காண்டவம் நாவல்

நான் எழுதும் விதம் நண்பர்களுக்குத் தெரியும். அதை அராஜகமான படைப்பூக்கம் என்றுதான் சொல்வேன். திட்டமிடுவது, தகவல்சேகரிப்பது என்பதெல்லாம் மானசீகமான தயாரிப்புகள் மட்டுமே. நாவல் எங்கோ ஒரு புள்ளியில் தற்செயலாக தொடங்கவேண்டும். அதுவே ஒரு கனவுபோல விரிந்து விரிந்து சென்று முடியவேண்டும்.

அவ்வாறு அகத்தூண்டல் கொண்டு நான் எழுதும் எல்லா நாவல்களும் அதற்கே உரிய ஒருங்கமைவை சில அத்தியாயங்களிலேயே கொண்டுவிடும். அது சிந்தனை அல்லது மேல்மனம் சார்ந்தது அல்ல. முழுக்கமுழுக்க ஆழ்மனம் சார்ந்தது. தன்னிச்சையானது. அதனாலேயே எழுதிமுடிக்கையில் நானே வியந்து நோக்கும் ஒருமையும் கூர்மையும் அதற்கு அமைந்துவிடும்.

அமையாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. முயன்றுவிட்டு விட்டுவிடுவதைத்தவிர. இது என் கையில் இல்லை. இது நான் எழுதுவதும் இல்லை. அப்படி நான் கைவிட்ட நாவல்கள் சில என்னிடம் உள்ளன. சிலநாவல்கள் மீண்டும் நிகழ்ந்தும் உள்ளன.

காண்டவம் ஒருநாவலாக முன்னெடுத்துச்செல்லும் வல்லமையுடன் எழவில்லை. முயன்றுவிட்டேன். மேலே முட்டிக்கொண்டும் பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பதில் பொருளில்லை. ஆகவே இப்படியே இதை விட்டுவிட்டு மேலும் சிலநாட்களில் அடுத்த நாவலை தொடங்கலாமென நினைக்கிறேன்.

வெண்முரசின் வாசகர்கள் நான் சொல்வதை புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி : குவளைக்கண்ணன்
அடுத்த கட்டுரைகாடு- கடிதம்