‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 2

சத்யபாமா கையசைக்க ஏவலன் தலைவணங்கி வெளியே சென்று படைத்தலைவர்களை உள்ளே வரச்சொன்னான். அவர்கள் வந்து தலைவணங்கி பீடங்களில் அமர்ந்தனர். அனைவர் முகங்களும் தளும்பி நிறைந்த கலங்கள் போல இருந்தன. சத்யபாமா “நாம் சததன்வாவை வென்றுவர முடிவெடுத்திருக்கிறோம். நம் படைகள் அவன் நகரை அழிக்கவேண்டும்…” என்றாள். “கிருஷ்ணவபுஸ் என்றொரு நகரே இனி உலகில் இருக்கக்கூடாது. அங்குள்ள ஒவ்வொரு கல்லும் பெயர்க்கப்பட்டாகவேண்டும்…”

“நமது படைகளுக்கு முன் கிருஷ்ணவபுஸ் யானைகாலடியில் பறவைமுட்டை போன்றது” என்றார் படைத்தலைவர். “அதன் படைசூழ்கை குறித்தே பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கிருந்து படைகள் செல்வது இயல்வதல்ல. ஓரிருநாட்களில் நாம் அவனை வென்றாகவேண்டும். காசிக்கு அருகே உள்ள நமது படைகள் எவை? அவற்றை எப்படி நம்மால் ஒன்றுசேர்க்கமுடியும்?” இளம்படைத்தலைவன் “காசிக்கு மிக அருகே உள்ளது மதுராவின் இரண்டு படைப்பிரிவுகள் நின்றிருக்கும் நமது சுஜனகிரகம். சற்று அப்பால் மார்த்திகாவதி உள்ளது. நமது நட்புநாடு அது” என்றான்.

திருஷ்டத்யும்னன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். ஆளுமை மிகுந்தவளென்றாலும் அரசுசூழ்தல் கற்காதவள். அரசியர் ஒருபோதும் அடிப்படைச்செய்திகளை படைத்தலைவர்களிடம் கேட்கமாட்டார்கள். ஒற்றர் வாயால் முழுதறிந்தபின்னரே அரசுசூழ்தல் அவையில் அமர்வார்கள். இறுதிமுடிவு எடுத்ததை அவள் அவனிடமும் அக்ரூரரிடமும் சொல்லவில்லை. அவள் எடுத்த முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவே எண்ணி ஆணையிட்டுக்கொண்டிருந்தாள். தன்னையறியாமலேயே அவளை திரௌபதியுடன் அவன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தான் என உணர்ந்தான். அந்த எண்ணம் வந்ததுமே அவன் சொல்லவேண்டியதை முடிவுசெய்துவிட்டான்.

“யாதவ அரசி பொறுத்தருள வேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் உறுதியான குரலில் சொன்னான். “பார்ஸ்வகுடியின் கூர்மபுரியின் அரசர் கிருதாக்னி இன்னமும் யாதவக்கூட்டமைப்பில்தான் உள்ளார். அவரது மைந்தனாகிய சததன்வா இன்னும்கூட யாதவ இளவரசன். நாம் போர்புரிய இன்னும் யாதவக்கூட்டமைப்பின் ஒப்புதல் பெறவில்லை.” சத்யபாமா “அவன் என் தந்தையைக் கொன்றவன்…” என்று சொல்ல “அதை அவன் தந்தையிடம் முறையிடவேண்டும் என்பதல்லவா யாதவ நெறி?” என்றான். அக்ரூரர் “ஆம்” என்றார்.

“நான் முறையிடப்போவதில்லை. அவனை கொல்வேன். யாதவர்மன்றுக்கு பின்னர் விளக்கம் அளிக்கிறேன்” என்று சத்யபாமா சினத்துடன் சொல்ல திருஷ்டத்யும்னன் “அவ்வண்ணமெனினும் ஒரு படை கொண்டெழுவது இப்போது நல்ல வழியல்ல” என்றான். “நம் படைகள் காசி மண்ணை கடக்காமல் சததன்வாவின் ஊரை அடைய முடியாது. காசி மகதத்துடன் மணவினை புரிந்த நாடு. அஸ்தினபுரியிடம் மண உறவு கொண்ட நாடு. தன் நிலம் வழியாக நம் படைகள் செல்ல காசி ஒப்பவில்லை என்றால் நாம் அதை செய்ய முடியாது. காசியின் படைகள் நம்மை எதிர்க்குமென்றால் அதைக் கடந்து செல்ல மதுராவில் நின்றிருக்கும் படைகளால் எளிதில் முடியாது.” படைத்தலைவர் ஏதோ சொல்ல வாயெடுக்க திருஷ்டத்யும்னன் கையசைத்து அவரை நிறுத்தி தொடர்ந்து பேசினான்.

“அவையோரே, இன்று ஒரு முறைசார் போர் அங்கு நிகழும் என்றால் அதுவே பாரத வர்ஷத்தில் எதிரெதிர் நின்றிருக்கும் பேராற்றல்கள் நடுவே ஒவ்வொரு கணமும் நிகழக்காத்திருக்கும் பெரும் போரின் தொடக்கமாக அமையக்கூடும். நெய் நிறைந்த களஞ்சியத்தில் விழுந்த முதல் தீப்பொறியாக அது அமையக்கூடும்.” “ஆனால் நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றாள் சத்யபாமா. “இருக்கலாம். நாம் முடிவை முதலில் எடுத்துவிட்டு அரசுசூழ்கிறோம். என்ன செய்யமுடியுமென எட்டுத்திசையிலும் நோக்குவோம். பின்னர் இறுதிப்புள்ளிக்கு செல்வோம்” என்றான்.

சத்யபாமா உடனடியாக விழிகளின் அனல் அவிந்து “வேறு என்ன செய்யக்கூடும் என்கிறீர்?” என்றதும் திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகைசெய்தான். அவளுடைய நிமிர்வுக்குப்பின் தனக்கு அரசுசூழ்தல் தெரியாதென்ற தயக்கமே உள்ளதென அவன் சரியாகவே உய்த்தறிந்துவிட்டிருந்தான். “படைநகர்வு இப்போது தேவை இல்லை. அது நம் கட்டுப்பாட்டில் நிற்காத விளைவுகளை உருவாக்கும்.”

“வேறு வழி என்ன?” என்று சத்யபாமா பொறுமையிழந்து உரக்க கேட்டாள். “இன்று இவ்வரியணை அமர்ந்திருக்கையில் என்னுடல் எரிகிறது. சியமந்தகம் என் கைக்கு வந்து சேரும் கணம் வரை என்னால் விழிதுயில முடியாது. பாஞ்சாலரே, என் தந்தையின் தலை வெட்டுண்டு கிடப்பதை இக்கணம் விழி மூடினால் கூட என்னால் காண முடிகிறது.” நிலையற்றவளாக எழுந்து “நான் வாளாவிருக்கவேண்டும் என்று மட்டும் எவரும் சொல்லவேண்டாம்… இதன்பொருட்டு யாதவகுலமே அழியுமென்றால் அழியட்டும்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “நம்முன் உள்ள வழி ஒன்றே” என்றான். அவள் திரும்பி நோக்க “அக்ரூரரும் கிருதவர்மரும் தேவையான மிகச்சிறிய படையுடன் சததன்வாவை நாடிச் செல்லட்டும்” என்றான். “சிறிய படையால் அவனை வெல்ல முடியாது” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம். அவனை வெல்ல நாம் அனுப்பும் சிறுபடை போதாது. ஆனால் நான் எண்ணுவது முறைசார் போரை அல்ல. நாம் அவனை அணுகவேண்டும். அதற்கு அவனே அவர்கள் இருவரையும் தன் எல்லைக்குள் அழைத்துக்கொள்ள வேண்டும். தன் அரண்மனைக்குள் அவர்களை தங்க வைக்க வேண்டும்” என்றான்.

அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்ப திருஷ்டத்யும்னன் சொன்னான் “அரசி, என்ன நிகழ வேண்டும் என்பதை சொல்கிறேன். நாம் போரை விழையவில்லை என்று காட்டுவோம். துவாரகை எப்போதும் போரைத்தவிர்க்க முயல்வது என்பதனால் சததன்வா அதை நம்புவான். சததன்வாவுடன் சமரசம் பேசி அவன் விழைவதை அளித்து அவனிடமிருந்து அந்த மணியை பெற்றுவர துவாரகையின் முறைமைத்தூதராக அக்ரூரரை அனுப்புவோம். அவருடன் அகம்படித் துணைக்கு என ஒரு படையுடன் கிருதவர்மரும் செல்லட்டும். அவ்வாறு சததன்வாவிடம் பேசி அந்த மணியை கொண்டு வர தன்னால் முடியும் என்று அக்ரூரர் நமக்கு இங்கு அவை நடுவே நின்று உறுதியளிக்கட்டும். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்செல்லும்போதே சததன்வா அதை ஒற்றர்வழியாக அறிந்திருப்பான்.”

“செல்லும் வழியில் அக்ரூரரின் பிறிதொரு செய்தியும் அவனை அடைய வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “அக்ரூரரும் கிருதவர்மரும் தங்களுக்கென அரசியல் விழைவுகள் கொண்டிருக்கிறார்கள் என.” அக்ரூரர் “என்ன சொல்கிறீர்?” என்றபடி எழுந்துவிட்டார். “ஒரு நடிப்புதான் அது அக்ரூரரே” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவகுலமே உங்களுக்கு இளைய யாதவருடன் உள்ள உறவை அறியும். இந்நகரமே உங்களுடையதென சொல்கிறார்கள்.” அக்ரூரர் “ஆம், ஆனால் இப்படி ஒரு செய்தி எப்படி பரவினாலும் அது வரலாற்றில் இருக்கும். நான் என் தலைவனிடம் முரண்பட்டேன் என விளையாட்டாகக்கூட ஒருவரும் சொல்லக்கூடாது. இதற்கு நான் ஒப்ப மாட்டேன்” என்றார்.

“வெற்றியுடன் திரும்பிவந்து சியமந்தகத்தை நீங்கள் அரசரின் காலடியில் வைக்கையில் அதுவே வரலாறாக இருக்கும் அக்ரூரரே” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, நடிப்புக்காகக்கூட அச்சொல்லை என்னுடன் இணைக்க ஒப்பமாட்டேன்” என்றார் அக்ரூரர். “நான் இளைய யாதவரின் ஊர்தி. இது வஞ்சகம் எண்ணியதென பொய்யின் தெய்வம் கூட சொல்லலாகாது.” சத்யபாமா “அக்ரூரரே, இது என் ஆணை. நீங்கள் பாஞ்சாலர் சொல்வதை செய்தாகவேண்டும்” என்று உரக்க கைநீட்டி சொன்னாள். “ஆணை அரசி” என அக்ரூரர் தலைவணங்கினார்.

“நான் சொல்வதை மட்டும் கூர்நோக்குக. பின்னர் முடிவெடுப்போம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அக்ரூரருக்கும் சியமந்தகம் மீது விருப்பு இருக்கிறது. அந்த மணியை மையமாக்கி துவாரகைக்கு எதிராக ஒரு படைத் திரட்சியை செய்யவும் அதனூடாக யாதவநிலத்தில் ஒரு பகுதியை வென்றெடுக்கவும் அவர் எண்ணுகிறார். கிருதவர்மர் அந்தகக்குலத்தவர். சியமந்தகம் தனக்குரியதென அவர் கருதுகிறார். இவர்கள் இங்கிருந்து அங்கே செல்வதற்குள் இச்செய்தி அவனை அடையட்டும். சியமந்தக மணியைக்காட்டி இருவரையும் வென்றெடுக்கமுடியும் என சததன்வா நம்புவான்.”

சாத்யகி “அதை அவன் நம்ப மாட்டான்” என்றான். “இளைய யாதவரின் அவையில் அக்ரூரர் யார் என அவன் அறிவான். யாதவகுலத்துக்கே தலைமை கொண்டிருக்கும் அக்ரூரர் ஒரு சிறிய யாதவக்கிளையைத் திரட்டி தனித்துச்செல்ல விழையமாட்டார் என்றே என்ணுவான்.” திருஷ்டத்யும்னன் உறுதியாக “நம்புவான்” என்றான். “ஏனெனில், வஞ்சகர் பிறரையும் வஞ்சகராகவே எண்ணுவர். விழைவுகொண்டவர் பிறரது விழைவுடனே உரையாடுவர். எந்த உளநிலையால் இளைய யாதவரை எதிர்க்க சததன்வா எண்ணினானோ அதே உளநிலையில் இவர்கள் இருப்பதாக அவன் எண்ணுவான். இவர்கள் மேல் சற்று ஐயம் இருந்தால்கூட ஒருமுறை பேசிப்பார்ப்போமே என்றுதான் அகம் ஓடும்.”

“இவர்களை வென்றெடுக்கமுடியவில்லை என்றாலும்கூட இவர்கள் இளைய யாதவரை உதறி அவனுடன் பேசச் சென்றதை அறிந்தாலே தனக்கு யாதவர்களின் ஆதரவு பெருகும் என சததன்வா எண்ணக்கூடும். ஆகவே உறுதியாக இருவரையும் அவன் தன் எல்லைக்குள் அழைத்துக்கொள்வான். இப்படைகளுடன் அவர்கள் சென்று சததன்வாவை அவன் அரண்மனையில் கண்டு உரையாட முடியும்” என்றான். அவை அவன் சொல்லுக்காக அமைதியாக காத்திருந்தது. “நாம் அனுப்புவது எளிய யாதவப் படையாக இருக்க வேண்டியதில்லை. இங்கிருந்து பெரும்திறல் வீரர் நூற்றுவரைத் தேர்ந்து அனுப்புவோம். அவர்கள் அங்கு சென்றதுமே சததன்வாவைக் கொன்று அந்த மணியை வெல்லட்டும். சததன்வாவின் படைகள் எதிர்திரள்வதற்குள் கங்கையினூடாக வந்து நம் எல்லைக்குள் நுழையட்டும். காசியோ மகதமோ சததன்வாவை துணைக்க வருவதற்குள் இத்தாக்குதல் முடிவடைந்து விடும்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்யபாமா கண்கள் அலைபாய “ஆனால்…” என்றாள். பின்னர் கையை வீசி “இது முறையல்ல என்று எனக்குத் தோன்றுகிறது பாஞ்சாலரே” என்றாள். “அரசி, எங்ஙனம் சியமந்தகம் கொள்ளப்பட்டதோ அங்ஙனமே அதைக் கவர இது ஒன்றே வழி” என்றான் திருஷ்டத்யும்னன். “எந்தையிடமிருந்து சியமந்தகத்தைக் கொண்டவன் அவையில் நின்று சொல்ல ஒரு குலப்பெயர் மட்டுமே உள்ள எளிய யாதவன். நாமோ பாரத வர்ஷத்தை ஆள எண்ணும் துவாரகைக்கு உரிமை கொண்டவர்கள். நாம் முறையற்றது செய்யலாகாது” என்றாள் சத்யபாமா.

“அரசி, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நாம் போர் என்று அறிவித்தே இங்கிருந்து படை அனுப்புகிறோம். அவனிடம் உரையாடி இந்த மணியைப் பெறுவதென்பது நாம் மட்டுமே அறிந்த திட்டம். வெறும் நூறு பேர் கொண்டு சததன்வாவை போரில் வென்றோம் என்றே நாம் அறிவிக்க இருக்கிறோம். ஆம், இது போரே. மிக விரைவாக மிக எளிதாக நிகழ்த்தப்பட்ட ஒரு போர். அவ்வளவுதான்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். கிருதவர்மன் “ஆம் அரசி, இது ஒன்றே எளிய வழி என்று நினைக்கிறேன். இப்போரை என்னிடம் விடுங்கள். இங்கிருந்து செல்லும் நமது படை ஆறு நாட்களுக்குள் அங்கு சென்று அடைய முடியும். அவனைக்கொன்று மணியை கவர்ந்து மீள்கிறோம்” என்றான்.

சத்யபாமா குழப்பத்துடன் தனக்கென்றே சொல்பவள் போல் “இல்லை. நான் ஐயுறுகிறேன். இது முறையா என்றெனக்கு தெரியவில்லை” என்றாள். “அரசி, இத்தருணத்தில் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று அறிந்து கொள்ளவே இளைய யாதவர் நகர்நீங்கினார் போலும்” என்றான் திருஷ்டத்யும்னன். திடுக்கிட்டவள் போல் விழி தூக்கி அவனை நோக்கிய பின் சத்யபாமா “ஆம். நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றாள். “அரசி, எண்ணி குழம்புவதற்கு இது நேரமல்ல. அக்ரூரரும் கிருதவர்மரும் உடனடியாக கிளம்பட்டும். அவர்கள் மதுராவை அடைவதற்குள் அங்கு படைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இதுவே நம் முன் உள்ள வழி “என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்யபாமா கைகளைக் கட்டியபடி சென்று சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றாள். அவள் கருங்குழல்கற்றைகளை கடற்காற்று நெளிய வைத்தது. ஆடை நுனி படபடத்து சுற்றி உடலில் படிந்தது. நால்வரும் அவளை நோக்கி விழிநட்டு அமர்ந்திருந்தனர். அவள் உள்ளம் நிகழ்வதை காணமுடிந்தது. அக்ரூரர் “அரசி, அனைத்து வழிகளிலும் எண்ணி நோக்கும்போதும் இது சிறந்தது என்றே எண்ணுகிறேன். அவன் நம்மேல் முறையான போர் தொடுத்தவன் அல்ல. அவனுக்கென ஒரு பெரும் படை கொண்டு சென்று அவனை வென்றாலும் அது துவாரகைக்கு புகழ் தருவதல்ல. நூறு பேர் கொண்ட சிறு படையுடன் சென்று வென்று மணி கொண்டு வந்தால் அது நமக்கு புகழைச் சேர்க்கும்” என்றார்.

அவள் கன்னங்களும் கழுத்தும் அசைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். தயக்கத்தையும் குழப்பத்தையும் இத்தனை தெளிவாக உடலில் காட்டுகிறாள். அரசு சூழ்தலின் நெறிகளில் முதன்மையானவற்றைக்கூட கற்றவளல்ல. அவள் அங்கே நின்று தன்னை மேலும் வற்புறுத்தும்படி கோரிக்கொண்டிருந்தாள். “அரசி, சததன்வா இத்தனை தயக்கத்திற்கு தகுதியானவனா என்று எண்ணுங்கள். பொருள்விழைவது போர்வீரனின் இயல்பு. எனவே சியமந்தக மணியை அவன் கொண்டது முறையெனக் கொள்ளலாம். ஆனால் போரில் களம்பட்ட ஒருவரின் முடியைப் பிடித்து இழுத்துச் சுழற்றி தலை கொய்து வீசுபவன் வீரனே அல்ல. அதுவும் தன் தந்தையின் இடத்தில் இருந்து அள்ளி அமுதூட்டிய ஒருவரின் தலையை” என்றான். அவள் உடலதிர்வதை கண்டான். அவனுக்கு முன்பு அறிந்திராத ஓர் எழுச்சி ஏற்பட்டது.

“யாதவர் தலைவி, போரில் நிகழ்வது கொலை அல்ல. கொல்லப்பட்டவனை வெல்ல எண்ணுகிறோம், அழிக்க உன்னுவதில்லை. அவன் விண்ணுலகெய்த விழைகிறோம், அவமதிப்பதில்லை. கொலை ஐந்துபெரும் தீமைகளில் முதன்மையானது. சினமும் காழ்ப்பும் தீவிழைவும் கொண்டு ஒருவரை அவமதிப்பவன் செய்வதே கொலை. களத்தில் எதிரியின் தலையை இழுத்து வெட்டும் கீழ்மகன் செய்வது தெய்வங்களும் மூதாதையரும் பழிக்கும் படுகொலை. இழிநரகின் இருளில் அவனை ஆழ்த்தும் செயல் அது” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் குரல் ஓங்கியது. “அந்த இழிதகையோன் வீரனில்லை. அவனை எங்ஙனம் கொன்றாலும் அது தகுமே.”

பேரலை வந்து அறைந்த படகு என அவள் உடலில் எழுந்த அசைவை காண முடிந்தது. ஒரு கணத்தில் அனைத்துக் கட்டுகளையும் இழந்து எளிய யாதவப் பெண்ணாக மாறி பெண்சிம்மம் போல திரும்பி அவள் கூவினாள் “ஆம், அவனை அழித்தாகவேண்டும். அச்செயலுக்கு அவன் குருதியை நான் கண்டே ஆகவேண்டும். அக்ரூரரே, நான் ஆணையிடுகிறேன். அவனைக் கொன்று அக்குருதி நிறைந்த கலத்தில் சியமந்தகமணியை இட்டு இங்கு கொண்டு வாருங்கள். அவன் குருதியில் கை நனைத்து சியமந்தகத்தை என் கையில் எடுப்பேன். அக்குருதி ஈரத்துடன் இங்கு என் மூதன்னையர் குடி கொண்டிருக்கும் ஆலயத்து பலிபீடத்தில் அம்மணியை வைப்பேன். சென்று வருக! பாஞ்சாலரின் ஆணையை கைக்கொள்க!”

அக்ரூரர் தலைவணங்கி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். கிருதவர்மன் “ஆணை! சியமந்தகத்துடன் இங்கு மீள்கிறேன்” என்றான். சாத்யகி திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நான் செய்ய வேண்டியதென்ன?” என்றான். “இருவருடனும் நாமும் செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “இப்போதே கிளம்புங்கள். இதுவே அதற்கான தருணம்” என்றாள் சத்யபாமை. அவள் விழிகள் சிவந்து கலங்கியிருக்க மூச்சில் உடல் காற்று உலைக்கும் படகுப்பாய் என அசைந்தது. “இங்கிருந்து அகன்று நீங்கள் ஆடைகளை எடுத்து தேர்களை அணுகும்போது அரச ஆணை உங்களுக்காக காத்திருக்கும்.” அக்ரூரர் “குருதிமணியுடன் மீள்கிறோம் அரசி” என்று சொல்லி மீண்டும் தலைவணங்கினார்.

அவர்கள் வெளியே வந்தபோது அக்ரூரர் தலைகவிழ்ந்து எண்ணங்களில் மூழ்கி வர கிருதவர்மன் திருஷ்டத்யும்னனிடம் “தங்களுக்கு நன்றி உரைத்தாகவேண்டும் பாஞ்சாலரே. நான் அந்தகக் குலத்தவன். என் குலமணியை வென்றுவரும் வாய்ப்பை எனக்கு அளித்தீர்கள். நான் காலமெல்லாம் இதற்காக என் குடியினரால் நினைவுகூரப்படுவேன்” என்றான். “அந்த மணியை நீர் பார்த்திருக்கிறீரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், காலையொளியில் இந்திரநீலம் மதியம் வான்நீலம் இரவில் நீர்த்தெளிவு என உருமாறும் விண்கதிர்க்கல் அது” என்றான்.

திருஷ்டத்யும்னன் ஒரு கணம் அவன் விழிகளில் தெரிந்து மறைந்த ஒன்றைக் கண்டு உளம் அதிரப்பெற்றான். வைரத்தைத் திருப்பும்போது உள்ளாழத்தில் தெரிந்து மறையும் நீரோட்டம் என ஒன்று. அது என்ன என எண்ணியதுமே எங்கோ உளம் சென்று தொட்டது. எங்கே? எதை? சாத்யகி அக்ரூரரிடம் “நாம் உரிய படைவீரர்களை திரட்டவேண்டியிருக்கிறது அல்லவா மூத்தவரே?” என்றான். “ஆம், என்னால் எவர் எவர் என நினைவில் இருந்தே சொல்லமுடியும். மதுராவுக்கு இப்போதே ஓலை அனுப்புகிறேன்” என்றார் அக்ரூரர்.

சாத்யகி “அவர்களில் வில்லவர் பாதியளவாவது வேண்டுமல்லவா?” என்றான். “படகில் ஆடியபடி வில்லாளும் திறன் கொண்டவராகவே நூற்றுவரும் இருக்கவேண்டும். போர் நாம் திரும்பி வரும்போதுதான் நிகழும்” என்றார் அக்ரூரர். அவரது காலடிகளை கேட்டுக்கொண்டே நடந்த திருஷ்டத்யும்னன் தன் வேட்டைப்புலன்கள் உச்சத்திலிருப்பதை உணர்ந்தான். உடல் புல்லரித்துக்கொண்டே இருந்தது. சாத்யகி “நான் கலந்துகொள்ளும் முதல்போர் இது அக்ரூரரே” என்றான். “இதில் நீங்களும் புகழ்பெறுவீர்” என்றார் அக்ரூரர் சிரித்தபடி.

அரண்மனை முற்றத்தை அடைந்ததும் அக்ரூரர் “நான் ஒருநாழிகைக்குள் சித்தமாகிவிடுவேன். நாம் இன்றிரவுக்குள் நகரெல்லை நீங்க முடியும்” என்றார். “ஆம், இரவே பாலையை கடக்கமுடிந்தால் நன்று” என்றான் திருஷ்டத்யும்னன். “பாலையில் ஓடும் திறன் மிக்க சோனகநாட்டுப்புரவிகள் உள்ளன” என்றபின் அக்ரூரர் தலைவணங்கி விடைபெற்றார். கிருதவர்மன் சாத்யகியிடம் “என் படைக்கலங்களை வந்து பாரும் யாதவரே” என்றபின் திருஷ்டத்யும்னனிடம் விடைபெற்றான்.

சாத்யகி புரவியை அழைத்துவந்தான். அவன் ஏறுவதை நோக்கி நின்ற திருஷ்டத்யும்னனை நோக்கி “வருக பாஞ்சாலரே” என்றான். தன் புரவியின் கடிவாளத்தைப்பற்றியதும் உடல் சிலிர்க்க திருஷ்டத்யும்னன் உள ஆழம் பதிவுசெய்திருந்த ஒரு கணத்தை மீட்டெடுத்தான். அக்ரூரரின் விழிகளில் மின்னி மறைந்த ஒன்று. அது என்ன? அவன் சாத்யகியை நோக்கினான். அவன் புரவி வால்சுழற்றி முன்னால்சென்றது. தொலைவில் துவாரகையின் பெருந்துறைமேடை நோக்கி திறந்த வாய்கொண்ட சிம்மநாகம் வளைந்து பரவிய உடலுடன் பீதர்நாட்டுப் பெருங்கலம் ஒன்று இதழ்குவித்து உதிரும் மலரென அணுகியது.

முந்தைய கட்டுரைகலாச்சார இந்து
அடுத்த கட்டுரைநியூஜெர்சி வரவேற்புரை -பி.கே.சிவக்குமார்