காடு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

அன்றும் இன்றும் என்னை ஈர்ப்பது காடு நாவலின் சூழல்தான். அயனி மரம், மிளா, வேங்கை மரம், பாறை, குட்டப்பன், சிநேகம்மை, ஜோடி எருமை, தேவாங்கு, நீலி…. இப்படி சூழலிலிருந்து ஒரு விலகல் என்னிடம் இல்லை. என்னை உள்ளிழுப்பதாகவும், நான் விரும்பி உள் நுழைவதாகவும் உள்ளது. மறு பக்கம் நகர்- கிரியின் அம்மா, அப்பா, மாமா, வேணி, மாமி, போத்தி, கண்டன் புலையன், அம்பிகா அக்கா….நாவல் நிகர் வாழ்க்கைதானே! நாவலின் பல இடங்கள் பக்கம் புரளும் உணர்வின்றி ஆக்கின. நீலியை சந்திக்கச் செல்லுமிடம், மழையின் வருகை, குறிஞ்சி மலர், மீண்டும் அப்பூவில் தேனெடுக்க நூறு தலைமுறை காத்திருக்க வேண்டியதை அறியா வண்டு, கீரக்காதன், கம்பன், கபிலன்…

என் பார்வைக்கு காடு நாவலில் பிரதானமாகத் தொனிப்பது, காட்டிற்கும் நகருக்குமான வேறுபாடு. காடு நேரடித்தன்மை கொண்டதாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் கட்டற்றதாக மூர்க்கமானதாக வெளிப்பாடு கொள்கிறது. நகரம் சிறுமைகளால் கொப்பளிக்கிறது-காரணம் அங்கு பலதும் ஒளிக்கப்படுகிறது. காட்டில் மிஷன் ஆஸ்பத்திரியிலிருந்து கிரி தன் மாமாவின் இறப்புக்கு வரும் இடம் நேரிடையாக காட்டை நகரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. காடு பிரம்மாண்டமான எளிமையுடன் இருக்கிறது. எதையும் பெரிதாக காடு சட்டை செய்வதில்லை. அது பாட்டுக்கு தேமேனென்று இயங்குகிறது. அதன் மனிதர்கள் அதன் பிரம்மாண்டத்தால் ஆணவம் நசுக்கப்பட்டதாலோ என்னவோ, நேரிடையாக உள்ளனர், மிருகங்களின் நேரடித்தன்மை. சிநேகம்மையிடம் கிரி “இது தப்பில்லையா” எனக் கேட்கும் போது “ஆரயும் நம்பவச்சு ஏமாத்துனா தப்பு ஏமான்” என்கிறாள். ராசப்பன் எதிர் குடிலில்தான் தங்கியிருக்கிறான்.

இரட்டையர்களின் உறவு, அவர்கள் சண்டையிடுதல், ஆஸ்பத்திரி வரை சுமந்து செல்லும் மூர்க்கம்…இப்படி காட்டின் கட்டற்ற தன்மையுடனேயே அதன் மனிதர்களும் இருக்கிறார்கள். காடும் அதன் மனிதர்களும் இயற்கையின் கட்டுகளால் பிணைக்கப்பட்ட கட்டற்றவர்கள்தாம்… நகர் ஒழுங்கை உருவாக்கிய வண்ணம் உள்ளது. தெரு வீடு என எல்லாம் ஒழுங்கை நோக்கிய முயற்சிதான். நாவலில் வரும் உறவுகள் மிக சிதைந்ததாகவே உள்ளது. ஒளிவு மறைவுகள் துரோகம் என ஒழுங்கு நடிக்கப்படுகிறது. நகர் பெருங்கூச்சலுடன் நடிக்கிறது. காடு அமைதியாக இயல்புடன் உள்ளது.

காடு- எளிமை. நகர்-சிக்கல். இப்படித்தான் சொல்ல முடிகிறது என்னால். நகர் காடு என இரண்டு சித்திரங்கள் என்னுள் எஞ்சியுள்ளது. காட்டில் மரணம் கூட எளிமையாக நிகழ்ந்து விடுவதாகத் தோன்றுகிறது. நகரில் எல்லாம் சிடுக்குப்பிடித்து கிடக்கிறது. நகரத்தில் தொலைந்து போவது பற்றிய பயம் எனக்கு நிறைய. நாவல் வாசித்து முடித்து மனம் ஓய்ந்த பின் வழக்கமாக எனக்குத் தோன்றும் எண்ணம் எழுந்தது “மனுஷங்ககிட்ட என்னமோ ஒரு தப்பு இருக்குப்பா” என்று. ஒரு பதட்டத்தையே காடு நாவல் எனக்கு அளிக்கிறது. அமைதியாக எனக்கு ஒரு பிழையைச் சுட்டுகிறது. பிழை இருப்பது உறுதி. அது ஏதென்று அறியேன் அடியேன். சுயநலத்திலிருந்து தியாகத்திற்கு, காமத்திலிருந்து காதலுக்கு, வன்முறையிலிருந்து வீரத்திற்கு இன்னும் நாம் முழுமையாக தாண்டவில்லை.

காமம் காமம் என்ப…நான் இன்னும் இந்த வரியைக் கடக்காதவன். அது அணங்கோ பிணியோ அன்று என்பது சற்று ஆறுதலாக இருக்கிறதே ஒழிய, என்னால் ஏற்க முடியவில்லை. காமம் என் வரையில் தவிப்புதான். காதல், நீலிமீது வருவது. காமம், மாமி மீது வருவது. இரண்டும் தாபம்தான். அவற்றிற்கிடையேயான வேறுபாடு நாவலில் தெளிவுறத் தொனிக்கிறது. மாமியை வேங்கை மரம் கீழ் தங்க நிறப் பூக்கள் சொறிய நிற்க வைத்து கற்பனை செய்தால் அதன் அபத்தம் புரியும். காமத்திற்கு காதலுக்கும் தெளிவான வேறுபாடு என்ன?… அய்யரைப் போல்தான் பதில் சொல்ல முடியும் “அதை எப்டி சொல்றது….லீவிட் ப்ளீஸ்”.

அடுத்து காலம்… கொற்றவை விஷ்ணுபுரம் இரண்டிலும் காலம் என்னை அழுத்தியது. வெண்முகில் நகரத்தில் சம்படை காலமெனெ உறைந்து இன்னும் அதே சாளரம் அருகே அமர்திருக்கிறாள். மிளாவின் காலடித் தடமாக காலம் தலைக் காட்டுகிறது. கீரக்காதனின் தலையாகப் பாடமாகியுள்ளது. மற்ற உங்கள் படைப்புகளில் போல் காலம் காடு நாவலில் பூதாகரம் கொள்ளவில்லை.

காடு நாவல் ஒரு தட்டில் நகரின் சிக்கலையும் மறு தட்டில் காட்டையும் அதன் எளிமையையும் எதார்த்தத்தையும் அழகையும் வைக்கிறது. இதனை ஒரு மனிதனுள் உரையும் இயற்கைக்கும், அவன் உருவாக்க விழையும் ஒழுங்குக்கும் இடையேயான முரணாகவே கொள்கிறேன். மேலும் பேச்சி மலையின் உச்சியில் வாழும் அனைத்துமறிந்த பறவை போல் ஏதோ ஒன்றையும் நாவல் குரலில்லாமல் சொல்கிறது.

நன்றி,
இப்படிக்கு
மோட்டார் ஸ்ரீநிவாஸ்

முந்தைய கட்டுரைமதங்கள்- இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரைஓர் எளிய கூழாங்கல்