மனித ஆயுதம்

ஈழப்போருடன் சம்பந்தப்பட்ட, இப்போது மறைந்துவிட்ட, ஒரு நண்பர் கடிதத்தில் எழுதினார் ‘மனிதனே மிகக்கொடுமையான ஆயுதம். ஏனென்றால் பிற ஆயுதங்கள் எவையும் வன்முறையை ரசிப்பதில்லை’ அந்த வரி நெடுநாள் மனதில் கிடந்தது. அதில் இருந்து இந்தக்கதை உருவானது, அவர் இறந்துவிட்ட சேதிகேட்ட நாளில். இந்தக்கதையின் பெரும்பாலான தகவல்கள் நான் நம்பகமானவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொண்டவை.

இலக்கியத்தின் பல்வேறு வகைமாதிரிகளில் எழுதிப்பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. ஏனென்றால் நான் எழுதுவது முக்கியமாக என் மனமகிழ்ச்சிக்காகவும் என்னுடைய அகஅறிதலுக்காகவும்தான். நான் வாசிக்கும் எல்லா வகை எழுத்துக்களையும் எழுத முயன்றிருக்கிறேன். காவியநாவல் முதல் அறிவியல்புனைகதைகள் வரை. நான் முயலாத ஒரு துறை திகிலெழுத்து. அவ்வடிவில் இந்தக் கதையை முயன்றுபார்த்தேன். ஆனால் வெறும் திகிலுக்காக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது இலக்கியம் அல்ல. இது அந்த வகையில் ஒரு முக்கியமான வாழ்க்கைப்பிரச்சினையை எழுதிப்பார்க்கிறது.

இந்நாவலில் ஈழப்போராட்டத்தின் காரணங்களை நான் ஆராயவில்லை. அவற்றை நான் மிகவிரிவாகவே கவனித்திருக்கிறேன். இந்நாவலின் பேசுதளம் ஒரு மனிதன் அப்பழுக்கற்ற ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது மட்டுமே. அத்தகைய ஒரு மானுட ஆயுதத்தின் அகம் எப்படிச்செயல்படுகிறது என்ற வினாவே இந்நாவல் முழுக்க விரிந்து வருகிறது. வன்முறையின் கணங்களில் மானுட மனம் கொள்ளும் பாவனைகள், அகநாடகங்கள் இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. நான் வன்முறையை அறிந்தவனே அல்ல. ஆனால் அவற்றை நான் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறேன். காரணம் மிக எளிது. வன்முறை நம் அனைவருக்குள்ளும் உள்ளது. வன்முறையை நிகழ்த்தும் வாழ்க்கை அமைந்தவன் வன்முறையாளன். அதற்கான வாய்ப்பு அமையாது அந்த சாத்தியங்களுடன் வாழ்பவர்களே பிறர். நாம் ஒவ்வொருவரும் அந்த கணங்களில் நம் ஆழத்தில் உள்ள வன்முறையை உணர முடியும்

இந்நூலில் ஈழத்தவர்களின் உரையாடலை நான் முழுமையாக அமைக்கவில்லை. அந்த அளவுக்கு அப்பேச்சு எனக்கு பழக்கமில்லை, நண்பர்களுடன் அளவளாவியதைத் தவிர. ஆகவே புனைகதையின் உத்தியைப் பயன்படுத்தி அந்த குறையை சமன் செய்துகொண்டேன். இந்நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரமும் தூய யாழ்ப்பாண வழக்கைப் பேசும் வாழ்க்கைநிலை கொண்டது அல்ல. தமிழகத்துக்கு வந்து தமிழ்பேச்சுமொழிக்கு ஏற்ப தங்கள் உரைமொழியை மாற்றிக்கொள்ள பலகாலமாக முயன்றவை. ஆகவே தமிழின் பொதுவழக்கு கலந்த யாழ்ப்பாணமொழியாக அவற்றின் பேச்சு அமைந்துள்ளது.

தமிழில் உளவியலின் கருவிகளை இலக்கியத்திற்கு பயன்படுத்திய முன்னோடி என இந்திரா பார்த்தசாரதியைச் சொல்லலாம். அவற்றை நான் பயன்படுத்தியதில்லை. என்னுடையது அந்தந்த தருணங்களில் என்னை வைத்துப்பார்ப்பது என்ற வழிமுறை. ஆனாலும் அச்சாத்தியக்கூறுகள் என்னை கவர்ந்துள்ளன. இந்த சிறு நாவலை நான் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்
[கிழக்கு வெளியீடாக வெளிவரும் உலோகம் நாவலின் முன்னுரை]

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – சந்திப்பு குறித்து
அடுத்த கட்டுரைகெ.எம் மாத்யூ