வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60

பகுதி பத்து : கதிர்முகம் – 5

அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது அந்த நாளின் காலை என்றுணர்ந்தாள். குருதியின் வாசம் எழும் இருண்ட முன் புலரி.

இந்நாள் இந்நாள் என்று அவள் நெஞ்சம் ஒலித்தது. ‘வான்வாழும் அன்னையரே, எனையாளும் தெய்வங்களே’ என்றுரைத்தபடி மார்பின்மீது கைகளை வைத்து விரல்கூப்பி வணங்கினாள். கண்களிலிருந்து வழிந்து காதுகளில் நிறைந்த வெய்ய நீரை உணர்ந்தாள். ‘ஏன் இவ்விழிநீர்? இன்று என் இளையோள் மங்கலம் கொள்ளும் நன்னாள் அல்லவா?’ என்று தனக்குள் என சொல்லிக் கொண்டாள். மேலாடை நுனியெடுத்து துடைத்தபடி இடக்கை ஊன்றி எழுந்தபோது தன் உடல் எடை கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

எழுந்து நின்றபோது படகு என சேக்கையறை சுவர்களுடன் தரையுடன் மெல்ல ஆடியது. கை நீட்டி தூணை பற்றிக் கொண்டு விழிகளை மூடி உள்ளே சென்ற குருதியின் அலைகளை நோக்கி சற்று நேரம் நின்றாள். உடலின் துலா முள்ளை நிலைப்படுத்தி விழி திறந்தாள். அறைக்குள் திரியிழுக்கப்பட்டு செம்முத்தாக எரிந்த சிற்றகல் விளக்கொளியில் சுவர்கள் பேற்று வலி எழுந்த பசுவின் விலாவின் தோல்பரப்பென அதிர்ந்து கொண்டிருந்தன.

குளிர்ந்திருந்த பாதங்களை எண்ணி என மெல்ல வைத்து ஒவ்வொரு அடிக்கும் தன் மூச்சுப்பையை குளிர்நீர் நிறைந்த கலமென உணர்ந்தவளாக அமிதை நடந்தாள். ஏன் இன்று இத்தனை சோர்வு? இன்றுவரை என் உடல் அதில் குருதியும் தசைகளும் உள்ளதென சித்தத்திற்கு காட்டியதேயில்லை. இன்று காற்றில் பறக்கத்துடிக்கும் இலை மேல் கருங்கல் என தன்னை சுமத்தியிருக்கிறது. இன்றென்ன ஆயிற்று? இன்று என் மங்கையின் மங்கலநாள் அல்லவா?

பந்தங்கள் எரிந்த இடைநாழியில் தன் கால்களுக்கு நடுவே வேலை சாய்த்து வைத்து தலை தொங்கி துயின்று கொண்டிருந்த காவலன் அவள் காலடி ஓசை கேட்டு எழுந்து கண்களை துடைத்தபடி புன்னகைத்தான். இளையவன். காவல்பணிக்கு ருக்மி ஒவ்வொரு வீரனாக தன் நோக்கால் தேர்ந்தெடுத்து அமர்த்தியிருந்தான். அனைவரும் ஆணையிட்டதை அன்றி பிறிதொன்றை எண்ணத்தெரியாத இளையோர்.

அவள் ஏழு காவலரைக் கடந்து ருக்மிணியின் அறை வாயிலை அடைந்தாள். கதவை சுட்டுவிரலால் மெல்ல தட்டி ”இளவரசி” என்று அழைத்தாள். எட்டு முறை குரலெழுப்பிய பின்னரே உள்ளே ருக்மிணி மஞ்சத்தில் புரண்டு முனகியபடி விழிப்பு கொள்வதை கேட்க முடிந்தது. “இளவரசி, இது நான், அன்னை” என்றாள் அமிதை.

ருக்மிணி மஞ்சம் நலுங்கும் ஒலியுடன் எழுந்து காலடிகள் தரையில் உரச ஆடை கசங்கும் ஓசையுடன் வந்து கதவின் தாழைத் திறந்து விரித்தாள். இரவெல்லாம் மணத்து காலையில் குளிர்ந்து உதிர்ந்த மலர் போல் இருந்தாள். கன்னத்தில் சேக்கையின் சுருக்கங்கள் படிந்திருந்தன. அதன்மேல் வழிந்து உலர்ந்திருந்த இனிய ஊன் மணம் கொண்ட இதழ்நீரின் பிசுக்கில் கூந்தலிழைகள் சில ஒட்டியிருந்தன. இறகுச்சேக்கையின் வெம்மையைப்பெற்ற உடலில் இருந்து தாழம்பூவை கையில் உரசியது போல மெல்லிய மணமெழுந்தது.

அமிதை உள்ளே சென்று ”இன்று ஆடி நிறைவு நாள் இளவரசி. தாங்கள் அணி செய்து அன்னையரை வணங்கச்செல்ல வேண்டும்” என்றாள். ”ஆம். நேற்றிரவு சம்பங்கி சொன்னாள்” என்றாள் ருக்மிணி. கைகளை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தபடி ”நான் நேற்று துயில நெடுநேரமாகியது” என்றாள். அமிதை சற்றே நெஞ்சு படபடக்க ”ஏன்?” என்றாள். ”அறியேன் அன்னையே. நேற்றிரவில் நெடுநேரம் வரதாவை நோக்கி அமர்ந்திருந்தேன். எண்ணியிராத ஒரு கணத்தில் விந்தையானதோர் உணர்வு எழுந்தது. வரதை என்னிடமிருந்து நெடுந்தொலைவில் எங்கோ ஒழுகிச்செல்வது போல.”

பரபரப்புடன் “ஆம் அன்னையே, முற்றிலும் புதிய ஆறொன்றை பார்ப்பதுபோல எண்ணினேன். எழுந்து அதன் சேற்றுக்கரைகளையும் நீர்ப்பளபளப்பையும் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அவ்வுணர்வை வெல்ல முடியவில்லை. இது என் ஆறல்ல, இது என் நகருமல்ல. நான் அமர்ந்திருக்கும் இவ்வரண்மனை எனக்கு எவ்வகையிலும் உரியதல்ல. அவ்வுணர்வின் விசையை தாளமுடியாது வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன். பிறிதொருவர் உடனிருக்க முடியாது நெஞ்சை கூசவைத்தது அது. காவல்பெண்டை அனுப்பிவிட்டு கதவை தாளிட்டேன். என் கல்விஅறிந்த அனைத்து சொற்களாலும் அவ்வுணர்வை வெல்ல முயன்றேன். திரை என விலக்க முயன்றது கோட்டைச் சுவர் என தெரிவது போல அது என் முன் நின்றது” என்றாள்.

“எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. உங்கள் குரல் கேட்டு எழுந்தபோது அப்போது மயங்கிய அவ்வெண்ணம் அவ்வண்ணமே உடன் எழுந்து தொடர்ந்தது” என்றாள் ருக்மிணி. பின்பு அவள் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, உங்கள் குரலும்கூட முற்றிலும் அயல் என ஒலித்தது. எங்கோ நான் விட்டுப் பிரிந்து சென்று மீண்டும் வந்து கேட்கும் குரல் போல. இவ்வனைத்தையும் நான் அறிவது போலல்ல, நினைவுகூர்வது போல உணர்கிறேன்” என்றாள்.

அமிதை புன்னகைத்து அவள் தோளைத் தொட்டு ”அனைத்தும் வெறும் எண்ணங்கள் இளவரசி. ஆனால் அதில் பொருள் உள்ளது. கன்னியர் தாங்கள் மலர்ந்து கனிந்த கிளையிலிருந்து உதிர்ந்து புதிய நிலமொன்றில் முளைவிட்டெழ வேண்டியவர்கள் அல்லவா?” என்றாள். அச்சொற்களை புரியாத விழிகளுடன் நோக்கிய ருக்மிணி ”இன்று என் அணிகளையும் ஆடைகளையும் தேர்வு செய்து விட்டேனா?” என்றாள். ”நேற்றே நான் எடுத்து வைத்துவிட்டேன், வாருங்கள்” என்றாள் அமிதை.

அவள் கைபற்றி அழைத்துச் சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே காவல்பெண்டுகள் இருவர் காத்து நின்றிருந்தனர். ”இளவரசியை நீராட்டி அணி கொள்ளச்செய்க! முதல்ஒளி எழுவதற்குள் முதலன்னை ஆலயத்திற்கு செல்லவேண்டும்” என்றாள் அமிதை. காவல்பெண்டுகள் தலைவணங்கி அவளை அழைத்துச்செல்லக் கண்டு நெஞ்சில் கைவைத்து நின்றாள். அவள் குழல்கற்றைகள் நேற்றைய வாடிய மலர்ச்சரத்துடன் அசைந்து அசைந்து விலகிச்சென்றன.

எங்கு செல்வதென்றறியாமல் அமிதை இடைநாழியைக் கடந்து மறுபக்கம் இறங்கி முற்றத்தை நோக்கினாள். அங்கு ருக்மிணி ஒன்பது அன்னையரின் ஆலயங்களுக்குச் செல்லவேண்டிய பொன் பூசப்பட்ட வெள்ளித்தேர் முன்னரே வந்து நின்றிருந்தது. காலைப்பனியில் நீர் துளித்திருந்த அதன் உலோகமலர்ச்செதுக்குகளை மரவுரியால் துடைத்துக் கொண்டிருந்தனர் இரு பாகர்கள். தேரின் மூன்று வெண்புரவிகளும் அப்பால் நின்று முகத்தில் கட்டப்பட்ட பையிலிருந்து தாடை இறுகியசைய கொள் தின்று கொண்டிருந்தன. சுவைக்குத் தலையாட்டிய அவற்றின் கழுத்து மணிகளின் ஒலி ஆலயத்திலிருந்து என ஒலித்துக் கொண்டிருந்தது.

தலைதூக்கி அவளை நோக்கிய ஒரு புரவி சற்றே அசைந்து முன்னங்காலால் கல்பரப்பைத் தட்டி மெல்ல கனைத்தது. பிறகு இரு புரவிகளும் அவளை நோக்கின. ஒன்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து தலை சிலுப்பியது. அந்தத் தேரை முழுமையாக நோக்க அவளால் இயலவில்லை. கால்கள் தளர்வதுபோல் உணர்ந்தவளாக திரும்பி படியேறி இடைநாழிக்கு வந்தாள். ருக்மிணியின் படுக்கையறைக்குள் சென்றபின்னர்தான் அவளை முன்னரே எழுப்பி நீராட்டறைக்கு அனுப்பிவிட்டதை நினைவு கூர்ந்தாள். ‘என்ன செய்கிறேன்?’ என வியந்தாள்.

வெண்பட்டு விரிக்கப்பட்ட கொக்குச்சிறகுச் சேக்கை முகிலென கிடந்தது. அதை நெருங்கி அவள் உடல் படிந்த பள்ளத்தை தன் முதிய கைகளால் மெல்ல வருடிப்பார்த்தாள். அங்கிலாத அவள் உடலை தொட்டாள். இடை பதிந்த பெரிய பள்ளம், இது அவள் முலை அழுந்திய மென்தடம். அவள் குழல் பூசிய நறுநெய் படிந்த தலையணை இது… அவள் காதணிகள் படிந்த தடம் கூட அப்பட்டில் மென் சேற்றில் மலர் உதிர்ந்த வடு என தெரிந்தது.

மீண்டும் மீண்டும் அச்சேக்கையை தடவியபடி அவள் நெடுமூச்சு விட்டாள். பின்பு மெல்ல நடந்து அறைவிட்டு வெளியே வந்து கதவை சாற்றினாள். மூடிய கதவுக்கு உள்ளே அவ்வறைக்குள் ருக்மிணி துயில்வது போல தோன்றியது. திறந்தால் அங்கு அவள் இருப்பாள் என்பது போல். அவ்வறையின் காற்றில் அவள் மறைந்திருக்கிறாள் என்பது போல. மீண்டும் திறந்தால் அவளை காணமுடியும் என அவள் உள்ளம் வலுவாக எண்ணியது. கைகளால் கதவுப்பொருத்தைத் தொட்டு தயங்கியபின் திரும்பினாள்.

திரும்பிச்சென்று தன் படுக்கையில் படுத்து கண்களை மூடி, உடலைச் சுருட்டி அட்டை போல் இறுகிக்கொள்ளவேண்டுமென்று அமிதை விழைந்தாள். போர்வையை அள்ளி உடல் மேல் போர்த்திக் கொண்டு இருளுக்குள் புதைந்துவிட வேண்டும். அவ்விருளுக்குள் மந்தணச் சுரங்கப்பாதை ஒன்றின் கதவை ஓசையின்றித் திறந்து படியற்ற அதன் இருண்ட அறைக்குள் இறங்கமுடியும். குளிர்ந்த சுவர்களை கைகளால் வருடி வருடிச் சென்று பிறிதோர் உலகத்தை அடைய முடியும்.

காலமற்ற ஆழம். அங்கு அவள் இன்னும் இளவயது அன்னை மட்டுமே. அவள் மடியில் சிறு வாழைப்பூவென செந்நீல உடல் கொண்ட சிறு மகவு அவள் முலை நோக்கி பாய்ந்து கருமொட்டைக் கவ்வி கால் நெளித்து கையசைத்து சுவைத்துண்ணும். அதன் மென்சுருள் குழலை ஒரு கையால் வருடி மெல்ல அசைப்பாள். குனிந்து அதன் உச்சியை முகர்ந்து கருவறை மணத்தை அறிவாள். மடியிலமர்த்தி வரதாவின் அலைப்பெருக்கை காட்டுவாள். பிடிவிட்டோடி சிரித்துச் செல்லும் அவளைத் துரத்தி பற்றித் தூக்கி சுழற்றி நெஞ்சோடணைத்து கன்னத்தில் இதழ் பதிப்பாள். ஓடாத காலம். உருகி வழியாத பனி.

ஆனால் அறைபுகுந்து தன் மஞ்சத்தில் அமர்ந்ததுமே திடுக்கிட்டு எழுந்தாள். என்ன செய்கிறோம் என்றுணர்ந்ததும் பதற்றத்துடன் வெளியே வந்து இடைநாழி வழியாக ஓடி சாளரம் வழியாக எட்டி முற்றத்தை பார்த்தாள். இளவரசி அணியூர்வலம் செல்வதற்காக படைத்திரள் வந்து நின்றிருந்தது. அவற்றை நடத்தி வந்த படைத்தலைவன் செந்நிறத் தலைப்பாகையில் வல்லூறின் வரியிறகு சூடி நின்று கையசைத்து ஆணைகளை பிறப்பித்ததைக் கேட்டு உருவிய வாள்களுடனும் வேல்களுடனும் வீரர்கள் இரு நிரைகளாக அணி வகுத்தனர். இருள் பரவிய முற்றத்தில் பந்தங்களின் ஒளியில் படைக்கலன்கள் ஒளிரும் குருதித் துளிகளை சூடி இருந்தன.

அமிதை அரியது எதையோ மறந்தவள்போல நெஞ்சு திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். காலடி ஓசை தொடர விரைந்து நீராட்டறைக்குள் சென்றாள். பன்னிரு நெய் விளக்குகள் குழியாடியின் முன் சுடர்பெருக்கி நின்றிருக்க மரத்தாலான பெரிய நீராட்டுத் தொட்டியில் ருக்மிணி கிடந்தாள். கருந்தளிர் கன்னியுடல். மின்னும் நீர்குமிழி போல் முலைகள். கருநாகங்கள் காமம் கொண்டு நீருள் பிணைவது போல் திளைத்த நீள்தொடைகள். பாதி கவிழ்ந்த மதுக்கோப்பையில் என உந்திச் சுழியில் வளைந்த சிற்றலை. அவள் குழலை நீட்டி நறுமண எண்ணெய் பூசி கைகளால் அளைந்து கொண்டிருந்தனர் இரு சமையச்சேடியர்.

நீராட்டறை மூலையில் நெஞ்சுடன் இரு கைகளைச்சேர்த்து தன் நெஞ்சிலிருந்து உதிர்ந்து எழுந்த மகளின் உடல் மெருகை நோக்கி அமிதை நின்றாள். கரியோன் விரும்பும் கனி. கருமைக்கு நிகரான அழகென்ன உண்டு? நீள்வட்ட முகம், நீண்ட பீலி விழிகள், குவிந்த சிற்றுதடுகள், மூன்று வரி படிந்த மலர்க்கழுத்து. இடைக்குழைவில் குழைந்தன நீரலைகள். மெல்ல புரண்டபோது சிவந்த அடிப்பாதம் நீரிலிருந்து எழுந்து தெரிந்தது. அருள் கொண்டு எடுத்து அவள் சென்னி மேல் வைக்கப்பட்டது போல.

பல்லாயிரம் முறை அவள் பார்த்த சங்கு சக்கரம். கடலும் வானும் என்றான அருட்குறிகள். கடல் நீலம் வான் நீலம். எங்குகேட்ட சொல்? அங்கு நின்றிருக்க இயலாதென்று உணர்ந்து மெல்ல பின்னடைந்தாள். நீராட்டறைப்பெண் அவளிடம் “இன்னும் சற்று நேரம் செவிலியன்னையே” என்றாள். ”ஆம்” என்றபடி அவள் வெளிவந்து இடைநாழியினூடாகச்சென்று மீண்டும் முற்றத்தை நோக்கினாள். அங்கு இசைச்சூதர்கள் தங்கள் கருவிகளுடன் வந்து நின்றிருந்தனர். இருவர் கொம்புகளின் குவிமுனைகளில் பொறிக்கூரை இறுக்க மூவர் முழவுகளின் தோல்பரப்பை வருடியும் தொட்டும் நாடாக்களை இழுத்து கட்டைகளை இறுக்கி சுருதியமைத்துக் கொண்டிருந்தனர். பந்த ஒளியில் எழுந்த அவர்களின் நிழல்கள் எதிர்ச்சுவரில் புரியாத பிறிதெதையோ பதற்றமும் பரிதவிப்புமாக செய்து கொண்டிருந்தன.

அமிதை தனக்குள் பேசிக் கொண்டவளாக திரும்பி நடந்தாள். உடல் தசைகளெல்லாம் நீரில் ஊறிய தோல் நாடாக்களென நெகிழ்ந்துவிட்டவை போல தளர்ந்திருந்தாள். ருக்மிணியின் அறைக்கதவை திறந்தபோது அவள் துணுக்குற்றாள். ‘எதற்கு வந்தேன் இங்கு?’ என்று எண்ணிக் கொண்டாள். ருக்மிணி அவ்வறைக்குள் துயின்று கொண்டிருப்பதாகவே கதவை திறக்கும் கணம் வரை எண்ணியிருந்ததை அறிந்தாள். அஞ்சியவள் போல காலெடுத்து உள்ளே நுழைந்தாள்.

தன் மகளின் உடல் படிந்த சேக்கைப் பரப்பை பார்த்தாள். அறைக்குள் குனிந்து பளிங்கு வெண்சுண்ணத் தரையை விழிகளால் துழாவி கொன்றைமலர் மணியென தரையில் கிடந்த பொற்குண்டு ஒன்றை கண்டாள். ருக்மிணியின் அணிச் சிலம்பிலிருந்து உதிர்ந்தது. முழந்தாளிட்டு அதை தன் முதிய விரல்களின் பழுத்த நகமுனையால் தொட்டெடுத்தாள். அன்னைக் கோழி அலகில் கவ்விய சிறு பழம் போல. மேலும் தேடி இன்னொரு மணியையும் கண்டெடுத்தாள். இரண்டையும் ஆழ்ந்த வரிகளோடிய தன் முதிய கைக்குவையில் வைத்து நோக்கினாள். உருகி எழுந்த முனகலுடன் அதை நெஞ்சோடு அணைத்தாள். ஆடைக்குள் சுருட்டிச் செருகியபடி மீண்டும் இடைநாழிக்குச் சென்றாள்.

நீராட்டறைக்குள் நுழைந்த ருக்மிணி எழுந்து பீடத்தில் அமர்ந்திருக்க நீராட்டுப் பணிப்பெண்கள் அவள் உடலை மென்துகிலால் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவர் அவள் கூந்தலை ஈரம் நீவி கொம்புச்சீப்பால் வார்ந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பால் அனல்சட்டியில் இட்ட அகில் புகையை சிறுவிசிறியால் தூண்டிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. நீலமுகில் பிசிறென புகை எழுந்து அறைக்குள் நின்றது.

அமிதை ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். இனிய கனவொன்றிலிருப்பது போல மென்புன்னகையுடன் விழி இமைகள் பாதி சரிய இங்கெங்குமில்லை என்பது போல அவளிருந்தாள். கைகள் தளர்ந்து மடிமேல் கிடந்தன. குனிந்து அவள் விரல்களை நோக்கியபோது அவை காலைமலரிதழ்கள் போல ஓசையின்றி அசைகிறதா என்றே உளம் மயங்க, விரிந்துகொண்டிருப்பதை கண்டாள். அவள் உள்ளமே விரல்களென்றாயினவா என்ன?

அமிதை மீண்டும் இடைநாழிக்கு வந்து எங்கு செல்வதென்று அறியாதவளாக திகைத்து நின்றாள். இடைநாழியிலிருந்து பன்னிரு மான்கண் சாளரங்களும் விடுத்த காற்று குளிர்ந்த கைகளாக மாறி பந்தங்களை தொட்டுத் தொட்டு விளையாடியது. அவள் ஆடையை பற்றி இழுத்தது. நரைத்த கூந்தலை சுழற்றி கலைத்தது. நூறு விளையாட்டு சிறுமியரென கைகளால் சூழ்ந்து தள்ளி கூச்சலிட்டு சிரித்து நகையாடியது.

அமிதை தன் ஆடையில் முடிச்சை அவிழ்த்து அவ்விரு சிறு பொற்குண்டுகளை கையிலெடுத்து நோக்கினாள். ஒரு கணம் என்ன என்று அவள் உள்ளம் வியந்தது. மறுகணம் என்ன எனும் ஏக்கத்தால் விம்மியது. அவற்றை மீண்டும் சுருட்டி இடையில் செருகியபடி படியிறங்கி மகளிர்மாளிகையின் மையக்கூடத்திற்கு வந்தபோது இரு காவலர் துணை வர விருஷ்டியின் அணுக்கச்சேடி சுதமை வந்து கொண்டிருந்ததை கண்டாள்.

சுதமை அவளை நோக்கி தலைவணங்கி “கொற்றவை ஆலயவிழவுக்கு இளவரசி எழுவதைக் குறித்த செய்தியை கேட்டறிய வந்தேன் செவிலியே” என்றாள். அவள் சுதமையின் விழிகளை நோக்கியபடி “இளவரசி அணி செய்கிறாள். இன்னும் அரை நாழிகை நேரத்தில் கிளம்பிவிடுவாள்” என்றாள். சுதமை அவள் விழிகளை சந்தித்தபோது கருவிழியை இருமுறை மெல்ல அசைத்தாள். அவற்றுடன் இணைந்து அசைந்தது அமிதையின் உள்ளம்.

“இன்று மாலையே இளவரசியின் மணநிகழ்வை அரசர் அறிவிக்கலாம் என்று அமைச்சர் சொன்னார்” என்றாள் சுதமை. .அமிதை தலை வணங்கி “பன்னிரு துணை நாட்டரசரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஆகவே இது அதற்குரிய நன்னாளே” என்றாள். “நம் ஒன்பதன்னை ஆலய விழவென்பது அவர்களுக்கும் உரியதே. ஒன்பதாவது அன்னையின் ஆலயப் பெருமுகப்பில் வரதாவின் நீர்ச்சுழி ஒன்றுள்ளது” என்றாள்.

சுதமையின் விழிகள் அவள் விழிகளை தொட்டுச் சென்றன. ”அங்கு மலரிட்டு வழிபட்டால் இன்றைய விழவு முடிந்தது. இளவரசர் அரசவை கூட்டியுள்ளார் என்றால் அதன்பின் இளவரசி அவையணைய முடியும்” என்று அமிதை சொன்னாள். சொல்லாத அனைத்தையும் நன்குணர்ந்து கொண்டவள் போல் சுதமை தலையசைத்தாள்.

”இளவரசி எழுந்தருளுகையில் உடன் மூதரசியர் வருவது மரபல்ல. அரசியர் இளவரசி சென்ற பின்னரே ஆலயங்களுக்கு எழுந்தருள்வார்கள். சிற்றரசியருக்குப்பின் பட்டத்தரசி செல்வார்கள்” என்றாள் சுதமை. அமிதை ”ஆம். அரை நாழிகை இடைவெளி விட்டு செல்வது மரபு” என்றாள். சுதமை ”இளவரசி அரண்மனை முகப்பிலிருந்து கிளம்பும்போது எரியம்பு ஒன்று எழுந்து செய்தியறிவிக்கும்படி சிற்றரசியார் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமே” என்றாள் அமிதை.

அமிதை மீண்டும் படிகளிலேறி இடைநாழிகளின் வழியாக விரைந்து ஏனென்றறியாமல் தன் மஞ்சத்தறைக்கு வந்தாள். அங்கு வந்ததற்கென எதையாவது செய்யவேண்டுமே என்பது போல அறைக்குள் இருமுறை சுற்றிவந்தாள். பின்பு மூலையிலிருந்த தன்னுடைய சிறு மரப்பேழையைத்திறந்து அதற்குள்ளிருந்த ஆமாடப் பெட்டியை எடுத்தாள். அதன் செம்பட்டுச் சிற்றறைக்குள் அவ்விரு பொன் குண்டுகளையும் போட்டு மூடி உள்ளே வைத்தாள்.

பேழையை மூடிவிட்டு எழுந்தபோது நெஞ்சு எடையற்றிருப்பது போலிருந்தது. உடலிலிருந்து அனைத்து எண்ணங்களும் விலக இறகுபோலாகி சூழ்ந்திருந்த காற்றில் பறந்து செல்லக்கூடுமென உணர்ந்தாள். எங்கு செல்வதென்றறியாமல் இடைநாழி வழியாக நடந்து சாளரத்தினூடாக எட்டிப்பார்த்தாள். மங்கலத்தாலங்களுடன் அணிப்பரத்தையர் வந்து வலது மூலையில் இசைச்சூதர்களுக்கு அருகே நின்றுகொண்டிருந்தனர். இடையில் கைவைத்து, பருத்த முலைகள் ஒசிய நின்றும் ஒருவர் தோள்மேல் இன்னொருவர் சாய்ந்தும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த பொன்னகைகள் பந்தங்களின் மெல்லிய ஒளியில் மின்னின.

எண்ணங்களேதும் ஓடாமல் முற்றத்தில் விரித்த திரையில் வரையப்பட்ட செந்நிற ஓவியம்போல் தெரிந்த காட்சியை பார்த்தபடி அமிதை நெடுநேரம் ஏதோ எண்ணங்களில் அலைந்து நின்றிருந்தாள். அவள் எண்ணிக்கொண்டது ஒரு சிறு பெண்மகவை. செந்நிறச்சிறுகால்களும் சுட்ட இன்கொடிக்கிழங்கு போல் மாவுபடிந்து தோல்சுருங்கிய சிற்றுடலும் கத்தியால் கீறப்பட்டதுபோன்ற சிறுவாயும் கொண்டது. சிப்பி பெயர்ந்த மென்சதை என மூடிய விழிகள் அதிர அது வீரிட்டலறியது. அவ்வெழுச்சியில் முகம் குருதிஊறிச் சிவக்க சுருட்டிப்பற்றிய சிறுகைகள் அதிர்ந்து ஆட கன்னங்களில் நீலநரம்புக்கோடுகள் பரவ அது அசைவிழந்தது. வயிறு அதிர்ந்து அதிர்ந்து துடிக்க கால்கள் இருபக்கமும் விரிந்து அசைந்தன. மீண்டும் கிழிபடும் உலோகம்போல அழுகை.

தீ சுட்டதுபோல் உடலதிர திரும்பி இடைநாழி வழியாக ஓடி அணியறைக்குச் சென்று சற்றே மூடியிருந்த கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தாள். எட்டு பேராடிகள் தெளிந்த நீர்ச்சுனைகள் போல ஒளி கொண்டிருக்க ஒன்பது திருமகள்கள் என ருக்மிணி அமர்ந்திருந்தாள். இளம்சிவப்பு மலர்ப்பட்டாடை அணிந்திருந்தாள். அதன் பொன்னூல் பின்னல்களை இரு சேடியர் அமர்ந்து ஒன்றுடனொன்று பொருத்தி மடித்துக் கொண்டிருந்தனர். சமையப்பெண்டிர் அவள் குழலை ஒன்பது புரிகளாக பின்னிக் கொண்டிருந்தனர்.

நெய்யிட்ட சுரிகுழல் விரல்கோடுகள் படிந்த ஈரமையென தெரிந்தது. அதில் முத்தாரங்களை சேர்த்துச் சுற்றி வைரங்கள் கோக்கப்பட்ட ஊசிகளைக் குத்தி இறக்கினர். அவள் மார்பில் செம்மணி ஆரங்கள் ஒன்றன்மேல் ஒன்றென படிந்து பொன்னுருக்கும் உலைக்கலத்தின் விளிம்பில் பொங்கி வழிந்த பொன்வளையங்களென தெரிந்தன.

கைவளைகள், மேகலைகள், தொடைச்செறிகள், தோள்வளைகள், கணையாழிகள் எங்கும் செவ்வைரங்களே மின்ன தணலுருவென அவள் அமர்ந்திருந்தாள். அமிதை ”இன்னும் எவ்வளவு நேரம்?” என்றாள். ”அரை நாழிகை நேரம்” என்றாள் சமையப்பெண். ”இத்தனை வைரங்களும் ஒன்றுடனொன்று பொருளுடன் பொருந்த வேண்டும் செவிலியே. அள்ளி இறைக்கப்பட்டது போலிருந்தாலும் அழகுடன் இருக்க விண்மீன்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது.”

”விரைவில் முடியுங்கள். கிளம்பும் நேரம் என்னவென்று கேட்டு சிற்றரசியின் பணிப்பெண் தூது வந்துவிட்டாள்” என்றபின் அமிதை திரும்பி இடைநாழி வழியாக சென்று படிகளில் கீழிறங்கி மகளிர்மாளிகையின் பெருங்கூடத்துக்குள் வந்து நின்றாள். அதன் பதினெட்டு சாளரங்களின் அத்தனை திரைச்சீலைகளும் வரதாவின் இளம்காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகால்கள் வெப்புநோய் கொண்டு மீண்டது போல தளர்ந்து தொய்ந்தன. எங்காவது அமர்ந்துவிடவேண்டும் என்றும் நெஞ்சு குளிர எதையாவது அருந்த வேண்டுமென்றும் அவள் விழைந்தாள்.

முற்றத்திலிருந்து வந்த முதற்காவலன் ”செவிலியன்னையே, இங்கு அனைத்தும் சித்தமாகியுள்ளன. இளவரசி வருவதற்காக காத்திருக்கிறோம்” என்றான். அமிதை கையூன்றி எழுந்து வெளியே சென்று நோக்கினாள். மூன்று புரவிகளும் தேர்நுகத்தில் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் விழிகள் பந்தங்களின் ஒளியில் கனல் கொண்டிருந்தன. வெண்ணிற விலாப்பரப்பின் மெல்லிய மயிர்வளைவுகளில் பந்தங்களின் செம்மை வழிந்தது. பொற்செதுக்குகள் கொண்ட தேரின் அத்தனை வளைவுகளும் செஞ்சுடர் ஏற்றிக் கொண்டிருந்தன.

அவளைக் கண்டதும் இசைச்சூதரும் அணிச்சேடியரும் எழுந்து நின்றனர். இசைச்சூதர் தங்கள் கருவிகளை முறைப்படி ஏந்திக்கொள்ள அணிச்சேடியர் தாலங்களில் அகல்விளக்குகளை ஏற்றினர். விழிகளால் ஒவ்வொன்றாக தொட்டு மதிப்பிட்டபின் அவள் மீண்டும் மகளிர்கூடத்திற்கு வந்தாள். நீள்மூச்சு விட்டு தன்னை எளிதாக்கியபின் படிகளில் ஏறி இடைநாழி வழியாகச் சென்று சமைய அறையின் வாயிலில் நின்று “இளவரசி சித்தமாகிவிட்டார்களா?” என்றாள். சமையப்பெண்டு “ஆம், உள்ளே வருக!” என்றாள். கதவை நடுங்கும் கைகளால் பற்றி மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் அமிதை. முற்றிலும் அவளறியாத ஒன்பது தேவியர் அங்கு அமர்ந்திருந்தனர்.

முந்தைய கட்டுரைகலிஃபோர்னியா
அடுத்த கட்டுரை2. மறைந்து கிடப்பது என்ன?