ஆண்மகன்

தினமும் வீட்டுக்கு வந்து குப்பையை எடுத்துச் செல்வார் ஒருவர். பெயர் கணேசன். ஒல்லியான சிரித்த முகம். கடுமையான குடியாளர். மாலை மயங்கினால் அதி உற்சாகமாக இருப்பார். நேருக்குநேர் பார்த்தால் ஓங்கி ஒரு சல்யூட் அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே பின்னால் வருவார். அப்போது ஆங்கிலம் மட்டுமே பேசப்படும். ஃபிகேசன் என்று சேர்த்துக்கொண்டால் எச்சொல்லும் ஆங்கிலமாகிவிடுமென அறிந்தவர்

வழக்கமாக வாசலில் ஏழரை மணிக்கே வந்து நின்று ‘அம்மா வேஸ்ட்!, வேஸ்ட் அம்மா!’ என்று கூச்சலிடுவார். ‘அம்மா உன்னை கணேசு கூப்பிடுறார்’ என்று சொல்லி அருண்மொழியிடம் கடும் வசவைப் பெற்றான் அஜிதன் ஒருமுறை. குப்பைகளைச் சேகரித்து மாநகராட்சிகுப்பை போடுமிடத்தில் கொண்டு போடுவது தொழில். மாதம் வீட்டுக்கு நூறு ரூபாய். எண்பதுவீடுகள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தன.

இதுபோகக் குப்பையில் கொஞ்சம் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தாகவேண்டும். ‘சும்மா குப்பையக் கொண்டாந்து போட்டா நமக்குக் கட்டுமா?’ என்று சத்தம்போடுவார். அதுதான் அன்றாடக் கைச்செலவுக்கு. கூடவே நண்பர்களுக்கும் வாங்கிக்கொடுக்கவேண்டியிருப்பதனால் செலவு அதிகம் ‘அவனுகளுக்கு ஸ்திரம் தொளிலு இல்லல்லா?’’ பழைய டிவியை போட்டோம். ’’இத சைக்கிளிலே வச்சுக் கொண்டுபோகமுடியாதுல்லா. வெள்ளம்குடிக்க அஞ்சு ரூபா குடுங்க’’ என்று வாங்கிக்கொண்டார்.

வாசலில் மணியோசையுடன் நின்றார் கணேசு. அருண்மொழி அலுவலகம் போய்விட்டிருந்தமையால் நான் சென்று ‘’என்ன கணேசு?’ என்றேன். ‘சார் சம்பளம்?’’ என்றார். நான் துணுக்குற்று ‘’அம்மா இருக்கிறப்ப வாறதுதானே?’’ என்றேன். ‘’மறந்துட்டேன் சார்.நீங்க குடுங்க…நூறுரூவாதானே’’ நான் ‘’எங்கிட்ட ஏது அவ்ளவு பணம் கணேசு. இருபத்தஞ்சுரூபாதான் இருக்கு’’ என்றேன். கணேசு நம்பாமல் பார்த்தார். ‘’சத்தியமா…அவ்ளவுதான் குடுத்திட்டுப் போனா…எனக்குவேற கூரியர் அனுப்பவேண்டிய செலவு இருக்கு’’

கணேசு முகத்தில் புன்னகை விரிந்தது. ‘’ஓக்கே சார்’’ என்று அடுத்த வீட்டுக்குச் சென்றார். அவரது சிரிப்பு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என்று பட்டதனால் நான் ஒல்லியான பின்பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன். திரும்பி வரும்வழியில் என்னைக் கண்டு சைக்கிளை நிறுத்திவிட்டு ‘’வீட்டில ஒற்றைக்கா சார்?’’ என்றார். ‘’ஆமா’’ என்றேன். ‘’வெளிய போகமுடியல்ல இல்லியா?’’ நான் அதற்கும் ‘’ஆமா’’ என்றேன்

’’ஒரு கணக்கில செரியாக்கும் உள்ள காசோ பணமோ நேராக் கொண்டுவந்து பொண்ணாப்பிறந்தவளுக்க கையிலே குடுத்துட்டோம்ணு சொன்னா வீட்டில ஒரு அடுக்கும் சிட்டையும் இருக்கும். அவளுக பாத்து வல்லதும் குடுத்தா நம்ம சிலவிலெயும் ஒரு இது இருக்கும். அல்லாமப்பின்ன நம்ம கையிலே ரூவா இருந்தா அப்பப்ப எல்லாம் மண்ணாப்போவும்’’ என்றார் கணேசு. ‘’உண்மைதான்’’ என்றேன்.

‘’அஞ்ஞூறு ரூவாண்ணா இண்ணைக்கு பெரிய ரூவா. ஆனா நிண்ணுகுடிச்சா ரெண்டு ஏப்பத்துக்கு வராது இல்லியா? காசில்லாதப்ப பலசெலவுகள். காசு கையில வந்தாச்சுண்ணு சென்னா பின்ன ஒற்ற ஒரு செலவாக்கும்’’ என்றார். நான் அதற்கும் பலவீனமாகப் புன்னகை புரிந்து ‘’பின்னே?’’ என்றேன். ’’பகலிலே குடிச்சா பின்ன சோலி முடிஞ்சுது. நான் செத்தாலும் காலம்பற பதினொண்ணு மணிக்குள்ள கையால தொட மாட்டேன். ஆனா நமக்கு அதுவரை நல்ல சோலி கிடக்கு. ஆனா சார் இப்டி வீட்டிலெ சும்மா இருந்தா மத்தவன் இருக்க விடமாட்டானே…வா வாண்ணுல்லா விளிப்பான்?’’

நான் பீதியுடன் ‘’ஆரு?’’ என்றேன். ‘’மத்தவன், சொடலமாடன்… என்ன செய்விய?’’ நான் வீட்டுக்குள் அச்சத்துடன் பார்த்தேன். சுடலை சஞ்சாரமா வீட்டுக்குள் ? கணேசே சிரித்தபடி ‘’என்ன செய்விய? பச்ச வெள்ளம் சவைச்சுக் குடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். அதில்லா பப்படம் எண்ணுகது மாதிரி ரூவாய எண்ணிக் குடுத்திட்டுப் போயிருக்கு அம்மா… செரி போவட்டும் வையும்பம் வந்தபிறவு எப்டி படியறுமா?’’ நான் ‘’குடுப்பாள்’’ என்றேன். ‘’அங்க விட்டிரப்பிடாது சார். சண்டையப் போட்டு வேங்கிப்பிடணும்..குடிக்காதவனுக்கு ஆயிரம் சந்தோசம் குடிக்கிறவனுக்குக் குடிதான் சந்தோசம். என்ன சொல்றியோ?’’

ஒருமாதிரி நிலமை எனக்குப் புரியவந்தது. ’’கணேசு நான் குடிக்கமாட்டேன்’’ என்றேன். ‘’செரி சார் நமக்குள்ள என்ன?’’ ‘’இல்ல சத்தியமா குடிக்கிறதில்ல’’ . ‘’செரிசார்..லெகரி ஆம்புளைங்களுக்குள்ளதாக்கும். அதில தெற்றில்லே கேட்டேளா? ஆனா ஒண்ணு, உள்ள வேங்கி வச்சுக் குடிச்சா குடி மண்ணா வெளங்கும்…சொல்லுகேன்னு தெற்றா நினைக்கப்பிடாது. இப்பம் திற்பரப்பு அருவியப் பாத்தா என்னா ஒரு கோலாகலம், ஏது? நூறடி இந்தால வந்தா ஆனைக்கயம் சும்மாக் கெட்டிக்கிடக்கு. அருவியப்பாக்கல்லா பாண்டி நாட்டிலே இருந்து கெட்டும் கெட்டி வாறானுக. ஆனைக்கயத்தில எருமை குண்டி களுவுது…என்ன சொல்லுகேண்ணா சொடலைன்னா அவன் எளகணும். மத்த பிராமணனுகளுக்க சாமி மாதிரி தேனத்திலே இருந்தா போராது. சாடினாலாக்கும் குருதைக்கு வெலை…இப்பம் சார் கள்ளன் கன்னம் வைக்குதது மாதிரி குடிக்குதிய. தெற்றுண்ணு சொல்ல வரேல்ல. கௌரவமுள்ள காரியமாக்கும். ஆனா நான் என்ன சொல்லுகேண்ணாக்க தீயிண்ணா அது நாலெடத்திலே பற்றிப்பிடிச்சு கேறி எரியணுமில்லியா? சும்மா நிண்ணா அத பிளாஸ்டிக்கு தாளுண்ணு நெனைச்சு பீயள்ள எடுத்துப்போடுவானுக… அதாக்கும்’’

நான் அயர்ந்து ‘’செரி…’’ என்று உள்ளே செல்லப் போனேன். ‘’இப்பம் நமக்கு சில போலீஸு தொந்தரவுகள் உண்டு கேட்டேளா? பதினஞ்சுநாள் டேசன்ல கையெளுத்துப் போட்டுக் குடுக்கணுமிண்ணாக்கும் ஏட்டு சொல்லுகாரு. நம்ம கோனாருதான். செரி போட்டும், நல்லாளு, அன்பா சொல்லுகாரு. அதுகொண்டு நான் காலம்பற வந்தேண்ணு இருக்காது. காசவேங்கி நாளைக்கு வச்சிருங்க. குடும்பப்பொம்பிளையள மாதிரி சார் இப்ப குடும்ப ஆம்புளையில்லா? சோலிக்குப் போக்கு இல்லேன்னு சொன்னாவ’’ ‘’ஆமா’’ ‘நல்லதாக்கும். சோலி என்ன மயிருக்கு? அம்மைக்கு சோலி இருக்குல்லா? செரி பைசாவ வேங்கி வைங்க.ஓக்கே?’’ ‘’நான் ஓக்கே’’ என்றேன்

‘’நல்ல காரியமாக்கும் சார். உள்ள பைசாவ குடுத்திட்டு அண்ணண்ணைக்குள்ள சிலவுக்கு வேங்கினா வீணாப்போவாது. காலம்பற உறங்கி எந்திருக்கும்பம் மனசில ஆவலாதி இருக்காது. உள்ள சோறு சிந்தாம செதறாம பிள்ளையளுக்க வயித்துக்குள்ள போவும்’’ என்றார். நான் ‘’அப்ப கணேசும் அந்தமாதிரி செய்தா என்ன?’’ என்றேன். ‘’சீ, சார் என்ன சொல்லுது? பொட்டைகள அப்டி ஏத்தி விட்டா பின்ன அவளுக்களுக்க காலுநக்கி குடிக்கணும் சார். பொட்டைகள வைக்கிற எடத்தில வச்சா ஆம்புள ஆம்புளயா இருப்பான். நாமள்லாம் ரைட்டுராயலு தாட்டுபூட்டு சிங்கப்பூருசார். என்னாண்ணு கேட்டாள்னா ஏரியாவ கலக்கிடுவேன்ல…நாளைக்கு சாம்ராஜை கூட்டிட்டுவாறேன், கேட்டுப்பாருங்க. ஒருமாதிரி மசக்கின கெளங்குமாதிரி இருக்கதுக்கு கணேசனைக் கிட்டாது… வரட்டா. பைசாவ வேங்கி வைங்க’’

முந்தைய கட்டுரைகூடங்குளம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆகும்பே பயணம் – வேழவனம்