கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…

sure

வழக்கமாக உங்கள் ‘நகைச்சுவைக்’ கட்டுரைகளை புன்னகையுடனும் அறை அதிரும் உரத்த சிரிப்புகளுடனும் வாசிப்பேன். ஆனால் இதை வாசிக்கும் போதே உள்ளுக்குள் ஒர் எரிச்சலையும் சோகத்தையும உணர்ந்தேன். இப்படியெல்லாமா ஒருவர் பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்க வேண்டும்?

ஓர் எழுத்தாளர் தன்னுடைய பல வருட உழைப்பின் மூலமாக கிடைத்த வாசிப்பு அனுபவத்தை தன்னுடைய இளம் வாசகர்களுக்கும் விருப்பமுள்ளவர்களிடமும் பகிர ஒர் அழைப்பை விடுக்கிறார். எழுத்தாளர்கள் உட்பட பலபேர்கள் நீண்ட தூரம் கடந்து தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து கூடும் அந்த நிகழ்ச்சி முழு பயனுள்ளதாக அமையும் வகையில் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவைகளில் சில அதீதமாக இருந்தாலும் பெரும்பாலானவை ஒரு சாதாரண மனிதன் கூட இன்றைய நாகரிக உலகில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நிபந்தனைகளே. இதற்கு உடன்படுகிறவர்கள் வரப்போகிறார்கள், இல்லாதவர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.

ஆனால் இது குறித்து இணையத்தில் பல கிண்டல்களையும் வன்மங்கள் மறைந்திருந்த அவதூறுகள் பல வாசிக்கக் கிடைத்தன். ஆபத்தில்லாத நகைச்சுவைகளை ரசிக்க முடிந்தாலும் எதிர்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களின் கலக புரட்சி பாவனைகளை காண எரிச்சலாகவே இருந்தது. மதுவருந்துவதே புரட்சியின் கலகத்தின் ஓர் அங்கம் என்கிற கருத்துருவாக்கம் தீவிரமாக பரப்பப்படும் நிலையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட புரட்சியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடித்துவிடும்தானே? ஆனால் பெரும்பாலான கலகவாதிகளின் புரட்சி பாவனை , மதுவரங்கில் கூடி மார்க்ஸ், சே என்ற உரத்த விவாதத்துடன் துவங்கி இயன்றால் எதிரில் இருப்பவனின் முகத்தில் குத்தி பிறகு தனியாக வீடு திரும்பும் போது ‘வாயை ஊதுடா” என்று மிரட்டும் காவல் துறையினரின் முன் கூனிக்குறுகி நிற்பதுடன் முடிந்து விடுவதுதான் சோகம்.

The Karate Kid என்கிற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். வித்தை கற்றுக் கொள்ள விரும்பும் சிறுவனிடம் அந்த குரு முதலில் நிர்ப்பந்திக்கும் பயிற்சியே ‘கீழ்ப்படிதல்’ எனும் குணத்தையே. இன்னொன்று அவன் மூளையில் இந்த வித்தை குறித்து ஏற்கெனவெ நிரம்பியிருக்கும் அறைகுறையான எண்ணங்களை காலி செய்வது. தன்னை முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்தல்தான் கற்றுக் கொள்ளலின் அடிப்படை என்பதை அப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. அவ்வகையில் சில நிபந்தனைகள் அவசியமானதாகவே தோன்றுகிறது. இதுபற்றிய பல கிண்டல்களை வாசிக்கும் போது அந்த முதிராச்சிறுவன் தனியானவனல்ல என்பது புரிகிறது.

சுரேஷ் கண்ணன்

http://www.pitchaipathiram.blogspot.com

***

 

போகன்
போகன்

 

ஓர் எதிர்வினை

திரு சுரேஷ் கண்ணன் சொல்வதுபோல கராத்தே மாதிரி இலக்கியம் ஒரு வித்தையா என்று சந்தேகமாக இருக்கிறது.இலக்கியத்தை ஒரு குருவின் கீழ் ‘அடிபணிந்து’ கற்றுக் கொள்ளமுடியுமா.. ஜெமோவே சொல்வது போல இலக்கியம் என்பதே ஒரு அகங்காரச் செயல்பாடுதான்.அதனால்தான் இந்த உரசல்கள் பூசல்கள் எல்லாம் .ஜெயகாந்தனோ ஜெமொவோ சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லிவிட்டார் என்று ஒப்புக் கொள்ளும் தருணத்தில் நான் என்னிடம் எதுவும் மேற்கொண்டு சொல்வதற்கு இல்லை என ஒப்புக் கொள்கிறேன். அல்லவா. ஆகவே புதிதாக எழுதவரும் ஒவ்வொருவனும் ஏற்கனவே எழுதுபவர்களை மறுத்துத்தான் வரமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் ஜெமோவேதான் எனத் தோன்றுகிறது.அவர் சு ரா, போர்ஹே, சுஜாதா போன்றவர்களை மறுப்பதை இந்த தளத்திலேயே நான் புரிந்துகொள்கிறேன். உண்மையில் இலக்கியம் என்பதே கீழ்ப் படிய மறுப்பதுதான். ஆகவேதான் இத்தகைய நிகழ்வுகளை ‘ஒழுங்கு’ பண்ணுவது கடினமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது

கோமதி ஷங்கர்

***

 

sure

அன்பான கோமதி ஷங்கர்,

இலக்கியம் என்பதை வித்தை என்பதாக நான் குறுக்கவில்லை. ஆனால் இலக்கியத்தின் ஆரம்ப நிலையை கடப்பதற்காக, அறிவதற்காக, கற்றுக் கொள்வதற்கு சில அடிப்படை குணாதிசயங்கள் தேவை என்பதாக நான் கருதுகிறேன். நாம் ஏற்கெனவே அது குறித்து அறிந்து வைத்திருக்கிற அரைகுறையான கருத்துக்களை உதறி காலிப்பாத்திரமாக மாறுவதும், அந்த அறைகுறை விஷயங்களை ‘ஞானமாக’ கருதிக் கொண்டு கற்றலின் போது விதாண்டாவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டியதும்தாம் அது. உண்மையான அறிதல் விருப்பத்துடன் எழுப்பப்படுகிற கேள்விகள் வேறு. இந்தச் சந்திப்பிற்கு வரப்போகிறவர்கள் பெரும்பாலும் கவிதை குறித்தும் மரபிலக்கியம் குறித்தும் அடிப்படையாகவும் அல்லது மேலதிக விவரங்களைப் பற்றி அறிவதற்காகவும் விவாதிக்கவும்தான் கூடுகிறார்கள். எனில் மேற்குறிப்பிட்ட அடிப்படை குணாதியங்கள் நிபந்தனைகளாக எதிர்ப்பார்ககப்படுவதில் தவறில்லைதானே?.

இன்னொன்று. எந்தவொரு வாசகனும் ஒரே எழுத்தாளரிடம் நிலைகொண்டிருக்க மாட்டான். அவரவர்களின் வாசிப்பனுபவத்திற்கு ஏற்பவும் அதை சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கேற்பவும் வெவ்வேறு காலகட்டத்தில் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பான். இந்த நிலையில்தான் தாம் கடந்து சென்ற எழுத்தாளனை மறுப்பது நிகழ வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்தாளரை மறுக்கிறார் அல்லது கறாராக விமர்சிக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் அந்த எழுத்தாளரை ஏறக்குறைய முழுவதுமாக வாசித்திரு்க்கிறார், உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட உழைப்பில் சில சதவீதத்தை கூட செலுத்த முன்வராமல் ‘அந்தாள் எழுதுவது குப்பை’ என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வதை ‘கீழ்ப்படிய மறுப்பது’ என்று சொல்ல முடியாது. அவ்வாறானவர்கள்தான் இந்தச் சந்திப்பின் நிபந்தனைகள் குறித்து தவறாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான அறிதல் வேட்கை உள்ளவன் இது போன்ற சிறுதடைகளை பொருட்படுத்த மாட்டான்.

சுரேஷ் கண்ணன்

www.pitchaipathiram.blogspot.com

***

 

போகன்
போகன்

திரு சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு,

ஒரு வாசகனையும் ஆரம்பகால எழுத்தாளனையும் பிரித்துக் கொண்டே நான் அவ்விதம் சொன்னேன். அதுவும் நீங்கள் வித்தை என்ற சொல்லை பயன்படுத்தியதால்.காலிக் கோப்பை என்ற ஜென் படிமத்தை விட ‘இருப்பவனுக்கு இன்னும் கொடுக்கப் படும்’ என்ற விவிலிய உருவகம்தான் இங்கு பொருத்தமாக இருக்கும். இங்கு வெறும் கையுடன் வருபவர் வெறும் கையுடந்தான் செல்வார்கள். நேரடியாக இந்த விவாதத்துடன் சம்பந்தம் இல்லாவிட்டாலும் எந்த ஒரு ஆரம்பகால எழுத்தாளனும் தன்னை மீறிய பெரிய ஆளுமை கொண்ட எழுத்தாளர்களுடன் அவன் நிலைபெறும்வரை நெருங்கிப் பழகாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது. ஆலமரத்தடியில் வேறு தாவரங்கள் வளர்வதில்லை]

கோமதி சங்கர்

***

அன்புள்ள சுரேஷ் கண்ணன், கோமதி சங்கர்,

இவ்விஷயத்தில் என் கருத்துக்களை சொல்லிவிடுகிறேன்

பொதுவாக குருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.

‘அடிப்படை’களை கற்றுக்கொள்ளும் தளத்தில் கீழ்ப்படிதல் ஒரு விதியாகவே எங்கும் உள்ளது. எல்லாவகையான சுதந்திரங்களும் அனுமதிக்கப்படும் மேலைக்கல்விமுறையில்கூட. அடிப்படைகளை கற்கும்போது கற்பிப்பவர் அறிந்த இடத்திலும் கற்பவர் அறியாத இடத்திலும் இருக்கிறார். அங்கே விவாதத்துக்கே இடமில்லை. அங்கே விவாதம் நிகழுமென்றால் அடிப்படைகளை பயில்வதற்கான பொறுமை அர்ப்பணிப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாணவர் இழக்கிறார். அதன் இழப்பு அவருக்கு மட்டுமே

ஞானகுருக்களை மட்டுமல்ல, சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதுகூட அடிப்படை அறிதல் இல்லாமல் விவாதிக்க புகுந்தால் அவர்கள் உடனே தங்கள் வாசல்களை அனைத்தையும் மூடிக்கொண்டு இறுக்கமாகி விடுவதை கண்டிருக்கிறேன். அதன்பின் நாம் அவரிடம் நாம் யார், நமக்கு என்ன தெரியும் என்றெல்லாம் சொல்லிக்காட்டிவிட்டு மீளலாம். அது ஒரு பாறையிடம் பேசுவதுபோன்றதே. கற்பிக்கும் தளத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் சொற்களை வீணாக்குவதில்லை.

அடிப்படைகளை விவாதம் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு கலைக்கும் எந்த ஒரு அறிவுத்தளத்துக்கும் இது பொருந்தும். ஏன்? ஒன்று அடிப்படைகள் நாம் அறியாத ஒரு தளத்தைச் சார்ந்தவை. அந்த தளத்தை நாம் அறிந்தபின்னர்தான் இந்த அடிப்படைகள் எவ்வகையான முக்கியத்துவத்தை அங்கே வகிக்கின்றன என்று நமக்குப் புரியும். அது வரை அதைப்பற்றி நாம் கொண்டுள்ள எல்லா மனச்சித்திரங்களும் அர்த்தமற்றவைதான். அடிப்படைகளை பயிலும்போது விவாதித்தால் நாம் நம் மனப்பிரமைகளை அந்த ஞானத்தளம் மீது போட்டுப்பார்க்கிறோம். அதைப்போல ஒரு வீண் வேலை ஏதுமில்லை

அடிப்படைப் பயிற்சி அதிக முக்கியத்துவம் கொண்டுள்ள கலைகளில் இந்த கீழ்ப்படிதல் நெடுங்காலம் தேவையாகிறது. கராத்தே கற்கவோ வயலின் கற்கவோ நெடுநாள் அர்ப்பணிப்பு தேவை. அந்த அர்ப்பணிப்பு முதலில் அந்த கலையிடம், பின் அந்தக்கலையை கற்றுத்தரும் குருவிடம். அதன்மூலம் அந்தக்கலையின் பயிற்சிகளை முடித்த பின்னரே ஒருவர் அதற்குள் செல்கிறார். அதன்பின்னரே அவர் விவாதிக்கும் தகுதி பெறுகிறார்.

தத்துவம் இலக்கியம் போன்றவற்றில் அவ்வாறு நெடுநாள் பயிற்சி தேவைப்படாது. ஏனென்றால் இவற்றில் பயிற்சி என்பது முழுக்க முழுக்க மூளை சார்ந்தது. மூளை எளிதில் கற்றுக்கொள்ளும். உடல் கொஞ்சம் தாமதமாகவே கற்றுக்கொள்ளும். உள்ளுணர்வு மிக மிக மெல்லத்தான் கற்றுக்கொள்ளும். இலக்கியத்தில் ஒருவர் கற்றுக்கொள்வதற்கு இருப்பது அதன் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படைக் கருத்துக்களைத்தான். அவற்றை அவர் தன் தர்க்கபுத்தியால் கற்றுக்கொள்கிறார். ஒப்புநோக்க அது எளிது. ஆனால் அந்த பயிற்சிக்காலத்தில் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரிடம் பணிவு இல்லாமல் அவரிடமிருந்து எதையுமே கற்க முடியாது.

உதாரணம் சொல்கிறேனே, என் அனுபவத்தில் சுந்தர ராமசாமியிடம் ஒருவர் வந்து பாலகுமாரன் மாபெரும் நாவலாசிரியர் என்று பேசியபோது நான் உடனிருந்தேன். அவர் அங்கே அருகே ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்த மருத்துவர். சுந்தர ராமசாமி அப்டியா என்று கேட்டுக்கொன்டு பேசாமல் இருந்தார். ஒருவரை முற்றிலும் தவிர்ப்பதற்கான அவரது வழி என்பது அவரது சொந்த விஷயங்களைப்பற்றி அக்கறையுடன் கேள்விகள் கேட்பது. அந்தக்கேள்விகள் வழியாக அவர் சில சொந்த விஷயங்களை பேசியதும் காபிகொடுத்து அனுப்பிவிடுவார். ‘நான் அவரிடம் ஏன் பாலகுமாரனைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லக்கூடாது?’ என்று கேட்டேன். ‘அவருக்கும் எனக்கும் பொதுவா ஒரு பிளாட்ஃபாரமே இல்லியே’ என்றார் ராமசாமி. அதாவது அவர் இவர் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இல்லை. அல்லது கவனிக்கும் மனநிலையுடன் இல்லை. அவரிடம் பேசுவதென்பது சுவாச விரயம் மட்டுமே

இங்கே பணிவு என்று எதைச் சொல்கிறேன்? சுந்தர சாமசாமி வாழ்நாள் முழுக்க அனைவருக்கும் ராமசாமிதான், கண்ணனைவிட இளையவர்களுக்கும் கூட. அவரிடம் நீங்கள் கால்மேல் கால்போட்டு பேசலாம். ஒரே சிகரெட்டை அவரும் யுவன் சந்திரசேகரும் ஒடித்து மாற்றிமாற்றி குடிப்பார்கள். அவரை நீங்கள் எந்நிலையிலும் நண்பராகவே நடத்தலாம். பணிவு என்பது நம்மைவிட அவர் பல வருடங்களுக்கு முன்னரே இலக்கியத்தில் நுழைந்துவிட்டவர் ,நம்மை விட கற்றும் கேட்டும் சிந்தித்தும் நெடுந்தூரம் முன்னால்சென்றவர், அழுத்தமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியவர், நாமறியாத முன்னோடிகளைச் சந்தித்தவர் என்பதை ஆழமாக உணரும்போது உருவாகும் உணர்ச்சி. அவர் கற்பிப்பவர் நாம் கற்பவர் என்ற தன்னடக்கம்.

நான் என் ஆசிரியர்களாக எண்ணிய அனைவரிடமும் விவாதித்தவன். அதை தெளிவாக பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் ஆசிரியர்கள் என்ற அளவில், புலிக்குட்டி தாயின் வாலைக் கடித்து ஆடுவதுபோல விவாதித்தவன். என்னுடைய மனநிலை எப்போதுமே பணிவு, அர்ப்பணிப்பு சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. அவர்கள் சொல்லிய ஒரு சொல்லைக்கூட நான் மறந்தவனல்ல. அவர்கள் பேசும்போது அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கும் மாணவனாகவே இருந்திருக்கிறேன். அதை என் எழுத்துக்களில் காணலாம். அந்த பணிவு மூலமே நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொன்டேன். அவர்கள் நிற்கும் அந்த பிளாட்ஃப்ராத்துக்கு நானும் ஏறிவிட்டேன் என அவர்களே ஒத்துக்கொண்ட பின்னரே அவர்களிடம் விவாதிக்க ஆரம்பித்தேன். ஒரு ஆசிரியர் உங்களிடம் அழுத்தமாகவும் தீவிரமாகவும் விவாதிக்கிறார் என்றால் , அவரே விவாதத்தை தொடங்குகிரார் என்றால் மட்டுமே நீங்கள் விவாதிக்கும் இடத்தை அடைந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

ஒவ்வொரு ஆசிரியரையும் நான் சந்திக்கும்போது எனக்கு அதிர்ச்சியும் கசப்பும் ஒவ்வாமையும் உருவாகியிருக்கின்றன என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். நாம் ஓர் ஆசிரியரைச் சந்திக்கும்போது முதலில் நமக்கு ஏற்படுவது ஒரு சுய உடைவு. அவர் நம்மை நிலைகுலையச்செய்கிறார். நம் நம்பிக்கைகளையும் நம் கொள்கைகளையும் கலைக்கிரார். நாம் நிற்கும் மண்ணை கரைக்கிறார். ஆகவே நாம் பதற்றமும் எரிச்சலும் அடைகிறோம்.சுந்தர ராமசாமியை அவரது முழு வீச்சில் சந்திப்பவர்கள் என்ன அதிர்ச்சி அடைவார்கள் என்பதை நான் அடைந்திருக்கிரேன், பிறர் அடையக் கண்டிருக்கிரேன். சுந்தர ராமசாமியே ஜே ஜே சிலகுறிப்புகளில் அதைச் சொல்லியிருக்கிறார். ஜேஜேயை சந்திக்கும்போது பாலுவுக்கு புறங்கழுத்தில் பலமான அடிகள் விழுந்துகொண்டே இருப்பது போல் இருந்தது, ஜேஜேயின் கருத்துக்கள் துருப்பிடித்த ஆணிகளை குடலுக்குள் குத்தி வைத்தது போல இருந்தது என்கிறார் சுந்தர ராமசாமி. அந்த அனுபவம் அவருக்கு எம்.கோவிந்தனில் கிடைத்தது.

நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கும்போது தகழி சிவசங்கரப்பிள்லையின் ஜெயகாந்தனின் ரசிகன். அவர் என் புறக்கழுத்தில் அடிகளாக போட்டார். நான் நிலைகுலைந்தேன். என் அஸ்திவாரங்கள் சிதறின. நான் அவற்றை பொறுக்கிப் பொறுக்கி என்னை மீண்டும் மீன்டும் கட்டிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால் நான் மிக தீவிரமாகச் சிந்தனை செய்த நாட்கள் அவைதான். ஒவ்வொருநாளும் நான் கட்டிக்கொன்டு வரும் அனைத்தையும் அவர் நொறுக்கிக் கொன்டிருந்தார். நான் மனம் புண்பட்டு அவரை விட்டு சொல்லாமல் கிளம்பி திரும்ப ஊருக்குச் சென்றிருக்கிறேன்.நாட்கனக்கில் மனம் கொந்தளித்திருக்கிறேன். ஆனால் அதனூடாக நான் முற்றிலும் புதிய ஓர் உலகுக்குள் நுழைந்துகொன்டும் இருந்தேன். அதன்பின் பதினைந்து வருடங்கள் கழித்து நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தபோது அவர் என்னுள் இருந்த சுந்தர ராமசாமியின் அடிக்கட்டுமானங்களை உடைத்தார். ராமசாமி என்னை புண்படுத்தியதில்லை. நித்யா வேண்டுமென்றே என்னை புண்படுத்தியிருக்கிறார். சபையில் கிண்டல்செய்திருக்கிறார். நான் எழுதிய ஒரு கட்டுரையை கிழித்து குப்பைக்கூடையில் போட்டுவிட்டு பேசாமல் இருந்திருக்கிறார்.

நித்யா ஏன் அப்படி கடுமையாக இருந்தார் என நான் புரிந்துகொள்கிறேன். இலக்கிய அடிப்படைகள் தெரியாமல் ஆரம்பகால வாசிப்பின் விளைவான மனப்பிரமைகள் மட்டுமே கொண்டிருந்த ஜெயமோகனை எளிதில் சுந்தர ராமசாமி உடைத்து வார்த்தார். ஆனால் நித்யா எதிர்கொண்ட ஜெயமோகன் சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்ட நவீனத்துவர். அழுத்தமான கருத்துக்கள் கொண்டவன், எழுத்தாளனாக புகழ்பெற்றவன். ஆகவே நித்யா அவனை பெரிய பாறாங்கல்லால் புறங்கழுத்தில் தாக்கினார். அது இன்னமும் வலிமிக்கதாக இருந்தது

பணிவு ஏன் தேவையாகிறதென்றால் இந்தவகையான சந்தர்ப்பத்தில் நம் தன்னடக்கத்தை காத்துக்கொள்வதற்காகவே. நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கும்போது அவர் தகழியின் எழுத்தில் மார்க்ஸியம் சாம்பாரில் மீன் துண்டுபோல கிடக்கிறது என்று சொன்னார். உடனே ‘உனக்கென்னய்யா தெரியும் எங்க தகழியைப்பற்றி?’ என்று நான் கொந்தளித்திருக்கலாம். அவரது வாசிப்பை ,நுண்ணுணர்வை, ஆளுமையை நிராகரித்திருக்கலாம். நக்கலும் கிண்டலும் செய்திருக்கலாம். பொதுவாக முற்றின அறியாமையில் இருந்தே அத்தகைய மூர்க்கங்கள் உருவாகின்றன.

நான் ஆழமாக புண்பட்டேன், நிலைகுலைந்தேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன். அதைப்பற்றி மீன்டும் மீண்டும் யோசித்தேன். அவர் ஒரு இலக்கியமுன்னோடி, என் காலகட்டத்தின் மாமனிதர்களில் ஒருவர் என நான் அறிந்திருந்தேன். அந்த பணிவு என்னைக் காத்தது. இல்லையேல் அவரை நான் முழுக்கவே இழந்திருப்பேன்.மெல்லமெல்ல அப்போது எனக்கு நவீன எழுத்தின் அழகியலைப்பற்றிய அறிதலே இல்லை என்பதையும் தமிழில் ஜெயகாந்தனுக்குமேல் மிக நுட்பமான ஓர் அழகியல் உலகம் உண்டு என்பதையும் அறிந்துகொன்டேன்

நித்யாவிடம் பேசும்போதான அனுபவம் இன்னும் எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது. நித்யா எதையுமே மீண்டும் சொல்வதில்லை. ‘என்ன சொல்றீங்க ‘ என்று ஒருமுறை கேட்டுவிட்டால் நித்யா உடனே அந்தப் பேச்சை நிறுத்தி விடுவார். சந்தேகம் கேட்பதைக்கூட அவர் விரும்புவதில்லை. அந்த விஷயத்தின் முடிச்சுகள் அனைத்தையும் நாம் சிந்தித்து புரிந்து கொண்ட பின் நாம் அவரை தர்க்கப் பூர்வமாக எதிர்கொள்ளலாம். அப்போது அவர் தன் அனைத்து நகங்களுடனும் பற்களுடனும் விவாதத்துக்கு வருவார்.

ஆனால் இதுகூட வரலாறு இலக்கியம் தத்துவம் சம்பந்தமான தளங்களில் மட்டுமே. மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில், யோக விஷயங்களில் நித்யா விவாதம் மட்டுமல்ல ஐயம்கூட கீழ்ப்படிதலுக்கு எதிரானது என்றே கருதுவார். ஐயத்தைக் காட்டும் ஒரு மெல்லிய உடலசைவே போதும் நித்யாவை எப்போதைக்குமாக இழக்க நேரிடும்.

ஓர் தமிழ் எழுத்தாளனாக என் இடம் என்ன என நான் அறிவேன். ஆனால் ஒருபோதும் ஒரு ஆசிரியனாக என்னை நான் உருவகித்துக்கொண்டதில்லை, மாணவனாக என் இடம் என நான் எண்ணுகிறேன். ஆனால் இந்த வயதுக்குள்ளாகவே நன் சிலவற்றை புரிந்துகொண்டிருக்கிறேன். சுந்தர ராம்சாமியும் நித்யாவும் ஏன் அப்படி ஆட்களை தவிர்த்தார்கள் என்பது எனக்கு அன்றுபுரிந்ததில்லை. இன்று எனக்கே வேறு வழியில்லை. அடிப்படைகள் அறியாமல் விவாதிக்க வருபவர்களை நான் பூரணமாகவே தவிர்த்துவிடுகிறேன். ஒரு பொதுமேடையில் கேட்கப்பட்டால் சுருக்கமாக ஒரு பதிலை மட்டும் சொல்வேன், விவாதிக்க மாட்டேன். நேர்ப்பேச்சில் ஒருபோதும் என்னை கூர்ந்து கவனிக்காதவர்களிடம் தீவிரமாக உரையாடுவதில்லை.

இதில் எனக்கான வழிமுறைகள் உள்ளன. நான் பேச ஆரம்பிக்கும்போது நாலைந்து விஷயங்களை சொல்லுவேன். அதில் எதில் எதிரில் இருப்பவர்கள் பற்றிக்கொள்கிறார்களோ அதை மட்டுமே நீட்டித்துப்பேசுவேன். அவர்களுக்கு ஆர்வமிருக்கிறதா என்பதை அவர்கள் நடுநடுவே கேட்கும் கேள்விகள் மூலம் உடலசைவுகள் மூலம் கண்ணசைவுகள் மூலம் எளிதில் புரிந்துகொள்வேன். அது மிக எளியது. நான் படிமவியல் பற்றி பேசும்போது ஒருவர் அதில் ஒரு சினிமா உதாரணம் சொன்னாரென்றால் சினிமாவுக்கு உடனே திரும்பிவிடுவேன், ஒருபோதும் பிற்பாடு படிமவியலுக்கு வரமாட்டேன்.சுந்தர ராமசாமியிடமிருந்து கற்றுக்கொன்டது அது. சுந்தர ராமசாமி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தால் அவர் வாசல்களை சாத்திவிட்டார் என்று பொருள் ‘ உங்க ஊர்ல எருமை அதிகமா, இல்ல காளைகளா?’ என்றுகேட்டாரென்றால் ‘இனி உன்னிடம் இலக்கியமோ தத்துவமோ பேசப்போவதில்லை’ என்பதே பொருள். நான் அதற்கு முன்பு தொழிற்சங்க அரசியலை வைத்திருந்தேன், இப்போது சினிமா. தமிழ் சினிமா உற்சாகமான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குகிறது. பிற எல்லாவற்றையும் அந்த பளபளப்பான திரைச்சீலையால் மூடிவிடலாம். நான் ஒருபோதும் சலிப்பூட்டும் உரையாடல்காரனாக இருக்க விரும்புவதில்லை.

இன்று நான் ஓர் எழுத்தாளனாக, இலக்கிய அழகியல் மற்றும் தத்துவத்தில் கல்வி கொண்டவனாக என் கருத்துக்களை முன்வைக்கிறேன். எனக்கு ஆள்சேர்க்கவேண்டும் என்றோ எந்த அமைப்பையும் கட்டி எழுப்பவேண்டும் என்றோ எண்ணம் இல்லை. இதன்மூலம் எனக்கு எந்த லௌகீக லாபங்களும் இல்லை. ஆனால் ஞானம் என்பது ஒரு புறவயமான பேரமைப்பு என நான் உணர்கிறேன். தேனிக்கள் துளித்துளியாகக் கொன்டுவந்து கூட்டில் சேர்ப்பதைப்போல இதில் என் பங்கையும் சேர்க்க நான் கடமைப்பட்டிருக்கிரேன். அதையே செய்கிறேன். இதற்கும் ஓர் அரசியல் பிரச்சாரத்துக்கும் காப்பீட்டு பரப்புரைக்கும் இடையே வேறுபாடு உள்ளது என புரிந்துகொண்ட சிலர் இருப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. நான் குறிவைப்பது அவர்களையே. இலக்கியமும் அறிவியக்கமும் தொடரியக்கங்கள். ஒருவரில் இருந்து ஒருவருக்கு என அது சென்றுகொன்டே இருக்கிறது. அதுவே மானுட ஞனாத்தை கலையை மனிதனை விட பிரம்மாண்டமான ஒரு உயிர் அமைப்பாக திரளச் செய்கிறது.

என்னுடைய அனுபவத்தில் எப்போதும் எழுத்தாளன் என்ற தன்னுணர்வு மிக்கவனாகவே இருந்திருக்கிறேன். அது ஆற்றூர் ரவிவர்மா, பி.கெ.பாலகிருஷ்னன், ஞானி, சுந்தர ராமசாமி, நித்யா என என் ஆசிரியர்களிடம் பழகி கற்க தடையாக இருந்ததில்லை. அவர்களின் நட்புமூலமே நான் உருவாகி வந்திருக்கிறேன். நான் மதிக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்குமே அத்தகைய ஆசிரியர்கள், முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள். சுயம்புக்களும் இருக்கலாம், மறுக்கவில்லை. எழுத்தாளன் அல்லாத ஒருவரை சுந்தர ராமசாமி அல்லது நித்யா எழுத்தாலன் ஆக்க முடியாது. ஆனால் எழுத்தாளனை மிக எளிதாக சிறந்த எழுத்தாளனாக ஆக்க முடியும். ஏன் நமக்கு குருநாதர்கள் தேவைப்படுகிறார்கள் என்றால் ஞானம் என்பது ஒரு சங்கிலித்தொடர் என்பதனால்தான்.

பொதுவாக இலக்கியச் சந்திப்புகளில் அத்து மீறுபவர்கள் அல்லது அடக்கம் இழப்பவர்கள் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாக வந்ததே இல்லை. குற்றாலம் சந்திப்பு பட்டறைகளில் சத்தம் போட்டவர்கள் எவரும் கடந்த இருபது வருடங்களில் எதையுமே எழுதியதில்லை என்பதை எவரும் காணலாம். அந்த அவையில் பேசாமல் வந்து அமர்ந்திருந்த பலர் – உதாரணம் சு.வேணுகோபால்- பிற்காலத்தில் மிகுந்த வீரியத்துடன் எழுந்துவந்திருக்கிறார்கள்.

எளிமையாகச் சொல்கிறேனே, ஒரு மேடையில் எஸ்.என்.நாகராஜன் கீழை மார்க்ஸியம் பற்றி பேசுகிறார். அவர் நாற்பது வருடங்களாக மார்க்ஸியத்தைக் கற்றவர். சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்புடையவர். வேளாண் அறிவியல் அறிஞர். அவர் சொல்லும் கருத்து தனக்கு ஏற்புடையதல்ல என்று ஓர் இளம் எழுத்தாளன் எழுந்து அவரை வசைபாடுகிறான், பகடி செய்கிறான் என்று கொள்வோம். அது கருத்துரிமையோ ஆளுமையை கண்டடைதலோ ஒன்றுமல்ல. அறியாமை உருவாக்கும் துணிவும் ஆணவமும் மட்டுமே. இது நடந்த நிகழ்ச்சி. உலகில் எந்த ஒரு பண்பாட்டுச்சூழலிலும் இது ஒரு அத்துமீறலாக , குற்றமகாவே பார்க்கப்படும். ஆனால் தமிழில் இது இன்றும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக உள்லது.

ஆனால் இதை கலகம் என்று சொல்பவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள், உரையாடல்களுக்குள் இதை அனுமதிப்பதில்லை எனப்தும் வரலாறு. காரணம் அப்படி அனுமதித்தால் கருத்துப்பரிமாற்றமே சாத்தியமில்லை என அவர்கள் அறிவார்கள். இலக்கிய மேடையில் எஸ் என் நாகராஜனை மடக்கிய அதே பின் நவீனத்துவக் கலகக் குழுவை சேர்ந்தவர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கில் அதே குழுவைச்சேர்ந்த ஒருவர் மது அருந்திவிட்டு வந்து சில ‘கேள்விகள்’ கேட்டார். அவரை கழிப்பறைக்கு இட்டுச்சென்று நையப்புடைத்தார்கள்! அவர்களின் எந்த அரங்கிலும் இதேபோன்ற ‘இடையூறுகள்’ அனுமதிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. இந்த வகையான மனநிலையை ஒரு வகை ஆயுதமாகவே அவர்கள் பிறர் மீது பயன்படுத்துகிறார்கள்.

ஏளனம் வசைகள் ஆகியவற்றை நான் எப்போதுமே கண்டுகொன்டிருக்கிறேன். ஞானம் என்றும் கலை என்றும் சொல்லப்படுகிற எதுவும் அதை உள்வாங்கமுடியாதவர்களின் வசைகளுக்கும் ஏளனத்துக்கும் எப்போதும் இலக்காகிக் கொண்டே இருப்பவைதான். அதை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை, அவர்கள் என் கணக்கில் இல்லை. அவர்கள் சமூகத்துக்கு வேறு எவ்வகையிலோ ஏதோ பங்களிப்பை ஆற்றுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறேன். ஆனால் கலையுணர்வும் சிந்தனைத்திறனும் கொண்டவர்கள் என நான் நினைப்பவர்கள் அதைசேய்யும்போது அவர்கள் அதன் மூலம் அடையும் இழப்புகளை எண்ணி மனம் வருந்துவதுன்டு.

பெரும்பாலான சமயங்களில் இதற்கான காரணம் வெறும் அகங்காரம்தான். நான் இதை அறிந்திருக்கிறேன், நான் இதை ஆதரிக்கிறேன், நான் இதை நம்புகிறேன் என்ற எண்ணம். ஆகவே அந்த அறிவும் நம்பிக்கையும் தன் ஆளுமையாகவே உள்ளன என்றும் அவற்றை மறுப்பதென்பது தன்னையே மறுப்பது என்றும் எடுத்துக்கொண்டு கொந்தளிப்படைவது. இரண்டாவதாக சாதி மதம் இனம் என சில அடையாளங்களை தன் சுயத்துடன் பிணைத்துக் கொண்டு அவை மறுக்கப் பட்டால் பொங்குவது. இந்த அகங்காரம் எனக்கும் இருந்தது என்றும் நானும் புண்பட்டிருக்கிறேன் என்றும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னைவிட கற்ற, என்னைவிட சாதித்த, எனக்கு கற்பிக்கக்கூடிய் ஒருவரை சந்திக்கும்போது அந்த அகங்காரத்தைக் கொண்டு அவர்களை எதிர்கொண்டதில்லை. ஆகவேதான் அவர்களிடமிருந்து என்னால் கற்க முடிந்தது

எந்த ஒரு மாற்றுத் தரப்பையும், புதிய தரப்பையும் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் எளிய அறிதல்களைக் கொண்டு எதிர் கொள்பவர்களை, ஏளனம் மற்றும் வசையை அதற்கான ஆயுதங்களாகக் கொள்பவர்களை, கண்டு கொண்டே இருக்கிறேன். அவர்களில் உள்ள உண்மையான திறனுள்ளவர்களுக்காக வருத்தப்படுகிறேன், அவ்வளவுதான்.

ஜெ

 

முதற்பிரசுரம் Aug 10, 2010  மறுபிரசுரம்

 

முந்தைய கட்டுரைகதாபிரசங்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69