இசை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மகாராஜாவின் இசை படித்தேன் – அருமை

தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் ..

புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் ” இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும் போது ஏற்படும் தெளிவு மகிழ்ச்சி உங்கள் பல வரிகளில் உள்ளது போலவே மகாராஜாவின் இசையும்

இவருடன் எனக்கு பிடித்தமானவர்கள் KVN மற்றும் சஞ்சய்

நன்றி

மணிகண்டன்

திரு ஜெயமோகன்,
பேதங்களை வளர்க்கும் கருத்துக்களில் சிக்கவேண்டாம் என்பது என் பொதுவான எண்ணம். அதனால்தான் பெயரளவிலேயே இரண்டுபட்டிருக்கும் ‘ ஜாதி / சாதி ‘ குறித்த இணைய ‘பட்டிமன்ற’ பஞ்சாயத்துகளுக்குள் என் எண்ணங்களைச் எழுதுவதில்லை.
ஆனால் கீழ்க்கண்ட உங்களுடைய பதிவில் நான் நேரடியாகப் பார்த்த நிகழ்வொன்றை விவரித்திருக்கிறீர்கள் என்பதால் எழுதுகிறேன். http://www.jeyamohan.in/67150#.VWIDkdKqqkq
“தமிழில் பாடு” என ம க இ க வினர் தியாகராஜ ஆராதனையின்போது கட்டளையிட, அவர்களைத் தடியால் அடித்துத் துரத்தியதை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவர்களில் நானும் என் அம்மாவும் இருந்தோம்.
என் பெற்றோர் குடந்தையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அந்தக்காலத்தில் வசதி இல்லாததால் இதில் ஒரேயொரு முறை கூட பங்கு பெற முடிந்ததில்லை என்றார் என் அம்மா.
இசை முறையாக எங்களுக்குச் சொல்லித்தரப் பட்டிருக்கவில்லை. தெலுகு மொழி ஒரளவுக்கே புரியும். தியாகராஜரின் பாடல்கள் ஏழெட்டு மட்டும் கேள்வி ஞானமாய் பரிச்சயமுண்டு. அவ்வளவுதான்.
ஆகவே, இசை மூலம் அமைதியான வழிபாடு செய்யும் விதம் எப்படி என்று அறிய ஆசையாய் போய் உட்கார்ந்தால் இப்படி ஒரு எதிர்பாராத அமளி.
தமிழில பாடு என்ற அறைகூவல் நாலுபக்கங்களில் இருந்தும் கேட்க, சிறு கூட்டமாக ஓடி வருகிறார்கள்! அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்று திகிலாக இருந்தது. கற்களை வீசுவார்களோ, தாக்குவார்களோ என அடிவயிற்றில் பயம் ஏற்பட்டது.
அவர்களை மேலும் நகர விடாமல் காவலர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ஊடுருவல் செய்த ஒவ்வொருவரும் கட்டையால் அடி வாங்கினார்கள். போலீஸ் அடி என்றால் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்று அதுவரை கண்ட அனுபவம் இல்லை. அடி வாங்கியவர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்லது வளர் இளம் பருவத்து விடலைகள். சற்று முன்னர் விசில்களை உரக்க ஊதி, எங்களை அச்சத்துக்கு உள்ளாக்கி இருந்தாலும்கூட ஏனோ அடி வாங்கும் அந்தப் பையன்கள் மீதுதான் பரிதாபம் ஏற்பட்டது.
போராட்ட முறை வெறித்தனமானதுதான். அது போராட்டக்களமே இல்லைதான். காவலர்களும் தமக்கு இடப்பட்ட கடமையைத்தான் செய்தார்கள். இருந்தாலும் நமக்கு இப்படி அடி வாங்குகிறார்களே அவர்களுக்கு அதில் என்ன லாபம்? என்று தோன்றியது.
தியாகராஜருக்கான நினைவு நாளில் அவர் பாடல்களை மட்டும் தானே பாட இயலும்! சரிதான். ஆனால் தமிழகத்தில் மட்டுமே வாழ்ந்த அவர், ஏன் மருந்துக்குக்கூட ஒரே ஒரு தமிழ் பாடலை இயற்றவில்லை? இந்தக் கேள்விக்கான விடையில்தான் ம க இ கவினரின் போராட்டத்துக்குத் தீர்வு இருப்பதாகப் படுகிறது.
பிற மொழிப் பெயர்சொற்களைக்கூட தமிழ்ப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இங்கு இருந்து வந்திருக்கிறது என்பதை நீங்களும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். மும்மூர்த்திகள் எனப்படுவோர் தமிழுக்குப் பூட்டு போட அது மட்டும்தான் காரணமா என்றால், வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். அக்காலத்தில் தஞ்சைப் பகுதியை ஆண்ட அரசர்கள் பிற மொழிப் பேரரசர்களால் நியமிக்கப் பட்ட குறு நில மன்னர்கள்.

மேற்சொன்ன சம்பவம் நடந்த அன்று எங்கள் பக்கத்தில் இருந்த பிற மாநிலத்தவர்கள் போன்றிருந்தவர்கள், “அரவாள்ளூ! . Stupids! Idiots (தமிழ் பேசும் முட்டாள்கள்)” என்று கத்தினார்கள். செல்வந்தர்கள் போல் தோன்றிய அவர்களது வெறுப்பும் செருக்கும் சகிக்கும்படி இல்லை.
Dr. G. Shankar
Associate Professor,
VIT Business School,
VIT University, Chennai Campus,
Keezh kottaiyur,
Vandalur – Kelambakkam Road, Chennai

முந்தைய கட்டுரைஊட்டி முகாமனுபவம்
அடுத்த கட்டுரைவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்ரஸாத்