ரதம் – சிறுகதை

 

டெல்லியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்குக் கடற்கரையோரமாக கல்லாலான பெரிய ரதம் ஒன்று நிற்கிறது. நிலவு நிரம்பிய இரவொன்றில் பளபளத்து நெளிந்த திரவவெளியை விலக்கியபடி தன் நுனி மூக்கை அது நீட்டியது. செவிகளைத் திருப்பி ஒலி கூர்ந்தது. பின்பு அலைகள் விரிய மணற்கரை விண்டு சரிய, பிளந்தெழுந்து பிளிறியபடி கரைநோக்கி வந்தது. கரிய உடலில் வழுக்கி கடற்பாசிகள் வழிந்தன. நண்டுகள் பிடி தளர்ந்து உதிர்ந்தன. மணலை நெரித்துச் சக்கரங்கள் ஓசையிட்டன. திடீரென்று கடலுக்கு அப்பாலிருந்து வந்த மவுனமானதொரு கட்டளைக்குப் பணிந்து அது நின்றது. அதன் ஒவ்வொரு பருவும் முழுமையான அசைவின்மையில் உறைந்தன. பொட்டல்வெளியும் மணற்கரையும் விரித்த வெறுமையில் தனிமையாக நின்றது. அதைச் சுற்றிக் கடற்காற்று கிழிபட்டுப் படபடத்தது.

பறக்கும் தொப்பிகளை அழுத்தியபடி, உடைகளை இடுக்கியபடி பயணிகள் வண்ண வண்ணமாக வந்திறங்குகிறார்கள். ரத்பூர் ரயில் நிலையம் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது. பெரிய கற்தளத்தில் டிராலிகள் தடதடக்கும் ஓசை இறங்கிய உடனே உங்களில் ஒரு சிறு அமைதியின்மையை குடியேறச் செய்கிறது. வாசலில் தரகர்களும் விபச்சாரிகளும் கைடுகளும் சிறு வியாபாரிகளும் மொய்த்துக் கொள்கிறார்கள். சுமை தூக்கிய போர்ட்டர்கள் அதட்டுகிறார்கள். கரிய குழந்தைகள் காலில் விழுந்து மழலையில் பிச்சை கேட்கின்றன. மதுபான விடுதிகள், விளம்பரத் தட்டிகள், நீலத்திரைப்படச் சாலைகள், கலைப் பொருள் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், தெருப்பாடகர்கள், புகைப்படக்காரர்கள், ஒலி பெருக்கிகளின் வழியாக ஆயிரம் இந்திப் பாடல்கள் கலந்த பேரோசை உங்கள் அடிவயிற்றைத் தாக்குகிறது. கடலின் குளிரை அள்ளித் தெளிக்கிறது காற்று. பயணிகள் முகங்களில் உப்பு படர்கிறது. மார்பை உந்தியபடி தள்ளாடியபடி நடக்கிறார்கள். பாதி வானம் வரை தூக்கிக் கட்டிய நீலப்படுதா போல கடல் தொ¢ய ஆரம்பிக்கிறது. ரயிலில் இருந்து இறங்கிய உடனே உங்களில் குடியேறி வளர்ந்தபடியிருந்த ஓர் ஏமாற்றம் மறைந்து உற்சாகம் பிறக்கிறது. உடைகள் பிய்ந்து பறந்து விடுபவை போல புடைத்தெழுகின்றன. கால் புதையும் மணல், சட்டென்று வெட்டவெளிக்கு வந்துவிட்டிருப்பதை உணர்கிறீர்கள். தலைக்கு மேலே ஏதுமற்று இருப்பது விடுதலை உணர்வையும் சிறு அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. பாய்ந்து ஓடவும், உரத்துக் கூவவும் மனம் எழுகிறது. பின்பு மெல்ல மெல்ல தனிமையுணர்வு வருகிறது. நாங்கு பக்கமும் அலையலையாக கண்ணை நிறைக்கும் வெண்மணல் பரப்பு. பயணிகள் சிறுசிறு குழுக்களாகக் கூடிக்கொள்கிறார்கள். எவரும் தனியாக நடப்பதில்லை. பேச்சு குறைந்துவிடுகிறது. மெல்லிய பதற்றம் மட்டும் மிஞ்சியிருக்கிறது. ரயிலடியின் ஓசைகள் எங்கோ விலகிவிட்டன. கடலின் ஓங்காரம் எல்லா பக்கத்திலிருந்தும் எழுகிறது.

மணல் மேட்டுக்கு அப்பாலிருந்து ரதத்தின் உச்சி நுனி எழும் காட்சி அற்புதமானது. அடங்கிய வியப்பொலிகள் எழ கூட்டம் தயங்கிக் கலைகிறது. பிறகு குழந்தைகள் உற்சாகத்துடன் கிறீச்சிட்டபடி மணலில் ஏறுகின்றன. அவரகளைத் தொடர்ந்து பெரியவர்கள் மூச்சிரைத்தபடி ஏறுகிறார்கள். பின்பு மணல் விளிம்பில் நின்றபடி நீங்கள் சரிந்து செல்லும் கடற்கரையைக் காண்கிறீர்கள். கடலில் வெயில் கண்கூசும்படி சிதறி ஜ்வலிக்கிறது. வெண்நுரை மாலைகள் நெளிந்தபடி கரையை நோக்கி வருகின்றன. நீலப்புடவைகளை சுழற்றிச் சுழற்றி வீசிக்காட்டுவதுபோல கரைமணலில் அலைகள் பரவி வழிகின்றன. மணலின் மென்மையான பரப்பில் ஒளி உலர்ந்து ஆவியாகிறது. குமிழிகள் உடைந்து துளையாகின்றன. அலைகளில் கால்களை நனைத்தபடி தொடுவானத்துக் கோட்டின் மீது நிற்பது போலத் தனித்து நிற்கிறது ரதம். அதன் மேலும் அருகிலும் மனிதர்களின் வண்ண உடைகள் பூச்சிகள் போலத் தெரிகின்றன.

குழந்தைகள் பாய்ந்து ஓட ஆரம்பிக்கின்றன. தயங்கியபடி நடக்க ஆரம்பித்த நீங்கள் அம்மணற் சரிவில் பொன்னோக்கி விழுந்தபடியே இருப்பதை உணர்கிறீர்கள். கடல் பெரிய காந்தம் போல உங்களை இழுக்கிறது. அசப்பில் கண்களைத் திருப்பி ரதத்தைப் பார்த்து திடுக்கிடுகிறீர்கள். பின்பு அச்சம் வியப்பாகவும் ஆனந்தமாகவும் மாறுகிறது. ரதம் உங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறது. நீங்கள் மணலில் கால் சிக்கித் தடுமாறியபடி அசையாமல் நிற்கப் பிடறி மயிர் பறக்கும் ஏழு குதிரைகள் அந்தரத்தில் கால் வீசிப் பறக்க, கின்னரர்கள் விழிவிரிந்து நகைக்க, ஆதித்யர்களின் சுடர்ச் சிறகுகள் எழுந்து படபடக்கக் கன்னங்கரேலென்று கண் முன் பெருகி விரிந்து வந்து கொண்டிருக்கிறது ரதம். ஒலியே இல்லாமல் காற்றில் மிதந்து வருகிறது. உங்கள் தருக்கம் சட்டென்று அதன் சக்கரங்களைப் பார்க்க வைக்கிறது. உடனே அதன் இயக்கம் உறைகின்றது. மணலில் புதைந்து இறுகிய கற்சக்கரங்கள் காலாகாலமாக அப்படியே நிற்பவை போலத் தோன்றுகின்றன. அதற்குள் நீங்கள் இடுப்பில் கையூன்றி மூச்சு வாங்கியபடி நின்றுவிட்டிருப்பீர்கள்.

அருகே நெருங்க நெருங்கத்தான் ரதம் எத்தனை பெரியது என்று உணரமுடியும். அதன் முகப்பு சீக்கிரமே உங்கள் தலைக்கு மேல் எழுந்து சென்றுவிடும். கால் தூக்கி நிற்கும் குதிரைகளின் அடிவயிற்றை அண்ணாந்து பார்க்க முடியும். தொலைவில் தெரிந்த ரதத்தின் வழவழப்பு ஒரு பிரமை என்றும் அதன் கற்பரப்பு கையை அறுக்கும்படி சொரசொரப்பாக அ¡¢க்கப்பட்டிருக்கிறது என்றும் உணர்ந்து வியப்படைகிறீர்கள். ரதத்தின் படிகள் மணலிலிருந்து குறுகலாக ஏறிப்போய் காலியாக இருக்கும் இருண்ட கருவறையை அடைகின்றன. துவார பாலகிகள் தழல் நெளியும் சாமரத்துடன், விழித்த கண்களுடன் பிரமை பிடித்து நிற்கிறார்கள். படிகளில் தொத்தி ஏறும் பயணிகள் உள்ளே எட்டிப் பார்த்து “ஓயே ஓயே ஓவா” என்று கத்துகிறார்கள். இருட்டு ரகசியமாக அதைத் திருப்பிச் சொல்கிறது. மலர்கள் செதுக்கப்பட்ட கல் வளைவுகளில் கால் வைத்து நிற்கிறார்கள். உற்சாகமும் சோர்வும் கலந்த மனோபாவத்துடன் நீங்கள் அதைச் சுற்றி வருகிறீர்கள். பின்னோக்கி நடந்தபடி அண்ணாந்து பார்க்கிறீர்கள். கோபுரச் சிலைகள் பின்னி உடல் பிணைத்து நிற்கின்றன. தாமரை வடிவ உச்சி. கூர்ந்த கோபுரக் கலசம். அது வானத்தில் தேங்கி நின்ற ஒளிர்ந்த திரவப் பரப்பை தொட்டுக்கொண்டிருக்கிறது. மேகங்களின் மூலைகள் பற்றி எ¡¢கின்றன. மிக மெல்ல அவை இடம் மாறிக் கொண்டிருக்கின்றன. மனதை உடைக்கும் அபாரமான அமதி அங்கு நிறந்து கிடக்கிறது. அது கோபுரம் வழியாக இறங்கி ரதத்தின் மீது பரவி மூடி விட்டிருக்கிறது. அத்தனை ஓசைகளையும் வண்ணங்களையும் புதைத்துக் கொண்டு அந்த நிசப்தம் சலனமற்று நின்று கொண்டிருக்கிறது.

நீங்கள் முற்றிலும் அமைதியிழந்துவிட்டிருக்கிறீர்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆபாசமான அசைவுகளுடனும் துருத்தும் வண்ணங்களுடனும் நாராசமான குரல்களுடனும் இருப்பதாக எண்ணுகிறீர்கள். பீர் குப்பிகள், குளிர்பானப் பெட்டிகள், வாழைப் பழத்தோல்கள், தாள்கள் என்று அவர்கள் அங்கு வீசும் ஒவ்வொன்றையும் பதைப்புடன் பார்க்கிறீர்கள். படிகளில் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள். கந்தர்வக்கன்னி மீட்டும் யாழ் மீது ஒருவன் சாய்ந்து நிற்க அவன் நண்பர்கள் ஆபாசமாகக் கிண்டல் செயகிரார்கள். சக்கரங்கள் முன் நின்று புகைப்படம் எடுக்க நெரிசல். அந்தத் தம்பதி சிரித்தபடி போஸ் கொடுக்கும்போது சட்டென்று சக்கரம் நகர ஆரம்பிப்பதாக பிரமை கொண்டு துணுக்குறுகிறீர்கள். உங்கள் நரம்புகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து ரதத்தைத் தவிர்த்து விலகிச் செல்கிறீர்கள். தொல்பொருள்துறையின் நீலப் பலகை. மகாசூரிய ரதம். கி.பி. 1234ல் கலிங்க மன்னன் இரண்டாம் விக்ரம ரணசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது. அவன் மகன் பராக்ரம ரணசிங்கன் 1264-ல் கட்டி முடித்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் பாவனையில் உள்ளது. கலிங்கம் பாரத வர்ஷத்தின் கிழக்குக் கடற்கரை. இங்குதான் சூ¡¢யன் தன் முதல் அடியைத் தூக்கி வைப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாண்டமான சூரிய ஆலயம் ஒன்று இங்கு இருந்திருக்க வேண்டும் என்றும், அசோகனின் படையெடுப்பால் அது அழிப்பப்பட்டது என்றும் இந்த ரதம் எஞ்சிய சிறு பகுதியே என்றும் கருத்து உண்டு. மண்டு, `மோனோலிதிக்’ என்றால் தெரியாது? பத்தாவது படிக்கிறாயே. ஒற்றைக் கல் சிற்பம். தெற்கே மகாபலிபூர் என்று ஒரு இடம். ஆமாம் மபாபலிபூர். சென்னை அருகே — கைடு ஒருவன் கையை வீசியபடி சொல்கிறான். ஆமாம் மேம்சாப், இந்த ரதம் காத்திருக்கிறது. ஆயிரம் வருடம் கழித்து இது உருண்டு ஓட ஆரம்பிக்கும். இதோ னேர் மேற்கேதான் புவனேஸ்வர். அதற்கு அப்பால் டெல்லி. அதற்கு அப்பால் கைலாச மலை. நேராக ஒரு கோடு இழுத்தால் டெல்லி பாதுஷாவின் அரண்மனை வரும் மேம்சாப். சாஸ்தி¡¢கள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே இருந்த தேஜோமயனின் சிற்பம் அங்குதான் இருக்கிறது. வைரமும் மாணிக்கமும் பதித்த சிலை அது. டெல்லி பாதுஷாக்கள் தினம் அதற்கு நரபலி தந்து பூஜை செய்தார்கள். இப்போது கூட பிரதான் மந்திரி சூரிய பூஜை செய்கிறார். இந்திரா காந்தி இங்கே வந்து பார்த்தார்கள். இந்திரா காந்தியை பார்த்தீர்களல்லவா மேம்சாப்? என்ன சிவப்பு நிறம்! எவ்வளவு தேஜஸ்! எல்லாம் தேஜோமயனின் அருள்தான்.

உங்களால் நிற்க முடியவில்லை. ஒளி கண்களைக் கூச வைத்து தலை சுழல்கிறது. திரும்பிப் பாராமல் நடக்கிறீர்கள். மேட்டில் ஏறியதும் உங்களை அறியாமலேயே திரும்பி விட்டீர்கள். ரதம் கண்மூடி நிற்பதுபோலத் தோன்றுகிறது. திடீரென்று உங்கள் மனம் அதிர்கிறது. அதன் இருண்ட கற்பகிருஹம் கண் தோண்டப் பட்ட குழிபோல படுகிறது. எவரோ துரத்துவதுபோல ஓடி நீங்கள் மையச் சாலைக்கு வந்துவிடுகிறீர்கள். இடது பக்கம் பிரம்மாண்டமான விளம்பர வாசகங்கள் `அசதோமா சத் கமய; தமஸோமா ஜோதிர் கமய’ – தீமையிலிருந்து நன்மை நோக்கி; இருளிலிருந்து ஒளி நோக்கி. அது சூரியா ரிசார்ட்ஸின் விளம்பர வாசகம். பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் வேலியிடப்பட்ட கடற்கரை. தூய வெண்மணல். செந்திறக் கட்டிடங்கள். எந்நேரமும் நுரைக்கும் பீர். தேவையெனில் சரஸ், ஹஷிஷ், நீச்சலுடை மங்கையர், சங்கீதம், காபரே, பால்ரூம் நடனம், குச்சிப்புடி, மணிப்புரி, ஒடிஸி … உருகி வழியும் வெள்ளி வெயில். அங்கு எல்லாமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மாபெரும் காங்கிரிட் நுழைவாயில். அனுமதியுடன் (காரில்) உள்ளே வரவும். வாசலில் வியாபாரிகள். விரித்த பாயில் நூறு நூறு நூறு குட்டி ரதங்கள். நூறு குருட்டு விழிகள்…
எங்கிருந்தோ ஊறிப் பெருகியபடி வருகிறது இருட்டு. கடை விளக்குகள் துடிதுடித்துப் பற்றிக் கொள்கின்றன. ஒலி பெருக்கிக் குரல்கள் அடைசலாக மாறி விட்டன. இங்கிருந்து பார்க்கும்போது கடற்கரையில் செந்நிறப் புகை பரவியிருப்பது போல ஒளி. காற்றின் ஜில்லிப்பில் காதுகளும் விரல் நுனிகளும் உறைந்துவிடுகின்றன. தெருவோரக் கடையில் பாலிமர் நாற்காலியில் அமர்ந்து ஏலக்காய் டீயை மெல்ல உறிஞ்சுகிறீர்கள். டீயின் வெம்மை ஆறுதல் தருகிறது. கடையின் நெரிசலில் பாதுகாப்பாக உணர்கிறீர்கள். வானச் சரிவில் சிவப்புத் தீற்றல்கள் அடர்ந்தபடியே வருகின்றன. கடல் அலைகளின் மீது சிவப்பு நிறம் தளதளக்கிறது.

ரயில் நிலைய ஒலிபெருக்கி அதிர்கிறது. ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்க்கிறீர்கள். வானம் இருண்டு விட்டது. இவ்வளவு விரைவாகவா என்று வியப்புடன் எண்ணிக் கொள்கிறீர்கள். கடல் நீர் மட்டும் இன்னமும் மெல்லிய ஒளிர்வுடன் இருக்கிறது. அதன் ஆழத்தில் சூ¡¢யன் அணைந்து கொண்டிருக்கக் கூடும். கண் பார்த்திருக்கவே அது மங்கிக் கரிய பட்டுபோல மாறிவிடுகிறது. பெட்டிக்குள் நெரிசல் மிகுந்துவிட்டதை உணர்கிறீர்கள். ரயில் கூவுகிறது. அதிர்கிறது. முதல் தடக்தடக் எழும்போது திரும்பி கடற்கரையை உற்றுப் பார்க்கிறீர்கள். அங்கு ஏதுமில்லை. கடலின் வெண் தந்தங்கள் அவ்வப்போது தெரிவது தவிர. டூரும்பின் ஓசை ஓங்கிப் பதிகிறது. உங்கள் சிதறும் எண்ணங்களை அழுத்தமான தாளத்தில் இறுக்கிப் பொருத்துகிறது. உங்கள் உடல் தளர்ந்து தொய்கிறது. இருக்கையில் சாய்ந்தபடி இருளுக்குள் குவிந்து கிடக்கும் குடிசைகளையும் விளக்குப் பொட்டுகளையும் தூரத்து மலை விளிம்பின் சாம்பல் நிறக் கோட்டையையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறீர்கள். பின்பு புறநகரில் ஒளிரும் ஜன்னல்களுடன் கட்டிடங்கள். சாலையில் தயந்தித் தேங்கும் வாகனங்கள். மெர்க்குரி விளக்குகள் வரிசையாக காவல் காக்கும் நெடுஞ்சாலைகள். இரும்பின் ஓலம் எங்கெங்கோ எதிரொலிக்க ரயில் மைய நிலையத்திற்குள் நுழைகிறது. மனிதக் குரல்கள் எழுந்து வந்து மோதுகின்றன. எல்லாமே கனவாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்து மறைகிறது.

உங்கள் வீடு. உணவு மேஜையில் வெம்மை காப்புப் பெட்டியிலிருந்து வெளிவரும் உணவு. அலுப்புடன் ஓரக்கண்னால் தொலைக்காட்சியை எட்டிப் பார்த்தபடி பரிமாறும் மனைவி. படிக்கும் குழந்தைகள். வெதுவெதுப்பான போர்வை மடிப்புகள். `வாசல்களை சாத்தியாகி விட்டதா? குழந்தைகள் தூங்கிவிட்டனவா?’ என்ற கேள்விக்குப் பதிலுடன் அருகே சரியும் மனைவியின் பழகிப் போன சரும மணம். அந்தரங்கமான அலுப்பொலி. உடம்பின் பரிச்சயமான நரம்பு சுண்டப்பட்டுத் துடிதுடிக்க ஒரு கணம் உடலின் சிறையிலிருந்து நீங்கள் வெளியே வந்து திகைக்கிறீர்கள். பின்பு வியர்வை குளிரும் உடம்புடன் முகத்திற்கு முன் எழுந்து திசைகளை மறைக்கும் பிரம்மாண்டமான கருங்கல் சுவரைப் பார்த்தபடி படுத்திருக்கிறீர்கள். சுவருக்கு அப்பாலிருந்து சில எளிய விசாரணைகள். சுவர் எல்லாவற்றையும் மறைக்கிறது. எல்லாவற்றிலிருந்து உங்களையும் மறைக்கிறது. அந்த இடம் அத்தனை பாதுகாப்பானது. அந்தரங்கமானது. சுருண்டு தூங்கி விடுகிறீர்கள். கிரிச்சிடும் சக்கரங்கள் உருள, ஈரம் வழியும் கரிய பரப்பு மினுங்க, வாய் திறந்த குதிரைகளின் மூச்சு சீற அந்த ரதம் இருளுக்குள்ளிருந்து வடிவம் திரட்டி வருகிறது. அதன் குருட்டு விழி உங்களைப் பார்க்கிறது. எங்கும் குளிர்; அவ்வளவு குளிர்.

பின் நிலவு எழுந்தபோது எங்கும் ஓசைகள் அடங்கிவிட்டிருந்தன. சாலைச் சந்திப்பில் அத்தனை கடைகளும் மூடியிருந்தன. சிப்பந்திகள் திண்ணைகளில் படுத்து ஆழ்ந்து தூங்கினர். தெருவோரக் கடைகள் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தன. புழுதியில் சுருண்டு உடலை இறுக்கி மூக்கு புதைத்து தெரு நாய்களும் தூங்கி விட்டன. ரயில் நிலையத்தில் அதிகாலை வண்டியின் பெட்டிகளும் சாலைகளில் நின்ற கார்களும் ஜில்லிட்டுப் போன உலோகச் சருமத்துடன். மங்கலாக விளக்குகளைப் பிரதிபலிக்கும் ஈரத்துடன் நின்றன. கூரை விளிம்பு அவ்வப்போது சொட்டும் தாளம். தொலைவில் சூரியா ரிசார்ட்ஸிலிருந்து குழப்பமான மனிதக் குரல்களும் இசைத் துடிப்புகளும் கேட்டும் கேட்காமலும் காற்றில் பிரிந்தன. மணல் பரப்பு குளிரில் புல்லரித்துக் கிடந்தது. அதன் ஆழத்து வெம்மையில் நண்டுகள் உறங்கின.

விளையாடிச் சென்ற ஏதோ குழந்தை விட்டுச் சென்ற பொம்மை போலக் கிடந்தது ரதம். அதன் உடம்பு மெல்ல சிலிர்த்துக் கொண்டிருந்தது. நிலவு சிவப்பாக இருந்தது. அது நிலவை அண்ணாந்து பார்த்தது. பெருமூச்சு விட்டபடி தன் உடலை உதறிக்கொண்டது. பனித்துளிகள் உதிர்ந்தன. திரும்பிக் கடலை வெறித்துப் பார்த்தது. நினைவுகளில் அமிழ்ந்தது போல மீண்டும் உறைந்தது. கடலின் சாம்பல் நிற நீரின் மீது ஒளி பரவி மிதந்து கிடந்தது. குளிரில் விறைத்த மீன்கள் அசையாமல் கண்களை விழித்து நின்றன. மெல்லத் துழாவும் அவற்றின் இறகுகளுக்குக் கீழே இன்னொரு நிலா வெகு ஆழத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் ஒளியில் பல நூறு ரதங்கள் கொண்ட புராதன நகரமொன்று தலைகீழாக மிதப்பது தெரிந்தது.

-சுபமங்களா, 1995

முந்தைய கட்டுரைகரடி-கடிதம்
அடுத்த கட்டுரைகண்ணன் உடல்