகங்களும் பதிப்பாசிரியத்துவ மாற்றங்களுடன் வந்ததாய் அறிகிறேன்; இதுவே எனக்குப் புதுச் செய்தி. தமிழில் ஏன் பதிப்பாசிரியர்கள் இல்லை என்று நொந்து கொண்டே, எனது சமீபத்திய நாவலுக்கு நானே பதிப்பாசிரியராகவும் செயல்பட வேண்டியிருந்தது. இத்தனை எழுத்தாளர்களின் பிரதிகளையும் மேம்படுத்தும் பணியைச் செய்த திரு. எம்.எஸ். அவர்களுக்கு வாசகி என்ற முறையில் நான் கடன்பட்டிருக்கிறேன். அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்கவும். அவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

காஞ்சனா

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மார்ச் 4, 2003

‘ புலிகநகக் கொன்றை ‘ நாவலாசிரியர் அனந்த கிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

========================================================================

திரு எம். எஸ் அவர்களின் விழா அழைப்பிதழ் கிடைத்தது. நேரில் பார்த்தது கிடையாது. ஆனாலும் சுந்தர ராமசாமி அவர்கள் அவரைப் பற்றி கூறக் கேள்விப் பட்டிருக்கிறே ?ன். நீங்களும் அவரைப் பற்றி நிறையக் கூறியிருக்கிறீர்கள். என்னுடைய புலிநகக் கொன்றை ? இவ்வளவு நேர்த்தியாக அமைந்தததில் திரு. எம். எஸ் அவர்களின் பங்கு கணிசமானது என்பதில் எனக்கு எந்த ஐயமும் கிடையாது.

நம்மாழ்வார் அவதரித்த ஊர்க்காரர் என்று அவரே தொலைபேசியில் பேசும் போது சொன்னார். அதனால் அடங்கெழில் சம்பத்து உடையவராகத் திகழ்வது இயல்பே. திரு. எம். எஸ் போன்றவர்களால்தான் தமிழ் முன்னோக்கி அடியெடுத்து வைக்க முடிகிறது.

விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்

கிருஷ்ணன்

நியூ டெல்லி

நாஞ்சில்நாடன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

==================================

எம் எஸ் அவர்களின் இரு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும் பாராட்டு விழாவும் நடப்பதறிய பெரூ மகிழ்ச்சி .

நான் நேரில் வந்திருக்க வேண்டும். அன்று எனக்கு கோவை கொங்கு கலைக்கல்லூரியில் ஓர் ஆய்வுரை

எம் எஸ் அவர்களைப்போல இவ்வளவு தாமதமாக நூல் வெளியிட்டும் பாராட்டு பெறும் இன்னொரு இலக்கிய முன்னுதாரணம் இல்லை .எப்போதுமே நலவை தாமதமாகவே நடக்கின்றன.

பக்கத்து ஊர்க்காரராகவும் உறவினராகவும் நண்பராகவும் இலக்கிய ஆலோசகராகவும் இசை நுணுக்கங்கள் கற்பிப்பவராகவும் முப்பாதாண்டுக் காலமாக நான் அவ்சரை அறிவேன்.

உடன்பாடென்றால் ஒரு புன்னகை.உடன்பாடு இல்லை என்றால் வேறு ஒரு புன்னகை சிலசமயம் அழுத்தமான மெளனம் இவையே அவர்கையாண்ட விமரிசன மொழி

அவருடன் பேசிய பேச்சுக்களும் பேசாத பேச்சுக்களும் ஏராளம். எனக்கு எப்போதுமே ஒரு மாலுமியின் வடக்குக் காட்டும் கருவி போல சரியான ரசனையைக் காட்டி வந்துள்ளார்.

சமீப காலமாக் மொழிபெயர்ப்புத்துறையில் அவர் கண்ட வெற்றியும் பெற்று வருகிற வரவேற்புகளும் உற்சாகமூட்டுபவை

இந்தப் பாராட்டு தாமதமானதென்றாலும் தகும்

அவர் மேலும் குன்றாத உடல்நலத்துடனும் மன வளத்துடனும் வாழ்ந்து இளைஞர்களுக்கு தெம்பூட்ட வேண்டும் என்று இறையருளாஇ வேண்டுகிறேன்.

நாஞ்சில்நாடன்

கோவை

****

[email protected]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரையாப்பு மென்பொருள்