‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 2

அந்தப்பாதையையே அவள் அறிந்திருந்தாள். யமுனைவழியாக மதுராவுக்கு வந்து அங்கே ஏழுநாட்கள் தங்கி அங்கிருந்து மீண்டும் படகுகளில் ஏகசக்ரபுரிக்கு வந்து திரும்பி சர்மாவதிக்குள் நுழைந்து பன்னிரண்டுநாட்கள் சிறுபடகுகளில் பயணம் செய்து உஜ்ஜயினியை அடைந்தனர். அங்கிருந்து முப்பதுநாட்கள் நிலப்பயணத்தொலைவில் இருந்தது துவாரகை. அவள் அந்நகரை அதைப்போல எத்தனையோ முறை சென்றடைந்திருந்தாள்.

துவாரகைக்குக் கிளம்பும் செய்தியை ராகினி வந்து சொன்னபோது அவள் உவகையை உணரவில்லை. அச்செய்தியை முன்னரே அறிந்திருப்பதாகவே எண்ணினாள். கிளம்பி நெடுநாட்களாகியிருந்ததுபோல, காத்திருந்து சலித்ததுபோல. “என்னடி இது? உன் தவத்துக்குரியவனை காணப்போகிறாய்! முகத்தில் உவகையையே காணமுடியவில்லை?” என்றாள் ராகினி. நான் இனிமேல்தான் காணவேண்டுமா என்று அவள் எண்ணிக்கொண்டாள். ஒருமுகத்தை மட்டும் எண்ணி ஒரு பெயரை மட்டும் மூச்சென ஆக்கி இருப்பதன் பேரின்பத்தின்முன் அவன்கூட ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது. அவனைக் கண்டு என்னசெய்யப்போகிறேன்? நான் உனக்கென இருந்தேன் என சொல்வேனா? பெண்ணென நான் உணர்வதை அவனுக்கு எப்படி உரைப்பேன்? மூதன்னையரே, தெய்வங்களே, முன்னர் ஏதேனும் பெண் அதைச் சொல்லி ஆணுக்கு புரியவைத்திருக்கிறாளா என்ன?

துவாரகையின் பெருவாயிலுக்கான கால்கோள் நிகழ்கிறது என்று இளைய யாதவனின் திருமுகம் களிந்தபுரிக்கு வந்தது என்று அமைச்சர் சதபாதர் சொன்னார். யாதவப்பெருங்குடிகள் அனைத்துக்கும் செய்திசென்றிருக்கிறது என்று தெரிந்தது. அனைவரும் தங்கள் குலதெய்வமும் மூதன்னையரும் குடிகொண்ட நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து பட்டில் பொதித்து கொண்டுசெல்லவேண்டும் என்றும் கால்கோள்நாட்ட அகழும் குழிக்குள் அந்த மண்ணை இட்டு அதன்மேல் பெருவாயிலை எழுப்பவிருப்பதாகவும் துவாரகையின் செய்தியாளன் சொன்னான். யாதவகுலங்கள் அனைத்தும் தங்களால் முடிந்த சிறுசெல்வத்தையேனும் துவாரகைக்கு அளிக்கவேண்டும் என்பதும், யாதவர்களின் கொடையால் உருவானது என்றே அந்நகரம் அறியப்படவேண்டும் என்பதும் இளைய யாதவரின் விருப்பம் என்றான்.

யாதவர் அனைவருக்கும் பேருவகை அளித்த அழைப்பு அது. காடுகளிலும் இருநதிக்கரைகளிலும் யாதவ மன்றுகளெங்கும் அதுவே பேச்சாக இருந்தது. புதைக்கப்பட்டிருந்த பொற்குவைகள் வெளிவந்தன. ஒவ்வொருவரும் பிறகுடியினர் கொடுப்பதென்ன என்று அறிந்துகொள்ள முனைப்பெடுத்தனர். மறுதரப்பைவிட ஒருநாணயமேனும் கூடுதலாக இருந்தாகவேண்டும் என்று எழுந்தனர். ஒவ்வொருநாளும் துவாரகைக்கு யாதவர்களின் பொன் சென்றுசேர்ந்துகொண்டிருந்தது. அங்கே பொன்னை இடையளவுபெரிய குவைகளாக கூட்டி வைத்திருக்கிறார்கள் என்றனர் பயணம் முடித்து வந்த வணிகர். ஆனால் மலையளவு பொன்னிருந்தாலும் போதாதபடி பெரிய நகரம் அது. அது கட்டிமுடிந்தால் அங்கே யாதவர் வாழமுடியுமா என்பதே ஐயம்தான். விண்ணவர் மகேந்திரபுரியை உதறி அங்கே வந்துவிடுவார்கள் என்று இசைச்சூதர் பாடினர். வெண்மாடக்குவைகளின் நகரம். சுழன்று சுழன்று விண்தொடும் புரிவடிவம் கொண்டது. மண்ணில் அதற்கு நிகரென ஏதுமில்லை. விண்ணிலுள்ளதா என தெய்வங்களே சொல்லவேண்டும்.

யாதவகுலங்களின் தலைவர்கள் அனைவருமே கால்கோள்விழவுக்கு செல்லவிருப்பதாக செய்திவந்தது. மாலினி “உன் தந்தையும் செல்லாமலிருக்க மாட்டார். செல்லாதவர்கள் யாதவ குலங்களில் இல்லாதவராக ஆகிவிடுவார்கள்” என்றாள். சத்ராஜித் தன் உடைவாளை பட்டில் பொதிந்து இளையவனிடம் கொடுத்து துவாரகைக்கு அனுப்பி இரண்டாண்டுகாலம் ஆகியிருந்தது. கூர்மபுரியில் அரசர் கிருதாக்னி தன் மூன்று மைந்தர்களான சித்ரபானு, சித்ரரதன், பானுகோபன் ஆகியோரை வாளுடன் அனுப்பியிருந்தார். துவாரகையிலிருந்து இளைய யாதவன் அவர்களுக்கு வெண்பட்டும் முத்திரைமோதிரமும் அனுப்பி அணுக்கர்களாக ஏற்றிருந்தான். களிந்தகத்திலும் கூர்மபுரியிலும் பறக்கும் எழுகதிர்கொடியுடனும் மரங்கொத்திக்கொடியுடனும் துவாரகையின் கருடக்கொடியும் பறந்தது. ஆனால் சததன்வா மட்டும் துவாரகைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக செய்தி வந்தது. அவன் வடபுலக்காடுகளில் வேட்டைப்பயணம் சென்று விட்டதாகவும் பின்னர் காசிநாட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

கால்கோள்விழாவுக்கான திருமுகம் வந்த ஏழாம்நாள் சத்ராஜித் ஹரிணபதத்திற்கு வந்தார். மாலினியிடம் “பதிநான்குநாட்களில் நாம் துவாரகைக்கு கிளம்பவேண்டும். சித்தமாகுக!” என்றார். மாலினி திகைப்புடன் “நாம் என்றால்?” என்றாள். “நானும் நீயும் நம் குழந்தைகளும்” என்றார் சத்ராஜித். “பாமாவை அழைத்துச்சென்றாகவேண்டும்.” மாலினி “அவளையுமா? துவாரகை நெடுந்தொலைவு என்றார்களே?” என்றாள். “ஆம். அங்குசென்று சேர இரண்டுமாதமாகும்… நதிவழி சென்று பாலையை கடக்கவேண்டும்” என்றார். “ஆனால் யாதவர் அனைவருமே தங்கள் பெண்களுடன்தான் செல்கிறார்கள். தேவகர் தன் மைந்தன் தேவாபனுடன் தன் நான்கு மகள்களை அனுப்புகிறார். சதபதத்தில் இருந்து கிருதவர்மன் தன் ஏழு தங்கைகளுடன் செல்கிறான். குந்திபோஜரின் மகன் பத்ரசேனன் தன் நான்கு இளவரசிகளுடன் செல்கிறான்…”

மாலினி சிரித்து “துவாரகை பெண்களால் நிறைந்துவிடும்போலிருக்கிறதே” என்றாள். “இதோபார், துவாரகையின் அரசன் ஷத்ரியகுடியில் மணமுடிக்க விரும்புவான் என்பது உண்மை. ஆனால் யாதவர்களை பொறுத்தவரை அவன் மணக்கும் யாதவப்பெண்ணே அரசி. அதற்காகவே அத்தனை யாதவகுடிகளும் போட்டியிடுகிறார்கள். என் மகளுக்கு நிகராக யாதவகுடிகளில் வேறெந்த பெண் இருக்கிறாள்? அவள் அரசியானால் அதைவிட நான் அடையும் வெற்றி என்ன?” மாலினி புன்னகைசெய்து “யாதவர்களின் ஒற்றுமையைப்பற்றி மன்றுநின்று என் மகள் பேசியபோது நீங்கள் உளமுருகி அதை ஏற்றுக்கொண்டதாக இங்கே பேசிக்கொள்கிறார்கள். உங்களுக்குள் ஓடியது இந்தக் கணக்குகள்தான் என நான் அப்போதே அறிந்தேன்” என்றாள்.

“ஆம், கணக்குகள்தான். அதை உடனே இளையவனிடம் சொல்லவும் செய்தேன். நாம் நேற்றுவரை மதுராபுரியின் சிற்றரசர்கள். நாளை துவாரகைக்கு சிற்றரசர்கள். ஆனால் நம் மகளை இளைய யாதவன் மணந்தால் நம் நிலை அரசமாதுலனுக்குரியது. துவாரகை பாரதவர்ஷத்தின் தலைநகராக ஆகும் என்று நிமித்திகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் என் ஆணைக்குக் கீழே பாரதவர்ஷம் வரக்கூடும். அதை நான் ஏன் தவிர்க்கவேண்டும்?”

மாலினி சிரித்தபடி எழுந்து “அவ்வாறே நடக்கட்டும். துவாரகைக்குச் செல்வதை சிறியோள் விரும்புவாள். இத்தனைநாள் அவள் செய்த தவம் இவ்வண்ணம் நிறைவுகொண்டதே” என்றாள். பாமையிடம் “அணிகளையும் ஆடைகளையும் எடுத்து வைத்துக்கொள்ளடி. அங்கே நீ களிந்தகத்தின் இளவரசியென செல்லப்போகிறாய்” என்றாள். மஹதி “அங்கு வருபவர்கள் அனைவரும் இளவரசியரே அரசி” என்றாள். மாலினி “நாம் அவர்களைவிட ஒருபடி மேல். கேள், யாதவச்சிற்றரசர்களில் துவாரகைக்கு முதன்மைப்பங்களித்தது களிந்தகம்தான். அதை அங்கே அவையில் இளைய யாதவரே அறிவித்ததுமன்றி, நன்றி சொல்லி திருமுகமும் அனுப்பியிருக்கிறார்” என்றாள் மாலினி. “அங்கே துவாரகையின் அரசப்பெருவீதியில் யாதவர்களின் குலத்தலைவர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் மாளிகைகள் அமைக்கப்படுகின்றன. நகர்நடுவே அமைந்திருக்கும் மூன்றடுக்கு குவைமுகடுகள் கொண்ட மாளிகை களிந்தகத்திற்கு என்றார்கள்.”

மஹதி சிரித்துக்கொண்டே “அரசி, இன்னமும் நகரே அமையவில்லை. கால்கோளுக்குத்தான் நம்மை அழைத்திருக்கிறார்கள்” என்றாள். “நகர் அமைகிறது என்றார்களே?” என்று மாலினி கேட்டாள். “ஒருநகரை அமைப்பதென்பது எளிதா என்ன? அதற்கு பல்லாண்டுகளாகும்… ஒருவேளை நம் வாழ்நாளுக்குள் நாம் துவாரகையை காணமுடியாமலுமாகும்” என்று மஹதி சொன்னாள். “நாம் கண்டால்தானா? நம் மைந்தர் விழிகளும் நமதுதானே?” என்றாள் மாலினி. ”யாதவர்களுக்கு இதற்கு நிகரான சிறப்பு முன்பு வந்ததுண்டா தோழி? கார்த்தவீரியரின் நகர்கூட இதை பார்க்கையில் சிறியதல்லவா?”

ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவுவரை பயணத்திற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்தன. நீர்புகாத பெட்டிகளில் ஆடைகளும் அணிகளும் அடுக்கப்பட்டன. தோல்பைகளில் உலருணவுகள். துவாரகைக்கான பரிசுப்பொருட்களை பன்னிரண்டு பெட்டிகளில் அடுக்கினர். செல்லும் வழியிலிருக்கும் மச்சநாடுகள், நிஷாதநாடுகளின் வழியாக கடந்துசெல்வதற்கான ஒப்புகையை தூதர்கள் பெற்றுவந்தனர். ஏகசக்ரபுரியிலும் உஜ்ஜயினியிலும் தங்கிச்செல்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. ஒவ்வொன்றிலும் நேரம் பிந்தியது. ஒரு சிறு சிக்கலேனும் இல்லாமல் ஒன்றும் நடந்தேறவில்லை. காலை எழுந்ததும் பதற்றமேற்படுத்தும் ஒரு செய்தியேனும் வந்திருந்தது. உச்சிவேளைக்குள் அது அவிழ்ந்து உவகை ஏறியது. மாலை மேலுமொரு சிக்கல் வந்து சேர்ந்தது.

மாலினி ஓயாமல் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அந்தப்பதற்றத்தை அவள் விரும்புவது தெரிந்தது. “என்ன செய்வேனடி? செல்வதற்குள் அஞ்சி அஞ்சி நான் உயிரிழந்துவிடுவேன் என்றல்லவா படுகிறது” என்றாள். களிந்தகத்திலிருந்து தன் இளையாள்களான சித்ரையும் பத்மையும் அரசருடன் வருவதை அவள் அறிந்திருந்தாள். “அவர்களுக்கு அரசமுறைமை தெரியலாம். அணிசெய்யத் தெரியலாம். ஆனால் அவர்கள் என்னதான் இருந்தாலும் போஜர்கள். நான் விருஷ்ணிகுலத்தவள். விருஷ்ணிகுலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் மகள் என்று நான் சொல்லும்போது துவாரகையில் எனக்குத்தான் முதன்மை இடம் இருக்கும். என்ன சொல்கிறாய்?” என்றாள். “ஆம் அரசி” என்று சொன்ன மஹதி திரும்பி ராகினியை நோக்கி புன்னகைசெய்தாள்.

அந்தப் பதற்றங்களுக்கெல்லாம் அப்பாலிருந்தாள் பாமா. அவளுக்கு அவர்கள் பயணம்செய்வதே புரிந்திருக்கவில்லை என்று மாலினி ஐயப்பட்டாள். “என்னடி இது? உன் ஆடைகளை எடுத்து வைக்கவில்லையா? உனக்கான அணிப்பொருட்களை எடுத்துவைத்துவிட்டோம். அதை ஒருமுறை சீர்நோக்கிவிடு… ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றாள். பாமா கனல்காய்ந்த விழிகளுடன் நோக்கி “ஆம்” என்றாள். “என்ன ஆம்? என்ன சொல்கிறாய் என்றாவது தெரிகிறதா?” என்றாள். மஹதி சிரித்தபடி “மன்றேறினால் அரசி. இல்லம் திரும்பினால் மையல் கொண்ட பிச்சி. நமக்கு இளவரசியரே பலர் இருக்கிறார்கள் அரசி” என்றாள்.

இளையோர் சத்யசேனையும் சித்ரபானுவும் எங்கு செல்கிறோம் என்றறியாமலேயே பயணத்தின் உவகையில் ஆடிக்கொண்டிருந்தனர். “சொல்லு கண்ணே எங்கே செல்கிறோம்?” என்றாள் மூதன்னை சாந்தமதி. “மதுராவுக்கு!” என்று சத்யசேனை சொன்னாள். “அங்கே யானைகள் மேய்ந்துகொண்டிருக்கும்!” என்று கையைத்தூக்கி விழிகளை விரித்தாள். அவள் கையைத் தட்டி முன்னகர்ந்து சித்ரபானு திக்கித்திக்கி சொன்னாள் “அது அது அது பெரிய காடு… சிம்மமும் புலியும் யானையும்…” மூதன்னை “இதெல்லாம் ஒருவரே. அவரை இளைய யாதவர் என்கிறார்கள்” என்று சிரித்தாள்.

ஆனால் மூதன்னையர் இருவருக்கும்கூட அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது உள்ளத்தில் பதிந்திருக்கவில்லை. மஹதியிடம் சாந்தமதி தாழ்ந்த குரலில் தனியாக ”நான்கு நாட்களில் வந்துவிடுவார்களல்லவா?” என்று கேட்டாள். மஹதி சிரித்தபடி “நான்கு வருடமாகும் அன்னையே. வரும்போது இளவரசியின் கைகளில் குழந்தை இருக்கும்” என்றாள். “குழந்தையா? யாருடைய குழந்தை?” என்று மூதன்னை அம்சுமதி கேட்டாள். மஹதி சிரித்தபடி “இளைய யாதவரின் குழந்தை” என்றாள். “அவருடைய குழந்தையை ஏன் நம்மிடம் விட்டு வளர்க்கிறார்கள்? கம்சன்தான் செத்துவிட்டானே?”

படகில் ஏறும்போது அவளுக்கு ஓர் உள எழுச்சி ஏற்பட்டது. அதே யமுனையில் அதே படகில் அவள் பலமுறை முன்னரும் ஏறியிருந்தாள். உடல் மெய்ப்பு கொள்ள திரும்பி மறுபக்கம் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த படகுக்காரர்களை, கொடிகளின் படபடப்பை, பாய்கள் காற்றில் உப்பி கொடிமரத்தை அறைந்து துடித்ததை நோக்கினாள். “சென்றுகொண்டிருக்கிறோமடி. துவாரகைக்கு… அய்யோ நான் இறந்துவிடுவேன் போலிருக்கிறதே” என்று ராகினி சொல்லி அவளை இறுக கட்டிக்கொண்டாள். அவள் கைகள் மேல் கைவைத்து “ஆம்” என்று பாமா சொன்னாள். “உனக்கென்ன சற்றும் உவகை இல்லையா? ஏனடி நடிக்கிறாய்?” என்றாள் ராகினி. “இல்லை” என்றாள் பாமா. “என்ன இல்லை? ஆணவம் கொண்டவளடி நீ. உவகையை காட்டினால் உன் தலைதாழுமென நினைக்கிறாய்.” பாமா புன்னகைசெய்தாள்.

இருமருங்கும் ஓடிய காடுகளை, மேலே எழுந்து பின்னால் ஒழுகிய முகில்குவைகளை, கசிந்தூறி அலைகள் மேல் ஆடிய ஒளியை, பாசிமணத்துடன் படகுவிளிம்பை அறைந்த காளிந்தியின் அலைகளை அவள் நன்கறிந்திருந்தாள். படகுவிளிம்பில் அமர்ந்து விழியே அவளாக நோக்கிக்கொண்டிருந்தாள். தாழ்வாகப் பறந்து தன் நீர்ப்பாவை மேல் அமர்ந்தது வெண்நாரை. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாரையாக வந்தமைந்தன. கழுத்தை நீருக்குள் முக்கி எழுந்து சிறகு சிலிர்த்து உதறிக்கொண்டன. நீருள் தெரிந்த வானில் அவை தலைகீழாக தொங்கிக்கிடந்தன. ஆழத்தில் முகில்கள் மெல்ல அசைந்தோடின. நீரைக்கிழித்த படகுக்குப்பின்னால் நீர்வடு தோன்றி விரிந்து சென்று இரு அலைகளாகி பரவியது.

இருண்டது பொழுது விண்மீன்கள் கனிந்து சொட்டத் துளித்தன. நிலவு வந்து முகில்களை மெல்ல வகுந்து சென்றது. காற்றில் புடைத்த பாய்கள் கயிறுகளை முனகச்செய்தன. விடிவெள்ளி விழிதிறந்தது. கிழக்கில் செங்காந்தள்கள் சிதறிப்பரந்தன. சரக்கொன்றைக்கூட்டமென முகில்கள் பொன்னொளி கொண்டன. கதிர் விரிந்து நீரலைகள் நூறாயிரம் வாள்முனைகளென ஒளிகொண்டன. கரையோரக் காடுகள் பறவைகளை வானில் தொடுத்து நீர்ப்பரப்பின் மேல் எய்தன. நிழல்களாடிய நீர்ப்பரப்பில் அவள் நோக்கி நோக்கி திரட்டிய நீலப்பெருமுகம் புன்னகைத்தது. ஊடி அழிந்து ஒளிந்து நோக்கி நகைகூடி மீண்டுவந்தது.

ஏகசக்ரபுரியில் மேலும் யாதவகுலங்கள் வந்திருந்தன. போஜர்குலத்து சக்ரவாகக் குடியினரும் சார்ங்க குடியினரும் அவர்கள் தங்கிய கூடாரத்திற்கு அருகிலேயே கூடாரமிட்டிருந்தனர். முந்தையநாள்தான் மார்த்திகாவதியின் படகுகள் சென்றன என்றார்கள். அவர்களுடன் குக்குரர்களின் எட்டு படகணிகளும் வந்தன. ”படகுக்குள் இருந்துகொள் பாமா. உன்னைப் பார்க்கவே அத்தனை விழிகளும் துடிக்கின்றன” என்றாள் மாலினி. குக்குரகுலத்தைச் சேர்ந்த நான்கு இளவரசிகள் முழுதணிக்கோலத்தில் சிறுபடகு ஒன்றில் ஏறுவதை பாமா கண்டாள். அவர்களும் திரும்பி அவளை நோக்கினர். நால்வர் விழிகளிலும் எரிந்தணைந்த கனலைக் கண்டு அவள் படகறையின் பலகணியிலிருந்து விலகிக்கொண்டாள்.

“உன்னைக் கண்டால் அவர்களது கனவுகளின் உவகை அணைந்துவிடும் பாமா. அதை அவர்கள் துவாரகை வரையாவது நுகரட்டுமே” என்றாள் மஹதி. ராகினி அவள் தோளைத்தொட்டு “ஒருமுறை கூடாரங்களை சுற்றிவந்தேன் பாமா. பதினெட்டு யாதவப்பெண்களை பார்த்தேன். அத்தனைபேரும் பட்டும் மணியும் அணிந்திருக்கிறார்கள். அனைவருமே அழகிகள். ஆனால் உன் முன் வைரத்துடன் வைத்த வெறும்கற்கள்” என்றாள். பாமா அவளை வெறும் விழிகளுடன் நோக்கி பொருளின்றி தலையசைத்தாள்.

உஜ்ஜயினியில் ஹேஹயகுலத்தில் எஞ்சிய ஏழுகுடியினரை அவர்கள் கண்டார்கள். கார்த்தவீரியனை பரசுராமர் வென்று அழித்தபோது சிதறிப்போனவர்கள். விந்தியனைக் கடந்து தண்டகாரண்யத்தின் ஓரங்களில் ஊரமைத்துக்கொண்டிருந்தனர். பிற யாதவர்களுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. வராகர், பிலக்‌ஷர், சத்வர், போகர், விரஜர், சூரர், மித்ரர் என்னும் ஏழு குடியினரும் ஒருவரை ஒருவர் காண்பதே அரிது என்றனர். தண்டகாரண்யம் மிகப்பெரியது. கோடையில் வறண்டுபோவதென்பதனால் அவர்கள் வருடம்தோறும் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். அவர்களின் ஊர்கள் தோல்கூடாரங்களாக அத்திரிகளின் முதுகிலேயே இருந்தன. அவர்கள் கம்சனைப்பற்றி கூட அறிந்திருக்கவில்லை என்று மஹதி சொன்னாள்.

“ஆனால் கார்த்தவீரியரின் பெயர் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இவர்களை இளைய யாதவர் எப்படி கண்டடைந்தார்? எப்படி திரட்டினார்?” மாலினி “இவ்விழாவுக்குப்பின் பாரதவர்ஷத்தின் அத்தனை யாதவர்களும் ஒன்றாக இருப்பார்களென்றல்லவா தோன்றுகிறது?” என்றாள். அவள் அதை நுணுக்கமான அரசியல் கருத்தாக சொல்லி மஹதியின் முகத்தைப்பார்க்க அவள் இயல்பாக இருந்ததைக் கண்டு ராகினியை பார்த்தாள். அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள். மாலினி சினத்துடன் “எத்தனை குலங்கள் வந்தாலும் அனைவரும் விருஷ்ணிகளுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்…” என்றாள். “கட்டுப்பட வைக்கவேண்டும்” என்றாள் மஹதி. ராகினி சிரித்துவிட்டாள்.

அவள் ஏன் சிரிக்கிறாள் என்று புரியாத மாலினி திரும்பி பாமையை நோக்கி “இவள் ஏன் மண்சிலை போல இருக்கிறாள்?” என்றாள். “இளவரசி இவ்வழிகளில் முன்னரே வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்” என்றாள் ராகினி. மாலினி அச்சமடைந்து “இவ்வழியிலா? இவளா?” என்றபின் ”அணங்கு கூடியிருக்குமோடி?” என்றாள். “அணங்குதான் அரசி, துவாரகைக்குச் சென்றதும் கலைந்துவிடும்” என்றாள் மஹதி. மாலினி மீண்டும் நோக்கியபின் “இவளை உள்ளேயே இருக்கச்சொல். அந்த இரட்டைப்பேய்கள் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் குரங்குகள் அல்லவா வந்து பிறந்திருக்கின்றன” என்றாள்.

உஜ்ஜயினியிலிருந்து மூடுவண்டிகளில் பாலைநிலம் வழியாக சென்றார்கள். பன்னிரண்டு யாதவகுடிகள் ஒன்றாக காவலர்களுடன் சென்றபோது படைப்பிரிவு ஒன்று செல்வது போலவே இருந்தது. நடுவே சென்ற வண்டியிலிருந்து சிறுசாளரம் வழியாக நோக்கிய ராகினியால் இருமுனைகளையும் பார்க்கமுடியவில்லை. பாமா இருபக்கமும் முட்புதர்கள் விரிந்து அலையலையாக எழுந்துசென்று வெறுமை படர்ந்த குன்றுகளைச் சென்றடைந்த பாலைநிலத்தை நோக்கி விழிவிரித்து அமர்ந்திருந்தாள்.

இரவில் விண்மீன்கள் கனல்துண்டுகள் போல எழுந்து வந்தன. சிறிய குட்டைகளில் நீருக்காக நின்றபோது அவை ஆழத்தில் விழுந்துகிடப்பதை காணமுடிந்தது. புரவிகளின் மணம் பெற்ற செந்நாய்கள் தொலைவில் ஊளையிட்டன. முட்புதர்களில் கிழிபட்ட காற்று சீறிக்கொண்டிருந்தது. ”இத்தனை தொலைவில் ஏனடி நகரை அமைத்தார் இளைய யாதவர்?” என்றாள் மாலினி. மஹதி “சிம்மம் துரத்தினால் கணக்குபார்த்தா மரத்தில் ஏறுவார்கள்?” என்றாள். புரிந்துகொள்ளாதவளாக “ஆமாம்” என்றாள் மாலினி. ராகினி சிரித்துக்கொண்டே வேறுபக்கம் திரும்பினாள்.

கூடாரம்கட்டி தங்கியிருந்த சிறுசோலையிலிருந்து வெள்ளி முளைத்ததும் கிளம்பி இளவெயில் பொழிந்துகொண்டிருந்த முதுகாலை நேரத்தில் அவர்களின் சகடநிரை துவாரகையை அணுகியது. பெரிய மணற்குவைகள் இருபக்கமும் சூழ்ந்திருக்க அவற்றின் சரிவில் மெல்லிய தோலில் தழைந்த மணிமாலைகள் என தெரிந்த குதிரைக்காலடிகளை நோக்கியபடி அமர்ந்திருந்த பாமா தொலைவில் எழுந்த குரல் முழக்கம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். மணல்சரிவுக்கு அப்பாலிருந்து எழுந்து வந்த துவாரகையின் தோரணவாயிலைக் கண்டதும் பாமா மீண்டும் உடல் விதிர்த்தாள். அதை அவள் அத்தனை அணுக்கமாக பலமுறை கண்டிருந்தாள். வண்டி நெருங்கிச்செல்லச்செல்ல அவள் கழுத்தில் விழும் மாலை என மலர்ச்செதுக்குகளுடன் சிற்பங்களுடன் அது அணுகிவந்தது. அதன் மேலிருந்த பெரிய கந்தர்வனின் விழிகளை, உச்சரித்து உறைந்த உதடுகளை நோக்கியதுமே அவளுக்குத்தெரிந்துவிட்டது. அது அவள் இளமைமுதலே கனவில் கண்ட அதே நகரம்.

அது இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை எந்த வியப்புமில்லாமல் அவள் எண்ணிக்கொண்டு சென்றாள். தோரணவாயிலை ஒட்டிய பெருங்கோட்டைக்கு அடித்தளம்தான் இட்டிருந்தனர். சுங்கமாளிகைகள் எளிய மரக்கட்டடங்களாக இருந்தன. கற்பாளங்களிட்ட சாலைக்கு இருபக்கமும் விழுதூன்றி கிளைபரப்பி நிழல்விரித்து ஓங்கித்தழைத்து நிற்பதாக அவள் கண்ட வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் ஆளுயரமான மெலிந்த சிறுமரங்களாக தளிர்த்திருந்தன. சாலையின் இருபக்கமும் விழிதொடும் தொலைவு வரை மாளிகைகளுக்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. அவள் ஆயிரம் முறை கண்டிருந்த அந்நகரம் மண்ணின் கருவறைக்குள் இருந்து முழுமையாக வெளிவந்திருக்கவில்லை.

நகருக்குள் இரண்டு வரிசைகளாக பயணிகள் நுழைந்துகொண்டிருந்தனர். அத்திரிகளும் பயண வண்டிகளும் ஒரு நிரையாகவும் எடைமிக்க பொதிவண்டிகள் இன்னொரு நிரையாகவும் ஒன்றோடொன்று முட்டி தேங்கி பின்பு நெகிழ்ந்து முன்னகர்ந்து மீண்டும் தேங்கி சென்றன. வெயில் கண்கூசும்படி எரியத்தொடங்கியிருந்தது. நீள்நிழல்கள் நோக்க நோக்க சுருங்கி தங்கள் பொருட்களை நோக்கி சென்றன. அத்திரிகளும் மாடுகளும் இட்ட சாணி வெயிலில் காய்ந்த மணம் புழுதிமணத்துடன் கலந்து எழுந்தது. பணியாட்களின் குரல்களை வெயில் அழுத்தி மூடியிருந்தது. நீருக்குள் என அவை ஒலித்தன.

அப்பால் நகர்விளிம்பு சரிந்திறங்கிய இடத்தில் அலைத்த கடல் வழியாக படகுகளில் வந்த பளிங்குத்தூண்களுக்கான உருளைக்கற்களும், பளிங்குப்பாளங்களும் சகட உருளைகள் மேல் ஏற்றி உருட்டப்பட்டு அத்திரிகளால் இழுத்துவரப்பட்டன. வியர்வை வழியும் கரிய உடல்களுடன் பல்லாயிரம் பணியாட்கள் அங்கெலாம் தசைநடனமென பணியாற்றிக்கொண்டிருந்தனர். காரிரும்பாலான நெம்புகோல்களை அழுத்தி கற்களைப்புரட்டிய யானைகள் மேலிருந்து ஆணையிட்டனர். அசைந்து நகர்ந்து தங்கள் இடங்களில் சென்றமைந்த பெரும்பாளங்களுக்கு அருகே நின்று கழி செலுத்தினர். எடை எடை என சொல்லியபடி அசைவிழந்து கிடந்த கற்பாளங்களுக்கு அடியிலிட்டு கட்டி இரும்பு உருளைகளுடன் பிணைக்கப்பட்ட கயிற்றை இழுத்த காளைகளை கூவி ஓட்டினர்.

ஈச்சஓலையால் செய்த பெருங்குடைகளை நட்டு அவற்றின் நிழலில் நின்ற சிற்பிகள் வண்ணக்கொடிகளை கைகளில் ஏந்தி ஆட்டி ஆணைகளை இட்டனர். ஆணைகளை ஏற்று முரசுகள் முழங்க நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தாளத்திற்கு ஏற்ப எடை இழுத்தனர். மூச்சுடன் கலந்த கூச்சல்கள் தாளத்தின்மேல் படிந்தன. ஒன்றெனத் திரண்டு தசையலைகளாக ஆயின மானுட உடல்கள். அவர்களின் விசையில் அசைந்த கற்பாளங்களும் தூண்களும் அந்தத் தாளத்தை அடைந்தன. அத்திரிகள் யானைகள் கழுதைகள் அனைத்திலும் ஏறிக்கொண்டது தாளம். உயிர்நடனம், கல்நடனம்.

எங்கும் மானுடர். எத்தனை பணியாளர்கள்! சுமை கொண்டுவந்த கழுதைகளுடன் நடந்தனர். சுண்ணம் அரைத்தனர். மணல் அரித்து அள்ளிக்குவித்தனர். கற்களைப் புரட்டி வைத்தனர். செங்கற்களை சுமந்து அடுக்கினர். கல்தொட்டிகளில் நீர் தேக்கினர். சரிந்துகிடந்த பெருங்கற்கள் மேல் அமர்ந்து ஓரங்களை கூடத்தால் அறைந்தனர். பணிநடந்த கட்டடங்களுக்கு மேலே அளவைக் கழிகளுடனும் கோல்மட்டங்களுடனும் நின்று பணியாற்றினர். அவர்களை நோக்கி பெரிய உருளைகளில் கட்டப்பட்ட தோல்பட்டைகளுடன் இணைக்கப்பட்ட கலங்கள் குழைத்த சுண்ணமணல்சாந்துடன் மணிமாலை என ஓடிச்சென்றன. சுண்ணத்தின் மணம். இரும்புக் கரண்டியால் அரிந்து அள்ளப்படும் சாந்தின் குழைவுடன் குழைந்தது உள்ளம். அந்த ஒலியை அவள் கன்னத்தின் கழுத்தின் தோலே அறிந்தது. அரிபட்ட சாந்தின் பரப்பின் மென்மையில் மிகமிக அண்மையான ஏதோ ஒன்று இருந்தது.

விழிகள் தொட்டுத்தொட்டுச்செல்லும் ஓட்டத்தில் ஒட்டுமொத்தமாக நோக்கி ஒரு கணம் அசைவிழக்க ஓவியத்திலென ஒவ்வொருவரும் உறைந்து மறுகணம் மீண்டனர். அந்நகரத்தின் உடலென யானைகளும் அத்திரிகளும் கழுதைகளும் மானுடரும் மாற அது தன்னைத்தானே கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. “எத்தனை பெரிய நகரமடி” என்று ராகினி வியந்தபோது அவள் திரும்பி பொருளற்ற விழிகளால் நோக்கினாள். ”கால்கோளிடுவதாகத்தான் சொன்னார்கள். நகரம் கட்டிமுடிக்கப்படும் நிலையில் அல்லவா உள்ளது?” என்றாள் மாலினி. அருகமர்ந்திருந்த மஹதி “கால்கோள் அந்தப் பெருவாயிலுக்குத்தான் என்றார்கள்” என்றாள். “வடக்குப் பெருவாயிலே அத்தனை பெரிதாக இருக்கிறது. அதன் காவல்பூதத்தின் காலடி நம் தலைக்குமேல் சென்றுவிட்டது” என்று மாலினி சொன்னாள். “அதன் முகப்பிலிருக்கும் சிற்பம் விருஷ்ணிகளின் மூதன்னை”.

சுங்கக்காவலர் அவர்களின் வண்டிகளை பிரித்து அனுப்பினர். சுழன்று மேலேறத்தொடங்கிய சாலையில் பல இடங்களில் கற்பாளங்களைப் பதிக்கும் பணி நிகழ்ந்துகொண்டிருந்தது அவர்களை நோக்கி புரவியில் வந்த ஒருவன் நின்று “களிந்தகத்திலிருந்து வரும் அணிநிரையா? துவாரகைக்கு வருக!” என்றான். பிரசேனர் “யாதவபுரிக்கு வந்ததில் மகிழ்வடைகிறோம் வீரரே. எங்களுக்குரிய தங்குமிடம் ஏதென்று சொல்லமுடியுமா?” என்றார். “இங்கு மாளிகைகள் அனைத்தும் கட்டப்படும் நிலையிலேயே உள்ளன அரசே. மதுரா, உத்தரமதுரா, மார்த்திகாவதி. சதபதம், கூர்மபுரி, களிந்தகம், மதுவனம் என்னும் ஏழு குறுநில மன்னர்களுக்கும் ஏழு மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நான்காவது சாலைவளைவில் கொற்றவை ஆலயத்தருகே…” என்றபின் “வழிகள் இன்னும் அமையவில்லை. நான் ஒரு ஏவலனை உடன் அனுப்புகிறேன்” என்றான்.

பாமா தலை நீட்டி “நான் வழியை அறிவேன் கிருதவீரியரே” என்றாள். கிருதவீரியன் அருகே வந்து “தங்களை நான் பார்த்ததேயில்லை இளவரசி” என்றான். “நீங்கள் ஸினியின் மைந்தர். துவாரகைக்கு ஓராண்டுமுன் வந்து இளைய யாதவரின் அணுக்கராக இருக்கிறீர்கள். நான் நன்கறிவேன்” என்றாள். “மேலே செல்லும் வழி…” என கிருதவீரியன் சொல்லத் தொடங்கியதும் ”இவ்வழியாக வலப்பக்கம் திரும்பினால் கஜமுகனின் சிற்றாலயம். சாலை மூன்றுமுறை சுற்றி இடப்பக்கம் வளையும்போது அமைச்சர்களுக்கான இல்லங்கள். மறு எல்லையில் அரண்மனைகள். அவற்றுக்கு அப்பாலுள்ளது கொற்றவை ஆலயம். சரிதானே?” என்றாள். “ஆம் இளவரசி. தாங்கள் எப்போது இந்நகருக்கு வந்தீர்கள்?” என்றான் கிருதவீரியன். பாமா புன்னகை புரிந்தாள்.

கிருதவீரியன் திகைப்புடன் பிற முகங்களை நோக்கிவிட்டு தலைவணங்கினான். வண்டிகள் நகர்ந்ததும் வியப்புடன் “இதையெல்லாம் எப்படி அறிந்தாயடி?” என்றாள் மாலினி. பாமா அதற்கும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

முந்தைய கட்டுரைவந்து சேர்ந்தேன்
அடுத்த கட்டுரைசக்ரவாளம்