அந்தக் கட்டிடங்கள்

சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பயணம்செய்து கொண்டிருந்தபோது உணர்ந்த ஒன்று, அங்குள்ள கட்டிடங்களின் பாதுகாப்பின்மை. அதை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் எல்லாம் சுமுகமாக இருக்கும் சூழலில் அத்தகைய கவலைகள் எல்லாமே வெறும் கிண்டல்களாகவே வெளிப்படமுடியும்

வடகிழக்கு இமையமலையடிவாரம். பொலபொலவென்ற மண். கடினப்பாறையே இல்லை. அத்துடன் கடுமையான மழை உள்ள பகுதியும் கூட. ஆகவே அங்கு நிலச்சரிவுகள் சாதாரணமாக இருக்கலாம். வரலாற்றில் தொடர்ச்சியாக பெரும்பூகம்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பல நகரங்கள் பூகம்பத்தால் அழிந்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியில்கூட பெரிய பூகம்பம் வந்தது

1
அதனால்தானோ என்னவோ மூங்கில் பிளாச்சுகளைப் பின்னியோ யானைப்புல்லை அடுக்கியோ தட்டி செய்து அவற்றின்மேல் களிமண் பூசி அவற்றைக்கொண்டு வீடுகளைக் கட்டும் வழக்கம் அங்கே இருக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகள் அப்படித்தான்

ஆனால் நகரங்கள் அனைத்திலும் கான்கிரீட் அடுக்குமாடிக் கட்டிடங்கள். இந்தியாவில் கட்டிடம் கட்ட எந்த நெறிமுறையும் இல்லை. பெரிய கட்டிடம் கட்டுவதென்பதே ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்காகவும் கள்ளக்கணக்கு காட்டுவதற்காகவும்தான். ஆகவே எங்கும் கட்டிடங்கள் மிகமிகப் பாதுகாப்பற்றவை. எந்த வகையானா ஒழுங்குமின்றி கட்டப்பட்டவை

வடகிழக்கே கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் இன்னும் மோசம். மலைச்சரிவுகளிலும் விளிம்புகளிலும் தொற்றி அமர்ந்திருக்கின்றன. சாதாரணநிலையிலேயே கட்டிடங்கள் சில சரிந்து நிற்பதைக் காணமுடிகிறது. திறனற்ற எஞ்சீனியர்களால் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டவையே பெரும்பாலும். அங்கு நிற்கையில் பூகம்ப அச்சம் வந்து கால்பதறிக்கொண்டே இருந்தது

2010 ல் நாங்கள் இமையமலைப்பயணத்தில் ருத்ரபிரயாக் சென்றபோது இதேபோல மிகமிக அபாயகரமாக ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களைப் பார்த்தோம். அவற்றில் ஒன்றில் தங்கினோம். சென்ற மழைவெடிப்பில் அந்தக்கட்டிடம் அப்படியே அதிலிருந்த பயணிகளுடன் கங்கைக்குள் உடைந்து இறங்கிவிட்டது.

1

Nepal-Earthquake
ஆனால் ஒன்றும் மாறியிருக்காது. அதேபோல மீண்டும் கட்ட ஆரம்பித்திருப்பார்கள். சிதல்புற்றுகளைப்பற்றி ஒன்று சொல்வார்கள். சிதல் புற்றுகட்ட ஆரம்பிக்கும்போதே தண்ணீரை விட்டுவரவேண்டும். மெல்லமெல்ல தண்ணீரால் கரையாத புற்றை அதுகட்டும். அந்த மண்ணைத்தான் அந்தக்காலத்தில் எலும்புமுறிவுக்கு பிளாஸ்டர் போட எடுத்துவருவார்கள்

எறும்புகள் அறிவானவை.

கும்பமேளா

சூரியதிசைப்பயணம்

முந்தைய கட்டுரைவரலாறுகளின் அடுக்குகள்
அடுத்த கட்டுரைசுஜாதா இலக்கியவாதி இல்லையா?- ஆர்வி