இணையச் சமவாய்ப்பு- எதிர்வினைகள்

வணக்கம்,
TRAI யிடம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் OTT (அவர்களின் வருமனத்தைப் பாதிக்கும்) சேவைகளுக்கு தனியாக விலை வைத்துக் கொள்ள (விலையேற்ற) அனுமதி கோரியுள்ளன. மேலும் சில நிறுவன இணையத்தளத்தைப் பயன்படுத்த data charge இல்லாமல் வழங்கியுள்ளனர். அதை எதிர்க்க இணையத்தில் சமவாய்ப்புப் பறிப்பாக நினைத்துப் போராடுகிறார்கள். தொழிற்நுட்பமும், வணிகமும் கலந்திருப்பதால் சாதாரண மனிதருக்குப் புரிவதில்லை. குழுமனப்பான்மையில் முதல் குரலின் ஒலியை பெரும்பாலானோர் கொண்டுள்ளனர். ஊடகங்களும் அரசியல் காரணத்தால் இதை ஆதரிக்கிறது.

இந்தியாவில் இணையச் சமவாய்ப்பு என்பது இப்போது விலை எற்றத்தை எதிர்த்து நடத்தப்படும் ஒரு போராட்டம் மட்டுமே. ஆனால் நடைமுறையில் ஒரு கருத்துச் சுதந்திரப் பறிப்பாகும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை யடிப்பதாகவும், ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளதாகவும் காட்டப்படுகிறது. இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் ஆவதால் நல்ல தீர்வு கிடைப்பதில் சிக்கலுள்ளது.

உண்மையான சமவாய்ப்பு எது இந்த சமவாய்ப்பு யாருக்கு லாபம் என்று அறிய

தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?

http://opinion.neechalkaran.com/2015/04/Net-neutrality.html

அன்புடன்,
நீச்சல்காரன்

அன்பு ஜெயமோஹன்,

வணக்கம். இணையச் சமநிலை பற்றிய இந்தக் கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்தது. தாங்கள் தேடும் விவரம் இதில் கிடைக்கும்.

அன்பு சத்யானந்தன்

அன்புள்ள ஜெ,

எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன், புரிகிற மாதிரி எழுதிகிறேனா என்று சொல்லுங்கள்.

இன்று தகவல் அணுக்கம் (information access) என்பது ஒரு முக்கியமான தேவை. இதில் பாகுபாடு தோன்றுமானால் விளைவுகள் நல்லதாக இருக்காது. ஒருவரின் மருத்துவ ஆவணங்களை எடுக்க அவர் தொலைதொடர் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும். மற்ற முதலாளித்துவ வணிகத்தில் அப்படி இல்லையா என்றால், ஆமாம் இருக்கிறது. இணையத்தை அப்படி ஆகாமல் பாதுகாப்போம். சட்டங்கள் இம்மாதிரி விஷயங்களில் பயனுள்ளதாக இருக்குமா என்றால் – நம்பிக்கை உள்ளது – ஏகபோக வணிகத்திற்கு எதிரான சட்டங்கள் (anti trust laws) பயனுள்ளதாகவே உள்ளன. முடியுமா என்றால் – முடியும் – அமெரிக்காவில் சமீபத்தில் சார்பற்ற இணையதிற்க்கு சாதகாமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இணையம் சார்ந்த்த சட்டங்களில் இந்தியா பெரும்பாலும் அமெரிக்காவின் நிலையையே எடுக்கிறது. மேலும் இங்குள்ள மத்திய அரசு சார்பற்ற இணையத்தின் வீச்சை சென்ற பொது தேர்தலில் கண்டு கொண்டது.

இந்த கோட்பாட்டுக்கு முரணாக இன்று பெரும்பாலும்
தொலைத்தொடர்பு நிறுவனங்களே செயல்படுகின்றன. ஆனால் சார்பற்ற இணையம் என்பது தொலைதொடர்பு நிறுவனத்திற்கான கட்டுப்பாடு மட்டும் அன்று.

தகவலை அதன் இருப்பிடத்தில் ( source location) இருந்து எடுத்து பயனாளி கையாளும் வகையில் அதனை சமைத்து தரும் அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் உலாவியின் வழியாக தகவலை அணுகும் பொழுது , அத்தகவல் பல அமைப்புகளின் வழியாக ஊடுருவி அதன் இருப்பிடத்தில் ( source location) இருந்து உங்கள் உலாவியை வந்தடைகிறது. உங்கள் உலாவி அத்தகவலை உங்களுக்கு பயனுள்ள வகையில் ஒழுங்கமைக்கிறது. இப்பாதையில் பல அமைப்புகள் (system) ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு தகவல் அணுக்கம் (information access ) சாத்திய படுத்த்ப்பட்டுள்ளது. இந்த அடுக்குத்தொடரில் ஒவ்வொரு அடுக்கும் தனக்கு கீழே உள்ள அடுக்கிலிருந்து தகவலை பெற்று , அவற்றை கோர்த்து மேல் உள்ள அடுக்கிற்க்கு அனுப்புகிறது. வெப் சர்வர்கள், ஆழ்கடல் தொடர்பு கட்டமைப்புகள், தொலைபெசி நிறுவனங்களின் கட்டமைப்புகள், உங்கள் கணிணியில் உள்ள operating system, உங்கள் உலாவி என்று அனத்து அமைப்புகளுக்கும் இதில் பங்கு உண்டு.

அடிப்படையில் மேல் சொன்ன அடுக்குத்தொடரில் உள்ள எந்த அமைப்பும் (system ) அதன் வேலையை மட்டுமே செய்ய வேண்டும். தன் லாபத்திற்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ தான் கையாளும் தகவலை மாற்றவோ, முன்னுரிமை படுத்தவோ , தகவல் ஓட்ட்த்தை ஒழுங்கு படுத்த (traffic shaping) முயுலுவதோ கூடாது. உலாவிகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்த்தும். (இந்தியாவில் உபயோகபடுத்தப்படும் உலாவிகள் சில இக்கட்டுப்பாட்டை மீறுகின்றன என்றே நான் எண்ணுகிறேன்).

சார்பற்ற இணையம் என்பது அனைவருக்கும் பொதுவான வெளிப்படையான இணையம் என்ற இலக்கை அடைய தேவையான ஒரு முக்கியமான கருவி. இன்றைய இணையம் சம உரிமை உள்ள மாபெரும் கட்டமைப்பு.

இந்த தார்மீகத்தை எடுத்துவிட்டு
இந்த விடயத்தில் பொருளாதர ரீதியாக மட்டுமே கூட பார்க்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொலைபேசி நிறுவனஙள் பல , பல விதமான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை (value added service – VAS) அறிமுக படுத்தின. அன்னிறுவனஙகள் அச்சேவைகளை தாமே வழங்கவில்லை, பதிலாக சிறு தொடக்கநிலை நிறுவனங்கள் (startup companies) அவற்றை வழங்க, தொலைபேசி நிறுவனங்கள் அச்சேவைகளை தங்கள் பெயரில் ப்ராண்ட் செய்தனர். அனைத்து சேவையளர்களையும் அனுமதிக்காமல் தங்களுக்கு உடன்பட்டவர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கினர். விளைவாக மலிவான தரமற்ற சேவைகளே வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தது – தினப்படி ஜோக், தினப்படி ஜோசியம் போன்றவை. ஒரு வருடத்திற்குள் அம்மதிரியான சேவை சந்தையையே அழித்துவிட்டன அத்தொலைதொடர்பு நிறுவனங்கள்.

இவை எல்லாம் ஆன்றாய்ட் என்ற open platform வருவதற்கு முன்னால். ஆன்றாய்ட் வந்த பிறகு முன்பு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் என்று அழைக்கப்பட்டு ஆனால் தொலைதொடர்பு நிருவனங்களால் அனுமதிக்கப்படாமல் இருந்த பல சேவைகள் app களாக வெற்றிகரமாக வெளி வந்தன.

பின்குறிப்பு:

ஆனால் ஒன்று , இரண்டு மாத விடுமுறைக்கு போனவரே இது எல்லாம் தெரியும் என்று பேசும்போது, நீஙகள் இதை பற்றி தெரியாது என்று வெளிப்படையாகச்சொன்னால் உங்கள் “இமேஜ்” என்ன்வாகும்? கவனமாக இருக்கவும் :-)

பாலாஜி என்.வி
பெங்களூர்

அன்புள்ள நீச்சல்காரன் ,சத்யானந்தன் ,பாலாஜி,

இக்கட்டுரைகள் என்ன நிகழ்கிறது என்று சொல்கின்றன. ஏன் போராடுகிறார்கள் என்றும் புரிகிறது

என்னுடைய குழப்பம் இதுதான். வினியோக ஊடகங்களை முதலாளித்துவ அமைப்புகள் கையகப்படுத்துவதும் மேலாதிக்கம் செலுத்துவதும் இன்று எலலதுறைகளிலும் நிகழ்கிறது. ஹாலிவுட் சினிமாவேகூட ஓரிரு பெருநிறுவனங்களின் கைகளில் உள்ளது

இணையத்தில்மட்டும் அது நிகழாதபடி அதன் நுகர்வோரால் ஒரு வட்டத்துக்குட்பட்ட புரட்சியின்மூலம் தடுத்துவிடமுடியுமா என்ன?

ஜெ

இணையச்சமவாய்ப்பு எதிர்வினைகள்

இணையச்சமவாய்ப்பு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90