பௌத்தப் பிரபஞ்சம்

வணக்கம்,
உங்களுடைய சிறுகதை தொகுப்பு, குறுநாவல்கள், அறம் போன்றவை படித்திருக்கிறேன். உங்கள் தளத்தை தவறாமல் பின்பற்றுகிறேன். நீங்கள் எழுதியவற்றில் முதல் நாவலாக விஷ்ணுபுரத்தை இன்று தான் முடித்தேன். நிறைய நாட்கள் செலவிட்டது இரண்டாம் பகுதிக்கு தான். அதை படிக்கையில் எழுதும்போதிருந்திருக்கும் உங்கள் மனநிலையை எண்ணினால் ….யோசிக்ககூட முடியவில்லை. உங்களை எண்ணினால் பயமாய் இருக்கிறது. படிக்கும் பொழுது நிறைய முறை எழுத வேண்டும் என இருந்தேன்.

சூனியத்திலிருந்து பிரபஞ்சம் பிறந்ததாக வாதிடுகிறார்கள். நிலையான பிரபஞ்சம் இல்லை எனவும் அஜிதர் வாதிடுகிறார், வெற்றியும் பெறுகிறார். விஷ்ணுபுரம் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் BBC – Everything and nothing (2015)- ஐ பார்த்தேன். அஜிதரின் வாதமும் இன்றைய Theoretical physicist- களின் வாதமும் ஒன்றாய் இருப்பது வியப்பை அளிக்கிறது. நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. மீண்டும் படிக்கலாமென இருக்கிறேன். நன்றி.

இப்படிக்கு ,
குமணன்.

அன்புள்ள குமணன்

பௌத்தம் வழக்கமான மதநம்பிக்கை அல்ல. அது விரிவான ஒரு தத்துவதரிசனம். அதன் பிரபஞ்ச உருவகம் பல தளங்களில் விரிந்துபரவக்கூடியது. அவர்கள் சொல்லும் சூனியம் என்பது ‘இல்லாமை’ அல்ல. ‘அறிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட நிலைமை’ அல்லது ‘கருவடிவமாக இருக்கும் நிலை ‘ அல்லது ‘செயலாகவும் பொருளாகவும் மாறாமல் வெறும் தர்மம் மட்டுமே இருக்கும் நிலை’

சமணர்களுக்குப் பிரபஞ்சம் எப்போதும் இருக்கும் பிறப்பும் இறப்புமில்லா பருப்பொருள். மூவா முதலா உலகம் என்று சீவகசிந்தாமணி அதைச் சொல்கிறது. பௌத்தர்களுக்கு பிறந்து பிறந்து மறையும் ஒரு பெரிய சுழல் அது.

மிகவிரிவாகவே அதை பேசவேண்டும். விஷ்ணுபுரம் புனைவின் எல்லைக்குள் அதை விவாதிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43
அடுத்த கட்டுரைதேசம்