‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 6

செந்நிறத் தலைப்பாகையில் கொக்குச் சிறகு சூடிய முதிய நிமித்திகர் மேடைமேல் ஏறி நின்று வெள்ளிக்கோலை இடமும் வலமும் என மும்முறை சுழற்றியபோது முரசு மேடையில் அமர்ந்திருந்த பெருமுரசின் ஒளிரும் செவ்வட்டத் தோல்பரப்பின்மேல் கோல்கள் விழ அது சினம்கொண்ட மதகளிறென வயிறதிர்ந்து உறுமியது. கௌண்டின்யபுரியின் மக்கள்திரள் மெல்ல அமைதியடைந்தது. வரதாவின் அலைகளின் ஓசையும் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலியும் ஆங்காங்கே எழுந்த அடக்கப்பட்ட தும்மல்களும் மூச்சொலிகளும் படைக்கலன்களின் உலோகக் குலுங்கல்களும் கால்மாற்றிக்கொள்ளும் புரவிகளின் லாடங்கள் மண்ணில் அழுந்தும் ஓசைகளும் மட்டுமே எஞ்சின.

புலரி எழுந்து வரதாவின் மேல் அடுக்கடுக்காகக் குவிந்திருந்த முகில்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்க நீரலைகளின்மேல் செவ்வொளி அலையடித்தது. தொலை தூரத்தில் விந்தியனில் இருந்து பறவைகள் அம்புக்கூட்டங்கள் போல வந்து தழைந்து நீர்ப்பரப்பில் இறங்கி அலைகளை எழுப்பி படிந்தன. சூழ்ந்திருந்த காட்டின் இலைப்பரப்புகள் ஒளி கொண்டன. அங்கிருந்து சிறு குருவிகள் எழுந்து சுழன்று சிறகடித்து நீர் விளிம்பின் சதுப்பில் அமர்ந்து எழுந்து மீண்டும் அமர்ந்து கைக்குழந்தையின் நகமுனை போன்ற சிற்றலகுகளைத் திறந்து தீட்டப்படும் அம்புகளைப் போல ஒலி எழுப்பி நிரை குலைந்து பறந்து மீண்டும் தங்களை அடுக்கிக் கொண்டு காற்றில் வளைந்து விளையாடின.

நிமித்திகர் உரத்த குரலில் “குடியீரே, சான்றோரே, கேளீர்! நீர் விழவு தொடங்கவிருக்கிறது. தன் மைந்தர் பாய்ந்து வந்து மடியில் அமர இதோ அன்னை வரதா கைவிரித்து புன்னகைத்து காத்திருக்கிறாள்” என்றார். அவர் சொற்கள் முடிவதற்குள்ளேயே கூடியிருந்த பெருந்திரள் வெடிப்பொலியுடன் கலைந்து வரதாவின் இருபக்கத்திலும் சென்று முட்டிமோதிச் செறிந்தது. வரதாவுக்குள் இறங்கும்முகமாக கமுக மரத்தடிகளை நாட்டி அமைக்கப்பட்டிருந்த நீள்மேடையில் இருபது இளைஞர்கள் இறுகிய அரையாடை அணிந்து உடம்பெங்கும் எண்ணெய் பூசி இறுகி நெளியும் தசை நார்கள் வெயில்பட்ட நீரலைகள்போல் மின்ன வந்து நின்றனர். அவர்களை கூட்டத்தினர் பெயர்கூவி வாழ்த்த திரும்பி கைகளை வீசி பற்கள் மின்ன சிரித்தனர்.

குலப்பாடகர்கள் தங்கள் குறுமுழவுகளை விரல்களால் மீட்டியபடி நடனமிட்டனர். கன்னியர் உள்ளக்கிளர்ச்சியால் சிவந்து கன்றிய முகங்களுடன் சிறுகுழுக்களாகி ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு தங்களுக்குள் பேசிச்சிரித்து நின்றனர். பீஷ்மகரை வணங்கிய அமைச்சர் முகுந்தர் “தங்கள் செங்கோல் இவ்விழவை தொடங்கி வைக்கட்டும் அரசே” என்று முறைப்படி விண்ணப்பித்தார். பீஷ்மகர் மலர்ந்த முகத்துடன் எழுந்து தன் செங்கோலை தூக்கி ஆட்ட பெருமுரசும் சங்கங்களும் கொம்புகளும் ஒலித்தன. புதுநீராட்டு விழவை தொடங்கி வைக்கும் மூத்த ஆட்டமுதலி தன் மரமேடையில் எழுந்து நின்று கையிலிருந்த வண்ணக்கோலை ஆட்டியதும் நீர்மேடையில் நின்ற இளையோர் மீன்கொத்திகளைப்போல, தவளைகளைப்போல, அம்புகளைப்போல, மழைத்துளிகளைப்போல நீர்மேல் பாய்ந்தனர். சிலர் மூழ்கி நெடுந்தொலைவில் எழுந்து பளிங்கைப்பிளந்து மேலெழுந்து வாயில் அள்ளிய நீரை உளியாக உமிழ்ந்தபடி கை சுழற்றி வீசி நீந்தினர். சிலர் நீர்ப்பரப்பில் புரண்டு வளைந்தெழுந்து சென்றனர். சிலர் துள்ளித்துள்ளி சென்றனர். அவர்கள் சென்ற நீர்த்தடங்கள் ஒன்றை ஒன்று வெட்டி அலைகளாயின.

மையப்பெருக்கை அவர்கள் அடைந்தபோது அதன் விசை அவர்களை மேற்காக இழுத்துச் சென்றது. கரையில் நின்ற கௌண்டின்யபுரியினர் மேலாடைகளை சுழற்றித் தூக்கி வீசியும் துள்ளிக் குதித்தும் ஆரவாரமிட்டனர். சிறு புள்ளிகளாக அவர்களின் தலைகள் சிவந்த நீர்ப்பரப்பில் ஆடியாடிச் செல்வது தெரிந்தது. பெருக்கில் மிதந்து வந்த நெற்றுகளுடனும் தழைகளுடனும் மட்கிய மரத்தடிகளுடனும் அவை பிரித்தரிய முடியாது கலந்தன. பறவைகள் தொடுவான் வளைவில் சென்றமைவது போல நெடுந்தொலைவில் ஒவ்வொருவராக மறுகரை அணைவதை காண முடிந்தது. அங்கு கட்டப்பட்ட மேடையில் நின்றிருந்த ஆட்டமுதலி வானில் எரியம்பை எழுப்பி செய்தி அறிவித்தார். மறுகரையில் நின்ற ஆட்டநெறியினரிடம் இருந்து பெற்ற ஈச்சை ஓலையாலான மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு மீண்டும் நீரில் குதித்து நீந்தி வரத்தலைப்பட்டனர்.

அவர்கள் மேலும் மேற்காக விலகிச் செல்ல வரதாவின் கரையோரமாகவே ஓடி மக்கள் அவர்களை நோக்கி சென்றனர். கரையோரச் சேற்றுப்பரப்பில் கால் வைத்து ஏறி களைத்து நிலம்தொட்டு தளர்ந்து விழுந்தனர் பலர். ஆற்றல்கொண்டு எஞ்சியவர்கள் அங்கு நின்றிருந்த குலமூத்தவரிடம் அடுத்த ஓலைவளையத்தை வாங்கி கழுத்திலணிந்துகொண்டு கரையோரமாகவே ஓடிவந்து மீண்டும் மேடை ஏறி நீரில் தாவினர். இரண்டாவது முறை அவர்கள் மீண்டு வந்தபோது எழுவர் தவிர பிறர் கை சோர்ந்து சேற்றில் விழுந்துவிட்டனர். மூன்றாவது முறை வரதாவை ஊடறுத்து நீந்தி மீண்டவர்களில் மூவர் மட்டுமே மீண்டும் நீந்துவதற்காக வந்து நின்றனர். அவர்களின் குடியினர் அவர்களைச்சுற்றி கைவீசி நடனமிட்டு வெறிக்கூத்தாடினர். முழவுகளையும் துடிகளையும் மீட்டியபடி அவர்களின் குலப்பாடகர்கள் அம்மூவரின் பெயர்களையும் கொடிவழியையும் மூத்தார் பெயர்நிரையையும் சொல்லி பாடி ஆடினர்.

மூவரும் நீரில் குதித்து புரண்டு செல்லும் வரதாவின் செம்பெருக்கை கிழித்து மறுகரை நோக்கி சென்றனர். அங்கு இருவர் நின்றுவிட ஒருவன் மட்டும் நீந்தி வந்தான். வழியில் அவன் நீரில் மூழ்க அவன் தலைக்காக விழி துழாவியபடி கரையில் கூட்டம் திகைத்து நின்றது. நெடுநேரம் அவன் தலை தெரியாமலானபோது பதைப்புடன் சதுப்பை மிதித்துத் துவைத்தபடி வரதாவின் கரையோரமாகவே ஓடினர். நீரில் அவன் தலை எழுந்த போது துள்ளி எழுந்து பெருங்குரலெழுப்பினர். எங்கும் களிவெறி கொண்ட முகங்கள் காற்றில் கொந்தளித்தன. களைத்த கைகளை உந்தி முன் செலுத்தி அவன் சேற்றுவிளிம்பை அணுகி வலது முழங்காலை ஊன்றி கைகளால் மண்தழுவி எழுந்து விழுந்தான். குடிமூத்த இருவர் சென்று அவன் தோள்களைப் பற்றி தூக்க குழைந்த கால்களுடன் துணிப்பாவை போல் அவர்களின் பிடியில் தன்னினைவிழந்து தொய்ந்து கிடந்தான்.

அவனைத்தூக்கி இழுத்து மேலே கொண்டுவந்து உலர்ந்த மண்ணில் படுக்க வைத்தனர். இளநீரையும் கள்ளையும் கலந்து மூங்கில் குவளையில் கொண்டுவந்து நீட்டி அவன் தலையை உலுக்கி கூவி எழுப்பினர். மெல்ல விழிப்புற்று கையூன்றி எழுந்தமர்ந்து அதைப் பெற்று மூச்சுத்திணறியபடி குடித்தான். மேலும் குடிக்க முடியாமல் உள்ளிருந்து மூச்சுவந்து தடுக்க கொப்பளித்துவிட்டு முனகியபடி மல்லாந்து படுத்தான். அவன் குடியினர் அவனை அள்ளித் தூக்கி தோளிலேற்றிக் கொண்டனர். மல்லன் ஒருவன் தோளில் அமர்ந்து நீர் சொட்டும் நீள்குழலைத் தலைக்குமேல் அள்ளி தோளுக்கு சரித்தபடி அவன் தன் இரு கைகளையும் வான் நோக்கி விரித்தான். காலையொளியில் நீர் மின்னும் இறுகிய தசைகளுடன் அமர்ந்து சுற்றி நின்ற தன் குடியை நோக்கி கை வீசினான்.

அலையடிக்கும் தலைகளுக்கு மேலாக காற்றிலென வந்து அரச மேடையை அணுகினான். அவனை மேடை மேல் இறக்கி விட்ட அவன் குடியினர் “கச்சன்! அவன் பெயர் கச்சன்” என்று கூச்சலிட்டனர். முதியவர் ஒருவர் “எங்கள் குலவீரன் இவன். வெல்லற்கரியவன். பெரும்புகழ் கொண்ட கலம குடியைச்சார்ந்த பரமனின் மைந்தன்” என்று கூவினார். பீஷ்மகர் எழுந்து சென்று அவனிரு தோள்களையும் பற்றி நெஞ்சோடணைத்துக் கொண்டார். நான்கு ஈச்சை ஓலை வளையங்களணிந்த அவன் கழுத்தில் தன் கழுத்திலணிந்த மணியாரம் ஒன்றைக் கழற்றி சூட்டினார். அவன் குனிந்து அவர் கால்தொட்டு வணங்கியபின் எழுந்து தன் குடிகளை நோக்கி கை கூப்பினான். அவன் முன் கௌண்டின்யபுரியின் பெரும் திரள் ஆர்ப்பரித்தது.

பீஷ்மகர் “நீ விழையும் பரிசில் என்ன இளையவனே?” என்றார். அவன் கைகூப்பி “அரசே, என் குடித்தலைவனின் மகள் பைமியை விழைகிறேன்” என்றான். “ஆம்! ஆம்! பைமி அவனுக்கே” என்று அவனைச்சூழ்ந்திருந்த அவன் தோழர்கள் ஆர்ப்பரித்தனர். உரக்கச்சிரித்தபடி “இளையோனே, நீர் வென்று மீண்டபின் கோரி அடைய முடியாத ஒன்றில்லை. இப்போதே கொள்க அவளை” என்றார் பீஷ்மகர். குடித்தலைவர் காலகரை மூவர் தூக்கிக்கொண்டு வந்து அவைமுன் நிறுத்தினர். படிகளில் கையூன்றி ஏறி அரசர் முன் நின்ற காலகர் தன்னைச் சூழ்ந்து கை வீசிக்கொண்டிருந்த கௌண்டின்யபுரியின் மக்களை நோக்கி கையெடுத்து வணங்கி “வரதாவின் ஆணையை ஏற்கிறேன். இவ்விளையோன் கையில் செல்வ மகளை அளிக்கிறேன். என் தலை தாழ்ந்தபின் குடி சூடிய கோலையும் அவன் கொள்க!” என்றார்.

கச்சன் குனிந்து காலகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவர் அவன் தோளை வளைத்து தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டார். “கொண்டுவாருங்கள்! மணமகளை கொண்டுவாருங்கள்!” என்று இளையோர் கூச்சலிட்டனர். “எங்கே திருமகள்? எங்கே பைமி? எங்கே?” என்று குதித்தனர். கூட்டத்தின் நடுவில் இருந்து ஏழு இளம் பெண்டிரால் இருபக்கம் சூழப்பட்டு பைமி தலை குனிந்து சிற்றடி எடுத்து வைத்து வந்தாள்.

அவளைப்பார்க்கும்பொருட்டு அங்கிருந்த இளையோரும் பெண்டிரும் தலை தூக்கி குதிகாலில் எழுந்தனர். ஒருவர் மேல் ஒருவர் எம்பி அவளை நோக்கி வாழ்த்துக்கூச்சலிட்டனர். மேடை அடைந்த பைமி தன் தந்தைக்கு வலப்பக்கம் தலை குனிந்து நின்றாள். இளம் பச்சைச் சேலை சுற்றி தொய்யில் எழுதிய திறந்த முலைகள்மேல் கல்மாலையும் காதுகளில் செந்நிற கல்குண்டலங்களும் அணிந்திருந்தாள். கரிய நீள்குழலில் செண்பக மலர் மாலை சூடி, சிவந்த குங்குமப் பொட்டிட்டு நீள் விழிகளுடன் நின்ற கரிய அழகியை நோக்கி கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியது.

பீஷ்மகர் “உங்கள் மகள் கையை இளையவன் கொள்க!” என்று ஆணையிட “அவ்வண்ணமே” என்று சொன்ன காலகர் தன் மகள் வலக்கையைப் பிடித்து இளையவன் கைகளில் அளித்தார். அவன் அவள் கைகளை பற்றிக் கொண்டதும் பீஷ்மகர் இருவரையும் கைதூக்கி வாழ்த்தினார். இருவரும் அரசரையும் அரசியையும் வணங்கி அவையையும் மூத்தாரையும் வணங்கியபின் கை கோத்தபடி படிகளில் இறங்கிச் சென்றனர்.

மீண்டும் பெருமுரசு மும்முறை முழங்கி கொம்பொலிகளுடன் நிறைவுற்றபோது மேலும் இளையோர் வந்து நீர்மேடையில் நிரை வகுத்தனர். ஆட்டமுதலி கோலசைத்து ஆணையிட்டதும் அவர்கள் நீரில் பாய்ந்து நீந்தி மறுகரை நோக்கி சென்றனர். அந்நிரையில் எவரும் மும்முறைக்குமேல் வரதாவை கடக்கவில்லை. வரதாவைக் கடந்தவர்களை பீஷ்மகர் மேடைக்கு வரவழைத்து மாலை சூடி கணையாழியும் கங்கணமும் பரிசளித்து வாழ்த்தினார். அவர்களின் குலத்தவர் கூடி வரதாவை வென்று மீண்ட இளையோரை தூக்கிக் கொண்டு சென்று பீடம் அளித்து அமர்த்தி சூழ்ந்து நின்று வாழ்த்தி அவர்கள் விரும்பும் பரிசில்களை அளித்தனர்.

நான்காம் நிரையில் இருவர் மட்டுமே மும்முறை வரதாவை கடந்தனர். ஐந்தாவது நிரையில் ஒருவன் நான்காவது முறையும் வரதாவை கடந்துவந்து தரை வந்த மீன் போல கைகால் உதறி மூச்சு ஏங்கி துடித்தான். அவனுக்கு நீரளித்து தூக்கி தலைகளில் ஏற்றி நடனமிட்டபடி மேடைக்கு கொண்டுவந்தனர் அவனது குடியினர். பீஷ்மகர் அவனுக்கு மணிமாலையளித்து வாழ்த்துரைத்தார். அவன் கோரியபடி விதர்ப்பத்தின் ஆயிரத்தவர்களில் ஒருவனாக அவனை அமர்த்தி அதற்குரிய பட்டயமும் உடைவாளும் மேடையிலேயே அளித்தார். ஆயிரத்தவனை அவன் குடியினர் அள்ளித்தூக்கி காற்றில் வீசிப்பிடித்து களியாட்டமிட்டனர்.

ருக்மி அங்கு நிகழ்பவற்றை அவற்றின் முறைமைகளையும் வரலாற்றையும் மெல்லிய குரலில் தலை சாய்த்து சொல்லிக் கொண்டிருக்க விழிகள் மட்டும் மெல்லிய ஒளி கொண்டிருக்க உணர்வற்ற முகத்துடன் சிசுபாலன் கேட்டு தலையசைத்தான். எந்த வீரனையும் எழுந்து அவன் வாழ்த்தவில்லை என்பதை விதர்ப்பத்தின் குடிகளனைவருமே உளம் கூர்ந்தனர். ஓரிருவர் அதை தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். இறுதி நீர்விளையாட்டு நிரை கரையணைந்ததும் பெருமுரசம் விழவுநிறைவை முழங்கியது. உண்டாட்டுக்கான அறிவிப்பை எழுப்பும் பொருட்டு நிமித்திகன் மேடை மேல் தன் வெள்ளிக் கோலுடன் எழுந்தபோது சிசுபாலன் குனிந்து ருக்மியிடம் ஏதோ சொன்னதை அனைவரும் கண்டனர்.

ருக்மி ஒரு கணம் திகைத்து தன் தந்தையை நோக்கியபின் திரும்பி சிசுபாலனிடம் எதோ கேட்டான். சிசுபாலன் சொன்னதை உறுதி செய்துகொண்டபின் எழுந்து இரு கைகளையும் விரித்தபோது முரசொலி அமைந்தது. கூட்டத்தின் முன்வரிசையினர் கையசைத்து பின்னிரையினரை அமைதியடையச்செய்தனர். அமைச்சர் மேடையிலிருந்து இறங்கிச் சென்று நிமித்திகரை அணுகி அவரிடம் பேசுவதை விழிகளால் கேட்க முனைந்தனர். நிமித்திகர் முகத்திலும் வியப்பு எழுந்தது. பின்பு தலைவணங்கி தன் வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றித் தூக்கி உரத்தகுரலில் “தொல்புகழ் விதர்ப்பத்தின் குடிகளே, கௌண்டின்யபுரியின் மங்கல மகளிரே, அனைவரும் அறிக! இப்போது நமது பட்டத்து இளவரசரும் சேதி நாட்டு அரசரும் வரதாவின் பெரு நீர்ப்பெருக்கில் நீர்விளையாட்டுக்கு எழுகிறார்கள். அவர்கள் வெற்றி கொள்க! வரதா அவர்களை வாழ்த்துக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவ்வறிவிப்பை பன்னிரு துணைநிமித்திகர் ஏற்று மறுமுறை கூவ ஒன்றிலிருந்து ஒன்றென கடந்து செல்லும் செய்தி கூடிநின்ற கௌண்டின்யபுரியின் பெருந்திரளை குழப்பமடையச் செய்வதை காணமுடிந்தது. காற்று கடந்து செல்லும் குறுங்காடுபோல கூட்டம் சலசலத்து மெல்ல அலையடித்து ததும்பியது. சிசுபாலன் தன் மணிமுடியைக் கழற்றி அமர்ந்திருந்த பொற்பீடத்தில் வைத்தான். அணிகளையும் ஆடைகளையும் கழற்றினான். இறுகிய மான்தோல் அரையாடையுடன் நடந்து படிகளில் இறங்கி நீர்மேடை நோக்கி சென்றான். அணிகளையும் ஆடைகளையும் கழற்றிவிட்டு அவனுடன் ருக்மியும் தொடர்ந்து சென்றான்.

வரதாவின் செந்நீரின் நிறத்தையும் ஒளியையும் கொண்டிருந்தான் சிசுபாலன். கௌண்டின்யபுரியின் மக்கள் சிசுபாலனின் உடலை தங்கள் விழிகளால் ஒவ்வொரு மயிர்க்காலிலுமென தொட்டுத் தொட்டு அறிந்தனர். வெண்தேக்கில் பெருந்தச்சன் செதுக்கிய சிற்பம் போலிருந்தான் சிசுபாலன். பிழையற்ற ஆணழகு அமைந்த தசைகள். நீண்ட கைகளை விரித்து இறுகியசைந்த தோள்கள் மேல் சரிந்த காக்கைச்சிறகுக் குழல்கற்றைகளுடன் சருகுமேல் நடக்கும் வேங்கை என சென்று மேடை மேல் ஏறினான். கருவேங்கை மரத்தில் செதுக்கிய சிற்பம் போன்ற உடலுடன் அவனருகே ருக்மியும் நடந்தான்.

குழல்புரிகளை இடையிலிருந்து உருவி எடுத்த தோல் சருகால் இறுகி முடிந்து கொண்டையாக்கினான். ஏவலனொருவன் அருகே வந்து சிறு வெண்கலச்சிமிழிலிருந்து நறுமண எண்ணையை அள்ளி அவனுடலில் பூச மெழுகு பூசப்பட்ட மூங்கில் போல் அவன் உடல் ஒளி கொண்டது. இரு பாளங்களாக விரிந்த மார்பின் தசைகள் நீரலைகள் போல் மிளிர தொடைத் தசைகள் நாணேற்றிய வில்லென இறுகி நின்றன. அவனருகே புலித்தோல் இடையாடையுடன் நின்ற ருக்மியும் உடலெங்கும் எண்ணை பூசிக்கொண்டான். ருக்மியின் உடலசைவுகளில் நெடுங்காலம் சிசுபாலனை அணுகிப் பழகி விழிகளாலும் உள்ளத்தாலும் அவனைத் தொடர்ந்து தன்னை அவன் மறுவடிவாக ஆக்கிக் கொண்டிருந்தமை தெரிந்தது. உயர்ந்த கரிய உடலும் அகன்ற தோள்களும் நீண்ட பெருங்கரங்களும் சற்றே பருத்த வயிறும் தடித்துருண்ட தொடைகளும் கொண்டிருந்தாலும் அவன் அசைவுகளும் நின்றிருக்கும் முறையும் சிசுபாலனையே நினைவுறுத்தின. தன்னைவிட பெரிய நிழலுடன் சிசுபாலன் நடப்பது போல் அவர்கள் இருவரும் செல்லும் போது தோன்றியது.

இரு கைகளையும் விரித்து கௌண்டின்யபுரியின் மக்களை நோக்கி அசைத்தான் சிசுபாலன். மக்கள் நிரையில் முன்பக்கம் நின்றிருந்த சேதிநாட்டவர் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கி “சேதி நாட்டு இளஞ்சூரியன் எழுக! தமகோஷர் ஈன்ற தவப்புதல்வன் வாழ்க! பாரதவர்ஷத்தின் மணிமுடி சூடப்போகும் எங்கள் குலத்தலைவர் வாழ்க!” என்று கூவினார்கள். அவர்களுக்குப்பின்னால் பெருகிக் கிடந்த கௌண்டின்யபுரியின் மக்களிடமிருந்து முறைமையான மெல்லிய கலைந்த வாழ்த்தொலி மட்டுமே எழுந்தது. அதை உணர்ந்த ருக்மி முகம் சுளித்து திரும்பி நோக்கி கைகளை அசைத்து மக்களிடம் வாழ்த்து கூவுமாறு ஆணையிட்டான். ஆயினும் ஒலி பெருகவில்லை.

ஆட்டமுதலி கொடி அசைத்ததும் இருவரும் இரு அம்புகளென வளைந்து நீரில் விழுந்தனர். சிசுபாலன் நெடுந்தொலைவில் நதியின் மைய ஒழுக்கில் தலைதூக்கி சுழற்றி நீரை உதறியபின் கையெட்டு வைத்து செல்லத்தொடங்கினான். சற்று பின்னால் அவனை ருக்மி தொடர்ந்து சென்றான். கைகளால் நீர்மேல் நடப்பவன் போல தெரிந்தான் சிசுபாலன். நீர் அவனைத் தள்ளிச்செல்லவில்லை என்று தோன்றியது. மிக எளிதாக மறுகரை அணைந்து நீர்மேடைமேல் எழுந்து ஆட்டமுதலி சூட்டிய ஈச்ச ஓலை மாலையை கழுத்திலணிந்து அக்கணமே மீண்டும் நீரில் குதித்து நீந்தி வந்தான். கரை சேர்ந்து எழுந்து தொடையளவு நீரில் நின்று அவிழ்ந்து நீர் சொட்டிய நீள்கூந்தலை உதறி மீண்டும் முடிந்தபின் கழைக்கூத்தாடி கம்பிமேல் நடப்பது போல நிகர்நிலை கொண்ட உடலுடன் நடந்து வந்தான். மீண்டும் நீர்மேடையேறி ஆணைக்குக் காத்திருக்காமல் நீரில் பாய்ந்தான்.

அவன் நீந்தும் முறையிலேயே இயல்பாக பலமுறை வரதாவைக்கடக்க அவனால் முடியுமென்று கௌண்டின்யபுரியின் மக்கள் அறிந்தனர். அது அவர்களை சற்றே சோர்வுறச்செய்தது போல வெறுமனே நோக்கி நின்றனர். மூன்றாவது முறையாக நீந்துவதற்கென்றே உருவான மீனுடல்கொண்டவன் போல அவன் வரதாவை கடந்தபோதுகூட மக்களிடமிருந்து உவகையொலிகள் எதுவும் எழவில்லை. நான்காவது முறையாக நீர்மேடையிலிருந்து அவன் பாய்ந்த போது மட்டும் முன்னிரையில் நின்ற இளையோர் சிலர் கைகளை வீசி “சேதி மன்னருக்கு வெற்றி! நிகரிலா வீரருக்கு வெற்றி!” என்று கூவினர்.

மூன்றாம்முறை நீந்தியபோதே ருக்மி தளர்ந்து மூச்சுவாங்கி தள்ளாடினான். நான்காவது முறை திரும்பி வந்தபோது சேற்றில் முழங்காலூன்றி கைகளைப்பரப்பி குப்புற விழுந்துவிட்டான். ஏவலர் சென்று அவனைத் தூக்க முயன்றபோது கைகளால் தடுத்து விலகிச்செல்லும்படி ஆணையிட்டபின் வலக்கையை ஊன்றி இடக்காலால் உந்தி எழுந்து நிலையழிந்து ஆடியபடி நின்று பின்பு இருகைகளையும் இடையில் வைத்து அண்ணாந்து கொக்குபோல வாய்திறந்து மூச்சை அள்ளி உடலை நெளித்தான். அவனை திரும்பிக்கூட பார்க்காத சிசுபாலன் சற்றே துவண்ட நடையுடன் கால்களை உந்தி நடந்து மீண்டும் நீர்மேடையை அணுகி கட்டவிழ்ந்த கூந்தலை இறுகமுடிந்து கட்டியபின் கைகளை நீட்டி தசைகளை ஒருமுறை இழுத்து தளர்த்தி சீரமைத்துக்கொண்டு நீரில் பாய்ந்தான்.

இம்முறை கௌண்டின்யபுரியின் குடிகள் அனைவரிலும் ஆர்வமும் பதற்றமும் பரவின. அச்சமும் ஆவலும் எழுந்த விழிகளுடன் இளையோர் கூட்டம் வரதாவின் இரு கரையோர மரங்களில் தொற்றி ஏறி கிளைகள் தோறும் பிதுங்கியபடி நீர்ப்பரப்பை நோக்கி காத்திருந்தது. விரிந்த அந்திவானில் களைத்த சிறகுகளைத் துழாவியபடி செல்லும் பறவைபோல் செந்நிற நீருக்குமேல் சிசுபாலன் செல்வதை காணமுடிந்தது. அவனை நோக்கி வந்த நீர்ப்பெருக்கின் தடி ஒன்றை தவிர்க்க மூழ்கி நெடுந்தொலைவில் அவன் எழுந்தபோது கூட்டத்திலிருந்து அறியாமல் ஓர் ஆரவாரம் கிளம்பியது. மறுபக்கம் சென்று நீர்மேடையில் எழுந்து ஈச்சமாலையை வாங்கியதும் கைகளை ஊன்றி கால்களைத்தொங்கவிட்டபடி சற்றுநேரம் அமர்ந்து மூச்சிளைத்தான்.

“அமர்ந்திருக்கிறார்” என்று யாரோ கூவ “திரும்பி வருவது கடினம்” என்று பிறிதெவரோ சொன்னார். பல குரல்கள் எழுந்து அக்குரலை அடக்கின. சேதிநாட்டு வீரர்கள் அச்சமும் பதற்றமும் கொண்டவர்களாக ஒருவரோடொருவர் நெருங்கி நின்றபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். சிசுபாலன் நீர்மேடையில் எழுந்து கைவிரிப்பதை காணமுடிந்தது. நீரில் அவன் பாயும்போது எழுந்த அலை சிறு கொப்புளமென தெரிவதைக்கண்டு பீஷ்மகர் அமைச்சரை நோக்க அமைச்சர் “ஐந்து முறை விதர்ப்பத்தின் வரலாற்றில் எவரும் வரதாவை கடந்ததில்லை அரசே” என்றார். பீஷ்மகர் முகத்தை கைகளால் வருடியபடி விழிவிலக்கிக்கொண்டார்.

சிசுபாலன் நீர்ப்பரப்பைத் தொட்டு வருடிவரும் சுட்டுவிரல் ஒன்றின் தடமென வந்து கொண்டிருந்தான். மூழ்கி நெடுந்தூரம் கடந்து மேலெழுந்து மீண்டும் கை சுழற்றினான். வரதாவின் கரையை அவன் அணுகியபோது உயிர்த்தவிப்புடன் ஒவ்வொரு முறையும் மேலெழுந்து வாய்திறந்து காற்றை அள்ளுவதை காணமுடிந்தது. ஒவ்வொரு கையையும் தன் முழு விசையாலும் உந்தி முன் வைப்பதை உணர முடிந்தது. வரதாவின் எடையனைத்தும் அவன் தோள்கள் மேல் அழுந்தி இருப்பது போல. பல்லாயிரம் நாகங்கள் அவன் கால்களைச்சுற்றி ஆழத்திற்கு இழுப்பது போல.

அவன் நீந்துவதன் அழுத்தத்தை அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உணர்ந்தவர்கள் போல சற்றே குனிந்து வாய் திறந்து விழி அசையாது நோக்கி நின்றனர். சேற்று விளிம்புக்கு அருகே வந்தபோது சிசுபாலன் இருமுறை நீரில் மூழ்கினான். மிக அருகே வந்தபின்புகூட அவன் கைதளர்ந்து மூழ்கி ஒழுகிச்சென்று விடுவானென்ற எண்ணமெழுந்தது. அவன் கால்கள் அடித்தட்டை மிதித்து தலை உறுதியுடன் மேலெழுந்தபோது கௌண்டின்யபுரியின் மக்கள்திரள் ஒரே குரலில் “சேதி நாட்டு சிம்மம் வாழ்க!” என்று ஆர்ப்பரித்த்தது. கொதிக்கும் எண்ணெய் மேல் மழை விழுந்தது போல செறிந்திருந்த திரள்மானுடம் கொப்பளித்து சிதறித் தெறித்தது. கைகளாலும் கால்களாலும் சேற்றை நீருடன் கலக்கி அணுகிய சிசுபாலன் அவர்களுக்கு முன்பாக வந்து நீரில் கால்சிக்கி தடுமாறி முன்னால் சரிந்து கைகளை ஊன்றாமல் உயிறற்றவன் போல விழுந்தான்.

அசைவற்றுக்கிடந்த சிசுபாலனை நோக்கி பதறியபடி ஓடிச்செல்ல முயன்ற குடிமூத்தாரை அவனது இரு படைத்தலைவர்கள் கை நீட்டி தடுத்தனர். சற்று நேரம் படுத்திருந்த பின் கைகளை ஊன்றி மல்லாந்த சிசுபாலன் கைகளை விரித்து வானை நோக்கி வாய்திறந்து மூச்சுவிட்டபடி சற்றுநேரம் கிடந்தான். பின்பு கால்களை இழுத்து மடித்து கைகளை ஊன்றி உடல் தூக்கி எழுந்தான். தள்ளாடி நிற்கமுயன்று கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து நின்றான். இரு கைகளையும் முழங்காலில் ஊன்றி குனிந்து நின்று விசையுடன் மூச்சிளைத்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டபின் நிமிர்ந்த தலையுடன் எவரையும் நோக்காது நடந்து முன்னால் வந்தான்.

அவனைச்சுற்றி களிவெறியின் உச்சத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கௌண்டின்யபுரியின் மக்களை அவன் அறியவே இல்லை என்று தோன்றியது அவனுடலில் வாழைத்தண்டில் என நீர் வழிந்து உலர்ந்து வட்டங்களாகி மறைந்து கொண்டிருந்தது. அவன் அரசமேடை நோக்கியே செல்வானென அனைவரும் எதிர்பார்த்த கணத்தில் மீண்டும் நீர்மேடை நோக்கி சென்றான். என்ன நிகழ்கிறதென்பதை முன்னிரையில் நின்றவர்கள் உணரவில்லை. பின்னிரையோ எதையும் அறியாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. முன்னிரையின் அமைதியை உணர்ந்தபின் அவர்களும் மெல்ல அடங்கி விழிகளாக மாறினர்.

இலைகள் காற்றில் நடுங்கும் ஒலி கேட்கும் அமைதியை தன் காலடியோசையால் அளந்தபடி சிசுபாலன் நீர்மேடைக்குச்சென்று நின்று தன் கைகளை நீட்டி உதறிக்கொண்டான். கால்களைத் தூக்கி மடித்து நீட்டினான். அவன் படைத்தலைவனொருவன் அருகே சென்று பணிவுடன் ஏதோ சொல்ல முயல சிசுபாலன் திரும்பி நோக்கினான். அவ்விழியின் ஆணையை ஏற்று படைத்தலைவன் தலைவணங்கி பின்னடைந்தான். மேடைக்கு அருகே நின்றிருந்த ருக்மி கை வீசி ஏதோ சொன்னபடி சிசுபாலனை நோக்கி செல்ல அவன் திரும்பாமல் கைகளை மேலே தூக்கி உடலை அம்பென ஆக்கி பாய்ந்து நீரில் மீண்டும் விழுந்தான்.

இம்முறை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் மறைந்து பெருகிச்செல்லும் செந்நிறநதியும் அதில் நீர்ப்பாம்பின் தலை என கோடிட்டுச் செல்லும் ஒரு மனிதனும் மட்டுமே அங்கிருப்பது போல் தோன்றியது. நோக்கினால் ஒவ்வொருவரும் சிசுபாலனை மிக அண்மையிலென சூழ்ந்திருந்தனர். நீருக்குமேல் வீசப்பட்ட அவன் கைகளிலிருந்து தெறித்த துளிகளின் ஒளியை, அவன் முகத்தில் ஒட்டியிருந்த ஒற்றை முடியை, மூழ்கி மேலெழுகையில் அவன் மூக்குமுனையில் சொட்டிய துளியை ஒவ்வொருவரும் கண்டனர். அவன் வைத்த ஒவ்வொரு கை வீச்சும் ஒரு கணமென ஓர் எண்ணமென ஒரு முறை வாழ்தலென கடந்து சென்றது.

அம்முறை மேலும் எளிதாக அவன் நீந்துவது போல தெரிந்தது. அலைகளின் நெறியை அவன் உடல் கற்றுக்கொண்டுவிட்டது போல. மானுட உடலின் வடிவ மீறல்களை மழுப்பி உருண்டு நீண்டு மீனின் நீள்கூருடல் கொண்டது போல. மறுபக்க நீர்மேடை மேல் தாவி ஏறி கால் ஊன்றி எழுந்து கை விரித்து நின்றான். ஈச்சமாலையை வாங்கக்கூட அவன் திரும்பவில்லை. அங்கிருந்த ஆட்டமுதலி ஓடிவந்து அவன் கழுத்தில் அணிவித்ததை அவன் அறிந்ததாகவும் தெரியவில்லை. நிமிர்ந்து ஒளிகொண்ட முகில்களால் ஆன வெண்ணிற வானத்தை நோக்கினான். கிழக்குச்சரிவில் நடுவே இந்திரநீலவட்டம் ஒளியுடன் அதிர கதிர்முடி சூடிய சூரியன் எழுந்தது. சூரியவட்டத்தை சில கணங்கள் நோக்கி நின்ற பின்பு மீண்டும் நீரில் பாய்ந்து வரத்தொடங்கினான்.

ஒருமுறைகூட அவன் தலை நீருக்குள் செல்லவில்லை என்பதை கௌண்டின்யபுரியின் குடிமக்கள் கண்டனர். அங்கு நீரே இல்லை என்பது போல. காற்றில் மிதந்து வரும் இறகு போல. அவனறியாத பெருங்கரமொன்று சுமந்து அணுகுவது போல. விலாவின் இருபக்கமும் கார்த்தவீரியனைப்போல் ஆயிரம் பெருங்கரங்கள் அவனுக்கு எழுந்துவிட்டது போல. சேற்று விளிம்பை அணுகியபோது தரை வந்தமரும் காகம் போல் எளிதாக இருகால்களையும் ஊன்றி கைகளை வீசி நடந்து கரையணைந்தான். ஒரு முறை உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தபின் சேற்றில் நடந்து சூழ்ந்திருந்த மக்களின் அமைதியின் மேல், விழிகளின் மேல், மூச்சுகளின் மேல் கடந்து சென்று மீண்டும் நீர்மேடையை அணுகினான்.

பீஷ்மகர் அரச மேடையிலிருந்து படிகளிறங்கி மண்ணுக்கு வந்தார். அவனை நோக்கி ஏதோ சொல்லச் செல்பவர் போல கைநீட்டி பின் தயங்கினார். வைதிகர்கள் அமைச்சர்கள் படைத்தலைவர்கள் அனைவரும் தாங்கள் சூடிய வேடங்களை இழந்து வெறும் மானுடராக மாறினர். உடல்களையும் உதிர்த்து விழிகளாக எஞ்சினர். சிசுபாலன் நீரில் மீண்டும் குதித்து வரதாவை கோடிழுத்தது போல் கடந்து மறுபக்கம் சென்றான். ஈச்ச மாலையுடன் கை நடுங்க அணுகிய ஆட்டமுதலி அதை அவன் கழுத்தில் போடுவதற்குள் மீண்டும் குதித்து வானில் பறக்கும் பருந்தின் நிழல் போல் நீரலைகள் மேல் வந்தான். நீரும் கரையும் வேறுபாடில்லாமலானதுபோல் கரையேறி நடந்தான்.

அவன் மீண்டும் நீர் மேடை நோக்கி செல்ல பீஷ்மகர் உரத்த குரலில் “சேதி நாட்டரசே, போதும். நாங்கள் எளிய மானுடர். தாங்கள் எவரென்று இன்று கண்டோம். இந்நகரும் என் மணிமுடியும் உங்கள் கால்களுக்குக் கீழே இதோ பணிகிறது. நில்லுங்கள்!” என்று உரக்க கூவினார். ருக்மி பாய்ந்து சென்று சிசுபாலனின் கைகளைப்பற்றிக் கொண்டு “சிசுபாலரே, போதும். நான் சொல்வதை கேளுங்கள். போதும்” என்றான். கனவிலிருந்து விழித்துக்கொண்டவன் போல சற்று உடல் விதிர்க்க அசைந்தபின் ருக்மியின் கரிய தோள்கள் மேல் தன் கைகளை வைத்து உடலை நிலைப்படுத்திக் கொண்டு சிசுபாலன் தன்னைச் சூழ நின்றவர்களை நோக்கினான்.

ருக்மி உளக்கொதிப்பால் தழுதழுத்த குரலில் “தாங்கள் மானுடரல்ல. இப்பாரதவர்ஷத்தை ஆளவந்த பெருந்தெய்வம். ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியன். திசை யானைகளை நெஞ்சு பொருதி வென்ற இலங்கை மன்னன். மண்ணளந்த மாபலி. விண்வென்ற இரணியன்…” என்றான். மூச்சில் எழுந்தமர்ந்த நெஞ்சுடன் தன்னைச்சுற்றி ஒளிவிட்ட கௌண்டின்யபுரி மக்களின் விழிகளை நோக்கிய சிசுபாலன் இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கினான். மறுகணம் பல்லாயிரம் குரல்கள் ஒரே ஒலியென வெடித்தெழுந்தன “சேதி நாட்டுச் சூரியன் வாழ்க! புவியாளவந்த பெருமன்னன் வாழ்க! எங்கள் குடி வெல்ல வந்த முடி மன்னன் வாழ்க!”

வெறிகொண்டு முழவுகளும் கிணைகளும் மீட்டி பாணர் நடனமிட்டனர். இளையோர் கைவிரித்து தொண்டைநரம்புகள் தெறிக்க கூவியார்த்தனர். கன்னியர் நாணிழந்து ஆடை நெகிழ்ந்து கூந்தல் உலைந்து கூவி குதித்தாடினர். முதியவர் கண்ணீர் வார கைவிரித்து வானை நோக்கி அரற்றினர். படைவீரர் வாள்களையும் வேல்களையும் வானோக்கி வீசிப் பிடித்து குதித்தனர். அங்கு மானுட உடல்கள் கரைந்தழிய உணர்வுகளால் மட்டுமேயான விண்ணவர் கூட்டம் ஒன்று நின்றிருந்தது.

ருக்மி “சிசுபாலரே, இதோ என் குடியும் நாடும் என் மக்களும் உங்கள் கால் பொடியாக மாறி நின்றிருக்கிறோம். இங்கு தாங்கள் விழைவதென்னவோ அதை கொள்க! தாங்கள் எண்ணியவாறு எங்களை ஆள்க! தங்களுக்கு இல்லாத ஒன்று இனி எங்களுக்கில்லை. இது எங்கள் ஏழு தலைமுறைகள் மேல் ஆணை! என் தந்தை மேல், மூதாதையர் மேல், குலதெய்வங்கள் மேல் ஆணை!” என்று கூவ சிசுபாலன் அவன் தோள்களைத்தொட்டு அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டான்.

முந்தைய கட்டுரைஇளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி
அடுத்த கட்டுரைவிரியும் கருத்துப் புள்ளிகள் : வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.