«

»


Print this Post

ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்


[மறுபிரசுரம்] ஊட்டிசந்திப்பு http://www.jeyamohan.in/?p=7441

ஊட்டி சந்திப்பு குறித்து http://www.jeyamohan.in/?p=7620

அன்புடையீர்,

ஊட்டி இலக்கியச்சந்திப்பின் நிபந்தனைகளை தங்களுக்கு தபாலில் அனுப்புவதில் பேருவகை கொள்கிறோம். இவ்வகையான உவகைகள் எங்களுக்கு எப்போதாவதுதான் கிடைக்கின்றன என்பதனால் அவற்றை தவிர்க்க விரும்பவில்லை.இலக்கியக்கூட்டங்கள் இலக்கிய வாசகர்களுக்காக நடத்தப்படுபவை என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியவாசகர்கள் பொதுவாக இலக்கியம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அறிந்தவர்கள். இந்தச்சிக்கலைச் சமாளிக்கவே கீழ்க்கண்ட நிபந்தனைகள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

எங்கள் இலக்கியக்கூட்டம் தரையில் அமர்ந்து நிகழ்த்தப்படுவது. மொத்தம் எட்டு அமர்வுகள். ஆகவே அரங்கில் படுப்பதும் நிற்பதும் அனுமதிக்கபப்டுவதில்லை. அப்படி வேறுவழியில்லாமல் அனுமதிக்கப்படுமென்றால் அவற்றுக்கு நிற்பு மற்றும் கிடப்பு என்று பெயர்சூட்டப்படும் . பேசும்போது ஒலி உரத்தலாகாது, குருகுலத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்வதாக அபவாதம் ஏற்பட ஏதுவாகும்.

தேனீர் உடைவு போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கப்பட முடியாது. உடைந்தவற்றை சீர்செய்ய நெடுநேரமாகிறது என்பதுடன் பெரும்பாலான பேச்சாளர்கள் அந்த உடைவு வழியாக சொந்தக்கவலைகளுக்கு திரும்பிச்செல்லுதலும் நிகழ்கிறது. இயற்கை உபாதைகளில் அப்பகுதியிலேயே கடைசியில் எஞ்சக்கூடியவற்றில் கவிதை தவிர பிற அனுமதிக்கப்படுவதில்லை.

அரங்கில் புரட்சி குறித்த பேச்சுகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அப்போதே அங்கேயே அதை நிகழ்த்திவிடவேண்டும் என்ற அதீத உற்சாகம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பந்தப்பட்டவர் ஊருக்குத்திரும்பினால் மேலதிகாரி மற்றும் மனைவியின் அனுமதியை அதற்கு வாங்க முடியாது என்ற காரணமும் நிராகரிக்கப்படுகிறது. மிக அவசியமென்றால் அவர் தன் தனியறைக்குள் அதைச் செய்துகொள்ளலாம். ஒலி வெளியே கேட்கக்கூடாது.

பார்ப்பனீயம் பற்றி உரையாடுவது அனுமதிக்கப்படுகிறது. கூடவே கவுண்டரீயம் நாடாரீயம் வேளாளரீயம் [தங்கம் என்று சொல்லவேண்டும் என்ற சிலருடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை] நாயரீயம் [இது உத்தரீயம் என்றும் சொல்லப்படும்] முதலியாரீயம் போன்றவையும் அனுமதிக்கப்படும். பின்னவை பிரச்சினைகளை உருவாக்கும் என நம்புபவர்கள் முதலில் உள்ளதையும் வேண்டாமென ஒத்துக்கொள்ளவேண்டும் என்று கோரப்படுகிறது.

கருத்துக்களை டிவிட்டர் அல்லது குறள் வடிவில் சுருக்கமாகச் சொல்வது வரவேற்கப்படுகிறது. அதற்காக தேவதேவன் பாணியில் தலையசைப்பு மற்றும் புன்னகை வழியாக இலக்கியக் கருத்துக்களை வெளிப்படுத்துவது சிறந்த முன்னுதாரணமாக அமையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். காரணம் இந்த இலக்கியவிவாதம் தமிழில் நிகழ்கிறது, மேலேசொல்லப்பட்ட வெளிப்பாடுகள் தமிழுக்குள் வருமா இல்லையா என்பதைப்பற்றிய சந்தேகம் அறிவுலகில் நீடிக்கிறது.

விவாதங்கள் ஆரோக்கியமாக நிகழவேண்டியிருக்கிறது. ஆகவே அனைவரும் குளித்துவிட்டு வந்தமர்தல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறொம். அத்துடன் பிறர் பேசும்போது கண்களைமூடி ஆழமாகச் சிந்தனை செய்வதன் விளைவாக தலைப்பகுதி மென்மையாக அசைவது, தத்துவ விவாதங்களை கொட்டாவி மூலம் எதிர்கொள்வது ஆகியவை தவிர்க்கப்படவேண்டும். தோள்களைக் குலுக்குவது கைகால்களை நீட்டிக்கொள்வது இடுப்பை அசக்கி அமர்வது போன்றவை அனுமதிக்கப்படுகின்றன. ஏப்பம் விடுமளவுக்கு உணவு அமையாது.

கேள்விகளில் ‘இப்ப தமிழ்க்கவிதையை எடுத்துக்கொண்டா நான் என்ன சொல்ரேன்னாக்க பொதுவா பாக்கிரப்ப கவிதை சம்பந்தமான விஷயங்களிலே சொல்ரதுக்கு இருக்கிற விஷயங்களிலே என்னைப்பொறுத்தவரை எது முக்கியம்னா ஒரு நல்ல கவிதை ஆக்சுவலா எப்டி இருக்கணும்னா நாம எல்ல்லாருக்குமே தெரிஞ்சதுமாதிரி அந்தக் கவிதையோட சாராம்சத்திலே இருக்கிறத எப்டிச் சொல்ரதுன்னே தெரியலை இருந்தாலும் டிரை பண்றேன் .எதுக்குச் சொல்றேன்னா’ போன்று அதிகமான அசைச்சொற்றொடர்களை பயன்ப்டுத்துவதை தவிர்க்கலாம். தவிர்ப்பது கடினம் என்றால் அவற்றை விவாதம் முடிந்த பிறகு தனியாக வைத்துக்கொள்லலாம்.

கவிதைகளில் நுண்ணிய அர்த்தங்கள் எடுப்பது வரவேற்கபப்டுகிறது, அரைப்புள்ளி காற்புள்ளி ஆச்சரியக்குறிகளை குறியீடுகளாக எடுத்துக்கொள்ளும் அணுகுமுறைக்கு அனுமதி இல்லை, நேரம் கருதி. அரங்குக்கு வெளியே கருத்துப்பரிமாற்றம் இருசாராருக்கும் உடலூறு நிகழாவண்ணம் நடப்பது ஊக்குவிக்கப்படும்.

எந்தக்கருத்தும் மறுக்கப்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளும் அதேசமயம் மறுக்கப்பட்டவர் மிஞ்சிய அரங்கு முழுக்க மறுத்தவரை மறுக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறார் என்பதை நினைவில்கொள்ளுமாறு இந்த அரங்கமைப்பாளர் அரங்கசாமி கோருகிறார். அவரை அரங்காசாமி என்று குறிப்பிடுவது தடைசெய்யப்படுகிறது.

விவாதங்களில் மட்டுறுத்தல் உண்டு. பேச்சு மிக நீளமாக செல்லுமென்றால் அது தொட்டுறுத்தலாகவும் அமையும். அதுசார்ந்த உறுத்தல்கள் ஏற்படக்கூடாதென்பதனால் முன்னரே சொல்லிக்கொள்கிறோம். விவாதங்கள் திசைமீறி செல்லுவதை தவிர்க்க வேண்டும். தேவதேவனைப்பற்றி பேசும் போது தேவேந்திரநாத தாகூரைப்பற்றி பேசுவது எப்படியோ தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகிரதென்றாலும் தேடிவந்த மாப்பிள்ளையைப்பற்றி பேசுவது கொஞ்சம் அதிகச்சுற்றலாகவே கருதப்படும்.

அரங்கு இந்திய முறைப்படி நிகழும். இந்து ஞானமரபின்படி முமுட்சு அல்லது ஞானதாகி என்னும் மாணவர் லௌகீகமாக கடும்துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் கல்வியை இன்பமானதாகக் காணும் மனநிலைக்குக் கொண்டு செல்லப்படும் வழக்கம் உள்ளதை சுட்டிக்க்காட்ட விரும்புகிறோம். ஆகவே உணவு பௌத்த முறைப்படியும் உறைவிடம் சமண முறைப்படுயும் அமைக்கப்படும். உடைகளை இந்து முறைப்படி அணிதல் வேண்டும், சமணமுறை கண்டிப்பாக விலக்கப்படுகிறது- கதவைமூடிக் குளிக்கும்நேரம் தவிர.

அரங்கில் சோமபானம் சுராபானம் ஆகியவற்றை மட்டுமே அருந்த அனுமதி. வேத முறைப்படி அந்தந்த பானங்கள் அந்தந்த தேவர்களின் அனுமதியுடன் அருந்தப்படவேண்டுமென்பதனால் அவர்களின் கையெழுதிடப்பட்ட சான்றொப்பக் கடிதங்கள் அவசியம். பிற மதுவகைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அறிவுஜீவிகள் தாங்களே உலகின் மையம் என்ற எண்ணம் கொண்டவர்கள். மது அருந்தும் போது தன்னகங்காரம் மீதூறி உலகமே தங்களை மையம் கொண்டதாக எண்ண ஆரம்பிக்கிறார்கள். பிற அறிவுஜீவிகள் அதை ஒத்துக்கொள்வதில்லை.

மேலும், வேறுபல கருத்தரங்க விளைவுகளில் இருந்து அறியப்பட்டதென்னவென்றால் மது அருந்தியவர்கள் கோட்ப்பாடுகளை முன்வைத்துப் பேசும்போது அவர் வழக்கம்போல உளறுகிறாரா மதுவால் உளறுகிறாரா என்று கண்டுபிடித்து பின்னதை மன்னிப்பது கடினமாக ஆகிறது. மது அருந்தியவர்களுடன் மதுஅருந்தாதவர்கள் தீவிரமாக உரையாடும்போது பின்னவர் மது அருந்தியிருப்பதாக மனைவியர் எண்ணுவதற்கு இடையாகிறது. மது அருந்தியவர்கள் மது அருந்தியவர்களிடம் உரையாடும்போது அவர்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தர புள்ளியை மது அருந்தாதவர்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை. மது அருந்தியவர்களுக்கு அது நினைவில் நிற்பதும் இல்லை.

மேலும் இலக்கிய நுண்ணுணர்வற்ற காவல்துறையினர் கவிஞர்கள்,மது அருந்திய கவிஞர்கள்,மது அருந்தாத கவிஞர்கள்,மது அருந்திய கவிஞரல்லாதவர்கள், மது அருந்தாத கவிஞரல்லாதவர்கள், மது அருந்தியதாக கருதப்படும் கவிஞர்கல், மதுஅருந்தியதாக கருதப்படும் கவிஞரல்லாதவர்கள், மது அருந்தாதவர்களாக கருதப்படும் மது அருந்திய கவிஞர்கள், மது அருந்தியதாக கருதப்படும் மது அருதாத கவிஞரல்லாதவர்கள் ஆகியோருக்கிடையே தெருமுனை விவாதங்களில் நிலவும் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முயலாமல் மொத்தமாக கொத்தோடு அள்ளிக்கொண்டு போகும் அவலம் தமிழகத்தில் நிகழ்கிறது. பீதியில் அவர்கள் அழுவதானால் கவிதையை தற்காப்புக்கு அவர்களால் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.

 

மேலும் லாத்தி முனையில் பெயர் கேட்கப்படும்போது புனைபெயரையா நிஜபெயரையா எதைச் சொல்வதென்றறியாமல் கவிஞர்கள் கண்ணீர் விட்டு இரண்டையும் கலக்கிச் சொல்லி அடிபெறும் நிலை நீடிக்கிறது. ‘அண்டப்பிரவாகன்’ என்று சொல்லிய கவிஞனை நோக்கி உள்ளூர் ஏட்டு ”சார் அண்டப்புளுகன்னு சொல்றான் சார்” என்று சொல்லி மேலும் தீவிரமாக விசாரிக்க தலைப்பட்டதாகவும் அவரிடமிருந்த பின் நவீனத்துவக் கவிதைத்தொகுதியை பிடுங்கி அவரே அமர்ந்து வாசித்து கடும் பீதியடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன் பின் அவர் ‘சுரோணித நாயே’ என்று கைதிகளை திட்டியிருக்கிறார்.

நிலையத்தில் நிலைமறந்திருக்கும் கவிஞர்களை ஜாமீனில் மீட்கச்செல்லும் அமைப்பாளர்களை நிலைய காவல் ஆய்வாளர் ‘நானும் கவிஞந்தான் சார்’ என்று சொல்லி ‘தைமகளே வருக தமிழ்கொண்டு தருக’ என்று தொடங்கி மேலே செல்லும் நாநூற்றிச் சொச்சம் வரிகள் கொண்ட கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி வன்முறையை செலுத்தி மேற்கொண்டு கவிதையரங்குகளே தேவையில்லை என்ற நிலைக்கு அவரை ஆளாக்கிய வரலாறும் உள்ளது.

அரங்குக்கு வெளியே மது அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. படிமக்கவிதைக்கும் படியாத கவிதைக்குமான உறவைபப்ற்றி 1962ல் க.நா.சு சி.சு.செல்லப்பாவிடம் என்ன சொன்னார் என்பது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நினைவுக்கு வராத நிலையில் அதைப்பற்றி விடிய விடிய விவாதிப்பதையும் மறுநாள் நாற்பது முறை பேதிபோன பிஷன்சிங் போல வெளுத்துப்போய் அரங்கிலமர்ந்திருப்பதையும் மன்னிக்கலாமென்றாலும் ‘செல்லப்பாவைச் சொன்னவனை நில்லப்பான்னு சொன்னாலும் விடேன்’ என்று வன்முறையில் ஈடுபடுவது அரங்கமைப்பாளர்களுக்குச் சட்டச்சிக்கல்களை உருவாக்குவதை தெரிவிக்க விரும்புகிறோம்.

பங்கேற்பாளர்கள் எல்லா அரங்கிலும் கலந்துகொண்டாகவேண்டும். இந்த நிபந்தனைக்கான முக்கியமான காரணம் பெரும்பாலான கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அவசியமில்லாத விவாதங்களில் கலந்துகொள்ள விரும்புவதில்லை, தங்களைத்தவிர பிறவற்றை அவசியமென கருதுவதும் இல்லை. அத்துடன் படிமக்கவிதை விவாதத்தின் நாலாம் நாள் பதிமூன்றாம் அமர்வுக்கு அன்றலர்ந்து வந்தமர்ந்து ‘படிமம்னாக்க இந்த தாசில்தார் ஆபீஸிலே குடுப்பாங்களே’ என்று கேட்கும் வாசகர்களையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் விவாதநேரத்தில் கடைத்தலுக்கு [ஷாப்பிங்] போய் மீண்டு நுண்ணுணர்வின் அடித்தளங்களைப்பற்றிய விவாதம் நடுவே காகிதம் சொரசொரக்க பொருட்களை எடுத்து மறுபரிசீலனைசெய்பவர்களை தவிர்க்கவேண்டிய தேவையும் உள்ளது.

இலக்கிய அரங்குகள் இருவகை. முதல்வகை அரங்குகளை கலகரங்கு என்று சொல்கிறார்கள். வருடம் முந்நூற்று அறுபது நாளும் அலுவலக விதிகளுக்குக் கட்டுப்பட்டு மனைவிக்குக் கட்டுப்பட்டு போக்குவரத்துப்போலீஸ¤க்கு மாமூல்பட்டு வாழும் இலக்கியவாதிகள் நான்குநாள் ஓர் இடத்தில் கூடி பலர்மீது நீட்டிய மொந்தை வாங்கி பெரிய கள் பெற்றால் பிறர்க்கீந்து தானருந்தி சிறிய கள்பெற்றால் தானே அருந்தி சேற்றில் விழுந்த ஜெல்லிமீன் போல இலக்கிய விவாதங்களில் திளைத்து சுவர்மூலைகளில் வாந்தி எடுத்து காலிப்புட்டிகளால் சககலைஞர்களை தாக்கி இலக்கியநிகழ்ச்சிகளில் சுவர்பற்றி நுழையும்போது அமைப்பு சற்றே ஆட்டம் காண்கிறது. மூன்று லார்ஜுக்குமேல் என்றால் குப்புற விழுந்தும் விடுகிறது.

நிபந்தனைகள் உள்ள எங்கள் அரங்கு மேலே சொன்ன கலகரங்குக்கு எதிரான கலகம். இது கலகலரங்கு என்று சொல்லப்படுகிறது. முதலில் சொன்ன அரங்குகளில் பங்கேற்றவர்கள் பேசியவற்றையும் கேட்டவற்றையும் நினைவில்கொண்டுவர முயன்றபடி திரும்புவார்கள் , இதில் பங்கேற்பவர்கள் அவற்றை மறக்க முயன்றபடி திரும்பிச் செல்வார்கள் என்பதே மையமான வேறுபாடாகும்.

அன்புடன்

அமைப்பாளர்

பி.கு இந்நிபந்தனைகள் மூலம் எங்களுக்கு கட்டுப்படியாகுமளவுக்கு பங்கேற்பாளர் எண்ணிக்கை மறுநிர்ணயமாகாவிடில் மேலதிக நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பகுப்பு:நகைச்சுவை

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7673

8 comments

3 pings

Skip to comment form

 1. Dondu1946

  இந்தக் கூட்டட்துக்கு நானும் வர எண்ணியிருந்தேன். ஆனால் எனக்குள் சில கேள்விகள் இருந்தன.
  1. என்னால் இப்போதெல்லாம் தரையில் அமர இயல்வதில்லை. ஆகவே அமர்வுகளில் நாற்காலிகள் பயன் படுத்தப்படுமா?

  2. நான் வரும்போது மடிக்கணினி எடுத்து வர நினைப்பவன் (அப்போதுதான் என்னால் வாடிக்கையாளர்கள் மொழிபெயர்ப்புக்காக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் கோப்புகளைக் கையாளவியலும்). ஆனால் அவை பத்திரமாக இருக்குமா என்ற பயம் வேறு உள்ளுக்குள்ளேயே இருந்தது. ஆகவே ஊட்டியிலேயே வெளியில் ஏதேனும் தனி ஹோட்டலில் தங்கி வாடகை ஊர்தி மூலம் வந்து போகலாம் என்றிருந்தேன்.

  அதெல்லாம் செய்யவியலாது என்பதை உங்கள் நிபந்தனைகள் கூறிவிட்டன. எப்படியும் நேரத் தட்டுப்பாட்டால் வரமுடியாது, மனம் வருந்திய என்னை அந்த நிபந்தனைகள்தான் ஆசுவாசப்படுத்தின. ஏனெனில் எப்படியுமே நான் வந்திருக்க முடியாதுதானே.

  மற்றப்படி நான் மதுவெல்லாம் அருந்துவதில்லை, ஆகவே பிரச்சினை ஏதுமில்லை அது சம்பந்தப்பட்ட நிபந்தனைகளால்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. sureshkannan

  வழக்கமாக உங்கள் ‘நகைச்சுவைக்’ கட்டுரைகளை புன்னகையுடனும் அறை அதிரும் உரத்த சிரிப்புகளுடனும் வாசிப்பேன். ஆனால் இதை வாசிக்கும் போதே உள்ளுக்குள் ஒர் எரிச்சலையும் சோகத்தையும உணர்ந்தேன். இப்படியெல்லாமா ஒருவர் பிரச்சினைகளை எதிர்கெர்ண்டிருக்க வேண்டும்?

  ஓர் எழுத்தாளர் தன்னுடைய பல வருட உழைப்பின் மூலமாக கிடைத்த வாசிப்பு அனுபவத்தை தன்னுடைய இளம் வாசகர்களுக்கும் விருப்பமுள்ளவர்களிடமும் பகிர ஒர் அழைப்பை விடுக்கிறார். எழுத்தாளர்கள் உட்பட பலபேர்கள் நீண்ட தூரம் கடந்து தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து கூடும் அந்த நிகழ்ச்சி முழு பயனுள்ளதாக அமையும் வகையில் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவைகளில் சில அதீதமாக இருந்தாலும் பெரும்பாலானவை ஒரு சாதாரண மனிதன் கூட இன்றைய நாகரிக உலகில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நிபந்தனைகளே. இதற்கு உடன்படுகிறவர்கள் வரப்போகிறார்கள், இல்லாதவர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.

  ஆனால் இது குறித்து இணையத்தில் பல கிண்டல்களையும் வன்மங்கள் மறைந்திருந்த அவதூறுகள் பல வாசிக்கக் கிடைத்தன். ஆபத்தில்லாத நகைச்சுவைகளை ரசிக்க முடிந்தாலும் எதிர்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களின் கலக புரட்சி பாவனைகளை காண எரிச்சலாகவே இருந்தது. மதுவருந்துவதே புரட்சியின் கலகத்தின் ஓர் அங்கம் என்கிற கருத்துருவாக்கம் தீவிரமாக பரப்பப்படும் நிலையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட புரட்சியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடித்துவிடும்தானே? ஆனால் பெரும்பாலான கலகவாதிகளின் புரட்சி பாவனை , மதுவரங்கில் கூடி மார்க்ஸ், சே என்ற உரத்த விவாதத்துடன் துவங்கி இயன்றால் எதிரில் இருப்பவனின் முகத்தில் குத்தி பிறகு தனியாக வீடு திரும்பும் போது ‘வாயை ஊதுடா” என்று மிரட்டும் காவல் துறையினரின் முன் கூனிக்குறுகி நிற்பதுடன் முடிந்து விடுவதுதான் சோகம்.

  ()

  The Karate Kid என்கிற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். வித்தை கற்றுக் கொள்ள விரும்பும் சிறுவனிடம் அந்த குரு முதலில் நிர்ப்பந்திக்கும் பயிற்சியே ‘கீழ்ப்படிதல்’ எனும் குணத்தையே. இன்னொன்று அவன் மூளையில் இந்த வித்தை குறித்து ஏற்கெனவெ நிரம்பியிருக்கும் அறைகுறையான எண்ணங்களை காலி செய்வது. தன்னை முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்தல்தான் கற்றுக் கொள்ளலின் அடிப்படை என்பதை அப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. அவ்வகையில் சில நிபந்தனைகள் அவசியமானதாகவே தோன்றுகிறது. இதுபற்றிய பல கிண்டல்களை வாசிக்கும் போது அந்த முதிராச்சிறுவன் தனியானவனல்ல என்பது புரிகிறது.

 3. Vengadesh Srinivasagam

  ஹா…ஹா…!

  கீழ் காணும் வரிகளை மிகவும் ரசித்தேன்…
  //குருகுலத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்வதாக அபவாதம் ஏற்பட ஏதுவாகும்//
  //உடைந்தவற்றை சீர்செய்ய நெடுநேரமாகிறது என்பதுடன் பெரும்பாலான பேச்சாளர்கள் அந்த உடைவு வழியாக சொந்தக்கவலைகளுக்கு திரும்பிச்செல்லுதலும் நிகழ்கிறது. இயற்கை உபாதைகளில் அப்பகுதியிலேயே கடைசியில் எஞ்சக்கூடியவற்றில் கவிதை தவிர பிற அனுமதிக்கப்படுவதில்லை//
  //பார்ப்பனீயம் பற்றி உரையாடுவது அனுமதிக்கப்படுகிறது. கூடவே கவுண்டரீயம் நாடாரீயம் வேளாளரீயம்…//
  //உள்ளூர் ஏட்டு ”சார் அண்டப்புளுகன்னு சொல்றான் சார்” என்று சொல்லி…//
  //அன்றலர்ந்து வந்தமர்ந்து ‘படிமம்னாக்க இந்த தாசில்தார் ஆபீஸிலே குடுப்பாங்களே’ என்று கேட்கும்…//

  எனது ஞாயிறு உற்சாகம் கொண்டுவிட்டது!

 4. gomathi sankar

  திரு சுரேஷ் கண்ணன் சொல்வதுபோல கராத்தே மாதிரி இலக்கியம் ஒரு வித்தையா என்று சந்தேகமாக இருக்கிறது.இலக்கியத்தை ஒரு குருவின் கீழ் ‘அடிபணிந்து’ கற்றுக் கொள்ளமுடியுமா..ஜெமோவே சொல்வது போல இலக்கியம் என்பதே ஒரு அகங்காரச் செயல்பாடுதான்.அதனால்தான் இந்த உரசல்கள் பூசல்கள் எல்லாம் .ஜெயகாந்தனோ ஜெமொவோ சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லிவிட்டார் என்று ஒப்புக் கொள்ளும் தருணத்தில் நான் என்னிடம் எதுவும் மேற்கொண்டு சொல்வதற்கு இல்லை என ஒப்புக் கொள்கிறேன்.அல்லவா.ஆகவே புதிதாக எழுதவரும் ஒவ்வொருவனும் ஏற்கனவே எழுதுபவர்களை மறுத்துத்தான் வரமுடியும்.இதற்கு சிறந்த உதாரணம் ஜெமோவேதான் எனத் தோன்றுகிறது.அவர் சு ரா ,போர்ஹே ,சுஜாதா போன்றவர்களை மறுப்பதை இந்த தளத்திலேயே நான் புரிந்துகொள்கிறேன்.உண்மையில் இலக்கியம் என்பதே கீழ்ப் படிய மறுப்பதுதான்.ஆகவேதான் இத்தகைய நிகழ்வுகளை ‘ஒழுங்கு’ பண்ணுவது கடினமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது.

 5. tamilsabari

  இதுவரை நான் படித்ததிலேயே, கடுமையான விமர்சனங்களை இந்த அளவிற்கு நகைச்சுவையுடன் எதிர் கொண்டது இப்பதிவு தான்.

  //இலக்கியவாசகர்கள் பொதுவாக இலக்கியம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அறிந்தவர்கள். //
  ஆரம்பித்து
  //மூன்று லார்ஜுக்குமேல் என்றால் குப்புற விழுந்தும் விடுகிறது.//
  வரை ஒரே அதிரடி தான் :))

  சிரித்து கொண்டே இருக்கிறேன். இன்றைய நாளின் சிறப்பு மிக்க நிகழ்வு இப்பதிவு படித்தது.

 6. sureshkannan

  அன்பான கோமதி ஷங்கர்,

  இலக்கியம் என்பதை வித்தை என்பதாக நான் குறுக்கவில்லை. ஆனால் இலக்கியத்தின் ஆரம்ப நிலையை கடப்பதற்காக, அறிவதற்காக, கற்றுக் கொள்வதற்கு சில அடிப்படை குணாதிசயங்கள் தேவை என்பதாக நான் கருதுகிறேன். நாம் ஏற்கெனவே அது குறித்து அறிந்து வைத்திருக்கிற அரைகுறையான கருத்துக்களை உதறி காலிப்பாத்திரமாக மாறுவதும், அந்த அறைகுறை விஷயங்களை ‘ஞானமாக’ கருதிக் கொண்டு கற்றலின் போது விதாண்டாவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டியதும்தாம் அது. உண்மையான அறிதல் விருப்பத்துடன் எழுப்பப்படுகிற கேள்விகள் வேறு. இந்தச் சந்திப்பிற்கு வரப்போகிறவர்கள் பெரும்பாலும் கவிதை குறித்தும் மரபிலக்கியம் குறித்தும் அடிப்படையாகவும் அல்லது மேலதிக விவரங்களைப் பற்றி அறிவதற்காகவும் விவாதிக்கவும்தான் கூடுகிறார்கள். எனில் மேற்குறிப்பிட்ட அடிப்படை குணாதியங்கள் நிபந்தனைகளாக எதிர்ப்பார்ககப்படுவதில் தவறில்லைதானே?.

  இன்னொன்று. எந்தவொரு வாசகனும் ஒரே எழுத்தாளரிடம் நிலைகொண்டிருக்க மாட்டான். அவரவர்களின் வாசிப்பனுபவத்திற்கு ஏற்பவும் அதை சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கேற்பவும் வெவ்வேறு காலகட்டத்தில் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பான். இந்த நிலையில்தான் தாம் கடந்து சென்ற எழுத்தாளனை மறுப்பது நிகழ வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்தாளரை மறுக்கிறார் அல்லது கறாராக விமர்சிக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் அந்த எழுத்தாளரை ஏறக்குறைய முழுவதுமாக வாசித்திரு்க்கிறார், உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட உழைப்பில் சில சதவீதத்தை கூட செலுத்த முன்வராமல் ‘அந்தாள் எழுதுவது குப்பை’ என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வதை ‘கீழ்ப்படிய மறுப்பது’ என்று சொல்ல முடியாது. அவ்வாறானவர்கள்தான் இந்தச் சந்திப்பின் நிபந்தனைகள் குறித்து தவறாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான அறிதல் வேட்கை உள்ளவன் இது போன்ற சிறுதடைகளை பொருட்படுத்த மாட்டான்.

 7. gomathi sankar

  திரு சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு ,ஒரு வாசகனையும் ஆரம்பகால எழுத்தாளனையும் பிரித்துக் கொண்டே நான் அவ்விதம் சொன்னேன்.அதுவும் நீங்கள் வித்தை என்ற சொல்லை பயன்படுத்தியதால்.காலிக் கோப்பை என்ற ஜென் படிமத்தை விட ‘இருப்பவனுக்கு இன்னும் கொடுக்கப் படும்’ என்ற விவிலிய உருவகம்தான் இங்கு பொருத்தமாக இருக்கும்.இங்கு வெறும் கையுடன் வருபவர் வெறும் கையுடந்தான் செல்வார்கள்.நேரடியாக இந்த விவாதத்துடன் சம்பந்தம் இல்லாவிட்டாலும் எந்த ஒரு ஆரம்பகால எழுத்தாளனும் தன்னை மீறிய பெரிய ஆளுமை கொண்ட எழுத்தாளர்களுடன் அவன் நிலைபெறும்வரை நெருங்கிப் பழகாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது.ஆலமரத்தடியில் வேறு தாவரங்கள் வளர்வதில்லை.

 8. அமர பாரதி

  அருமை ஜெ.மோ அவர்களே, உங்களுக்கு பல நேரங்களில் நான் மின் மடலோ பின்னூட்டமோ எழுத நினைதிருந்தாலும் முதலில் இதற்கு பின்னூட்டம் எழுதியேயாக வேண்டும் என்று தோன்றியது. அருமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? கோமதி சங்கர் போன்றவர்களின் சில வரி பின்னூட்டங்களிலேயே என் போன்றவர்களுக்கு பீதி கிளம்புகிறது. இருந்தாலும் ஒரு முறையேனும் உங்கள் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆவல்.

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » நிபந்தனைகள் -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by ஏழர and kavirajan, Kaarthik. Kaarthik said: ரத்தினச் சுருக்கத்திற்கு உவமை/உதாரணம் அன்று திருக்குறள் இன்று ட்விட்டர்! – http://www.jeyamohan.in/?p=7673 […]

 2. விஷ்ணுபுரம் இலக்கிய கூடல் 2013

  […] நிபந்தனைகள் […]

 3. ஊட்டி சந்திப்பு குறித்து

  […] **************** நிபந்தனைகள் குறித்து […]

Comments have been disabled.