‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 3

துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்க மின்னும் நீர்ப்பரப்பு போன்ற வெண்சுண்ணத் தரையுடன் அமைந்திருந்தது. கடற்காற்று அலையடிக்கச் செய்த திரைச் சீலைகளின் வண்ணநிழல் தரைக்குள் அசைய அது அலை பாய்ந்தது. யாதவர்களின் பன்னிரு பெருங்குலத்து மூத்தோர், அயல்வணிகர், நகரத்து ஐம்பெரும் குழுவின் தலைவர்கள், எண்பேராயத்து முதல்வர்கள், பெருங்குடி மக்கள் என அவை நிறைத்து அமர்ந்திருந்தனர். சாளரங்களுக்கு வெளியே சுவர் ஓரமாக கூர் வேல் ஏந்தி காவலர் சிலையென ஒட்டி நிற்க உள்ளே சுவர் மூலைகளில் அவை ஏவலர் விழி துழாவி ஏவல் கோரி நின்றிருந்தனர். அவை அமர்ந்திருந்தவர்களில் எவரேனும் சற்று விழி திருப்புகையில் அவர்கள் குனிந்து தலை பிறர் மேல் எழாமல் நிழலென ஓசையின்றிச் சென்று ஏவல் கேட்டு மீண்டனர்.

அவை முகப்பில் எழுந்த அரசமேடையில் ஆயிரத்து எட்டு செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பிரபாவலையம் கொண்ட அரியணையில் இளைய யாதவர் முழுதணிக் கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கம் அதே போன்ற பிறிதொரு அரியணையில் மூத்த யாதவர் வீற்றிருந்தார். சிம்மங்களின் விழி என சுடர்ந்த செம்மணிகள் அவையில் எழுந்த அசைவுகளுக்கேற்ப கனன்று கொண்டிருந்தன. பலராமர் தன் இரு கைகளை மார்பின் மேல் கட்டி இறுகிய உடலுடன் உள்நுழையும் பெரு வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார். இளைய யாதவர் அங்கில்லை என்பது போன்ற இயல்பான உடற்குழைவுடன் அரியணையில் இருந்தார். எடையற்ற நீல இறகொன்று காற்றில் மிதந்து அவ்வரியணை மேல் அமைந்தது போல. பாதி மூடிய விழிகள் எதையும் பார்க்கவில்லை. இதழ்களில் எப்போதும் என இருக்கும் அப்புன்னகை அங்கு நிகழ்வது எதற்காகவும் அல்ல என்று தோன்றியது. குழல் சூடிய பீலி விழி வானை நோக்கி விழித்திருந்தது.

திருஷ்டத்யும்னன் கிருதவர்மனுடன் வந்து கொண்டிருக்கும் செய்தி முன்னரே அவையை அடைந்துவிட்டிருந்தது. அந்தகர்கள் கூட்டமாக எழுந்து கைநீட்டி கூச்சலிட பலராமர் எழுந்து தன் பெரும் கைகளை விரித்து இடிக்குரலில் “அமருங்கள். அவையில் ஓசையிடுபவர் எவராயினும் இக்கணமே கழுவிலேற்றப்படுவார்கள்” என்று கூறியதும் திகைத்து அவரை நோக்கியபின் ஒவ்வொருவராக அமர்ந்தனர். ஆனால் அமர்ந்தபின் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட ஓசை எழுந்து குவைமாடத்தில் முட்டி முழக்கமாக கீழிறங்கியது.

துவாரகையின் அந்தகக் குலத்தலைவர் சாரசர் எழுந்து “என் சொற்களை நான் முன்வைத்தாகவேண்டும் மூத்தவரே. இந்தக் கடுஞ்செயலை அந்தகக் குலம் ஒரு போதும் மறக்காது. இதை எங்கள் மூதன்னையர் பொறுக்கமாட்டார்கள்” என்று இரு கைகளையும் விரித்து கூறினார். போஜர்குலத் தலைவர் பிரபாகரர் “இளைய யாதவரின் கருத்து என்ன என்று அறிய விழைகிறேன். இந்நகரில் இதுவரை நிகழாதது இது” என்றார். இளைய யாதவர் அக்குரலைக் கேட்டது போல தெரியவில்லை. அனைத்து விழிகளும் அவரை நோக்க “பலராமரே! இத்தருணத்தில் இளைய யாதவரின் சொல்லையே நாங்கள் இறுதியெனக் கொள்வோம்” என்றார் வணிகர் குலத்தலைவர் ஊருகர்.

“இளையோனே, உன் சொல்லென்ன இதில்?” என்று பலராமர் இளையவரை தோள்தொட்டு கேட்டார். இனிய கனவிலிருந்து சிறுவனைப் போல் விழித்துக் கொண்டு அதன் இறுதி இனிமை தங்கிய புன்னகை திகழும் விழிகளுடன் அவையை நோக்கி “இப்போது இங்கு நாம் கொதிப்பதில் பயனில்லை யாதவர்களே. கிருதவர்மன் இப்போது நகரத் தெருக்களில் பாதியை அடைந்துவிட்டான். இனி அவனை யானை மேலேற்றிக் கொணர்ந்தாலும் அவன் பெற்ற அவமதிப்பு மாறுவதில்லை. நான் அவனை மீட்டுக்கொண்டுவர ஆணையிடலாம். ஆனால் எனக்கும் பாஞ்சாலருக்கும் இடையே எண்ண முரண் இருப்பதை எதிரிகள் அறிவதன்றி அதனால் பிற பயனேதும் இதிலில்லை” என்றார். அந்தகக் குலத்தலைவர் எழுந்து ஏதோ சொல்ல வந்தபின் தயங்கி மீண்டும் அமர்ந்து கொண்டார். பலராமர் “எதுவானாலும் நாம் சற்று காத்திருப்போம். இந்த அவையில் இந்நிகழ்வை நாம் முழுது உசாவப் போகிறோம். எது நெறியோ அது நிகழ்க!” என்றார்.

துவாரகையின் நாற்படையின் பெருந்தலைவரான பிரதீபர் எழுந்து “அந்தகர்களின் கொந்தளிப்பை நான் உணர்கிறேன். ஆனால் இன்று பாஞ்சாலர் செய்து கொண்டிருப்பது முற்றிலும் உகந்ததே. யாதவர்களே, பெருநகர் ஒன்றை சமைத்தோம். பேரரசு ஒன்றுக்காக படை கொண்டு எழுகிறோம். இன்னும் நாம் க்ஷத்ரியராகவில்லை. பூசலிடும் ஆயர்த் திரளாகவே எஞ்சுகிறோம். துவாரகை யாதவர்களின் தலைமை நகரென்றால், அதை ஆளும் இளைய யாதவர் நம் தலைவர் என்றால், எண்ணத்திலும் கனவிலும் அவர் சொல் பணிவதே நம் கடனாகும். பிறழ்ந்தவர், நம் குலம் விட்டு உதிர்ந்தவர். அவருக்காக எழுவதென்பது யாதவ அரசுக்கெதிரான வஞ்சகமே. இந்நகர் உருவான பிறகு நிகழ்ந்த முதல் இரண்டகம் இது. இதை இங்கேயே வேருடன் ஒறுக்காவிடில் இந்நகர் என்றோ ஒரு நாள் வஞ்சத்தால் அழியும்” என்றார்.

அந்தகக் குலத்தலைவர் சாரசர் “அவ்வண்ணம் நூறாயிரம் சொல்லிருக்கலாம் படைத்தலைவரே. ஆனால் அவன் அந்தகன். இன்று துவாரகையின் பெருவீதியில் எங்கள் குடி மூத்தார் அவனைச் சூழ்ந்து பரிதவிக்கிறார்கள்” என்றார். “ஏன்? அந்தகக் குலத்தவன் ஒருவன் தன் குலமூதாதையை நெஞ்சில் உதைத்து தலைவெட்டி வீசியபோது அந்த மூதாதையர் சினம் கொள்ளவில்லையா? இன்று கிருதவர்மன் தேரில் கைகட்டி நிற்கிறானென்றால் அது அக்குல மூதாதையர் கொண்ட பழியே என்று கொள்ளுக” என்றார் படைத்தலைவர் பிரதீபர்.

பலராமர் “வீண் சொல்லாடல் வேண்டியதில்லை. அந்தகக் குலத்து அரசி இந்நகராள்கிறாள். இறுதி முடிவை அவள் எடுக்கட்டும். அது வரை இந்த அவை சொல்லடங்குக!” என்றார். பேரமைச்சர் மனோகரர் “ஆம். இப்போது நாம் செய்ய வேண்டியது அதுவே” என்றார். அதை உணர்ந்து ஒவ்வொருவராக தங்கள் பீடத்தில் அமர அவை அலையடங்கி ஓய்ந்தது. காற்றில் சாளரத் திரைச்சீலைகள் படபடக்கும் ஒலி அவர்களை தழல் அலைகள் சூழ்ந்திருப்பது போல கேட்டது. நெடுந்தொலைவில் கரைப் பாறைகளை ஓங்கியடித்துச் சிதறி மீளும் அலைகளின் ஓசை வலுத்து அவர்களை சூழ்ந்தது.

வாயிற்காவலன் உள்ளே வந்து “பாஞ்சாலர் கிருதவர்மருடன் அவை புகவிருக்கிறார்” என்றான். பலராமர் “வரட்டும்” என்று ஆணையிட்டார். அவைமண்டபத்தின் பின்பக்கத்தில் மங்கலப் பேரிகை எழுந்தது. வாழ்த்தொலிகளும் இரும்புக் குறடுகள் தரை உரசி அணுகும் ஓசைகளும் எழுந்தன. கோல்காரன் உள்ளே வந்து “யாதவ பேரரசி அவை புகுகிறார்” என்று அறிவித்தான். அவையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து “யாதவப் பேரரசி வாழ்க! அந்தகக்குல மணிமுத்து வாழ்க! யாதவத் திருமகள் இங்கு எழுக!” என்று வாழ்த்தினர். காவலர் சென்று அணிநிரைத்து படைக்கலம் ஒளிர நின்றனர்.

ஐந்து மங்கலங்களுடன் அணிச்சேடியர் முன்னால் வர, மலர்க்கோல் ஏந்தி மணிமுடி சூடி சத்யபாமா அவையின் வலப்பக்க வாயிலினூடாக உள்ளே வந்தாள். அவையினர் அனைவரும் தலை வணங்கி அவளை வாழ்த்தி குரலெழுப்பினர். தலையில் சுற்றிய மணியாரங்கள் நடையில் ஊசலாட, ஆடைமடிப்பு ஒல்கி அசைய, அவள் செம்பஞ்சுக்குழம்பிட்ட கைகளை மலர்மொட்டு போல கூப்பியபடி நடந்து வந்து அவையின் வலப்பக்கம் இடப்பட்ட அரசியருக்கான பொற்பீடங்களில் முதல் பீடத்தில் அமர்ந்தாள்.

சேடியரில் ஒருத்தி அவளணிந்த பொன்னூல் சித்திரங்கள் பின்னிய செம்பட்டு மேலாடையை பீடத்தின் வலப்பக்கம் ஒருக்க இன்னொருத்தி அவள் மணியும் மலரும் சூடிய நீண்ட கருங்கூந்தலை இடப்பக்கம் ஒருக்கி வைத்தாள். அவள் கால் நீட்ட பட்டாடையின் மடிப்புகளைச் சீரமைத்து அவள் காலின் மேல் பொருத்தினாள் இன்னொரு சேடி. அரியணையின் இரு கைப்பிடிகளிலும் கை வைத்து தலை நிமிர்ந்து அவையை ஒரு கணம் சுற்றி நோக்கியபின் சத்யபாமா சாய்ந்து அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த தாலமேந்திய மூன்று சேடியர் இடப்பக்கமும் தாம்பூலத் தாலத்தையும் இன்னீர் குடுவைகளையும் நறுமணப்பெட்டியையும் ஏந்திய சேடியர் வலப்பக்கமும் நின்றனர். அவளுக்குப் பின்னால் அணுக்கச் சேடியர் இருவர் முழுதணிக் கோலத்துடன் நின்றனர்.

பொற்கோலுடன் அவைமுகப்பில் வந்து நின்று வணங்கிய நிமித்திகன் “அவை எழுந்த யாதவ அரசியை வரவேற்கிறது துவாரகையின் இப்பேரவை. அவர் அணிவிழிகள் முன் இங்கு அரசநெறி நிலை நிற்கட்டும். அவர் மலர்ப்பாதங்கள் பட்ட இதன் கருவூலம் தழைக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி விலக “அவை தொடங்குக!” என்று பலராமர் ஆணையிட்டார். இசைச்சூதன் எழுந்து “திருமகள் கோயில் கொண்டது போல யாதவ அரசி இங்கு எழுந்தருளியபோது செல்வத்தின் தெய்வங்களும் அறத்தின் தெய்வங்களும் வந்து இருபக்கமும் நின்றிருப்பதை காண்கிறேன். இந்த அவையில் அழகும் நெறியுமன்றி பிறிது துலங்காதென்பது உறுதி. ஆம் அவ்வாறே ஆகுக!” என நிறைச்சொல் எடுத்தான். ‘ஆம் ஆம்’ என்று கைதூக்கி அதை ஏற்றது பேரவை. அமைச்சர் மனோகரர் “யாதவ அரசி, இந்த அவையில் இன்று தங்கள் ஆணையை மீறி இரண்டகம் செய்த கிருதவர்மரை உசாவி நெறியறிவிக்க உளம்கொண்டிருக்கிறோம். ஆணையிடுக!” என்றார். “அவ்வண்ணமே ஆகுக!” என்றாள் சத்யபாமா.

இடை நாழியினூடாக குறடுகள் அணுகும் ஓசை எழுந்தது. ஏவலன் முன்னால் வந்து பாஞ்சாலர் வருகை என அறிவித்தான். அனைத்து விழிகளும் வாயிலை நோக்க பித்தளைக்குமிழ்களும் சித்திரப்பதிவுகளும் பரவிய பெருங்கதவைத்திறந்து கவசமணிந்த மார்பும் கையில் வில்லும் புழுதியும் குருதியும் கலந்து உலர்ந்த காலணிகளும் கலைந்து திரிகளாக தோளில் விழுந்த குழலுமாக திருஷ்டத்யும்னன் உள்ளே வந்தான். அவை எழுப்பிய மூச்சொலி தெளிவாகக் கேட்டது. அவை முன் வந்து தலைவணங்கி “யாதவப் பேரரசரை பாஞ்சாலம் வணங்குகிறது. தங்கள் ஆணைக்கேற்ப இவ்வரசுக்கும் தங்களுக்கும் வஞ்சமிழைத்தவனை வென்று ஷத்ரிய முறைப்படி சிறைகொண்டு இவ்வவைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இங்கு அவனை நிறுத்த ஆணை விழைகிறேன்” என்றான்.

இளைய யாதவர் எழுந்து மேடையிலிருந்து மூன்றடி இறங்கி வந்து பாஞ்சாலனின் தோள்களில் கைவைத்து “நன்று செய்தீர் பாஞ்சாலரே, இனி வரும் சமர்களிலும் எனது வலது பக்கம் தங்கள் பெரும்படைக்கலன் நின்றிருக்க வேண்டுமென்று விழைகிறேன். இவ்வருஞ்செயலுக்கு இந்நகரும் என் அவையும் குடிகளும் தங்களுக்கு கடன் பட்டிருக்கின்றன” என்றார். பலராமர் மார்பின் மீது கட்டிய கைகளுடன் அசையாது அவனை நோக்கி அமர்ந்திருந்தார். இளைய யாதவர் திரும்பி “மூத்தவரே, நமது அயல் நட்பு நாடாக இருப்பினும் பயன்கருதாது பாஞ்சாலம் செய்த இப்பேருதவிக்கு தாங்களும் வாழ்த்துரைக்க கடமைப்பட்டிருக்கிறீர். இவ்விளைஞர் தங்கள் நற்சொற்களால் சிறப்பிக்கப்படவேண்டியவர்” என்றார்.

பலராமர் எழுந்தபோது அரியணை சற்று பின்னகர்ந்து ஓசையிட்டது. அவரும் மூன்று படிகளை இறங்கி வந்து முதுகளிற்றின் வெண்தந்தங்கள் போன்ற தன் பெருங்கரங்களை அவன் தோள் மேல் வைத்து மார்புடன் அணைத்துக் கொண்டு “தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் யாதவகுலமும் நானும் கடமைப்பட்டிருக்கிறோம் பாஞ்சாலரே” என்றார். அது வரை சற்று தயங்கி கலைந்த ஒலியுடன் அமர்ந்திருந்த அவையினர் அனைவரும் எழுந்து “பாஞ்சாலம் வாழ்க! வெற்றிகொள் இளவல் திருஷ்டத்யும்னர் வாழ்க!” என்று குரலெழுப்பினர். பேரவையின் இடது மூலையில் நின்றிருந்த இசைச் சூதர் முழவுகளையும் கொம்புகளையும் ஊதி மங்கல இசையெழுப்பினர். பெண்டிர் குரவையொலியிட்டனர்.

திருஷ்டத்யும்னன் இளைய யாதவரையும் மூத்தவரையும் வணங்கி திரும்பி அவை நோக்கி கைகூப்பி மும்முறை தலை வணங்கினான். “அமர்க பாஞ்சாலரே!” என்று இளைய யாதவர் கைகாட்ட பாஞ்சாலத்தின் விற்குறி பொறிக்கப்பட்டிருந்த பொற்பீடத்தில் சென்று அமர்ந்து இரு கைகளையும் தன் மடிமேல் வைத்துக்கொண்டு நிமிர்ந்த தலையுடன் அவையை நோக்கினான். அந்தகக் குலத்தலைவரின் விழிகளை அவன் சந்தித்தபோது அவற்றில் இருந்த பகைமையைக் கண்டு இதழ் சற்றே வளைய புன்னகைத்தான். அவர் விழிகளை தாழ்த்திக் கொண்டார்.

அவையினர் அனைவரின் விழிகளும் வாயிலையே நோக்கின. இருவீரர்களால் கைபற்றி நடத்தப்பட்டவனாக தளர்ந்து துவண்ட கால்களை இழுத்து வைத்து உயிரற்றவை போல் ஆடிய கைகளுடன் கிருதவர்மன் அவைக்கு வந்தான். வீரர்கள் அவனை அவை முன் நிறுத்தி பின் வாங்கியபோது அவன் கால்கள் வலுவிழந்து மடிந்தன. தரையில் மண்டியிட்டவன் போல் அமர்ந்து இரு கைகளையும் ஊன்றி தலை குனிந்தான். புழுதி படிந்து செந்நிறமாகிவிட்டிருந்த குழல் கற்றைகள் தொங்கி அவன் முகத்தை முற்றிலும் மறைத்தது.

மூச்சன்றி பிற ஒலிகள் எழாது அவை அமர்ந்திருந்தது. கிருதவர்மனின் முனகலும் மூச்சிரைப்பும் பின்னிருக்கையில் அமர்ந்திருவர்களையும் சென்றடைந்தது. இளைய யாதவர் கிருதவர்மன் அங்கு கொண்டுவரப்பட்டதையே அறியாதவர் போல அரைக்கணமும் அவனை நோக்கி விழிதிருப்பாமல் அமர்ந்திருந்தார். பலராமர் “ஏன் இப்படி இருக்கிறான்?” என்று எவரிடமென்றில்லாமல் கேட்டார். எவரும் மறுமொழி சொல்லாததனால் “அவனுக்கு பீடமளியுங்கள்” என்றார். மனோகரர் “மூத்தவரே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு பீடம் அளிக்கப்படுவதில்லை” என்றார். “அப்படியென்றால் அருந்த இன்னீர் அளியுங்கள்” என்றார் பலராமர். கிருதவர்மன் தலையை அசைத்து “வேண்டாம்” என முனகி முகத்தில் சரிந்த குழலை விலக்கினான்.

“இளையவனே, இவனுக்குரிய தண்டத்தை நீயே அளிப்பாயாக!” என்றார் பலராமர். இளைய யாதவர் எழுந்து மிக இயல்பாக கிருதவர்மனை நோக்கிவிட்டு அவை நோக்கி திரும்பி “இந்நகரில் இதுவரை இதற்கிணையான ஒன்று நிகழ்ந்ததில்லை. இவ்வரசில் எனக்கிணையாக அமர்ந்திருந்தவர்கள் அக்ரூரரும் கிருதவர்மரும். என்னையும் இந்நகரையும் நமது குலக் கொடியையும் உதறி இம்முடிவை இவர்கள் எடுக்க நேருமென்று நாம் எவரும் எண்ணவில்லை. அது ஏனென்று அவர்களே இங்கு விளக்கக்கடவர். எச்செயலுக்கும் அதற்குரிய விளக்கமென்று ஒன்றுண்டு. அவ்விளக்கம் நம்முள் உறையும் அறத்தின் தெய்வத்துக்கு உகந்தது என்றால் அதை நாம் ஏற்க கடமைப்பட்டுள்ளோம். நம் விழைவுகளும் ஆணவமும் நமது நம்பிக்கைகளும் அதை தடுக்க வேண்டியதில்லை. எந்தக் குற்றவாளியும் அவைமுன் தன் சொற்களை சொல்லும் உரிமை கொண்டவனே” என்றார்.

அந்தகக் குலத்தின் பின் வரிசையிலிருந்து ஒரு குரல் “அவ்வுரிமை சததன்வாவுக்கு அளிக்கப்பட்டதா?” என்று கேட்டது. திடுக்கிட்டவர்கள் போல அனைவரும் அத்திசை நோக்கி திரும்ப வைரத்தின் ஒளியசைவு போல விழி சற்றே மாற புன்னகை அவ்வண்ணமே இருக்க இளைய யாதவர் சொன்னார் “குற்றங்கள் இருவகை அந்தகரே. விளக்கங்களின் மூலம் மாறுபடக்கூடியவை பல. இம்மண்ணிலுள்ள எவ்விளக்கத்தாலும் மாறுபடாதவை சில. தந்தையையும் இளமைந்தரையும் பெண்டிரையும் கொலை செய்தவன், குலமாதரையும் ஞானியரையும் இழிவு செய்தவன் எவ்விளக்கத்தாலும் துலக்கப்படாதவன் என்றுணர்க!” பின்னர் திரும்பி சத்யபாமாவிடம் “அரசி, இந்த அவையில் தாங்கள் கூறுவதற்கேதும் உளதோ?” என்றார்.

அவர் விழிகளை சந்தித்த சத்யபாமா ஒன்றுடனொன்று அழுந்திய இதழ்களும் உணர்வின்றி நிலைத்த விழிகளுமாக ஒரு கணம் அமைந்திருந்தபின் இரு கைகளையும் இருக்கையின் பிடிகளில் ஊன்றி எழுந்தாள். “அரசே, தங்கள் உளவுத்திறன் நானறிந்ததே. நேற்று பின்னிரவில் அக்ரூரர் என் அரண்மனைக்கு செய்தியொன்றை அனுப்பியிருந்தார். விடிகாலையில் இந்நகருக்கு வெளியே பாலைவனச் சோலையில் தங்கியிருந்த அவரை என் ஒற்றர் கொணர்ந்து அரண்மனையில் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த அவையில் அவரை கொண்டுவந்து நிறுத்த விழைகிறேன். தாங்கள் இங்கு கூறியதுபோல தன் குற்றத்தை விளக்கும் வாய்ப்பை அவருக்கு அளிப்போம்” என்றாள்.

குனிந்து அமர்ந்திருந்த கிருதவர்மன் தலை நிமிர்ந்து சத்யபாமாவை பார்த்தான். தன் தளர்ந்த கரங்களைத் தூக்கி குழலை பின்னுக்குத் தள்ளி முடிந்தான். அவை முழுக்க பரவிய உள எழுச்சியை உடலசைவுகளாகவும் மெல்லிய ஒலிகளாகவும் கேட்க முடிந்தது. இளைய யாதவர் “அக்ரூரர் அவை புக நான் ஒப்புதல் அளிக்கிறேன்” என்றார். பலராமர் “அரசி, தங்கள் தந்தையைக் கொன்றவனிடம் உடன்பாடு கொண்டு படைத்துணை நின்றவருக்கு தாங்கள் அடைக்கலம் அளித்திருக்கிறீர்கள்” என்றார். சத்யபாமா “அடைக்கலம் கொடுப்பதென்றால் அதில் வணிகம் பேசுவதற்கு இடமில்லை. அடைக்கலம் மறுப்பதும் அரசியருக்கு அழகல்ல” என்றாள். “அக்ரூரரை அவைக்குக் கொண்டு வருக!” என தன் காவலருக்கு ஆணையிட்டாள்.

இளைய யாதவர் தன் இருக்கையில் அமர்ந்து கைகளை எளிதாக அதன் சிம்மக்கைப்பிடிமேல் வைத்துக்கொண்டு மீண்டும் தான் எப்போதுமிருக்கும் அவ்வினிய கனவுக்குள் புகுந்தவர் போலிருந்தார். பலராமர் தன் விரல்களை ஒன்றுடனொன்று பொருத்தி நெட்டி முறித்துக் கொண்டும் கால்களை தரையில் சுழற்றி மிதித்துக் கொண்டும் நிலையழிந்து அமர்ந்திருந்தார். அவையில் எவரோ இருமினர். வேறெவரோ ஏதோ முனகினர். திரைச்சீலைகளைத் தூக்கியபடி காற்று உள்ளே வந்து சுழன்று கடந்து சென்றது. அறைக்குள்ளிருந்த வியர்வை மணம் மாறி கடல்காற்றின் பாசியும் உப்பும் கலந்த மணம் நிறைந்தது.

மிகத்தொலைவிலேயே குறடுகள் ஒலிக்கும் ஒலியை அனைவரும் அறிந்தனர். தரையில் முழந்தாளிட்டு அமர்ந்திருந்த கிருதவர்மன் தன் வலக்காலை முன்னால் நீட்டி மூட்டின்மேல் இருகைகளையும் வைத்து ஊன்றி மெல்ல எழுந்து தள்ளாடி நின்றான். பின்னால் சரிந்து விழுபவன் போல ஆடி அருகே இருந்த பெருந்தூணை வலக்கையால் பற்றிக் கொண்டான். கண்களை மூடி தன் உடலின் துலா முட்களை நிலைக்கச் செய்தான். மறுபக்கப் பெருவாயில் மெல்லத்திறந்து காவலன் உள்ளே வந்து “அக்ரூரர் வருகிறார்” என்றான். அச்சொல் குளிர்மழையெனப் பொழிந்ததுபோல அவையினர் உடல் சிலிர்த்தனர்.

வேலேந்திய காவலர் இருபக்கமும் நடந்துவர தலை குனிந்து அக்ரூரர் வந்தார். வெள்ளை நிற கீழாடையும் வேப்பிலை விளிம்பு கட்டிய பொன்னூல் பின்னல் கொண்ட மேலாடையும் அணிந்திருந்தார். அவை முன் வந்ததும் குளிர் நீரலையால் தாக்கப்பட்டவர் போல உடல் விதிர்த்து ஒரு அடி பின்னால் சென்று அங்கு நின்ற வீரனின் மேல் முதுகு முட்டிக்கொண்டார். பின்பு மூச்சிரைக்க பதைக்கும் கைகளால் தன் ஆடையை சீர்படுத்தியபடி துயிலின்மையால் அடுக்குகளாக தளர்ந்து வளைந்து தொங்கிய கீழிமைகளுடன் அவையை நோக்கினார்.

பலராமர் எழுந்து “வருக மூத்தவரே” என்றபின் திரும்பி “இன்னும் விருஷ்ணி குலம் அக்ரூரரை தன் தலைமையிலிருந்து விலக்கவில்லை. ஆகவே இவ்வவையில் விருஷ்ணிகுலத்தின் வாழ்த்தொலியைக் கேட்கும் உரிமை அவருக்குள்ளது” என்றார். விருஷ்ணிகுலத்தவர் தயங்கியபடி எழுந்து “விருஷ்ணி குலத்தலைவர் அக்ரூரர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். அவர்களின் தயக்கம் ஒவ்வொரு குரலிலும் கலந்திருந்ததால் அக்குரல்கள் தனித்தனியாக சீர்கலைந்து ஒலித்தன.

அக்ரூரர் அதற்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு இரு கைகளையும் கூப்பி அவையை வணங்கியபின் முன்னால் வந்து இளைய யாதவரையும் மூத்தவரையும் தலைவணங்கி அவை முன் நின்றார். பலராமர் சத்யபாமையிடம் “அரசி, இனி உங்கள் சொற்கள் எழுக!” என்றார். சத்யபாமா “நேற்று பின்னிரவில் எனக்கு அக்ரூரரின் ஓலையுடன் தூதன் ஒருவன் வந்தான். பிழை பொறுத்து அடிபணிய தனக்கு ஒப்புதல் அளிக்கும்படி அதில் அக்ரூரர் கோரியிருந்தார். இந்நகரை ஆள்பவள் என்பதனால் இதனுள் புகவும் இந்த அவைவந்து நிற்கவும் அவருக்கு நான் ஒப்புதல் அளித்தேன். தன் சொற்கள் எவையோ அவற்றை இங்கு அவர் முன் வைக்கலாம்” என்றாள்.

பலராமர் “இவ்விருவர் மீதான குற்றச்சாட்டை அவை அறிக!” என்றார். மனோகரர் “அவையீரே, அந்தகக்குலத்தில் பிறந்தவரும் கூர்மபுரியின் இளவரசருமாகிய சததன்வா அந்தகக் குலத்து ஹரிணபதத்தின் அரசர் சத்ராஜித்தின் மகளும் நம் அரசியுமாகிய சத்யபாமாவை மணக்க விழைந்தார். அவரை நம் இளைய அரசர் மணந்தமையால் சினம்கொண்டு நாடுநீங்கி காசிநாட்டரசனின் உதவியுடன் கிருஷ்ணவபுஸ் என்னும் ஊரை கங்கைக்கரையில் அமைத்தார். அந்த நகரை பிற யாதவர் ஆதரிக்கும்பொருட்டு அந்தகக் குலத்திற்குரிய குலமணியாகிய சியமந்தகத்தைக் கொள்ள விழைந்தார். ஹரிணபதத்திற்குள் நுழைந்து சத்ராஜித்தைக் கொன்று அதை கவர்ந்துசென்றார்” என்றார்.

“தந்தை கொல்லப்பட்டதை அறிந்த அரசி சினம்கொண்டு விருஷ்ணிகுலத்து மூத்தவரும் துவாரகையின் அமைச்சர்தலைவருமான அக்ரூரரையும் பெரும்படைத்தலைவரான கிருதவர்மரையும் கிருஷ்ணவபுஸை வென்று சததன்வாவை கொன்று சியமந்தகத்தை கொண்டுவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். அவர்களுடன் துணையாக சாத்யகியையும் நட்புநாட்டு இளையபாஞ்சாலர் திருஷ்டத்யும்னரையும் அனுப்பினார். படைகொண்டு கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்த கிருதவர்மரும் அக்ரூரரும் சததன்வாவுடன் இணைந்துகொண்டனர். அவர் விருந்தினராக அவையமர்ந்து அந்த சியமந்தக மணியை தன் மார்பில் சூடி மகிழ்ந்திருந்த அக்ரூரரை நம் ஒற்றர் கண்டிருக்கிறார். செய்தியறிந்து திருஷ்டத்யும்னர் திரும்பிவந்து நம் அரசரிடம் சொல்ல நம் படைகள் கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்தன. சததன்வா காசிக்கு தப்பியோடும்போது அரசரின் படையாழியால் கொல்லப்பட்டார்.”

“காசியிலிருந்து கிளம்பிய கிருதவர்மரை பாஞ்சாலர் கங்கைக்கரையின் சிற்றூராகிய சுதமவனத்தில் ஒளிந்திருக்கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ளார். சததன்வா அளித்த சியமந்தகத்துடன் கிருஷ்ணவபுஸில் இருந்து தப்பிய அக்ரூரர் காசியில் ஒளிந்திருந்து இங்கே அடைக்கலமென வந்திருக்கிறார்” என்ற மனோகரர் “அரச ஆணையை புறக்கணித்து எதிரியுடன் இணைந்துகொண்டதை இரண்டகம் என்று இந்த அரசவை வகுக்கிறது. வதைக்கொலை அதற்கான தண்டனை. இறப்புக்குப்பின் மண்ணில் சூதர்களின் வசை நீளவேண்டும். விண்ணேகச்செய்யும் நீர்ச்சடங்குகள் செய்யப்படலாகாது. தீரா இருள்நரகு அமையவேண்டும். சௌமுத்ரா நீதி அதை வகுத்துரைக்கிறது” என்றார்.

இளைய யாதவர் “அக்ரூரரே, உமது சொற்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார். அவை அக்ரூரரை நோக்கி அமர்ந்திருந்தது. அவர் அச்சொற்களுக்கு அப்பாலிருந்து வந்தமைந்தவர் போல திகைத்து அனைவரையும் நோக்கியபின் எழுந்தார்.

முந்தைய கட்டுரைநீலியும் இசக்கியும்
அடுத்த கட்டுரைதன்னைத் தக்கவைத்துக்கொள்ளல்