விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள், கடிதம்

எழுத்தாளர் நண்பருக்கு

கலைச்செல்வி , திருச்சியிலிருந்து எழுதுகிறேன்.

ஏற்கனவே காடு, அனல்காற்று குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

தங்களின் இணையதள வாசகி நான். என் வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரமிப்பு ஒரு மனிதரால் அடைந்தேன் என்றால் அது தங்களால்தான். வாசிப்பின் நீளமும் யோசிப்பின் அகலமும்.. நிச்சயமாகவே நீங்கள் எழுத்துலகிற்கு கிடைத்த ஒரு வரம். இதில் எவ்வித நீட்டல் குறுக்கல்கள் இல்லை.

தங்களின் வழியாக தேடும் இலக்கியம்.. அரசியல்.. சமுதாயம்.. வரலாறு.. மிக பண்பட்டதாகத் தோன்றுகிறது எனக்கு. தொடர்ந்து தங்களை வாசிப்பதால் ஏற்பட்டுள்ள ஒரு மாயையா அல்லது (உங்கள் அளவுக்கு இல்லாவிடினும்) எனது சிறு தேடல்களில் உங்களை தவிர்த்து வேறு ஒரு ஆளுமையை அத்தனை எளிதாக கைகாட்டி விட முடியாத உண்மையா.. என்று விளங்கவில்லை.

தங்களிடம் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது. தங்களின் எண்ணப்பாட்டில் பெண் எழுத்தாளர்கள் இலக்கிய எழுத்துக்கும் வணிக எழுத்துக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் இயங்குகிறார்கள் என்கிறீர்கள். பெண்களே.. எழுத வாருங்கள்.. என அழைக்கிறீர்கள். நியாயம். என்னால் ஒப்புக் கொள்ள முடிகிறது. ஆத்மார்த்தமான எழுத்து என்றாலும் இன்னும் செல்ல வேண்டிய துாரம் இருக்கவே செய்கிறது என்ற தங்களின் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பெண் எழுத்தாளர்களிடம் இத்தனை கரிசனம்(கரிசனம் என்ற வார்த்தையை நிச்சயம் ஆட்சேபிப்பீர்கள்.. வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை) கொள்ளும் தாங்கள் தங்களின் இலக்கிய முகாம்களை ஏன் பெண்களை நோக்கி அமைக்கவில்லை. இது எனது ஆதங்கம். தாங்கள் மே மாதம் நடத்திய முகாமிற்கு எனக்கெழுந்த ஆவலில் இரண்டு முறை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பிறகு இணைப்பை துண்டித்து விட்டேன். ஏதோ ஒரு தயக்கம். குடும்பத்தை பிரிந்து மூன்று நாட்கள் வெளியே தங்க முடியுமா..? தனியாக சென்று வர முடியுமா..? என்று பழைய ஜீன்களின் தாக்கமோ.. பழக்கமின்மையின் வெளிப்பாடோ ஏதோ ஒன்று என்னை தடுத்தது. ஆனால் மனம் முழுமையும் அங்குதான் பயணித்துக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொரு முறையும் தங்களின் முகாம் குறித்த விஷயங்களை தாங்கள் இணையத்தில் பகிரும் போது தவற விட்ட விஷயங்கள் உண்மையிலுமே (சத்தியமாகவே) மனதை வலிக்க வைக்கிறது.
தாங்கள் எங்கள் ஊரோ அல்லது அல்லது அதன் அருகாமை பகுதிகளிலோ ஏதோ ஒன்றில் சொற்பொழிவுக்காகவோ அல்லது கலந்துரையாடலுக்காவே வரலாமே சார்..

எது எப்படியிருந்தாலும் அடுத்து வரும் முகாமில் எனக்கும் ஒரு இடம் கொடுங்கள் சார்.சார்.. நான் கொஞ்சம் எழுதுவேன். உயிரெழுத்து.. கணையாழி.. உள்ளிட்ட இதழ்களில் எழுதுகிறேன். அரசுப் பணியிலிருக்கிறேன். எனது ஒரு கதையையாவது தாங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. இதற்கும் மேற்கூறிய விஷயங்களுக்கும் தயவுசெய்து தொடர்பு படுத்தி விடாதீர்கள். இது ஒரு சுய அறிமுகம் மட்டுமே.

தங்களிடமிருந்து கற்க நிறைய விஷயங்கள் உண்டு. யாகூப் மேமன் குறித்த தங்களின் ஆழமான கட்டுரை நிறைய விஷயங்களை அறிய வைத்தது. தஸ்லிமா அளவுக்கு துணிவு எனக்கு வராது என்கிறீர்கள்.. உங்கள் அளவுக்கு தமிழ் எழுத்தாளர்களில் துணிந்தவர் யார் என சொல்லுங்கள்.

கலைச்செல்வி\
திருச்சி

அன்புள்ள கலைச்செல்வி அவர்களுக்கு,

நன்றி

முக்கியமான விஷயம், எங்கள் கூட்டங்கள் சந்திப்புகள் எவையுமே பெண்களுக்கு இடமற்றவை அல்ல. வரும் பெண்களுக்கு எல்லாவகையான வசதிகளும் செய்யப்படுகின்றன. சொல்லப்போனால் அவர்கள் வந்துசெல்ல, தங்க நாங்கள் உதவுகிறோம். பெண்கள் பங்கெடுக்கவேண்டும் என்பதற்காகவே குடி முதலியவற்றை முழுமையாகத் தவிர்க்கிறோம். எல்லா நிகழ்ச்சிகளிலும் பெண்கள் பங்கெடுப்பதும் வழக்கம். ஆனால் நம் குடும்பச்சூழலில் கணவர் இல்லாமல் பங்கெடுக்க முடியாத நிலை பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது.

அன்புடன்
ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15
அடுத்த கட்டுரைபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள்